மிகக் கனத்த மனத்துடன் இக்கடினமான செய்தியை எழுதும் துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறேன். குற்றாலம் என்றவுடன் எமக்கெல்லாம் மனதில் குதித்தோடும் எண்ணம் – இந்தியாவில் உள்ள குளுமையான இடமான குற்றாலமும் அதில் சில்லென்று ஓடும் அருவியும் மலையும் அதன் சூழலும். ஆனால் அதே குளுமையுடனும் அதே பெயரில் வாஞ்சையுடனும் எம்மிடையே ஒரு மாமனிதன் நேற்றுவரை நடமாடினான். ஆனால் அம்மாமனிதன் இன்று எம்முடன் இல்லை. (தோற்றம் 16 05 1966 – மறைவு 28 09 2010)
நாட்டியப்பாடலில் “இமயம்” என்று அழைக்கப்படக்கூடிய குற்றாலம் வெங்கடாச்சலம் நாகராஜன் செவ்வாய் (28 09 10) 6.30 மாலையில் தனது இறுதிமூச்சை நிறுத்திக் கொண்டார்.
தன்னிகரற்ற ஒரு பாடகன் பாடலாசிரியன் இசையமைப்பாளன். இம்மூன்றும் ஒருசேர அமைவது மிக அபூர்வம். ஆனால் இவை அனைத்தின் சொந்தக்காரன் கற்றாலம் நாகராஜன். இவரது பாடலில் மயங்காதவரே இலர். சிறுவர்களில் இருந்து முதியோர்வரை இவரது இசைப் பிரியர்கள்.
ஒருமுறை பழகினால் காந்தம் மாதிரி இழுக்கும் அதீத மனோபாவம் இவரது உன்னத மனித குணத்தால் இவரது குறைகளை எல்வாம் மறந்து மீண்டும் மீண்டும் இவரை நாடி ஓடும் அகஅழகு கொண்டவர்.
1992ம் ஆண்டளவில் திரு கணேசனால் லண்டனிற்கு அறிமுகம் செய்யப்பட்டார். நுhற்றுக்கணக்கான ஏன் ஆயிரக்கணக்கான என்றுகூடச் சொல்லக்கூடிய நாட்டிய அரங்கேற்றங்களில் பாடிய முடிசூடா மன்னன். பாடல் வடிவமைப்பதிலும் இசையமைப்பதிலும் ஈடு இணையற்ற தனித்திறன் கொண்டவர்.
ராஜாவின் “குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா” என்ற பாடலுக்கமைய யாரையும் குறை கூற மாட்டார். எல்லோரிலும் ஒரு நிறைவுகாணும் ஒரு உன்னத மனிதப்பிறவி. இவரது குழந்தை உள்ளத்தால் யாராலும் வெறுக்கப்பட முடியாதவர்.
இசைப்பரம்பரையில் தோன்றிய காரணத்தால் சிறுவயதில் இருந்தே இயற்கைஞானம் கொண்டவர். ஆனாலும் 20 வயதுவரை சங்கீதத்தை முறையாகக் கற்கும் வாய்ப்பு இருக்கவில்லை. பின்னர் சங்கீதமேதை வி ஆர் கிருஷ்ணன் என்பவரிடம் இசையை பயிலும் அரிய வாய்ப்பைப் பெற்றார்
இவரது குரு வி ஆர் கிருஷ்ணன் தியாகராஜா சுவாமிகள் இசைப்பரம்பரையில் வந்த செம்மங்குடி சீனிவாச ஜயர் அவர்களின் மாணவர் எனடபது குறிப்பிடத்தக்கது. காலம் தாழ்த்தி 20 வயதில் இசையைப் பயின்றாலும் மிகக் குறுகிய காலத்திலேயே நாட்டியப் பாடலுக்கு குற்றாலம் நாகராஜன் என முத்திரை பதித்து தனக்கென்று ஒரு அசையா இடத்தை சென்னை மக்களிடம் பிடித்துக் கொண்டார்.
இவரது இசைத்திறன்கண்டு தனது சரித்திரத்தில் முதன்முறையாக “சிறந்த பரதநாட்டிய பாடகன் ” என்று பட்டமளித்து Music Academy madras கெளரவித்தது.
இசையின் உச்சத்தைத் தொட்ட இவர் நினைத்திருந்தால் பணத்தின் உச்சத்தையும் தொட்டிருக்கலாம். மூன்று தலைமுறைக்குத் தேவையான சொத்தை இவரால் தேடியிருக்க முடியும். ஆனால் ஆயிரக்கணக்கான இளம் இசைப்பயிர்களை உருவாக்குவதில் ஆர்வம்காட்டிய இவர் பணத்தின் பக்கம் கவனம் செலுத்தாதது இவரது மகனும் மனைவியும் செய்த துர்ப்பாக்கியமே.
வல்லவன் வகுத்ததே வாய்க்கால் என்பது இயற்கை நியதி. இருப்பினும் காலத்திற்குக் காலம் நல்லவர்களும் தோன்றத்தான் செய்கிறார்கள். வல்லவர்களை காலம் மறந்துவிடும் வரலாறு இருக்காது. ஆனால் நல்லவர்களிற்கு வரலாறு உண்டு. இவர்களை காலம் மறக்காது.
குற்றாலம் நாகராஜனின் இசைச்சேவை சாதனை மிகப்பெரியது. அவரது வெற்றிடம் இலகுவில் நிரப்ப முடியாதது.
அவரது பிரிவால் வாடும் மகன் சங்கீத்திற்கும் துணைவி கோமதிக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
இவரது பூதவுடல் ஈமக்கிரியைகளுக்காக சென்னைக்கு அனுப்பப்பட இருக்கிறது. லண்டனில் இறுதி மரியாதை இன்று (03Oct 2010) காலை இடம்பெற்றது.
இணுவையூர் பதஞ்சலி நவேந்திரன்:( 07916 134 976 – pandkassociates@aol.com)