அருண்மொழி

Tuesday, August 3, 2021

அருண்மொழி

ஹிஷாலினியின் குடும்பத்தினருக்கு நிதி உதவியுடன் வீட்டையும் புனரமைத்துக் கொடுக்க திட்டம் !

சிறுமி ஹிஷாலினியை மீண்டும் உயிர்ப்பிக்க முடியாது என்ற போதிலும், பெருந்தோட்டப் பகுதிகளிலுள்ள சிறுவர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கு முறையான வேலைத் திட்டங்களை முன்னெடுக்க முடியும் என்று மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

வீட்டு வேலைக்கமர்த்தப்பட்டு உயிரிழந்த சிறுமி ஹிஷாலினியின் தாய் மற்றும் உறவினர்களை நுவரெலியா மாவட்ட செயலகத்தில் சந்தித்தபோதே இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அதிகபட்ச ஒத்துழைப்புக்களை மகளிர் மற்றும் சிறுவர் விவகார அபிவிருத்தி அமைச்சு வழங்கும் என்று தெரிவித்த இராஜாங்க அமைச்சர் , சிறுமியின் குடும்பத்தாருக்கு நிதி உதவியையும் வழங்கினார்.

அத்துடன் மூன்று மாதங்களுக்குள் அந்த குடும்பத்துக்கு வீட்டை புனர்நிர்மாணம் செய்வதற்கும் சுயதொழிலை ஆரம்பிப்பதற்கும் தேவையான நிவாரணத்தை வழங்குவதாகவும் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா உறுதியளித்தார்.

இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா நுவரெலியா மாவட்டத்திலுள்ள சிறுவர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நுவரெலியா மாவட்ட செயலக அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட போதே இவ்வாறு உறுதியளித்துள்ளார்.

இலங்கையில் அதிகரிக்கும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் – 180 நாட்களில் 4,740 முறைப்பாடுகள் !

கடந்த ஆறு மாதங்களில் சிறுவர்களுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் 4,740 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக, தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

சிறுவர்களை ஆபத்தான முறையில் வேலைக்கு பயன்படுத்தும் பிரமுகர்கள் உள்ளிட்ட தனிநபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்ப்படுமென, தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகாரசபை (NCBA) தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில், சிறுவர்கைள கொடுமைக்குள்ளாக்கப்படும் வகையிலான, பாதுகாப்பற்ற வேலைகளின் எண்ணிக்கை 76 ஆக அதிகரிப்பதற்கு தேசிய சிறுவர்க பாதுகாப்பு அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.அத்துடன், இரண்டு மாதங்களுக்குள் இதை ஒரு சட்டமாக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக, அதன் தலைவர் பேராசிரியர் முதித விதானபத்திரண தெரிவித்தார்.

கடந்த மாதத்தில் குழந்தைகளுக்கு எதிரான அட்டூழியங்கள் அதிகரித்துள்ளன என்றும், சிறுவர்களை வீட்டு வேலைகளுக்கு பயன்படுத்துவது தொடர்பில் விசாரணகளை மேற்கொள்ள நாடு முழுவதும் விசேட சுற்றிவளைப்புகள் நடத்த திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் தங்கியிருந்த 38 இலங்கையர்கள் கைது – இந்திய தேசிய புலனாய்வு பிரிவிடம் வழக்கு ஒப்படைப்பு !

இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இலங்கையர்கள் குறித்து இந்திய தேசிய புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தமிழக பொலிஸாருடன், மங்களூர் பொலிஸார் இணைந்து சுமார் ஒரு மாதமாக நடத்திய தேடலில் 38 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவர்கள் இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக கனடாவுக்கு குடிபெயர தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

இதற்காக நபர் ஒருவருக்கு, இலங்கை மதிப்பில் 10 இலட்சம் ரூபா வீதம் கொடுத்து கனடா செல்ல முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மங்களூர் நகர பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் மேலதிக விசாரணைக்காக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.

மேலும், இந்த வழக்கு இந்திய தேசிய புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த குழு கடந்த மார்ச் மாதம் இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இலங்கையில் வருடாந்தம் நீரில் மூழ்கி 800 பேர் வரை இறப்பு – ஐ.நா. அதிர்ச்சி அறிக்கை !

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 75 ஆவது கூட்டத் தொடரில் உலக நீரில் மூழ்குதல் தடுப்பு தொடர்பான முதலவாது தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஜூலை 25 உலக நீரில் மூழ்குதல் தடுப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.

உலகில் நீரில் மூழ்குவதால் வருடமொன்றுக்கு 220,000 க்கும் அதிகமானோர் உயிரிழப்பதுடன், அவற்றில் 1/3 மரணங்கள் தென்னாசியாவிலேயே பதிவாவதாகவும் ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் நாட்டில் நீரில் மூழ்கி சுமார் 800 பேர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாலஸ்தீனத்தை அடக்கும் இஸ்ரேலுடன் விளையாட மாட்டேன் – ஒலிம்பிக்கில் இருந்து விலகிய வீரர் !

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இஸ்ரேல் வீரருக்கு எதிராக விளையாட மறுத்த அல்ஜீரிய ஜூடோ வீரரை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.

அல்ஜீரிய ஜூடோ வீரரான Fethi Nourine என்பவரே விவாதத்துக்குரிய இந்த முடிவை மேற்கொண்டுள்ளார். முதல் சுற்றில் சூடான் வீரரை சமன் செய்த நிலையில், இரண்டாவது சுற்றில் இஸ்ரேலிய வீரருடன் மோத வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஆனால் Fethi Nourine மற்றும் அவரது பயிற்சியாளர் ஆகிய இருவரும் இதற்கு மறுப்பு தெரிவித்ததுடன், போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர்.

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இந்த முடிவை முன்னெடுத்ததாக Fethi Nourine விளக்கமளித்துள்ளார்.

2019ல் நடந்த உலக ஜூடோ சாம்பியன் போட்டியிலும், இதே இஸ்ரேலிய வீரருடன் மோதும் நிலை ஏற்பட்ட போது Fethi Nourine போட்டியில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிராக உடன்படிக்கை கைச்சாத்து !

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிராக உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நேற்று (சனிக்கிழமை) இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

41 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.

அதன்படி, ஆசிரியர், அதிபர் சங்கங்கள், முன்னிலை சோஷலிச கட்சி, அனைத்து பல்லைக்கழக மாணவர் ஒன்றியம் உள்ளிட்ட 41 தொழிற்சங்களின் பிரதிநிதிகளே இவ்வாறு கையெழுத்திட்டுள்ளனர்.

“வடக்கின் பொதுச் செயலாளராக தகுதியற்ற ஒருவரை நியமித்துள்ளார்கள்.” – எஸ்.சிறிதரன் விசனம் !

“வடக்கின் பொதுச் செயலாளராக தகுதியற்ற ஒருவரை நியமித்துள்ளார்கள்.” என  நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

கிளிநொச்சியில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு மேலும் பேசிய அவர்,

வடக்கு மாகாண சபைக்கான பொதுச் செயலாளராக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த சிங்கள மொழி பேசும் ஒருவரை இந்த அரசாங்கம் நியமித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் ஒரு மாகாணத்தில் எந்த மொழி முதன்மை செலுத்துகின்றதோ அந்த மொழியின் அடிப்படையில்தான் நியமனங்கள் இருக்கவேண்டுமென சட்ட ஏற்பாடுகள் இருக்கின்ற நிலையில்  அரசாங்கம் புதிய செயலாளரை மிகவும் வேகமாக நியமித்துள்ளதாக எஸ்.சிறிதரன் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் வடக்கு பொதுச் செயலாளராக 12க்கும் மேற்பட்டவர்கள் தகுதியுடையவர்களாக இருக்கின்றனர். ஆனாலும் தகுதி குறைந்த ஒருவரை அரசாங்கம் நியமனம் செய்துள்ளமையை தாங்கள் வன்மையாக கண்டிப்பதாக அவர் கூறியுள்ளார்.எனவே இந்த விடயத்துக்கு எதிராக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகளை  தாங்கள் நிச்சயம் முன்னெடுப்போம் என எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் ஒற்றுமையில்லாத சக்தியாகவுள்ள நிலையை பயன்படுத்தி, அரசாங்கம் தமிழர்களை துண்டாக்கிவிட்டு. சிங்களவர்களை வடக்கு பகுதியிலும் கொண்டுவந்து நியமனம் செய்யுமளவிற்கு முன்னேறியிருக்கின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் 03 இலட்சத்தை நெருங்கும் கொரோனா தொற்று – நேற்று 52 பேர் இறப்பு !

இலங்கையில் புதிதாக 1,737பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று (சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளடன் மேலும் 52 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட 30 பேரும் புத்தாண்டு கொத்தணியுடன் தொடர்புடைய 1,707பேரும்  வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 294,850 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை மேலும் 52 பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இதில் 26 ஆண்களும் 26 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

அதாவது 30 வயதிற்கு குறைந்த ஒருவரும் 30 முதல் 59 வயதிற்கு இடைப்பட்ட 12 பேரும் 60 வயதிற்கு மேற்பட்ட 39 பேருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய இலங்கையில்  4054 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால்  உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில் மேலும் 57பேர், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இதன்படி குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 266,665 ஆக  அதிகரித்துள்ளது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ரிஷாத் பதியுதீனின் வீட்டில் 11 பணிப்பெண்கள் துஷ்பிரயோகம் – ஒருவர் தற்கொலை – சிங்கள ஊடகம் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல் !

ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிப் பெண்களாகப் பணிபுரிந்த 11 பெண்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த செய்தி  திவயின எனும் செய்திதாளில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இதற்கு முன்னர் மலையகத்திலிருந்து அழைத்து வரப்பட்ட 11 யுவதிகள் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிப் பெண்களாகப் பணியாற்றிய காலத்தில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

மேலும் ரிஷாத் பதியுதீன் வீட்டில் பணிப்பெண்ணாக அழைத்துவரப்பட்ட யுவதி ஒருவர் பம்பலப்பிட்டி பகுதியில் ரயில் முன் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து பொலிஸார் விசாரித்து வருகின்றனர். அத்துடன் ரிஷாத் பதியுதீன் அமைச்சராகக் கடமையாற்றிய போது அவருக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லத்தில் யுவதி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

குறித்த யுவதியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியவர் ரிஷாத்தின் மைத்துனர் என தமக்குக் கிடைத்துள்ள தகவல் குறித்து பொலிஸார் தனியான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண், தான் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லத்தையும் அந்த அறையையும் பொலிஸாருக்கு காண்பித்துள்ளார் என பொலிஸ் வட்டாரத் தகவல்கள் மூலம் தெரியவருகிறது.

ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிப் பெண்ணாகப் பணிபுரிந்த வேளை தீக்காயங்கள் காரணமாக சிறுமி உயிரிழந்த சம்பவம் குறித்து ரிஷாத்தின் மனைவி, மனைவியின் தந்தை, மைத்துனர் மற்றும் தரகர் ஆகியோர் நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டனர்.

நேற்று காலை கைது செய்யப்பட்ட அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் மைத்துனர் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் உத்தியோகபூர்வ இல்லத்தில் யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றத்துக்காக குற்றஞ்சாட்டப்பட்டவர் என விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.

இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டுக்கு பணிப்பெண்ணாகக் கொண்டுவரப் பட்ட இளம் யுவதிகள் மற்றும் சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தப்பட்டமை தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக பிரதான பொலிஸ் பரிசோதகர் பெண் அதிகாரி வருணி போகஹவத்தவை நியமிக்க மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் நடவடிக்கை எடுத்துள்ளார் .

அதன்படி, ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பாலியல் துஷ் பிரயோகத்திற்குட்பட்ட யுவதிகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக வருணி போகஹவத்த தலைமையிலான விசேட குழு மலையக தோட்டப்புறப் பகுதிகளுக்குச் சென்றுள்ளது.

ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த சகல யுவதிகளும் மலையக பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும், நேற்று கைது செய்யப்பட்ட தரகர் மூலமாக அனைவரும் கொழும்பு அழைத்துவரப்பட்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வீட்டு பணிப்பெண்களான யுவதிகள் மற்றும் சிறுமிகளைக் கொழும்புக்கு அழைத்து வந்த தரகருக்கு இலட்சக் கணக்கான பணத்தைச் செலுத்த அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

ரிஷாத் பதியுதீனின் வீட்டின் பின்புறத்தில் தனியாக அமைந்துள்ள சிறிய இருட்டு அறையில் மேற்படி யுவதிகள், சிறுமிகள் விடப்படுவதாகவும் இரவு 10.30 மணியளவில் குறித்த அறையின் கதவை அடைப்பதாகவும் மறுநாள் காலை 5.30 மணிக்கு திறக்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், அவர்கள் கழிப்பறைக்குச் செல்லக் கூட அனுமதிக்கப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது. இதற்கிடையில் டயகம சிறுமியை வீட்டுப் பணிபெண் ணாக அழைத்து வந்த தரகரிடம் நீண்ட நேரம் பொலிஸார் விசாரணை நடத்தி பல முக்கியமான தகவல்களைக் கேட்டறிந்துள்ளனர்.

மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தலைமையில் 05 பொலிஸ் விசேட குழு குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணையை மேற்கொள்ளும் எனத் தெரியவந்துள்ளது.

இவ்வருட ஒலிம்பிக்கிலும் பங்கேற்றுள்ள அகதிகள் ஒலிம்பிக் அணி – 29 வீரர்கள் பங்கேற்பு !

32-வது ஒலிம்பிக் போட்டியின் துவக்க விழா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள தேசிய ஸ்டேடியத்தில் நடைபெற்றது. ஒலிம்பிக்கில் பங்கேற்கும் 204 நாட்டு அணியினரும் தங்களது தேசிய கொடியுடன் மிடுக்காக அணிவகுத்து சென்றனர். போட்டியை நடத்தும் நாடான ஜப்பான் நாட்டின் தேசியக்கொடி முதலில் கொண்டுவரப்பட்டது. அதன்பின்னர் மற்ற நாடுகளின் வீரர், வீராங்கனைகள், அணிவகுத்து அரங்கினுள் நுழைந்தனர்.

இதேபோல் ஒலிம்பிக் போட்டியில் இரண்டாவது முறையாக பங்கேற்கும் அகதிகள் ஒலிம்பிக் அணி வீரர்களும் தங்கள் கொடியுடன் அணிவகுத்து சென்றனர்.

அகதிகள் ஒலிம்பிக் அணி 2016 ஆம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில் முதல்முறையாக பங்கேற்றது. போர் உள்ளிட்ட காரணங்களுக்காக தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் அகதிகளாக தங்கியுள்ளவர்களின் ஒலிம்பிக் கனவை நனவாக்கும் வகையில் அகதிகள் ஒலிம்பிக் அணி என்ற அணியை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உருவாக்கியது.
இதன்மூலம், சொந்த நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் தங்கியுள்ள அகதிகள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த அணி சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் நிர்வகிக்கப்படுகிறது. அகதிகள் ஒலிம்பிக் அணியில் 29 வீரர்-வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர்.