தமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினர் வி தர்மலிங்கம் அவர்களின் 25வது நினைவு தின நிகழ்வுகள் யாழ். கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அவரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 நடைபெற்றது.
தர்மலிங்கமும் சக பாராளுமன்ற உறுப்பினருமான ஆலாலசுந்தரமும் தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) வினால் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களது படுகொலைகளுக்கு முன்னரும் பின்னரும் தமிழ் விடுதலை அமைப்புகள் அரசியல் படுகொலைகளை ஒரு அரசியலாகவே முன்னெடுத்தனர்.
தமிழரசுக் கட்சி (தமிழர் விடுதலைக் கூட்டணி) அல்பிரட் துரையப்பாவுடன் பிள்ளையார் சுழியிட்டு ஆரம்பித்து வைத்த அரசியல் படுகொலைக் கலாச்சாரம் அவர்களையே பலியெடுக்க முற்பட்டபோது அவர்களுக்குப் பிறந்த ஞானம் காலம் கடந்ததாகி விட்டது. இக்கலாச்சாரத்திற்கு வித்திட்ட இன்றைய அரசியல் தலைவர்களான இரா சம்பந்தன் மாவை சேனாதிராஜா ஆகியோர் இதுவரை தமது அரசியல் தவறுகளை ஏற்றுக் கொள்ளவும் இல்லை. அதற்காக வருந்தவும் இல்லை.
பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் ஆலாலசுந்தரம் ஆகியோரை படுகொலை செய்த தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவராக இருக்கின்ற செல்வம் அடைக்கலநாதன் இது தொடர்பாக மெளனமாகவே உள்ளார். இவர்களது படுகொலைகள் மட்டுமல்ல தமிழீழ விடுதலை இயக்கத்தினுள் இடம்பெற்ற உட்படுகொலைகள் அவர்களால் படுகொலை செய்யப்பட்ட ஏனைய இயக்கப் போராளிகள் பொது மக்கள் என இக்கொலைப் பட்டியலும் நீளமானது. இவை தொடர்பாக அவ்வமைப்பிற்கு தலைமை தாங்கும் ஜனநாயக வழிக்குத் திரும்பிய செல்வம் அடைக்கலநாதனுக்கும் தனது கடந்த காலம் பற்றிய பொறுப்புணர்வு உண்டு.
அல்பிரட் துரையப்பாவுடன் ஆரம்பமான இவ்வாறான அரசியல் பழிவாங்கல்கள் அதனை முன்னின்று நடாத்திய வே பிரபாகரனின் படுகொலையில் முடிவடைந்துள்ளது. வே பிரபாகரனின் படுகொலைக்குப் பின்னான 15 மாதங்களில் குறிப்பிடத்தக்கதான அரசியல் படுகொலைகள் நிகழவில்லை. இருப்பினும் இப்படுகொலை அரசியல் ஏற்படுத்திய அச்சம் இன்னமும் மக்கள் மனங்களில் இன்னமும் ஆறாத வடுவாக உள்ளது.
அமரர் வி தர்மலிங்கத்தின் நினைவு நிகழ்வு கௌரிகாந்தன் தலைமையில் மெளன அஞ்சலியுடன் ஆரம்பமானது. மலராஞ்சலி நிகழ்வும் நடைபெற்றது. புளொட் தலைவரும் அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் புதல்வருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழரசு கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் குலநாயகம், முன்னாள் தபாலதிபர் கணேசவேல், முன்னாள் கோட்டக்கல்வி அதிகாரி தற்பரானந்தன், முன்னாள் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வை பாலச்சந்திரன், வவுனியா நகரசபை எதிர்க்கட்சித் தலைவர் ஜி ரி லிங்கநாதன், வவுனியா நகரசபை உறுப்பினர்கள் சுரேந்திரன், குமாரசாமி மற்றும் பல முக்கியஸ்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இலங்கையின் இனவாதக் கட்சிகளாகக் கொள்ளப்படும் ஜேவிபி மற்றும் ஜாதி ஹெல உறுமய ஆகிய கட்சிகள் பெயருக்காகவேனும் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்காக மன்னிப்புக் கோரியுள்ளன. ஆனால் தமிழரசுக் கட்சியோ தமிழர் விடுதலை இயக்கமோ இதுவரை தங்கள் அரசியல் தவறுகளுக்காக தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்கவில்லை. தந்தையைப் பலிகொடுத்த தனயனின் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) இதுவரை தங்கள் அமைப்பு மேற்கொண்ட அரசியல் படுகொலைகளுக்கு மன்னிப்புக் கோரவில்லை.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி ஆனந்தசங்கரி தேசம் சஞ்சிகைக்கு வழங்கிய நேர்காணலில் அல்பிரட் துரையப்பாவின் படுகொலையைத் தூண்டியதற்காகவும் அவரது இறுதிக் கிரியைகளில் தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளாததும் தவறான முன்னுதாரணமாக அமைந்துவிட்டது என்று தனது மனவருத்தத்தை வெளிப்படுத்தி இருந்தார். ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் (ஈபிஆர்எல்எப்) தங்கள் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட அரசியல் படுகொலைக்களுக்காக பகிரங்கமாகவே மக்களிடம் மன்னிப்புக் கோரியிருந்தனர்.
தங்கள் தவறுகளுக்காக மன்னிப்புக் கேட்பதன் மூலம் ஏற்கனவே விடப்பட்ட தவறுகளை திருத்தவோ மாற்றி அமைக்கவோ அல்லது இழக்கப்பட்ட உயிர்களை மீளளிக்கவோ முடியாது. ஆனால் எதிர்காலத்தில் அவ்வாறான தவறுகள் விடப்படமாட்டாது என்ற நம்பிக்கையைப் பெறமுடியும். பாதிக்கப்பட்டவர்களுடன் மீளுறவை ஏற்படுத்தவும் வழியேற்படும்.
ஆனால் தங்கள் தவறுகளை ஏற்றுக்கொள்ளாமல் தொடர்ந்தும் தங்கள் அரசியலை நியாயப்படுத்துவதன் மூலம் எதிர்காலத்திலும் இவ்வாறான தவறுகளுக்கு இவர்கள் இடமளிப்பார்கள் என்பதும் அதனையும் அவர்கள் நியாயப்படுத்துவார்கள் என்றே கொள்ளவேண்டி உள்ளது.
தமிழ் அரசியல் தலைமைகள் முதலில் தங்கள் அரசியல் தவறுகளை தமிழ் மக்கள் முன் ஒப்புக்கொள்ளவும் அவ்வாறான தவறுகள் இனி இடம்பெறமாட்டாது என்ற உறுதிமொழியை தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டும். அவ்வாறான அரசியல் பொறுப்புணர்வை தமிழ் அரசியல் தலைமைகள் உருவாக்கினால் மட்டுமே தமிழ் மக்கள் இலங்கை அரசை அதன் தவறுகளுக்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என்பதை வலியுறுத்த முடியும். இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் தமிழ் மக்களின் எதிரியாகவே கருதப்பட்டு வரும் எதிரியாகவே உள்ள இலங்கை அரசிடம் தமிழ் மக்கள் நியாயம் கேட்பதற்கு உள்ள உரிமையைக் கூட தமிழ் தலைமைகள் தமிழ் மக்களுக்கு வழங்கவில்லை. அதனை வழங்கவும் தயாரில்லை.
ஆகவே தமிழ் தலைமைகள் தமிழ் மக்களிடையே உண்மையையும் மீளுறவையும் ஏற்படுத்தும் சுயமுயற்சியில் உடனடியாக இறங்க வேண்டும். கடந்த 30 ஆண்டுகால போராட்டத்தில் விடுதலை அமைப்புகளாலும் இலங்கை அரசபடைகளாலும் கொல்லப்பட்ட மற்றும் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் பெயர் விபரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும். ஆண்டுதோறும் இவர்களை நினைவுகூருவதற்கான நினைவுநாள் ஒன்று அறிவிக்கப்பட வேண்டும். கடந்த காலம் பற்றிய உண்மைகளை குழிதோண்டிப் புதைப்பதனால் தமிழ் மக்கள் மத்தியில் மீளுறவை ஏற்படுத்த முடியாது. உண்மைகளை வெளிக்கொணர்ந்து தவறுகளை ஏற்றுக்கொண்டு மட்டுமே மீளுறவை ஏற்படுத்த முடியும்.