அருண்மொழி

அருண்மொழி

ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – உயிரிழப்பு 920ஆக உயர்வு !

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தென்கிழக்கு ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் நகரில் இருந்து 44 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 51 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

 

இது ரிக்டர் அளவில் 6.1 புள்ளியாக பதிவானது என்று அமெரிக்க நிலநடுக்கவியல் துறை தெரிவித்து இருந்தது. இந்த நிலநடுக்கத்தால் பக்டிகா மாகாணத்தில் வீடுகள் பயங்கரமாக குலுங்கின. அதிகாலையில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் நில நடுக்கத்தை உணர்ந்ததும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தனர். ஆனால் சக்திவாய்ந்த நில நடுக்கத்தால் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன.

 

இதன் இடிபாடுகளில் பொதுமக்கள் சிக்கி கொண்டனர். அதேபோல் கோஸ்ட், நங்காஹார் மாகாணங்களிலும் வீடுகள் இடிந்தன. இதையும் படியுங்கள்: உக்ரைன் கார்கிவில் ரஷிய ஷெல் தாக்குதலில் 15 பேர் பலி- ஆளுநர் ஒலெக் சினெகுபோவ் தகவல் இந்தநிலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 255 பேர் உயிரிழந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் அரசின் செய்தி நிறுவனம் தெரி வித்திருந்தது. இது தற்போது 920ஆக உயர்ந்துள்ளது. இதில் பக்டிகா மாகாணத்தில் மட்டும் 100க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கிறார்கள். 250 பேர் காயம் அடைந்துள்ளனர். கோஸ்ட், நங்காஹார் மாகாணங்களில் பலர் உயிரிழந்து உள்ளனர். ஏராளமான வீடுகள் இடிந்துள்ளதாகவும் அதில் பலர் சிக்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

“தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வைக்கோல் பட்டறை நாய் மாதிரி. தாங்களும் செய்ய மாட்டார்கள்..,” – அமைச்சர் டக்ளஸ்

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வைக்கோல் பட்டறை நாய் மாதிரி. அதாவது தாங்களும் செய்ய மாட்டார்கள். செய்பவர்களையும் விட மாட்டார்கள். என கடற்றொழில் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டம் ஒலுவில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்து மக்கள் பாவனைக்கு உட்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்த இன்று கடற்றொழில் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த துறைமுகத்தை பார்வையிட்ட பின்னர் அங்கு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

ஒலுவில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்து மக்கள் பாவனைக்கு உட்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மக்களின் வாழ்வாதாரத்தை வளப்படுத்தி கட்டியெழுப்புவதற்கு பல வேலைத் திட்டங்கள் உள்ளன. இந்த மாவட்டத்தின் மக்களுக்கு தான் முன்னுரிமை வழங்கப்படும். தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வைக்கோல் பட்டறை நாய் மாதிரி. அதாவது தாங்களும் செய்ய மாட்டார்கள். செய்பவர்களையும் விட மாட்டார்கள். எனவே, நான் கொண்டு வருகின்ற திட்டங்கள் யாவும் மக்கள் நலன் சார்ந்ததாகும்.

கடந்த 2008 ஆம் ஆண்டில் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்ட ஒலுவில் மீன்பிடித் துறைமுகம் 2013 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதியும், துறைமுக அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஸவால் திறந்து வைக்கப்பட்டது. 2013 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட போதிலும் ஒரு வர்த்தக கப்பல் கூட ஒலுவில் துறைமுகத்துக்கு இது வரை வரவே இல்லை. ஏனெனில் மணல் நிரம்புவதால் இதுவரை எவ்வித பயனையும் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் பிரகாரம் ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தின் செயற்பாடுகளை சம்பிரதாயபூர்வமாக மீள ஆரம்பிப்பதற்கும் குறித்த துறைமுகத்திற்கு மறைந்த முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம் அஸ்ரப்பின் பெயரினை வைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக குறிப்பிட்டார். எனவே, இவ்விடயத்தில் வீணான அரசியல் செய்யாமல் அனைத்து தரப்பினரும் முன்வந்து ஒத்துழைப்புகளை வழங்க வேண்டு என கேட்டுக்கொண்டார். இதன் போது துறைசார் அதிகாரிகள் மீனவ சமூகத்தை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

கடந்த கால விஜயத்தின் போது முதல் கட்டமாக மீன் பதனிடும் தொழில் கூடங்கள் போன்றவை நிர்மாணிக்கப்பட்டு செயற்படுத்தப்ட்ட நிலையில் மீனவ சமூகத்தின் பாவனைக்கு அமைச்சரால் கையளிக்கப்பட்டுள்ளன.

பல மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட துறைமுகத்தை பராமரிப்பதற்கு துறைமுக அபிவிருத்தி அதிகார சபை மாதாந்தம் 56 இலட்சம் ரூபாய் வரை செலவிட நேர்ந்தது. இந்நிலையில் கடற்றொழில் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பகீரத முயற்சிகளை தொடர்ந்து துறைமுக அமைச்சு, கடற்றொழில் வள் அமைச்சு ஆகியன கூட்டாக அண்மையில் சமர்ப்பித்த அமைச்சரவை யோசனை மூலமாக கடற்றொழில் அமைச்சின் பொறுப்பில் ஒலுவில் துறைமுகம் வந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டொலருக்கு பெற்றோல் விற்கும் முறையை இலங்கையில் அறிமுகப்படுத்துமாறு கோரிக்கை !

அமெரிக்க டொலர் அல்லது ஏற்றுக் கொள்ளப்பட்ட வெளிநாட்டு நாணயங்களுக்கு மாத்திரம் எரிபொருளை விற்பனை செய்யும் எரிபொருள் நிலையங்களை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவிடம் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் பியதிஸ்ஸ கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ்வாறான பெற்றோல் நிலையங்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் திறக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள விடுத்துள்ள அவர் நாட்டில் டொலர் கையிருப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ள நேரத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ள டொலர்கள் அல்லது பிற வெளிநாட்டு நாணயங்களை வெளிக்கொணர இது உதவும் என்றும் தெரிவித்துள்ளார்.

“முழு இலங்கையுமே அகதியாகியுள்ளது.”- சஜித் பிரேமதாச விசனம் !

இலங்கையினால் வெளியிடப்பட்ட இறையாண்மை பிணைமுறிக்கு முதலீடு செய்த அமெரிக்க வங்கியொன்று தனது பணத்தையும் வட்டியையும் தரக் கோரி மன்ஹாட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதோடு, இது மிகவும் துரதிஷ்டவசமான நிலை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இன்று (22) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் குழுவுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இன்று முழு நாடும் அகதிகள் முகாமாக மாறியுள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அலாவுதீனின் அற்புத விளக்கு போல தன்னிடம் ஓர் அதிசய விளக்குள்ளது என கூறிய பொருளாதார வல்லுனர்களின் உண்மை தன்மை இன்று வெளிப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்றத்தைப் புறக்கணித்தது குறித்து பிரதமர் கேள்வி எழுப்புகிறார் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், தமது தேசியப் பட்டியல் ஆசனத்தை ஓராண்டு காலம் வெற்றிடமாக வைத்துக் கொண்டு, ராஜபக்ஸக்களுக்கு தேவையான ஏற்ப்பாடுகளை செய்து கொடுத்தது பிரதமர் தானேயன்றி, ஐக்கிய மக்கள் சக்தி அல்ல எனவும் அவர் தெரிவித்தார்.

மக்களின் இன்னல்களை அறியாத தர்மசங்கடத்திற்குள்ளான அரசாங்கம் பாராளுமன்றத்தை முட்டாள்தனமான ஒரு இடமாக மாற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்று வெளிநாட்டு நீதிமன்றத்திலும் கூட நாடு பிரதிவாதியாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

.

இலங்கைக்கு எதிராக அமெரிக்க வங்கி சட்டநடவடிக்கை !

இலங்கையின் இறையாண்மையுடைய சர்வதேச பிணையங்களை கொள்வனவு செய்த அமெரிக்க ஹமில்டன் ரிசர்வ் வங்கி (Hamilton Reserve Bank) தமது முதலீட்டை வட்டியுடன் முழுமையாக செலுத்துமாறு கோரி இலங்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜூலை 25 ஆம் திகதியுடன் குறித்த பிணையங்களுக்கான பத்திரம் காலாவதியாகிறது. அமெரிக்க ஹமில்டன் ரிசர்வ் வங்கி 250 மில்லியன் டொலரை 5.8 வீத வட்டியில் முதலீடு செய்துள்ளது. இதன் பிரகாரம், இலங்கை குறித்த வங்கிக்கு 257.5 மில்லியன் டொலரை செலுத்த வேண்டியுள்ளது.

பொருளாதார நெருக்கடி – மதுபான நுகர்வை குறைத்துக்கொண்ட இலங்கையர்கள் !

நாட்டில் அண்மைக்காலமாக மதுபானத்தின் விலை அதிகரிப்பு மற்றும் நாட்டில் பொது மக்களின் வருமானம் குறைந்தமை காரணமாக மதுபானத்துக்கான தேவை 30 வீதத்தால் குறைவடைந்திருப்பதாக அரசாங்க நிதி பற்றிய குழு தெரிவித்துள்ளது.

அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா தலைமையில் கூடியபோதே இவ்விடயங்கள் வெளிப்பட்டன. விசேடமாக அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்குத் தயாரிக்கப்பட்டுள்ள திட்டங்கள் மற்றும் அவற்றின் தற்போதைய நிலைமைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு ஒன்லைன் முறையின் கீழ் சில நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.

இதற்கமைய, நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு, உள்நாட்டு இறைவரித் திணைக்களம், இலங்கை மதுவரித் திணைக்களம் திணைக்களம் மற்றும் இலங்கை சுங்கம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் இவ்வாறு கலந்துகொண்டனர்.

மதுவரித் திணைக்களத்தினால் எதிர்பார்க்கப்பட்ட வருமானத்தை அடைவதில் சிக்கல்கள் சில காணப்பட்டதாகவும், மதுபான உற்பத்திக்கான எதனோல் குறைந்தமை, டீசல் மற்றும் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் இதற்குக் காரணமாக அமைந்தது என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

அத்துடன், மதுபானத்தின் விலை அதிகரிப்பு, பொது மக்களுக்குக் காணப்படும் பொருளாதார சிக்கல்கள் காரணமாக மதுபானத்துக்கான தேவை 30 வீதத்தால் குறைவடைந்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதன் காரணமாக சட்டவிரோத மதுபானத் தயாரிப்புக்கான வாய்ப்புக்கள் அதிகரித்திருப்பதாகவும் இங்கு தெரியவந்தது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் எதிர்பார்க்கப்படும் வருமானம் மற்றும் தற்போதைய நிலை குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இதில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்து கொண்டதுடன், வரிக் கொள்கைகளை எவ்வாறு மாற்றுவது மற்றும் வரி நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஒன்லைன் மூலம் கலந்துகொண்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

மேலும், இந்த ஆண்டு இலங்கை கலால் திணைக்களம் பெற எதிர்பார்க்கும் வருமானம் தொடர்பிலும் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.

“நாடாளுமன்றில் இருப்பதில் எந்த பயனுமில்லை. நான் போகிறேன்.”- வடிவேல் சுரேஷ் ஆவேசம் !

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலையால் மலையக மக்களுக்கு உண்பதற்கு கூட வழியில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் சபையில் உரையாற்றிய வடிவேல் சுரேஷ்,

இந்த நாட்டுக்கு டொலர்களை கொண்டுவந்தவர்கள், பெருந்தோட்டத் தொழிலாளர்கள். அவர்கள் பெரும் துன்பங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

அவர்களுக்கு சாப்பிட இல்லை. எரி​வாயு இல்லை, பெட்ரோல் இல்லை. பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலைகளுக்கு போக முடியவில்லை. ஆக, இந்த சபையில் இருப்பதில் எவ்விதமான பிரயோசமும் இல்லையெனத் தெரிவித்த அவர், நான் வெளியேறுகின்றேன் எனக் கூறி சபையில் இருந்து வெளியேறினார்.

“சிங்களவர்களின் பொறுமைக்கும் எல்லை உண்டு. .” – நாடாளுமன்றில் இனவாதத்தை தூண்டும் வகையில் சரத் வீரசேகர பேச்சு !

இலங்கையில் சிங்கள மக்களின் பொறுமைக்கு எல்லை இருப்பதாகவும், அதனை கேலிக்குட்படுத்தவேண்டாம் எனவும் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(21) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர், முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் புத்தர் சிலையை பிரதிஷ்டை செய்வதற்கு எதிர்ப்பு வெளியிட்டமையை தாம் கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பிரபாகரனின் கட்சி எனவும் தெரிவித்த அவர் கோணகல கிராமத்தில் 54 சிங்களவர்கள் கொல்லப்பட்டபோது, கொழும்பில் இந்து மத வேல் திருவிழா இடம்பெற்றிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

எனினும் வடக்கில் பௌத்த நடைமுறைகளுக்கு கௌரவம் வழங்கப்படவில்லை.அண்மையில் நாகவிஹாரையில் புத்த பெருமான் சிலையை நிறுவுவதற்கும் எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

இந்தநிலையில், குருந்தூர் மலையில் கண்டெடுக்கப்பட்ட சின்னங்கள் பல நூற்றாண்டுளுக்கு முற்பட்ட பௌத்த சின்னங்களாகும். கடந்த 9ஆம் திகதி குருந்தூர் மலையில் புத்தர் சிலையை பிரதிஷ்டை செய்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன் மற்றும் வினோநோகராதலிங்கம் ஆகியோர் பாரிய தடைகளை ஏற்படுத்தினர்.

இவர்களால், அழைத்து வரப்பட்டவர்கள் கிராம மக்கள் அல்லர் என குற்றம் சுமத்திய அவர், அவர்கள் ஏனைய பகுதிகளில் இருந்து அழைத்துவரப்பட்டவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

……………………………..

இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் இனங்கள் சார்ந்த ஒற்றுமை வளர்ந்து வரும் நிலையில் சரத்வீரசேகர போன்ற இனவாத அரசியலை வைத்து மட்டுமே அரசியல் செய்வோரின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகிக்கொண்டிருக்கிறது. மேலும் ராஜபக்சக்கள் செய்த எல்லா சர்வாதிகார ஏற்பாடுகளுக்கு பின்னும் வீரசேகரவினுடைய ஆதரவும் காணப்பட்டது. இந்த நிலையில் இவர்கள் ஆட்சி வீழ்ச்சி அடைய ஆரம்பித்துள்ள நிலையில் மீண்டும் இனவாதத்தை கையெிலெடுக்க ஆரம்பிபத்துள்ளது சிங்கள ஆளுந்தரப்பு.

மக்கள் இவர்களின் மாயவலைக்குள் சிக்கிவிடாது தெளிவாக இருக்கவேண்டும்.

 

15 இலட்சம் ரூபா இலஞ்சம் வாங்கி சிக்கிக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனின் தம்பி !

மட்டக்களப்பு வந்தாறு மூலை பகுதியிலுள்ள காணி ஒன்றின் அனுமதியை பெறுவதற்கு அதன் உரிமையாளரிடம் 15 இலட்சம் ரூபா இலஞ்சமாக வாங்கியதாக தெரிவித்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் சகோதரர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் உட்பட இருவரை இன்று செவ்வாய்க்கிழமை (21) ஹோட்டல் ஒன்றில் வைத்து கைது செய்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினர் தெரிவித்தனர்.

வந்தாறு மூலை பிரதேசத்தில் கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவரின் காணியை பிரித்து விற்பனை செய்யப்பட்டு அதில் மக்கள் குடியேறியுள்ளனர். இந்த காணியை வாங்கிய மக்கள் பிரதேச சபையில் வீடு கட்டுவதற்கான அனுமதியை பெறுவதற்கு சென்றால் அங்கு கடமையாற்றிவரும் அபிவிருத்தி உத்தியோகத்தரும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ் வியாழேந்திரனின் சகோதரரான சதாசிவம் மயூரன் அவர்களிடம் இந்த காணி போலி என கூறி அனுமதி வழங்க முடியாது என தெரிவித்துள்ளனர்;.

இந்த நிலையில் காணி விற்பனை செய்த காத்தான்குடியை சேர்ந்தவரிடம் காணியை வாங்கிய மக்கள் சென்று இந்த காணி உறுதி போலியானது என அனுமதிவழங்க முடியாது என குறித்த நபர்கள் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

இதனையடுத்து காணியை விற்பனை செய்தவர் அமைச்சரின் சகோதரரிடம் குறித்த காணியை சட்டரீதியாக நாங்கள் காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவரிடம் வாங்கி எமது பதிவு செய்யப்பட்ட கம்பனி ஊடாக இதனை சிறு சிறு பகுதிகளாக விற்பனை செய்துவருவதாக தெரிவித்த நிலையில் அமைச்சரின் சகோதரரும் அபிவிருத்தி உத்தியோகத்தரும் இணைந்து பிரதேச சபையில் அனுமதி வழங்க 20 இலட்சம் ரூபா இலஞ்சமாக வழங்குமாறு அவரிடம் கோரியுள்ளனர்.

இவ்வாறான நிலையில் குறித்த காணியை விற்பனை செய்த காத்தான்குடியைச் சேர்ந் நபர் கொழும்பில் உள்ள இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவுடன் தொடர்பு கொண்டு அறிவித்ததன் பிரகாரம் அவர்களின் ஆலோசனையின்படி சம்பவதினமான இன்று மாலை 6.30 மணிக்கு இலஞ்சம் கோரியவர்களிடம் கோரிய 15 இலச்சம் ரூபா பணத்தை தருவதாக தெரிவித்து மட்டக்களப்பு நகர் பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றிற்கு வருமாறு தெரிவித்ததையடுத்து அவர்கள் குறித்த ஹொட்டலில் சென்று கோரிய 15 இலட்சம் ரூபா பணத்தை அமைச்சரின் சகோதரரும் அபிவிருத்தி உத்தியோகத்தரும் இணைந்து காணி உரிமையாளரிடம் பெற்று அதனை சரிபார்த்துக் கொண்டிருந்தனர்.

இதன் போது அங்கு மாறுவேடத்தில் இருந்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர் சுற்றிவழைத்து இருவரையும் கைது செய்ததுடன் இலஞ்சமாக பெற்ற பணத்தை மீட்டு மட்டு தலைமையக பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

பரபரப்பான ஆட்டத்தில் 4 ஓட்டங்களால் தொடரை வென்றது இலங்கை !

இலங்கை மற்றும் சுற்றுலா அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற 4 ஆவது ஒருநாள் சர்வதேச போட்டியில் 4 ஓட்டங்களால் வெற்றிப் பெற்று இலங்கை அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49 ஒவர்கள் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 258 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இலங்கை அணி சார்பில் தனது கன்னி சதத்தை பதிவு செய்த சரித் அசலங்க 110 ஓட்டங்களையும் தனஞ்சய டி சில்வா 60 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

இதன்படி, வெற்றி இலக்கான 259 என்ற ஓட்டங்களை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 254 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

அவ்வணி சார்பில் அணித்தலைவர் டேவிட் வோர்னர் 99 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பெட் கம்மின்ஸ் 35 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் தனஞ்ச டி சில்வா சாமிக்க கருணாரத்ன மற்றும் ஜெப்ரி வென்டர்சே ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர். இதற்கமைய, 5 போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.