அருண்மொழி

அருண்மொழி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – பரிசுத்த பாப்பரசர் வெளியிட்டுள்ள கோரிக்கை !

உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு யார் காரணம் என்பதை இலங்கை அரசாங்கம் தெளிவுபடுத்தவேண்டும் என பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வத்திக்கானில் இடம்பெற்ற விசேட ஆராதனையின் போது அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

தயவுசெய்து நீதிக்காக-உங்களின் மக்களிற்காக இந்த சம்பவங்களிற்கு யார் காரணம் என்பதை நிச்சயமாக தெளிவுபடுத்துங்கள் என பாப்பரசர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது நாட்டிற்கு அமைதியையும் மனச்சாட்சியையும் கொண்டுவரும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த ஆராதனையின் போது பரிசுத்த பாப்பரசர் இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்துள்ளார்.

இலங்கைக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு யுவதி மீது துஷ்பிரயோகம் !

நாட்டிற்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு யுவதி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தின் பேரில் மூன்று இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கட்டுகஸ்தோட்டை மற்றும் மெதவெல பிரதேசத்தை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். துஷ்பிரயோகத்திற்கு ஆளான அயர்லாந்து யுவதி, மற்றொரு ஜேர்மன் நபருடன் சுற்றலா வந்த சந்தர்ப்பத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவர்கள் கடந்த 6ஆம் திகதி கண்டிக்கு சுற்றுலா சென்ற போது மூன்று இளைஞர்கள் செல்பி எடுக்குமாறு வற்புறுத்தியுள்ளனர்.

அப்போது, ​​இளைஞர் ஒருவர் யுவதியை துஷ்பிரயோகம் செய்த சம்பவம், அவர்களின் கேமராவில் நேரலையாக பதிவாகியுள்ளது.

அவர்கள் குறித்த இளைஞர்களின் முகங்கள் அடங்கிய காணொளியை அண்மையில் யூடியூப்பில் வெளியிட்டுள்ளனர்.

இதனையடுத்து அந்த வீடியோ குறித்து சமூக வலைதளங்களில் காரசார விவாதம் நடந்ததையடுத்து கண்டி சுற்றுலா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞர்களை கைது செய்துள்ளனர். அத்துடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

படுகொலைக்கு நீதி வேண்டும் – அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் !

இராஜங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்னால் இடம்பெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்த மகாலிங்கம் பாலசுந்தரத்தின் 36 வது பிறந்த தினத்தையிட்டு அவருக்கு நீதிவேண்டி அமைச்சரின் வீட்டுக்கு முன்னால் இன்று (25) ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த வருடம் யூன் 21 ம் திகதி அமைச்சரின் வீட்டுக்கு முன்னால் பொதுமகன் ஒருவர் மீது அமைச்சரின் மெய்பாது துப்பாக்கி சூடு நடாத்தியதில் மாகாலிங்கம் பாலசுந்தரம் உயிரிழந்ததுடன் மெய்பாதுகாவலர் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் படுகொலை செய்யப்பட்ட மாகாலிங்கம் பாலசுந்தரத்தின் 36 வது பிறந்த தினமான இன்று படுகொலை செய்யப்பட்டவரின் உறவினர்கள் அவரின் ஏற்பாட்டில் நினைவேந்த அமைச்சரின் வீட்டுக்கு முன்னாள் உள்ள கொழும்பு மட்டக்களப்பு பிரதான வீதியில் மட்டக்களப்பு வரவேற்கு கோபுரத்துக்கு முன்னால் இடம்பெற்றது
இதில் உயிரிழந்தவரின் உறவினர்கள், பொதுமக்கள்கள் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மட்டு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவான், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், முன்னால் அரசாங்க அதிபர் மா.உதயகுமார், கிழக்கு மாகாண பிரதி தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா, மற்றம் மாநகரசபை உறுப்பினர்கள் உட்பட நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு உயிரிழந்தவரின் திரு உருவப்படத்திற்கு மலர்தூவி சுடர் ஏற்றி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.
இதனை தொடர்ந்து அவரின் ஆத்மசாந்தி வேண்டி வீதிகளில் பிரயாணித்தவர்களுக்கு தாகசாந்தி வழங்கிவைத்த பின்னர் அவரின் படுகொலைக்கு நீதி வேண்டி கோஷம் எழுப்பியவாறு ஆர்பாட்டத்தில் சுமார் ஒருமணித்தியாலம் ஈடுபட்டு பின்னர் ஆர்ப்பாட்டகாரர்கள் அங்கிருந்து விலகிச் சென்றனர். இதேவேளை அமைச்சரின் வீட்டுக்கு முன்னால் கலகமடக்கும் பொலிசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

“இந்த நாட்டின் தலைவராக பிரபாகரன் இருந்திருந்தால் அவர் கூட இப்படி செய்திருப்பார் என நினைக்கவில்லை. .”- ஐக்கிய மக்கள் சக்தி காட்டம் !

“இந்த அரசாங்கத்தை பதவி விலகுமாறு மாகாநாயக்கர்கள் உட்பட அனைவரும் கோரிக்கை விடுக்கின்ற நிலையில் ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷவும், பிரதமரும் காது கேளாதது போலவும், கண் தெரியாதது போலவும் நடந்து கொள்கின்றனர்.” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருணா தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

இந்த அரசாங்கத்தை பதவி விலகுமாறு மாகாநாயக்கர்கள் உட்பட அனைவரும் கோரிக்கை விடுக்கின்ற நிலையில் ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷவும், பிரதமரும் காது கேளாதது போலவும், கண் தெரியாதது போலவும் நடந்து கொள்கின்றனர். வீதிகளில் நிலையான வீதித்தடைகளை பொருத்தியுள்ளனர். சில வீதித்தடைகளை முட்கம்பிகள் கொண்டு உருவாக்கியுள்ளனர். இதனால் மக்களுக்கு பாரிய விளைவுகள் ஏற்பட்டிருக்கலாம். முட்கம்பி ஏதேனும் கண்களில் பட்டு இருந்தால் காலம் முழுவதும் பார்வையற்றவராகும் நிலை ஏற்படலாம்.

இப்படியான கொடூரமான சம்பவங்கள் தொடர்பில் மனித உரிமைகள் தொடர்பான இயக்கங்கள் தமது கண்டனத்தை வெளியிட்டிருந்தன. எனினும் கருத்துக்களை தெரிவிப்பது மாத்திரம் போதாது. இவ்வாறான நடவடிக்கைகளை எடுத்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துகிறோம்.

நாங்கள் ஒரு கட்சியாக அதற்கான நடவடிக்கையை எடுக்க எதிர்பார்த்துள்ளோம். இந்த நாட்டின் தலைவராக பிரபாகரன் இருந்திருந்தால் அவர் கூட இப்படி செய்திருப்பார் என நான் நினைக்கவில்லை. சிலர் தெரிவித்தார்கள் ஹிட்லர் போன்ற ஒரு தலைவர் தேவையென, அப்படியாயின் ஹிட்லர் போன்ற தலைவராகவா முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

பெரும்பான்மையை இழந்தது ராஜபக்ஷ தரப்பு – கம்மன்பில வெளியிட்டுள்ள தகவல் !

ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்க 120 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதாக முன்னாள் அமைச்சரும் பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் பதவி விலகாவிட்டால் இந்த வாரத்தில் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து இன்று (திங்கட்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை நகர்த்த திட்டமிட்டபோது, அவர்களுக்கு குறைந்தபட்சம் 113 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அவ்வாறு இல்லையெனில் குறித்த பிரேரணை அரசாங்கத்திற்கு நம்பிக்கை பிரேரணையாக மாறும் என்றும் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெட்கம், சூடு, சொறனை இருக்கும் ஒரு ஜனாதிபதியாக இருந்தால்…..; – சாணக்கியன் காட்டம் !

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெட்கம், சூடு, சொறனை இருக்கும் ஒரு ஜனாதிபதியாக இருந்தால் மீண்டும் இந்த நாட்டில் ஜனாதிபதியாக இருக்கமுடியாது. என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார்.

மட்டக்களப்பு பாலமீன்மடு, லைட்ஹவுஸ் இளைஞர் கழகத்தின் 26வது நிறைவினை முன்னிட்டு “முகத்தூர் முழக்கம்”மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியை பாலமீன்மடு லைட்ஹவுஸ் விளையாட்டு மைதானத்தில் நடாத்தியது.

இறுதிப்போட்டியில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போதே இரா.சாணக்கியன் மேற்கண்டவாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

“கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் நாட்டில் அட்டைகள் எவ்வாறு இரத்தத்தினை உறிஞ்சி எடுக்குமோ அதேபோன்று இந்த நாட்டு மக்களின் நிதியை களவெடுத்து, நாட்டு மக்களுக்கு சொந்தமான வளங்களை விற்பனை செய்து, இந்த நாட்டு மக்களுக்கு சொந்தமான அந்நிய செலாவாணியை கொண்டு நாடுகளின் கடனை செலுத்துவதாக கூறி தனது குடும்பத்தின் கடன்களை அடைக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த நாட்டில் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக வரும்போது கையிருப்பாக இந்த நாட்டில் 06 பில்லியன் அமெரிக்க டொலர் இருந்துள்ளது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி வரப்போகின்றது, பொருட்களுக்கான தட்டுப்பாடு வரப்போகின்றது என்று தெரிந்தும் இந்த அந்நிய செலவாணியை பயன்படுத்தி அந்த கடனை அடைப்பதற்கான காரணம் அவரின் குடும்பத்தின் வேண்டப்பட்டவருக்கே அந்த நிதியை வழங்கியதான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றது.

இன்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஒரு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர், இரண்டு இராஜாங்க அமைச்சர்கள் கிடைத்துள்ளார்கள். நிதியே இல்லாத நாட்டுக்கு ஒரு அமைச்சர். சிங்கள அமைச்சர்களே இன்று அமைச்சு வேண்டாம் என்று கூறுமளவிற்கு அரசிடம் நிதியில்லாத நிலை காணப்படுகின்றது.

இந்த மிகவும் மோசமாக விமர்சிக்கப்படும் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ இருக்கின்றார். வெட்கம், சூடு, சொறனை இருக்கும் ஒரு ஜனாதிபதி மீண்டும் இந்த நாட்டில் ஜனாதிபதியாக இருக்கமுடியாது.

சிங்கள மக்களின் வாக்குகளினால் தெரிவுசெய்யப்பட்டவர்களே அமைச்சு பதவிகள் வேண்டாம் என கூறும்போது, எம்மவர்கள் எதற்காக அமைச்சு பதவிகளை எடுக்கவேண்டும்.

நான் நாடாளுமன்றத்தில் 5000 ரூபா பணத்தாளை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் முன் காட்டி பேசியபோது நான் சுயாதீனமாக மக்களுக்காக செயற்படப்போவதாக கூறியவர் இருவாரங்கள் கழிவதற்குள் அமைச்சுப்பதவியை பெற்றுக்கொண்டுள்ளார்.

அப்போது நான் 5000 ரூபாய் வழங்கியது சரிதான். அமைச்சுப்பதவியும் இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர்களும் வழங்கியதாக கூறப்படுகின்றது.

இந்த கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் இலங்கையில் உள்ள மக்களை தங்களது தவறான வழிநடத்தல்களினால், தவறான தீர்மானங்களினால் இந்த நாட்டின் பொருளாதாரத்தினை அழித்து அடுத்தவேளைக்கு உணவில்லாத நிலையினை இந்த நாட்டு மக்களுக்கு இந்த அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது.“ எனத் தெரிவித்துள்ளார்.

இடைக்கால அரசாங்கத்தை ஏற்படுத்த தயார் – எழுத்து மூலமாக அறிவித்த ஜனாதிபதி !

இடைக்கால அரசாங்கத்தை ஏற்படுத்தத் தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எழுத்து மூலம் மகாநாயக்கர்களுக்கு அறிவித்துள்ளதாக உயர்பீட சபையின் செயலாளரான மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

“தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்பட சர்வதேச தலையீட்டுடன் வாக்கெடுப்பு அவசியம்.”- தவத்திரு வேலன் சுவாமிகள்

“தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்பட சர்வதேச தலையீட்டுடன் வாக்கெடுப்பொன்று மேற்கொள்ளப்பட வேண்டும்.” என  சிவகுரு ஆதீனத்தின் முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று இடம்பெற்ற தமிழ்க் கட்சிகளின் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்க் கட்சிகளிடையே இன்று இரண்டாவது சந்திப்பு நிறைவடைந்திருக்கிறது. நாடு எதிர்நோக்கியுள்ள அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சினைகளுக்கு தமிழ் கட்சிகள் என்ற ரீதியில் எவ்வாறான அணுகுமுறைகளை மேற்கொள்ள முடியும், போன்ற விடயங்களை ஆராயும் சந்திப்பாக இது அமைந்தது.

சர்வதேசத்தின் பங்களிப்போடு தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும், அதற்கு வாக்கெடுப்பொன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்க் கட்சிகளின் இன்றைய சந்திப்பில் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த சவால்களுக்கு மத்தியில் ஈழத்தமிழர்கள் என்ன நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று பேசினோம். பொதுத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான அமைப்பு என்ற ரீதியில் நாமும் சில கருத்துக்களை முன்வைத்தோம்.

வடக்கு கிழக்கு மற்றும் புலம்பெயர் தேசத்தில் அரசியல் நிலைப்பாட்டை குறிக்கும் நோக்கில் வாக்கெடுப்பு ஒன்று நடாத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தோம். வடக்கு கிழக்கில் 5 வருடத்துக்கான நிர்வாக அலகு ஏற்படுத்தப்பட வேண்டும். அதன் மூலமாக நிதிகள் மற்றும் நிர்வாகத்தை சுதந்திரமாக கையாள முடியும். இந்த நிலைப்பாடு எட்டப்பட்டால், இந்தியா உள்ளிட்ட நாடுகளின் மத்தியஸ்தம் கிடைக்குமானால் பொருளாதாரம் உள்ளிட்ட பலவற்றுக்கு தீர்வு கிடைக்கும். இவ்வாறு எமது நிலைப்பாட்டை கூறியிருந்தோம்.- என்றார்.

கொழும்பு வீதிகளில் கூரிய ஆணிகளுடன் வீதித்தடை – இலங்கை  சட்டத்தரணிகள் சங்கம் விசனம் !

கொழும்பை சூழவுள்ள சில வீதிகளில் போடப்பட்டிருந்த வீதித் தடைகளில் கூரிய ஆணி போன்ற பொருள் பொருத்தப்பட்டு, அவை கறுப்பு காதிதங்களால் மூடி மறைக்கப்பட்டிருந்ததாக இலங்கை  சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் மக்களுக்கு பெரிய காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் எனவும் சங்கம் கூறியுள்ளது.

இதனால், காவல்துறை மா அதிபர், காவல்துறையினர் மற்றும் ஆயுதப் படையினர் எந்த நிலைமையாக இருந்தாலும் எதிர்பாளர்கள் மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என இலங்கை  சட்டத்தரணிகள் சங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

அமைதியான ஆர்ப்பாட்டங்களை நடத்தும் உரிமை மாத்திரமல்லாது, நாட்டின் பிரஜைகளின் உரிமைகளை உறுதிப்படுத்துவது அவசியம் என சட்டத்தரணிகள் சங்கம் நினைவூட்டியுள்ளது.

ஏதோ ஒரு வகையில் வன்முறையான சூழல் ஏற்பட்டால், அது நாட்டுக்கு மிக மோசமான பிரதிபலனை பெற்றுக்கொடுக்க காரணமாக அமைந்து விடும் என இலங்கை  சட்டத்தரணிகள் சங்கம் கூறியுள்ளது.

திருகோணமலையில் ஆலய வழிபாட்டுக்காக சென்றவர்களிடம் பௌத்த பிக்கு அடாவடி – துணைபோன பொலிஸ் மற்றும் புலனாய்வுத்துறையினர் !

திருகோணமலை மூதூர் 64ம் கட்டையில் உள்ள ராஜவந்தான் மலைக்கு இன்று காலை தமிழ் மக்கள் மற்றும் சைவ மதகுருக்கள் வழிபாடுகளில் ஈடுபடுவதற்காகச் சென்றபோது பௌத்த பிக்கு ஒருவர் வீதியை மறித்து மக்களை தொடர்ந்து செல்லவிடாது தடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் அங்குச் சென்ற மக்களை இனவாதத்தைத் தூண்டும் விதத்தில் மிகவும் கீழ்த்தரமாக பேசியும் அவர்களின் தொலைபேசிகளை பறித்து எறிந்தும் அடாவடியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இதன் போது அங்கு நின்ற பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்களும் மக்களை அச்சுறுத்தும் விதமாக புகைப்படங்களையும் எடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ராஜவந்தான் மலையின் கீழ் சகாயபுரம் (வெட்டுக்காட்டுச்சேனை) மாணிக்கப்பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ளது.

அத்துடன், அப்பிரதேச மற்றும் அயல்பிரதேச மக்கள் மலைக்கும் சென்று வழிபட்டுவந்த நிலையில், மூன்று வருடங்களிற்கு முன்னர் மலையின் மேல் இருந்த வழிபாட்டிடம் அழிக்கப்பட்டு, அங்கு பௌத்த சின்னங்களை நிறுவும் வேலைகள் நடைபெற்று வருகின்றதெனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.