அருண்மொழி

அருண்மொழி

”ஒருவருடைய சமூகசேவைகளை கருத்திற்கொண்டே இனிமேல் சமதானநீதவான் பதவி வழங்கப்படும் ” – நீதியமைச்சர் அலி சப்ரி

கல்வித் தகைமைகளை வைத்து அன்றி சமூக சேவைகளை கருத்திற் கொண்டதாகவே சமாதான நீதவான்கள் பதவி வழங்கப்படுகின்றன என நீதியமைச்சர் அலி சப்ரி நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சமூக செயற்பாடுகளுடன் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை சித்தியடைந்தவர்கள் சமாதான நீதவான்களாக நியமிக்கப்படுகின்றனர் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் சாந்த பண்டார எம்.பி எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.  சாந்த பண்டார எம்.பி தமது கேள்வியின் போது,

சமாதான நீதவான்களை நியமிக்கும் போது கருத்திற்கொள்ளும் ஆகக்குறைந்த கல்வித் தகைமைகள் எவை என்பதை தெளிவுபடுத்துமாறு கோரினார்.

அதற்கு பதிலளித்த போதே நீதியமைச்சர் அலி சப்ரி இவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்,

சமாதான நீதவான் பதவிகளை வழங்கும்போது 60 வயதுக்கு குறைந்தவர்களானால் கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தி பெற்றுள்ளமை, 60 வயதுக்கு மேற்பட்டவர்களானால் அவர்களின் சமூக சேவை, நன்னடத்தை ஆகியவையே கருத்தில் கொள்ளப்படும். பாரிய சமூக சேவைகளை செய்தவர்கள் கிராமப்புறங்களிலும் உள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

பிரித்தானியாவில் இரண்டாவது நாளாகவும் ஆறாயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்று உறுதி !

பிரித்தானியாவில் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாகவும் ஆறாயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் பிரித்தானியாவில் ஆறாயிரத்து 634பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 40பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரித்தானியாவில் வைரஸ் தொற்று பரவியதற்கு பிறகு பதிவான இரண்டாவது நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும். முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி (7,860பேர்) வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 14ஆவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், நான்கு இலட்சத்து 16 ஆயிரத்து 363பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 41ஆயிரத்து 902பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 228பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

“வல்லரசு நாடுகளின் பனிப்போர் களமாக மாறும் பெலாரஸ் – ஜனாதிபதியை பதவி விலகக்கோரி ஒருமாதத்திற்கும் மேலாக தொடரும் மக்கள் போராட்டம் !

ஒருங்கிணைந்த சோவியத் ரஷியாவில் இருந்து 1991 ஆம் ஆண்டு பிரிந்து பெலாரஸ் தனி நாடாக அறிவிக்கப்பட்டது. பெலாரஸ் ஒரு ஐரோப்பிய நாடாகும்.
அந்நாட்டில் 1994 ஆம் ஆண்டு முதல் முறையாக அதிபர் தேர்தல்
நடைபெற்றது. அந்த தேர்தலில் அலெக்ஸ்சாண்டர் லூகாஷென்கோ (66 வயது) வெற்றிபெற்றார். அதன் பின் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் அலெக்சாண்டரே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதற்கிடையில், அந்நாட்டில் கடந்த மாதம் 9 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலிலும் அலெக்சாண்டர் 80.23 சதவிகித வாக்குகளை பெற்று வெற்றி பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் அலெக்சாண்டர் 6-வது முறையாக அதிபராக தேர்தெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
26 ஆண்டுகளாக அதிபராக செயல்பட்டு வரும் அலெக்சாண்டருக்கு எதிராக போட்டியிட்ட பிரதான எதிர்கட்சி தலைவரான ஸ்வியாட்லானா சிகானெஸ்கயா 8.9 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.  ஆனால், இந்த தேர்தலில் வெளியான முடிவுகள் மோசடியானவை என எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகிறது.
ரஷிய அதிபரிடம் ஆயுத உதவி கேட்டதாக பெலாரஸ் அதிபர் அலெக்ஸ்சாண்டர் லூகாஷென்கோ  அறிவிப்பு - lifeberrys.com Tamil இந்தி
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே எதிர்கட்சி தலைவரான ஸ்வியாட்லானா சிகானெஸ்கயா கைது நடவடிக்கைக்கு அஞ்சி அண்டைநாடான லிதுவேனியாவுக்கு தப்பிச்சென்றுவிட்டார்.
அதேபோல் மற்றொரு ஒருங்கிணைப்பாளரான வெரோனிகா டிசிப்கலோவும் தனது குடும்பத்துடன் போலாந்து தப்பிச்சென்றுவிட்டார். ஆனால் ஒருங்கிணைப்பாளர்களில் முக்கிய நபரான மரியா கொலிஸ்னிகோவா போலாரஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளார்.
போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் ரஷிய அதிபர் புதினிடம் ஆயுத உதவி கேட்ட  பெலாரஸ் அதிபர் || Belarusian leader says he asked Putin for weapons
இதனால், போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் மரியாவை விடுதலை செய்யக்கோரியும், அதிபர் அலெக்ஸ்சாண்டர் பதவி விலக்கக்கோரியும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. பெலாரஸ் அதிபர் அலெக்ஸ்சாண்டருக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ஆதரவு அளித்து வருகிறார். ஆனால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதனால், வல்லரசு நாடுகளுக்கு இடையே பனிப்போர் நடைபெறும் களமாக பெலாரஸ் மாறி வருகிறது. இதற்கிடையில், தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட அலெக்ஸ்சாண்டர் லூகாஷென்கோ நேற்று பெலாரஸ் நாட்டின் அதிபராக முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டதாக அந்நாட்டு அதிபர் மாளிகை செய்தி வெளியிட்டது. மேலும், அவர் ரகசிய காப்பு பிரமாணமும் ஏற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பெலாராஸ் நாட்டின் ஜனாதிபதியாக அலெக்ஸ்சாண்டர் முறைப்படி தேர்வு செய்யப்படவில்லை எனவும், தேர்தல் முறைகேடுகளுடன் நடைபெற்றுள்ளதால், அவர் ஜனாதிபதியாக அங்கீகரிக்க முடியாது என ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது. அதேபோல் அமெரிக்காவும் பெலாரஸ் அதிபராக அலெக்சாண்டரை ஏற்றுக்கொள்ளவில்லை என அறிவித்துள்ளது.
பெலாரஸ் அதிபராக அலெக்ஸ்சாண்டர் அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதை எதிர்த்து அந்நாட்டு முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் நேற்றும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.  அலெக்ஸ்சாண்டர் பதவி விலகக்கோரி 1 மாதத்திற்கு மேலாக பெலாரசில் தொடர்ந்து மக்கள் போராட்டம் நடத்தி வருவதால் பதற்றம் அதிகரித்துள்ளது.

”“டக்ளஸ் தேவானந்தா பேசும் போது எவரும் தடுப்பதில்லை . ஆனால் கஜேந்திரகுமார் அவர்கள் கதைக்கும் போது மட்டும் தடுக்கமுற்படுகிறீர்கள்” – பாராளுமன்றில் கஜேந்திரகுமாருக்கு ஆதரவாக ஒலித்த சுமந்திரனின் குரல் !

நேற்றைய பாராளுமன்ற அமர்வின் போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் திலீபன் நினைவேந்தல் பற்றி பாராளுமன்றில் கதைக்க முற்ப்பட்டமையை பல பாராளுமன்ற உறுப்பினர்கள் கூச்சலிட்டு தடை செய்ய முயன்ற போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அவர்கள் குறுக்கிட்டு  கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு சார்பாக பேசியிருந்தார்.

அங்கு உரையாற்றிய சுமந்திரன் அவர்கள்…,

“டக்ளஸ் தேவானந்தா கதைக்கும் போது எவரும் தடுப்பதில்லை . ஆனால் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் கதைக்கும் போது மட்டும் தடுக்கமுற்படுகிறீர்கள். ஒரு கட்சியின் தலைவராக மக்கள் பிரச்சினையை கதைப்பதற்கும் பாராளுமன்றில் குரல்கொடுப்பதற்கும்  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களிற்கு அனைத்து உரிமைகளும்  உள்ளது. அவர் பேசுவதை  தடுக்க எவராலும் முடியாது ” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தமிழ் அரசியல் ஆர்வளர்கள் பலராலும் பாராட்டப்பட்டிருப்பதுடன் சமூகவலைதளங்களிலும் பரவலான பேசுபொருளாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் ஒரே நாளில் 86,000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா ! – மொத்த பாதிப்பு 58,18,571 ஆக உயர்வு.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்படும் நிலையில், பாதிப்பு எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. உள்ளது.
இந்நிலையில், இன்று காலை இந்தியமத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 58 லட்சத்தை கடந்துள்ளது. மொத்த பாதிப்பு 58,18,571 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 86,052 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,141 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 92,290 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 47,56,165 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 81177 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 9,70,116 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.  உயிரிழப்பு 1.59 சதவீதமாகவும், குணமடைந்தோர் விகிதம் 81.74 சதவீதமாகவும் உள்ளது.

மலையக தோட்டதொழிலாளர்களுக்கு 1000ரூபா வேதனம் வழங்குதல் தொடர்பில் 2 வாரங்களில் பெருந்தோட்ட நிறுவனங்கள் அறிவிக்க வேண்டும் !

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 1000 ரூபா வேதனம் வழங்குவது தொடர்பில் பெருந்தோட்ட நிறுவனங்கள் தங்களது நிலைப்பாடுகளை 2 வாரங்களில் அறிவிக்க வேண்டும் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆலோசனை வழங்கியுள்ளார்.

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் பெருந்தோட்ட நிறுவனங்கள், கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கம் ஆகியவற்றுக்கிடையே சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

இதன்போதே, பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு அமைச்சரினால் இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே, எதிர்வரும் இரண்டு வாரங்களில் பெருந்தோட்ட நிறுவனங்கள் தங்களது தீர்மானங்களை அறிவிக்காவிடத்து அரசாங்கம் தமது முடிவை அறிவிக்கும் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டதாக இந்த கலந்துரையாடலில் பங்கேற்ற இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் எம்.ஏ. சுமந்திரன் , முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட சிலரை சியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் ஆஜராகுமாறு அழைப்பு !

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட ஊழல் ஒழிப்புக் குழுவின் உறுப்பினர்கள் அனைவரையும் அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 08 ஆம் திகதி இவ்வாறு அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை காப்புறுதி நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் பியதாச குடாபாலகே ஆணைக்குழுவில் முன்வைத்த முறைப்பாட்டிற்கு அமைய இந்த அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஊழல் ஒழிப்புக் குழுவின் பரிந்துரைக்கு அமைய, பொய்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தி, நிதி தூய்தாக்கல் குற்றச்சாட்டின் கீழ் விசேட மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமை தொடர்பில் பியதாச குடாபாலகே ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த முறைப்பாட்டை ஆராய்ந்த போது, ஊழல் ஒழிப்புக் குழுவின் உறுப்பினர்களாக செயற்பட்ட ரணில் விக்ரமசிங்க, சரத் பொன்சேகா, பாட்டலி சம்பிக்க ரணவக்க, மங்கள சமரவீர, ரவூப் ஹக்கீம், அனுரகுமார திசாநாயக்க, எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரை எதிர்வரும் 08 ஆம் திகதி ஆஜராகுமாறு அறிவிக்ப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் அரச சிரேஷ்ட சட்டத்தரணி துஷித் முதலிகே ஆகியோரையும் அன்றைய தினம் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அறவழிப்போராட்டத்தில் இணைந்து போராட்டத்தை வலுப்படுத்த அணிதிரளுமாறு தமிழ்மக்களுக்கு சம்பந்தமன் அறைகூவல் !

“நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தியும் ராஜபக்ச அரசின் சர்வாதிகார நடவடிக்கைக்கு எதிராகவும் நாளைமறுதினம் சனிக்கிழமையும் (26.09.2020)எதிர்வரும் திங்கட்கிழமையும் (28.09.2020) நடைபெறவுள்ள அறவழிப் போராட்டங்களில் தமிழ்பேசும் சமூகத்தினர் அனைவரும் கட்சி பேதமின்றி ஓரணியில் திரண்டு முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டும்.” என அறைகூவல் விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்.

தமிழ்பேசும் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில்,

நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தி நாளைமறுதினம் சனிக்கிழமை (26.09.2020) யாழ். வடமராட்சி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டமும், எதிர்வரும் திங்கட்கிழமை (28) வடக்கு, கிழக்கில் பூரண ஹர்த்தால் போராட்டமும் நடத்தப்படும் என்று தமிழ்த் தேசியக் கட்சிகள் இன்று அறிவித்துள்ளன.

இதையடுத்தே இரா.சம்பந்தன் மேற்படி அறைகூவலை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் ஊடகங்களிடம் நேற்று மேலும் தெரிவித்ததாவது:-

“இறந்தவர்களை நினைவுகூர்வது ஜனநாயக உரிமை. அதை எவரும் தடுக்கவே முடியாது. ஒரு மனிதர் எந்த வழியில் உயிரிழந்தாலும் அவரை அவரது சமூகம் நினைவுகூர உரித்துண்டு.

இதைத் தடுத்து நிறுத்துவது சர்வாதிகாரச் செயல். தற்போதைய ஆட்சியில் சர்வாதிகாரம் தலைவிரித்தாடுகின்றது. தமிழ்பேசும் சமூகத்தினரை இலக்குவைத்து அராஜகங்கள் அரங்கேறுகின்றன. அதில் ஒன்றுதான் தியாக தீபம் திலீபன் நினைவேந்தலுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையுத்தரவு. இதை ஒருபோதும் ஏற்கவே முடியாது.

இதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

தமிழினத்தின் விடுதலைக்காக அறவழியில் போராடி உயிர்நீத்தவரே தியாக தீபம் திலீபன். 12 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டி இறுதியில் உயிர்நீத்த அவரின் தியாகத்தை எவரும் கொச்சைப்படுத்த முடியாது. அவரை நினைவுகூர தமிழ்பேசும் சமூகத்துக்கு முழுமையான உரிமையுண்டு. அந்த உரிமை கடந்த ஆட்சியில் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த ஆட்சியில் தட்டிப் பறிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தியும் ராஜபக்ச அரசின் சர்வாதிகார நடவடிக்கைக்கு எதிராகவும் நாளைமறுதினம் சனிக்கிழமையும் (26), எதிர்வரும் திங்கட்கிழமையும் (28) நடைபெறவுள்ள அறவழிப் போராட்டங்களில் தமிழ்பேசும் சமூகத்தினர் அனைவரும் கட்சி பேதமின்றி ஓரணியில் திரண்டு முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டும்” – என்றார்.

வெடுக்குநாறிமலை ஆலயவழிபாட்டுக்கு வரும் பக்தர்கள் இடையே பொலிஸாரின் நடவடிக்கைகளால் அச்சம் !

வவுனியா வடக்கு நெடுங்கேணி வெடுக்குநாரி மலை ஆதலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வருடாந்த பொங்கல் விழா இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் ஆலயத்திற்கு வருகைதரும் பக்தர்களை பதிவுசெய்யும் நடவடிக்கையில் நெடுங்கேணி பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை, குறித்த பதிவு நடவடிக்கை கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணத்தால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், இவ்வாறான செயற்பாடுகளால் ஆலயத்திற்கு வருகைதரும் பொதுமக்களின் எண்ணிக்கை குறைவாகக் காணப்படுவதுடன், பொதுமக்கள் அச்ச மனநிலையுடன் வழிபாடுகளில் ஈடுபட வேண்டியுள்ளதாக நிர்வாகத்தினர் விசனம் தெரிவிக்கின்றனர்.

”அமேசான் காடுகளை நான் அழிப்பதாக கூறப்படும் செய்திகளில் உண்மையில்லை ” – பிரேஸில் ஜனாதிபதி

அமேசான் காடுகள் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக பிரேஸில் ஜனாதிபதி ஜெய்ர் போல்ஸனாரோ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் உலக நாடுகளின் தலைவர்கள் இணையம் வழியாகப் பங்கேற்றனர்.

அக்கூட்டத்தில் பிரேஸில் ஜனாதிபதி ஜெய்ர் போல்ஸனாரோ பேசும்போது, ”அமேசான் காடுகள் தொடர்பாகப் பல தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. பிரேசிலின் அமேசான் வளம்மிகுந்த பகுதியாகும். எனவே, இம்மாதிரியான தகவல்கள் பரப்பப்படுகின்றன” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அமேசான் காடுகளைப் பாதுகாப்பதற்காக பிரேஸில் எடுத்த நடவடிக்கைகளையும் அவர் வெளியிட்டார்.

பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்ஸனாரோ கடந்த முப்பது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நாட்டின் பொருளாதார நலனுக்காக பிரேசிலில் மழைக்காடுகள் அழிவதைத் தீவிரப்படுத்தி வருகிறார். இதற்கு எதிராக பிரேசிலின் பூர்வ பழங்குடிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக ஜெய்ர் போல்ஸனாரோ பெரும் விமர்சனத்துக்கு உள்ளானார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் காட்டுத் தீ காரணமாக அமேசான் காடுகள் தீக்கு இரையாகின. அப்போது பிரான்ஸ் அதிபர் மக்ரோன்அமேசான் காட்டுத் தீயை அணைப்பதற்கு பொருளாதார ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் உதவத் தயார் என்று தெரிவித்திருந்தார். ஆனால், இதனை பிரேஸில் ஜனாதிபதி நிராகரித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பூமியின் நிலப்பரப்பில் 6 சதவீதத்தை  கொண்டுள்ள அமேசான் காடு, பூவுலகின் தாவரங்கள், உயிரின வகைகளில் பாதியைக் கொண்டுள்ளன. உலகின் நுரையீரலாக அமேசான் காடுகள் உள்ளன. 40,000 தாவர இனங்கள், 1,300 பறவையினங்கள், 25 லட்சம் பூச்சியினங்கள் என மாபெரும் உயிரினப் பன்மை மையமாக அமேசான் திகழ்கிறது