::தேர்தல்கள்

::தேர்தல்கள்

இலங்கைத் தேர்தல்கள் பற்றிய செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

27, 28ம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு

images-elc.jpgஊவா மாகாண சபை, யாழ்ப்பாணம் மாநகரசபை, வவுனியா நகர சபை என்பனவற்றுக்கான தபால்மூல வாக்களிப்பு எதிர்வரும் 27, 28ம் திகதிகளில் நடைபெறும் என தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த மூன்று தேர்தல்களுக்கும் தபால் மூலம் வாக்களிக்கவென 33,000 ஆயிரம் விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன என மாவட்ட தேர்தல் அலுவலகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விண்ணப்பங்களில் தபால்மூலம் வாக்களிக்க தகுதிபெற்றவர்களை தெரிவு செய்ய வேண்டிய நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றது.

யாழ். வவுனியா தேர்தல்கள் – சகல முன்னோடி நடவடிக்கைகளும் தங்கு தடையின்றி முன்னெடுப்பு

images-elc.jpgயாழ். மாநகர சபை, வவுனியா நகர சபை உள்ளூராட்சிச் சபைத் தேர்தலுக்கான சகல முன்னோடி நடவடிக்கைகளும் எவ்வித தடையுமின்றி முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் தேர்தல் கடமைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிச் செயலமர்வுகள் அடுத்த வாரம் இடம்பெறவுள்ளதாகவும் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை; வாக்குப் பட்டியல்கள் தயாரிக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதுடன் வாக்காளர் அட்டைகள் விநியோக நடவக்கைகள் எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பமாகுமெனவும் அவர்கள் தெரிவித்தனர்.

தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பில் வவுனியா மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் கருணாநிதி தெரிவிக்கையில்,

வவுனியா நகர சபைத் தேர்தல் தொடர்பான சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இம்முறை தேர்தல் நடவடிக்கைகளுக்காக 500 அரச உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அவர்களுக்கான நியமனக் கடிதங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

எதிர்வரும் 7 ஆம் திகதி தபால் மூல வாக்கெடுப்புச் சான்றுப்படுத்தும் உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிச் செயலமர்வும் 8 ஆம் திகதி சிரேஷ்ட தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி செயலமர்வும் 9 ஆம் திகதி சிரேஷ்ட கணக்காளர்கள் உள்ளிட்ட இதர உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வும் இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் குகநாதன் தேர்தல் நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கையில்,

யாழ். மாநகர சபைத் தேர்தலுக்கென 1,000 அரச உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. இவர்களுக்கான பயிற்சிச் செயலமர்வுகள் அடுத்த வாரம் இடம்பெறவுள்ளன. அத்துடன் வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் 15 ஆம் திகதிக்குப் பின்னர் விநியோகிக்கப்படவுள்ளன எனவும் தெரிவித்தார்.

அத்துடன் தேர்தல் தொடர்பான முன்னோடி நடவடிக்கைகள் எவ்வித தங்கு தடையுமின்றி இடம்பெற்று வருவதாகவும் வேட்பாளர்களுக்கான விருப்பு வாக்கு இலக்கங்கள் வழங்கும் நடவடிக்கை நிறைவு பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ்.தேர்தல் பணிகளுக்கு டக்ளஸ் தலைமை: வவுனியா நகர சபைக்கு ரிஷாத் பொறுப்பு

susil1111.jpgயாழ்ப் பாண மாநகர சபைத் தேர்தல் பணிகளை முன்னெடுப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் குழுவொன்றும் வவுனியா நகரசபைத் தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுக்க அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையில் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிச் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேம ஜயந்த் தெரிவித்தார்.

1976ஆம் ஆண்டு சுதந்திரக் கட்சி உறுப்பினர் ஒருவர் யாழ். மேயராகத் தெரிவானார். 33 வருடங்களின் பின் மீண்டும் எமது கட்சியைச் சேர்ந்த ஒருவர் மேயராகத் தெரிவாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மகாவலி நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, யாழ். மற்றும் வவுனியா உள்ளூராட்சி சபைத் தேர்தல்களுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. யாழ். மாநகர சபைக்கென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் குழு நியமிக்கப்பட்டுள்ளதோடு அநுராதபுரம் மற்றும் ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த தலைவர்கள் சிலரும் இந்தக் குழுவில் அடங்குவர்.

வவுனியா நகரசபைக்கு அமைச்சர் ரிசாத் பதியுதீன், சுமதிபால அடங்களான குழு நியமிக்கப்பட்டுள்ளன. இரு உள்ளூராட்சி சபைகளிலும் சுதந்திரக்கட்சி, ஈ.பி.டி.பி, டெலோ, ஈரோஸ். அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் அடங்கிய குழு போட்டியிடுகிறது. இந்தத் தேர்தலில் யாழ், வவுனியா மக்களின் கருத்து மிக முக்கியமாகும்.

வவுனியாவில் இயல்பு நிலை காணப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் உள்ள இரு பாடசாலைகளுக்கும் நாம் விஜயம் செய்தோம். அங்கு ஆசிரியர் பற்றாக்குறை எதுவும் கிடையாது. தொண்டர் ஆசிரியர்களுக்கு தேர்தலின் பின்னர் நியமனம் வழங்க உள்ளோம். ஏ-9 வீதியினூடாக லொறிகளில் யாழ்ப்பாணத்துக்கு உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்லப்படுவதால் அங்கு பொருட்களின் விலைகள் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.

30 வருடங்களாகக் கிடைக்காத கல்வி, சுகாதாரம், அடிப்படை வசதிகள் வடபகுதி மக்களுக்குத் தற்பொழுது கிடைத்து வருகிறது. அந்த மக்கள் அதிகாரப் பகிர்வு குறித்து எதுவும் கோரவில்லை.

வவுனியா தேர்தல் பிரசாரத்தில் கூட்டமைப்பு எம்.பி.க்கள்

images-elc.jpgவவுனியா நகர சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிடுகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசார கருத்தரங்குகள் நடைபெறவுள்ளன.
இதில் தமிழ்த் தேசியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர்.

வேட்பாளர்களுக்கு அவர்களின் இலக்கம் தேர்தல் திணைக்களத்தால் வழங்கப்பட்டதும் இந்த கருத்தரங்குகள் நடைபெறும் எனவும் தேர்தல் பிரசாரத்துக்கு பொறுப்பான வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைப்பதுடன் வவுனியா நகர சபையின் பல பகுதிகளிலும் பிரசாரங்களில் இவர்கள் ஈடுபடுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.  இதன் முக்கிய கருத்தரங்கு அடுத்தவாரம் வவுனியாவில் நடைபெறவுள்ளது. இதேவேளை, வவுனியா பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் ஏனைய தமிழ்க்கட்சிகளும் பிரசார வேலைகளை ஆரம்பித்துள்ளன.

த.வி.கூ, மு.கா, சுயேச்சை வேட்பு மனுக்கள் நிராகரிப்பு

images-elc.jpgயாழ்.  மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபைகளுக்காக ஏழு அரசியல் கட்சிகளும் ஐந்து சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளன. இதேவேளை யாழ். மாநகர சபைக்கான வேட்பு மனுவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசினதும், சுயேச்சைக் குழுவொன்றினதும் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. வவுனியா ந. சபைக்கான வேட்பு மனுவில் தமிழர் விடுதலைக் கூட்டணியினது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கிணங்க யாழ். மாநகர சபைத் தேர்தலுக்காக நான்கு அரசியல் கட்சிகளும் இரண்டு சுயேட்சைக் குழுக்களும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

சுயேட்சைக் குழுக்கள் இரண்டு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதுடன் மற்றுமொரு சுயேச்சைக் குழுவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் குகநாதன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமை வேட்பாளராக அதன் தலைவர் வீ. ஆனந்தசங்கரி வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளதுடன் சுயேட்சைக் குழு இலக்கம் ஒன்றிற்கு கப்பல் சின்னமும் இரண்டாம் குழுவிற்குப் பூட்டுச் சின்னமும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். யாழ்ப்பாண மாநகர சபைக்கு 23 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட் 8 ஆம் திகதி ஊவா மாகாண சபைத் தேர்தல்

uwa_provinces_and_districts.pngஊவா மாகாண சபைத் தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் செயலகம் இன்று அறிவித்தது. இத்தேர்தலுக்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யும் இறுதித் தினம் இன்று நண்பகல் 12.00 மணியுடன் முடிவடைந்தது. வேட்புமனுக்கள் ஏற்கும் நடவடிக்கைகள் கடந்த 17ஆம் திகதி ஆரம்பமானது. இதேவேளை,  ஊவா மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக பதுளை மாவட்டத்தில் ஐ.ம.சு.முன்னணி,  ஐ.தே.கட்சி,  ஜே.வி.பி., ஐக்கிய சோசலிஷக் கட்சி,  மலையக மக்கள் முன்னணி,  ஜனசக்தி முன்னணி மற்றும் தேசிய அபிவிருத்தி முன்னணி ஆகிய கட்சிகளும் 3 சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளன.

மொனராகலை மாவட்டத்தில் ஐ.ம.சு.முன்னணி,  ஐ.தே.கட்சி,  ஜே.வி.பி.,  ஐக்கிய சோசலிஷக் கட்சி, சிங்களே மஹா சம்பத பூமிபுத்ர கட்சி, எக்சத் லங்கா மஹா சபாவ,  தேசப்பற்றுள்ள மக்கள் முன்னணி,  இலங்கை முற்போக்கு முன்னணி மற்றும் ஜனசக்தி முன்னணி ஆகிய கட்சிகளும் 5 சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளன.

ஊவா மாகாணசபை தேர்தலுக்கான வேட்பு மனு ஏற்பு இன்றுடன் பூர்த்தி ஐ.ம.சு.மு., ஐ.தே.க., ஜே.வி.பி. வேட்பு மனு தாக்கல்

uwa_provinces_and_districts.pngஊவா மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்று நண்பகல் 12.00 மணி வரை ஏற்கப்படவுள்ளதோடு இன்று பிற்பகல் தேர்தல் ஆணையாளர் தேர்தல் நடத்தப்படும் திகதியை அறிவிக்க உள்ளதாக தேர்தல் செயலகம் கூறியது.

பதுளை மாவட்டத்திற்கு ஏழு அரசியல் கட்சிகள் வேட்பு மனுத் தாக்கல் செய்வதோடு மூன்று சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன. மொனராகலை மாவட்டத்திற்கு 4 கட்சிகளும் 3 சுயேச்சைக் குழுக்களும் நேற்று வரை வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நேற்று மொனராகலை மற்றும் பதுளை மாவட்டங்களுக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்தன. ஐ. ம. சு. கூட்டமைப்பு செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த் தலைமையிலான குழுவினர் வேட்பு மனுக்களை கையளித்தனர். அமைச்சர்களான ஆறுமுகம் தொண்டமான் டிலான் பெரேரா, வடிவேல் சுரேஷ் ஆகியோரும் இங்கு பிரசன்னமாகி யிருந்தனர்.

பதுளை மாவட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐ. தே. க. தேசிய மக்கள் நல முன்னணி, தேசப் பற்று மக்கள் முன்னணி, தேசிய அபிவிருத்தி முன்னணி மற்றும் ஐக்கிய சோசலிச கட்சி, மலையக மக்கள் முன்னணி என்பன வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளன. இது தவிர 3 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல் செயலகம் கூறியது,

பதுளை மாவட்டத்திற்கான ஐ. தே. க. வேட்பாளர் பட்டியலை கட்சி முதன்மை வேட்பாளர் உபாலி சமரவீர தாக்கல் செய்தார். ஐ. தே.க.வுடன் தொழிலாளர் தேசிய சங்கம், மேலக மக்கள் முன்னணி, இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி என்பன இணைந்து போட்டியிடுகின்றன.

மொனரகலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, தேசிய சுதந்திர முன்னணி, ஜே. வி. பி., ஐக்கிய சோசலிசக் கட்சி என்பனவும் 3 சுயேச்சைக் குழுக்களும் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்போ ஐ. தே. க. வோ முதலமைச்சர் வேட்பாளர் எவரையும் நியமிக்கவில்லை. இம்முறை தேர்தலில் ஐ. ம. சு. கூட்டமைப்பு முதலமைச்சர் வேட்பாளர் எவரையும் நியமிக்காது எனவும் கட்சி கூடி முதலமைச்சரை தெரிவுசெய்யும் என அமைச்சர் டளஸ் அலஹப் பெரும நேற்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கூறினார்.

ஐக்கிய தேசிய கட்சியும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும் வேட்பு மனு தாக்கல்

21tissa.jpgவவுனியா நகரசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஐக்கிய தேசிய கட்சியும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும் இன்று வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன.

ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்காவும் நாடாளுமன்ற உறுப்பி்னர் டாக்டர் ஜயலத் ஜயவர்தனவும் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக விசேடமாகக் கொழும்பில் இருந்து வவுனியாவுக்கு வருகை தந்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊவா மாகாண சபைத் தேர்தல் வேட்பு மனுத்தாக்கல் இன்று ஆரம்பம்

uwa_provinces_and_districts.pngஊவா மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள்  இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என  தேர்தல் செயலகம் அறிவித்துள்ளது. இன்று ஆரம்பமாகவுள்ள வேட்புமனுத் தாக்கல் செய்யும் நடவடிக்கை எதிர்வரும் 24ஆம் திகதி நன்பகல் 12.00 மணியுடன் முடிவடையும் என உதவித் தேர்தல் ஆணையாளர் டபிள்யூ.பி. சுமணசிறி தெரிவித்துள்ளார்.

இத்தேர்தலில்; போட்டியிடவுள்ள சுயேச்சைக் குழுக்கள் அதன் கட்டுப்பணத்தை அந்தந்த மாவட்ட செயலகங்களில் எதிர்வரும் 23ஆம் திகதி நன்பகல் 12.00 மணி வரை செலுத்த முடியும் எனவும் இது தொடர்பான வர்த்தமாணி அறிவித்தல் கடந்த 3ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். 

யாழ். மாநகர சபைத் தேர்தல்; இடம்பெயர்ந்த வாக்காளர் 26வரை விண்ணப்பிக்க அவகாசம்

election_ballot_.jpgயாழ். மாநகர சபைத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியுள்ள இடம்பெயர்ந்த வாக்காளர்கள் விண்ணப்பம் செய்வதற்கு எதிர்வரும் 26 ஆம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் அதிகமாக இடம்பெயர்ந்த வாக்காளர்கள் புத்தளம் அகதி முகாம்களில் தங்கியுள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யூ. பி. சுமணசிறி கூறினார்.

யாழ். மாநகர சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் 18 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை ஏற்கப்படவுள்ளன. யாழ். மாநகர சபைத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியுள்ள இடம்பெயர்ந்த வாக்காளர்கள் கொழும்பு, கம்பஹா, களுத்துறை புத்தளம், குருநாகல் மற்றும் அனுராதபுரம் பகுதிகளில் உள்ளனர். புத்தளத்தில் சுமார் 9 ஆயிரம் பேர் உள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது. இவர்கள் விண்ணப்பித்தால் குறித்த பிரதேசங்களில் கொத்தணி வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும் எனவும் இது தொடர்பான விண்ணப்பங்கள் அந்தந்தப் பகுதி தேர்தல் செயலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் சுமணசிறி கூறினார்.