::யுத்த நிலவரம்

Friday, September 17, 2021

::யுத்த நிலவரம்

இலங்கையில் நடைபெறும் யுத்தம் தொடர்பான செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

முல்லையில் புலிகளின் மோட்டார் தளம், முன்னரங்குகள் மீது விமான தாக்குதல்

mi24-1301.jpgமுல்லைத்தீவு பிரதேசத்திலுள்ள புலிகளின் மோட்டார் தளம் மற்றும் பாதுகாப்பு முன்னரங்கு நிலைகளை இலக்கு வைத்து விமானப் படையினர் நேற்று கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளனர். விமானப் படைக்குச் சொந்தமான எம்.ஐ. – 24 ரக விமானங்கள் நடத்திய இந்தத் தாக்குதல்கள் வெற்றியளித்துள்ளதாக விமானப்படைப் பேச்சாளர் விங்கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார். முல்லைத்தீவை நோக்கி முன்னேறி வரும் இராணுவத்தின் 57வது மற்றும் 59வது படைப் பிரிவுகளுக்கு உதவியாகவே இந்தத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

முல்லைத்தீவு நகருக்கு தென்பகுதியில் 4 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள புலிகளின் பாதுகாப்பு முன்னரங்குகளை இலக்கு வைத்து நேற்றுக் காலை 10.55 மணியளவில் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இரணைமடு குளத்திற்கு கிழக்கே எட்டு கிலோ மீற்றர் தொலைவில் அமைக்கப்பட்டிருந்த மோட்டார் தளம் ஒன்றை இலக்கு வைத்து விமானப் படையினர் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

நேற்றுப் பிற்பகல் 1.55 மணியளவில் இந்தத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இந்த மோட்டார் தளத்திலிருந்தே படையினரை இலக்குவைத்து புலிகள் தாக்குதல் நடத்தி வந்துள்ளதாக தெரிவித்த விமானப் படைப் பேச்சாளர், இந்தத் தாக்குதலில் அந்த தளம் பாரிய சேதங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஏ-9 வீதியில் கண்ணி அகற்றும் பணிகள் ஆரம்பம்

_army.jpgஏ-9  வீதியில் புதைக்கப்பட்டுள்ள மிதிவெடிகளை அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார கூறினார். ஏ-9 வீதியில் போக்குவரத்துப் பணிகளை துரிதமாக ஆரம்பிக்கும் நோக்குடன் மிதிவெடி அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பாதையின் இருபக்கமும் உள்ள 50 அடி வரையான பகுதியிலுள்ள நிலக்கண்ணிகள் அகற்றப்பட வுள்ளதோடு நிலக்கண்ணி அகற்றும் பணிகளை 2 வாரங்களுக்குள் பூர்த்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. நிலக்கண்ணி அகற்றும் பணிகள் முடிவடைந்ததும் வீதி புனரமைக்கும் பணிகளை ஆரம்பிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் வரையுள்ள மீட்கப்பட்ட பகுதிகளில் நிலக்கண்ணி அகற்றும் பணிகள் இடம்பெறுவதாக இராணுவப் பேச்சாளர் கூறினார்.

இஸ்ரேல் குண்டு வீச்சில் ‘ஹமாஸ்’ இயக்க அமைச்சர் பலி- ஐ. நா. சபை உதவிக்குழு கட்டடமும் தகர்ப்பு

gaza_war02.jpgபலஸ் தீனத்தின் காஸா நகரம் மீது இஸ்ரேல் விமானங்களும் பீரங்கிப் படையினரும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. 21வது நாளாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலை நிறுத்தும்படி ஐ. நா. சபை விடுத்த கோரிக்கைகளையும் இரு தரப்பினரும் ஏற்றக்கொள்ளவில்லை.

ஏற்கனவே பலஸ்தீனத்தின் காஸா நகரில் இருந்த ஹமாஸ் இயக்கத்தினரின் அலுவலகங்கள் தகர்க்கப்பட்டு விட்டன. 21 நாட்களாக நடந்த தாக்குதல்களில் பலியானவர்கள் எண்ணிக்கை 1000-க்கும் அதிகமாகிவிட்டது. இந்த நிலையில் பலஸ்தீனத்தின் ஜபாலியா பகுதியில் ஹமாஸ் இயக்கத்தின் உள்துறை அமைச்சர் சயீத் சலாம் வீடு மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீசியது. இதில் அந்த அமைச்சர் பலியானார். அவரது மகன் மற்றும் சகோதரரும் இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீச்சில் கொல்லப்பட்டனர்.

காஸா பகுதியில் தாக்குதலில் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கி உள்ளவர்களுக்கு நிவாரணப் பொருள்கள், மருந்துகள், உணவுப் பொருட்கள் வழங்க ஐ. நா. சபை ஏற்பாடு செய்துள்ளது. காஸா பகுதியில் உள்ள ஐ. நா. சபை கிளை அலுவலகத்தில் டன் கணக்கில் இந்த பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டு இருந்தன.

அந்த கட்டடம் மீதும் இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீசின. இதில் 3பேர் பலியானதுடன் டன் கணக்கில் மருந்து பொருட்கள் நாசம் அடைந்தன. இஸ்ரேலின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து ஐ. நா. சபை அவசரமாகக் கூடுகிறது.

தர்மபுரத்தில் புலிகளின் முக்கிய நிலகீழ் முகாம் படையினரால் கண்டுபிடிப்பு

_army.jpgபடையினரால் விடுவிக்கப்பட்ட தர்மபுரம் பிரதேசத்திலுள்ள புலிகளின் பல முக்கிய முகாம்களை பாதுகாப்பு படையினர் நேற்று கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். தர்மபுரத்தை நேற்று முன்தினம் கைப்பற்றிய இராணுவத்தின் 58 வது படைப் பிரிவினர் அங்கிருந்து முன்னேறி மேற்கொண்ட தேடுதல்கள் மற்றும் படை நடவடிக்கைகளின் போதே இங்குள்ள முக்கிய முகாம்களைக் கைப்பற்றியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சுமார் 12 மணி நேரம் தர்மபுரம் பிரதேசம் முழுவதையும் சுற்றி வளைத்து பாதுகாப்பு படையினர் பாரிய தேடுதல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். பெருந்தொகையான குண்டுகளை தயாரிக்கும் பிரதேசம் ஒன்றை கைப்பற்றிய படையினர் அதற்கு அருகிலுள்ள பாரிய நிலக்கீழ் முகாம் ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர். இந்த நிலக்கீழ் முகாமிற்கு அடியில் மூன்று மாடிகள் நிர்மாணிக்கப் பட்டிருப்பதாகவும பிரிகேடியர் குறிப்பிட்டார்.

இந்தப் பிரதேசத்தில் தொடர்ந்தும் தேடுதல் நடத்திய படையினர் அங்கு அமைக்கப்பட்டிருந்த புலிகளின் மற்றுமொரு பாரிய பயிற்சி முகாம் ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர். அந்த முகாமுக்கு அருகிலிருந்து துப்பாக்கி ரவைகள் பெருந்தொகையானவற்றை புதைத்து வைத்திருந்த கிடங்கு ஒன்றையும் பிடித்துள்ளனர்.

ட்ரக் வண்டி-01, மோட்டார் சைக்கிள்-01, உழவு இயந்திரம் –01, முச்சக்கரவண்டி –01 மற்றும் வாகனங்களையும் இந்தப் பிரதேசத்திலிருந்து கண்டெடுத்துள்ளனர் என்றும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார். தற்பொழுது தர்மபுரத்திலிருந்து முல்லைத்தீவை நோக்கி படையினர் தொடர்ந்தும் முன்னேறி வருவதாகவும் இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்

1069 பேர் படையினரிடம் நேற்று தஞ்சம்

displace.jpg
முல்லைத்தீவிலுள்ள புலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்த 1069 சிவிலியன்கள் பாதுகாப்புப் படையினரிடம் தஞ்சமடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். புலிகளின் பிடியிலிருந்து தப்பி இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்தை நோக்கி வருகை தரும் சிவிலியன்களின் எண்ணிக்கை கடந்த சில தினங்களாக பெருமளவில் அதிகரித்துக் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களை நோக்கியே 1069 சிவிலியன்களும் வருகை தந்துள்ளனர். இவர்களில் 260 சிறுவர்கள், 204 சிறுமிகள், 354 ஆண்கள் மற்றும் 291 பெண்கள் அடங்குவர். யாழ். கொக்கிளாய் பிரதேசத்தை நோக்கி 234 சிவிலியன்கள் வருகை தந்துள்ளனர். இவர்களில் 80 சிறுவர்கள், 44 சிறுமிகள், 80 பெண்கள் மற்றும் 70 ஆண்கள் அடங்குவர்.

படையினர் அண்மையில் விடுவித்த கெவில் பிரதேசத்தை நோக்கி 190 சிவிலியன்கள் காலை 8.30 மணியளவில் வருகை தந்துள்ளனர். இவர்களில் 53 சிறுவர்கள், 39 சிறுமிகள், 51 பெண்கள் மற்றும் 47 ஆண்கள் அடங்குவர். வவுனியாவின் ஓமந்தைச் சோதனைச் சாவடியை நோக்கி மாலை 3.30 மணியளவில் 483 சிவிலியன்கள் வருகை தந்துள்ளனர். இவர்களில் 92 சிறுமிகள், 89 சிறுவர்கள், 178 ஆண்கள் மற்றும் 124 பெண்கள் அடங்குவர்.

கிளிநொச்சியின் புலியன் பொக்கரை பிரதேசத்தை நோக்கி 26 சிவிலியன்கள் வருகை தந்துள்ளனர். இவர்களில் 18 ஆண்கள், 04 பெண்கள், 03 சிறுவர்கள் மற்றும் சிறுமி ஒருவரும் அடங்குவர். இராமநாதபுரத்தை நோக்கி மேலும் 46 சிவிலியன்கள் வருகை தந்துள்ளனர். 15 சிறுவர்கள், 13 சிறுமிகள், 11 ஆண்கள் மற்றும் 10 சிறுமிகள் இவர்களில் அடங்குவர். புலியன்பொக்கரை பிரதேசத்தை நோக்கி மேலும் 87 சிவிலியன்கள் மீண்டும் வருகை தந்துள்ளனர். 20 சிறுவர்கள், 15 சிறுமிகள், 24 ஆண்கள் மற்றும் 19 பெண்களும் இவர்களில் அடங்குவர்.

புலிகளால் தமக்கு நாளுக்கு நாள் பல்வேறு அநீதிகள் இழைக்கப்படுவதாகவும் இதனை அடுத்தே தாங்கள் வரத் தொடங்கியதாகவும் இந்த மக்கள் தெரிவித்ததாக குறிப்பிட்ட பிரிகேடியர், எதிர்வரும் நாட்களில் மேலும் பெருந்தொகையான சிவிலியன்கள் வருவதற்குத் தயாராகவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இரணைமடு குளமும் அண்மித்த பகுதியும் படையினரின் முழுமையான கட்டுப்பாட்டில்- 6 வது விமான ஓடுபாதையும் நேற்று கண்டுபிடிப்பு:

_army.jpgபுலிகளின் மற்றுமொரு முக்கிய பிரதேசமான இரணைமடு குளக்கட்டையும் அதனை அண்மித்த பிரதேசம் முழுவதையும் பாதுகாப்பு படையினர் நேற்று கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். இதேவேளை, இரணைமடு குளத்திற்கு தென்கிழக்கு பிரதேசத்தில் அமைந்துள்ள மற்றுமொரு விமான ஓடுபாதை ஒன்றையும் இராணுவத்தினர் நேற்றுக்காலை கைப்பற்றியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

புலிகளின் ஆறாவது விமான ஓடுபாதை இதுவென தெரிவித்த இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர், முல்லைத்தீவை நோக்கி முன்னேறிவரும் இராணுவத்தின் 57வது படைப் பிரிவினரே இரணைமடு குளக்கட்டு பிரதேசம் முழுவதையும், அதற்கு அண்மித்த பிரதேசத்தில் அமைந்துள்ள விமான ஓடுபாதையையும் தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சுமார் ஒரு கிலோ மீற்றர் நீளமும், 200 மீற்றர் அகலமும் கொண்ட விமான ஓடுபாதையை படையினர் நேற்று கைப்பற்றியுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார். இரணைமடு குளக்கட்டு அதன்வான் கதவுகளுடன் மூன்று கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டதென தெரிவித்த பிரிகேடியர், இங்கிருந்து இருமுனைகள் ஊடாக இராணுவத்தினர் தமது முன்னேற்ற நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இரணைமடு குளமும் அதன் சுற்றுப்புறங்களும் நீண்டகாலமாக புலிகள் வசம் இருந்துள்ளதுடன் புலிகளின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசமாக இந்தப் பகுதி விளங்கியுள்ளது. தற்பொழுது இந்த குளம் முற்றாக நீர் நிரம்பிக் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இரணைமடு குளத்திலிருந்து மேற்கு புறத்தை நோக்கி புலிகள் பாரிய மண் அரண்களை நிர்மாணித்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார். புலிகளின் ஆலோசகரான (காலஞ்சென்ற) அன்டன் பாலசிங்கம் வன்னிக்கு விஜயம் செய்தபோது இந்த குளத்தில்தான் அவர் பயணம் செய்த கடல் விமானம் தரையிறக்கப்பட்டதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கிளிநொச்சி- முல்லைத்தீவு மாவட்ட எல்லைகளை இணைக்கும் பிரதேசமாக இரணைமடு குளம் விளங்குவதாக தெரிவித்த பிரிகேடியர், இந்தப் பிரதேசத்தில் புலிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையில் இடம்பெற்ற கடுமையான மோதல்களுக்கு பின்னரே இரணைமடு குளத்தை பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, புதுக்குடியிருப்பு, விசுவமடு, ராமநாதபுரம் பகுதிகளில் இரு தரப்பினருக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த மோதல்களின் பின்னர் படையினர் நடத்திய தேடுதலின் போது கொல்லப்பட்ட புலிகளின் 6 சடலங்கள், பெருமளவிலான ஆயுதங்கள் மற்றும் வாகனங்களையும் படையினர் மீட்டெடுத்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

முல்லைத்தீவு: சிவிலியன் வருகை அதிகரிப்பு:

displace.jpgமுல்லைத்தீவு பிரதேசத்திலிருந்து இராணுவ கட்டுப் பாட்டு பிரதேசத்தை நோக்கி 27 குடும்பங்களைச் சேர்ந்த 78 சிவிலியன்கள் வருகை தந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். 78 சிவிலியன்களும் நேற்று முன்தினம் மாலை ஓமந்தை சோதனைச் சாவடியை வந்தடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

18 சிறுமிகள், 13 சிறுவர்கள், 29 ஆண்கள் மற்றும் 18 பெண்கள் இவர்களில் அடங்குவர். வருகை தந்த சிவிலி யன்கள் வழக்கமான விசாரணைகளுக்கு பின்னர் நலன்புரி நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

முல்லைத்தீவில் தர்மபுரம் பிரதேசமும் நேற்று படையினரிடம் வீழ்ந்தது

_army.jpgமுல்லைத்
தீவிலுள்ள புலிகளின் முக்கிய பிரதேசங்களில் ஒன்றான தர்மபுரம் பிரதேசத்தை பாதுகாப்பு படையினர் நேற்று கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். முல்லைத்தீவை புலிகளிடமிருந்து முழுமையாக மீட்டெடுக்கும் நோக்குடன் முன்னேறிவரும் இராணுவத்தின் 58வது படைப் பிரிவினர் தர்மபுரம் பிரதேசத்தைத் தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தப் பிரதேசத்தில் படை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இராணுத்தின் 58வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சாவிந்திர டி சில்வா தலைமையிலான படையினர் நேற்றுப் பிற்பகல் 2 மணியளவில் தர்மபுரம் நகரை கைப்பற்றி அங்கு தமது நிலைகளை பலப்படுத்தி வருவதாக பிரிகேடியர் மேலும் தெரிவித்தார். பரந்தன்-முல்லைத்தீவு நெடுஞ்சாலையிலுள்ள மிகப் பெரிய நகரங்களில் ஒன்றாக தர்மபுரம் பிரதேசம் கருதப்படுவதாக தெரிவித்த இராணுவப் பேச்சாளர், ஏ-9 நெடுஞ்சாலைக்கு கிழக்கே 15 கிலோ மீற்றர் தொலைவிலும் ஏ-35 பரந்தன்-முல்லைத்தீவு வீதியில் அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த சில தினங்களாகப் பாதுகாப்புப் படையினருக்கும், புலிகளுக்கும் இடையில் இந்தப் பிரதேசத்தில் இடம்பெற்ற கடுமையான மோதல்களின் போது இராணுவத்தின் கவனத்தை மிகவும் ஈர்த்திருந்த தர்மபுரம் பல வருடங்களுக்கு பின்னர் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

தர்மபுரம் நகரை கைப்பற்றும் படை நடவடிக்கைகளின் போது படையினர் மேற்கொண்ட தாக்குதல்களில் கொல்லப்பட்ட புலிகளின் 4 சடலங்களையும், புலிகளின் பெருந்தொகையான ஆயுதங்களையும் படையினர் மீட்டெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கைப்பற்றப்பட்ட தர்மபுரத்திலிருந்து முல்லைத்தீவை நோக்கிய படை நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக குறிப்பிட்ட பிரிகேடியர், இந்தப் பிரதேசத்தில் புலிகளால் மனிதக் கேடயங்களாக வைத்திருந்த பொது மக்களையும் புலிகள் அழைத்துச் சென்றுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

புலிகளின் 5 ஆவது ஓடு பாதையும் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

airstrip-1501.jpgபுலிகளின் 5ஆவது விமான ஓடுபாதையையும் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இராணுவத்தின் 632ஆவது படையணி இரணைமடுக்குளத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள விமான ஓடுபாதையை நேற்று மாலை கைப்பற்றியுள்ளதாகவும், இந்த விமான ஓடுபாதை 50 மீற்றர் அகலமும், 1000 மீற்றர் நீளமும்; கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடர்ந்த காட்டுப் பகுதிக்கு நடுவில் அமைக்கப்பட்டிருக்கும் மேற்படி விமான ஓடுபாதையைச் சுற்றி பதுங்கு குழிகளும், பாதுகாப்பு அகழிகளும் வெட்டப்பட்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

யாழ். குடாநாடு முழுவதும் தற்போது படையினர் வசம் – இராணுவப் பேச்சாளர்

_army.jpgயாழ்.  சுண்டிக்குளம் முழுவதும் நேற்று மாலையளவில் படையினரின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் யாழ். குடாநாடு முழுவதும் தற்போது படையினர் வசமாகியிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

சுண்டிக்குளத்துக்குள் நேற்றுக் காலை பிரிவேசித்த படையினர் மாலை வரை தொடர்ந்து புலிகளுடன் மேற்கொண்ட மோதலையடுத்தே அப்பகுதி முழுவதையும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாக பிரிகேடியர் கூறினார். ஆனையிறவுக்கு கிழக்காக அமைந்துள்ள சுண்டிக்குளம் பிரதேசத்தை கடற் புலிகள் தமது நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு முக்கியத்துவம் வாய்ந்த கேந்திர நிலையமாக பயன்படுத்தி வந்துள்ளனர்.

சுண்டிக்குளம் முழுவதையும் தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந் துள்ள படையினர் புலிகளால் கைவிடப் பட்டுச் சென்ற நூறுக்கும் அதிகமான கடற் புலிகளின் படகுகள், 400க்கும் மேற்பட்ட அமுக்க வெடிகள், 40 இற்கும் மேற்பட்ட யுத்த தாங்கிகள், இரண்டு லொறிகள், ஐந்து ட்ரக்டர்கள், ஒரு கனரக வாகனம், 1000 கிலோ வெக்ற் உடைகள், ஜெனரேட்டர் உள்ளிட்ட பல வெடிபொருட்களை அங்கிருந்து மீட்டுள்ளனர். புலிகளிடமிருந்து இதுவரை கைப்பற்றப்பட்டு வந்த இடங்களிலிருந்து இத்தனை கனரக வாகனங்களையும் படகுகளையும் கைப்பற்றியுள்ளமை இதுவே முதல் தடவையெனவும் பிரிகேடியர் சுட்டிக்காட்டினார்.

யாழ். குடாநாட்டில் சுண்டிக்குளம் பிரதேசம் மாத்திரமே இறுதியாக புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. இப்பகுதியையும் இராணுவத்தினர் நேற்று மாலை புலிகளிடமிருந்து விடுவித்துள்ளனர். யாழ். குடா நாடு முழுவதும் தற்போது படையினர் வசமாகியுள்ளது. இது இராணுவத்தினர் முன்னெடுத்து வந்த அயராத முயற்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகுமென்றும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.

55 ஆம் கட்டளைத் தளபதி பிரிகேடியர் பிரசன்ன சில்வா தலைமையிலான படையினரே சுண்டிக்குளம் முழுவதையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். நேற்றுக் காலை சுண்டிக்குளம் பகுதிக்குள் பிரிவேசித்த படையினருக்கும் புலிகளுக்குமிடையில் மாலை வரை கடும் மோதல் இடம்பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.