அருண்மொழி

அருண்மொழி

பாடசாலை மாணவிகளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கி வீடியோ எடுத்த ஆசிரியரும் மாணவர்களும் – முல்லைத்தீவில் சம்பவம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாடசாலை மாணவிகள் பலர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் ஆசிரியர் ஒருவரும் மாணவர்கள் பலரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஆசிரியரும் மாணவர் ஒருவரும் எதிர்வரும் 30 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் சுமார் பதினேழு பதினெட்டு வயதை உடைய ஆறு மாணவர்களையும் நீதிமன்றத்தில் காவல்துறையினர் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

இதன் போதே, மாணவர் ஒருவர் எதிர்வரும் 30.6.2022 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு ஏனைய ஐந்து மாணவர்களுக்கும் நீதிமன்றில் பிணை வழங்கப்பட்டுள்ளதோடு மேலும் பலரை தேடி காவல்துறையினர் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்பிக்கின்ற ஆசிரியர் மற்றும் மாணவர்கள் இணைந்து பல பாடசாலை மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதோடு பாலியல் சேட்டை புரிந்து பாலியல் துஷ்பிரயோகத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

ஆசிரியர், அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிக்காக நியமிக்கப்பட்டு ஆசிரியர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வந்த நிலையில், குறித்த ஆசிரியர் மற்றும் மாணவர்கள் சிலர் இணைந்து மாணவிகள் பலரின் நிர்வாண புகைப்படங்களை வைத்து அச்சுறுத்தி அவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவங்கள் பல பதிவாகியுள்ளன.

இவ்வாறு ஆசிரியரும் மாணவர்கள் சிலரும் செய்த சேட்டையை முல்லைத்தீவு இளைஞர்கள் கண்டறிந்து, ஆசிரியர் மற்றும் மாணவர்களின் தொலைபேசியை எடுத்து பார்வையிட்டுள்ளனர்.

அதன் போது பல மாணவிகளின் நிர்வாண வீடியோக்கள் மாணவிகளின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் மாணவிகளுடன் தவறான முறையில் நடந்து கொண்ட வீடியோக்கள் இருப்பதை அவதானித்து அதனை சோதித்தபோது அந்த ஆசிரியரும் மாணவர்களும் இந்த செயற்பாடுகளில் தொடர்பு கொண்டிருந்தமை தெரியவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர், குறிப்பிட்ட மாணவர்களைப் பயன்படுத்தி மாணவிகளை காதல் வலையில் விழுத்தி, அவர்கள் ஊடாக மாணவிகளின் நிர்வாண புகைப்படங்களை பெற்று ஆசிரியரும் அந்த மாணவிகளை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வாறான பின்னணியில் இந்த ஆசிரியருடைய தொலைபேசியில் இருந்த ஆவணங்கள் காவல்துறையினருக்கு வழங்கப்பட்டதை தொடர்ந்து விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண்கள் சிலரை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

அதன் போது அவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியபோது ஒரு மாணவியை ஆசிரியர் பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தகவல் வெளியாகியதையடுத்து ஆசிரியர் தலைமறைவாக இருந்த நிலைமையில், ஆசிரியரோடு சேர்ந்து இவ்வாறான செயற்பாட்டை முன்னெடுத்த முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 6 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்திருந்தனர்.

இவ்வாறான பின்னணியில் தலைமறைவாக இருந்த ஆசிரியர் இன்று சட்டத்தரணி ஒருவர் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.  இந்த வேளை பாதிக்கப்பட்ட நபர்கள் சார்பாக சட்டத்தரணி எஸ்.தனஞ்சயன் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.

இந்த செயல்பாடு தொடர்பில் நீதிமன்றத்திற்கு தெளிவுபடுத்தி இது ஒரு பாரதூரமான செயற்பாடு எனவும் பல்வேறு மாணவிகளை துஷ்பிரயோகம் மேற்கொண்டதோடு பல பெண்களை நிர்வாணமாக புகைப்படம் எடுத்து அவர்களை அச்சுறுத்தியுள்ளதையும் எடுத்துக் கூறி இது பொது மக்களிடையே பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இது ஒரு சமூகப் பிரச்சனை என்பதையும் சுட்டிக் காட்டியிருந்தார்.  முல்லைத்தீவு காவல் நிலையம் சார்பில் கருத்து தெரிவித்த காவல்துறை உத்தியோகத்தர் ஜனன்,

குறித்த விசாரணை தொடர்பிலே ஆசிரியரிடம் இன்னும் விசாரணைகள் மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் சான்று பொருட்களை பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மேலதிக தகவல்களை பெற வேண்டிய நிலையில் இவருக்கு பிணை வழங்குகின்ற போது இந்த விசாரணைகளை சரியாக செய்ய முடியாது எனவும் சான்றுப் பொருட்கள் மற்றும் ஆவணங்கள் பெற்றுக்கொள்வதில் இடர்பாடுகள் உள்ளதை தெரிவித்து அவரது பிணை விண்ணப்பத்தை நிராகரிக்குமாறும் தெரிவித்தார்.

இந்த சம்பவங்களையும் இந்த சம்பவத்தின் பாரதூர தன்மையையும் நன்கு அவதானித்த முல்லைத்தீவு நீதிமன்றத்தின் நீதிபதி ரி.சரவணராஜா குறித்த நபரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

 

இலங்கையின் விளையாட்டுத்துறையில் அசத்தும் கிளிநொச்சி வீரர்கள் – கொமன்வேல்த் போட்டிக்கு தெரிவாகியுள்ள விட்டாலிஸ் நிக்லஸ் !

பிரித்தானியா – பர்மிங்ஹாமில் நடைபெறவுள்ள 2022ம் ஆண்டுக்கான கொமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பங்குபெற்றும் குத்துச்சண்டை அணியில் கிளிநொச்சியைச் சேர்ந்த வீரர் ஒருவர் தெரிவாகியுள்ளார்.

கிளிநொச்சி – கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நாதன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த விட்டாலிஸ் நிக்லஸ் என்னும் வீரரே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டு சர்வதேச போட்டிகளில் பங்குகொள்ள பயணமாகவுள்ளார்.

இவர் தேசியப் போட்டிகளில் வட மாகாணத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி பல பதக்கங்களை வடமாகாணத்திற்காக பெற்றுக்கொடுத்துள்ளதுடன், இராணுவ அணிக்காக விளையாடி தேசிய அணியில் இடம்பிடித்திருந்தார்.

குடும்ப நிலையை கருத்திற்கொண்டு ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் வேலைக்கு சேர்ந்த இவரின் அதித திறமை காரணமாக இலங்கை தேசிய குத்துச்சண்டை அணிக்குள் உள்வாங்கப்பட்டு பல தகுதிகாண் போட்டிகளில் வெற்றியீட்டியதுடன் கொமன்வெல்த் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இப்போட்டியானது எதிர்வரும் ஜூலை மாதம் 28ம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் 08 ஆம் திகதி வரை லண்டனில் நடைபெறவுள்ளது.

இந்த போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப்பெறும் வீரர்கள் ஒலிம்பிக் தகுதிக்காண போட்டிகளில் பங்குபெறும் வாய்ப்புக்களை பெறவுள்ளனர்.

ஒலிம்பிக் போட்டியில் பங்குகொள்ளும் குத்துச்சண்டை அணியில் இடம்பிடித்த இலங்கைத் தமிழர் என்ற செய்தியை உலகறிய செய்வதுடன், நாட்டிற்கும், கிளிநொச்சி மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்து கொடுப்பதே தனது இலட்சியம் என அவர் தெரிவிக்கின்றார்.

தனது சாதனை பயணத்திற்கு சகோதரியும், பெற்றோருமே காரணம் என தெரிவிக்கும் அவர், இதுவரை எந்த அரசியல்வாதியும் திரும்பி பார்த்ததில்லை என தெரிவித்திருந்தார்.

இந்த பயணம் வரை பயிற்சிக்காக வாகன டயர் ஒன்றையே பயன்படுத்தி வருவதாகவும், தொடர் முயற்சியே இலக்கை அடைய வழி வகுப்பதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

 

அண்மையில் கிளிநொச்சியில் இருந்து சதாசிவம் கலையரசி எனும் வீராங்கனை 19வயதுக்கு கீழ்ப்பட்ட மகளிர் தேசிய கிரிக்கெட் அணிக்கு தெரிவாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

யாழில் பத்திரிகைகள் முடங்கும் அபாயம்!

யாழ்ப்பாணத்தில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பத்திரிகைகள் முடங்கும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தை தளமாக கொண்டு 3 பத்திரிகைகள் அச்சு பதிப்பாக வெளிவருகின்றன. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக குறித்த பத்திரிகைகள் விநியோகத்தில் பெரும் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளன.

பத்திரிக்கை விநியோக பணியில் ஈடுபடும் பணியாளர்கள் எரிபொருள் இன்மையால் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதால் விநியோக பணிகள் பாதிக்கப்படவுள்ளன. அதனால் பத்திரிகைகள் முடக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளது.

இது தொடர்பில் பத்திரிக்கை நிறுவன தலைவர்கள் , ஆசிரியர் பீடத்தினர் வடமாகாண ஆளூநர் , மாவட்ட செயலர் ஆகியோருடன் கலந்துரையாடிய போதிலும் சாதகமான பதில்கள் கிடைக்கப்பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை யாழில் மூன்று தொலைகாட்சி நிறுவனங்கள்,  வானொலி சேவைகள் என்பன உள்ளடங்கலாக 10 க்கும் மேற்பட்ட ஊடக நிறுவனங்கள் உள்ளன.

அவற்றில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் ஊடக பணியாளர்கள் என பலரும் எரிபொருள் தட்டுப்பாட்டினால் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

அதேபோன்று யாழில் இருந்து கொழும்பில் உள்ள ஊடக நிறுவனங்களில் பணியாற்றும் ஊடகவியலாளர்களும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

இலங்கையில் சிறுவர்களை பாதிக்கும் ஊட்டச்சத்து பிரச்சினை – மருத்துவ அதிகாரிகள் சங்கம் கவலை !

ஊட்டச் சத்துக் குறைபாடு மற்றும் ஏனைய போஷாக்கு தொடர்பான பிரச்சினைகள் அதிகரிப்பதை தடுக்க அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) வலியுறுத்தியுள்ளது.

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து தொடர்பான பிரச்சினைகள் எழுந்தால், தீங்கு விளைவிக்கும் சூழ்நிலை உருவாகலாம் என GMOA ஊடகக் குழு உறுப்பினரான வைத்தியர் பிரசாத் கொலம்பகே தெரிவித்தார்.

உணவு நெருக்கடிக்கு மத்தியில் பொது மக்களிடையே குறிப்பாக குழந்தைகளின் ஊட்டச்சத்து அளவுகள் தொடர்பான கடுமையான கேள்வி உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

உணவு விநியோகத்தில் பாதிப்பை ஏற்படுத்திய எரிபொருள் தட்டுப்பாடு போஷாக்கான உணவைப் பெறுவதில் மக்கள் சிரமங்களை எதிர்கொள்வதில் பிரதான காரணமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முக்கிய நகரங்களில் உணவுப் பொருட்களும் அதிவேகமாக அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த நெருக்கடியான நிலைமையை நிவர்த்தி செய்ய சுகாதார அமைச்சின் கவனத்துக்கு GMOA உத்தரவிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தொடரும் பொரளாதார நெருக்கடி – மூடப்பட்ட 50% தேயிலை தொழிற்சாலைகள் !

நாடு எதிர்நோக்கும் பரந்த பொருளாதார நெருக்கடியின் விளைவாக உரம், எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் ஏனைய பிரச்சினைகளால் ‘மத்திய மலை நாட்டிலுள்ள தேயிலை தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயத்தில் உள்ளதாக தெரிய வந்துள்ளது.

நிலவும் பொருளாதார நிலைமை காரணமாக கிட்டத்தட்ட 50% தேயிலை தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கத்தின் செயலாளரான ஜே எம் ஏ பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு 317 கோடிரூபாவில் புதிய வீடுகள் – திட்டம் ஆரம்பம் !

தூத்துக்குடி, விளாத்திகுளமருகே தாப்பாத்தி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் மக்களுக்கு தமிழக அரசு சார்பில் விரைவில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவுள்ளன.

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்போருடன் அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் கலந்துரையாடி, தேவைகள் குறித்துக் கேட்டறிந்தார்.

தாளமுத்துநகர், மாசார்பட்டி, குளத்துவாய்பட்டியிலுள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களையும் ஆய்வு செய்தார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனைப்படி தமிழகம் முழுவதும் 106 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் மக்களுக்கு 317 கோடிரூபாவில் புதிய வீடுகள் கட்டித்தரும் திட்டத்தை அறிவித்தார்.

முதற்கட்டமாக தூத்துக்குடி மாவட்டம் தாப்பாத்தி முகாமிலுள்ள மக்களுக்கு வீடுகள் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்படவுள்ளன.

விளாத்திகுளம் அருகே இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் மக்களுக்கு தமிழக அரசு சார்பில் விரைவில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் வாங்க ரஷ்யாவை புறக்கணிக்கும் இலங்கை !

“நாட்டில் உள்நாட்டு யுத்தம் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.” என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் பேசிய அவர்,

தற்போதைய நிலைமை மோசமடைந்தால், மக்கள் தங்களைக் கடத்திச் செல்லத் தூண்டப்படுவார்கள். அதைக் கட்டுப்படுத்த அரசாங்கம் முயற்சித்தால் உள்நாட்டுப் போர் வெடிக்கும்.

ரஸ்யாவிடம் இருந்து எரிபொருள் மற்றும் உரங்களை பெற்றுக் கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தமக்கு அறிவிக்குமாறு கோரி அரச தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்திற்கு இதுவரை பதில் இல்லை.

எரிசக்தி அமைச்சர் எரிபொருளைக் கண்டுபிடிக்கும் பொறுப்பை எதிர்க்கட்சி எம்.பி.க்களிடம் ஒப்படைக்காமல் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வதால் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை கொள்வனவு செய்ய இலங்கை அஞ்சுகிறது. அரசாங்கம் இவ்வாறு தொடர்ந்தும் செயற்பட்டால் மக்களின் சகிப்புத்தன்மை இல்லாது போய்விடும்.” என தெரிவித்தார்.

 

யாழ்.கொல்லங்கலட்டியில் தனிமையிலிருந்த மூதாட்டி படுகொலை !

காங்கேசன்துறை – கொல்லங்கலட்டியில் வீட்டில் தனிமையில் வாழ்ந்த மூதாட்டி கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மூதாட்டி அணிந்திருந்த நகைகள் உள்ள நிலையில் கொலைக்கான காரணம் கண்டறியப்படவில்லை என்று காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று காலை மூதாட்டியின் வீட்டு வளாகத்திலுள்ள தோட்டத்துக்கு தண்ணீர் இறைப்பதற்கு சென்ற உறவினர் ஒருவர் மூதாட்டி குருதிக் காயங்களுடன் சடலமாக காணப்பட்டதை அறிந்து காங்கேசன்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
சாணை தவமணி (வயது-78) என்ற மூதாட்டியே சடலமாக மீட்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குதிரைவண்டியில் பயணித்து போதனையில் ஈடுபடும் யாழ்ப்பாண அருட்தந்தை !

நாடு பூராகவும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள கிறிஸ்தவ அருட்தந்தை ஒருவர் தனக்குத் தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வதில் இடர்பாடுகள் காணப்படுவதன் காரணமாக குதிரை வண்டியில் தனது வழமையான செயற்பாடுகளை மேற்கொள்வதாக யாழ்ப்பாணத்தில் உள்ள அருட்தந்தை தெரிவித்தார்.
இன்றைய தினம் யாழ் நகரத்தில் தனது வழமையான செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு குதிரை வண்டியில் பயணம் செய்த நிலையில் வீதியில் பயணித்தோர் அனைவரும் வியப்புடன் அவதானித்தனர்.

பெற்றோல் பிரச்சினைகளுக்கு தீர்வு – பயோ பெற்றோலை உற்பத்தி செய்ய 50 மில்லியன் முதலீடு தேவை என்கிறார் சுரேஸ்குமார் !

இலகுவாக கிடைக்கும் பொருட்களை கொண்டு பயோ பெற்றோல் மற்றும் பயோ டீசல் என்பவற்றை குறைந்த விலையில் உற்பத்தி செய்ய முடியும் என யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆய்வு கூட உதவியாளர் தெரிவித்துள்ளார்.

நவாலியினை சேர்ந்த செல்வராசா சுரேஸ்குமார் நேற்றுமுன்தினம் அதற்கான செய்முறை விளக்கத்தினை நிகழ்த்திக் காட்டியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேங்காய் எண்ணெய், வேப்பெண்ணெய், சாம்பல் போன்ற இலங்கையில் இலகுவாக கிடைக்கும் மூலப்பொருட்களை வைத்து பயோ டீசலினை இலகுவாக தயாரிக்க முடியும்.

அதேபோன்று நீர் மற்றும் சிரட்டைக்கரி போன்ற காபன் வகைகளை பயன்படுத்தி பயோ பெற்றோலை இலங்கையில் உற்பத்தி செய்ய முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் பெற்றோலுக்கு ஏங்கித்தவிப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!!  இவர்களின் ஒத்துழைப்பு கிடைத்தால் மாத்திரமே..!!

இதற்கான தயாரிப்பு மாதிரி செய்முறை விளக்கமும் அவரால் நிகழ்த்திக் காட்டப்பட்டுள்ளது. பயோ டீசலினை சாதாரணமாக வீட்டிலேயே செய்ய முடியும் எனவும், பயோ பெற்றோல் தயாரிப்பதற்கு சுமார் 50 மில்லியன் முதலீடு தேவைப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் இதற்கு அனுசரணையாளர்களும், அரசின் ஒத்துழைப்பும் கிடைக்கும் பட்சத்தில் சூழலுக்கு பாதிப்பில்லாத எரிபொருளை மிக குறைந்த விலையில் உற்பத்தி செய்து எரிபொருள் பிரச்சனைக்கு தீர்வுகாண முடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்