அருண்மொழி

அருண்மொழி

“அமைச்சர் சரத் வீரசேகரா போன்றவர்களின் இனவாதப் பிரசாரத்தால் நாடு பிழையாக வழிநடத்தப்படும் நிலைமை உள்ளது” – வீரசேகரவுக்கு எம்ஏ.சுமந்திரன் பதில் !

“அமைச்சர் சரத் வீரசேகரா போன்றவர்களின் இனவாதப் பிரசாரத்தால் நாடு பிழையாக வழிநடத்தப்படும் நிலைமை உள்ளது” என்று எம்.ஏ. சுமந்திரன்  தெரிவித்துள்ளார்.

“புலிகளை நினைவேந்திய சுமந்திரன் எப்படி பாராளுமன்ற உறுப்பினராக இருக்க முடியும் ?  அமைச்சர் சரத் வீரசேகர கேள்வி எழுப்பியிருந்த நிலையில் அதற்கு பதிலளிக்கும் போதே  எம்.ஏ. சுமந்திரன் மேற்கன்டவாறு நேற்று  பாராளுமன்றத்தில் கூறியுள்ளார்.

அங்கு அவர் மேலும் பேசியதாவது,

“அமைச்சருக்கு இந்த விடயத்தில் பதில் தர வேண்டிய கடப்பாடு ஏதும் எனக்குக் கிடையாது. எனினும் இவ்விடயத்தில் என் பெயர் பகிரங்கமாக பிரஸ்தாபிக்கப்பட்டமையால் நான் பதில் தருகின்றேன். 1985 இல் உயிரிழந்த பண்டிதர் என்பவரின் 83 வயதுத் தாயான சின்னத்துரை மகேஸ்வரி என்ற வயோதிப மாதுவுக்காக சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகினேன். அவர் ஒவ்வொரு வருடத்திலும் நவம்பர் மாதத்தில் தனது மகனுக்கு நினைவஞ்சலி செய்வது வழமை.

அவரின் மகன் விடுதலைப் புலிகளின் ஒரு தலைவர்தான். ஆனாலும் அந்த வயோதிபர் தாயைப் பொறுத்தவரை அவர் அந்தத் தாயின் மகன்தான். ஒவ்வொரு தாய்க்கும் தனது பிள்ளைகளை நினைவேந்த உரிமையுண்டு. ஜே.வி.பி. அதன் தலைவரான றோஹண விஜயவீரவை, கொழும்பு வீதிகள் எங்கும் அவரின் உருவப்படங்ள், சித்திரங்ளை அலங்கரித்து நினைவு கூர்வது குறித்து, இந்த அமைச்சர் ஒரு கேள்வி தன்னும் எழுப்பியவர் அல்லர்.

அதனால்தான் உயிரிழந்தவர்களை நினைவேந்துவதில் கூட இந்த நாட்டில் தமிழர்கள் பாகுபாடு காட்டப்படுகின்றார்கள், ஒதுக்கப்படுகின்றார்கள் என்று நான் இந்தச் சபையில் கூறினேன். அத்தகைய கீழ்த் தர நடத்தையைக் கொண்ட இந்த அமைச்சர்தான், அந்தத் தாய் தனது மகனை நினைவேந்தல் செய்தபோது நான் அவருடன் கூடவே நின்றமையை இங்கு கேள்விக்கு உட்படுத்துகின்றார்.

அந்தத் தாய் தனிப்பட்ட முறையில் தனது மகனுக்கு நினைவேந்தல் செய்யும் முழு உரிமையும் உண்டு என்று முதல் நாள்தான் மேல்நீதிமன்றம் தனது உத்தரவில் விசேடமாகக் குறிப்பிட்டிருந்தது. அந்த நினைவேந்தலைத்தான் அத்தாய் தனது வீட்டில் – அது வீடு என்றும் கூறமுடியாது ஒரு கொட்டில் அவ்வளவுதான் – அதில் மேற்கொண்டார். நான் அவருடன் கூட இருந்தேன்.

இந்த நினைவேந்தல் நிகழ்வு பொது இடங்களில் செய்யப்பட முடியாது. தனித்து வீட்டில் செய்யலாம் என்பதை அந்தத் தாய்க்கு விளங்கப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட நீதிபதி என்னிடம் விசேடமாக கோரியிருந்தார். அந்த நிகழ்விலேயே நான் பங்குபற்றினேன். அது தனிப்பட்ட நிகழ்வு. அந்த நிகழ்வுப் படங்களைப்பாருங்கள். அவரின் மகன் சீருடையில் கூட இருக்கவில்லை. இது ஒரு மகனுக்காக தாய் ஆற்றிய நினைவேந்தல் நிகழ்வு.

அவருக்காக நான் முதல் நாள் மன்றில் முன்னிலையாகியிருந்தேன். அந்த நிகழ்வை தனிப்பட்ட முறையில் வீட்டில் அவர் நடத்தலாம் என்பதை அவருக்கு விளங்கப்படுத்துமாறு நீதிமன்றே என்னை விசேடமாகக் கோரியிருந்தது. இதனை சர்ச்சைக்குரிய விடயமாக நிலையில் கட்டளையின் கீழ் இங்கு எழுப்ப முடியாது. என்றாலும் கீழ்தரனமான முறையில் அமைச்சர் அதனை முன்னெடுப்பது முற்றிலும் தவறு” என்றார் சுமந்திரன்.

600 வரையான சிறைக்கைதிகள் ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை !

சிறைகளில் கொரோனா தொற்று பரவுவதைக் கருத்திற் கொண்டு கைதிகள் சிலரை ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யத் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி 600 கைதிகள் வரை பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

“தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்தும் பலர் கோரிக்கை விடுத்து வருகின்ற நிலையில் கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கப்படாது” என சிறைச்சாலை ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

“நியாயமற்ற விமர்சனங்கள் மூலம் சமூகத்தினை தவறாக வழிநடத்தவேண்டாம் ” – பாராளுமன்றில் பிள்ளையானுக்காக ஒலித்த நீதியமைச்சரின் குரல் !

முன்னாள் கிழக்குமாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்)மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டமை குறித்து பல்வேறுபட்ட தரப்பினரும் பல விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த விமர்சனங்கள் குறித்தும் சமீபத்தைய நீதிமன்ற தீர்ப்புகள் குறித்து முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு நீதியமைச்சர் அலிசப்ரி பாராளுமன்றத்தில் பதிலளித்துள்ளார்.

அதில் நீதியமைச்சர் குறிப்பிடும்போது “சிலர் வழங்கிய வாக்குமூலங்களின் அடிப்படையிலேயே பிள்ளையான் ஐந்து வருடங்கள் சிறையிலிருந்தார்.
அந்த வாக்குமூலம் சுயவிருப்பத்தின் அடிப்படையில் வழங்கப்படவில்லை என்பது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது. பிள்ளையானிற்கு எதிராக இதன் காரணமாக எந்த ஆதாரங்களும் இல்லை என குறிப்பிட்ட நீதியமைச்சர் நீதிமன்ற நடவடிக்கைகளை விமர்சனம் செய்பவர்களை உண்மையை கண்டறியுமாறும்,நியாயமற்ற விமர்சனங்கள் மூலம் சமூகத்தினை தவறாக வழிநடத்தவேண்டாம் எனவும்  கேட்டுக்கொண்டுள்ளார்.

விடுதலைப்புலிகளுக்காக வெளிநாடுகளில் நிதி சேகரிப்போரை கண்டுபிடிக்க இன்டர்போல் – அமைச்சர் சரத் வீரசேகர

“விடுதலைப் புலிகளிற்கு வெளிநாடுகளில் நிதி சேகரிப்பவர்களை  கண்டுபிடிக்க இன்டர்போலின் உதவியை நாடவுள்ளோம்” என அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த செவ்வியில் “வெளிநாடுகளில் விடுதலைப் புலிகளிற்கு பலர் நிதி சேகரிக்கின்றனர் என்றும் இது சட்டவிரோதமானது என்பதால் நாங்கள் இன்டர்போலின் உதவியை நாடவுள்ளோம். முன்னைய அரசாங்கம் இவர்கள் குறித்து எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பதனால் இந்த வலையமைப்பு விரிவடைந்துள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழில் வயோதிபர்கள் இருவர் மீது வாள்வெட்டு !

சங்கானை தேவாலய வீதியில், வெளிநாட்டில் உள்ள ஒருவரின் வீட்டை பராமரிக்கும் வயோதிபர்கள் இருவர் இனந்தெரியாதோரினால் வாள் வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அவர்கள் மீது தாக்குதல் நடத்திய வாள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் மார்க்கண்டு வேலாயுதம் (வயது -64), தங்கராஜா புவனேஸ்வரி ( வயது -56) ஆகிய இருவருமே தாக்குதலுக்கு இலக்காகி, வெட்டுக்காயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டில் வசிக்கும் குடும்பத்தினரின் வீட்டை பராமரிக்கும் பணியில் இருவரும் அங்கு தங்கியிருந்தனர் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்ததாக, மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

அதேவேளை அவர்கள் தாக்கப்பட்டமைக்கான சரியான காரணம் கண்டறியப்படவில்லை என்றும் கொள்ளையிட்டமை தொடர்பிலும் தகவல்கள் இல்லை எனவும் தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இலங்கை மாணவர்களுக்கான இணையவழிக்கற்கைகள்  பெரும் தோல்வி !

கொரோனா தொற்றின் போது இணையத்தின் ஊடாக பாடசாலை மாணவர்களுக்கு கற்பிக்கும் முறை தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பல சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது என்று இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் (சி.டி.எஸ்.யூ) தெரிவித்துள்ளது.

சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜெயசிங்க ஊடகம் ஒன்றிடம் இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

பெரும்பாலான ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இணையங்களுக்கான வசதிகளை கொண்டிருக்கவில்லை.

அத்துடன் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் “மொபைல் சிக்னல்” என்ற தொலைபேசியின் அலை வீச்சின் செயற்பாட்டு வலிமை மோசமாக உள்ளது.

தொடர்பு கொள்ள பயன்படுத்தப்படும் தரவுகளும் மிகவும் விலை உயர்ந்தவை மற்றும் போதுமானதாக இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் 30 சதவிகித மக்கள், மேற்கு மாகாணத்தில் 50 சதவிகித மக்கள் ஏனைய மாகாணங்களில் 20 முதல் 40 சதவிகித மக்கள் இணைய வசதிகளை கொண்டுள்ளனர்.

எனவே கொரோனா தொற்று நிலைமை கட்டுப்படுத்தப்பட்ட நிலைக்கு வரும் வரை தொலைக்காட்சி அலைவரிசைகளின் ஊடாக பாடங்களை நடத்துவதே சிறந்த தொலைதூர கல்வி தளமாகும் என்று ஜெயசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை இணையக்கல்வியானது. மாணவர்கள் மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அவர்கள் கையடக்கத் தொலைபேசிகள், கணணிகளை போன்றவற்றில் அடிமையாகிவிட்டனர் என்றும் ஜெயசிங்க குறிப்பிட்டுள்ளார்.

‘நான் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளப்போவதில்லை. அது என் உரிமை’ – பிரேசில் ஜனாதிபதி

உலகையையே உலுக்கி வரும் கொரோனா வைரசை அது ஒரு சிறிய காய்ச்சல் தான் இதற்கு ஊரடங்கு, முகக்கவசம் என எதுவும் தேவையில்லை என கூறியவர் பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சோனாரோ.  முகக்கவசம் அணியாமல் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற போல்சோனாரோவுக்கு கடந்த ஜூலை மாதம் 10-ம் திகதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, தனிமைப்படுத்திக்கொண்ட போல்சோனாரோ ஹைட்ராக்சி குளோரக்குயின் மாத்திரைகளை தொடர்ந்து எடுத்துவந்தார். அவருக்கு, 3 முறை கொரோனா பரிசோதனையிலும் கொரோனா பாசிட்டிவ் என முடிவு வந்தது.  தொடர்ந்து ஜூலை 25-ம் திகதி நடத்தப்பட்ட 4-வது கொரோனா பரிசோதனையில் போல்சொனாரோவுக்கு கொரோனா நெகட்டிவ் என முடிவு
வந்ததையடுத்து, வைரஸ் பாதிப்பில் இருந்து அவர் குணமடைந்தார்.
இதற்கிடையில், கொரோனா வைரசை தடுக்கும் வகையில் உலக நாடுகள் தடுப்பூசிகளை தயாரித்து வருகின்றன. பல நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் தயாரித்துள்ள தடுப்பூசிகள் கொரோனா வைரசை தடுப்பதில் நல்ல பலன் அளிக்கிறது.  தடுப்பூசி முழுமையாக கண்டுபிடிக்கப்பட்ட உடன் அதை உலகம் முழுவதிலும் உள்ள மக்களுக்கு செலுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பின்னரும் அந்த தடுப்பூசியை தான் போட்டுக்கொள்ளப்போவதில்லை என கூறி ஜனாதிபதி போல்சோனாரோ மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக சமூகவலைதளம் வாயிலாக நடைபெற்ற நேரலை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போல்சோனாரோ, ‘நான் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளப்போவதில்லை. அது என் உரிமை’ என கூறினார்.
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் பிரேசில் நாடு 3-வது இடத்தில் உள்ளது. அந்நாட்டில் 62 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 1 லட்சத்து 71 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“இந்திய அரசாங்கம் இலங்கையின் தென்பகுதி குறித்தும் கவனம் செலுத்தவேண்டும்” – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  கோரிக்கை !

“வடக்கு-கிழக்கு மற்றும் மலையக பகுதிகளின் வீடமைப்புத்திட்டங்கள் குறித்து இந்திய அரசாங்கம் கவனம் செலுத்துவதைப் போன்று இலங்கையின் தென்பகுதி குறித்தும் கவனம் செலுத்தவேண்டும்” என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீஅஜித் தோவாலுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (27.11.2020) விஜேராம உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

இதன்போதே இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீஅஜித் தோவாலிடம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, இலங்கை, இந்தியா உள்ளிட்ட இந்த பிராந்திய நாடுகளுக்கு வெளிநாட்டில் தொழில்புரிபவர்கள் ஊடாக சிறந்த பொருளாதார பலம் கிடைத்ததுடன், தற்போதைய கொவிட்-19 தொற்று நிலைமைக்கு மத்தியில் அவர்கள் வேலைவாய்ப்பை இழந்தமையினால், அவர்கள் தங்களது சொந்த நாடுகளுக்கு திரும்பியுள்ளமையால் அனைத்து நாடுகளுக்கும் கிடைத்த அந்நிய செலாவணி குறைவடைந்துள்ளதாகவும் அஜித் தோவால் சுட்டிக்காட்டினார். எனினும், கொவிட்-19 தொற்று நிலைமைக்கு மத்தியில் பொருளாதாரத்தை பலப்படுத்த வேண்டும் என்று கூறியதுடன், இப்பிராந்தியத்தின் பிற நாடுகளுடன் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் மற்றும் அபிவிருத்தியை நோக்கி பயணிக்கும் மூலோபாயங்களை கண்டறிய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

அதற்கு, பிராந்தியத்தின் பிற நாடுகளுக்கு இடையே கருத்தாடலொன்றை கட்டியெழுப்புவதுடன், பொருளாதார மந்தநிலைக்கு தீர்வை கண்டறிந்து பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான மூலோபாயங்களை கண்டறிவதற்கும், மூலோபாய பொறிமுறையொன்றை உருவாக்குவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை முன்னிலை வகிக்குமாறும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவால்  முன்மொழிந்தார்.

அதற்கு இந்திய அரசாங்கத்தின் முழுமையான ஆதரவை பெற்றுத் தருவதாக தெரிவித்த அஜித் தோவால், கொவிட-19 நிலைமைக்கு மத்தியிலும் இலங்கை, இந்தியா உள்ளிட்ட பிராந்தியத்தின் பிற நாடுகளின் அபிவிருத்தியை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பிரதேசங்களில் வீடமைப்பு திட்டங்களை செயற்படுத்தியுள்ளதாக தெரிவித்த  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அத்தகைய வீடமைப்பு திட்டங்களை தென் பகுதிகளை மையமாகக் கொண்டு ஆரம்பிப்பதற்கும் ஆதரவை பெற்றுத் தருமாறு கேட்டுக் கொண்டார்.

அதற்கு இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பை பெற்றுத் தருவதாக ஸ்ரீஅஜித் தோவால்  தெரிவித்தார்.

அத்துடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டலின் கீழ் நவீன தொழில்நுட்பத்தை உபயோகப்படுத்தி இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள குடிநீரை பெற்றுக் கொடுக்கும் திட்டம் தொடர்பில் கவனம் செலுத்தி, அத்தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இலங்கையில் நீர் வழங்கல் திட்டங்களை ஆரம்பிப்பதற்கு இச்சந்திப்பின் போது உடன்பாடு எட்டப்பட்டது.

இது தொடர்பில் உயர்மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை ஆரம்பிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்குமாறு இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவால் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கு அறிவுறுத்தினார்.

குறித்த சந்தர்ப்பத்தில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் பிரதமரின் செயலாளர் காமினி செனரத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் ஒளிரவிடப்பட்ட கார்த்திகைப் பூ சின்னம் !

தமிழர் உரிமைப் போராட்டத்தில் உயிர்துறந்த மாவீரர்களை நினைவுகூரும் வகையில் பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் கார்த்திகைப் பூ சின்னம் ஒளிரவிடப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய செயற்பாட்டாளர்கள் சிலர் இணைந்து இவ்வாறு கார்த்திகை மலரை ஒளிரவிட்டுள்ளனர்.

மேலும், ‘இலங்கை அரசை எதிர்கொண்டு விடுதலைக்காக களமாடி வீழ்ந்த மாவீரர்களை நினைவுகூருகின்றோம்’ என்ற வாசகமும் கார்த்திகைப் பூவின் கீழ் பிரித்தானிய நாடாளுமன்ற இல்லக் கட்டடத்தில் ஒளிவீச்சாகப் பாய்ச்சப்பட்டுள்ளது.

ஈரான் அணுஆயுத திட்டத்தின் மூத்த விஞ்ஞானி சுட்டுப்படுகொலை !

ஈரானின் ரகசிய அணு ஆயுத திட்டத்தின் பின்னணியில் உள்ள சூத்திரதாரி என்று மேற்கத்திய புலனாய்வு அமைப்புகளால் கருதப்படுபவர் ஈரானின் மிக மூத்த அணு விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிசாதே. அதனால் அவர் “ஈரான் அணு குண்டின் தந்தை” என்று வர்ணிக்கப்பட்டார்.
மொஹ்சென் பக்ரிசாதே தலைநகர் தெஹ்ரான் அருகே  காரில் சென்று கொண்டு இருந்தபோது அவரது கார் வெடிகுண்டு மூலம் குறிவைக்கப்பட்டது. தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் படுகாயம் அடைந்த பக்ரிசாதே மருத்துவமனையில் இறந்தார்.
ஈரானில் பயங்கரம் - மூத்த அணு விஞ்ஞானி துப்பாக்கிச் சூட்டில் படுகொலை
ஈரான் உற்பத்தி செய்யும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் அளவு அதிகரித்திருப்பது குறித்த புதிய கவலையின் மத்தியில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது. செறிவூட்டப்பட்ட யுரேனியம் சிவில் அணு மின் உற்பத்தி மற்றும் இராணுவ அணு ஆயுதங்கள் இரண்டிற்கும் ஒரு முக்கிய அங்கமாகும்.
ஈரான் தனது அணுசக்தி திட்டம் அமைதியான நோக்கங்களுக்காக மட்டுமே என்று ஈரான் வலியுறுத்தி வந்தது.
2010 மற்றும் 2012-க்கு இடையில் நான்கு ஈரானிய அணு விஞ்ஞானிகள் படுகொலை செய்யப்பட்டனர். மேலும் கொலைகளுக்கு இஸ்ரேல் உடந்தையாக இருப்பதாக ஈரான் குற்றம் சாட்டியது. மே 2018-ல் ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்து இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அளித்த விளக்கத்தில் பக்ரிசாதேவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஈரானின் ஆன்மீக தலைவரின் ஆலோசகர் ஹொசெய்ன் டெகான் என்பவர் “இது இஸ்ரேலின் செயல் என டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். சியோனிஸ்ட்கள் அவர்களது சூதாட்ட சகாவின் அரசியல் வாழ்க்கையின் இறுதி நாட்களில், முழுமையான யுத்தமொன்றை ஈரான் மீது திணிப்பதற்காக ஈரான் மீது அழுத்தங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.