T Jayabalan

T Jayabalan

கிளிநொச்சி கிணற்றுக்குள் இருந்து எறிகணைகள் மீட்பு!

கிளிநொச்சியில் கிணறு ஒன்றிற்குள்ளிருந்து எறிகணைகள் மீட்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி உதயநகர் மேற்கிலுள்ள காணி உரிமையாளர் ஒருவர் அவரது கிணற்றை துப்பரவு செய்து கொண்டிருந்த போது இரண்டு எறிகணைகள் கண்டெடுக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து அவர் அருகிலுள்ள படையினரிடம் தகவல் தெரிவித்தார் படையினர் அவ்விடத்திற்குச் சென்று மேலும் கிணற்றிலுள்ள சேற்றினை அகழ்ந்த போது 14 வரையிலான எறிகணைகள் அக்கிணற்றுக்குள் இருந்து மீட்கப்பட்டன.

கடந்த யுத்தத்தின் போது படையினர் அப்பகுதிகளை கைப்பற்ற முன்னேறிய நிலையில் அப்பகுதியிலிருந்த புலிகள் அக்கிணற்றிற்குள் தாங்கள் வைத்திருந்த எறிகணைகளை போட்டுவிட்டுச் சென்றிருக்கலாம் என படையினர் தெரிவித்தனர்.

முகமாலைப் பகுதிகளில் அதிகளவு வெடிபொருட்கள் காணப்படுவதால் மின்சாரம் வழங்கும் நடவடிக்கை தாமதம்.

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள முகமாலை, இத்தாவில், இந்திராபுரம் ஆகிய பகுதிகளில் இன்னமும் மிதிவெடி, கண்ணிவெடியகற்றும் பணிகள் பூர்த்தியடையவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்னி விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த காலத்தில் இப்பகுதிகள் புலிகளின் பகுதிக்கும் படையினர் நிலைகொண்டிருந்த பகுதிக்கும் இடைப்பட்ட பகுதிகளாக அமைந்திருந்த படியினால் அதிகளவு மிதிவெடிகள் இப்பகதிகளில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெடிப்பொருட்கள் அகற்றப்பட்டுவரும் நிலையில் பளைக்கு அப்பாலுள்ள இப்பகுதிகளுக்கு மின்சாரம் வழங்குவது சிரமமானதாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் அடுத்தமாத நடுப்பகுதியில் இவ்வெடிபொருட்கள் அகற்றப்பட்டு பளையிலிருந்து ஆனையிறவு வரையிலான பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி வருகை தருவதற்கு முதல் நாள் வவுனியாவில் குண்டு வெடிப்பு!

president.jpgஜனாதிபதி வருகை தருவதற்கு முதல் நாள்- நேற்றிரவு வவுனியாவில் குண்டுவெடிப்புச் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. ஜனாதிபதி கலந்து கொள்ளும் வடமாகாண அபிவிருத்தி தொடர்பான கூட்டம் இன்று செவ்வாய்கிழமை வவுனியாவில் நடைபெறவிருக்கும் வேளையில் இக்குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை வவுனியாவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா நகரின் மில்வீதியில் நேற்று திங்கள் கிழமை இரவு 9.30 மணியளிவில் இக்குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பெரும் சத்தத்துடன் இக்குண்டு வெடித்ததாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து பொலிஸார் தெரிவிக்கையில் வீதியில் நின்ற வாகனம் ஒன்றிலிருந்தே இக்குண்டு வெடித்ததாக குறிப்பிட்டனர்.

சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான ‘பிராடோ’ரக வாகனம் ஒன்றிற்குள்ளிருந்து இக்குண்டு வெடித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாகன இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வெடிப்பு ஏற்பட்டதாகவும், வாகனத்திற்குள் கைக்குண்டு எறியப்பட்டதால் இது நிகழ்ந்ததெனவும் தனிப்பிட்ட பிரச்சினை காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றதென்றும் பலவாறாக இக்குண்டு வெடிப்புச்சம்பவம் குறித்து பேசப்படுகின்றது.

இச்சம்பவத்தில் இருவர் சிறுகாயங்களுக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. வடமாகாண அபிவிருந்தி தொடர்பான கூட்டம் இன்று வவுனியாவில் நடைபெறும் நிலையில் எற்கனவே போடப்பட்ட பாதுகாப்பிற்கும் மேலாக அதிக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் வவுனியா செய்திகள் தெரிவிக்கின்றன. 

மனிதநேயன் வை சி கிருபானந்தனுக்கு தேசம்நெற் இன் கண்ணீர் அஞ்சலி!

Kirubananthan_Vai_Siதேசம்நெற் இணையத்தின் நீண்ட நாளைய கருத்துப்பதிவாளர் வை சி கிருபானந்தன் காலமானார். பார்த்தீபன் என்ற புனைப்பெயரில் தனது கருத்துக்களை பதிவிட்டுவரும் வை சி கிருபானந்தன் ஒரு மனிதநேயன். நேற்று ஒக்ரோபர் 18 2010ல் மரடைப்பால் கிருபானந்தன் உயிரிழந்தார். அவருக்கு தேசம்நெற் இன் கண்ணீர் அஞ்சலிகள்.

யாழ் அச்சுவேலியைப் பிறப்பிடமாகக்கொண்ட இவர் சுவிஸ்நாட்டில் நீண்டகாலமாக வாழ்ந்து வருகின்றார். காலம்சென்ற சிவஞானம் சரஸ்வதி தம்பதிகளின் புதல்வரான வை சி கிருபானந்தன் சத்தியபாமா(Eriswil) அவர்களின் அன்புக் கணவரும் பிரதீபன், கௌரிசங்கர்(கௌசி), பிரியங்கா ஆகியோரின் அன்புத்தந்தையும் ஆவார். வை சி கிருபானந்தனின் பிரிவால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தினருக்கு தேசம்நெற் இணையத்தின் சார்பிலும் அதன் வாசகர்கள் கருத்தாளர்கள் சார்பிலும் எமது ஆழந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.

‘கட்சி அரசியல் எதனிலும் ஈடுபாடற்ற இவர் மிகுந்த அரசியல் ஆர்வலர். சுவிஸில் நடைபெறுகின்ற அரசியல் கூட்டங்களில் பங்குபற்றி தனது கருத்துக்களை வெளிப்படையாகத் தெரிவித்து வருபவர்’ என்கிறார் அவருடைய நண்பர் அஜீவன். ‘அவருடைய இழப்பு நல்ல நண்பனின் நல்ல மனிதனின் இழப்பு’ எனத் தன் துயரைப் பகிர்ந்து கொண்டார். அஜீவன் மேலும் குறிப்பிடுகையில், ‘மிகவும் சமூக அக்கறை கொண்ட இவர் புறூக்டோர்ப் தமிழ் பள்ளியை நடத்துவதிலும் உதவி வருவதாகத் தெரிவித்தார்.

Kirubananthan_Vai_Siடயஸ்பொரா டயலொக் ஜேர்மனியில் ஏற்பாடு செய்த சந்திப்பில் நான் (த ஜெயபாலன்) வை சி கிருபானந்தனை முதற்தடவையாகச் சந்தித்தேன். தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு புனைபெயரில் தான் கருத்துப் பதிவிடுவதையும் குறிப்பிட்டு தேசம்நெற் இன் பணிகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டார். அதன் பின்னர் சுவிஸ் மாநாட்டுக்குச் சென்றிருந்த போதும் சந்தித்துக்கொண்டோம். முகமறியாது இணையத்தில் உரையாடிய போதும் முகமறிந்து நேரில் உரையாடிய போதும் அவருடைய மனிதநேயத்தில் மாற்றம் இருக்கவில்லை.

இந்த துயரச் செய்தியை வை சி கிருபானந்தன் (பார்த்தீபன்) யூலை 01 2009ல் பதிவிட்ட கருத்துடன் நிறைவு செய்கிறேன்.

”இலங்கை சுதந்திரம் அடைந்த பின் சிங்களத் தலைமைகளும், தமிழ்த் தலைமைகளும் அரசியலை இன ரீதியாக வளர்த்து பிளவுகளை ஏற்படுத்தி வந்ததே, நாட்டின் இன்றைய இவ்வளவு சீரளிவுகளுக்கும் காரணம். அதே தவறுகளை தொடர்ந்தும் செய்வதைத் தவிர்த்து, இனங்களுக்கிடையேயான ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தி எல்லா இன மக்களும் சமத்துவமாகவும், சகோதர மனப்பான்மையுடனும் சேர்ந்து வாழும் நிலையை அரசும் அனைத்து மக்களும் சேர்ந்து ஏற்படுத்த முன்வர வேண்டும். அப்போது தான் இலங்கையில் புரையோடிப் போயுள்ள இனப்பாகுபாடுகள் ஒழிந்து, எல்லோரும் இலங்கை மக்கள் என்ற பொதுவான எண்ணம் தாமாக உருவாகும்.”
பார்த்தீபன், யூலை 01 2009 தேசம்நெற்.

காத்தான்குடியில் மற்றுமொரு முதலை பிடிப்பு

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவிலங்கத்துறை வாவியிலிருந்துகொண்டு பொது மக்களுக்கும், கால்நடைகளுக்கும் தொந்தரவு கொடுத்து வந்த மற்றொரு முதலையை பிரதேச வாசிகள் ஒன்றிணைந்து பிடித்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி காமினி ஜெயவர்த்தன தெரிவித்தார்.

நேற்று மதியம் இம்முதலை பிடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். நேற்று முன்தினம் இதே மாதிரியானதொரு முதலையை காத்தான்குடி வாவியில் பொது மக்கள் பிடித்து அடித்துக் கொன்றனர்.

இம்முதலை மீனவரான 60 வயதுடைய தம்பிலெப்பையை கடித்து குதறி படுகொலை செய்ததுடன் அதிகளவிலான கால் நடைகளையும் கடித்து நாசமாக்கியமை குறிப்பிடத்தக்கது.

October 18 2010

மட்டக்களப்பு வாவியில் முதலைகளால் தொல்லை. 

மட்டக்களப்பு வாவியில் முதலைகளின் பெருக்கம் அதிகரித்துள்ளதால் மீனவர்கள் அங்கு மீன்பிடித் தொழிலில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை அம்பலாந்துறை வாவியோரமாக மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர் ஒருவரை முதலைக் கடித்துக் காயப்படுத்தியுள்ளது.  இதனையடுத்து 12 அடி நீளமான முதலையொன்று மீனவர்களால் வலை போட்டுப் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளது.

கடந்த வாரம் குறித்த வாவியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர் ஒருவர் முதலையினால் இழுத்துச் செல்லப்பட்டு பின்னர் அவரது  சடலம் மீட்கப்பட்டது. காத்தான்குடி வாவியிலும் முதலைகளின் நடமாட்டம் தொடர்பாக மீனவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடயத்தில் பொறுப்புள்ள அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கலந்தர் லெப்பை மொகமட் பரீட் தெரிவித்துள்ளார்.

”யாழில் தங்கியிருக்கும் சிங்கள மக்கள் ஆவணங்களை உறுதிப்படுத்தினால் அங்கு குடியமர்த்தப்படலாம்” மீள்குடியேற்றத்துறை அமைச்சர் மில்ரோய் ஃபெர்ணாண்டோ

jaffna.jpgயாழ் ரயில் நிலையக் கட்டடத்தில் தங்கியுள்ள சிங்களவர்கள் யாழ்குடா நாட்டில் முப்பது வருடங்களுக்கு முன்னர் வசித்ததாகவும், அதனால் அங்கு தம்மை மீளக்குடியமர்த்த வேண்டுமெனவும் கோரி யாழ் ரயில் நிலையக் கட்டடத்தில் தங்கியிருக்கும் சிங்கள மக்கள் உரிய ஆவணங்களை உறுதிப்படுத்தினால், மூன்றுமாத காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென மீள்குடியேற்றத்துறை அமைச்சர் மில்ரோய் ஃபெர்ணாண்டோ தெரிவித்துள்ளார். இந்த மக்களை சந்தித்து நிவாரணப் பொருட்களை வழங்கியபின், அவர்களுடன் கலந்துரையாடிய போதே அமைச்சர் மில்ரோய் ஃபெர்ணாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.

இங்குள்ள குடும்பமொன்றுக்கு வழங்கப்பட்டு வந்த 200 ரூபா பெறுமதியான நிவாரண உதவிப் பொருட்களை 1000 ரூபாவாக உயர்த்தியிருப்பதாகவும் அமைச்சர் தமிழோசையிடம் கூறினார்.

1970களில் தாம் யாழ்ப்பாணத்தில் வசித்ததாகவும், வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், அங்கு வாக்காளர் பட்டியலில் பதிவு செய்திருந்ததாகவும் இந்த மக்கள் தன்னிடம் கூறியதாக மில்ரோய் ஃபெர்ணாண்டோ தெரிவித்தார்.  இவர்களின் கோரிக்கை குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடாக சுமுகமான முறையில் இவர்களை மீள்குடியேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

யாழ் குடாநாட்டில் அதியுயர் பாதுகாப்பு வலயப் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களை மீள்குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படாதுள்ள நிலையில் 30 வருடங்களுக்கு முன்னர் வெளியேறியதாகக்கூறும் சிங்கள மக்களை குடியேற்ற முனைவது தொடர்பில் சிலர் விசனம் தெரிவிக்கிறார்களே என்ற கேள்விக்கு, ‘ யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை இனமத வேறுபாடின்றி மீள்குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார் மில்ரோய் ஃபெர்ணாண்டோ. அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் தற்போதுள்ள இராணுவத்தினரை அங்கிருந்து வெளியேற்றி வேறு இடங்களில் நிலைநிறுத்திவிட்டு, அந்தக்காணிகளை உரியவர்களிடம் ஒப்படைக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கமெனவும் அமைச்சர் கூறினார்.

நன்றி BBC.

._._._._._.

 ”சிங்களக் குடியேற்றங்களை விமர்சிப்பதாலேயே அபிவிருத்திக் கூட்டங்களுக்குகூட்டமைப்பை அரசாங்கம் அழைப்பதில்லை” கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்.

Sritharan_SivagnamTNA_MPவடக்கு கிழக்குப் பகுதிகளில் அரசாங்கம் திட்டமிட்ட வகையில் மேற்கொண்டு வரும் சிங்களக் குடியேற்றம் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றதாலேயே வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பான கூட்டங்களுக்கு கூட்டமைப்பை அரசாங்கம் அழைப்பதில்லை என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பை நிராகரித்துவிட்டு தற்போது வடமாகாண அபிவிருத்தி தொடர்பான கூட்டத்தை அரசாங்கம் நடத்துகின்றது. கூட்டமைப்பின் ஆதரவின்றி அரசாங்கம் மேற்கொள்ளும் எந்தவிதமான அபிவிருத்தியும் வெற்றியளிக்கப் போவதில்லை என்பதை ஜனாதிபதி உணரும் காலம் விரைவில் வரும் எனவும் அவர் குறிப்பிட்டார். யுத்தம் முடிவடைந்து விட்டதாக அரசாங்கம் அறிவித்தாலும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு எதனையும் அது முன்வைக்காமல் காலத்தைக் கடத்தி வருகின்றது. எனவும் அவர் தெரிவித்தார். 

 ._._._._._.

October 15 2010

 ”யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த சிங்கள மக்கள் மீள்குடியமர்த்தப்படுவது போல தென்னிலங்கையில் வாழ்ந்த தமிழ் மக்களும் தெற்கில் மீள்குடியமர்த்தப்பட வேண்டும்”  தமிழர் விடுதலைக் கூட்டணி

யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த சிங்கள மக்கள் மீண்டும் யாழ்ப்பாணத்தில் குடியேறி வாழ்வதென்பது நியாயமானதே. அதே போல் இனக்கலவரங்களினால் தென்னிலங்கையிலிருந்து வந்த தமிழ் மக்களும் மீண்டும் அங்கு குடியேறி வாழ வழிவகை செய்ய வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணி தெரிவித்துள்ளது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ்.மாநகரசபை உறுப்பினர் இரா.சங்கையா இவ்விடயம் தொடர்பாக  அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.

அரசியல் நோக்கம். சரி பிழைகளுக்கு அப்பால் தென்னிலங்கை சிங்கள மக்கள் யாழப்பாணத்தில் குடியிருந்திருந்தால் அவர்கள் தங்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர அனுமதிப்பதில் எவ்வித தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் யாழப்பாணத்தில் வாடகைக்கு குடியிருந்தவர்கள் தங்களுக்கு சொந்தக் காணிகள் வேண்டும் என்று கேட்பதில் எவ்வித நியாயமம் இல்லை.

யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த தென்னிலங்கை மக்கள் மீண்டும் யாழ்ப்பாணத்தில் குடியேறி வாழ்வதற்கு எந்தளவு உரிமை இருக்கின்றதோ அதேயளவு உரிமை 1956, 1958, 1977, 1983 ஆகிய வருடங்களில் நடந்தேறிய இனக்கலவரங்களின் போது தங்கள் சொத்துக்கள் அனைத்தையும் போட்டது போட்டபடி விட்டுவிட்டு ஓடிவந்த தமிழ் மக்களுக்கும் உள்ளது. குறிப்பாக அனுராதபுரம், கெக்கிராவ, தம்புள்ள, கலேவெல, திஸ்ஸமகராம போன்ற பகுதிகளிலில்  தங்களுக்குச் சொந்தமான காணிகளில் குடியேறவோ, அல்லது தங்களது சொத்துக்களை விற்பனை செய்யவோ வசதி செய்து கொடுக்கப்பட வேண்டும். இதில் தொடர்புடைய அனைத்துத தரப்பினரும் ஒத்துழைப்பு நல்கி தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக வடக்கு கிழக்கில் உயர்பாதுகாப்பு வலயங்களாக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் காணிகள் அம்மக்களிடம் திருப்பி ஒப்படைக்கப்பட வேண்டும். தென்னிலங்கை சிங்கள மக்கள் யாழப்பாணத்தில் மீள்குடியேற வேண்டும் என அக்கறைக்காட்டும் தரப்பினர் தமிழ் மக்களின் விடயத்திலும் அக்கறை காட்டவேண்டும். அவ்வாறு இல்லாது விட்டால் தமிழர் விடுதலைக்கூட்டணி பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை ஒன்று திரட்டி தொடர் போராட்டத்தை ஆரம்பிக்கும் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

._._._._._.

11 Oct 2010 

”யாழ். வந்துள்ள சிங்கள மக்களின் பிரச்சினைகளை ஆராய மூன்று மாதகால அவகாசம் தேவை” அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

Douglas Devanandaயாழ்ப்பாணத்தில் மீள்குடியேற வந்துள்ள சிங்கள மக்களின் ஆவணங்களை ஆராய்ந்து தீர்வொன்றை முன்வைக்க மூன்று மாதகால அவகாசம் தேவை என பாரம்பரிய கைத்தொழில் மற்றும், சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வந்து, யாழ்.புகையிரத நிலையக் கட்டடத்தில் தங்கியுள்ள சிங்கள மக்களை நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை சந்தித்த போதே அவர் இவ்வாறு அவர்களிடம் தெரிவித்தார்.

“நீங்கள் மீண்டும் அனுராதபுரத்திற்குச் செல்லப் போகின்றீர்களா?” என அமைச்சர் அவர்களிடம் கேட்டபோது முடிவு தெரியாமல் போக மாட்டோம் என அவர்கள் தெரிவித்தனர்.

அம்மக்களுக்கான குடிநீர்ப்பிரச்சினை, சுகாதார வசதிகளை மாநகரசபை கவனிக்கும் எனவும், அரிசி மற்றும் சமையல் பொருட்களைத் தமது கட்சி நிதியிலிருந்து வழங்க முடியும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அம்மக்களிடம் தெரிவித்தார்.

தினசரி இரண்டு மூன்று குடும்பங்கள் என மீள்குடியேற்றத்திற்காக தெற்கிலிருந்து யாழ்ப்பாணம் வந்து கொண்டிருப்பதாகவும், முன்னர் வந்தவர்களில் பாட்சாலை மாணவர்களைக் கொண்ட குடும்பங்கள் சில மீண்டும் தாங்கள் இருந்த இடங்களுக்குத் திரும்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதே வேளை, யாழ். குடாநாட்டில் முன்னர் வசித்து வந்த சிங்கள மக்கள் மீள்குடியமர அரசாங்கம் விரைவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும என ஐக்கியதேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

._._._._._.

10 Oct 2010

மீளக்குடியேற யாழ் வந்துள்ள சிங்கள மக்களின் பிரச்சினைகள் குறித்து அரசஅதிபர் பசில் ராஜபக்சவிற்கு கடிதம்.

Imelda_Sugumar_GA_JaffnaBasil_Rajaparksaயாழ்ப்பாணத்தில் மீள்குடியேறுவதற்காக வந்துள்ள சிங்கள மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான பசில் ராஜபக்சவிற்கு யாழ். அரச அதிபர் அவசர கடிதம் ஒன்றை நேற்று சனிக்கிழமை அனுப்பி வைத்துள்ளார்.

எவ்வித முன்னறிவித்தலுமின்றி யாழ்ப்பாணத்தில் தங்களை மீள்குடியமர்த்துமாறு கோரி யாழ். புகையிரத நிலையத்தில் இவர்கள் தங்கியுள்ளனர் இவர்களில் சிலர் முன்னர் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்துள்ளனர் என்பது உண்மைதான். ஆனால் அவர்களுக்கு சொந்தக் காணிகளோ சொந்த வீடுகளோ இருக்கவில்லை. இந்நிலையில், எவ்வித முன்னறிவித்தலுமின்றி யாழ்ப்பாணத்தில் தங்களை மீள்குடியமர்த்துமாறு வந்திருக்கும் இம்மக்களால் யாழ். மாவட்ட அரச நிர்வாகத்தில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. மீள்குடியேற்றம் செய்யுமாறு கோரும் இவர்களுக்கு உதவிகளைச் செய்யும் அரசாங்க திட்டங்கள் எதுவுமில்லை. எனவே, இங்கு வந்துள்ள சிங்கள மக்களின் மீள்குடியேற்றம் உடனடியாக சாத்தியமில்லை. அத்துடன் இவர்கள் தொடர்ந்து புகையிரத நிலையத்தில் தங்கியிருப்பது அவர்களுக்கு ஆரோக்கியமானதல்ல என அரச அதிபர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதே போன்ற கடிதமொன்றை நேற்று முன்தினம் ஜனாதிபதி செயலகத்திற்கும் யாழ். அரச அதிபர் அனுப்பிவைத்துள்ளார்.

._._._._._.

Oct 09 2010 

யாழ். வந்துள்ள சிங்கள மக்களின் தேவைகளை ஆராய கொழும்பிலிருந்து அதிகாரிகள் குழு வருகை.

Jaffna_Mapதெற்கிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு மீள்குடியேறுவதற்காக வந்துள்ள சிங்கள மக்களின் தேவைகள் குறித்து அறிந்து கொள்வதற்காக கொழும்பிலிருந்து சமுக்தி அதிகார சபையின் தலமையக அதிகாரிகள் குழுவொன்று நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் சமுக்தி அதிகார சபையின் பணிப்பிற்கு இணங்க அதிகாரசபையின் அதிகாரியான கே.ஜி.குணதிலக்க தலைமையில் இக்குழுவினர் வருகை தந்தனர். யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ள குறிப்பிட்ட சிங்களக் குடும்பங்களிடம் சில படிவங்களை வழங்கி விபரங்களைச் சேகரித்தனர்.

இதே வேளை, இம்மக்களுக்கு யாழ்.மாநகர சபையினால் குடிநீர், கழிப்பறை வசதிகள், மின்சாரம் என்பன எற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறுவதற்காக மேலும் 500 குடும்பங்கள் வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் நேற்று வெள்ளிக்கிழமை 10 குடும்பங்கள் மட்டும் வந்ததாகவும், அடுத்த சில நாட்களில் மேலும் பல குடும்பங்கள் வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

._._._._._.

Oct 08 2010

யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறுவதற்காக மேலும் பல குடும்பங்கள் வரவுள்ளதாக தகவல்: விஸ்வா

யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறுவதற்காக மேலும் பல குடும்பங்கள் வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் குடியேறுவதற்காக மேலும் பல சிங்களக் குடும்பங்கள் வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே 180 சிங்களக் குடும்பங்கள் யாழப்பாணத்திற்கு வந்துள்ள நிலையில் (Oct 08 2010)  500 குடும்பங்களைச் சொந்த 1500 பேர் வரவுள்ளதாக யாழ். புகையிரத நிலையத்தில் தங்கியுள்ள சிங்கள மக்கள் தெரிவித்துள்ளனர். அனுதாரபுரம், மிகிந்தலை, பிரதேசங்களிலிருந்து இவர்கள் வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.பகையிரத நிலையத்தில் தங்கியிருக்கும் சிங்களக் குடும்பங்களின் விபரங்கள் படையினரால் பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கான பாதுகாப்பு ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவர்களைப் பார்வையிடச் செல்லும் செய்தியாளர்கள் கூட படையினரின் அனுமதியினைப் பெற்றே செல்ல வேண்டியுள்ளது.

இதேவேளை, இவ்வாறு மீள்குடியேறும் நோக்கத்துடன் வந்திருக்கும் மக்களின் தேவைகளை நிறைவேற்றுமாறு யாழ்.செயலக அதிகாரிகளுக்கு உயர்மட்டத்திலிருந்து உத்தரவு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

._._._._._.

Oct 07 2010

1980ல் யாழில் இருந்து வெளியேறிய 180 சிங்களக் குடும்பங்கள் யாழில் மீளக் குடியிருக்க வந்துள்ளனர்!

Jaffna_Welcome1980ஆம் அண்டுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் வசித்த வந்ததாகக் கூறப்படும் 180 சிங்களக் குடும்பங்கள் மீள்குடியேற்றத்திற்காக யாழ்ப்பாணம் வந்துள்ளனர். 180 குடும்பங்களைச் சேர்ந்த 500 பேர் இதிலடங்குகின்றனர். சிறுவர்கள் குழந்தைகளோடு வந்துள்ள இவர்கள் யாழ்ப்பணத்தில் குடியேறி நிரந்தரமாக வசிக்க விரும்புவதாகவும், தங்களுக்கான காணிகள் வழங்கப்பட வேண்டும் எனவும் யாழ். அரசாங்க அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1980ஆம் ஆண்டுக்கு முன்னர் இவர்கள் யாழ்ப்பாணத்தில் வசித்து வந்த போதும், இவர்களுக்கு சொந்தமான காணிகள் எதுவும் இருக்கவில்லை. வாடகை வீடுகளிலேயே வசித்து வந்துள்ளனர். இவர்களில் பலருக்கு தமிழர்களோடு திருமண பந்தம் உள்ளது. தமிழிலும் பேசக் கூடிவர்களாகவுள்ளனர்.

நேற்று புதன்கிழமை அரசாங்க அதிபரைச் சந்தித்த இவர்கள் தங்களை யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டு மனுவொன்றையும் கையளித்துள்ளனர்.

இது குறித்து அரசாங்க அதிபர் தெரிவிக்கையில், இவர்களின் பிரச்சினை தொடர்பாக உடனடி தீர்வு காணும் திட்டம் எதுவும் இல்லை எனத் குறிப்பிட்டுள்ளார். வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி இவர்களின் வருகை குறித்து தமக்கு எதுவும் அறிவிக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

தற்போது இச்சிங்களக் குடும்பங்கள் யாழ். புகையிரத நிலையக் கட்டடத்திலும், விடுதிகளிலும் தங்கியுள்ளனர். தங்களை மீள்குடியமர்த்துவது தொடர்பாக தீர்க்கமான முடிவு கிடைக்கும் வரை யாழ்ப்பாணத்திலேயே தங்கியிருக்கப் போவதாக யாழ். புகையிரத நிலையக்கட்டத்தில் தங்கியிருப்பவர்கள் கூறுகின்றனர்.

1980க்களில் யாழ்பாணத்தில் இருந்து வெளியேறிய இவர்கள் அனுராதபுரம், மிகிந்தலை, மாத்தளை, குருநாகல், ஆகிய இடங்களில் இவர்கள் வருகின்றனர். இனி நிரந்தரமாக யாழ்ப்பாணத்தில் வசிக்க விரும்பவதாக  தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாணத்தில் வசிப்பதற்கு தங்களுக்கு காணிகளை வழங்க வேண்டும் என கோருகின்றனர். சிறிமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சி காலத்தில் திருநெல்வேலி, நாவற்குழி, ஆகிய இடங்களில் தங்களுக்கு காணிகள் ஒதுக்கப்பட்டதெனவும். அதற்கான கடிதங்கள் தங்களிடம் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். அக்காணிகளைத் திரும்பத்தரத் தேவையில்லை வேறு இடங்களிலாவது காணிகள் ஒதுக்கித்தர வேண்டும் எனக் கூறுகின்றனர்.

தெற்கின் பல பகுதிகளில் வசித்து வந்த இவர்கள் திடீரென ஒன்றிணைந்து  யாழ்ப்பாணத்திற்கு வந்திருப்பதற்கு தெற்கில் சிங்கள கட்சிகள் அல்லது அமைப்புகளின் பின்னணிகள், தூண்டுதல்கள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

இன்று வவுனியாவில் ஜனாதிபதி தலைமையில் வடக்கு அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம்

Welcome_to_Vavuniyaவட மாகாண அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று 19 ஆம் திகதி வவுனியாவில் நடைபெறவுள்ளது. வவுனியாவிலுள்ள வன்னி பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தலைமையகத்தில் நடைபெறவுள்ள இந்த மீளாய்வுக் கூட்டத்தில் அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்கள், வட மாகாண ஆளுநர், மாகாண பிரதம செயலாளர், மாவட்டச் செயலாளர்கள் உட்பட உயர் அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் வட மாகாணத்தில் நடைபெறும் முதலாவது அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம் இதுவாகும். யுத்தத்திற்குப் பின்னர் வடக்கிலுள்ள ஐந்து மாவட்டங்களிலும், முன்னெடுக் கப்பட்டுவரும் பல்வேறு பாரிய அபி விருத்தித் திட்டங்கள், மீள்குடியேற்ற செயற்பாடுகள் தொடர்பான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

வடக்கில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள், வடக்கின் வசந்தத்தின் மூலம் முன் னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டம் தொடர்பாக விரிவாக ஆராயப்படவுள்ளன.

October 18 2010

”வடமாகாண அபிவிருத்திக் கூட்டத்திற்கு எங்களுக்கு அழைப்பில்லை” ததேகூ பிரேமச்சந்திரன் – ”முரண்பாடுகளை ஏற்படுத்தி மக்களுக்குரிய தேவைகளை பூர்த்தி செய்யவிடமாட்டார்கள். அதனால் அழைப்பில்லை” அமைச்சர் பதியுதீன்

Suresh_Premachandran_TNARisath_Bathiyutheen_Ministerஜனாதிபதி தலைமையில் நாளை செவ்வாய் கிழமை வவுனியாவில் நடைபெறவுள்ள வடமாகாண அபிவிருத்தி தொடர்பான கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு அனுமதி வழங்கப்படவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இக்கூட்டத்தில் கலந்து கொள்ள தாங்கள் அழைக்கப்படாமைக்கு கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சுரேஸ் பிரேமச்சந்திரன் கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளார். அரசாங்கம் தமக்கு அழைப்பு விடுக்காதது தமிழ் மக்களை புறக்கணிப்பதற்கு ஒப்பானது என அவர் தெரிவித்துள்ளார்.

வடமாகாண அபிவிருத்தி தொடர்பான கூட்டம் நாளை செவ்வாய் கிழமை வவுனியா கூட்டுப்படைத் தலைமையகத்தில் ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ளது. வடமாகாணத்தின் சகல மாவட்டங்களையும் சேர்ந்த அரசாங்க அதிபர்கள், வடமாகாண ஆளுநர், பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேசச் செயலர்கள் மற்றும் அதிகாரிகள் இதில் கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதில் கலந்து கொள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இதுவரை அழைப்பு அனுப்பப்படவில்லை என தெரியவருகின்றது. இந்தக் கூட்டம் வவனியாவில் நடைபெற்ற போதும் இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு அழைப்பு அனுப்பும் பொறுப்பு தமக்கில்லை எனவும், அந்தப் பொறுப்பு ஜனாதிபதி செயலகத்திற்கு மட்டுமே உள்ளது எனவும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இவ்வாறான கூட்டங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எதிர்க் கருத்துக்களைக் கூறி முரண்பாடுகளை ஏற்படுத்துவார்கள். இதனால் மக்களுக்குரிய தேவைகள் பூர்த்தி செய்யப்படமாட்டாது என்பதாலேயே அபிவிருத்தி தொடர்பான இவ்வாறான கூட்டங்களுக்கு அவர்களை அழைப்பதில்லை என வர்த்தக மற்றும். கைத்தொழில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பின் உதவிகளின்றி அரசாங்கம் தமிழ் மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்து வருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.

நேற்று ஞாயிற்றுக் கிழமை வவுனியா மாவட்டத்திற்கான இணைப்புக்கூட்டம் வவுனியா செயலகத்தில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையில் நடைபெற்ற போது கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அபிவிருத்தி தொடர்பான கூட்டங்களுக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் அழைக்கப்படாமை குறித்து எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

October 17 2010

வடமாகாண அபிவிருத்தி தொடர்பான கூட்டத்தில் ஜனாதிபதி உட்பட 800 பேர் வவுனியாவில் கூடுகின்றனர்

Charles_Mrs_GA_Vavuniyaஎதிர்வரும் செவ்வாய் கிழமை வவுனியாவில் நடைபெறவிருக்கும் வடமாகாண அபிவிருத்தி தொடர்பான மீளாய்வுக் கூட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோருடன் வட மாகாண ஆளுநர், மாவட்ட அரசாங்க அதிபர்கள், அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதேசச் செயலர்கள் அதிகாரிகள் என 800 பேர் கலந்து கொள்ளவுள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நடைபெறவுள்ள வடமாகாண அபிவிருத்தி மீளாய்வு கூட்டம் தொடர்பான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகியுள்ளதாகவும் வவுனியா அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள வடமாகாண அபிவிருத்தி மீளாய்வு தொடர்பான கூட்டத்தில் வடமாகாணத்தின் அபிவிருத்தி, மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விடயங்கள், உயர்பாதுகாப்பு வலயங்களில் மக்களை மீள்குடியேற்றுதல் முதலான விடயங்கள் ஆராயப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முன்னாள் புலிப் போராளிகளின் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு மாதாந்தம் 10 கோடி ரூபா செலவு.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகளிகளின் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு மாதம் தோறும் 10 கோடி ருபாவை அரசாங்கம் செலவிட்டு வருவதாக இராணுவத்தின் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த 2009 மே மாதம் தொடக்கம் இவ்வாறு செலவிடப்பட்டதாகவும்,  முன்னாள் போராளிகள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட்டு வரும் நிலையில் இச்செலவினம் 6 கோடி 50 இலட்சமாக குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வளிக்கப்பட்ட 4500 முன்னாள் போராளிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் இம்மாத இறுதிக்குள் மேலும் 1500 பேர் விடுவிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ். வைத்தியசாலைக்கு 30 சக்கர கதிரைகளை ‘எயர்ரெல்’ நிறுவனம் வழங்குகிறது.

Jaffna_Hospitalஇன்று திங்கள் கிழமை யாழ்ப்பாணத்தில் தனது கிளையை ஆரம்பிக்கும் ‘எயர்ரெல்’ நிறுவனம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு 30 சக்கர கதிரைகளை அனபளிப்பு செய்கிறது.

யாழ். வைத்தியசாலை நிர்வாகம் யாழ். வணிகர் கழகத்தினரிடம் விடுத்திருந்த கோரிக்கையை அடுத்தே வணிகர் கழகத்தின் முயற்சியால் இச்சக்கர கதிரைகள் வழங்கப்படவுள்ளதாக தெரவிக்கப்படுகிறது. நிகழ்வில் இதனை ‘எயர்ரெல்’ நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி யாழ். வைத்தியசாலை பணிப்பாளரிடம் கையளிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் நகை வியாபாரியைக் கடத்தி கப்பம் பெற்ற இராணுவ மேஜரும் இருவரும் பிடிபட்டனர்.

கொழும்பில் தமிழ் நகை வியாபாரி ஒருவரைக் கடத்தி 50 மில்லியன் கப்பம் பெற்றவர்கள் கையும் மெய்யுமாக பிடிபட்டுள்ளனர். இராணுவ மேஜர் ஒருவரும், அவரது உதவியாளர்கள் இருவருமே இவ்வாறு பிடிபட்டுள்ளனர்.

இது குறித்து தெரியவருவதாவது – இந்த நகை வியாபாரி ஏற்கனவே இதே சந்தேக நபர்களால் கடத்தப்பட்டவர். இவர் 20 மில்லியன் ரூபாவை கப்பமாகச் செலுத்தியே விடுவிக்கப்பட்டிருந்தார். கடந்த வாரம் அவரது மகனை காரில் பாடசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் இதே குழுவினரால் மீண்டும் கடத்தப்பட்டார். அவரது மகனான சிறுவனை விடுவித்த கடத்தல் காரர் நகைக் கடை உரிமையாளரின் வீட்டிற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பெருந்தொகைக் கப்பம் கேட்டுள்ளனர்.

அவ்வளவு பெரிய தொகையை செலுத்தவது சாத்தியமில்லை எனவும், கடத்தப்பட்டவர் விடுவிக்கப்பட்டால் அதனைக் கொடுக்க முடியும் எனவும், அடுத்த நாளே பணத்தைக் கொடுக்க முடியும் எனவும் கடத்தப்பட்டவரின் வீட்டார் தெரிவித்துள்ளனர்.

இவ்விவகாரம் பொலிஸாருக்குத் தெரிய வந்தால் வர்த்தகர் கொலை செய்யப்படுவார் என்ற எச்சரிக்கையுடன் கடத்தப்பட்டவர் விடுவிக்கப்பட்டுள்ளார். இதன் பின்னர், நகை வியாபாரி கொழும்பிலுள்ள பிரபல மருத்துவமனையொன்றிலிருந்து கடத்தல் கும்பலுடன் தொடர்பு கொண்டு பணத்தைப் பெற்றுக்கொள்ள அங்கு வரும் படி தெரிவித்துள்ளார்.

இதே சமயம், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் சாதாரண உடையில் அங்கு காத்திருந்துள்ளனர். கடத்தில் குழுவைச் சேர்ந்த இராணுவ மேஜர் மருத்துவமனையின் மேல் மாடியிலிருந்த நகை வியாபாரியிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பும் போது அவர் கைது செய்யப்பட்டாh. கீழ் மாடியில் காத்திருந்த அவரது உதவியாளர்களும் கைது செய்யப்பட்டனா. வெளியில் வாகனம் ஒன்றில் காத்திருந்தவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் இருவர் தப்பியோடிவிட்டனர். அவ்விருவரையும் தேடிக் கண்டுபிடிக்கும் பணி தொடர்வதாக பொலிஸார் தெரிவித்தள்ளனர்.