::யுத்த நிலவரம்

::யுத்த நிலவரம்

இலங்கையில் நடைபெறும் யுத்தம் தொடர்பான செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

இடம்பெயர்ந்தோர் நலன்பேண கொரியா 5 இலட்சம் டொலர் அன்பளிப்பு

vanni-manitharkal.jpgவடக்கிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களின் நலன்புரி நடவடிக்கைகளுக்கு உதவும்முகமாக கொரிய அரசாங்கம் ஐந்து இலட்சம் டொலர்களை இலங்கைக்கு வழங்கவுள்ளது. உலக உணவுத் திட்டத்தினூடாக வழங்கப்படவுள்ள இந்த நிதி வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா,  மன்னார் மற்றும் யாழ்பாணம் ஆகிய மாவட்டங்களிலுள்ள நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோரின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்வதற்குப் பயன்படுத்தப்படவுள்ளதாக இலங்கையிலுள்ள கொரியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கமும் ஐக்கிய நாடுகள் சபையும் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கவே இந்நிதி வழங்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

வயோதிபர்களின் 61 சடலங்களும் பூந்தோட்டத்தில் அடக்கம்

வவுனியா அரசினர் பொது வைத்தியசாலை சவச்சாலையில் வைக்கப்பட்டிருந்த 61 சடலங்களும் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு பூந்தோட்டம் பொதுமயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்தும் சவச்சாலையில் சடலங்களை வைத்திருக்க கூடிய இடவசதியின்மையால் சடலங்கள் பழுதடைந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது.

இதனால் மாவட்ட நீதிவானின் அனுமதியுடன் அனைத்து சடலங்களும் ஒரே குழியில் போடப்பட்டு அரச செலவில் அடக்கம் செய்யப்பட்டதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்தது. நலன்புரிநிலையங்களில் இயற்கை மரணமடைந்த முதியவர்களின் சடலங்களே இவற்றில் பெரும்பாலானவையெனவும் தெரிவிக்கப்படுகிறது.

யுத்தத்தினால் வன்னிச் சிறுவர்கள் கடுமையான பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர் : ராதிகா குமாரசுவாமி

radhika-kumaraswamy.jpg
படையினருக்கும், புலிகளுக்கும் இடையில் நடைபெற்றுவரும் யுத்தம் காரணமாக வன்னிச் சிறுவர்கள் கடுமையான பாதிப்புக்களை எதிர்நோக்கி வருவதாக ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளரின் சிறுவர் மற்றும் ஆயுத போராட்டங்களுக்கான விசேட பிரதிநிதி ராதிகா குமாரசுவாமி தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

“யுத்தம் காரணமாக அப்பாவிச் சிறுவர்கள் சொல்லொணா துயரங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இது ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை.சிறுவர்களைப் பணயமாக வைக்கவோ அல்லது ஆயுத போராட்டத்தில் அவர்களை ஈடுபடுத்தவோ எவருக்கும் அதிகாரமில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் தடுத்து வைத்துள்ள சிறுவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். அவர்கள் தமது பெற்றோர் அல்லது பாதுகாவலர்களுடன் இணைக்கப்பட வேண்டும்.

அரசாங்க அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள சிறுவர்களும் பல்வேறு இடர்பாடுகளை எதிர்நோக்கி வருகின்றனர். சர்வதேச தர நியமங்களுக்கு அமைவான வசதிகள் அகதி முகாம்களில் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும். அரசாங்கமும், தமிழீழ விடுதலைப் புலிகளும் எறிகணைத் தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும்” என்றார்.

வன்னியில் நிகழப்போகும் மனித பேரவலங்களை தடுத்து நிறுத்தவும் – ஆர்.சம்பந்தன்

samthan-2.jpgபாதுகாப்பு வலயத்தின் தற்போதைய நிலைமைகள் அபாயகரமானவை, குறுகிய நிலப்பரப்பிற்குள் சிக்கியுள்ள மக்கள் தொடர்பில் அரசாங்கம் எவ்விதமான கரிசனையும் காட்டவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பு வன்னியில் நிகழப் போகின்ற மனித பேரவலங்களை தடுத்து நிறுத்துமாறு இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்திடம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது. பாதுகாப்பு வலயத்திற்குள் தற்போது 1 இலட்சத்து 25 ஆயிரம் மக்கள் இருப்பதாக அங்கிருந்து தகவல்கள் கிடைத்துள்ளன என்றும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கொழும்பிலுள்ள ஜானகி ஹோட்டலில் செவ்வாய்க்கிழமை மாலை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக்களின் தலைவரும் எம்.பி.யுமான ஆர்.சம்பந்தன் தெரிவித்தார்

மோதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்: பான்கீ மூன்

ban_ki_moon_.jpgகடந்த வார இறுதியில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இலங்கையில் தொடரும் மோதல்கள் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபை கோரிக்கைவிடுத்துள்ளது.
 
 “மேலும் மோசமான இரத்தக்களரி ஏற்படாதவாறு தற்பொழுது முன்னெடுக்கப்பட்டிருக்கும் இராணுவ நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அனைத்து சாத்தியமான நடவடிக்கைகள் குறித்தும் ஆராயவேண்டும்” என ஐ.நா. செயலாளர் நாயகம் பான்கீ மூன், இலங்கை அரசாங்கத்திடம் அவசரவேண்டுகோளொன்றை முன்வைத்துள்ளார்.

அதேநேரம், விடுதலைப் புலிகளும் தாக்குதல்களை நிறுத்துவதற்கு இணங்கவேண்டும் என அவர் கோரிக்கைவிடுத்துள்ளார்.

“கடந்த வார இறுதியில் 100ற்கும் மேற்பட்ட சிறுவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்தே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்” என பான்கீ மூனின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்த மக்களின் பதிவுகள் நடைபெறவுள்ளன.

Wanni_War_IDPsவடக்கு மாகாணத்தில் இருந்து இடம்பெயர்ந்து வந்து முகாம்களில் தங்கியுள்ள மக்களின் பிறப்பு, இறப்பு பதிவுகள் மேற்கொள்ளப்பட்டவுள்ளதாக பிறப்பு இறப்பு பதிவுகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது சம்மந்தமாக விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் இ. எம். குணசேகர தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு உதவ முடியாத நிலை உள்ளது என்று செஞ்சிலுவைச் சங்கம் தெரிவிப்பு

vanni-0001.jpgவடகிழக்கு பகுதியில் மோதல் நடக்கும் இடங்களில் சிக்கியுள்ள மக்களுக்கான அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை வழங்கவும், அங்கிருக்கும் காயமடைந்த மற்றும் நோய்வாய் பட்டவர்களை வெறியேற்ற முடியாத நிலையும் உள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கூறுகிறது என பீபீஸி இணையம் தெரிவித்துள்ளது

தற்போது அங்கிருக்கும் களநிலைமைகள் இதற்கு ஏதுவாக இல்லை என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவிக்கிறது. அங்கு மனித நேயப் பணிகளை மேற்கொள்ளும் விதமாக ஒரு கப்பல் வடகிழக்கு கடற்கரை பகுதியில் காத்திருப்பதாக அந்த அமைப்பின் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் மீதான தமது இறுதி தாக்குதலை தொடங்கியிருப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ள நிலையில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இலங்கையின் வடக்கே மருத்துவமனை மீது தாக்குதல்:45 பேர் பலி

vanni0002.jpgஇலங்கையின் வடக்கே மோதல் நடக்கும் பகுதியில் இருக்கும் ஒரு மருத்துவமனையின் மீது இலங்கையின் அரச படைகள் நடத்திய ஷெல் தாக்குதலில் குறைந்தது 45 பேர் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகளும் அந்த மருத்துவமனை தகவல்களும் தெரிவிக்கின்றன  என பீபீஸி இணையம் தெரிவித்துள்ளது

முள்ளிவாய்க்கால் பகுதியில் இயங்கிவரும் தற்காலிக மருத்துவமனை மீது இன்று (செவ்வாய்கிழமை) காலை 8 மணி வாக்கில் இந்தத் தாக்குதல் நடைபெற்றதாகவும், இதில் கடந்த வாரத்தின் இறுதிப் பகுதியில் இடம் பெற்ற தாக்குதலில் காயமடைந்து தங்கியிருந்தவர்களில் சிலரும் பலியாகியுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் கூறுகிறார்கள்.

ஆனால் இந்தத் தாக்குதல் குறித்து தங்களுக்கு ஏதும் தெரியாது என்று இலங்கை அரசின் அதிகார்கள் கூறியுள்ளனர். இலங்கை இராணுவம் அப்பகுதியில் கனரக ஆயுதங்களை பயன்படுத்தவில்லை என்று தெரிவிக்கிறது என பீபீஸி இணையம் தெரிவித்துள்ளது

அண்மைக் காலமாக விடுதலைப்புலிகள் அதிகளவிலான தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.

boat.jpgஇன்று கொழும்பு பாதுகாப்பு அமைச்சகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கடற்படைப் பேச்சாளர் பேசுகையில், “படகுகளில் தப்பி வந்த சிவிலியன்கள் எவரும் கடற்படையினரின் தாக்குதலில் கொல்லப்படவில்லை எனவும் 20,000க்கும் அதிகமான மக்களை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

இது வரையில் கடற்புலிகள் 7 தடவைகள் தாக்குதல்களை நடத்தி வந்துள்ளனர். கடற்படையினர் டோராப்படகுகளின் உதவியுடன் முல்லைத்தீவுப்பகுதியில் விடுதலைப் புலிகளின் 17 படகுகளைத் தாக்கியழித்தும் சில படகுகளைக் கைப்பற்றியுமுள்ளனர். அதேவேளை, 100க்கும் அதிகமான புலிகள் கொல்லப்பட்டுள்ளனர். அண்மைக் காலமாக விடுதலைப்புலிகள் அதிகளவிலான தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். அவர்கள் தற்போது பலமிழந்து காணப்படுகின்றனர். அதனால்தான் இவ்வாறான தாக்குதல்களை அவர்கள் நடத்துகிறார்கள்” என்றார்.

படையினர் வடுவக்கால் நந்திக்கடல் வழியாக தமது பலத்தை ஸ்திரப்படுத்தி முன்னேறி வருகின்றனர்.

udaya_nanayakkara_brigediars.jpgஇன்று கொழும்பு பாதுகாப்பு அமைச்சகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இராணுவ பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவிக்கையில்,

“59 ஆவது படையினர் வடுவக்கால் நந்திக்கடல் வழியாக தமது பலத்தை ஸ்திரப்படுத்தி முன்னேறி வருகின்றனர். இப்பகுதியில் 3 தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து இப்பகுதியில் படையினர் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது, பல ஆயுதங்கள் மற்றும் விடுதலைப்புலிகளின் 10 சடலங்கள் கைப்பற்றப்பட்டன.

இதுவரை 1,88,500 பொதுமக்கள் வரை படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். இன்று 59 ஆவது படையணியினரால 40 பேரும் 58 ஆவது படையணியினரால் 50 பொதுமக்களும் மீட்கப்பட்டுள்ளனர்.

கடந்த 10 ஆம் திகதி 16 வயதுக்குட்பட்ட மூன்று விடுதலைப்புலி உறுப்பினர்கள் படையினரிடம் சரணடைந்தனர். அதேபோன்று நேற்றைய தினமும் 5 பேர் வரை 53 ஆவது படையணியினரிடம் சரணடைந்துள்ளனர். இவர்கள் புனரமைப்பு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் நேற்றையதினம் 58 ஆவது படையணியினர் 27எம்.எம். விமான எதிர்ப்பு ஏவுகணைகளையும் கைப்பற்றினர்” என்றார்.