மொகமட் அமீன்

மொகமட் அமீன்

சிரஸ, சக்தி, எம்.டி.வி தொலைக்காட்சி நிறுவனம் தாக்குதல். வழமையான சேவைகள் ஸ்தம்பிதம்.

sirasa.jpgகொழும்பு பன்னிப்பிட்டிய தெப்பானமவில் அமைந்துள்ள மஹாராஜா நிறுவனத்தின் எம்டிவி, எம்பிசி ஊடக நிறுவன பிரதான கலையத்தின் மீது இன்று அதிகாலை 2.10 மணியளவில் இனம்தெரியாத நபர்களினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பிரதான கலையகம் பாரிய சேதத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்த தாக்குதல் காரணமாக எம்பிசி நிறுவனத்தின் தொலைக்காட்சி சேவைகளான எம்டிவி, சிரச, மற்றும் சக்தி தொலைக்காட்சி சேவைகளும் இன்று நண்பகல் வரை தமது வழமையான சேவைகளை நடத்தவில்லை.  இதுவரை பிந்திய செய்தி என்றடிப்படையில் இத்தாக்குதல் சம்பவத்தையே மூன்று தொலைக்காட்சி சேவைகளும் ஒளிபரப்பி வருகின்றன. வழமையான நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதில் பிரதான கலையகம் பாதிக்கப்பட்டுள்ளமையினால் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன என தகவல் தெரிவிக்கின்றன.

இலக்கத்தகடற்ற வெள்ளை வேனில் வந்த சுமார் 15 தொடக்கம் 20 பேர் வரையிலான ஆயுதம் தாங்கிய கும்பலே இத்தாக்குதலை நடத்தியதாகவும் அவர்களிடம்  டி 56 ரக துப்பாக்கிகளும், கைத்துப்பாக்கிகளும், கைகுண்டுகளும் இருந்ததாகவும்  தெரிவிக்கப்படுகின்றது. அங்கு சென்ற பொலிஸார் கைக்குண்டு ஒன்றை மீட்டதாகவும் கூறியுள்ளனர்.

இனந்தெரியாத கும்பல் கலையகத்துக்குள் நுழைந்து பல இடங்களில் கைக்குண்டு வீச்சுகளை நடத்தியதுடன் துப்பாக்கி சூட்டுகளையும் பொல்லுகளாலும் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். இதன் காரணமாக தொலைக்காட்சி ஒளிபரப்பின் பிரதான கலையகம் தீயுண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அவ்விடத்திற்கு விரைந்த தீயணைக்கும் படையினர் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும்,  கலையகத்தில் பொறுத்தப்பட்டிருந்த அதிநவீன ஒளி,  ஒலி பரப்புச் சாதனங்கள் முற்றாக சேதமாக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் பலகோடிக்கணக்கான ரூபாய்கள் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சம்பவத்தின்போது, ஆயுததாரிகள் அங்கு சேவையில் இருந்த பாதுகாப்பு ஊழியர்களையும் தாக்கியுள்ளனர். இதன்போது பல ஊழியர்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தில் நேற்றைய தினமும் இலக்கத்தகடற்ற வெள்ளை வானின் நடமாட்டம் இருந்ததாகப் பொலிஸிலும் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக மஹரகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த வெள்ளிக்கிழமையன்றும் தெப்பானம கலையகம் மீது பெற்றோல் குண்டு வீச்சு நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
sirasa-02.jpg

காஸா வட பகுதியில் கடும் சமர்; சில பகுதிகள் இஸ்ரேல் வசம்

gaasaa.jpgகாஸா மீது தரைமார்க்கமான படையெடுப்பை நேற்று இஸ்ரேல் ஆரம்பித்தது. உலக நாடுகளின் அறிவுரைகளை உதாசீனம் செய்த இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினரின் காட்டுப்பாட்டில் உள்ள காஸாவை நோக்கி படைகளை நகர்த்தியது. இதனால் இரு தரப்புக்குமிடையே மூர்க்கமான மோதல்கள் வெடித்தன. ஹமாஸின் தொடர்ச்சியான ரொக்கட் தாக்குதலையும், வீதியோரக் குண்டுத் தாக்குதல்களையும் எதிர்கொள்ள முடியாமல் திணறிய இஸ்ரேல் இராணுவத்துக்கு வான்படைகள் உதவின.

வீதியோரங்களில் நின்ற ஹமாஸ் தற்கொலைப் போராளிகள் மீது விமானங்கள் குண்டு மழை பொழிய யுத்த டாங்கிகள், கவச வாகனங்கள் ஆட்டிலறிகளுடன் இஸ்ரேல் தரைப்படை காஸாவை நோக்கி நகர்ந்தன. காஸாவின் வடக்குப் பகுதி நோக்கி நகர்ந்த இஸ்ரேல் இராணுவத்தை ஜபாலியா டெல்ட் ஹனூன், டெல்ட் லாஹ்யா என்ற இடங்களில் வைத்து ஹமாஸ் அமைப்பினர் தொடர்ச்சியான ரொக்கட் தாக்குதலை நடத்தினர். இரு தரப்பாருக்குமிடையே இவ்விடங்களில் கடும் சமர் மூண்டதால் விண்ணைப் பிளக்கும் வெடியோசைகள் கேட்டதாக தப்பியோடிய பொதுமக்கள் தெரிவித்தனர்.

வான் படைகளின் தொடர்ச்சியான குண்டுத் தாக்குதலின் உதவியுடன் முன்னேறிய இஸ்ரேல் படையினர் காஸாவின் வடக்குப் பகுதியின் ஒரு பகுதியைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். ஹமாஸின் முக்கியஸ்தர்கள் சுரங்கப் பாதைகளுக்குள் மறைந்திருந்து வான் தாக்குதல்களிலிருந்து தப்பியுள்ளதாக ஹமாஸின் வானொலியை இடைமறித்துக் கேட்ட இஸ்ரேல் இராணுவத்தினர் தெரிவித்தனர். மத்திய கிழக்கில் தற்போது மூண்டுள்ள நெருக்கடி பாரிய விளைவுகளை ஏற்படுத்துமென எச்சரித்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி தாக்குதலை உடனடியாக நிறுத்தி அப்பாவிகளின் உயிர்களைக் காக்க உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். ஐ. நா. செயலாளர் பான்கி மூன் காஸா மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதலைக் கண்டித்துள்ளதுடன் அரபு நாடுகள் இது விடயத்தில் பொறுமையுடன் நடந்துகொள்ள வேண்டுமென வேண்டியுள்ளார். அகதிகளாகியுள்ள காஸா மக்களைக் காப்பாற்ற அரபு லீக் நடவடிக்கையெடுப்பது அவசியமென இஸ்லாமிய நாடுகள் தெரிவித்துள்ளன.

மோட்டார் போக்குவரத்து ஆணையாளரின் வாகனப்பதிவுக்கான புதிய அறிவித்தல்

cars.jpg2009 ஆம் ஆண்டிற்கான மோட்டார் வாகனப் பதிவிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தொடர்பாக புதிய அறிவிப்பை மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பிற்கிணங்க, குறித்த வாகனத்தின் தெளிவான இரு வர்ணப் புகைப்படங்களை வாகன உரிமையாளர் சமர்பிக்கவேண்டும். ஒரு புகைப்படம் வாகனத்தின் முன் பகுதியும், மற்றையது வாகனத்தின் இடது அல்லது வலது புறத்தையும் தெளிவாகக் காட்டும் வகையில், தபால் அட்டை அளவினைக் கொண்ட படமாக இருக்கவேண்டும்.

அத்துடன், புகைப்படத்தின் மறுபக்கத்தில் வாகனத்தின் அடிச்சட்ட இலக்கத்தை தெளிவாகக் குறிப்பிட்டு, வாகன உரிமையாளரின் அடையாள அட்டை இலக்கத்துடன் அந்தப் புகைப்படம் உரிமையாளரால் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும், மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார

மத்திய வங்கி குண்டுவெடிப்பு பிரதான சந்தேக நபர் கைது

centralbank.jpgமத்திய வங்கி குண்டுவெடிப்புடன் தொடர்பான பிரதான சந்தேக நபரை வவுனியா இரட்டைபெரியகுளம் சோதனைச்சாவடியில் வைத்து கைது செய்ததாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். கைதான சந்தேக நபர், வவுனியா மாவட்ட நீதிவான் முன்னிலையில் கடந்த 30 ஆம் திகதி ஆஜர் செய்யப்பட்டார்.

சிவில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்த தகவலை அடுத்து, இன்ஸ்பெக்டர் அர்ஜுன கொடிகாரவின் தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினர் சந்தேக நபரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். மத்திய வங்கி குண்டுவெடிப்பின் பிரதான சந்தேக நபர் இதுவரை கைது செய்யப்படாத நிலையில், நீதிமன்றம் அவரைக் கைது செய்வதற்கான பிடியாணையை பிறப்பித்திருந்தது. மாவட்ட நீதிவான் சந்தேக நபரை, எதிர்வரும் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

காஸாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை கண்டித்து அம்பாறை மாவட்டத்தில் பாரிய ஆர்ப்பாட்டங்கள்

israeli-aircraft.jpg
பாலஸ்தீனின் காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திவரும் மிலேச்சத்தனமான வான் தாக்குதல்கள் மூலமான படுகொலைகளைக் கண்டித்து நேற்று வெள்ளிக்கிழமை அம்பாறை மாவட்டத்தில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. நேற்று ஜும்ஆ தொழுகையின் பின் முஸ்லிம் பிரதேசங்களில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டங்களில் பெருந்தொகையான முஸ்லிம் மக்கள் உணர்வுபூர்வமாகக் கலந்துகொண்டனர்.

இஸ்ரேல் மீதும், உலக பொலிஸ்காரன் அமெரிக்கா மீதும் மிக உச்சக்கட்ட சீற்றம் கொண்டவர்களாக முஸ்லிம் மக்கள் இந்த ஆர்ப்பாட்டங்களில் தமது உணர்வலைகளை வெளிப்படுத்தினர். பாலஸ்தீன காஸாப் பகுதியில் இஸ்ரேல் மேற்கொள்ளும் மனிதாபிமானமற்ற கொடூர செயல்களையும் தாக்குதல்களையும் முஸ்லிம்கள் மத்தியில் உணர்வுபூர்வமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நேற்று ஜும்ஆ தொழுகைக்கான குத்பா பிரசங்கங்கள் இடம்பெற்றன.

அதேவேளை, நேற்று ஜும்ஆ தொழுகையின் பின் காஸாவில் இஸ்ரேலின் மிலேச்சத்தனத்தால் உயிர்நீத்த மக்களுக்காக ஜனாஸாத் தொழுகை நிறைவேற்றப்பட்டது. நேற்று சுபஹு தொழுகையின் பின் பாலஸ்தீன காஸா மக்களின் இன்றைய இக்கட்டை நீக்கக்கோரிய விசேட துஆ பிரார்த்தனைகளும் பள்ளிவாசல்களில் இடம்பெற்றன.

நிந்தவூரில்…..

நிந்தவூரில் ஜும்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் ஏற்பாட்டில் இது தொடர்பாக இடம்பெற்ற பாரிய ஆர்ப்பாட்டத்தில் பெருந்தொகையான மக்கள் கலந்துகொண்டனர். நிந்தவூர் ஜும்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் மௌலவி ஏ.எல். இமாம் தலைமையில், ஜும்ஆ பள்ளிவாசல் முன்பாக காஸா மக்களுக்கு எதிராக இஸ்ரேல் இழைக்கும் மனிதாபிமானமற்ற காட்டுமிராண்டித்தன கொலைவெறியைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. மேலும், மௌலவி இமாம் காஸா மக்களுக்காக விசேட துஆ பிரார்த்தனை நடத்தியதுடன், மரணித்த மக்களுக்காக ஜனாஸாத் தொழுகையையும் நடத்தினார்.

கல்முனைக் குடியில்

இத்தகைய பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று கல்முனைக்குடி ஜும்ஆ பள்ளிவாசல் முன்பாகவும் இடம்பெற்றது. கல்முனைக்குடி முஸ்லிம் ஜனாஸா நலன்புரிச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்திலும் பெருந்தொகையான முஸ்லிம் மக்கள் கலந்துகொண்டனர். அமெரிக்க, இஸ்ரேல் எதிர்ப்பு சுலோக அட்டைகளை இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் ஏந்தியிருந்ததுடன், உணர்ச்சிபூர்வமான கோஷங்களையும் எழுப்பினர். அத்துடன், இஸ்ரேல் தேசியக் கொடியும், இஸ்ரேல் பிரமதரின் கொடும்பாவியும் ஆர்ப்பாட்டக்காரர்களால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.

மேலும், அம்பாறை மாவட்டத்தின் வேறு முஸ்லிம் பிரதேசங்களிலும் இஸ்ரேலுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

மாலைதீவு ஜனாதிபதி வருகை: விமான நிலையத்தில் செங்கம்பள வரவேற்பு

naseed-mahi.jpg
உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்த மாலைதீவு புதிய ஜனாதிபதி மொஹமட் அன்னி நஸீதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று விமான நிலையத்தில் வரவேற்றார். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நேற்றுக் காலை விசேட விமானம் மூலம் வந்தடைந்த மாலைதீவு ஜனாதிபதிக்கு விமான நிலையத்தில் செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. மாலைதீவு ஜனாதிபதியும், அவரது பாரியாரும் விமானத்திலிருந்து இறங்கியதும் சிறார்களால் மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது பாரியார் சிரந்தி ராஜபக்ஷவும் கைலாகு செய்து, ஆரத்தழுவி வரவேற்றனர்.

பாரம்பரிய முறையில் மங்கள வாத்தியங்களுடன் வரவேற்று அழைத்துச் செல்லப்பட்ட மாலைதீவு ஜனாதிபதி விமான நிலையத்தில் இராணுவத்தினரால் வழங்கப்பட்ட மரியாதை அணிவகுப்பையும் ஏற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து விமான நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த விசேட பிரமுகர்களுக்கான புத்தகத்திலும் அவர் கையொப்பமிட்டார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள மாலைதீவு ஜனாதிபதியுடன் அந்நாட்டு அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 25 பேர் கொண்ட தூதுக்குழுவினரும் வருகை தந்துள்ளனர்.

மொஹமட் அன்னி நஸீத் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் இலங்கைக்கான முதலாவது விஜயம் இதுவாகும். 2009 ஆம் ஆண்டு புத்தாண்டு பிறந்த பின்னர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட முதலாவது ஜனாதிபதியாவார். நேற்றுப் பிற்பகல் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் நஸீத்துக்கும் இடையிலான இரு தரப்பு சந்திப்பு நேற்றுப் பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இரு நாட்டு உறவுகளை மேலும் மேம்படுத்துதல் தொடர்பாகவும் பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பாகவும் இந்த சந்திப்பின் போது இரு நாட்டு தலைவர்கள் விரிவாக ஆராந்துள்ளனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று இரவு மாலைதீவு ஜனாதிபதிக்கு விசேட இரவு விருந்துபசாரமொன்றையும் வழங்கினார். இது ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. நாளை வரை தங்கியிருக்கும் மாலைதீவு ஜனாதிபதி பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன உட்பட முக்கியஸ்தர்கள் பலரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

மாலைதீவு ஜனாதிபதி நஸீத் இன்று இலங்கை வருகை

maldives_president.jpgமாலைதீவு புதிய ஜனாதிபதி மொஹமட் அன்னி நஸீத் இரண்டு நாள் உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (2) இலங்கை வருகிறார்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று காலை 10.30 மணியளவில் வந்தடையும் மாலைதீவு ஜனாதிபதியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வரவேற்கவுள்ளார். விமான நிலையத்தில் அவருக்கு பெரு வரவேற்பு வழங்கப்படவுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று இலங்கை வரும் மாலைதீவு ஜனாதிபதியுடன் அந்நாட்டு அமைச்சர்கள், உயர் அதிகாரி உள்ளிட்ட 25 பேர் கொண்ட தூதுக்குழுவினரும் வருகை தரவுள்ளனர்.

மொஹமட் அன்னி நஸீத் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் இலங்கைக்கான முதலாவது விஜயம் இதுவாகும். எதிர்வரும் 4ம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் மாலைதீவு ஜனாதிபதி இன்று பிற்பகல் 3.45 மணியளவில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகமவை சந்தித்த பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

அதனைத் தொடர்ந்து இன்று மாலை 5.00 மணியளவில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் அன்னி நஸீத்துக்கும் இடையிலான இரதரப்பு சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது. இரு நாட்டு உறவுகளை மேலும் மேம்படுத்துதல் தொடர்பாகவும் பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பாகவும் இந்த சந்திப்பின் போது வரிவாக ஆராயப்படவுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று இரவு மாலைதீவு ஜனாதிபதிக்கு விஷேட இரவு விருந்துபசாரமொன்றையும் வழங்கவுள்ளார். இது ஜனாதிபதி மாளிகையில் இடம்பெறவுள்ளது. இதேவேளை, மாலைதீவு ஜனாதிபதிக்கும் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நாளை ஹில்டன் ஹோட்டலில் இடம்பெறவுள்ளது.

இலங்கையிலுள்ள சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களை சந்திக்கும் மாலைதீவு ஜனாதிபதி இலங்கை வர்த்தக சம்மேளன பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். மாலைதீவு ஜனாதிபதியுடன் அந்நாட்டின் வெளிவிவகார, கலாசார, நீதி மற்றும் பொருளாதாரத்துறை அமைச்சர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் வருகை தரவுள்ளனர்.

நாளை மறுதினம் காலை (4) மாலைதீவு ஜனாதிபதி தனது இருநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு நாடுதிரும்பவுள்ளார்.

இரவு விடுதி தீவிபத்தில் 60 பேர் உயிரிழப்பு.

bangkok-nightclub.jpgதாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது இரவு விடுதியில் ஏற்பட்ட பெரும் தீவிபத்தில் 60 பேர் உயிரிழந்தனர். ( 31 ) இந்த விபரீதம் நடந்தது. 200க்கும் மேற்பட்டோர் இந்த பயங்கர தீவிபத்தில் படுகாயமடைந்தனர். பாங்காக்கின் எக்கமாய் மாவட்டத்தி்ல உள்ள சந்திகா கிளப்பி்ல் நேற்று இரவு புத்தாண்டை வரவேற்கும் வகையில் பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அப்போது சிலர் பட்டாசுகளை வெடித்துள்ளனர். இதில் ஏற்பட்ட தீப்பொறி பற்றி தீப்பிடித்துக் கொண்டது. இதையடுத்து அந்த இரண்டு மாடிக் கட்டட கிளப்பும் தீயில் சிக்கி கருகியது. பாதிக் கட்டடம் இடிந்து விழுந்தது. இடிபாடுகளிலும், தீயிலும் சிக்கி 60 பேர் உயிரிழந்தனர். 212 பேர் படுகாயமடைந்தனர். 30 பேரின் உடல்கள் அடையாளம் முடியாத அளவுக்கு கருகிப் போய் விட்டது. பான்டு வாத்தியக் குழுவினர் பாடல்களைப் பாடிக் கொண்டிருந்த இடத்திற்கு அருகேதான் முதலில் தீப்பிடித்ததாக போலீஸ் அதிகாரி பிரவீத் கான்ட்வால் கூறியுள்ளார்.

தீவிபத்து நடந்த கிளப் அந்தப் பகுதியில் பிரபலமானது. உள்ளூர்க்காரர்கள் தவிர வெளிநாட்டினரும் பெருமளவில் அங்கு குழுமியிருந்தனர். இறந்தவர்களில் வெளிநாட்டினரும் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. காயமடைந்தவர்கள் 14 மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.