அருண்மொழி

அருண்மொழி

“நான் ஒன்றும் அண்ட்ராய்டு இயந்திரம் கிடையாது. எனக்கும் உணர்ச்சி இருக்கிறது.”- எலான் மஸ்க் கவலை !

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார். இதையடுத்து டுவிட்டரை அவர் சீரழைத்துவிடுவார் என்று பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. தற்போதைய டுவிட்டர் சி.இ.ஓவாக இருக்கும் பராக் அகர்வால் இனி ட்விட்டரின் எதிர்காலம் இருண்டதாக இருக்கும் என்று கூறி எலான் மஸ்கை நேரடியாக தாக்கியிருந்தார்.
பொதுவாக உற்சாகமான மனிதராக காணப்படும் எலான் மஸ்க் பிறர் விமர்சனங்களை கண்டுக்கொள்வது கிடையாது. தனக்கு பிடித்ததை மட்டும் தான் செய்வார் என்று கூறப்பட்டு வந்தது. தன் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் தனக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
சில சமயம் என் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் என்னை பாதிக்கும். நான் ஒன்றும் எதை பற்றியும் கவலைப்படாமல் இருப்பதற்கு நான் அண்ட்ராய்டு இயந்திரம் கிடையாது. எனக்கும் உணர்ச்சி இருக்கிறது. ஆனால் நான் அவற்றை பெரிதாக கண்டுகொள்ளாமல் கடக்க பார்க்கிறேன்.
பொதுவாக நரகத்திற்கான பாதையே நல்ல நோக்கத்துடன் அமைக்கப்படுகிறது என்ற வாக்கியம் உண்டு. என்ன பொறுத்தவரை கெட்ட நோக்கங்களுடன் தான் நரகத்திற்கான சாலை அமைக்கப்படுகிறது. ஆனால் அதிலும் நல்ல எண்ணங்கள் இருப்பதற்கான சாத்தியம் உண்டு. என்னுடைய நல்ல எண்ணம் நரகத்திற்கு உங்களை அழைத்து செல்லாது.
டுவிட்டரில் உள்ள ட்ரோல்களும், போட்களும் பயனர்களின் அனுபவத்தை குறைக்கின்றன. அவற்றை எடுத்து நான் போராடுவேன். பலதரப்பட்ட கருத்துக்களையும் உள்ளடக்கிய அமைப்பை தான் டுவிட்டரில் நான் நிறுவ உள்ளேன். அனைவருக்கும் சிறந்த சேவையை வழங்கும் நிறுவனமாக டுவிட்டர் இருக்கும்.
சாதாரண பயனர்கள் டுவிட்டரை இலவசமாக பயன்படுத்தலாம். ஆனால் வணிக நோக்கத்துடன் உள்ள பயனர்களுக்கும், அரசாங்க பயனர்களுக்கும் டுவிட்டரில் கட்டணம் வசூலிக்கப்படும்.” இவ்வாறு எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

“அனுரகுமார திஸாநாயக்கவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.”- பிரதமர் அலுவலகம்

ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் அலுவலகம் இன்று (புதன்கிழமை) அறிவித்துள்ளது.

பிரதமர் அலுவலக பிரதானி யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக அனுரகுமார திஸாநாயக்க நேற்று முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மகன்களில் ஒருவரான யோஷித ராஜபக்ஷவுக்கு சொந்தமான சொத்துக்கள் பற்றிய தகவல்களையும் ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க நேற்று அம்பலப்படுத்தியிருந்தார்.

பிரதமர் அலுவலக பிரதானி யோஷித ராஜபக்ஷவுக்கு சொந்தமாக ஹம்பாந்தோட்டை உள்ள சிறிபோபுர காட்டுப்பகுதியில் தலா 1.6 மில்லியன் ரூபாய் பெறுமதியான 3 காணிகள் தொடர்பான உறுதிப் பத்திரத்தை அவர் அம்பலப்படுத்தியிருந்தார்.

மேலும் 80 மில்லியன் ரூபாய் பெறுமதியான நேரடி ஒளிபரப்பு வாகனம், பத்தரமுல்லையில் சி.எஸ்.என் வலையமைப்பின் 200 மில்லியன் ரூபாய் கட்டிடமும் அவரது பெயரில் இருப்பதாக அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்திருந்தார்.

அத்தோடு பத்தரமுல்லையில் உள்ள 235 மில்லியன் மதிப்புடைய கார்ல்டன் ஸ்போர்ட்ஸ் வலையமைப்பு, 138 மில்லியன் பெறுமதியான நுகேகொடையில் அமைந்துள்ள காணி மற்றும் கட்டடம் குறித்தும் அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

“மஹிந்த ராஜபக்ஷ எனது பேச்சை எந்த வகையிலும் செவிமடுக்கவில்லை.” – ஹர்ஷ டி சில்வா விசனம் !

2020ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட விவாதத்தின்போது எதிர்க்கட்சிகளின் பதில் உரையின்போது அமைச்சர் அலி சப்ரி இன்று கூறியதையே தானும் கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சர் அலி சப்ரி இன்றைய நாடாளுமன்ற அமர்வின் தொடக்கத்தில் விசேட உரையாற்றினார்.

இதன்போது, சர்வதேச நாணய நிதியத்திற்கு முன்னதாகவே சென்றிருக்க வேண்டும் என்றும் இது ஒரு வரலாற்றுத் தவறு என்றும் கூறினார். அத்தோடு, வரி குறைப்பும் பாரிய தவறு எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிலையில், நிதி அமைச்சர் தெரிவித்த கருத்துக்கு பதிலளித்து உரையாற்றியபோதே அலி சப்ரி கூறியதையே 2020ஆம் ஆண்டு தானும் கூறியதாக ஹர்ஷ டி சில்வா  தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அப்போதைய நிதி அமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ தனது பேச்சை எந்த வகையிலும் செவிமடுக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், இழைக்கப்பட்ட தவறுகளை பணிவுடன் ஏற்றுக்கொண்ட அமைச்சர் அலி சப்ரிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.

பதவி விலகும் மகிந்த..?- வெளியாகியுள்ள தகவல் !

மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகவுள்ளதாக பரப்பப்படும் செய்திகள் பொய்யானவை என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சி கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்போது, நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்து பிரதமர் பதவியில் இருந்து விலகவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அமைச்சர், அப்படியான எந்த முடிவும் இல்லை என்றும் நாட்டின் பொருளாதாரம், மக்கள், நாடாளுமன்றம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து பிரதமர் அறிக்கை வெளியிடவுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த அறிக்கை நாளை அல்லது நாளை மறுதினம் வெளியாகலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு படகில் செல்ல முயன்ற 14 பேர் கைது !

மன்னாரில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்கு படகில் சென்ற மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 12 பேர் உள்ளடங்களாக 14 நபர்களை தாழ்வுபாடு கடற்பரப்பில் வைத்து இன்று (4) அதிகாலை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

7 சிறுவர்கள், 3 பெண்கள், 2 ஆண்கள் உள்ளடங்களாக 3 குடும்பத்தை சேர்ந்த 12 நபர்கள் மற்றும் மன்னாரை சேர்ந்த படகோட்டிகள் இருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 14 பேரூம் இன்று (4) காலை 5 மணியளவில் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணைகளின் பின் இரண்டு படகோட்டிகள் உள்ளடங்களாக 14 பேரூம் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அலரி மாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் – நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு !

கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அலரி மாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து வெளியேற்றுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

போராட்டம் காரணமாக அலரி மாளிகைக்கு முன்பாக உள்ள வீதி மற்றும் நடைபாதையை தடை செய்யப்படுவதாக பொலிஸார் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. குறித்த உத்தரவு தொடர்பில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு பொலிஸார் அறிக்கையொன்றை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நடைபாதையைப் பயன்படுத்தும் பொதுமக்கள் மற்றும் வீதியை பயன்படுத்துப வர்களுக்கு எவ்வித அசௌகரியமும் ஏற்படாத வகையில் அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கு இந்த உத்தரவு தடையாக இருக்காது என கோட்டை நீதவான் மஞ்சுளா ரத்நாயக்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு இலவச பேருந்து உதவிகள் !

அரசுக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்களுக்கு இலவச பேருந்துகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன,

அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்கு நாட்டில் எங்கிருந்தும் இலவசமாக பஸ்களை வழங்குமாறு தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், அரசாங்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் எதிர்வரும் காலங்களில் பாராளுமன்ற வளாகத்தைச் சுற்றி பேருந்துகளை முற்றுகையிடவும் தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது.

இதேவேளை, இம்மாதம் 6ஆம் திகதி நடைபெறவுள்ள ஹர்த்தால் பிரசாரத்துக்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

பண மோசடிகளுக்கும் ராஜபக்ஷ குடும்பத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை.”- நாமல் ராஜபக்ஷ

ஒஸ்பென் மெடிக்கல் மற்றும் அவுஸ்ரேலியாவில் நடந்ததாக தெரிவிக்கப்படும் சந்தேகத்திற்குரிய பணமோசடி குறித்து தமது குடும்பத்திற்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையின் நிர்மாணப்பணியின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிப் பரிவர்த்தனைகள் தொடர்பான தகவல்களை சர்வதேச ஊடகமான ஏபிசி நியூஸ் செய்தி நிறுவனமானது அம்பலப்படுத்தியுள்ளது.

குறித்த வைத்தியசாலைக்கு உபகரணங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சேவைகளை வழங்கும் 18.8 மில்லியன் டொலர் திட்டத்திற்கு ஒஸ்பென் மெடிக்கல் நிறுவனம் அவுஸ்ரேலிய அரசாங்கத்திடமிருந்து அனுமதியைப் பெற்றுள்ளது.

இலங்கையில் ஒஸ்பென் மெடிக்கலின் முதல் 2.1 மில்லியன் டொலர் பரிவர்த்தனையானது பிரித்தானிய விர்ஜின் தீவுகளின் பதிவு செய்யப்பட்ட நிறுவனமான சேபர் விஷன் ஹோல்டிங்ஸ் இடையில் இடம்பெற்றுள்ளது. இலங்கையைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் நிமல் பெரேராவுக்குச் சொந்தமான இந்த நிறுவனம் இலங்கையில் உள்ள ராஜபக்ச குடும்பத்துடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ளதாக ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளன.

ராஜபக்ச குடும்பத்துடன் தொடர்பு வைத்திருந்த நிமல் பெரேரா என்ற இடைத்தரகருக்கு இந்த நிறுவனம் இரகசியமாக சொந்தமானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பரிவர்த்தனை காரணமாக கடந்த 2016 ஆம் ஆண்டில், பண தூய்தாக்கல் குற்றச்சாட்டில் நாமல் ராஜபக்சவை கைது செய்ய அது வழிவகுத்ததாகவும் ஏபிசி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் குறித்த இரண்டு நிறுவனங்களுக்கு இடையேயான பரிவர்த்தனையில் எவ்வித சம்பந்தமும் கிடையாது என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கம் முன்வைத்த இந்த குற்றச்சாட்டு தொடர்பாக இன்னும் தான் நீதிமன்றத்திற்கு செல்வதாகவும் இதில் யாருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்திக்க போப் பிரான்சிஸ் கோரிக்கை !

உக்ரைன் போர் தொடர்பாக மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்திக்க கோரிக்கை விடுத்துள்ளதாக போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் நடைபெறுவது கொடூரமான மற்றும் புத்தியில்லாத போர் என்றும் போப் பிரான்சிஸ் பலமுறை  கண்டித்துள்ளார்.

இதுகுறித்து போப் பிரான்சிஸ் கூறியதாவது:-

“உக்ரைன் போர் தொடர்பாக ரஷிய அதிபர் விளாடிமிர் புடினை சந்திக்க நான் மாஸ்கோ செல்ல தயாராக இருக்கிறேன். இதற்காக 20 நாட்களுக்கு முன்பாக தகவல் அனுப்பினேன். எங்களுக்கு இன்னும் பதில் வரவில்லை. இருப்பினும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். புதின் இந்த நேரத்தில் சந்திப்பை நடத்த விரும்பவில்லை என தெரிகிறது.

நான் இப்போதைக்கு கீவ் செல்லவில்லை. நான் போக வேண்டிய இடம் கீவ் இல்லை. நான் முதலில் மாஸ்கோ தான் செல்ல வேண்டும். புதினை சந்திக்க வேண்டும்.” இவ்வாறு அவர் கூறினார்.

இலங்கையில் 2021ல் முன்னெப்போதுமில்லாத வகையில் அதிகரித்த தற்கொலைகள் – பின்னணி என்ன..?

கடந்த ஆண்டுகளை விட 2021 இல் தற்கொலை செய்து கொண்டுள்ள இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் 2021 ஆம் ஆண்டில் 2632 ஆண்கள் மற்றும் 647 பெண்கள் என மொத்தமாக 3279 தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகத்தின் அண்மைய புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தற்கொலைகளில் பெரும்பாலானவை குடும்பத் தகராறு காரணமாக ஏற்பட்டவையாகும். 2021ஆம் ஆண்டில் குடும்பத் தகராறு காரணமாக 614 பேரும், நாட்பட்ட நோய்களால் 430 தற்கொலைகளும் பதிவாகியுள்ளன.

அத்துடன் 2021 ஆம் ஆண்டில் பொருளாதாரப் பிரச்சினைகளால் 174 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவற்றில் 154 ஆண்களும் 18 பெண்களும் உள்ளடங்குவர்.

2020 இல் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 3074 ஆக இருந்தது. 2019 இல் 3135 ஆகவும் 2018 இல் 3281 ஆகவும் காணப்பட்டது. 2017 ஆம் ஆண்டு நாட்டில் மொத்தமாக தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 3263 என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

2016ல் 3025 ஆகவும் 2015 இல் 3,054 ஆகவும் 2014 இல் அந்த எண்ணிக்கை 3144 ஆகவும் இருந்தது.

2021 இல் 3279 தற்கொலைகளில் 2290 பேர் தூக்கிட்டும், பூச்சிக்கொல்லி அல்லது களை கொல்லி பயன்படுத்தியதால் 600 பேரும் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலான தற்கொலைகள் திருமணமானவர்களால் செய்யப்படுகின்றன. மேலும் 2021 ஆம் ஆண்டில் 2,391 தம்பதியர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

2021 இல் தற்கொலை செய்து கொண்டவர்களில் பெரும்பாலானோர் தொழில் வாய்ப்பற்றவர்கள் ஆவர். அவ்வாறு வேலைவாய்ப்பற்ற 1136 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதுடன் விவசாயத் துறையில் பணியாற்றும் 472 பேரும், உற்பத்திப் பணியில் ஈடுபட்டுள்ள 205 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.