::விஞ்ஞானம் தொழில்நுட்பம்

::விஞ்ஞானம் தொழில்நுட்பம்

விஞ்ஞான தொழில்நுட்பம் தொடர்பான செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

சூடாக தேநீர் அருந்தினால் ஆபத்து

cap-of-tea.jpgஅதிக சூட்டுடன் ஆவி பறக்க தேநீர் அருந்துவதால் தொண்டையில் புற்றுநோய் வர வாய்ப்பிருப்பதாக, இங்கிலாந்து மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

சுடச்சுட தேநீர் அருந்தும் பழக்கம் உடையவர்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய தகவல் தான் இது. உங்களின் இந்தப் பழக்கத்தால் தேவையில்லாமல் ஆபத்தை விலைக்கு வாங்குகிறீர்கள்.

சூடாக தேநீர் அருந்துவதால் தொண்டயில் புற்றுநோய் வர வாய்ப்பிருப்பதாக, இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் மருத்துவ இதழ் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

டெஹ்ரானைச் சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர் ரெஸா மலெக்சாதே தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள், லண்டனில் மேற்கொண்ட இந்த ஆய்வில், தொண்டைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 300 பேரின் தேநீர் அருந்தும் பழக்கம் ஆய்வு செய்யப்பட்டது. இதேபோல் புற்று நோய் பாதிப்பில்லாத 570 பேரின் தேநீர் அருந்தும் பழக்கமும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டது.

இதில், கோப்பையில் தேநீர் ஊற்றிய 4 நிமிடங்கள் கழித்து அதைப் பருகுவோரைக் காட்டிலும், 2 நிமிடங்களுக்குள் தேநீரைப் பருகி முடிப்போருக்கு தொண்டைப் புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகள் 5 மடங்கு அதிகம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

எனினும் தேநீர் குடிப்பதற்கும் புற்று நோயுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏழு விண்வெளி வீரர்களுடன் “டிஸ்கவரி’ விண்ணுக்குப் பயணம்!

discovery.jpgஅமெரிக் காவின் புளோரிடாவிலுள்ள கென்னடி விண்வெளி நிலையத்திலிருந்து நாசாவின் “டிஸ்கவரி’ விண்கலம் ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவப்பட்டது.

ஏழு விண்வெளி வீரர்கள் சகிதம் 14 நாள் பயணத்தை மேற்கொண்டு சர்வதேச விண்வெளிநிலையத்திற்கு செல்லும் இந்த விண்கலமானது அவ்விண்வெளி நிலையத்துக்கான நான்காவது இறுதித் தொகுதி சு10ரியசக்தி பிறப்பாக்கி அலகுகளை ஸ்தாபிப்பதை இலக்காகக் கொண்டு அனுப்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த விண்கலத்தில் பயணிக்கும் விண்வெளிவீரர்களில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் நீண்ட காலம் தங்கி பணியாற்றும் முதலாவது ஜப்பானிய விண்வெளி வீரர் என்ற பெருமையைப் பெறவுள்ள கொய்சி வகாடாவும் உள்ளடங்குகிறார்.

இந்த விண்கலத்தை கடந்த மாதம் விண்ணுக்கு அனுப்புவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக பிற்போடப்பட்டது. இதனையடுத்து ஒரு மாத கால தாமதத்தின் பின் இந்த விண்கலம் வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஸ்தாபிக்கப்படவுள்ள புதிய சக்திப் பிறப்பாக்க அலகுகளானது,  அந்நிலையத்துக்கு கிடைப்பனவாகும் மின் சக்தியின் அளவை அதிகரிப்பதுடன் அந்நிலையத்துடன் விஞ்ஞான ஆய்வு கூடங்களை பொருத்துவதற்கு தேவையான சக்தியையும் வழங்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருப்பவர்களின் தொகையை மூவரிலிருந்து அறுவராக அதிகரிக்க இந்த மேலதிக சக்தி விநியோகம் உதவும் என நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலைய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் அங்குள்ள சிறுநீரை குடிநீராக மாற்றும் உபகரணமொன்று பழுதடைந்துள்ள நிலையில்,  அதற்கு பதிலாக புதிய உபகரணமொன்றை பொருத்தும் நடவடிக்கையிலும் விண்வெளிவீரர்கள் ஈடுபடவுள்ளனர். இதுவரை விண்வெளிக்கு 36 பயணங்களை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ள டிஸ்கவரி விண்கலம் சர்வதேச விண்கலத்துக்கு பயணம் மேற்கொள்வது இது 28 ஆவது தடவையாகும்.

இந்நிலையில் இந்த விண்வெளி நிலையம் சு10ரியன் மறைந்த பின் பிரகாசமான நட்சத்திரம்போன்று விண்ணில் ஒளிரவுள்ளது. மேற்படி சு10ரிய சக்தி பிறப்பாக்க அலகுகள் அனைத்தும் இணைந்து 120 கிலோ வோட்ஸ் மின் சக்தியை பிறப்பிக்கும் என நாசா தெரிவிக்கிறது. 

ஆசிய-பசுபிக் உயர் கல்வி மாநாடு இன்று இந்தியாவில் ஆரம்பம்!

vishva-warnapala.jpgஉயர் கல்வி தொடர்பான ஆசிய-பசுபிக் உப பிராந்திய மாநாடு இன்று இந்தியாவில் ஆரம்பமாகவுள்ளது. இந்திய அரசாங்கமும் யுனெஸ்கோவும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இம்மாநாடு புதுடில்லி விக்யான் பவானில் நடைபெறவிருக்கிறது. இரண்டு நாட்களுக்கு நடைபெறவுள்ள இம்மாநாட்டில் ஆசிய-பசுபிக் பிராந்திய நாடுகளின் உயர் கல்வி அமைச்சர்கள் பங்குபற்றவுள்ளார்கள்.

இதேவேளை, இந்த மாநாட்டில் பங்குபற்றுவதற்காக இலங்கையிலிருந்து உயர் கல்வி அமைச்சர் பேராசிரியர் விஸ்வ வர்ணபால தலைமையிலான குழு பங்குபற்றவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

செயற்கைக்கோள்கள் விண்வெளியில் மோதின

iridium.jpgஅமெரிக்க தொலைதொடர்பு செயற்கைக்கோள் ஒன்றும் ரஷ்ய செயற்கைக்கோள் ஒன்றும் விண்வெளியில் மோதிக்கொண்டுள்ளன. விண்வெளியில் மனிதன் அனுப்பிய பொருட்கள் உடைந்த சம்பவங்களிலேயே இந்த அளவுக்கு மிகப் பெரிய அளவில் ஒரு சம்பவம் நடந்திருப்பது இதுவே முதல்முறை என்று கருதப்படுகிறது.

இரிடியம் என்ற அமெரிக்க வர்த்தக செயற்கைக்கோள் ஒன்று பயன்பாட்டில் இல்லாத ரஷ்ய செயற்கைக்கோள் ஒன்றுடன் மோதியிருக்கிறது. வடதுருவத்திற்கு அருகில் சைபீரியாவில் எண்ணூறு கிலோ மீட்டர் உயரத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இந்த மோதல் நடந்துள்ளது என அமெரிக்க விண்வெளி நிறுவனம் நாஸா கூறியுள்ளது.

ஈரான் தனது முதல் செயற்கைக் கோளை வெற்றிகரமாக விண்ணிற்கு ஏவியது

_grab_.jpgஈரானால் தயாரிக்கப்பட்ட முதல் செயற்கைக்கோள் ரொக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணிற்கு ஏவப்பட்டுள்ளது.  இச் செயற்கைக்கோள் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதை அந்நாட்டு ஜனாதிபதி மஹ்மூட் அகமதி நிஜாட் தொலைக்காட்சியில் அறிவித்தார்.  தொலைதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை ஈரான் ஏற்கெனவே செலுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது செயற்கைக்கோளை செலுத்தும் திறனைப் பெற்றுவிட்டதால் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.

அணு ஆயுதம் தயாரிக்க ஈரான் முயற்சித்து வருகிறது. எனவே ஈரானில் உள்ள அணு உலைகளை சர்வதேச முகாமை மூலம் சோதனையிட அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. ஆனால் அணு சக்தியை அமைதிப் பணிகளுக்கே பயன்படுத்துகிறோம் என்று ஈரான் கூறி வருகிறது.  இந்த நிலையில் ஈரான் செயற்கைக் கோளை செலுத்தும் ரொக்கெட் திறன் பெற்றிருப்பது அமெரிக்காவுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏவுகணைகளில் அணு குண்டுகளைப் பொருத்தி நீண்ட தொலைவுக்குத் தாக்க முடியும் என்பதால் ஈரான் மீது உலக நாடுகளின் கவனம் திரும்பி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈரானின் செயற்கைக்கோள் குறித்து மேற்குலக நாடுகள் கடும் விசனம்
 
ஈரான் தனது முதலாவது செயற்கைக்கோளை விண்ணுக்கு ஏவியது தொடர்பாக மேற்குலக நாடுகள் அதிக கவலை வெளிப்படுத்தியுள்ளது. ஆராய்ச்சி மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளுக்கு பயன்படுத்துவதாகக் கூறி ஈரான் தனது முதலாவது செயற்கைக் கோளை விண்ணில் ஏவியுள்ளது.

ஆனால், கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைப் பரிசோதனையின் அபிவிருத்திக்காகவே இச் செயற்கைக் கோளைப் பயன்படுத்தப்போவதாக அமெரிக்கா,பிரான்ஸ்,பிரிட்டன் ஆகிய நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன. ஈரானின் அணு நிகழ்ச்சித் திட்டம் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு ஆறு மேற்குலக நாடுகள் திட்டமிட்டுள்ள நிலையிலேயே இவ்வாறு குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஆனால், ஈரான் அணுகுண்டு தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக மேற்குலக நாடுகள் கருதுவதால் ஐ.நா.வின் தடைகளை எதிர்கொள்ளும் நிலையில் ஈரான் உள்ளது. இந்நிலையில் மேற்குலக நாடுகளின் குற்றச் சாட்டை மறுத்துவரும் ஈரான் தமது சக்தித் தேவை கருதியே அணுநிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுப்பதாக கூறிவருகின்றது. ஈரான் தன்னுடைய யுரேனியம் செறிவூட்டலை இடைநிறுத்தினால் அதன் அணு நிகழ்ச்சித் திட்டம் தொடர்பான பேச்சுகளில் ஈடுபட முடியுமென ஜேர்மன், பிரான்ஸ், அமெரிக்கா, சீனா, பிரிட்டன், ரஷ்யா ஆகிய நாடுகள் வலியுறுத்துகின்றன.

பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபன்டுடனான பேச்சுக்களைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் ஹிலாரி கிளின்டன்;  ஜேர்மனியின் பிராங்பட் நகரில் பேச்சுகளில் ஈடுபட்டு வரும் அமெரிக்கப் பிரதிநிதிகள் ஈரானுடன் பேச்சுகளில் ஈடுபடுவதற்கான அணுகுமுறைகள் தொடர்பான பேச்சுகளிலும் ஈடுபடுவர். சர்வதேச சமூகத்தில் ஈரானும் ஒரு அங்கத்துவ நாடாகுவதற்குரிய வாய்ப்புகள் உள்ளமை தெளிவாகவுள்ளது. ஈரானுடன் கைகுலுக்குவதற்கு நாம் தயாராக இருந்தாலும் எமது கொள்கைகளை கைவிடப்போவதில்லையெனத் தெரிவித்தார். இதேவேளை, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை அபிவிருத்தியில் ஈரான் ஈடுபடுவதற்கு சாத்தியமாக இருந்தாலும் அது குறித்து அதிக கவனம் செலுத்தப்படுமென அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரி றொபேட் வூட் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஈரானின் செயற்கைக்கோள் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்படுமென பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் எரிக் செவாலியர் தெரிவித்தார்.

6 கோடி தெற்காசியருக்கு இதய நோய் பரம்பரை வியாதி

surgery.jpgமரபணு உருப்பெருக்கம் என்ற ஒரேயொரு காரணத்தால் 6 கோடி தெற்காசியர்கள் (உலக சனத்தொகையில் 1 சதவீதம்) இதயநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக  ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட விஞ்ஞான ஆய்வறிக்கையொன்று தெரிவிக்கிறது. பரம்பரைப் பாதிப்பு இந்திய உபகண்டத்தில் 150 கோடி பேருக்கு ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள், மருத்துவர்களை உள்ளடக்கிய குழுவொன்று “நேற்சர் ஜெனற்றிக்ஸ் அக்கடமிக் ஜேர்னல்’ சஞ்சிகையில் எழுதியுள்ளனர்.

தெற்காசியர்களில் 4 சதவீதமானோரை பரம்பரை ரீதியான இதயநோய் தாக்குவதாக பிரிட்டன், இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். “இப்போது இந்தப் பாதிப்பு அடையாளம் காணப்பட்டுள்ளது. கருவுற்றிருக்கும் போது ஆரம்ப கட்டத்திலேயே இப்போது இதனைக் கண்டுபிடிக்க முடியும்’ என்று அவர்கள் விடுத்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். மரபணு ரீதியான சோதனையின் மூலம் இந்தப் பாதிப்புக்களை இளம் பராயத்திலேயே தற்போது இனங் கண்டுகொள்ள முடியும். காலப்போக்கில் இதற்கான மருந்தையும் கண்டுபிடிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருடாந்தம் உலகில் 1 கோடி 75 இலட்சம் பேர் இதயநோயால் மரணிக்கின்றனர். இதேவேளை, உலகில் இதய நோயால் பீடிக்கப்படுவோரில் 60 சதவீதமானோர் இந்தியர்கள் என்று அண்மையில் வெளியிடப்பட்ட மற்றொரு ஆய்வு குறிப்பிட்டுள்ளது. 26 நாடுகளைச் சேர்ந்த 2,085 பேரிடம் சோதனை நடத்தப்பட்டது. ஆனால், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, இந்தோனேசியா, மலேசியாவிலுள்ள தெற்காசிய வம்சாவளியினருக்கே இந்த பரம்பரை அலகால் இதயநோயின் தாக்கம் உள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஒரு இதயம்-இருவருக்கு புது வாழ்வு!

surgery.jpgகேரளாவிலிருந்து கர்நாடகத்திற்கு வந்திருந்த என்ஜீனியர் சாலை விபத்தில் சிக்கி மூளைச் சாவை சந்தித்தார். இதையடுத்து அவரது இதயம், பாதுகாப்பாக சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு அங்கு நோயாளிக்குப் பொருத்தப்பட்டது. மேலும் என்ஜீனியரின் இதய ரத்தக் குழாய்கள் தான்சானியாவைச் சேர்ந்தவருக்குப் பொருத்தப்பட்டது. கேரளாவைச் சேர்ந்த 28 வயது என்ஜீனியர் பெங்களூரில் பணியாற்றி வந்தார். வியாழக்கிழமை இரவு எச்.ஏ.எல். விமான நிலைய சாலையில் சாலை விபத்தில் அவர் படுகாயமடைந்தார். உடனடியாக அவரை மணிப்பால் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் மூளைச் சாவை சந்தித்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து அந்த என்ஜீனியரின் குடும்பத்தினரை மணிபால் மருத்துவமனை நிர்வாகம் தொடர்பு கொண்டு உறுப்பு தானத்தை அறிவுறுத்தியது. இதைத் தொடர்ந்து அவரது இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள் ஆகியவை எடுக்கப்பட்டு பதப்படுத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து பெங்களூரைச் சேர்ந்த 36 வயது நோயாளிக்கு கல்லீரல் பொருத்தப்பட்டது. பின்னர் 37 வயதுப் பெண்மணிக்கு ஒரு சிறுநீரகமும், பெங்களூர் கமாண்ட் மருத்துவமனைக்கு இன்னொரு சிறுநீரகமும் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இதயத்தைப் பொருத்துவதற்கு சரியான நபர் கிடைக்கவில்லை. இதையடுத்து மணிபால் மருத்துவமனை சென்னையைச் சேர்ந்த பிரபல இதயவியல் நிபுணர் டாக்டர் செரியனை தொடர்பு கொண்டு கேட்டபோது, அவரது பிரான்டியர் லைப்லைன் மருத்துவமனையில் நோயாளி ஒருவர் இருப்பது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து சென்னையைச் சேர்ந்த சஜாஸ் ஏர் சார்ட்டர் நிறுவனத்தின் விமான ஆம்புலன்ஸ் புக் செய்யப்பட்டு அது பெங்களூர் விரைந்தது. அந்த விமானம் மூலம் பெங்களூர் விரைந்த பிரான்டியர் மருத்துவமனை டாக்டர்கள், மூளைச் சாவை சந்தித்த என்ஜீனியரின் இதயத்தை அறுவைச் சிகிச்சை செய்து பத்திரமாக எடுத்தனர். பின்னர் மின்னல் வேகத்தில் அங்கிருந்து அதே விமானத்தில் சென்னை திரும்பினர். விமான நிலையத்திலிருந்து பிரான்டியர் லைப் லைன் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் தடையின்றி விரைய வழி ஏற்படுத்தி சென்னை போலீஸாரும், பேருதவி புரிந்தனர்.

அங்கு இரு டாக்டர்கள் குழு தயார் நிலையில் இருந்தன. அவர்கள் விரைவாக செயல்பட்டு இதய மாற்று சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர். ஒரு குழு நோயாளியின் உடலிலிருந்து இதயத்தை எடுத்தது. இன்னொரு குழு உடனடியாக இதயத்தை பொருத்தியது. இரு அறுவைச் சிகிச்சைகளும் வெற்றிகரமாக இருந்ததாகவும், நோயாளி நலமுடன் இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். கேரள என்ஜீனியரின் இதயத்தைப் பெற்று புது வாழ்வு பெற்ற நோயாளிக்கு 32 வயதாகிறது. அவர் காவல்துறையில் பணியாற்றி வருகிறார். கடந்த 3 மாதங்களில் நான்கு முறை பிரான்டியர் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றுள்ளார். டாக்டர் செரியனின் உதவியால் அவருக்குப் புது வாழ்வு கிடைத்துள்ளது.

வால்வுகளும் உதவின …

இதற்கிடையே லைப்லைன் மருத்துவமனையில் இதய ரத்த குழாய்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தான்சானியா நாட்டைச் சேர்ந்த ஒருவர் அனுமதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. அதிர்ஷ்டவசமாக அவர் மிகச் சரியான நேரத்தில் அங்கிருந்தார். உடனடியாக செரியன் தலைமையிலான டாக்டர்கள் குழு, அந்த தான்சானியா நாட்டுக்காருக்கு அறுவை சிகிச்சை செய்தனர். பழுதடைந்திருந்த அவரது ரத்தக்குழாய்கள் அகற்றப்பட்டு, பெங்களூர் என்ஜினீயரின் ரத்தக்குழாய்கள் பொருத்தப்பட்டன.

பெங்களுரில் அறுவை சிகிச்சை செய்து, இதயத்தை தனி விமானத்தில் எடுத்து வந்து, சென்னை போலீஸ் காரருக்கும், தான்சானியா நாட்டுக்காரருக்கும் பொருத்த டாக்டர்கள் எடுத்துக்கொண்ட மொத்த நேரம் 2 மணி 40 நிமிடமே. இந்த மின்னல் வேக சிகிச்சை இந்திய மருத்துவ உலகில் புதிய சாதனையாக கருதப்படுகிறது.  இந்த மின்னல் வேக சிகிச்சை காரணமாக 2 உயிர்கள் மறுவாழ்வு பெற்றுள்ளன. இதுகுறித்து டாக்டர் செரியன் கூறுகையில், பெங்களூர் என்ஜினீயர் கொடுத்த இதயத்தால் சென்னையில் ஒரு போலீஸ்காரரும், தான்சானியா நாட்டுக்காரரும் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.

நிறைய மருத்துமனைகளில் சிறுநீரகத்தை மட்டும் எடுத்துவிட்டு இதயத்தை கைவிட்டு விடுகிறார்கள். இதயத்தையும் இப்படி எடுக்க அனுமதித்தால் ஏராளமான இதய நோயாளிகளுக்கு வாழ்வு கொடுக்க முடியும் என்றார்.

நன்றி; வன் இந்தியா