ameen

ameen

ஜனாதிபதியின் பிறந்த தினம், பதவியேற்பு; ஒரு இலட்சம் பேருக்கு காணிகள் அன்பளிப்பு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 65வது பிறந்தநாள் மற்றும் இரண்டாவது பதவியேற்பை முன்னிட்டு காணியில்லாதவர்களுக்கு காணிகள் மற்றும் காணி உறுதிகளை வழங்க காணிகள் ஆணையாளர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மாவட்ட செயலகங்கள் ஊடாகப் பதிவு செய்த காணியில்லாதவர்களுக்கே இந்தக் காணிகளும், காணி உறுதிகளும் வழங்கப்படவுள்ளன. இது தொடர்பான அறிவுறுத்தல்கள் மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாக காணிகள் ஆணையாளர் ஆர். பி. ஆர். ராஜபக்ஷ தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு இலட்சம் பேருக்கு காணி உரிமைகள் வழங்கப்படவுள்ளன. காணியற்றவர்கள் தமது பிரதேச மாவட்ட செயலகங்களில் பதிவு செய்யுமாறு கோரப்பட்டிருப்பதுடன் அரசாங்க காணிகளில் சட்ட விரோதமாக குடியிருப்பவர்களை வெளியேற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என காணிகள் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் பள்ளிவாசல்களுக்கு அண்மையிலுள்ள படை முகாம்கள் அகற்றப்படும்

திருகோணமலை மாவட்டத்தில் பள்ளிவாசல்களுக்கு அண்மையில் இருக்கும் பாதுகாப்பு படையினரின் முகாம்கள் விரைவில் வேறு இடங்களுக்கு மாற்றப்படும் என்று பிரதமர் டி. எம். ஜயரட்ன நேற்று தெரிவித்தார். கடந்த 30 வருட காலமாக வடக்கு, கிழக்கில் நிலவிய பயங்கரவாதத்தை ஜனாதிபதியின் சிறந்த வழிகாட்டலின் மூலமாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.  தற்போது நாட்டில் அமைதி நிலவுகிறது. அதனால்தான் நானும் இப்பிரதேசத்திற்கு வந்து உங்களது கஷ்டங்களையும் குறைகளையும் கேட்டறிகின்றேன் என்றும் பிரதமர் கூறினார்.

கிண்ணியா பெரியபள்ளி வாசலில் திருகோணமலை மாவட்ட உலமாக்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் ஊர் பிரமுகர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். பிரதமர் தொடர்ந்து உரையாற்றுகையில், இம்மாவட்டத்திலுள்ள சகல முஸ்லிம் பிரதேசங்களையும் ஒன்றிணைத்து அதனூடாக கிண்ணியாவில் இஸ்லாமிய கலாசாரத்தினூடாக ஒரு பெரிய பள்ளிவாசலை நிர்மாணித்து புனித நகரமாக உருவாக்குவதற்கு மத விவகார அமைச்சர் என்ற வகையில் சகல நடவடிக்கைகளையும் எடுப்பேன்.

மேலும் முஸ்லிம் மக்கள் மூன்று தலைமுறையாக எனக்கு வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பியுள்ளார்கள். அதே போன்று தான் முஸ்லிம் நாடுகள் எமது நாட்டுக்கு பல ஆண்டு காலமாக உதவிகளை வழங்கி வருகிறது. முஸ்லிம்களுக்கு ஒரே ஒரு அல்லாஹ் ஆனால் அவர்கள் இன்று பல கூறுகளாக பிரிந்து பிரச்சினையில் இருக்கிறார்கள்.

நாங்கள் போய் சமாதானம் புரிய வேண்டியிருக்கிறது. எதிர்காலத்தில் இவ்வாறான பிரச்சினைகள் இல்லாமல் குர்ஆனில் கூறப்பட்ட மசூரா அடிப்படையில் உங்களது பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளுங்கள். இந்நிகழ்வில் புத்தசாசன பிரதி அமைச்சர் எம். கே. டி. எஸ். குணவர்தன, முன்னாள் அமைச்சர் நஜீப் ஏ. மஜீட் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ரிஷானா மீது கருணை காட்டுமாறு சவூதி மன்னருக்கு ஜனாதிபதி கடிதம்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை தீர்ப்புக்குள்ளாகியுள்ள இலங்கை பணிப்பெண் ரிஷானா நபீக்கிற்கு கருணை காட்டுமாறு கோரி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சவூதி அரேபிய மன்னர் அப்துல்லா பின் அப்துல் அசீசுக்குக் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

2005ம் ஆண்டு வீட்டுப் பணிப்பெண்ணாக சவூதி அரேபியாவிற்குச் சென்றிருந்த இலங்கையரான ரிஷானா நபீக் தாம் பணிபுரிந்த வீட்டு எஜமானனின் குழந்தைக்குப் புட்டிப்பால் ஊட்டும் போது குழந்தை முச்சுத்திணறி உயிரிழந்துள்ளது.

இதனால் அக் குழந்தையை பணிப்பெண்ணான ரிஷானாவே கொலை செய்ததாக அவருக்கெதிராக வழக்குத் தொடுக்கப்பட்டது. அவ்வழக்கில் சவூதி அரேபியாவின் தவாமி மேல் நீதிமன்றம் மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்திருந்தது. இதனை ரியாத் உயர் நீதிமன்றமும் அங்கீகரித்தது.

இதனால் மேற்படி தீர்ப்பு தொடர்பாக ரிஷானாவின் குடும்பத்தினர் முன்வைத்த மேன்முறையீட்டு மனு சவூதி உயர் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கிணங்க சட்ட ரீதியாக ரிஷானா நபீக்கின் சார்பில் மேலும் மேன்முறையீடுகளை முன்வைப்பதற்கான வாய்ப்புகள் இழக்கப்பட்டுள்ளன. இத்தகைய நிலையிலேயே இலங்கை பணிப்பெண் ரிஷானா விடயத்தில் கருணை காட்டுமாறு கோரி ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ சவூதி அரேபிய மன்னர் அப்துல்லா பின் அப்துல் அசீசுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

இந்தோனேஷியாவில் சுனாமிக்கு 108 பேர் பலி

tsunami.jpgஇந்தோ னேஷியாவின் மேற்கு பகுதியில் நேற்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தால், கடலில் 10 அடி உயரத்துக்கு சுனாமி உருவானது. இதில் 108 பேர் பலியாகினர். பெண்கள், குழந்தைகள் என 502 க்கும் மேற்பட்டோர் காணாமல் போய்விட்டனர்.

இந்தோனேசியாவின், மேற்குப் பகுதியில், சுமத்ரா தீவின் அருகிலுள்ள மென்டாவாய் தீவுக்கருகில் கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோளில் 7.7 ஆக பதிவான இந்த நில நடுக்கம், மேற்கு சுமத்ரா தீவிலுள்ள பல்வேறு மாகாணங்களில் உணரப்பட்டது.

நில நடுக்கத்தால், கடலில் 10 அடி உயரத்துக்கு சிறிய அளவில் சுனாமி ஏற்பட்டது. மென்டாவாய் தீவுகளில் 20 கி. மீ. தூரத்துக்கு சுனாமியால் ஏற்பட்ட அலைகள் புகுந்தன.

இந்தச் சுனாமியில் சிக்கி மென்டாவாய் தீவுகளில் 150 வீடுகள் சேதம் அடைந்தன. மென்டாவாய் தீவுகளில் தெற்கு பகாய் என்ற இடத்தில் உள்ள பெலு மொங்கா உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 380 பேர், வெள்ளத்தில் சிக்கிக் காணாமல் போய்விட்டனர். மல்கோபா என்ற கிராமத்தில் 80 சதவீத வீடுகள் அழிந்து விட்டன. உணவுத் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. தீவுகளின் அருகில், படகில் சுற்றுலா மேற்கொண்டிருந்த 10 அவுஸ்திரேலியர்கள் பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை. கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 1,100 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் தே. வீ. அ. சபை அலுவலகம் நவம். 1 இல் திறப்பு

கிளிநொச்சி மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அலுவலகக் கட்டடம் புனரமைக்கப்பட்டு எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி காலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்படவுள்ளது. புனரமைப்பு செய்யப்பட்ட கட்டடத்தை நிர்மாணத்துறை பொறியியல் சேவைகள் வீடமைப்பு மற்றும் பொதுவசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச திறந்து வைப்பார்.

அன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட வீடமைப்பு நிர்மாணப் பணிகள் பற்றிய அபிவிருத்திக் கூட்டமும் புதிய அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது. கிளிநொச்சி மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பொன் நகரில் ஐம்பது பயனாளிகளுக்கு வீடமைப்புக் கடன்களை வழங்கியுள்ளது.

புலிகளை ஒழித்ததில் படையினரின் தந்திரோபாயம்; உலக நாடுகளுக்குத் தெளிவுபடுத்த அடுத்த வருடம் கொழும்பில் மாநாடு

jagath.jpgபுலிப் பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்துக் கட் டுவதற்காக இராணுவத்தினர் மேற்கொண்ட தந்திரோபாயங்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பாக உலக நாடுகளுக்குத் தெளிவு படுத்துவதற்கான சர்வதேச மாநாடொன்று அடுத்த வருட முற் பகுதியில் இலங்கையில் நடாத்தப் படவிருக்கின்றது. இவ்வாறு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய நேற்று முன்தினம் தியத்தலாவயில் தெரிவித்தார்.

இராணுவ உயரதிகாரிகள் 46 பேருக்கு இராணுவ பீட டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் நிகழ்வு தியத்தலாவ பாதுகாப்பு அகடமியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், கொழும்பில் நடாத்தப்படும் இந்த சர்வதேச மாநாட்டின் மூலம் உலக நாடுகளின் பாராட்டுகளை இலங்கை மேலும் பெற்றுக் கொள்ளும்.

உலகில் சுமார் நூறு நாடுகள் பயங்கர வாதப் பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ளன. அந்நாடுகளில் பயங்கரவாதப் பிரச்சினை பெரும் சவாலாக உள்ளன. பயங்கரவாதப் பிரச்சினை காரணமாக இந்த நாடுகள் அழிவுகளையும் சேதங்களையும் தொடர்ந்து எதிர்கொண்டு வருகின்றன. இவ்வாறான நாடுகளுக்கு இந்த சர்வதேச மாநாடு பெரிதும் நன்மை பயக்கும்.

புலிப் பயங்கரவாதிகள் கடந்த 30 வருடங்களாக முழு இலங்கையருக்கும் பெரும் தலையிடியினராக இருந்து வந்தனர். பெறுமதி மிக்க உயிர்களையும், சொத்துக்களையும் அழித்து வந்தனர். குரூரமான செயல்களில் அவர்கள் ஈடுபட்டனர். உலகிலேயே கொடூர பயங்கரவாத அமைப்பாகவே புலிகள் இருந்து வந்தனர். அப் பயங்கரவாதத்தினையே, எமது நாட்டு இராணுவத்தினரால் முற்றாக அழிக்க முடிந்திருக்கின்றது.

எமது இராணுவத்தினர் பொது மக்களின் உயிர்ச்சேதத்தை தவிர்த்து பயங்கர வாதிகளையே இலக்கு வைத்து தாக்கி அழித்துள்ளனர். இராணுவ வெற்றிக்கு இலக்கு பொது மக்கள் அல்ல. பயங் கரவாதிகளே என்ற நிலையில், எமது இராணுவத்தினர் வெற்றிகரமாக செயல்பட்டனர்.

பங்கரவாதிகள் பொது மக்களை கேடயங்களாகப் பாவித்து இராணுவத் தினருடன் மோதிய போதிலும், எமது இராணுவத்தினர் தந்திரோபாயங்களை மேற்கொண்டு, பொது மக்களை மீட்டு, பயங்கரவாதிகளை அழித்துள்ளனர்.

யுத்தத்தில் வெற்றி கண்ட எமது இராணுவத்தினர், சரணடைந்தவர்கள் மற்றும் கைது செய்யப்பட்ட புலி உறுப் பினர்களுக்கு புனர்வாழ்வு அழித்து வருகின்றனர். பொது மக்களை மீள் குடியேற்றுதல் நிலக் கண்ணிவெடிகளை அகற்றுதல் போன்ற மனித நேயக் கடமைகளையும் முன்னெடுத்துள்ளனர். இராணுவ ரீதியாகவும் வெற்றி பெற முடியும். அதே வேளை மனித நேயத் துடனும் செயற்பட முடியுமென்று, முழு உலக நாடுகளுக்குமே, எமது இராணுவத்தினர் உணர்த்தியுள்ளனர். புலி பயங்கரவாதத்தை முழுமையாக ஒழிக்க நாம் பயன்படுத்திய தந்திரோ பாயங்களை உலக இராணுவத்தினர் அறிய விரும்புகின்றனர். அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கவே, அடுத்த வருட முற்பகுதியில் இது தொடர்பான சர்வதேச மாநாட்டினை கொழும்பில் நடாத்தி, தெளிவுபடுத்தவுள்ளோம்” என்றார்.

முல்லை, கிளிநொச்சி மாவட்ட செயலகங்களுக்கு புதிய கட்டடம்

யுத்தம் இடம்பெற்ற சகல பிரதேசங் களிலுமுள்ள அனைத்து அரச அருவல கங்களையும் மீண்டும் ஆரம்பித்து மக்க ளுக்கான சேவைகளை வழங்கிவருவதாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் டி.திசாநாயக்க தெரிவித்தார். பாதிக்கப்பட்டிருந்த கட்டடங்கள் புன ரமைக்கப்பட்டு இயங்கவைக்கப் பட்டுள்ளதுடன் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டச் செயலகங்களுக்கு புதிய கட்டடங்களை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாவட்டச் செயலகங்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம சேவை அலுவலகங்கள் உள்ளிட்ட அரச நிர்வாகத் துக்குக் கீழ்வரும் கட்டடங்கள் பல யுத்தச் சூழலின் போது பாதிக்கப்பட்டன. அவற்றில் பகுதியாக பாதிக்கப்பட்ட அலுவலகங்கள் அனைத்தும் புனரமைக்கப்பட்டு இயங்க வைக்கப்பட்டுள்ளன.

வடக்கின் சில பிரதேசங்களில் கண்ணி வெடி அகற்றல் நடவடிக்கைகள் இடம் பெறுகின்றன. மேலும் சில பிரதேசங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் இடம்பெறு கின்றன. இப்பகுதிகளில் பாதிப்படைந்துள்ள அரச கட்டடங்களை மீள நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

எனினும் சகல பிரதேசங்களிலும் உள்ள அரச அலுவலகங்கள் தமது கடமைகளை மேற்கொண்டு வருகின்றன. மக்கள் தடையின்றி தமது சேவைகளை தமது பிரதேசங்களிலேயே பெற்றுக் கொள்ள வழியமைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மீள்குடியேற்றப் பணிகள் டிசம்பர் 31க்குள் பூர்த்தி – 450 பேர் இன்று மீள் குடியேற்றம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் 75 வீதமான மீள்குடியேற்றப்பணிகள் பூர்த்தியடைந்துள்ளதோடு திட்டமிட்டபடி டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன் மீள்குடி யேற்றங்களை நிறைவு செய்ய உள்ளதாக முல்லைத்தீவு அரச அதிபர் என். வேதநாயகம் நேற்றுக் கூறினார். இதேவேளை, ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள 6 கிராம சேவகர் பிரிவுகளில் 120 குடும்பங்களைச் சேர்ந்த 450 பேர் இன்று (26) மீள் குடியேற்றப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.

30 கிராம சேவகர் பிரிவுகளில் மட்டுமே மக்களை மீள்குடியேற்ற வேண்டியுள் ளதாகவும், கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு துரிதமாக மக்களை மீள்குடியேற்றி வருவதாகவும் அரச அதிபர் கூறினார். ஒட்டுசுட்டானில் மேலும் ஒரு கிராம சேவகர் பிரிவிலும் புதுக்குடியிருப்பில் 14 கிராமசேவகர் பிரிவுகளிலும் கரைதுரைப்பற்றில் 16 கிராம சேவகர் பிரிவுகளிலும் மீள் குடியேற்றம் செய்ய வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்துபுரம், திருமுருகண்டி மேற்கு, பனிச்சங்குளம், மாங்குளம், ஒலுமடு மற்றும் அம்பகாமம் ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் இன்று மீள்குடியேற்றம் நடைபெறுகிறது. வவுனியா மற்றும் யாழ். ஆகிய பிரதேசங்களில் தமது உற வினர் நண்பர்களின் வீடுகளில் உள்ளவர்களே இவ்வாறு மீள்குடியேற்றப்படுகின்றனர்.

இதே வேளை, அண்மையில் முல்லைத்தீவு மாவட்ட முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் நடைபெற்றது. முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மிதிவெடிகளை அகற்றும் பணிகளை துரிதப்படுத்துமாறும் முழுமையான மீள்குடியேற்றங்களை மேற்கொள்ளுமாறும் வடமாகாண ஆளுநர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பணித்துள்ளார்.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த மக்களில் சுமார் 18,799 பேரே மீள்குடியேற்றப்பட வேண்டியுள்ளதாகவும் இவர்களில் 17,641 பேர் வவுனியாவிலும் 1,158 பேர் யாழ்ப்பாணத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு கூறியது.

நுண்கலை பட்டதாரிகள் 3174 பேருக்கு ஆசிரியர் நியமனம்

நுண்கலைப்பட்டதாரிகள் 3174 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் சுனில் சிறிசேன தெரிவித்தார்.

அண்மையில் நடைபெற்ற போட்டிப் பரீட்சையில் ஐயாயிரத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்ற போதும் நேர்முகப் பரீட்சையொன் றின் மூலம் தகுதிகள் உறுதிசெய்யப்பட்ட பின்னரே ஆசிரிய நியமனம் வழங்கப் படுமெனவும் அவர் தெரிவித்தார். நேற்றைய தினம் நுண்கலைப் பட்டதாரிகள் தமக்கு ஆசிரியர் நியமனம் வழங்க வேண்டுமெனக் கோரி கல்வியமைச்சின் முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டனர். இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டம் மேற்கொள்வதனால் உடனடியாக ஆசிரியர் நியமனங்களை வழங்க முடியாது. அதற்கு சில நியமங்கள் உள்ளன. கடந்த 9ம் திகதி போட்டிப் பரீட்சைகள் நடாத்தப்பட்டுள்ளதுடன் தகுதியானோரைத் தெரிவு செய்வதற்கான நேர்முகப்பரீட்சை எதிர்வரும் 15ம் திகதி நடாத்தப்படவுள்ளது. இதன்மூலம் தேர்ந்தெடுக்கப்படும் தகுதியானவர்களுக்கே ஆசிரிய நியமனம் வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சவூதியில் சிசுக் கொலை; ரிஸான நபீக்கு தண்டனை உறுதி

naaa.jpg2005 ஆம் ஆண்டில் இலங்கை வீட்டுப்பணிப் பெண் ஒருவர் சவூதியில் சிசுவினை கொலை செய்தார் என்பதனை விசாரணையின் பின் ரியாத் உயர் நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.  ரிஸான நபீக் என அழைக்கப்படும் இலங்கையைச் சேர்ந்த வீட்டுப்பணிப் பெண், நைப் ஜிஷியன் ஹலாப் அல் ஒடபீ என்பவரின் 4 மாத குழந்தையை கொலை செய்தார் எனும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக அப்துல்லா அல் ரொசாமி தலைமையிலான மூன்று நீதிபதிகளை கொண்ட டவடாமி உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழு தெரிவித்துள்ளது.

நபீக்கிற்கு வேலை வழங்குனரின் மனைவி அவரது குழந்தைக்கு பால் வழங்குமாறு குழந்தையை வழங்கியுள்ளார் இதன் பின்னரே அவர் குழந்தையை கொன்றுள்ளார் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் நபீக் செய்ததாக கூறப்படும் கொலையினை மறுத்து நபீக் மனு தாக்கல் செய்யலாம் எனவும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.