::யுத்த நிலவரம்

Friday, October 22, 2021

::யுத்த நிலவரம்

இலங்கையில் நடைபெறும் யுத்தம் தொடர்பான செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

“இராணுவ நடவடிக்கை முடிவுறும் நிலை ஆனாலும் மோதல் தொடரும்’

truck.jpgமரபு ரீதியான யுத்த ஆற்றலை இழந்திருக்கும் விடுதலைப் புலிகள் கெரில்லா உபாயத்தைப் பயன்படுத்திப் போரிடுவார்கள் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இராணுவத்தின் நடவடிக்கை முடிவுறும் நிலைக்கு வந்து விட்டது. ஆனால், மோதல் தொடரும் என்று கொழும்புப் பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞான பீடத் தலைவரான கலாநிதி ஜயதேவ உயன்கொடவை மேற்கோள் காட்டி ஏ.எவ்.பி.செய்திச் சேவை தெரிவித்தது.

முன்னர் இருந்தது போன்று அரசியல் மற்றும் இராணுவ ரீதியான பலத்தை புலிகள் பெற்றுக்கொள்ள முடியாது. ஆதலால் அவர்கள் கெரில்லா தந்திரோபாயத்திற்கு திரும்புவார்கள் என்றும் உயன்கொட தெரிவித்துள்ளார்.  அதேவேளை, புலிகள் தற்போதும் கணிசமான அளவுக்கு வெளிநாட்டு வலைப்பின்னல் அமைப்பை கொண்டிருப்பதாகவும் அதன் மூலம் கெரில்லாப் போருக்கு நிதியுதவி பெற்றுக்கொள்ளக்கூடும் என்றும் முன்னாள் இலங்கை இராஜதந்திரியான நந்தகொடகே கூறியுள்ளார். மோதலின் ஆரம்ப நாட்களில் இருந்த பயங்கரவாதத் தாக்குதல் போன்றவற்றை நாம் எதிர்பார்க்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேசமயம், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் விதியே எதிர்கால கெரில்லா போராளிகளுக்கு ஊக்குவிப்பளிப்பதற்கான முக்கியமான காரணியாக அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.

புலிகள் வன்னி மக்களை கேடயங்களாக வைத்திருக்கவில்லை. அந்த மக்களுக்குக் கேடயமாகத்தான் புலிகள் செயல்பட்டு வருகின்றனர் – பா.நடேசன்

nadesan.jpg.வன்னி வாழ் மக்களை மனிதக் கேடயங்களாக வைத்திருக்கின்றோம் எனக் குற்றம் சாட்டும் அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள், வன்னிக்கு வந்து நிலைமையை நேரடியாகப் பார்க்க வேண்டும் என பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றேன் என விடுதலைப் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.

அதேபோல பிரபாகரன் எங்கும் தப்பி ஓடவில்லை. மக்களுடனேயே இருந்து போராடி  மக்களோடு வாழ்ந்து கொண்டிருப்பதாக  விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் பி.பி.சிக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பா.நடேசன் அளித்துள்ள பேட்டி விவரம்:

விடுதலைப் புலிகள் அடுத்தடுத்து தமது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் உள்ள முக்கிய இடங்களை இழந்து வருவது குறித்து கேட்டபோது, விடுதலை இயக்கங்கள் இது போன்று பின்வாங்கிச் செல்வதும் – பிறகு அந்த இடங்களை மீண்டும் பிடிப்பதும் இயல்பாக நடக்கும் ஒன்றுதான் என்று கூறிய அவர், விடுதலைப் புலிகள் முன்பு கூட பின்வாங்கிச் சென்று பிறகு பெரிய வெற்றிகளைப் பெற்றதாகவும் கூறினார்.

விடுதலைப் புலிகளின் தாக்கும் திறனை பெரிய அளவில் குறைத்து விட்டதாக அரசு கூறுவது பொய் பிரசாரம் என்று குறிப்பட்ட அவர், அதே சமயம் தமது போராளிகள் முன்னைப் போலவே உக்கிரத்துடன் சண்டையிட்டு வருவதாகக் குறிப்பிட்டார். கௌரவமான, சுதந்திரமான தீர்வு கிடைக்கும் பட்சத்தில் தாம் பேச்சுவார்த்தைகளுக்குத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பொது மக்களை விடுதலைப் புலிகள் மனிதக் கேடயங்களாக பயன்படுத்துவதாக மனித உரிமை அமைப்புகள் கூறும் குற்றச்சாட்டுக்களை மறுத்த அவர், “எமது மக்களுக்காகவே நாம் போராடுகின்றோம். அவர்களை மனிதக் கேடயங்களாக நாம் வைத்திருக்கின்றோம் என்று சொல்வது ஒரு முற்று முழுதான பொய்ப் பிரச்சாரம். எமது மக்களை கொல்வதற்கான ஒரு பொய்ப் பிரச்சாரமாக இலங்கை அரசாங்கம் இதனைச் சொல்கின்றது. எம் மீது அவர்கள் வைப்பது ஒர் அபாண்டமான குற்றச்சாட்டாகும். எமது பாதுகாப்பில் வாழ்வதை விரும்பியே கடந்த இரண்டு வருடங்களாக இடம்பெயர்ந்து மக்கள் எம்முடன் வருகின்றனர். இங்குள்ள மக்களின் உண்மையான மனநிலை என்ன என்பதை இங்கு வந்து பார்த்தால் தான் தெரியும்.

உயிருக்குப் போராடியபடி அங்கும் இங்கும் அலையும் இந்த மக்களுக்குக் கேடயமாகத்தான் புலிகள் செயல்பட்டு வருகின்றனர். புலிகள் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களுக்கு நான் பகிரங்க அழைப்பு விடுக்கின்றேன். இங்கு கண்மூடித்தனமாக நிகழும் எறிகணைத் தாக்குதல்களை நிறுத்திவிட்டு அவர்கள் வன்னிக்கு வந்து மக்களின் மனநிலை என்ன என்பதை நேரடியாகப் பார்க்க வேண்டும்.

பிரபாகரன் எங்கும் ஓடவில்லை

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் எங்கும் சென்று விடவில்லை. அவரும், எமது போராட்ட இயக்கமும் எமது மக்களுடனேயே இருந்து போராடிக் கொண்டுதானிருக்கிறோம். சுதந்திரமான, கெளரவமான ஒரு அரசியல் தீர்வுக்காகவே நாம் போராடுகின்றோம். அது எல்லோருக்குமே நன்கு தெரிந்த ஒரு விடயமாகும். எமது மக்களின் அந்தச் சுதந்திரமும் கௌரவமும் உறுதிப்படுத்தப்படும் வரை நாம் போராடியே தீருவோம்” என்று நடேசன் கூறியுள்ளார்.

பிரபாகரன் தப்பி ஓடி விட்டார் என்று இலங்கை ராணுவ தளபதி பொன்சேகா கூறி வரும் நிலையில், பிரபாகரன் எங்கும் போகவில்லை, மக்களுடனேயேதான் இருக்கிறார் என்று விடுதலைப் புலிகள் இயக்கம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு வலயத்தினுள் அடைக்கலம் தேடிய பொதுமக்களைக் கொன்றது கொழும்பு அரசாங்கத்தின் திட்டமிட்ட போர்க்குற்றம்: தமிழ்நெட் செய்திச் சேவைக்குக் கருத்துத் தெரிவிக்கையில் நடேசன்

பொதுமக்களையும் அவர்களின் உடமைகளையும், அவர்களுக்கு உதவியளித்து வந்த சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தையும் கூரைகளோ அல்லது எதுவித கட்டிடங்களோ அற்ற பாதுகாப்பு வலயம் ஒன்றிற்குள் போகச் சொல்லியபின் அவர்கள் மீது சிறிதும் மனிதாபிமானமற்ற தொடர் எறிகணைத் தாக்குதலை நடத்தியிருப்பதன் மூலம் கொழும்பிலுள்ள இன அழிப்பு அரசு முன்னூற்றுக்கும் அதிகமான மக்களை ஒரே நாளில் கொன்றிருப்பதோடு இன்னும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை காயப்படுத்தியுமிருக்கிறது” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் திரு நடேசன் அவர்கள் இன்று தமிழ்நெட் செய்திச் சேவைக்குக் கருத்துத் தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் இதுபற்றி மேலும் தெரிவித்திருப்பதாவது:-

புலிகள் மக்களை கேடயங்களாகப் பாவிப்பதாக வரும் குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுதலித்த திரு நடேசன் அவர்கள், தாம் ஒருபோதுமே மக்களை போர் நடைபெறும் பகுதிகளில் இருந்து வெளியேறுவதற்கு தடைகளையோ கட்டுப்பாடுகளையோ விதிக்கவில்லை என்று மேலும் கூறினார்.  ஆனால் பொதுமக்கள் தாமாகவே புலிகள் பின்னால் பாதுகாப்புத் தேடிச் செல்வதாகக் கூறிய அவர், இன அழிப்பு ஆவேசத்துடன் ஆக்கிரமித்துக்கொண்டே வரும் ஒரு இராணுவத்திடமிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள புலிகளின் பின்னால் வரும் பொதுமக்களை தாம் எப்பாடு பட்டாவது காப்பாற்றப் போராடுவோம் என்றும் தெரிவித்தார்.

ஐநாவும், சர்வதேச சமூகமும், இன அழிப்புப் போர் ஒன்றை எதிர்கொண்டு நிற்கும் சமூகத்திற்கு நடக்கும் அக்கிரமங்களை பார்க்கவோ அல்லது தேடிச் சென்று உதவிகளைச் செய்யும் கடமையிலிருந்தும் தவறி விட்டன என்றும் கூறினார். அரசின் “பாதுகாப்புப் பிரதேசங்கள் மீது நம்பிக்கை கொள்ளாத ஐநா அமைப்புகளும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும் கூட இந்த அகோர தொடர் எறிகணைத் தாக்குதலில் இருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் அடைக்கலம் தேடிக்கொண்டன” என்று அவர் மேலும் தெரிவித்ததோடு, செஞ்சிலுவைச் சங்க ஊழியர் ஒருவர் இத்தாக்குதலில் காயப்பட்டதையும் சுட்டிக்காட்டினார்.

“போர் நடக்கும் பகுதிகளில் இருந்து இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்த சிவிலியன்கள் மீது நடைபெறும் அவமானப்படுத்தல்களும், துன்புறுத்தல்களும் எமக்கு அறியக் கிடைத்தன. சிங்கள இராணுவத்தின் கைகளில் அகப்பட்ட மக்களுக்கு தமது உயிர் மீதான உத்தரவாதமோ அல்லது எந்தவித மனித கெளரவமோ கிடைக்கப் பெறவில்லை என்பது நாம் அறிந்ததுதான். இது இன்று நேற்றல்ல, காலம் காலமாக இந்த நாட்டின் இன ஒடுக்குமுறையின் அங்கமாக இவை நடைபெற்று வருகின்றன” என்றும் அவர் கூறினார்.  “வன்னியில் உள்ள அரச உத்தியோகத்தர்களும், ஏனைய பொதுச் சேவையாளர்களும் இந்தக் குறுகிய பாதுகாப்பு வலயத்தினுள் போகும்படி கொழும்பு அரசினால் வற்புறுத்தப்படுகின்றனர்.

இவ்வாறு அரசாங்கம் வற்புறுத்தியுள்ளதால் புதுக்குடியிருப்பு மருத்துவமனை முற்று முழுதான இயங்காநிலையை அடைந்திருக்கிறது. உடனடியாக வன்னியில் நடைபெறும் இந்த இன அழிப்புப் போரை நிறுத்துமாறு சர்வதேச சமூகத்தையும், ஐநாவையும் கேட்டுக்கொண்டுள்ள நடேசன், இதன்மூலம் இங்கு நடந்தேறியுள்ள கோரத்தின் முழு அளவையும் உணர்துகொள்ள முடியுமெனவும்,அழிக்கப்பட்டு வரும் மக்கள் கூட்டத்தை அழிவிலிருந்து காப்பாற்றுவதோடு அவர்களுக்கு அவசரமாகத் தேவைப்படும் உதவிகளையும் உடனடியாக ஆரம்பிக்க முடியுமெனவும் தெரிவித்தார்.

‘முல்லைத்தீவில் 26 பொதுமக்கள் பலி’- B.B.C தமிழோசைக்குவழங்கிய செவ்வியில் டாக்டர். டி. சத்தியமூர்த்தி

truck.jpgஇலங்கையின் வடக்கே கடுமையான மோதல்கள் நடக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று  நடந்த தாக்குதல்களில் பலியான 26 பொதுமக்களின் உடல்கள் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். டி. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை காலை முதல் கடுமையான எறிகணைத் தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும், குறிப்பாக உடையார் கட்டு, சுதந்திரபுரம் மற்றும் தேவிபுரம் வரையிலான பகுதிகளிலே ஆயிரக்கணக்கில் எறிகணைகள் வந்து வீழ்ந்ததாகவும் அவர் B.B.C தமிழோசைக்கு அவர் வழங்கிய செவ்வியில் கூறியுள்ளார்.

உடையார் கட்டு மகாவித்தியாலயத்தில் இயங்கும் வைத்தியசாலையிலும், நெட்டாங்கண்டல் மருத்துவமனையிலும் பலியான 26 பொதுமக்களின் சடலங்கள் வைக்கப்பட்டிருப்பதாகவும், மேலும் காயமடைந்த 76 பேர் அங்கு கொண்டுவந்து அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் டாக்டர். சத்தியமூர்த்தி கூறியுள்ளார். மருத்துவமனையில் எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததில் அங்கிருந்த 10 பேர் காயமடைந்ததாகவும், 4 அம்புலன்ஸ் வண்டிகள் சேதமடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்., வன்னிக்கு விஜயம் செய்யுமாறு கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு ஜனாதிபதி மஹிந்த அழைப்பு

president.jpgமுல்லைத்தீவில் புலிகள் மனிதக் கேடயங்களாக உடயோகிக்கும் தமிழ் மக்களை விடுவிக்கவென சொந்த முறையில் வேண்டுகோள் விடுப்பதற்கு யாழ்ப்பாணத்துக்கும் வன்னிக்கும் விஜயம் செய்யுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஏசியன் ட்ரிபியுன் இணைய தளத்துக்கு ஜனாதிபதி அளித்த பேட்டியில் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவி ஜெயலலிதாவையும் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

வடக்கிலும், கிழக்கிலும் அவர்கள் மேற்கொள்ளும் விஜயத்தின்போது அங்கு வாழும் தமிழ் மக்களை சந்தித்து உரையாட முடியுமெனவும் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார். இருப்பினும் இந்த இரு இந்தியத் தலைவர்களும் ஜனாதிபதியின் அழைப்பு சம்பந்தமாக எந்தவொரு தகவலையும் வழங்கவில்லையெனவும் ஏசியன் ட்ரிபியூன் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ளும்படி புலி பயங்கரவாதிகளுக்கு ஆலோசனை வழங்கும் சமயத்தில் அவர்கள் ஆயுதங்களை ஒப்படைப்பது அவசியமாகுமென்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழ்நாடு முதலமைச்சரும் இலங்கை அரசாங்கமும் இணைந்து எதிர்கால நடவடிக்கைகளை திட்டமிட முடியும். தமிழ்நாடு அரசியல் தலைவர்களைக் கொண்ட குழுவொன்றுக்கு தலைமை தாங்கும் முதலமைச்சர் கருணாநிதி இலங்கை வரமுடியுமெனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

புலிகளின் பிடியிலிருந்து பொதுமக்களை விடுவித்தும் அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து வருவது தொடர்பான சமரச பேச்சுக்களை தமிழ்நாட்டுத் தலைவர்கள் நடத்த முடியுமெனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். வாவிகளையும் அணைக்கட்டுகளையும் தகர்ப்பதன் மூலம் அப்பாவி பொதுமக்களுக்கு புலிகள் இயக்கம் அளப்பரிய கஷ்டங்களை ஏற்படுத்தியுள்ளதென்றும் இந்த பேட்டியின்போது ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீளக்குடியமர்த்துவதற்கும் அரசாங்கம் உத்தேசித்துள்ளதென்றும் ஜனாதிபதி அதில் கூறியுள்ளார். இவ்வாறு வெளியேற்றப்பட்ட ஒரு இலட்சத்துக்கும் அதிகமான முஸ்லிம் மக்கள் தற்காலிக தங்குமிடங்களில் வசித்து வருகின்றனரெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பு, விசுவமடு நோக்கி படையினர் இறுதிக்கட்ட நடவடிக்கை

mulli-town.jpgமுல்லைத் தீவை கைப்பற்றிய பாதுகாப்புப் படையினரின் அடுத்த இலக்கு புலிகளின் எஞ்சியுள்ள கோட்டையான புதுக்குடியிருப்பை கைப்பற்றுவதாகும் என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். புதுக்குடியிருப்பையும், விசுவமடுவையும் புலிகளிடமிருந்து முழுமையாக விடுவிக்கும் நோக்குடன் இராணுவத்தின் 4 படைப்பிரிவுகளும் 3 செயலணிகளும் மும்முனைகள் ஊடாக வேகமாக முன்னேறிவருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

முல்லைத்தீவின் வடக்கு, மேற்கு மற்றும் தெற்கு ஆகிய முனைகளை சுற்றிவளைத்துள்ள பாதுகாப்புப் படையினர் கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். முல்லைத்தீவை படையினர் கைப்பற்றியதன் மூலம் புலிகளின் கடல்வழி நடவடிக்கைகள் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பிரிகேடியர் கிழக்கு கடற்பரப்பு முழுவதையும் முற்றுகையிடும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் கூறினார்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தை அடுத்துவரும் சில நாட்களுக்குள் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முடியும் என்று இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது. இதேவேளை புலிகளுடனான படை நடவடிக்கையில் 95 சதவீத வெற்றியை படைத்தரப்பு கண்டுள்ளதாக தெரிவித்த இராணுவத் தளபதி லெப்டினன்ற் ஜெனரல் சரத் பொன்சேகா வெகு விரைவில் இறுதி வெற்றியை அடைய முடியுமென்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

முல்லைத்தீவிலிருந்து முன்னேறி பாரிய தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள படையினர் தற்பொழுது அங்குள்ள தமது நிலைகளை பலப்படுத்தி வரும் அதேசமயம், புலிகளின் முக்கிய தளங்களை நோக்கி முன்னேறி வருவதுடன் ஆயுதங்களையும் மீட்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, புதுக்குடியிருப்பு வடக்கு மற்றும் தெற்கு பிரதேசங்களில் கடுமையான மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

இராணுவத்தின் நான்காவது செயலணியினர் புதுக்குடியிருப்புக்கு வடபகுதியில் அமைக்கப்பட்டிருந்த புலிகளின் சகல மண் அரண்களையும் நேற்றைய தினம் கைப்பற்றியுள்ளதாகவும் அவர் கூறினார். இராணுவத்தின் 55வது படைப் பிரிவினர் சுண்டிக்குளம் தெற்கு நோக்கி படை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அதேசமயம் 58வது படைப் பிரிவினர் ஏ-35 பரந்தன்-முல்லைத்தீவு வீதியில் படை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். 57வது படைப் பிரிவினர் கிழக்கு முனையில் விசுவமடு பகுதியிலிருந்தும், 59வது படைப் பிரிவினர் தற்பொழுது சாளை பிரதேசத்தை நோக்கி முன்னேறி வருவதாகவும் குறிப்பிட்டார்.

சிவிலியன்களின் வருகையைத் தடுக்கவே கல்மடுக்குளம் புலிகளால் தகர்ப்பு-இராணுவப் பேச்சாளர்

_army.jpgபுலிகள் மனிதக் கேடயங்களாகத் தடுத்து வைத்துள்ள சிவிலியன்கள் இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசங்களை நோக்கி வருவதைத் தடுக்கும் நோக்குடனேயே கல்மடுக்குளக் கட்டை புலிகள் குண்டுவைத்து தகர்த்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

சிவிலியன்கள் தப்பி வருவதைக் கட்டுப்படுத்தும் பொருட்டு அவர்கள் வரும் வழிகளில் மிதிவெடிகளையும், கண்ணி வெடிகளையும் புலிகள் புதைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.கல்மடுக்குளக்கட்டு உடைக்கப்பட்டதில் அப்பாவி பொதுமக்கள் பெரும் அசெளகரியங்களுக் குள்ளாகியுள்ளதுடன் தர்மபுரம், விசுவமடு பகுதிகளிலுள்ள பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளில் நீர்தேங்கி காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

குளத்து நீர் பரவியுள்ள பிரதேசங்களில் நீர்த்தேங்கி நின்று சதுப்பு நிலங்களாக மாறியுள்ள போதிலும் இந்த செயற்பாடுகள் முன்னேறிவரும் படை நடவடிக்கைகளுக்கு எதுவித பாதிப்புகளும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அதேவேளை, விசுவமடு, புளியன்பொக்கரைக்கு தென்பகுதி, தர்மபுரத்திற்கு கிழக்கு மற்றும் புளியன் பொக்கரைக்கு தென்கிழக்கு பகுதிகளில் இரு தரப்பினருக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த மோதல்களின் பின்னர் படையினர் நடத்திய தேடுதல்களின் போது கொல்லப்பட்ட புலிகளின் பத்து சடலங்கள், ரி. 56 துப்பாக்கிகள்-08, மோட்டார் குண்டு கள்-06, பெருந்தொகையான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துவகைகளையும் படையினர் மீட்டெடுத்துள்ள தாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தப் பிரதேசத்தில் மேலும் படையினர் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

கட்டுப்பாடற்ற பகுதியில் ஐ.சி.ஆர்.சி. தொடர்ந்தும் சேவையில்

red_cross.jpgபோர்ச் சூழலில் காயமடையும் பொது மக்களுக்கு சேவைகளை வழங்க தாம் தொடர்ந்தும் வன்னியில் இராணுவ கட்டுப்பாடற்ற பிரதேசத்தில் கடமையாற்றவுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் குழுவினர் தெரிவித்துள்ளனர். வன்னியில் கடமையாற்றும் ஒரேயொரு சர்வதேச அமைப்பு இதுவாகும்.

இராணுவக் கட்டுப்பாடற்ற முல்லைத்தீவு மாவட்டத்தில் எமது பிரதிநிதிகள் தங்கியுள்ளனர். அங்குள்ள நிலைமை குறித்து நாளாந்தம் அறிக்கைகள் கிடைக்கின்றன. போரில் சிக்குண்டு காயமடையும் பொதுமக்களுடைய விடயத்தில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கவனம் செலுத்தி வருகின்றது என அவர் தெரிவித்தார்.

அரசினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள சூனிய பிரதேசமான உடையார்கட்டு பகுதிக்குள் அலுவலகம் மாற்றப்பட்டுள்ளது. அங்கு சுமார் நூறு பணியாளர்கள் உள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தருமபுரத்திற்கு கிழக்கே புலிகளின் 3 படகுகள் அழிப்பு; 2 படகுகள் சேதம் – படைத்தரப்பு

_bort.jpgமுல்லைத் தீவில் தருமபுரத்திற்கு கிழக்கே நேற்று முன்தினம் சனிக்கிழமை பிற்பகல் படையினரின் முன்னரங்கக் காவல் நிலைகளை உடைத்து கொண்டு முன்னேற முயன்ற விடுதலைப் புலிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று படகுகள் அழிக்கப்பட்டும் இரு படகுகள் சேதமடைந்துமுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாதுகாப்புத் தரப்பு மேலும் கூறுகையில்;

கல்மடுக்குளக்கட்டைத் தகர்த்த புலிகள் வெள்ளம் பெருக்கெடுத்து பாய்ந்த போது அதனூடாக ஐந்து படகுகளில் தாக்குதல் நடத்த வந்ததுடன், அதற்கு வசதியாகக் கடும் ஆட்லறி ஷெல் தாக்குதலையும் மோட்டார் குண்டுத் தாக்குதலையும் நடத்தினர். நான்கு அடி உயரத்திற்கு வெள்ளம் வடக்குப் பக்கமாகப் பாய்ந்த போது கால்நடைகள், வீட்டுப் பொருட்கள் மற்றும் விவசாயப் பொருட்கள் யாவும் அடித்துச் செல்லப்பட்டன. புலிகளின் தொடர்ச்சியான கடும் ஷெல் தாக்குதலுக்கு மத்தியில் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

எனினும், இதன் போது ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை மதிப்பிடப்படவில்லை. இதேநேரம், நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.45 மணிமுதல் தர்மபுரத்திற்கு தெற்கேயும் கல்மடுவுக்கு வடக்கேயும் 57 ஆவது மற்றும் 58 ஆவது படையணிக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடும் சமர் நடைபெற்றுள்ளது.

அதிகாலை 1.45 மணியளவிலும் 3 மணியளவிலும் நடைபெற்ற மோதல்களில் புலிகள் பலத்த இழப்புகளைச் சந்தித்துள்ளனர். இதேநேரம், விசுவமடுவுக்கு மேற்கேயிருந்து முன்னேறும் 57 ஆவது படையணியினர் சனிக்கிழமை புளியம்பொக்கனைப் பகுதியிலுள்ள புலிகளின் நிலைகள் மீது கடும் தாக்குதலைத் தொடுத்தனர். உடையார்கட்டுக்குளம், விசுவமடுக்குளம், புதுக்குடியிருப்பின் தென்பகுதியிலும் கடும் மோதல்கள் நடைபெற்றுள்ளன. இந்த மோதல்களில் புலிகளுக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

புலிகளின் யுத்த தாங்கியை இலக்கு வைத்து விமானத் தாக்குதல்

mi24-1301.jpgவிசுவமடு பகுதியிலுள்ள புலிகளின் இலக்குகள் மீது விமானப்படையினர் நேற்று தாக்குதல்களை நடத்தியுள்ளனர். விமானப்படைக்குச் சொந்தமான எம். ஐ. 24 ரக விமானங்களைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட தாக்குதல்கள் வெற்றியளித்துள்ளதாக விமானப்படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார்.

விசுவமடு குளத்திலிருந்து வடக்கே இரண்டு கிலோமீற்றர் தொலைவில் அமைந்திருந்த புலிகளின் யுத்த தாங்கியொன்றை இலக்கு வைத்து விமானப்படையினர் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதல் நேற்று முன்தினம் காலை 9.30 மணிக்கு இடம்பெற்றது.

விமானத் தான்குதலுக்கு இலக்கான யுத்த தாங்கியை மீட்கும் நோக்கில் முன்னேறிய இராணுவத்தின் 58வது படையணிக்கு உதவியாக நேற்று நண்பகல் மீண்டும் எம். ஐ. 24 ரக விமானம் மூலம் விமானத் தாக்குதலை மேற்கொண்டதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.

முல்லைத்தீவு நகரமும், படையினர் வசம்.

2501-mullaiteevu.jpgதமிழீழ விடுதலைப் புலிகளின் கடைசித் தளமான முல்லைத்தீவு நகருக்குள் இன்று (ஜன:25) பிற்பகல் பிரிகேடிய நந்தன உடவத்த தலைமையிலான 59வது டிவிசன் படைப்பிரிவினர் உட்புகுந்துள்ளனர்  என பாதுகாப்பு அமைச்சகம்  தெரிவித்துள்ளது.

இன்று காலை  நந்திக்கடல் ஏரி ஊடாக திடீர் தாக்குதல் நடத்திய 593வது பிரிகேட் படைப்பிரிவின் 7வது கெமுனு படைப்பிரிவினரே முல்லைத்தீவு நகருக்குள் உட்புகுந்துள்ளதாக களநிலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  முல்லைத்தீவு நகரம்  நந்திக்கடல் ஏரிக்கும் இந்து சமுத்திரத்துக்கும் இடையில் அமைந்துள்ள சிறிய நிலத்தொடராகும். 1996 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இப்பகுதியில் அமைந்திருந்த இராணுவ முகாமை கைபற்றி இதை அவர்களின் பிரதான தளமாக பாவித்து வந்தனர்.

1996ம் ஆண்டுக்கு பின்னர் மீண்டும் இலங்கை இராணுவத்தினர் முல்லைத்தீவைக் கைப்பற்றியுள்ளது இராணுவ நடவடிக்கைகளில் மிகவும் குறிப்பிடத்தக்க வெற்றியாக கருதப்படுகிறது. இப்பகுதியின் பாதுகாப்பை பலப்படுத்தும் படையினரின் நடவடிக்கைகள் நிறைவுற்றதும் இப்பகுதியை விடுவித்துள்ளதாக அறிவிக்கப்படும் என களவட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.  இது குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து தகவல் எதுவும் வெளியாகவில்லை

இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவின்  உத்தியோகபூர்வ அறிவிப்பு 

sarath-fonseka.jpgஇராணுவத் தளபதி சரத்பொன்சேகாவின்  உத்தியோகபூர்வ அறிவிப்பின் படி (sri lanka time -6.40 PM) விடுதலைப்புலிகளின் முக்கிய தளமாகக் கருதப்பட்ட முல்லைத்தீவு நகர் சிறிலங்கா படையினரால் இன்று கைப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டது.

முல்லைத்தீவை புலிகளிடமிருந்து முழுமையாக விடுவிக்கும் நோக்குடன் இராணுவத்தின் 59வது படைப் பிரிவினர் நேற்று முல்லைத்தீவு நகரை தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்ததாகவும் அவர் தெரிவித்தார். 13 வருடங்களுக்குப் பின்னர் முல்லைத்தீவு நகரை இராணுவத்தினர் மீண்டும் கைப்பற்றியுள்ளதாக அவர் கூறினார். இந்தச் செய்தியை தொலைக்காட்சிகள் ஊடாக நேற்று மாலை அவர் தெரிவித்தார்.

இராணுவத் தளபதி லெப்டினன்ற் ஜெனரல் சரத் பொன்சேகா மேலும் உரையாற்றுகையில்:- மிக நீண்ட காலமாக சகலரும் எதிர்பார்த்திருந்த பாரிய வெற்றி தொடர்பாக மிகவும் சந்தோசத்துடன் தெரிவிக்க விரும்புகிறேன். இலங்கை இராணுவம், தீவிரவாதிகளின் பலமான கோட்டையாக விளங்கிய முல்லைத்தீவு நகரை  கடுமையான தாக்குதல்களுக்கு மத்தியில் நேற்று (25) கைப்பற்றியுள்ளனர்.

இந்த வெற்றி தொடர்பாக இராணுவத் தளபதி என்ற வகையில் அதனை உத்தியோகபூர்வமாக அறிவிக்கின்றேன். பூநகரி, ஆனையிறவு, பரந்தன், கிளிநொச்சி, தர்மபுரம், இராமநாதபுரம் என்ற முக்கிய பிரதேசங்களைக் கைப்பற்றிய படையினர் முல்லைத்தீவு நகரை தற்போது கைப்பற்றியுள்ளனர். நாட்டின் கிழக்கு கடற்கரை ஓரத்தில் முல்லைத்தீவு அமைந்துள்ளது.

முல்லைத்தீவிலுள்ள காட்டுப்பகுதிகள் பலவற்றைக் கைப்பற்றிய படையினர் அங்கிருந்து முன்னேறிச் சென்று புலிகளால் அமைக்கப்பட்டிருந்த பெருந்தொகையான பதுங்கு குழிகளையும், மண் அரண்களையும் கைப்பற்றி முல்லைத்தீவு நகருக்குள் பிரவேசித்தனர். முல்லைத்தீவை புலிகளிடமிருந்து விடுவிக்கும் படை நடவடிக்கைகளை 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் இராணுவத்தின் 59வது படைப்பிரிவினர் ஆரம்பித்தனர். ஒரு வருடம் பூர்த்தியாகும் நிலையில் 40 கிலோ மீற்றர் பரப்பைக் கைப்பற்றிய படையினர் முல்லைத்தீவு நகரை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர். இந்த வெற்றி தொடர்பாக நாங்கள் பெருமை அடைகின்றோம்.

புலிகள் தற்பொழுது 25 கிலோ மீற்றர் நீளமும் 15 கிலோ மீற்றர் அகலமும் பரப்பைக் கொண்ட மிகச் சிறிய பிரதேசத்திற்குள் முடக்கிவிடப்பட்டுள்ளனர். இந்த பிரதேசத்தையும் வென்றெடுத்து புலிகள் பலாத்காரமாக பிடித்து வைத்துள்ள ஒன்றரை இலட்சம் மக்களை காப்பாற்றுவேன் என்று உத்தரவாதம் வழங்குகின்றேன்.

இந்த வெற்றிக்கு பல காரணங்கள் உள்ளன. அதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினதும், பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவினதும் சரியானதும், சிறப்பானதும் வழிகாட்டல்களும், ஆலோசனைகளுமே பிரதான காரணமாகும். அதேபோன்று இந்த நடவடிக்கைகளுக்காக தன்னை அர்ப்பணித்த வீரர்களையும் எமக்கு இந்த சந்தர்ப்பத்தில் மறக்க முடியாது.

முல்லைத்தீவை விடுவிப்பதற்கான ஒருவருட கால படை நடவடிக்கைகளில் தாய் நாட்டுக்காக தனது உயிர் நீத்தவர்களை இந்த சந்தர்ப்பத்தில் நான் நன்றியுடனும், கெளரவத்துடனும் ஞாபகப்படுத்திக் கொள்கின்றேன். அதேசமயம் எமது இந்த இராணுவ நடவடிக்கைகளுக்கான இறுதிக் கட்டத்தில் புலிகளின் பதுங்கு குழிகளை நிர்மூலமாக்கி படை முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய விமானப் படையினருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோன்று ஆரம்பத்திலிருந்து எமக்கு மக்கள் மூலம் கிடைத்த ஒத்துழைப்பும் மக்களது பிரார்த்தனைகளும் இந்த வெற்றிகளுக்கு மற்றுமொரு காரணமாகும். அத்துடன் 2 வருட காலத்திற்குள் 80 ஆயிரம் வரையான இளைஞர்கள் படையில் இணைந்து தமது ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர். நாட்டிலுள்ள சகல இளைஞர்களும் இன்னும் முன்வர வேண்டும் என்றும் இறுதி நடவடிக்கைகளில் இராணுவத்தில் இணையுமாறும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன் என்றும் கூறினார்.

முல்லைத்தீவைக் கைப்பற்றியமை தொடர்பாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார குறிப்பிட்டதாவது:-

இந்தப் பிரதேசத்தில் படை நடவடிக்கைகளில் ஈடு பட்டுள்ள இராணுவத்தின் 59வது படைப்பிரிவின் கட்ட ளைத் தளபதி பிரிகேடியர் நந்தன உடவத்த தலைமை யிலான படையினர் தற்பொழுது முல்லைத்தீவு நகரு க்குள் பாரிய தேடுதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். கிளிநொச்சி பிரதேசத்தை பாதுகாப்புப் படையினர் கடந்த 2ம் திகதி தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். கிளிநொச்சியை கைப்பற்றி 23 நாட் களில் முல்லைத்தீவு நகரைக் கைப்பற்றியமை படையினருக்குக் கிடைத்த மற்றுமொரு பாரிய வெற்றியாகும்.

593 படையணியின் கட்டளைத் தளபதி கேர்ணல் ஜயந்த குணரத்ன தலைமையிலான படையினர் நந்திகண்டல் ஏரியை ஊடறுத்து திடீர் தாக்குதல்களை நடத்தயுள்ளனர். புலிகளின் கடுமையான பதில் தாக்குதல்களை வெற்றிகர மாக முறியடித்துக் கொண்டு 7வது கெமுனு படைய ணியின் பொறுப்பதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் சமிந்த லமாஹேவா தலைமையிலான படையினர் நகரை நேற்று கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்ததாக களமுனை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை விசுவமடு நகரை நேற்று முன்தினம் கைப்பற்றிய 58வது படைப்பிரிவினர் அங்கிருந்து தொடர்ந்தும் முன்னேறுவதற்கான நடவடிக்கை களை முன்னெடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டி னார். முல்லைத்தீவை கைப்பற்றும் நோக்கில் முன்னேறி வரும் படையினரின் நடவடிக்கைகளுக்கு விமானப் படை விமானங்கள் நேற்றும் கடுமையான தாக்குதல் நடத்தி வருவதாகவும் பிரிகேடியர் சுட்டிக்காட்டினார்.