kumary

kumary

யாழ் பல்கலைக்கழகத்தின் இலக்கையும் தொலைநோக்கு பார்வையையும் முன்னெடுத்துச் செல்லும் கல்வியியல் ஆளுமையும் முகாமைத்துவத் திறமையும் உடையவரை உபவேந்தராகத் தெரிவு செய்யுங்கள்! : த ஜெயபாலன்

Douglas_Devananda”யாழ் பல்கலைக்கழகத்தை நல்ல திசைநோக்கி முன்னெடுக்கக் கூடிய வாய்ப்புக்கள் தற்போது எட்டிவரும் நிலையில் இவ்வாறான சந்தர்ப்பங்களை ஒழுங்கு முறையில் சரிவரப் பயன்படுத்த நாம் முன்வர வேண்டும். யாழ் பல்கலைக்கழகத்தை மிகச் சிறந்த முறையில் முன்னேற்ற வேண்டும்.

யாழ் பல்கலைக்கழகம் கூடாதவர்களின் கூடாரமாக மாறிவிடக் கூடாது என்பதில் தான் மிகுந்த அக்கறை கொண்டு செயற்பட்டு வரும் நிலையில் இப்பல்கலைக்கழகம் தவறானவர்களது கரங்களில் சிக்கி விடக் கூடாது என்பதில் அனைவரும் விழிப்புடன் செயற்பட வேண்டும். யாழ் பல்கலைக்கழகத்தை ஒரு சிலர் தவறான வழிவகைகளில் தளமமைத்து செயற்பட எத்தணிக்கக் கூடும். அவர்கள் அவ்வாறு தவறான வழிவகைகளுக்குள் இப்பல்கலைக்கழகத்தை தள்ளி விடாமல் எமது பண்பாட்டு கலாசார விழுமியங்களைக் காப்பாற்றிக் கொண்டு இப்பல்கலைக்கழகத்தை எமது மக்களுக்கு பயன்தரக் கூடிய வகையில் முன்னேற்ற நாம் அனைவரும் தயாராக வேண்டும்.”

Senate_Members_Meet_DD_29Oct10டக்ளஸ் தேவானந்தா – பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் (ஒக்ரோபர் 29, 2010 இல் யாழ் பல்கலைக்கழக மூதவை உறுப்பினர்களைச் சந்தித்து உரையாடிய போது தெரிவிக்கப்பட்ட கருத்து.)

யாழ் பல்கலைக்கழகம் அதன் கல்வியியல் தரத்திலும் நிர்வாகத்திலும் மிகக் கீழ்நிலையை அடைந்துள்ளது மட்டுமல்ல ஒரு கல்விக் கட்டமைப்புக்கு இருக்கக் கூடிய அடிப்படைப் பண்புகளையே இழுந்துள்ளமை முன்னைய கட்டுரைகளில் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டு உள்ளது. அதன் தாக்கத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்துக்களே பிரதிபலித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கடந்த காலங்களில் உபவேந்தர்களாக பொறுப்பேற்றவர்கள் அதற்குரிய பொறுப்புணர்வுடன் செயற்படாமை பல்கலைக்கழகத்தின் இன்றைய நிலைக்கு முக்கிய காரணமாக உள்ளது. மேலும் பல்கலைக்கழகத்தின் துறைத்தலைவர்களும் அதற்கான பொறுப்பில் இருந்து தங்களை விடுவிக்க முடியாது.

யாழ் பல்கலைக்கழகத்தை சிறந்தமுறையில் முன்னேற்றுவதற்கான ஆளுமையான தலைமைத்துவத்தை தெரிவதற்கு ஒரு சிறந்த வாய்ப்பு எட்டியுள்ளது. நவம்பர் 09 2010ல் உபவேந்தர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான முடிவுநாள். அடுத்த பல்கலைக்கழகக் கவுன்சில் கூட்டத்தில் விண்ணப்பதாரிகள் – வேட்பாளர்களைத் தெரிவதற்கான தேர்தல் நாள் குறிக்கப்படும். யாழ் பல்கலைக்கழகத்தின் உபவேந்தருக்கான தெரிவு இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டு உள்ளது.

உபவேந்தரிடம் யாழ் பல்கலைக்கழகத்தின் எதிர்பார்பு:

யாழ் பல்கலைக்கழகம் தனது உபவேந்தருக்கான விண்ணப்பத்தை கோரும் அறிவிப்பில் உபவேந்தராக வருபவரிடம் எதனை எதிர்பார்க்கின்றது என்பதனை தெளிவாகவே வரையறுத்து உள்ளது. ”யாழ் பல்கலைக்கழகத்தின் தொலைநோக்குப் பார்வை கற்பித்தல், கற்றல், ஆய்வு, நிபுணத்துவம் என்பனவற்றின் முன்னணி மையமாக விளங்குவது. -The vision of the University of Jaffna is to be a leading centre of excellence in teaching, learning, research and scholarship. அதனுடைய முதற்கடமை தரமான உயர் கல்வியை வழங்கி பொதுவாக நாட்டுக்குரிய குறிப்பாக வடபகுதிக்குரிய தேவைசார்ந்த ஆய்வுகளை முன்னெடுத்து நாட்டுக்கு பணிசெய்ய வேண்டும். – Its priorities are serving the country to improve the quality of Higher Education and promote research relevant for the development of the country in general and the Northern Region in particular.”என யாழ் பல்கலைக்கழகத்தின் பார்வையும் இலக்கும் தெளிவாகவே வரையறுக்கப்பட்டு உள்ளது.

”பல்கலைக்கழகத்தினுடைய முகாமைத்துவத்தில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு, சீரான நிர்வாகம் என்பவை உபவேந்தருடைய பொறுப்பு. – The Vice Chancellor shall be responsible for maintaining transparency, accountability and good governance in the management of the affairs of the University. உபவேந்தர் கல்வியியல் தலைமைத்துவத்தை வழங்குவதுடன் நிர்வாகக் கொள்கைகளை உருவாக்குவது, அறிமுகப்படுத்துவது, அதனை நடைமுறைப்படுத்துவதற்கும் பொறுப்புடையவர். – The Vice Chancellor should provide academic leadership and is responsible for formulating, introducing and carrying out a streamlined management policy.” என உபவேந்தருடைய கடமையும் பொறுப்பும் தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது.

”உபவேந்தர் பல்கலைக்கழகத்தினுடைய இலக்கையும் தொலைநோக்கு பார்வையையும் முன்னெடுத்துச் செல்லும் கல்வியியல் ஆளுமையும் முகாமைத்துவத் திறமையும் உடையவராக இருக்க வேண்டும். – The Vice Chancellor shall be a person with a vision to carry forward the vision and goals of the University through his/her intellectual as well as managerial brilliance. அத்துடன் தேசத்தினுடைய தேவைகளை அடையாளம் கண்டு அதற்கு ஏற்ப முன்கூட்டியே உயர்கல்விக் கொள்கைகளை வகுக்கவும் பலப்படுத்தவும் ஆய்வு மற்றும் அபிவிருத்தி போன்ற பல்கலைக்கழகத்தின் கல்வியியல் செயற்பாடுகளை கால வரையறை மதிப்பீடுகளுக்கு அமைய மேற்கொள்ள வேண்டும். – In addition, the Vice-Chancellor is called upon to identify needs of the nation in terms of national policies of higher education and should be able to strengthen the time tested values for the advancement of the University through academic activities including research & development.” என உபவேந்தருடைய கடமையும் பொறுப்பும் மேலும் விரிவாகத் தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது.

மேற்குறிப்பிட்ட கல்வியியல் முகாமைத்துவப் பொறுப்புக்களை நிறைவேற்றக் கூடிய ஒருவரையே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கைக் கல்விச் சமூகம் குறிப்பாக தமிழ் கல்விச் சமூகம் எப்போதும் எதிர்பார்க்கின்றது.

யாழ் பல்கலைக்கழகத்தின் கல்வியியல் நிலை:

ஆனால் துரதிஸ்ட்டவசமாக யாழ் பல்கலைக்கழகத்தில் கடந்த காலங்களில் உப வேந்தர் பதவிக்கு வந்தவர்கள் பல்கலைக்கழகத்தின் இலக்கான ‘தரமான உயர் கல்வியை வழங்கி பொதுவாக நாட்டுக்குரிய குறிப்பாக வடபகுதிக்குரிய தேவைசார்ந்த ஆய்வுகளை முன்னெடுத்து நாட்டுக்கு பணிசெய்ய வேண்டும்’ என்பதையோ அல்லது பல்கலைக்கழகத்தின் தொலைநோக்குப் பார்வையான ‘கற்பித்தல், கற்றல், ஆய்வு, நிபுணத்துவம் என்பனவற்றின் முன்னணி மையமாக விளங்குவது’ என்பதனையோ பூர்த்தி செய்யத் தவறியுள்ளனர்.

கல்வியியல் தகமை, நிர்வாகம், நிதிக் கையாள்கை என யாழ் பல்கலைக்கழகத்தின் பல்வேறு அம்சங்கள் மிகத் தாழ்நிலைக்குச் சென்றுள்ளது. இதற்குக் காரணம் இலங்கையில் கடந்த 30 ஆண்டுகளாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் மட்டுமல்ல. தொண்ணூறுக்களின் நடுப்பகுதியின் பின் யாழ்ப்பாணத்தில் மட்டுப்படுத்தப்பட்ட யுத்தமே இடம்பெற்றது. தமிழ் சமூகத்தினை பாதுகாக்க வேண்டிய அதன் அறிவியல் கட்டமைப்புகளில் உள்ளவர்கள் அச்சமூகத்தின் சிந்தனைத் திறனைத் தாக்கி ஒட்டுமொத்த சமூகத்தையுமே சீரழிக்கின்ற ‘Tamillain-Barre’ Syndrome’ தான் யாழ் பல்கலைக்கழகத்தினை கீழ்நிலைக்கு இட்டுச்சென்றது என்பதனை முன்னைய கட்டுரையில் பார்த்துள்ளோம்.

மேலும் ”யாழ் பல்கலைக்கழகத்தின் கல்வியியல் வெற்றிடங்களை நிரப்புகின்ற போது முறைகேடான நியமனங்கள் இடம்பெற்றுள்ளது. பல ஆண்டுகளாக இதைச் சுட்டிக்காட்டிய போதும் இதனைச் சீர்செய்வதற்கு எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.” என ஓடிற்றர் ஜெனரல் எஸ் சுவர்னஜோதி தனது 2009ம் ஆண்டு ஓடிற் அறிக்கையில் குறிப்பிட்டதும் கவனிக்கத்தக்கது.

செப்ரம்பர் 09 2010ல் Firedrich Ebert Stifung என்ற ஜேர்மன் அமைப்பின் அணுசரணையில் இயங்கும் பருத்தித்துறை அபிவிருத்தி நிதியம், யாழ்ப்பாணத்தின் விவசாய மீன்பிடிப் பொருளாதாரத்தை அறிவியல் பொருளாதாரம் ஆக மாற்றுவது பற்றிய கலந்துரையாடலை யாழ்ப்பாணத்தில் நடாத்தியது. இதில் யாழ்ப்பாணத்தில் உள்ள கலிவியியலாளர்களும் மாணவர்களும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர். அங்கு உரையாற்றுகையில் ”அறிவு என்பது மற்றைய எல்லாத்துறைகளைக் காட்டிலும் செல்வத்தை உருவாக்கக் கூடியது” என்றார் ஆசிய பசிபிக் பகுதிகளுக்கான HSBC வங்கியின் மதிப்பீடு – அபாய முகாமையாளார் நிரஞ்சன் நடராஜா. யாழ்ப்பாணத்தில் வடக்கில் இயற்கை வளம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், மூளைவளம் நிறையவே உள்ளதைச் சுட்டிக்காட்டினார். அவர் மேலும் குறிப்பிடுகையில், ”பல்கலைக்கழகங்கள் சந்தைக்கு ஏற்ப கல்வியை வழங்கி பட்டதாரிகளை உருவாக்க வேண்டுமே ஒழிய, பல்கலைக்கழகங்கள் உருவாக்கும் பட்டதாரிகளை சந்தை உள்வாங்கிக் கொள்ளும் என்று எதிர்பார்க்க முடியாது” எனத் தெரிவித்தார்.

பல்கலைக்கழகம் என்பது பொருளாதாரச் சந்தையின் தேவையை மட்டும் பூர்த்தி செய்யும் ஒரு கல்வி நிறுவனமல்ல. பொருளாதாரச் சந்தையின் தேவையைப் பூர்த்தி செய்வது அதன் முக்கிய பாத்திரங்களில் ஒன்று. இல்லாவிட்டால் வேலையற்ற பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்ற புள்ளிவிபரம் மட்டுமே மிஞ்சும்.

அதேசமயம் சமூகத்தின் பல்வேறு அம்சங்களையும் ஆய்வுக்கு உட்படுத்துவதன் மூலம் சமூக இயக்கத்தில் – நாட்டின் இயக்கத்தில் பல்கலைக்கழகங்கள் காத்திரமான பங்களிப்பை மேற்கொள்கின்றன. இன்று அறிவியல் என்பது சமூகத்தின் நாட்டின் அனைத்து அம்சங்களிலும் செல்வாக்குச் செலுத்துகின்ற விடயமாக உள்ளது. இந்த அறிவியலின் மையமாக பல்கலைக்கழகங்களே உள்ளன. அதனால் பல்கலைக்கழகங்களின் முக்கியத்துவம் முன்னரைக் காட்டிலும் பல மடங்கு அதிகரித்து இருப்பதுடன் அதன் தேவை பரந்ததாகவும் உள்ளது.

பல நூற்றாண்டுகளுக்கு முன் சமூகம் எவ்வாறு இருந்தது என்ற வரலாற்றை ஆராய்வதுடன், அடுத்த சில 10 ஆண்டுகளில் சமூகம் எவ்வாறு மாற்றமடையும் விஞ்ஞர்னம், தொழில்நுட்பம், பொருளாதாரம், அரசியல் எனப் பல்வேறு அம்சங்களும் எவ்வாறான நகர்வை எடுக்கும், எவ்வாறான நகர்வை எடுக்க வேண்டும் என்பதை பல்கலைக்கழகங்களே ஆய்வு செய்ய வேண்டி உள்ளது. அதன் அடிப்படையில் அரசியலாளர்கள் முடிவுகளை மேற்கொள்கின்றனர்.  இவற்றுக்கான தகமையை யாழ் பல்கலைக்கழகம் கொண்டுள்ளதா என்பதற்கு கீழுள்ள மதிப்பீடு சாட்சியாகின்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 5000 மாணவர்கள் பட்டப்படிப்பையும் 600 மாணவர்கள் பட்டமேற்படிப்பையும் மேற்கொள்கின்றனர். பல்கலைக்கழக மாணவர்களைக் காட்டிலும் பல்கலைக்கழகம் செல்லாத மாணவர்களை தொழில் நிறுவனங்கள் கூடுதலாக விரும்புவதாக இலங்கையில் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் யாழ் பல்கலைக்கழகம் போன்ற பாராம்பரிய பல்கலைக்களகங்களின் கல்வியியல் பலவீனங்கள், தலைமைத்துவம் அற்ற தன்மை, நிர்வாகச் சீர்கேடுகள் என்பன தனியார் மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் வருகையைத் துரிதப்படுத்தும் நிலையும் இலங்கையில் ஏற்பட்டு வருகின்றது.

இலங்கையில் உள்ள 15 பல்கலைக்கழகங்களில் 2010 தர வரிசைப்படி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 10வது இடத்தில் உள்ளது. கொழும்பு பல்கலைக்கழகம் முதலாவது இடத்தில் உள்ளது. உலகத்தர வரிசையில் கொழும்புப் பல்கலைக்கழகம் 1903ம் இடத்தில் உள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 9309ம் இடத்தில் உள்ளது. (தகவல்: யூலை 2010: Rankings Web by the Cybermetrics Lab CSIC)

யாழ் பல்கலைக்கழகத்தின் உபவேந்தருக்கான தெரிவு:

இந்த நிலையில் யாழ் பல்கலைக்கழகத்தின் வீழ்ச்சியின் வேகத்தை மறுபக்கம் திருப்புவதற்கான வாய்ப்புகள் ஆராயப்பட வேண்டும். அதற்கு யாழ் பல்கலைக்கழகத்தின் இலக்கையும் தொலைநோக்கு பார்வையையும் முன்னெடுத்துச் செல்லும் கல்வியியல் ஆளுமையும் முகாமைத்துவத் திறமையும் உடைய ஒருவர் உபவேந்தராக வருவது முக்கியமானது.

தற்போது யாழ் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பதவிக்கு கீழ் வருவோர் தங்களை முன்நிறுத்தி உள்ளதாகத் தெரியவருகின்றது. இப்பட்டியல் இன்னமும் பல்கலைக்கழகத்தால் உறுதிப்படுத்தப்படவில்லை.

யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரிகள்:
பேராசிரியர் என் சண்முகலிங்கன் – B.Ed.(Colombo), M.A.(Jaffna), Ph.D.(Jaffna) – Vice-Chancellor
பேராசிரியர் என் ஞானகுமரன் – B.A.(Kelaniya), M.A.(Jaffna), Ph.D.(India) – Dean, Faculty of Arts
பேராசிரியர் எஸ் சத்தியசீலன் – B.A.(Peradeniya), M.A.(Jaffna), Ph.D.(Jaffna) – Dean, Faculty of Graduate Studies
பேராசிரியர் (செல்வி) வசந்தி அரசரட்ணம் – Department of Bio Chemistry
சிரேஸ்ட விரிவுரையாளர் ஆல்வாப்பிள்ளை – Faculty of Agriculture
தனேந்திரன் – Unuion Member with 2 A/L s

யாழ் பல்கலைக்கழகத்தைச் சாராத விண்ணப்பதாரிகள்:
பேராசிரியர் ரட்ன ஜீவன்ஹூல் – D.Sc. (Eng.) London, Ph.D. Carnegie Mellon, IEEE Fellow, Chartered Engineer
ராஜரட்னம் – (இங்கிலாந்தில் இருந்து சென்றுள்ள பொறியியல் பட்டதாரி. மேலதிக விபரம் தெரியவில்லை.)

இவர்களில் இருந்து மூவரைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் விரைவில் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது. தெரிவு செய்யப்படும் மூவரில் ஒருவரை ஜனாதிபதி உப வேந்தராக நியமிப்பார். பல்கலைக்கழகத்தில் இம்மூவரில் ஒருவராகத் தெரிவு செய்யப்படாதவர் உபவேந்தராகத் தெரிவு செய்யப்பட மாட்டார். பல்கலைக்கழகத்தில் உபவேந்தர் தெரிவுக்காக நடத்தப்படும் வாக்கெடுப்பில் பல்கலைக்கழக கவுன்சில் உறுப்பினர்கள் மட்டுமே வாக்களிக்கத் தகுதி உடையவர்கள். இப்பல்கலைக்கழகக் கவுன்சிலில் 12 உறுப்பினர்கள் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்களாகவும் (12 + 1) 13 உறுப்பினர்கள் பல்கலைக்கழகத்திற்கு வெளியே இருந்து, சமூகப் பொறுப்புடையவர்கள் University Grand Commission ஆல் நியமிக்கப்படுவர். இந்தப் 13 பேரினதும் நியமனத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சம்மதம் இருந்துள்ளது. மேலும் பல்கலைக்கழகத்தின் கவுன்சில் உறுப்பினர்களிலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் செல்வாக்கு உண்டு.

ஒவ்வொரு கவுன்சில் உறுப்பினரும் மூன்று வெவ்வேறு வேட்பாளருக்கு வாக்களிக்க முடியும். ஒருவருக்கு மட்டும் வாக்களித்து மற்றையவர்களுக்கு வாக்களிக்காமல் விடுவதன் மூலம் விருப்பு வாக்கை அளிக்க முடியும்.

கடந்த காலங்களில் வேட்பாளருக்கும் வாக்களிக்கத் தகுதி இருந்தது. இம்முறை போட்டியிடுகின்ற வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும் உரிமையில்லை எனத் தெரியவருகின்றது.

பல்கலைக்கழகத்தில் கடமையாற்றும் கவுன்சில் உறுப்பினர்கள்:

பேராசிரியர் என் சண்முகலிங்கம் – (Vice Chancellor),
பேராசிரியர் எஸ் சத்தியசீலன் – (Dean/Graduate Studies),
பேராசிரியர் கெ சிவபாலன் – (Dean/Medicine),
பேராசிரியர் கெ தேவராஜா – (Dean/Management Studies & Commerce),
கலாநிதி திருமதி சிவச்சந்திரன் – (Dean/Agriculture),
பேராசிரியர் என் ஞானகுமரன் – (Dean/Arts),
பேராசிரியர் கந்தசாமி – (Dean/ Science),
பேராசிரியர் செல்வி வி அரசரட்ணம் – (Rep of Senate),
பேராசிரியர் கெ குகபாலன் – (Rep of Senate),
கலாநிதி மங்களேஸ்வரன் (Dean/Business Studies, Vavuniya Campus),
திரு எஸ் குகனேசன் (Dean/Applied Science, Vavuniya Campus),
திரு ஆர் நந்தகுமார் – (Rector/Vavuniya Campus)

பல்கலைக்கழகத்தைச் சாராத University Grand Commission ஆல் நியமிக்கப்பட்ட செனட்சபை உறுப்பினர்கள்:

திரு கெ கணேஸ் (முன்னாள் யாழ் அரசாங்க அதிபர்.),
அருட்தந்தை கலாநிதி ஜஸ்ரின் பி ஞானப்பிரகாசம் (அடுத்த யாழ் பிஸப் ஆகக் கருதப்படுபவர்.),
திரு கெ கேசவன் (பிரபலமான சட்டத்தரணி – சென் பற்றிக்ஸ் பழைய மாணவர்.),
திரு ஏ திருமுருகன் (தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயத் தலைவர், சைவ மற்றும் சமூக வேகைகளில் ஈடுபட்டு உள்ளவர்.),
திரு ஏ தியாகராஜா (பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையின் இரசாயனப் பொறியியலாளராக இருந்தவர்.),
திரு ரி ராஜரட்ணம் (கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியின் உப அதிபராக இருந்தவர். பின்னர் SLIATE (Sri Lanka Institute for Advanced Technical Education) என்ற தொழில்நுட்பக் கல்லூரியை உருவாக்கியவர்.),
இன்ஜினியர் எம் ராமதாசன் (Euroville Engineers and Constructors (PVT) Ltd இன் முகாமைத்துவ இயக்குநர்.),
திருமதி என் குணபாலசிங்கம் (யாழ் பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற ஆங்கில ஆசிரியை.),
திரு கெ தேவேந்திரன் (Jaffna Multi Purpose Cooperative Society – MPCS க்கு பொறுப்பானவர்.),
திருமதி சரோஜா சிவச்சந்திரன் (மிகவும் அறியப்பட்ட பெண்ணிலைவாதி. சர்வதேச அரங்குகளில் பேச்சாளராக அழைக்கப்பட்டவர். இலங்கைத் தேசிய சமாதான கவுன்சிலின் உறுப்பினர்.)
திரு எம் சிறிபதி (பாடசாலை அதிபர்),
சுசிலா சாரங்கபாணி (ஓய்வுபெற்ற ஆசிரியை. சமாதான நீதவான்),
டொக்டர் எஸ் ரவிராஜ் (யாழ் போதனா வைத்தியசாலை சிரேஸ்ட சத்திரசிகிச்சை மருத்துவர்)

கல்வியியல் ஆளுமையினதும் முகாமைத்துவத் திறமையினதும் அடிப்படையில் உபவேந்தர் தெரிவு இடம்பெற வேண்டும்:

யாழ் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் என் சண்முகலிங்கம்  அங்கு நீண்டகாலம் பணியாற்றிய துறைத் தலைவர்கள் என் ஞானகுமரன், எஸ் சத்தியசீலன் ஆகியோர் யாழ் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் தெரிவுக்கு போட்டியிடுகின்றனர். இப் பல்கலைக்கழகத்தை அமைச்சர் குறிப்பிட்டது போல் மிகச் சிறந்த முறையில் முன்னேற்றுவதற்கான வாய்ப்பு அவர்களுக்கு பல ஆண்டுகளாக இருந்தது. ஆனால் அவர்கள் முன்னேற்றுவதற்கு மாறாக பல்கலைக்கழகத்தினைச் சீரழிப்பதற்கே பல்வேறு வழிகளிலும் பங்கேற்று இருந்தனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இருந்து உபவேந்தர் பதவிக்குப் போட்டியிடுகின்ற பேராசிரியர்கள் பல்கலைக்கழகத்தின் துறைத் தலைவர்களாக இருந்துள்ளனர். அவர்களுடைய பீடங்களின் நிலையும் மோசமானதாகவே உள்ளது.

இக்கட்டான காலகட்டத்தில் யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து கற்பித்தோம் என்ற தகுதி மட்டும் பல்கலைக்கழகத்தை சிறந்தமுறையில் முன்னேற்றப் போதுமானதல்ல. இந்த இக்கட்டான காலகட்டத்தில் தங்களுக்கு இருந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இவர்கள் அதிகாரத் துஸ்பிரயோகமும் பாலியல் துஸ்பிரயோகமும் நிதி, நிர்வாகத் துஸ்பிரயோகமுமே செய்துள்ளனர். வடமாகாணத்தின் குறிப்பாக யாழ்ப்பாணத்தின் கல்விநிலை இவ்வளவு கீழ்நிலைக்கு கொண்டு செல்லப்பட்டமைக்கு இவர்களுக்கு முக்கிய பொறுப்பு உண்டு.

கடந்த காலங்களில் இருந்த வாய்ப்பையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி யாழ் பல்கலைக்கழகத்தைச் சுற்றி இறுக்கமான தடுப்பை போட்டு, அப்பல்கலைக்கழகத்திலேயே படித்து, அங்கேயே பட்டம் பெற்று, அங்கேயே வேலையையும் பெற்று விடுகின்றனர். அதற்குள் வெளியே இருந்து யாரையும் அனுமதிக்க விடாப்பிடியாக மறுத்தே வருகின்றனர். வெளியார் நுழைந்தால் தங்கள் பலவீனங்கள் அம்பலமாகிவிடும் என்ற அச்சத்தில் உள்ளேயே சமரசம்செய்து உள்ளேயே நியமனங்களையும் மேற்கொள்கின்றனர். அதனால் யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து உப வேந்தர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளவர்களின் கல்வியியல் தகமையும் அனுபவமும் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதாகவே உள்ளது. இவ்வாறான பலவீனங்களால், இப்பதவிக்காக இவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தயவை மட்டுமே நம்பி தங்கள் விசுவாசத்தை அமைச்சருக்கு வெளிப்படுத்தி வருகின்றனர். இவர்களை அமைச்சர் தனக்கு விசுவாசமானவர்கள் என்ற அடிப்படையில், தனக்குக் கட்டுப்படக் கூடியவர்கள் என்ற அடிப்படையில் ஒரு தவறான தெரிவுக்கு செல்வது தமிழ்க் கல்விச் சமூகத்தின் எதிர்காலத்திற்கு செய்யப்படும் மிகப்பெரும் அநீதியாக அமையும்.

மேலும் பல்கலைக்கழகக் கவுன்சிலில் உள்ள 25 உறுப்பினர்களுக்கும் தமிழ்க் கல்விச் சமூகம் பற்றிய முக்கிய பொறுப்பு உள்ளது. இந்த உப வேந்தர் தெரிவுக்கு வாக்களிக்கும் தகுதி பெற்றுள்ள கவுன்சில் உறுப்பினர்களில் 12 பேர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கல்வியியலாளர்களாகவும் 13 பேர் சமூகப் பொறுப்புடையவர்களாகவும் உள்ளனர். சமயத் தலைவர்கள், பாடசாலை அதிபர்கள், சமூகத்தின் முக்கிய பதவிகளில் உள்ளவர்கள், பெண்ணிலைவாதி என பன்முகத்தன்மையினதாக இந்தப் பல்கலைக்கழகக் கவுன்சில் உள்ளது. இவ்வாறான மதிப்புக்குரிய மிக உயர்ந்த பொறுப்புடையவர்களினால் தெரிவு செய்யப்படும் பல்கலைக்கழக உபவேந்தர் அந்த மதிப்பையும் பொறுப்புணர்வையும் பிரதிபலிக்க வேண்டும்.

 அறியப்பட்ட பேய்களும் அறியக் கூடிய தேவதைகளும்:

கடந்த 30 ஆண்டுகால யுத்தத்தில் சீரழிந்துள்ள சமூகத்திற்கு எஞ்சியுள்ள ஒரே நம்பிக்கை கல்வி. தமிழ் மக்களுக்கு அந்தக் கல்வியை வழங்குகின்ற உயர்ந்த ஸ்தாபனமான யாழ்பாணப் பல்கலைக்கழகம் கல்விச் சமூகத்திற்கு முன்னுதாரணமாக, தலைமை ஸ்தாபனமாக விளங்க வேண்டும். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்குள் உள்ள ஒருவரையே மீண்டும் உப வேந்தர் ஆக்க வேண்டும் என்ற நோக்கில் “Known devil is better than unknown angel” போன்ற பரப்புரைகள் மேற்கொள்ளப்படுகின்றது. ஒருவகையில் இந்த கவுன்சில் உறுப்பினர்களே யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து உப வேந்தர் பதவிக்கு நிற்பவர்களை ‘அறியப்பட்ட பேய்கள்’ என ஏற்றுக்கொள்கின்றனர். இன்று இணைய வலையில் உலகம் மிகவும் சுருங்கிவிட்டது. உலகின் ஒரு மூலையில் இருந்து கொண்டு மறுமூலையில் உள்ள ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியரைப் பற்றி அறிந்து கொள்வதற்கு இணையமும் தொலைபேசியும் சரியான தொடர்புகளும் போதுமானது. அதனால் நீங்கள் அறிய விரும்பினால், ‘அறியாத தேவதைகள்’ என்பதற்கு இடமில்லை. அகவே ‘அறியப்பட்ட பேய்கள்’ என நீங்கள் அடையாளம் கண்டவர்களை – தமிழ் மக்கள் அடையாளம் கண்டவர்களை முற்றாக நிராகரியுங்கள்.

‘அறியப்பட்ட பேய்கள்’ ஆக அடையாளம் காணப்பட்டவர்கள் தெரிவுசெய்யப்படுவது பல்கலைக்கழகக் கவுன்சிலின் மதிப்பீட்டை வெகுவாகப் பாதிக்கும். சமயத் தலைவர்களும் பெண்ணிலை வாதியும், பாடசாலை அதிபர்களும், கல்வியியல் மேதைகளும், உயர் பதிவியில் உள்ளவர்களும் இணைந்து இதுவரை பல்கலைக்கழகத்தைச் சீரழித்தவர்களை, பாலியல் துஸ்பிரயோகங்களுக்காக அறியப்பட்டவர்களை, உரிய கல்வித் தகமை அற்றவர்களை, நிர்வாகத்திறன் அற்றவர்களை உப வேந்தராக வர அனுமதிப்பது ஒரு போதும் நியாயப்படுத்தப்பட முடியாது. இது தமிழ் கல்விச் சமூகத்திற்கு இழைக்கப்படும் பாரிய அநீதி. அதற்கு யாழ் பல்கலைக்கழகக் கவுன்சில் காரணமாக இருக்கக் கூடாது.

உப வேந்தருக்காக போட்டியிடுபவர்கள் கவுன்சில் உறுப்பினர்களின் நீண்ட கால நண்பர்களாக இருக்கலாம். நெருக்கமானவர்களாக இருக்கலாம். ஆனால் உங்களின் தெரிவு தமிழ்க் கல்விச் சமூகத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கின்ற தெரிவு. அதனால் நட்புக்கும் நெருக்கத்திற்கும் அங்கு இடம்கொடாமல் தெரிவு செய்யப்படுபவர் பல்கலைக்கழகக் கவுன்சிலின் மதிப்பையும் கௌரவத்தையும் நிலைநிறுத்துபவராக இருக்க வேண்டும்.

அமைச்சர் தேவானந்தாவின் பொறுப்பு:

Douglas_Devanandaதமிழ்க் கல்விச் சமூகத்தின் எதிர்பார்ப்பை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பிரதிபலிக்க வேண்டும். அவ்வாறு தமிழ்க் கல்விச் சமூகத்தின் எதிர்பார்ப்பை யாழப்பாணப் பல்கலைக்கழகம் பிரதிபலிக்காமையாலேயே யாழ் பல்கலைக்கழகம் தொடர்பான விவாதம் பொதுத்தளத்திற்கு வந்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தருக்கான தெரிவு பற்றிய விவாதம் இதுவரை இவ்வாறான ஒரு பொதுத் தளத்திற்கு வரவில்லை. இம்முறையே இது பரந்த பொதுத்தளத்திற்குக் கொண்டுவரப்பட்டு உள்ளது. எதிர்காலத்தில் ஒரு மூடிய சமூகமாக யாழ் பல்கலைக்கழகம் இருக்க முடியாது என்பதையே இது காட்டி நிற்கின்றது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்குறிப்பிட்டது போல், ”யாழ் பல்கலைக்கழகத்தை மிகச் சிறந்த முறையில் முன்னேற்ற வேண்டும்” என்று அவர் விரும்பினால் அதனைச் சாதிக்கக் கூடிய, பல்கலைக்கழகத்தின் இலக்கையும் தொலைநோக்குப் பார்வையையும் முன்னெடுத்துச் செல்லக்கூடிய பரந்த கல்வியியல் தகமையும் இலங்கையிலும் சர்வதேச பல்கலைக்கழகங்களிலும் பணியாற்றிய அனுபவமும் ஆளுமையும் உடைய ஒருவரே அப்பொறுப்பான பதவிக்குக் கொண்டு வரப்படவேண்டும்.

கல்வியை முன்னிலைப்படுத்தி தமிழ் மக்களின் விடுதலைக்காய் போராட ஆரம்பித்த அமைச்சரின் கைகளில் தற்போது அம்மக்களின் கல்வியின் எதிர்காலத்தைப் பற்றி முடிவெடுக்கின்ற முக்கிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அதற்குத் தகுதியானவர் யார் என்பதும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவிற்கு மிக நன்றாகவே தெரியும். இந்தத் தெரிவை அமைச்சர் டக்ளஸ் தேவானந்த ‘கல்வித் தகமையினதும் நிர்வாகத் திறனினதும் அடிப்படையில்’ மிகப்பொறுப்புடன் எடுப்பார் என்று தமிழ் மக்களின் கல்வியின்பால் அக்கறை கொண்டுள்ள நலன்விரும்பிகள் எதிர்பார்க்கின்றனர்.

அண்மைக் காலமாக தேசம்நெற் இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பாக வெளியிடப்பட்ட பதிவுகள்:

சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல பெரிய பள்ளிக்கூடமே! : த ஜெயபாலன்

‘‘எல்லாம் அல்லது பூச்சியம் என்ற கொள்கை எம்மைக் கைவிட்டது! ஆராய்ச்சியாளராகிய நாம் உண்மைக்கு மட்டுமே அடிபணிய கடமைப்பட்டு உள்ளோம்.’’ பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் உடனான நேர்காணல்

பல்கலைக்கழகங்கள் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. யாழ் பல்கலைக் கழகத்திடமும் சமூக மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது: நிஸ்தார் எஸ் ஆர் மொகமட்

இன்று Aug 29 -வடக்கு – கிழக்கு – மலையக தமிழ் பேசும் மக்களின் கல்வியின் எதிர்காலம் – பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் உடன் சந்திப்பும் கலந்துரையாடலும்

மாற்றத்திற்கான நம்பிக்கையுடன் பேராசிரியர் ஹூல் யாழ் செல்கின்றார்! : த ஜெயபாலன்

‘Tamillain-Barre’ Syndrome’ மும் தமிழ் சமூகத்திற்கான புதிய அரசியல் கலாச்சாரத்தின் அவசியமும் : த ஜெயபாலன்

யாழ் பல்கலைக்கழகம் – முப்பத்தாறு வருடங்கள் – முழுமையான சீரழிவு : நட்சத்திரன் செவ்விந்தியன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் யை ஆதரிப்போம்! : ரி கொன்ஸ்ரன்ரைன்

தவித்துக் கொண்டிருக்கும் நமது சமூகத்திற்காய் உழைப்போம்: யாழ் பல்கலை. மாணவர் ஒன்றியம்

பேராசிரியர் கைலாசபதி: ஒரு பெரு விருட்சமும் சில சிறு செடிகளும் : கரவை ஜெயம்

‘யாழ் பல்கலைக்கழக மாணவிகள் தற்கொலை முயற்சி!’ யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் – அரச அதிபர் சுயாதீன விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும். : த ஜெயபாலன்

யாழ் பல்கலையின் உபவேந்தர் தெரிவுக்கு பேராசிரியர் ஹூலுக்கு ஆதரவாக மேற்கொண்ட கையொப்ப ஆவணம் அமைச்சர் தேவானந்தாவிடம் கையளிக்கப்பட்டது : த ஜெயபாலன்

”யாழ் பல்கலைக்கழகம் தொடர்பான தேசம்நெற் கட்டுரைகளுக்கும் எனக்கும் தொடர்பில்லை.” பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல்

நிதி மோசடியுடன் தொடர்புபட்ட காரணத்தினால் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது

TNA_Logoநிதி மோசடி காரணமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எந்நேரமும் பொலிஸாரினால் கைது செய்யப்படலாம் என தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கடந்த யுத்தத்தின் போது காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்துத் தருவதாக பொய்யான வாக்குறுதிகளை அளித்து காணாமல் போனவர்களின் உறவினர்களிடம் பெருந்தொகையான பணத்தை குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பெற்றுக் கொண்டதாகவும். மோசடிக் கும்பல் ஒன்றுடன் அவருக்குத் தொடர்புள்ளதெனவும் புலனாய்வு விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தில் மேஜர் ஜெனரல் பதவியிலுள்ள ஒருவரே இம்மோசடியின் பிரதான நபர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது தொலைபேசி இலக்கங்களை காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு குறிப்பிட்ட கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் வழங்கியுள்ளதாகவும், காணாமல் போனவர் ஒருவரின் உறவினர் இத்தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொண்டு மூன்று இலட்ச ரூபா வரை கொடுத்துள்ளார் எனவும், இன்னொருவர் 75 ஆயிரம் ரூபா கொடுத்துள்ளார் எனவும், இந்த மேஜர் ஜெனரலின் தொலைபேசி இலக்கம் பின்னர் செயலிழந்துவிட்டதாகவும் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என வவுனியா மற்றும், மன்னாருக்கான பொலிஸ் மாஅதிபர் பிரசன்ன நாணயக்கார தெரிவித்தள்ளதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் இன்றைய ‘தினமுரசு’ நாளிதழ் இச்செய்தியை வெளியிட்டுள்ளது.

கிளிநொச்சி வீடமைப்புத் திட்டங்களில் சிக்கல்களை எதிர்கொள்ளும் மக்கள்.

Rebuilding_Buildingsகிளிநொச்சி மாவட்டத்தில் பல நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் வீடமைப்புத் திட்டப் பணிகளை உரிய காலத்தில் நிறைவேற்றுவதில் சிக்கல்கள் தேன்றியுள்ளது. இதனால் வீட்டுத்திட்டங்களைப் பெற்ற பயனாளிகள் பெரும்
மனஉளைச்சல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இவ்வீடமைப்பிற்காக கட்டம் கட்டமாக வழங்கப்பட்டு வரும் பணம் சீரான முறையில் வழங்கப்படாமை, மேசன் வேலை, தச்சு வேலைகளுக்கான தொழிலாளர்கள் தட்டுப்பாடு, மணல் உட்பட்ட மூலப்பொருட்களைப் பெற்றுக்கொள்வதிலுள்ள சிரமம் போன்றவற்றின் காரணமாக இந்நிலை தேன்றியுள்ளது. தற்போது பருவ மழை பெய்யத் தொடங்கியுள்ள நிலையில் உரிய காலத்தில் இவ்வீடமைப்பை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் சம்பந்தப்பட்ட மக்கள்
பாதிப்படைந்து ள்ளனர். இதேவேளை, சேதமுற்ற வீடுகளைத் திருத்தியமைக்கும் பணிகளும் அதில் தொடர்புபட்ட நிறுவனங்கள்,  அதிகாரிகளின் அசமந்தப் போக்குகளால் இழுபடும் நிலையும் தோன்றியுள்ளது.

நேற்றைய ‘சூரன்போர்’ நிகழ்வுகளில் நால்வர் காயம். ஓருவர் மரணம்.

Sooran_Boorநேற்று வியாழக்கிழமை யாழ்.செல்வச்சந்நிதி ஆலயத்தில் இடம்பெற்ற ‘சூரன்போர்’ நிகழ்வில் கற்பூரச்சட்டிக்குள் விழுந்து ஐந்து போர் காயமுற்றனர். அதிகளவான சன நெருக்கடி காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு விழுந்தவர்களில் நான்கு பேருக்க சிறு காயங்களும், ஒருவருக்கு படுகாயமும் எற்பட்டுள்ளது. காயமுற்றவர்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நேற்று நல்லூர் கந்தசுவாமி கோவிலில் நடைபெற்ற ‘சூரன்போர்’ நிகழ்வின் போது பாடசாலை மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி மரணமானார். நல்லூர் ஆலயத்தில் நடைபெற்ற ‘சூரன்போர்’ நிகழ்வில் ஏற்பட்ட சனநெரிசல் காரணமாக இம்மாணவன் கேணிக்குள் தவறி விழுந்ததால் இச்சம்பவம் ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் கந்தர்மடம் பழம் வீதியைச் சேர்ந்த தர்மகுலசிங்கம் கனுசன் என்ற மாணவனே இவ்வாறு நீரில் முழ்கி மரணமானவராவார். நேற்று யாழ் மாவட்ட ஆலயங்களில் இடம்பெற்ற ‘சூரன்போர்’ நிகழ்வில் அதிகளவிலானவர்கள் கலந்து கொண்டதால் சனநெரிசல்கள் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அளவெட்டியில் இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு!

யாழ். அளவெட்டியில் இளைஞர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டினால் படுகாயமடைந்துள்ளார். அளவெட்டி பிள்ளையார் கோவில் முன்றலில் வைத்து நேற்று மாலை 5.30 மணியளவில் குறிப்பிட்ட இளைஞர் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார். இதனால் படுகாயமடைந்த இளைஞர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அளவெட்டி வடக்கைச் சோந்த கிருஸ்ணமூர்த்தி சஞ்சீவ் என்பவரே தப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி காயமடைந்தவராவார். தனிப்பட்ட காரணங்களுக்காக இச்சம்பவம் இடம்பெற்றிருப்பதாக காயமடைந்த இளைஞரின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் குறித்து இராணுவத்தினரும் பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாவற்குழியிலுள்ள வீடமைப்பு அதிகாரசபைக்கு சொந்தமான காணியில் சிங்கள மக்கள் அனுமதியின்றி கொட்டில்களை அமைத்து குடியேறியுள்ளனர்.

தென்பகுதிகளிலிருந்து வந்து யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் தங்கியிருந்த சிங்கள மக்கள் நேற்று நாவற்குழியிலுள்ள தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்குச் சொந்தமான காணியில் அத்துமீறி குடியேறியுள்ளனர். அக்காணியில் குடில்களை அமைக்கும் நடவடிக்கையிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தங்களை மீள்குடியேற்றுமாறு கோரி யாழ்ப்பாணத்திற்கு வந்து இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் அதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை எனவும், தங்கள் ஊர்களிலிருந்து கொண்டுவந்த மரந்தடிகளைக் கொண்டே தாங்கள் கொட்டில்களை அமைப்பதாகவும், யார் தடுத்தாலும் இங்கேயே தாம் குடியிருக்கப் போவதாகவும் இவர்கள் தெரிவித்துள்ளனர். இவர்களால் நேற்று மாலைக்குள் சுமார் 20 இற்கும் மேற்பட்ட கொட்டில்கள் அமைக்கபட்டு விட்டதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து நேற்று கருத்துத் தெரிவித்த யாழ்.அரசஅதிபர் திருமதி. இமெல்டா சுகுமார் இம்மக்கள் நாவற்குழியிலுள்ள வீடமைப்பு அதிகாரசபைக்குச் சொந்தமான காணியில் அத்துமீறி குடியமர்ந்துள்ளமை குறித்து தமக்கு எதுவும் தெரியாது எனக் குறிப்பட்டார். அது வீடமைப்பு அதிகாரசபைக்கு சொந்தமான காணி என்பதால் அவர்கள்தான் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் யாழ். மாவட்ட பொது முகாமையாளர் ஜே.நோயல் ஜெயச்சந்திரன் இது குறித்து தெரிவிக்கையில் சிங்கள மக்கள் இவ்வாறு அக்காணியில் குடியேற முயற்சிப்பதை நேற்றுப் பிற்பகல் அங்கு சென்று நேரில் அவதானித்ததாகவும், தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்கு சொந்தமான அக்காணியில் எவ்வித அனுமதியுமின்றி அவர்கள் கொட்டில்களை அமைத்து வருகின்றமை குறித்து வீடமைப்பு அதிகாரசபையின் கொழும்புத் தலைமையகத்திற்கு தான் அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

நாவற்குழியில் தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்கு சொந்தமாக 90 எக்கர் காணி உள்ளது. அதில் 30 ஏக்கர் காணி ஏற்கனவே 300 வீட்டுத்திட்டத்திற்கு வழங்கப்பட்டு விட்டது. ஏனைய 60 ஏக்கர் அதிகாரசபையின் பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

”கிளிநொச்சியில் ஆடைத் தொழிற்சாலை அமைக்கப்பட்டு ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.” – இ. அங்கஜன்

Angajan_Ramanathanகிளிநொச்சியில் ஆடைத்தொழிற்சாலை ஒன்று அமைக்கப்படவுள்ளதாகவும், இதில் ஆயிரம் இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் எனவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளரான இ.அங்கஜன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் ஆடைத்தொழிற்சாலை ஒன்றை அமைப்பதற்காக 10 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இத்தொழிற்சாலைக்கான அடிக்கல்லை நாட்டி வைத்ததாகவும், வடமாகாண அபிவிருத்திப்பணிகளில் இந்த ஆடைத்தொழிற்சாலை முக்கிய இடத்தை வகிக்கும் எனவும் அங்கஜன் தெரிவித்தார். இத்தொழிற்சாலையில் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள புலி உறுப்பினர்களுக்கும் தொழில்வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் அமையவுள்ள இந்த ஆடைத் தொழிற்சாலையை இயக்குவதற்கு ‘றை ஸ்ரார் அப்பறெல்’ நிறுவனத்தின் தலைவர் குமார் தேவபுர முன்வந்துள்ளதாகவும் அங்கஜன் தெரிவித்துள்ளார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள் யாழ்ப்பாணத்தில் இன்று ஆரம்பம்.

படிப்பினைகள் மற்றும், ஜனாபதிபதியினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகள் இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியுள்ளன. ஒவ்வொரு பகுதி மக்களும் இதில் கலந்து கொண்டு தங்கள் சாட்சியங்களை அளிப்பதற்காக பிரிவு பிரிவாக இதன் அமர்வுகள் இடம்பெறுகின்றன.

யாழ்.பிரதேச செயலகப் பிரிவு மக்களுக்காக இன்று காலை 9 மணிமுதல் 11 மணிவரை குருநகர் கலாசார மண்டபத்திலும், நல்லூர் பிரதேச செயலகப் பிரிவு மக்களுக்காக முற்பகல் 11.30 மணி தொடக்கம் 1 மணிவரை அரியாலை சரஸ்வதி சனசமூகநிலையத்திலும், கோப்பாய் பிரதேச செயலகப் பிரிவு மக்களுக்காக பிற்பகல் 2மணி தொடக்கம் மாலை 5மணிவரை நீர்வேலி திருமுருகன் திருமண மண்டபத்திலும் நல்லிணக்க ஆணைக்கழுவின் அமர்வுகள் இடம்பெறவுள்ளன.

இந்த அமர்வுகளில் தங்கள் சாட்சியங்களை அளிப்பதற்கு 80 வரையானோர் பதிவு செய்துள்ளதாகவும், இவ்வாறு பதிவு செய்யாதவர்களும் தங்கள் சாட்சியங்களை வழங்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் 110 பாடசாலைகள் தரமுயர்த்தப்படவுள்ளன.

இலங்கை முழுவதும் 1000 பாடசாலைகளை தரமுயர்த்துவது தொடர்பான நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதன் அடிப்படையில் வடக்கு மாகாணத்தில் 110 பாடசாலைகள் தரமுயர்த்தப்படவுள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கூட்டம் நேற்று புதன்கிழமை யாழ்.இந்துக் கல்லூரியில் நடைபெற்றது. இதன்போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.

இவ்வேலைத்திட்டம் 2012ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரையான காலத்திற்குட்பட்டதாக அமையும் எனவும், ஒவ்வொரு பாடசாலைக்கும் ஆகக் குறைந்த தொகையாக 5 மில்லியன் ரூபா தொடக்கம் 60 மில்லியன் ரூபா வரைக்கும் நிதி ஒதுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவீன கல்வி முறைகளை சகல மாணவர்களுக்கும் கிடைக்கச் செய்தல், கிராமப்புற மாணவர்களுக்கு சமவாய்ப்பினைப் பெற்றுக்கொடுத்தல் என்பன இத்திட்டத்தின்’ நோக்கம் என நேற்றைய கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் பாடசாலைகளின் அதிபர்கள், பாடசாலை அபிவிருத்திச்சங்கச் செயலாளர்கள் முதலானோர் கலந்து கொண்டு கருத்துக்களைத் தெரிவித்தனர். மற்றும் இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, வடமாகாண கல்விப் பணிப்பாளர் ப.விக்னேஸ்வரன். கல்வி அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன், ஆகியோரும் கலந்து கொண்டனர்.

முன்னர் வடக்கில் 90 பாடசாலைகளை இத் தரமுயர்த்தலுக்காக தெரிவு செய்வதாக அறிவிக்கபட்டிருந்தமையும் வடமாகாண ஆளுநரின் கோரிக்கைக்கு அமைய 110 பாடசாலைகளைத் தரமுயர்த்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

விடுவிக்கப்பட்ட முன்னாள் புலிஉறுப்பினர்களின் நலன்களுக்காக குழுக்கள் அமைக்கப்படவுள்ளன.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது படையினரிடம் சரணடைந்து புனர்வாழ்வு முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் சமூகத்தோடு இணைந்து இயல்பு வாழ்வு வாழ்வதற்கான வழிவகைகளை மேற்கொள்வதற்கென தேசிய ரீதியிலான தலைமையின் கீழ் குழுக்கள் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்குழுக்களில் மாவட்ட அரசாங்க அதிபர்கள், சமூகத் தலைவர்கள், சமயத் தலைவர்கள் உள்ளடக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளான இவர்கள் சமூகத்துடன் இணைந்து இயல்பான வாழ்க்கைக்குத் திரும்புவதற்கான சகல உதவிகளையும் இக்குழுக்கள் முன்னெடுக்கம் எனவும். இக்குழுக்களின் செயற்பாடுகளுக்கென பல கோடிரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுசந்த ரணசிங்க நேற்று வியாழக்கிழமை யாழப்பாணத்தில் வைத்து தெரிவித்தார்.

இறுதி யுத்தத்தின் போது படையினரிடம் சரணடைந்த 12 ஆயிரம் முன்னாள் போராளிகளில் 5,221 பேர் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் 594 பேர் சிறுவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.