அருண்மொழி

Sunday, January 23, 2022

அருண்மொழி

இலங்கையில் 160 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் !

இலங்கையில் மேலும் 160 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றாளர்களிடமிருந்து பெறப்பட்ட 182  மாதிரிகளில் இருந்து ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

பெரும்பாலான மாதிரிகள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து பெறப்பட்டுள்ளன. மாதிரிகள் தொடர்பான அறிக்கை இன்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் ஒப்படைக்கப்படும் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் முன்னர் 45 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தினால் முன்னெடுக்கப்பட்ட மாதிரிப் பரிசோதனைகள் மூலம் அனைத்து ஒமிக்ரோன் தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

“ஆறு மாத காலப்பகுதிக்குள் மலையகத்தில் பல்கலைகழகம் உருவாக்க அடிக்கல் நாட்டப்படும்.” – ஜீவன் தொண்டமான் உறுதி !

“அடுத்த ஆறு மாத காலப்பகுதிக்குள் மலையகத்தில் பல்கலைகழகம் உருவாக்க அடிக்கல் நாட்டப்படும்.” என தோட்ட வீடமைப்பு, சமூக உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

இந்திய அரசாங்க நிதி உதவியின் ஊடாக இலங்கையில் மலையக பகுதிகளில் கட்டி அமைக்கப்பட்ட இந்திய வீடமைப்பு வீடுகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை பூரணப்படுத்தி அதனை பயனாளிகளுக்கு கையளிப்பதற்கான திறப்பு வழங்கும் வைபவம் இன்று (15) கொட்டகலை சீ.எல்.எப் வளாகத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் இந்த வைபவம் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் தெரிவித்ததாவது,

இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கு பொது செயலாளர் நான். ஆனால் மலையக மக்களை பொறுத்தவரையில் பொதுவான அமைச்சர். அதனடிப்படையில் கட்சி பேதங்கள் அற்ற வகையில் அணைவருக்கும் சேவை செய்வது என்னுடைய கடமையாகும்.

கடந்த அரசாங்க காலத்தில் இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் மலையகத்தில் கட்டியமைக்கப்பட்டுள்ள வீடுகள் பெரும்பாலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸை சார்ந்த உறுப்பினர்களுக்கு அல்லாது ஏனைய கட்சியை சார்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளமை ஒழிவு மறைவு அற்ற விடயமாகும்.

நான் அமைச்சு பொறுப்பை ஏற்கும் பொழுது இந்திய நிதி உதவியின் ஊடாக மலையகத்தில் நிர்மாணிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ள வீடுகளில் 697 வீடுகள் மாத்திரமே பூரணமாக வழங்கப்பட்டிருந்து. ஏனைய வீடுகள் நீர், மின்சாரம், வீதி அபிவிருத்தி போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் குறைபாடுகளுடன் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டிருந்தது.

இன்னும் பல வீடுகள் பாரிய குறைபாடுகளுடன் காணப்படுவதால் பயனாளிகளுக்கு வழங்கப்படவில்லை. இவ்வாறு குறைபாடுகளுடன் காணப்பட்ட வீடுகளுக்கான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை முழுமைப்படுத்த இந்த அரசாங்கம் எனது அமைச்சுக்கு நிதிகளை வழங்கி தற்பொழுது அபிவிருத்தி பணிகள் பூரணப்படுத்தப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் இன்றைய தினம் உட்கட்டமைப்பு வசதிகள் பூரணப்படுத்தப்பட்ட ஆயிரம் வீடுகளுக்கான திறப்புகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. இது தொடர்பில் இந்திய மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். மலையகத்திற்கு வழங்கப்பட்டுள்ள 4000 வீடுகளில் உட்கட்டமைப்பு வசதிகள் குறைபாடுகள் உள்ள இன்னும் பல வீ்டுகளுக்கான அபிவிருத்தி பணிகளை பெருந்தோட்ட வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் என்ற வகையில் நானே முன்னெடுப்பேன்.

அதே போன்று ஏனைய 10 ஆயிரம் வீடுகளுக்கான பணிகளை விரைவில் நான் ஆரம்பிப்பேன். தற்பொழுது வீடுகளில் குடியமர்த்தப்பட்டவர்களுக்கு காணி உறுதி பத்திரங்களை இவ் ஆண்டு இறுதிக்குள் வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளேன்.

இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்வதற்கு முன்பாக பலர் அறிக்கை விட்டிருந்தனர். அதில் ஏற்கனவே வழங்கப்பட்ட வீடுகளை வழங்குவதாக சொல்லியிருந்தனர். அது தவறான கூற்று. அப்படியென்றால் அவர்கள் முழுமையாக வீடுகளை கையளித்திருக்க வேண்டும். இந்த அரசாங்கத்தில் எனது அமைச்சின் ஊடாக வீடுகளுக்கான முழு பணிகளும் முன்னெடுக்கப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளமையை அவர்கள் உணர வேண்டும்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மறைந்த தலைவர் அமரர். ஆறுமுகன் தொண்டமான் கூறி சென்ற ஒரு விடயம் தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதே. அதன் அடிப்படையில் அடுத்த ஆறு மாத காலப்பகுதிக்குள் மலையகத்தில் பல்கலைகழகம் உருவாக்க அடிக்கல் நாட்டப்படும் என்றார்

விமான நிலையங்களுக்கு நாளாந்தம் வருபவர்களில் 4 வீதமானோருக்கு ஒமிக்ரோன் தொற்று !

இலங்கை விமான நிலையங்களுக்கு நாளாந்தம் வருபவர்களில் 4 வீதமானோர் ஒமிக்ரோன் தொற்றுக்கு சாதகமாக இருப்பதாக சுகாதார நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஜனவரி மாதத்தில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் குறித்து விளக்கமளித்த சங்கத்தின் தலைவரான ரவி குமுதேஷ், நிலைமை மோசமடைவதைத் தடுப்பதற்காக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வரும் அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை முன்னெடுப்பது அவசியம் என்றார்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பிசிஆர் சோதனை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், ஒமிக்ரோன் பிறழ்வு நாட்டை அழிக்கும் அபாயம் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

நேர்மறை நோய்த் தொற்றுகளைக் கண்டறிவதற்கான செயல்முறை திறனற்றதாக இருப்பதால், அறிக்கையிலுள்ள தரவு 100% துல்லியமாக இருக்காது என்றும் அவர் தெரிவித்தார். நாட்டை விட்டு வெளிநாடுகளுக்குச் செல்லும் பெரும்பாலான நபர்கள், சோதனையின் போது கொரோனா தொற்றாளர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, விமான நிலையத்தில் பிசிஆர் சோதனையை மீண்டும் ஆரம்பிக்குமாறும் அவர் அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளார்.

“1.4 டிரில்லியன் ரூபாவை அச்சிட்டதாலேயே பொருளாதார நெருக்கடியை சமாளித்தோம்.” – மத்திய வங்கி ஆளுநர்

இலங்கை மத்திய வங்கி 2021ஆம் ஆண்டில் மாத்திரம் 1.4 டிரில்லியன் ரூபாவை அச்சிட்டுள்ளது.

மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் அனில் பெரேரா ஆகியோர் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் இதனைத் தெரிவித் துள்ளனர்.

வரலாற்றில் வேறு எந்த வருடமும் இவ்வளவு பெரிய தொகை அச்சிடப் பட்டதில்லை என்றும், பணத்தை அச்சடித்ததன் மூலம் நெருக்கடியை சமாளிக்க முடிந்ததாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்தார்.

சீனாவிடமிருந்து மேலுமொரு புதிய கடனுக்கு இலங்கை விண்ணப்பம் !

சீனாவிலுள்ள சர்வதேச உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியிடம் இருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை இலங்கை கோரியுள்ளது.

இலங்கையில் பசுமை அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக இந்தக் கடனுக்கு விண்ணப்பித்திருந்தது. மேற்படி வங்கி 2016 இல் நிறுவப்பட்டதுடன் இலங்கை அதன் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒன்றாகும்.

இலங்கை கோரிய கடனை வழங்குவது தொடர்பில் இதுவரை இணக்கப்பாடு எட்டப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

“இந்த வருடம் இலங்கை உணவுப்பற்றாக்குறையை எதிர்கொள்ளும்.” – ஐ.நா வெளியிட்டுள்ள எச்சரிக்கை !

கொரோனா வைரஸ் காரணமாக இலங்கை பல சவால்களை இந்த வருடம் எதிர்கொள்ளும் இலங்கை உணவுப்பற்றாக்குறை, அந்நியசெலாவணி நெருக்கடி , கடன் ஆபத்துக்கள் போன்றவற்றை எதிர்கொள்ளும் என ஐ.நாவின் அறிக்கை தெரிவித்துள்ளது.

2022 உலக பொருளாதார நிலை மற்றும் வாய்ப்புகள் குறித்த அறிக்கையிலேயே இலங்கை குறித்து இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கியநாடுகளின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்களிற்கான திணைக்களத்தின் இந்த அறிக்கையில் ஒன்றுடன் ஒன்று கலந்த பல பிரச்சினைகள் உலகின் பொருளாதார வளர்ச்சி வேகத்தை குறைக்கின்றன என தெரிவித்துள்ளது. 2022 இல் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.6 ஆக காணப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஐ.நா அறிக்கை இலங்கையின் முக்கிய சவால்களாக உணவுதட்டுப்பாடு வெளிநாட்டு நாணய கையிருப்பு குறைதல் மற்றும் கடன் ஆகியன காணப்படும் என தெரிவித்துள்ளது.

இலங்கை பாக்கிஸ்தானின் மத்திய வங்கிகள் அதிகரித்து வரும் பணவீக்கம் விரிவடையும் நடப்பு கணக்கு பற்றாக்குறைகளிற்கு மத்தியில் வட்டிவீதத்தை அதிகரித்துள்ள என சுட்டிக்காட்டியுள்ள ஐநா மத்திய வங்கிகள் அனைத்தையும் உள்ளடக்கிய மீள் எழுச்சி மற்றும் விலை ஸ்திரதன்மையை பேணுவதற்காக கொள்கை மாற்றங்களின் தருணங்கள் மற்றும்அளவுகள் குறித்து மதிப்பீடு செய்யவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. தென்னாசிய பாரிய பின்னடைவு ஆபத்தினை எதிர்கொள்கின்றது எனவும் ஐநா தெரிவித்துள்ளது.

 

“புலிகளுடனான போரை முடிக்க அமெரிக்கா, இஸ்ரேல் , இந்தியாவுடன் சீனாவும் இலங்கைக்கு உதவியது.” – சீனத் தூதுவர் கி செங்ஹோங்

இலங்கையில் மூன்று தசாப்தங்களாக இடம்பெற்ற போரில் வெற்றி பெறுவதற்கு தேவையான ஒத்துழைப்பை இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கியதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் கி செங்ஹோங் தெரிவித்துள்ளார்.

தெரிசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் குழுவுடனான சந்திப்பின் போதேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு பேசிய அவர்,

பயங்கரவாதத்திற்கு எதிராக இலங்கைக்கு உதவ ஏனைய நாடுகள் தயக்கம் காட்டினாலும், சீனா இலங்கைக்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் பயிற்சிகளை அளித்து பல தசாப்தங்களாக நீடித்த போரை வெற்றிகரமாக நிறைவு செய்தது. இலங்கையில் மூன்று தசாப்தங்களாக இடம்பெற்ற போரின்போது, அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட பல நாடுகளும், இலங்கையில் சீனாவுடன் போட்டிபோடும் இந்தியாவும் யுத்தத்தின் போது அரசாங்கத்திற்கு தமது பூரண ஆதரவை வழங்கியதாக சீனத் தூதுவர் கி செங்ஹோங் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பில் சீனா இரகசிய நிகழ்ச்சி நிரலைக் கொண்டுள்ளது என்ற பிரசாரத்தை நிராகரித்த சீன தூதுவர், வடக்கின் அபிவிருத்திக்கு தேவையான உதவிகளை வழங்க சீனா உத்தேசித்துள்ளது. மூன்று தீவுகளில் மின் உற்பத்தித் திட்டங்கள் இரத்துச் செய்யப்படுவதால் இலங்கை பெரும் இழப்பை சந்தித்துள்ளது.

இந்தத் திட்டம் ஆசிய அபிவிருத்தி வங்கி மூலம் விலைமனுக்கோரல் விடுக்கப்பட்டு, சீன தனியார் துறையால் கொள்முதல் செய்யப்பட்டதாகவும், இதற்கும் சீனத் தூதரகத்திற்கும் இடையில் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கு இலங்கை அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக சீன தூதுவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் நிதிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இரு நாடுகளும் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்தக் கடன் நெருக்கடியை இலங்கை வெற்றிகொள்ளும் எனத் தான் நினைப்பதாகவும், இந்தச் சிரமங்கள் தற்காலிகமானவை. எவ்வாறாயினும், சீன – இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் இலங்கைக்கு நீண்டகாலச் சலுகையாக அமையும் எனத் தெரிவித்துள்ள செங்ஹோங், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற குற்றச்சாட்டையும் மறுத்துள்ளார்.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை பரிசோதித்த வடகொரியா – பொருளாதார தடை விதித்த அமெரிக்கா !

ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானங்களை மீறி வட கொரியா அணு ஆயுதங்கள் மற்றும் அபாயகரமான ஏவுகணைகளை சோதித்து வருவதால் அந்த நாட்டின் மீது சர்வதேச நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இதன் விளைவாக வட கொரியா கடுமையான பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகிறது.
இந்த நெருக்கடிக்கு மத்தியிலும் அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் நாட்டின் இராணுவத்திறனை வலுப்படுத்துவதில்தான் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக ஒலியைவிட 5 மடங்கு வேகமாக செல்கிற ஹைபர்சோனிக் ஏவுகணையை வட கொரியா சோதித்தது.  இந்த பரபரப்பு அடங்குவதற்குள் வடகொரியா மீண்டும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதித்தது.
இதன் காரணமாக  அமெரிக்கா புதிய பொருளாதார தடையை விதித்துள்ளது. ஏவுகணை சோதனையில் தொடர்புடைய வடகொரியாவின் 5 மூத்த அதிகாரிகள் மீது ஜோ பைடன் நிர்வாகம் பொருளாதார தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. வட கொரியாவின் ஏவுகணை திட்டங்களுக்கான உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பத்தைப் பெறுவதில் அவர்கள் ஆற்றிய பங்குக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிகார வரம்புக்குள் இருக்கிற இந்த 5 பேரின் சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன.
இதனால் கடும் கோபம் அடைந்த வடகொரியா, அமெரிக்காவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.  மேலும், ஜோ பைடன் நிர்வாகம் தொடர்ச்சியாக இதுபோன்ற மோதல் போக்குடன் செயல்பட்டால் கடும்  விளைவுகளை அமெரிக்கா சந்திக்க நேரிடும் எனவும் பகிரங்க எச்சரிக்கையை  கிம் ஜாங் உன் அரசு விடுத்துள்ளது. வடகொரியாவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் பெயரில் இந்த எச்சரிக்கை செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

மைத்திரிபால சிறிசேனவை சிறையில் அடைக்க முயற்சி !

மைத்திரிபால சிறிசேனவை திட்டமிட்ட அடிப்படையில் சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன் பின்னணியில் செயற்படுபவர்கள் யார் என்பதும் எமக்குத் தெரியும். நேரம் வரும்போது விவரம் வெளியிடப்படும்.” என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது ,

“எமது தலைவர் அரசை விமர்சித்து வருவதால், ஏதாவது செய்து அவரைச் சிறையில் அடைப்பதற்கான நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தச் சவாலை அவர் எதிர்கொள்வார். எமது கட்சியும் தயார் நிலையில்தான் உள்ளது.

மைத்திரிபால சிறிசேனவைப் பலவந்தமாகச் சிறையில் அடைக்க முற்படுவது யார் என்பதும் எமக்குத் தெரியும். அரச பிரதானிகளா அல்லது வெளியில் உள்ளவர்களா எனத் தற்போதே குறிப்பிட முடியாது. நேரம் வரும்போது எல்லாவற்றையும் வெளிப்படுத்துவோம்.

நாட்டில் சட்டம் என்று ஒன்று இருக்கின்றது. ஆனால், அதற்கு அப்பால் சென்று, மைத்திரியைச் சிறையில் அடைக்க வேண்டும் எனச் சில அமைச்சர்கள் வலியுறுத்தி வருகின்றனர். எனவே , இதன் பின்னணியில் இரகசிய நிகழ்ச்சி நிரலொன்று இருக்கக்கூடும்.அதேவேளை, அரசிலிருந்து வெளியேறுவது தொடர்பில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு இன்னும் முடிவெடுக்கவில்லை. எனினும், அரசின் பயணம் தவறெனில் அதனைத் தைரியமாகச் சுட்டிக்காட்ட மத்திய செயற்குழு அனுமதித்துள்ளது. அரசின் பதவிக் காலம் முடியும் வரை நாம் அரசில் அங்கம் வகிப்பாமோ என்பதை இப்போது கூறமுடியாது. சிலவேளை, எமது கட்சி நீக்கப்படக்கூடும்” – என்றார்

“இலங்கையை பாதுகாப்பற்ற இடமாக சித்தரிப்பதற்கு முயலுவோர் கைது செய்யப்படுவர்.” – சரத்வீரசேகர

பொரளை கிறிஸ்தவ தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவத்தின் பின்னால் முக்கிய சூத்திரதாரி ஒருவர் உள்ளார் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

கர்தினால் மல்கம் ரஞ்சித் வெளியிட்டுள்ள கருத்துக்கள் குறித்து பதலகமவில் தனது கருத்தினை வெளியிட்டுள்ள சரத்வீரசேகர மேலும் தெரிவித்த போது,

தேசிய பாதுகாப்பினை கட்டியெழுப்புவதில் அரசாங்கம் அடைந்துள்ள முன்னேற்றத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதற்கான சதியாக இது இருக்கலாம். ஐந்து மணியளவிலேயே சம்பவம் குறித்து தெரிவிக்கப்பட்டதால் சந்தேநபரை கைதுசெய்வதற்காக சிசிடிவியில் மூன்று மணிக்கு பின்னர் பதிவான காட்சிகளையே பொலிஸார் விசாரணை செய்தனர்.

கொழும்பில் மருத்துவமனையொன்றில் கைக்குண்டு மீட்கப்பட்டது போன்ற சம்பவமாக இது இருக்கலாம். பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கத்தின் முன்னேற்றத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் முயற்சியாக இருக்கலாம். இலங்கை அரசாங்கத்தை செயல் இழக்கச்செய்வதன் மூலம் இலங்கையை பாதுகாப்பற்ற இடமாக சித்தரிப்பதற்கு முயலும் தனிநபர் அல்லது குழுவினரை கைதுசெய்வதற்கான முயற்சிகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர் என சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.