::யுத்த நிலவரம்

Friday, October 22, 2021

::யுத்த நிலவரம்

இலங்கையில் நடைபெறும் யுத்தம் தொடர்பான செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் மூவர் கைது

arrest.jpgபுலிகள் இயக்கத்தைச் சேர்ந்த மூவரை பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் கைது செய்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். முல்லைத்தீவை நோக்கி முன்னேறிவரும் இராணுவத்தின் 58வது படைப் பிரிவினரிடம் முரசுமோட்டை பிரதேசத்தில் வைத்தே படையினரால் இம் மூவரும் கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

படையினர் முன்னேறி நடத்திய தாக்குதல்களின் பின்னர் நடத்திய தேடுதலின் போது புலிகளின் நான்கு சடலங்கள், மோட்டார் சைக்கிள் ஒன்று, கனரக ட்ரக் வண்டி ஒன்றையும் மீட்டெடுத்துள்ளனர். இந்த மோதல்கள் நடந்த சில மணி நேரத்திற்கு பின்னர் அங்கிருந்து இரகசியமாக தப்ப முயன்ற மூவரையே படையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரில் அலக்ஸ் மற்றும் யசோதரன் ஆகிய இருவரும் புலிகள் இயக்கத்தின் முக்கிய உறுப்பினராவர். அலக்ஸ் என்பவர் பொட்டு அம்மானுடன் இணைந்து செயற்பட்டுள்ளதுடன், புலிகளின் புலனாய்வு துறையிலும் இணைந்து செயற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அத்துடன் யசோதரன் என்பவர் புலிகள் இயக்கத் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் பாதுகாப்பு பிரிவிலும் இணைந்து செயற்பட்டுள்ளார்.

யாழ் சுண்டிக்குளம் பகுதி முழுவதும் படையினர் வசம்

army-1401.jpgபுலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த சுண்டிக்குளம் பகுதியையும் இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர். இராணுவத்தின் 55வது படைப் பிரிவினரே இந்தப் பிரதேசத்தை இன்று (14.01.2009) மாலை தமது பூரண கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர். இதன்போது இராணுவம் யாழ் தீபகற்பத்தை முழுமையாக விடுவித்துள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது

புலிகளின் முக்கிய இலக்குகளில் நேற்று விமானத் தாக்குதல்

mi24-1912.jpgபுலிகளின் இனங்காணப்பட்ட முக்கிய இலக்குகள் மீது இலங்கை விமானப் படையினர் நேற்றுக்காலை முதல் மாலை வரை 9 தடவைகள் விமானத் தாக்குதல்களை மேற்கொண்டதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இவ்விமானத் தாக்குதல்களின்போது புலிகள் இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் மற்றும் சிரேஷ்ட உறுப்பினர்கள் அடிக்கடி கூடும் முக்கிய இடங்கள் இரண்டும், இரண்டு பீரங்கி நிலைகள் மீதும் இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

விமானப் படைக்குச் சொந்தமான எம்.ஐ – 24 மற்றும் ஜெட் ரக விமானங்களை பயன்படுத்தியே புலிகளின் இனங் காணப்பட்ட இந்த இலக்குகள் மீது ஒன்பது தடவைகள் விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார். முல்லைத்தீவு நோக்கி தரை வழியாக முன்னேறிவரும் படையினருக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையிலேயே நேற்றுக்காலை முதல் மாலை வரை மேற்படி பகுதிகளில் எட்டு தடவைகள் விமானத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

முல்லைத்தீவு நகருக்கு தெற்கே அமைந்துள்ள புலிகள் சந்திக்கும் முக்கிய இரகசிய இடமொன்றை இலக்குவைத்து நேற்றுக்காலை 9.10, 9.20, 11.30 மற்றும் மாலை 3.35 ஆகிய வேளைகளிலேயே விமானத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இதேவேளை முல்லைத்தீவுக்கு அருகிலுள்ள புலிகள் சந்திக்கும் இன்னுமொரு முக்கிய இரகசிய இடம் மீதும் காலை 10.15 மணி, நண்பகல் 12.10, 1.45 மாலை 3.15 ஆகிய நேரங்களில் ஜெட் விமானங்கள் மூலம் தாக்குதல்களை மேற்கொண்டன.

அதனைத் தொடர்ந்து மாலை 4 மணியளவில் யாழ்ப்பாணம், சுண்டிக்குளம் களப்புக்கு அருகில் இனங்காணப்பட்ட புலிகளின் இரண்டு பீரங்கி நிலைகளையும் விமானப் படையினரின் ஜெட் விமானங்கள் தாக்கியழித்தன. விமானப் படையின் உளவுப் பிரிவினர் இலக்குகளை நன்கு இனங்கண்டதன் பின்னரே தாக்குதலை நடத்தியிருப்பதாக கூறிய ஊடக மத்திய நிலைய அதிகாரி மேற்கொள்ளப்பட்ட ஒன்பது தாக்குதல்களும் வெற்றியளித்திருப்பதனை விமான ஓட்டிகள் உறுதி செய்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

முல்லை. மாவட்ட வைத்தியசாலை படையினர் வசம் – இராணுவப் பேச்சாளர்

_army.jpgபுலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அடிக்கடி வந்து செல்லும் முக்கிய இடமொன்றை இலக்கு வைத்து விமானப் படையினர் நேற்று கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளனர். புதுக்குடியிருப்பு காட்டுப் பகுதியில் அமைந்துள்ள இந்த இடத்தை பிரபாகரன் இரகசியமாக மறைந்திருக்க பயன்படுத்தியுள்ளதாகவும் விமானப்படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார்.

விமானப் படைக்குச் சொந்தமான ஜெட் ரக போர் விமானங்களைப் பயன்படுத்தி நேற்று மாலை 6.00 மணியளவில் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். புலிகள் இயக்கத் தலைவரும், அவரது முக்கிய சகாக்களும் புதுக்குடியிருப்பு காட்டில் அமைந்துள்ள இந்தப் பிரதேசத்தை ஒன்று கூடி ஆராயும் பிரதேசமாகவும் பயன்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முல்லைத்தீவை நோக்கி முன்னேறிவரும் படையினருக்கு இராணுவ மற்றும் விமானப் படையின் புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவல்களையடுத்தே உரிய இலக்குகள் மீது விமானப் படையின் ஜெட் விமானங்கள் தாக்குதல்களை நடத்தியதாக தெரிவித்த விங் கமாண்டர் ஜனக நாணயக்கார, தாக்குதல்கள் வெற்றியளித்துள்ளதாக விமான ஓட்டிகள் உறுதி செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, முள்ளியாவலை தண்ணீரூற்று பிரதேசத்தில் அமைந்துள்ள முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையை பாதுகாப்புப் படையினர் நேற்று கைப்பற்றியுள்ளனர். முன்னேறிவரும் இராணுவத்தின் 59 வது படைப் பிரிவினர் இந்த வைத்தியசாலையை நேற்றுக் கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இந்த வைத்தியசாலையின் சுற்றுப்புறம் முழுவதிலும் புலிகளின் பாரிய பதுங்கு குழிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் வைத்தியசாலையும் பங்கர்களாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். வைத்தியசாலையில் பொருத்தப்பட்டிருந்த மின்விசிறிகள், குளிரூட்டிகள், சிகிச்சை மற்றும் சத்திர சிகிச்சை அறையிலுள்ள உபகரணங்களையும் புலிகள் எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவித்த அவர், இங்குள்ள அறைகள் முழுவதிலும் மண் மூடைகளைக் காணக்கூடியதாக இருந்ததாகவும் குறிப்பிட்டார்.

சுற்றிவர கட்டடங்களைக் கொண்ட வைத்தியசாலையை காயமடைந்த புலிகளுக்கு சிகிச்சை வழங்குவதற்கு பாவிக்கப்பட்டுள்ள தடயங்களும் காணப்படுவதாகவும் இராணுவப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

முல்லைத்தீவிலிருந்து மேலும் 176 சிவிலியன்கள் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருகை

ahathi-1.jpg
முல்லைத்தீவிலிருந்து புலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்த 176 சிவிலியன்கள் நேற்று பாதுகாப்பு படையினரிடம் தஞ்சமடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். 176 சிவிலியன்களில் பெருந்தொகையான சிறுவர், சிறுமிகள் அடங்குவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

சோரன்பற்று, இயக்கச்சி மற்றும் வெற்றிலைக்கேணி பிரதேசங்களை நோக்கி 107 சிவிலியன்கள் வருகை தந்துள்ளனர். இவர்கள் இராணுவத்தின் 53 வது படைப் பிரிவினரிடம் தஞ்சமடைந்துள்ளனர். ஓமந்தை பிரதேசத்தை நோக்கி 60 சிவிலியன்கள் வருகை தந்துள்ளனர். ஒன்பது சிறுமிகள், ஏழு சிறுவர்கள், 27 ஆண்கள் மற்றும் 20 பெண்கள் இவர்களுள் அடங்குவர். வட்டக்கச்சி பிரதேசத்தை நோக்கி ஐந்து சிவிலியன்கள் வருகை தந்துள்ளனர். இந்த ஐவரில் 3 ஆண்களும், 2 பெண்களும் அடங்குவர்.

இதேவேளை, இரணைமடு பிரதேசத்தை நோக்கி நான்கு சிவிலியன்கள் வருகை தந்துள்ளனர். இந்த நால்வரில் இரண்டு குழந்தைகள், ஒரு பெண் மற்றும் ஒரு ஆணும் அடங்குவதாக இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

வன்னியிலிருந்து வருபவர்களின் நலன்களை கவனிக்க ரூ.30 மில். ஒதுக்கீடு – அரசாங்கம் அவசர ஏற்பாடு

a_c_m_razik_secretary1.jpgகிளிநொச்சி முல்லைத்தீவுப் பகுதிகளிலிருந்து வவுனியாவுக்கு வருகை தரும் பொதுமக்களின் நலன்புரி நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் 30 மில்லியன் ரூபா நிதியினை வழங்கியுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் செயலாளர் ஏ. சீ. எம். ராசிக் தெரிவித்தார்.

இதுவரை 1,200 ற்கும் மேற்பட்டவர்கள் முல்லைத்தீவு கிளிநொச்சிப் பகுதிகளிலிருந்து வவுனியாவுக்கு வந்துள்ளதுடன் தொடர்ந்தும் மக்கள் வருகை தந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்த அவர், இம் மக்களுக்கான அடிப்படை வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மீள் குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண அமைச்சு மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை மேற்படி அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வருகை தரும் மக்களுக்கான நலன்புரி விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை எடுக்கும் வகையில் இன்று ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பெஷில் ராஜபக்ஷ எம்.பி. யின் தலைமையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கலந்துகொள்ளும் முக்கிய கலந்துரையாடலொன்று நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் :-

விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து அரச கட்டுப் பாட்டுப் பகுதியான வவுனியாவுக்கு வந்து சேர்ந்த மக்களுக்காக வவுனியா மெனிக்பாம் மற்றும் நெலுக்குளம் பகுதிகளில் தற்காலிக வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் அடம்பன்குளம், பூசனிப்பிட்டி பகுதிகளிலும் மேலும் தற்காலிக வீடுகளை அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வவுனியாவில் தங்கியிருப்போருக்கான சமைத்த உணவு, உலருணவுகள், உடைகள், மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட அன்றாட தேவைகளைப் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கைகள் உரிய முறையில் இடம்பெற்று வருவதாகத் தெரிவித்த அவர் இது தொடர்பில் வவுனியாவில் உள்ள அரச அதிகாரிகளுக்கு உரிய பணிப்புரைகளும் வழங்கப்பட்டு ள்ளதாகவும் தெரிவித்தார்.

900 சதுர கிலோமீற்றருக்குள் புலிகள் முழுமையாக முடக்கம்

_army.jpgஆனையிறவுக்கு கிழக்கே அமைந்துள்ள கெவில் பிரதேசத்தை பாதுகாப்பு படையினர் முழுமையாக கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். ஆனையிறவை கைப்பற்றிய படைப்பிரிவுகளில் ஒன்றான இராணுவத்தின் 53வது படைப்பிரிவினர் இந்தப் பிரதேசத்தை தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஆனையிறவைக் கைப்பற்றி அங்கிருந்து கிழக்கை நோக்கி முன்னேறிய 53வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் கமல் குணரத்ன தலைமையிலான படையினர் கெவில் பிரதேசத்தை வந்தடைந்துள்ளனர். வெற்றிலைக்கேணிக்கு தென்கிழக்கு கரையோரத்தில் அமைந்துள்ள கெவில் பிரதேசம் புலிகளின் மற்றுமொரு பலமான நிலையாக விளங்கியுள்ளது.

கடல் மார்க்கமான சில நடவடிக்கைகளுக்கு புலிகள் இந்தப் பிரதேசத்தைப் பயன்படுத்தியுள்ளதாக தெரிவித்த இராணுவப் பேச்சாளர், தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ள வெற்றி லைக்கேணி முதல் கெவில் வரையான பிரதேசத்தை பலப்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.  புலிகளால் இந்தப் பிரதேசங்களில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளையும், மிதிவெடிகளையும் மீட்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, வடக்கு, கிழக்கின் பெரும்பாலான பகுதிகளில் பரந்திருந்த புலிகளை தற்பொழுது படை நடவடிக்கைகள் மூலம் 900 சதுர கிலோமீற்றர் பரப்புக்குள் முடக்கி விட முடிந்துள்ளதாக தெரிவித்த பிரிகேடியர் இராணுவத்தின் ஒன்பது பிரிவினர் எஞ்சியுள்ள பிரதேசங்களை முழுமையாக கைப்பற்றும் நோக்கில் தொடர்ந்தும் முன்னேறி வருவதாகவும் குறிப்பிட்டார்.

முகமாலை தொடக்கம் ஆனையிறவு வரையான பிரதேசம் கைப்பற்றப்பட்டதையும், ஏ-9 பிரதான வீதி முழுமையாக விடுவிக்கப்பட்டதையும் அடுத்து, யாழ். குடாநாடு முழுவதும் படையினரின் பூரணகட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளதாகவும் பிரிகேடியர் குறிப்பிட்டார்.

சுண்டிக்குளமும், அதனை அண்மித்த சிறியதொரு பிரதேசம் மாத்திரம் யாழ். குடாவில் கைப்பற்றப்பட வேண்டியுள்ளதாக குறிப்பிட்ட அவர், யாழ். குடாவில் இருந்த புலிகளின் அச்சுறுத்தல் தற்பொழுது நீங்கியுள்ள தாகவும் குறிப்பிட்டார். விடுவிக்கப்பட்ட ஏ-9 பிரதான வீதியின் முகமாலை தொடக்கம் ஓமந்தை வரையான வீதியில் நிலைக் கொண்டுள்ள படையினர், கடுமையான தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன் இடைக்கிடையே வீதிகளில் ஏற்பட்டுள்ள உடைவுகள் மற்றும் வெடிப்புக்களை திருத்தும் நடவடிக்கைகளை இராணுவத்தின் பொறியியல் பிரிவினர் மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, கிளிநொச்சிக்கு கிழக்கே உள்ள வட்டக்கச்சி பிரதேசத்தை கைப்பற்றும் நோக்கில் 57 வது படைப்பிரிவினர் கடுமையான தாக்குதல்களை நடத்தி முன்னேறி வருகின்றனர். அத்துடன், பரந்தனுக்கு கிழக்கே அமைந்துள்ள முரசுமோட்டை பிரதேசத்தை முழுமையாக விடுவிக்கும் நோக்குடன் முன்னேறிவரும் இராணுவத்தின் 58 வது படைப்பிரிவினர் விசுவமடு பிரதேசத்தை நோக்கி முன்னேறி வருகின்றனர்.

இரணைமடு பகுதியிலுள்ள புலிகளின் விமான ஓடுபாதைக்கு அண்மித்த பகுதியில் இருதரப்பினருக்கு மிடையில் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வரும் அதேசமயம், 59வது படைப்பிரிவினர் முல்லைத்தீவுக்கு மேற்கை நோக்கி முன்னேறிவருகின்றனர். இந்தப் பிரதேசத்தில் அமைந்துள்ள புலிகளின் பாதுகாப்பு முன்னரங்கு நிலைகளையும், மண் அரண்களையும் இலக்கு வைத்து கடுமையான தாக்குதல்களை படையினர் மேற்கொண்டு வருவதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, பெரியகுளம், புதுக்குடியி ருப்பு மற்றும் கற்குளம் பகுதிகளில் பல தடவைகள் இடம்பெற்ற மோதல்களுக்கு பின்னர் படையினர் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது கொல்லப்பட்ட புலிகளின் எட்டு சடலங்களை படையினர் மீட்டெடுத்துள்ளனர். அத்துடன் ரி-56 ரக துப்பாக்கிகள் 6 அதற்கு பயன்படுத்தும் ரவைகள் 3,850 மற்றும் காட்டுப் பிரதேசத்தில் இருப்பவர்கள் அணியும் உடைகள் படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக மீட்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார மேலும் தெரிவித்தார்.

29 பொதுமக்கள் பலி 200 பேர் காயம்

kili-01.jpgகிளி நொச்சி பகுதியில் நவம்பர் மாதம் தொடக்கம் கடந்த சனிக்கிழமை வரை ஷெல் மற்றும் விமானத் தாக்குதலினால் 29 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 200 பேர் காயமடைந்துமுள்ளதாக வன்னியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.வன்னிப்பகுதியில் இடம்பெற்று வரும் தொடர்ச்சியான ஷெல் மற்றும் விமானத் தாக்குதல்கள் காரணமாக கொட்டும் மழைக்கு மத்தியிலும் கிளிநொச்சி மாவட்டத்தின் கிழக்குப் பிரதேச மக்கள் விசுவமடு பகுதியை நோக்கி பெரும் எண்ணிக்கையில் இடம்பெயர்ந்துவருகின்றனர்.  கடந்த நவம்பர் மாதத்திலிருந்து சனிக்கிழமை வரையிலான காலப்பகுதியில் கிளிநொச்சி மாவட்டத்தில் மாத்திரம் 6 குழந்தைகள் உட்பட 29 சிவிலியன்கள் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தாக்குதல்களில் 36 பிள்ளைகள் உட்பட 200 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்தத் தாக்குதல்களினால் பொதுமக்கள் மத்தியில் உயிரிழப்புக்கள் அதிகரித்துள்ளதுடன், பலரும் காயமடைந்துள்ளனர். இதனால், அங்கு மக்கள் மத்தியில் பெரும் பதற்ற நிலைமை தோன்றியிருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

எல்ரிரிஈயினர் ஒன்றுகூடும் இடங்களை இலக்குவைத்து விமானத்தாக்குதல் –

mi24-1912.jpgஇலங்கை விமானப் படையினரின் எம்ஐ.24 ஹெலிகொப்டர் மற்றும் ஜெட் விமானங்களைப் பயன்படுத்தி எல்ரிரிஈயினர் ஒன்று கூடும் இடங்களை இலக்கு வைத்து மூன்றாவது செயலணி படையினருக்கும் 57வது டிவிசன் படையினருக்கும் உதவியாக இரணமடுப்பகுதியில் இன்று (ஜன:12) காலை தாக்குதல் நடத்தியுள்ளனர் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விமானப்படைப் பேச்சாளர் விங்கமான்டர் ஜனக நானயக்கார தகவல் தருகையில் இன்று காலை 8.15 மணியளவில் இரணமடுவுக்கு 1 கி.மீ.தென்கிழக்காக எல்ரிரிஈயினர் ஒன்று கூடும் இடத்தை எம்ஐ 24 ஹெலிபொப்டரினாலும் இரணமடுவுக்கு 2 கி.மீ. வடக்காக மற்றுமொரு ஒன்று கூடும் இடத்தை காலை 9.00 மணியளவில் ஜெட்விமானங்களினால் தாக்கியதாகவும் தெரிவித்தார்.

ஏ-35 பாதையை கைப்பற்றும் தாக்குதல் தொடர்கிறது

SL_Army_in_Killinochieதாக்குதல் படையணியான 58வது டிவிசன் படையினர் ஏ-35 (பரந்தன் -முல்லைத்தீவு) வழியே மேற்கிலிருந்து கிழக்கை நோக்கி நேற்று (ஜன:11) தாக்குதல் நடத்தி குறிப்பிடத் தக்க தூரத்தை முன்னேறியுள்ளனர் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நேற்றுப் பகல் பொழுதில் முரசுமோட்டை மற்றும் வட்டக்கச்சி பகுதிகளுக்கு வடக்காக எஞ்சியிருக்கும் எல்ரிரிஈ மறைவிடங்களை தேடி அழிக்கும் பனியில் ஈடுபட்டு வந்தனர்.

முரசுமோட்டைப் பகுதியில் தாக்குதல் நடத்திய படையினர் 4 பயங்கரவாதிகளின் சடலங்களையும் இரு ரி-56 ரக துப்பாக்கியையும் வட்டக்கச்சிப் பகுதியில் தாக்குதல் நடத்திய படையினர் மூன்று பயங்கரவாதிகளின் சடலங்களையும் கைபற்றியுள்ளதாக களநிலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.