அருண்மொழி

Tuesday, August 3, 2021

அருண்மொழி

கியூபாவில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய மக்கள் – வாய்ப்பை பயன்படுத்தி தலையை நுழைக்கிறது அமெரிக்கா !

கியூபாவில் அரசாங்கத்துக்கு எதிராக நடந்துவரும் போராட்டத்திற்கு அமெரிக்கா தனது ஆதரவை வழங்கியுள்ளது.

பொருளாதாரச் சரிவு மற்றும் கொரோனா நெருக்கடியைத் தவறாகக் கையாண்டதன் காரணமாக கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராக கியூபாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திரளாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், உணவு மற்றும் மருந்து தட்டுப்பாடு நிலவுவதாக அவர்கள் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் போராட்டத்தில் பங்கேற்றவர்களை அரசாங்கம்  இராணுவத்கைத பயன்படுத்தி அடக்கியதுடன் தொடர்ச்சியான அடக்குமுறைகளையும் கையாண்டு வருகின்றது.

இந்த நிலையில் கியூபாவில் நடைபெறும் போராட்டத்துக்கு அமெரிக்கா ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறும்போது, “கியூபாவுடனான விரோதப் போக்கின் பல தசாப்த கால வரலாற்றைக் கொண்ட அமெரிக்கா, கியூபர்களுடன் நிற்பதாகக் கூறியதுடன், வன்முறையிலிருந்து விலகி அதன் மக்களுக்குச் செவிசாய்க்குமாறு அரசாங்கத்தில் உள்ளவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

‘கியூப மக்கள் அடிப்படை மற்றும் உலகளாவிய உரிமைகளை தைரியமாக வலியுறுத்துகின்றனர்’ என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார்.

இந்த நிலையில் அரசுக்கு எதிராக நடக்கும் போராட்டத்தின் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக கியூபா  குற்றம் சுமத்தியுள்ளது. கியூபா மீதான அமெரிக்கத் தடைகள் 1962ஆம் முதல் பல்வேறு வடிவங்களில் நடைமுறையில் உள்ளதே பற்றாக்குறைகளுக்கு காரணம் என ஜனாதிபதி மிகுவல் தியாஸ் கேனல் குற்றம் சாட்டினார்.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியைச் சில நாட்களுக்கு முன்னர் கியூபா அறிமுகப்படுத்தியது. இதன் தொடர்ச்சியாகவே கியூபாவில் போராட்டங்கள் அதிகரித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

தடுப்பூசி போட்டுக்கொண்ட பாடசாலை அதிபர் மரணம் – யாழில் சம்பவம் !

யாழ்ப்பாணம் – சுன்னாகம் ஸ்கந்தவரோதயா ஆரம்பப் பாடசாலை அதிபர், நேற்று முன்தினம் (11) திடீர் உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 9ஆம் திகதியன்று, ஆசிரியர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டபோது அவரும் தடுப்பூசி பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், ஏற்கெனவே இருதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று முன்தினம் திடீரென உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, யாழ்.குடாநாட்டில் 50 ஆயிரம் பேருக்கு 2 கட்டங்களாக தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன. அதேபோல அடுத்த 50 ஆயிரம் பேருக்கு இரண்டாம் கட்டமாக தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன.  எனினும், தடுப்பூசி போட்டவர்களிடையே ஆபத்தான சம்பவங்கள் எவையும் பதிவாகவில்லை என சுகாதாரத் துறையினர் கூறுகின்றனர்.

மேலும் நோய் பாதிப்புகள் இருப்போர் தமது நோய் நிலை குறித்து வைத்தியர்களுக்கு தெரியப்படுத்தி தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதால் பாதிப்புகளை முற்றாகத் தவிர்த்துக்கொள்ள முடியும் எனவும் சுகாதாரத் துறையினர் கூறினர்.

சமூக ஊடகங்களில் பெண்களின் நிர்வாண படங்கள் மற்றும் காணொளி காட்சிகளை வெளியிட்ட ஐவர் கைது !

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடு ஒன்றுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய பெண்களின் நிர்வாண படங்கள் மற்றும் காணொளி காட்சிகளை இணையத்தளம் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிட்ட ஐவரை சந்தேகத்தின் பேரில் பொலிசார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

புறக்கோட்டை மற்றும் இராஜகிரிய பகுதிகளைச் சேர்ந்த 26 வயதுடைய இருவரும், கண்டி பூஜாபிட்டிய பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய நபரும், பிலியந்தலை பகுதியை சேர்ந்த 39 வயது நபரும் மற்றும் கம்பஹா பிரதேசத்தில் 31 வயதுடைய நபரும் இவ்வாறு கைது செய்யப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

31 வயதுடைய நபர் மற்றொரு நபரின் பேஸ்புக் கணக்கில் பிரவேசித்து, கடவுச்சொல்லை மாற்றி, ஆபாச புகைப்படங்களை பதிவேற்றி உள்ளதாக அளிக்கப்பட்ட முறைப்பாடு ஒன்றுக்கு அமைய இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.

கைவிடப்பட்ட யாழ்ப்பாணத்திற்கு நன்னீர் கொண்டுவரும் திட்டம். மீண்டும் முயற்சிக்கிறார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா !

யாழ்.குடாநாட்டிற்கு நன்னீரை கொண்டு செல்லும் திட்டம் தொடர்பாக 1962 ஆம் ஆண்டு காலப் பகுதியில் ஆறுமுகம் திட்டம்  பிரஸ்தாபிக்கப்பட்ட போதிலும்,  ஆனையிறவு கடல் நீரேரியில் பருவ கால மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவோரின் எதிர்ப்பின் காரணமாக கைவிடப்பட்டடிருந்தது.

இந்நிலையில், குறித்த திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி ஆனையிறவு கடல் நீரேரியில் 23 வீதமான பகுதியை மறித்து அணை அமைத்து, திட்டத்தினை முன்னெடுப்பது தொடர்பாக தற்போதைய அரசாங்கத்தினால் பிரஸ்தாபிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், பிரதேச மக்கள் மற்றும் சம்மந்தப்பட்ட தரப்புக்களுக்கு, புதிய திட்டம் தொடர்பாக தெளிவுபடுத்தி, கருத்துக்களை அறிந்து கொள்ளும் வகையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இதுதொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று(13.07.2021) நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா “இரணைமடு, கல்மடு, விசுவமடு, உடையார்கட்டு போன்ற குளங்களில் இருந்து வழிந்தோடி விரயமாகின்ற நீரை பயன்படுத்தி, யாழ்.மாவட்டத்திற்கான நன்னீரை பெற்றுக்கொள்ளும் திட்டத்தினை செயற்படுத்துவது தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன்  கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது, நெதர்லாந்து அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் மறுசீரமைக்கப்பட்ட திட்டம் தொடர்பாக கிளிநொச்சிப் பிராந்திய பிரதி நீர்பாசனப் பணிப்பாளர் த.இராஜகோபுவினால் தெளிவுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

“கஞ்சாவை பயிரிட்டு கடன் அடைக்கத் திட்டம். சட்ட ஏற்பாடு தயார்.” – டயானா கமகே

“கஞ்சாவை அதிகம் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதால் அதிக வருமானம் ஈட்டி நாட்டின் கடனை அடைக்கவுள்ளதாக ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.

சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு கருத்து வௌியிட்டுள்ள அவர், இவ்விடயம் குறித்து இலங்கையில் உள்ள உயர் ஆயுர்வேத வைத்தியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் குறிப்பிட்டுள்ள அவர்,

கஞ்சாவை போதைப் பொருள் தேவைக்காக செய்கையிட்டால் மாத்திரமே நமக்கு பிரச்சினை எனவும் ஏற்றுமதி நோக்கில் செய்கையிட்டால் பிரச்சினை கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகில் 50ற்கும் மேற்பட்ட நாடுகள் கஞ்சா செய்கையில் ஈடுபடுவதாகவும் ஆயுர்வேத மருந்துக்கு அது பயன்படுத்தப்படுவதாகவும் டயானா கமகே தெரிவித்துள்ளார். இத்திட்டம் செயற்படுத்தப்பட்ட பின் அதன் நன்மைகள் வந்தடையும் போது திட்டம் குறித்த பிழையான விமர்சனம் இல்லாது போகுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் கஞ்சா செய்கை மற்றும் ஏற்றுமதியின் ஊடாக நாட்டின் கடனை செலுத்தி முடிக்கலாம் என்றும் பில்லியன் கணக்கில் இலங்கைக்கு லாபம் ஏற்படும் எனவும்  அந்த வகையில் நாட்டில் கஞ்சா செய்கையில் ஈடுபடவும் ஏற்றுமதி செய்யவும் தேவையான சட்ட ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடரும் சாதனை வெற்றி – நடப்பு ஆண்டின் 3 கிராண்ட்சிலாம் பட்டத்தையும் வென்றார் ஜோகோவிச் !

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற போட்டிகளில் மிகவும் உயரியதான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடைபெற்றது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் உலகின் முதல் நிலை வீரரும் செர்பியாவைச் சேர்ந்தவருமான ஜோகோவிச் 7-ஆம் நிலை வீரரும் இத்தாலியை சேர்ந்தவருமான பெரேட்டினியும் மோதினர்.
3 மணி நேரம் 23 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில், ஜோகோவிச் 6-7,6-4,6-4 6-3 என்ற செட் கணக்கில் பெரேட்டினியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
நடப்பு ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன் ஆகியவற்றை தொடர்ந்து விம்பிள்டனிலும் ஜோகோவிச் வாகை சூடியுள்ளார்.
இதன் மூலம் ஜோகோவிச் புதிய சாதனை படைத்தார். 34 வயதான அவர் 20 கிராண்ட்சிலாம் பட்டம் பெற்றுள்ளார். அதிக கிராண்ட்சிலாம் பட்டம் வென்ற ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), ரபெல் நடால் (ஸ்பெயின்) ஆகியோரின் சாதனையை ஜோகோவிச் சமன் செய்தார். தற்போது இந்த 3 வீரர்களும் 20 கிராண்ட்சிலாம் பட்டத்தோடு முதல் இடத்தில் உள்ளனர்.
ஜோகோவிச் விம்பிள்டன் பட்டத்தை 6-வது முறையாக கைப்பற்றியுள்ளார். விம்பிள்டனை அதிக தடவை வென்ற வீரர்களில் அவர் தற்போது 4-வது இடத்தில் உள்ளார். ஜோகோவிச் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை 9 முறையும், பிரெஞ்ச் ஓபனை 2 தடவையும், அமெரிக்க ஓபனை 3 முறையும் வென்றுள்ளார்.
இந்த ஆண்டில் இதுவரை நடந்த 3 கிராண்ட்சிலாம் பட்டத்தையும் அவர்தான் கைப்பற்றினார். இதே மாதிரி 2011 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் ஜோகோவிச் 3 கிராண்ட்சிலாம் பட்டத்தை வென்று இருந்தார்.
ஆண்டின் கடைசி கிராண்ட்சிலாமான அமெரிக்க ஓபன் போட்டி ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 12 வரை நியூயார்க்கில் நடக்கிறது.

ஹெய்டி ஜனாதிபதி படுகொலை – அமெரிக்க மருத்துவர் ஒருவரும் கைது !

தென் அமெரிக்கா- வட அமெரிக்கா கண்டத்துக்கு மத்தியில் அமைந்துள்ள தீவு நாடான ஹெய்டியின் ஜனாதிபதி 53 வயதான ஜோவனல் மோஸ், தனது பதவிக்காலம் முடிந்த போதும், ஓராண்டு காலம் பதவியில் நீடிக்கப்போவதாக அறிவித்தார்.

இதனால் எதிர்க்கட்சிகள் அவருக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்தன. இந்த நிலையில் கடந்த 7ஆம் திகதி தலைநகர் போர்ட் அவ் பிரின்சில் உள்ள அவர் தனது வீட்டில் இருந்தபோது, வீட்டுக்குள் புகுந்த ஆயுத கும்பல், ஜனாதிபதி ஜோவனல் மோஸ் மற்றும் அவரது மனைவி மீது துப்பாக்கி சூடு நடத்தியது.

இதில் ஜனாதிபதி ஜோவனல் மாய்சே உயிரிழந்தார். அவரது மனைவி மார்ட்டின் மோஸ் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் 15கொலம்பியர்கள், 2அமெரிக்கர்கள் என மொத்தம் 17பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஹெய்டி ஜனாதிபதி ஜோவனல் மோஸ் படுகொலைக்கு, முக்கிய நபராக அறியப்படும் அமெரிக்க மருத்துவரொருவரும் அந்நாட்டு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

63 வயதான கிறிஸ்டியன் இமானுவேல் சனோன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹெய்டி பொலிஸ் தலைமை அதிகாரி லியோன் சர்லஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,

‘ஹெய்டியில் பிறந்து அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் குடியேறியவர் ஆவார். மருத்துவரான இவர் அரசியல் நோக்கங்களுடன் தனி விமானம் மூலம் ஹெய்டி வந்துள்ளார்.ஜனாதிபதி ஜோவனல் மோயிசை கைது செய்வதே தங்களின் முதல் திட்டமாக இருந்ததாகவும், பின்னர் அது மாறியதாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

எனினும், இது பற்றிய விரிவான தகவல்களை அவர் வழங்கவில்லை. இதுகுறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என கூறினார்.

இதனிடையே, ஹெய்டியின் பாதுகாப்பு நிலைமையை மதிப்பீடு செய்வதற்காக அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் நீதித்துறையை சேர்ந்த மூத்த அதிகாரிகள் பலர் நேற்று முன்தினம் ஹெய்டி சென்றனர்.

இவர்கள் ஹெய்டியின் ஆட்சித் தலைவர் என தங்களை கூறி வரும் 3 பேரையும் தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

முன்னதாக ஜனாதிபதியின் படுகொலையை தொடர்ந்து நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை சமாளிக்க படையை அனுப்பி உதவுமாறு அமெரிக்காவிடம் ஹெய்டி அரசாங்கம் கோரிக்கை வைத்ததும், அதனை அமெரிக்க அரசாங்கம் நிராகரித்ததும் குறிப்பிடத்தக்கது.

“கொரோனாவுக்காக 2 நிறுவன தடுப்பூசிகளை போடுவது சரியான நடவடிக்கை அல்ல.” – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை !

தாய்லாந்து போன்ற சில நாடுகளில் 2 வெவ்வேறு நிறுவன தடுப்பூசிகளை போட்டதில் நல்ல பலன் கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  எனவே 2 ஊசிகளை கலந்து போட்டுக்கொள்ளலாம் என்ற எண்ணம் பல நாடுகளில் உருவாகி இருக்கிறது. இலங்கையிலும் அஸ்ட்ரா செனெகாவின் முதலாம் தடுப்பூசியை பெற்றவர்களுக்கு 2 ஆம் கட்டமாக பைஸர் தடுப்பூசி செலுத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்திருந்தது.
இது சம்பந்தமாக உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவும்யா சுவாமிநாதன் கூறியதாவது:-
கொரோனாவுக்காக 2 தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளலாம் என்று கூறுவது சரியான நடவடிக்கை அல்ல. இன்னும் உலக சுகாதார நிறுவனம் அதில் ஒரு முடிவுக்கு வரவில்லை.  இப்போதுள்ள குழப்பமான நிலையில் 2 வெவ்வேறு நிறுவனத்தின் ஊசிகளை போட்டுக்கொள்ளலாம் என்று சிபாரிசு செய்வது ஆபத்தை ஏற்படுத்தி விடலாம்.
உரிய தரவுகளுடன் ஆய்வுகள் மேற்கொண்ட பிறகே 2 ஊசிகளை பயன்படுத்துவது பற்றி சிந்திக்க வேண்டும் என்றார்.
உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனாவுக்கு 3-வது டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கு அனுமதி அளிப்பதற்கான போதிய ஆதாரங்கள், தரவுகள் இப்போது இல்லை. அதற்கு பதிலாக பணக்கார நாடுகள் தங்களிடம் மிச்சம் உள்ள தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்கு பகிர்ந்தளிக்க முன்வர வேண்டும்.
உலகளவில் கொரோனா இறப்புகள் 10 வாரங்களாக குறைந்திருந்த நிலையில், டெல்டா வகை தொற்றுகளால் உயிரிழப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. எனவே தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் ஐ.நா.வி.ன் கோவேக்ஸ் திட்டத்துக்கு தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்றார்.

“ஊடகவியலாளர்களுக்கு அடக்குமுறைகள் ஏற்படுவதற்கு நாங்கள் இடமளிக்கமாட்டோம்.” – சஜித் பிரேமதாச

“ஊடகவியலாளர்களுக்கு அடக்குமுறைகள் ஏற்படுவதற்கு நாங்கள் இடமளிக்கமாட்டோம்.” என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பற்றியதால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு மற்றும் எதிர்காலத்தில் இது தொடர்பான சம்பவங்கள் இடம்பெறாமல் தடுப்பது தொடர்பாக ஆராயும் குழுவின் கலந்துரையாடல் நேற்று(12) நீதி அமைச்சில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டபின்னர் ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டாார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை வெளிப்படுத்துவது ஊடகங்களின் கடமை. அந்தவகையில் நாட்டில் தற்போது மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

இதில் சில பிரச்சினைகள் அரசாங்கத்துக்கு தெரியாமல் இருக்கும். அதனால் ஊடகங்கள் இந்த பிரச்சினைகளை வெளிப்படுத்தும்போது, அதுதொடர்பில் கவனம் செலுத்தி அதற்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் கடமை.

மாறாக மக்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்துவதை தடுக்கும் வகையில் அவ்வாறான ஊடகங்களை அடக்குவதற்கு அரசாங்கத்துக்கோ வேறு யாருக்கும் எந்த அதிகாரம் இல்லை.

எனவே நாட்டில் இருக்கும் எந்தவொரு ஊடக நிறுவனத்துக்கும் ஊடகவியலாளருக்கும் அடக்குமுறைகள் ஏற்படுவதற்கு நாங்கள் இடமளிக்கமாட்டோம் . ஊடகங்களை அடக்குவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை. மாறாக ஊடகங்கள்தான் தங்களுக்கான சுய கட்டுப்பாடுகளை அமைத்துக்கொள்ளவேண்டும். பொறுப்புவாய்ந்த எதிர்க்கட்சி என்றவகையில் ஊடக அடக்குமுறைக்கு எதிராக தொடர்ந்து செயற்படுவோம் என்றார்.

“இலவசக் கல்வியை இராணுவ மயப்படுத்துவதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது.”-இலங்கை ஆசிரியர் சங்கம்

கொத்தலாவல பல்கலைகழக சட்டமூலத்துக்கு எதிரான போராட்டங்களில் ஆசிரியர் சங்கம் தன்னுடைய வலுவான எதிர்ப்பினை காட்டிவருகின்றது. முக்கியமாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் முக்கிய தலைவரான ஜோசப்ஸ்டாலின் கைது செய்யப்பட்டதிலிருந்து இந்த எதிர்ப்பு இன்னும் வலுவடைய ஆரம்பித்துள்ளது. இந்த எதிர்ப்பின் நீட்சியாக இணையவழி கற்பித்தலிலிருந்து ஆசிரியர்களை விலகுமாறு ஆசிரியர் சங்கம் வலியுறுத்திவருகின்றது.

இந்நிலையில் , இலவசக் கல்வியை இராணுவ மயப்படுத்துவதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாதென இலங்கை ஆசிரியர் சங்கத்தின் நுவரெலியா மாவட்ட இணைப்பாளர் வேலு இந்திரச்செல்வன் தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“இலவசக்கல்வியின் உரிமையை பாதுகாப்பதற்காக  நாம் தொடர்ந்து குரல் எழுப்பி வந்திருக்கின்றோம்.

இந்நிலையில் இலவசக்கல்வியை தனியார் மற்றும் இராணுவ மயப்படுத்துவதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது. மேலும் இத்தகைய செயற்பாட்டுகளுக்கு எதிராக கல்வி சமூகம் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுக்கும்.

இதேவேளை தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட தொழிற்சங்க தலைவர்களை உடனடியாக விடுதலை செய்ய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.