அருண்மொழி

Friday, September 17, 2021

அருண்மொழி

“இலங்கைக்கு திரும்பும் அகதிகளுக்கு நாம் பாதுகாப்பு வழங்குவோம்.” – நாமல் ராஜபக்ஷ ட்வீட் !

யுத்தக் காலத்தில் வெளிநாடுகளுக்கு அகதிகளாக சென்று, நாடு திரும்ப விரும்பும் அகதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதாக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கை அகதிகளுக்கு தமிழக முதலமைச்சர் சிறப்புரிமைகளை அறிவித்த நிலையிலேயே, நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டர் தளத்தில் இதனைக் கூறியுள்ளார்.

இலங்கைக்கு மீள வருகைத் தரும் அகதிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அவர்களுக்கு தமது தாய் நாட்டில் தமது வாழ்க்கையை மீள ஆரம்பிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர், இலங்கை அகதிகள் குறித்து தமிழக முதல்வர் அவதானம் செலுத்தியமையை வரவேற்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தமிழகத்திற்கு அகதிகளாக சென்ற 3,567 குடும்பங்களை அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டிற்கு மீள அழைத்து வந்து, அவர்களுக்கு தேவையான வீடுகளை வழங்கியிருந்தார் எனவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

யாழில் அதிகரிக்கும் கொரோனா – மருத்துவர் உட்பட மூவர் உயிரிழப்பு !

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் உட்பட மேலும் மூவர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.

தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் யாழ்ப்பாணம் கிளையில் மருத்துவச் சான்றிதழ் வழங்கும் மருத்துவர்களில் ஒருவரான நல்லூரைச் சேர்ந்த 72 வயதுடையவரே கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார்.

மேலும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மானிப்பாயைச் சேர்ந்த 53 வயதுடைய பெண் ஒருவரும் உரும்பிராயைச் சேர்ந்த 56 வயதுடைய ஆண் ஒருவரும் உயிரிழந்தனர்.

இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 227ஆக உயர்வடைந்துள்ளது.

இலங்கையை வாட்டும் கொரோனா – 3,764 புதிய தொற்றாளர்கள் !

நாட்டில் மேலும் 3,764 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 420,725 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 355,394 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,371 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

“மக்களுக்காகவே இலவசமாக ஒரு இலட்சம் பைசர் தடுப்பூசிகளை வழங்கியுள்ளோம்.” – அமெரிக்கா டுவீட் !

கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு ஒரு இலட்சம் பைசர் தடுப்பூசிகளை வழங்கியுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

இந்த தடுப்பூசிகள் இன்றைய தினம் (28) நாட்டை வந்தடைந்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசிகளை தாம் இலங்கை மக்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளதாகவும் தூதரகம் குறிப்பிட்டுள்ளது. உயிர்களை பாதுகாத்து, பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவதற்கு அமெரிக்க உறுதிபூண்டுள்ளதாக அமெரிக்க தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

சொந்த மண்ணில் 400 விக்கெட்டுக்கள் – ஜேம்ஸ் ஆண்டர்சன் சாதனை !

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெற்றது. இன்றைய 4-வது ஆட்டத்திலேயே இங்கிலாந்து வெற்றி பெற்றது.
முதல் இன்னிங்சில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 630 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இன்று 2-வது இன்னிங்சில் ரஹானேவை வீழ்த்தியதன் மூலம் சொந்த நாட்டில் 400 விக்கெட்டை பதிவு செய்துள்ளா்.
94 டெஸ்ட் போட்டியில் 179 இன்னிங்சில் 3408.3 ஓவர்கள் வீசி 9,610 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து இந்த விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் 42 ஓட்ங்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட் வீழ்த்தியது ஒரு இன்னிங்சில் சிறந்த பந்து வீச்சாகும். ஒரு போட்டியில் 71 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 11 விக்கெட்டுகள் வீழ்த்தியது  அவரின் சிறந்த பந்து வீச்சாகும்.
இதற்கு முன் இலங்கையை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் சொந்த நாட்டில் 493 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். அதன்பின் சொந்த நாட்டில் 400 விக்கெட்டை தாண்டிய ஒரே பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
முத்தையா முரளீதரன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகள் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கு இனிங்ஸ் தோல்வி – ஒரு நாள் மீதமிருக்க இந்தியாவை பந்தாடியது இங்கிலாந்து !

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெற்றது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் , முதல் டெஸ்ட் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், 2-வது டெஸ்டில் இந்தியா அசத்தல் வெற்றி பெற்றது.
இந்நிலையில் , 3-வது டெஸ்டில் விராட் கோலி நாணயச்சுழற்சியில் வென்று  துடுப்பெடுத்தாட்டத்தை தேர்வு செய்தார்.
முதல் இனிங்சில் புதுப்பந்தில் ஆண்டர்சனின்  பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இந்தியா 21 ஓட்டங்களுக்குள் கே.எல். ராகுல், புஜாரா, விராட் கோலி ஆகியோரை இழந்தது. அதன்பின் ஆலி ராபின்சன், சாம் கர்ரன், ஓவார்டன் அடுத்தடுத்து விக்கெட்டுகளை கைப்பற்ற இந்தியா 78 ஓட்டங்களில் சுருண்டது.
தொடர்ந்து முதல் இனிங்சில்  துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 432 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. அந்த அணி சார்பாக தலைவர் ரூட் சதமடித்து அசத்தியதுடன் ஏனைய வீரர்களும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தன்.
இனிங்ஸ் தோல்வியை  தவிர்க்கும் நோக்குடன் 2-வது இன்னிங்சில் களமிறங்கிய இந்திய வீரர்கள் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். புஜாரா, ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, இந்தியா 215 ஓட்டங்கள் வரை 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தது. அதன்பின் 278  ஓட்டங்களுக்குள் முழு விக்கெட்டுக்களையுமே இழந்தது.  முக்கியமாக  கடைசி 8 விக்கெட்டுகளை 63 ஓட்டங்களுக்குள் இழந்து இனிங்ஸ் தோல்வியை சந்தித்தது இந்தியா.
2வது இன்னிங்சில் இங்கிலாந்து தரப்பில் ராபின்சன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஓவர்டன் 3 விக்கெட் எடுத்தார்.
இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதால் 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. 4வது போட்டி செப்டம்பர் 2ம் தேதி தொடங்க உள்ளது.
போட்டியில் இந்தியாவை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது இங்கிலாந்து அணி. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து டெஸ்ட் அணி தலைவராக அதிக போட்டிகளில் வெற்றி பெற்றவர் என்ற பெருமையை ஜோ ரூட் பெற்றுள்ளார். இந்த வெற்றி இங்கிலாந்து தலைவராக ஜோ ரூட்டுக்கு 27-வது வெற்றியாகும்.

“மு.க.ஸ்டாலின், தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளின் வாழ்வாதார மலர்ச்சிக்காக நிதி உதுக்கீடு செய்துள்ளமை மகிழ்ச்சி தருகிறது.” – அமைச்சர் டக்ளஸ்

தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளின் வாழ்வாதார மலர்ச்சிக்காக தமிழக முதல்வரினால் நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளமைக்கு இலங்கைத் தமிழ் மக்கள் சார்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நன்றி தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்றொழில் அமைச்சரினால் இன்று (28.08.2021) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு  நன்றி தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில்  அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“இலங்கைத் தமிழ் மக்கள் தஞ்சம் தேடி வந்த சந்தர்ப்பங்களில், அவர்களை அரவணைத்து பாதுகாப்பு அளித்தவர்கள் தமிழக மக்கள். அதாவது,  தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர்களான கலைஞர், எம்.ஜீ.ஆர். மற்றும் ஜெயலலிதா  ஆகியோரும் தங்களால் முடிந்தளவு ஒத்துழைப்புகளை வழங்கியிருக்கின்றார்கள்.

அதேபோன்று ஏனைய அரசியல் தலைவர்களும் தங்களுடைய தார்மீக ஆதரவினை வெளிப்படுத்தி வந்தனர். இதனால்தான் தமிழக மக்கள் குரல் கொடுப்பார்கள், கரம் நீட்டுவார்கள் என்ற நம்பிக்கை இலங்கை தமிழ் மக்கள் மத்தியில் இன்றும் ஆழமாக இருக்கின்றது.

அதனையும் நிரூபிக்கும் வகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளின் வாழ்வாதார மலர்ச்சிக்காக  நிதி ஒதுக்கீடுகள் மேற்கொண்டுள்ளமை மகிழ்ச்சி அளிக்கின்றது. இந்நிலையில், மீண்டும் இலங்கைக்கு திரும்பி வருவதற்கு விரும்புகின்ற எமது மக்களுக்கு, கௌரவமான வாழ்வியலை ஏற்படுத்துவதற்கு தேவையான செயற்பாடுகளை தமிழக அரசுடன் இணைந்து மேற்கொள்வதற்கு தயாராகவே இருகின்றேன்.

இதேவேளை, இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்ட விரோத செயற்பாடுகள் தொடர்பாகவும் தமிழக முதல்வர் தீர்க்கமான கரிசனை செலுத்த வேண்டும் என்பதே என்னுடைய எதிர்பார்ப்பாகும்.

அதாவது, இலங்கை கடற்பரப்பை நம்பி வாழுகின்ற தமிழக கடற்றொழிலாளர்களுக்கு, மாற்று தொழில் முறைகளை வழங்குது  குறித்து தமிழக முதல்வர், இந்திய மத்திய அரசாங்கத்துடன் தீர்க்கமான பேச்சுக்களை முன்னெடுத்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.” என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

“கொவிட் தொற்றாளர் எண்ணிக்கையையே ஒழுங்காக வெளியிடாதவர்கள் எப்படி யுத்த இறப்பு எண்ணிக்கையை ஒழுங்காக வெளியிட்டிருப்பார்கள்..? – நாணக்கியன் கேள்வி !

“கிழக்கில் இரண்டாவது தடுப்பூசி வழங்காதால் கொரோனாவினால் உயிரிழந்த 486 பேரின் உயிரிழப்புக்கு யார் பொறுப்பு..? என பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன்  கேள்வி எழுப்பியுள்ளார்.

மட்டக்களப்பு மட்டு. ஊடக மையத்தில் இன்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் பாரிய ஒரு சவாலான காலப்பகுதியில் நாங்கள் இருக்கின்றோம். உண்மையிலே இன்று அரசாங்கத்தின் செயற்பாடுகளில் இருந்து எங்களை நாங்கள் பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.

இலங்கையிலே ஒவ்வொரு மாவட்டதிலும் கொரோனா தொற்றின் நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்பாக சுகாதார அமைச்சில் ஆராய்கின்ற பிரிவு இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்றாவது அலையில் நோயாளர்களின் எண்ணிக்கை 4,011 ஆகவும், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவில் 2,602 ஆகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவில் 2,906 ஆகவும் காட்டப்படுகின்றது.

அதேவேளை, கிழக்கிலுள்ள பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தரவுகளை பார்த்தால் மட்டக்களப்பில் 15,883 கல்முனையில் 6,231 திருகோணமலையில் 8,617 ஆக காட்டப்படுகின்றது. எனவே, இவ்வாறான மோசடியான நடவடிக்கை இதனை எவ்வாறு நம்பமுடியும்.

இவ்வாறு கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் இவ்வாறு என்றால் யுத்தத்திலே உயிரிழந்தவர்கள் யுத்த காலத்திலே கொல்லப்பட்டவர்கள் புள்ளிவிபரங்களை எப்படி நம்புவது. இதே அரசாங்கம் தான் அந்த நேரத்திலே இருந்தது இவை அனைத்துக்கும் காரணம் என்ன? தடுப்பூசி நேரத்துக்கு வழங்காதது தான் உயிரிழப்புக்கு காரணம். அவ்வாறே உயிரிழந்தவர்களில் 88 வீதமானவர்கள் இரண்டு தடுப்பூசி கிடைக்காதவர்கள். அதில் இரண்டு தடுப்பூசியை பெற்ற 12 வீதமானோரே உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு இருக்கும்போது கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவில் இரண்டாவது தடுப்பூசி ஒன்று கூட கிடைக்கவில்லை அவ்வாறு திருகோணமலையிலும் ஒன்று கூட பொதுமக்களுக்கு கிடைக்கவில்லை. ஆனால் மட்டக்களப்பில் மாத்திரம் 32 வீதம் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் நோக்கம் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும் டொலரை பாதுகாக்க வேண்டும் என மேல் மாகாணத்தில் இருக்கின்ற 30 வயதுக்கும் 60 வயதுக்கும் இடையில் தடப்பூசி வழங்க வேண்டும் என்பதற்காக அங்கு தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றது ஆனால் கிழக்கில் இரண்டாவது தடுப்பூசி வழங்கப்படவில்லை.

ஜனாதிபதி என்ன செய்தவர் அனைத்துமக்களுக்கும் பொதுவான சமனான தலைவராக இருக்கவேண்டும். கிழக்கு மாகாணத்தில் இருப்பவர்கள் மக்கள் இல்லையா இதில் தமிழ் முஸ்லீம் சிங்கள மக்கள் வாழுகின்றனர் அவர்கள் மொட்டு கட்சிக்கு ஜனாதிபதிக்கும் வாக்களித்துள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 211 பேரையும் திருகோணமலையில் 135 பேரையும், கல்முனையில் 140 பேரையும் இழந்துள்ளோம் இந்த உயிர்களுக்கு எல்லாம் யாரு பொறுப்பு இந்த முடக்கம் ஒரு போலியான முடக்கம் என்றார்.

“தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலிக்கு உளம் கனிந்த நன்றிகள்.” – எம்.ஏ.சுமந்திரன்

ஈழத் தமிழர்களின் நலனுக்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 317 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கும் நலத்திட்ட  நடவடிக்கைக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

தமிழ்நாட்டில் அகதி முகாம்களில் வசிக்கும் எமது ஈழத்தமிழர்களின் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக கூட்டமைப்பின் சார்பில் அவருக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

தமிழ்நாட்டில் முகாம்களில் வாழும் ஈழத்தமிழ் அகதிகளுக்காக தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின்  முன்னெடுக்க ஆலோசித்துள்ள அகதி முகாம்களில் வாழும்  ஈழத்தமிழ் உறவுகளுக்கு நிரந்தரமான வதிவிட வசதிகளை ஏற்படுத்துதல், ஈழத் தமிழர்களின் எதிர்கால நலன் கருதிய வளர்ச்சித் திட்டங்களுடன் அவர்களின்  உயர்கல்விக்கான உதவித் திட்டம் மற்றும் தாயகத்துக்கு மீளக்குடியமர விரும்புகின்றவர்கள் தொடர்பான தீர்மானங்களை முன்னெடுப்பதற்கான குழுவையும் அமைத்து ஆக்கபூர்வமாக நடவடிக்கையை முன்னெடுத்துள்ளார்.

முதன்முறையாக தமிழ்நாடு சட்ட சபையில் ஒரு முதல்வர் இப்படியான திட்டங்களை அறிவித்துள்ளதோடு அதற்கான நிதி ஒதுக்கீட்டையும் வழங்கியுள்ளமையானது ஓர்  ஆக்கபூர்வமான செயலாகும். இதற்காக எமது மக்கள் சார்பாகவும் கூட்டமைப்பு சார்பிலும்  உளம் கனிந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கின்றோம் – என்றார்.

ஜேர்மனியில் பீட்சா டெலிவரி செய்யும் ஆப்கானிஸ்தானின் அமைச்சர் சையத் அகமது ஷா சதாத் !

சமீப நாட்களாக சோகச் செய்திகளையும், துயர தகவல்களையுமே தந்துகொண்டிருக்கும் ஆப்கானிஸ்தானில் இருந்து இன்னொரு வித்தியாச செய்தி. வெளிநாட்டுக்குத் தப்பியோடிய ஜனாதிபதி அஷ்ரப்கனி அரசில் மந்திரியாக பதவி வகித்த சையத் அகமது ஷா சதாத், தற்போது ஜெர்மனி நகரம் ஒன்றில் பீட்சா டெலிவரி நபராக வேலை பார்க்கிறார்.

 

கடந்த 2018-ம் ஆண்டு அஷ்ரப்கனி மந்திரிசபையில் சதாத் இணைந்தார். தொலைத்தொடர்பு மற்றும் தொழில்நுட்ப மந்திரியாக பதவி வகித்த அவர், பின்னர் அப்பொறுப்பில் இருந்து விலகினார்.
கடந்த ஆண்டு டிசம்பரில் ஜெர்மனியின் லீப்சிக் நகருக்கு இடம் பெயர்ந்த சதாத், தற்போது அங்கு பீட்சா டெலிவரி நபராக பணியாற்றுகிறார். பீட்சா டெலிவரி பையுடன் அவர் சைக்கிள் ஓட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி கவனம் பெற்றிருக்கின்றன.
ஆனால் முன்னாள் ஆப்கான் மந்திரி சையத் அகமது ஷா சதாத் அலட்டிக்கொள்ளாமல், ஆசிய, அரபு நாடுகளில் உயர் அந்தஸ்து வகிக்கும் நபர்கள் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள தனது வாழ்க்கை உந்துதலாக இருக்கும் என்று கூறுகிறார்.