புன்னியாமீன் பி எம்

புன்னியாமீன் பி எம்

‘புகை’ என்னும் ‘பகை”யை பகைக்க முடியாத மனிதன், பகையை புகையாய் ஊதித் தள்ளி விடுகிறான். இன்று மே 31: உலக புகைத்தல் எதிர்ப்பு நாள் – புன்னியாமீன்

may-31.jpgஉலக புகைத்தல் எதிர்ப்பு நாள் உலகெங்கும் மே 31 ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது.  உலக சுகாதார நிறுவனத்தின் World Health Organization   உறுப்பு நாடுகள் சேர்ந்து இந்நாளை 1987ம் ஆண்டில் சிறப்பு நாளாக அறிவித்தது.  1988ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தின் WHA  40.38  தீர்மானப்படி ஏப்ரல் 07ஆம் திகதி இத்தினம் அனுஸ்டிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டாலும்கூட,  அதேயாண்டில் WHA 42.19  தீர்மானப்படி மே 31ஆம் திகதி அனுஸ்டிப்பதற்கு முடிவெடுக்கப்பட்டது.

உலகில் காணப்படும் மெல்லக் கொல்லும் நச்சுத் தன்மை மிக்க தாவரங்களில் புகையிலையும் ஒன்றாகும்.  இத்தாவரத்தின் தண்டுப் பகுதியைவிடவும்,  இலைப் பகுதியிலேயே அதிக இரசாயனப் பதார்த்தங்கள் காணப்படுகின்றன.  இது மருத்துவ, விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

இற்றைவரையும் நடாத்தி முடிக்கப்பட்டுள்ள ஆய்வுகளின் படி புகையிலையில் சுமார் நாலாயிரம் இரசாயனப் பதார்த்தங்கள் உள்ளடங்கியிருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவற்றில் முப்பதுக்கும் மேற்பட்டவை நச்சுத் தன்மையானவை. குறிப்பாக ஐதரசன் சயனைட், அமோனியம், ஆசனிக், டி. டி. ரி, மெத்தனோல், காபன்மொனக்சைட், பென்சின், தார், நிக்கடின் போன்றன சுட்டிக்காட்டத் தக்கவை.

இன்றைய காலகட்டத்தில் மனிதன் புகையிலையை வெவ்வேறு விதமாகப் பாவிக்கிறான். அதாவது இந்த நச்சுத் தன்மை மிக்க புகையிலையை வெற்றிலையுடன் சேர்த்து மெல்கிறார் தூள் புகையிலையை பொடியாக மூக்கில் போட்டுக்கொள்கிறார்கள். மற்றும் குழாய்களை பாவித்து புகையை உறிஞ்சுதல், பீடி, சிகரட், சுருட்டு, பைப் என்று பல்வகையாக புகையிலையை கோடிக்கணக்கானோர் பாவித்து வருகிறார்கள்.

உலகில் மனித இறப்புகளைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாவது இடத்தை வகிக்கிறது.  இச்சிறப்பு நாளின் அறிவிப்பு மூலம் உலக சுகாதார நிறுவனம் புகைத்தலால் தமக்கும் பிறருக்கும் ஏற்படும் தீங்குகளிலிருந்து தவிர்ந்து கொள்வதை வலியுறுத்துவதன் மூலம் ஆண்டுதோறும் புகையிலை சம்பந்தமான இறப்புகளைக் குறைக்க முடியும் எனவும் எதிர்பார்க்கிறது.

உலகளாவிய ரீதியில் நாளொன்றுக்கு 750 பேர் புகையிலைப் பாவனையினால் மரணித்து வருகின்றார்கள். புகைத்தலுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமடையாத பட்சத்தில் உலகளாவிய ரீதியில் அடுத்த 50 ஆண்டுகளில் 520 மில்லியன் மக்கள், புகைப்பழக்கத்துக்கு பலியாகும் அபாயம் உண்டு என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது.  இதனால் இன்று வளர்ந்தோரிடையேயும் இளைஞர்களிடையேயும் புகைப்பாவனையைத் தவிர்த்தல் தொடர்பாக வலியுறுத்தப்படுகிறது.

பொதுவாக உலகில் சுமார் 100கோடி மக்கள் புகைப்பிடிக்கின்றார்கள் எனவும்,  இதில் அபிவிருத்தியடைந்த நாடுகளில் 35 வீதமும்,  அபிவிருத்தியடைந்து வருகின்ற நாடுகளில் 50 வீதமும் நுகரப்படுவதாகவும் தினமும் 250 மில்லியன் பெண்கள் புகைப்பிடித்து வருவதாகவும்,  இதில் அபிவிருத்தியடைந்த நாடுகளில் 22%. அபிவிருத்தியடைந்து வருகின்ற நாடுகளில் 09% அடங்குவதாகவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. சீனாவில் மாத்திரம் சுமார் 300 மில்லியன் பேர் புகைப் பழக்கத்திற்கு அடிமையாக உள்ளனர். உலகில் சிகரட்டின் மொத்த உற்பத்தியில் 37% த்தை சீனர்களே நுகர்கின்றனர். 

புகைப்பிடித்தலில் ஈடுபடக்கூடியவர் பற்றி சர்வதேச மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு கணிப்பீட்டின் பிரகாரம் கௌரவமான நிலையிலுள்ளோர் 31.7% அறிவின்மையால் 0.6% , விசேட காரணங்களின்றி 8% , பரீட்சித்துப் பார்க்கும் நோக்கில் 24%, மனக்கசப்புக்குள்ளானோர் 16%, பிரச்சினை காரணமாக 4.4%, தொழில் காரணமாக 2.8%,  விருந்துபசாரங்களின் காரணமாக 6.1%,  மற்றைய காரணங்களினால் 5.5% வீதத்தினர் புகைத்தலுக்கு அடிமையாகியுள்ளனர் எனத் தெரியவருகின்றது.     

அமெரிக்க தேசிய போதைப்பொருள் தடுப்பு நிறுவனத்தின் முன்னையநாள் பணிப்பாளர் ‘வில்லியம் பொலின்’  வெளியிட்டிருந்த அறிக்கையொன்றில் குறிப்பிட்ட விடயங்கள் இங்கு கவனத்திற் கொள்ள வேண்டியதே. ‘புகையிலை மதுவைவிட ஏன் ஹெரோயினை விடவும் பாவனையாளர்களை அதிகம் அடிமைப்படுத்தக்கூடியது. அடிமையானவர்களில் 60% – 90% வீதமானவர்கள் தம் பழக்கத்திலிருந்து மீட்சி பெற முடியாதவர்களாக உள்ளனர்.

வளைகுடா நாடுகளில் புகைப்பிடிப்பவர்களின் மற்றும் போதைப்பொருட்களை பயன் படுத்துபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. உலக சுகாதார நிறுவனம்  (World Health Organisation) வளைகுடா நாடுகளில் சமீபத்தில் ஆய்வு ஒன்றினை மேற்கொண்டு சில புள்ளி விவரங்களை தந்திருந்தது. வளை குடாவில் உள்ள மக்கள் தொகையில் 22 சதவீதமான நபர்கள் புகை பிடிக்கிறார்கள், 25 சதவீதமான மக்கள் போதைப்பொருட்கள் உபயோகிப்பதால் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 15 மற்றும் 20 சதவீதமான மக்கள் அதனை உபயோகிப்பதால் இரத்த கொதிப்பு நோய் மற்றும் அது சம்மந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மருத்துவர் அப்துல்லா அல் பாதாஹ் (Dr. Abdullah Al Badah, (Supervisor of the Anti – Smoking Programme at the Health Ministry) தன்னுடைய ஆய்வின் படி, தற்போது வளைகுடா நாட்டைச்சார்ந்த 600,000 பெண்கள் புகை பிடிக்கிறார்கள். இவற்றில் யுவதிகள் தான் அதிகம் என்றும் அவர் குறிப்பிடுகிறார். அத்துடன் புகை பிடிக்கும் பழக்கம் உள்ள நாடுகள் வரிசையில் சவூதி அரேபியா 23 வது இடத்தில் உள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
 
‘பகையைக் கூட புகையாய் ஊதித் தள்ளிவிடும் மனிதன் இந்தப் புகை என்னும் பகையை பகைக்க முடியாமல் திணறுகிறான்’. உண்மையில் புகைத்தலை ஏன் பலரால் நிறுத்த முடியாமல் இருக்கிறது? புகைத்தலினால் உடலில் என்ன மாற்றம் ஏற்படுகின்றது?  இவ்விடத்தில் சிறிதேனும் ஆராய்தல் வேண்டும். புகைப்பவர்கள் புகையை உள்ளுக்குள் இழுக்கும் ஒவ்வொரு வேளையும் நிக்கோட்டின் (Nikotin) மின்னல் வேகத்தில் மூளையைச் சென்றடைகிறது. புகையிலையில் நிக்கோடின் எனும் நச்சுப் பொருளுடன் வேறும் 700 வகையான இரசாயனக் கூட்டுப்பொருட்கள் சேர்ந்துள்ளன என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இவற்றுள் சில மனித குலத்துக்கு பேராபத்தை ஏற்படுத்தக்கூடிய அதி சக்தி வாய்ந்த நச்சுப் பொருட்களாகும். இவற்றைத் தான் புகை அபிமானிகள் வாயினுள் உறுஞ்சி நெஞ்சார அனுபவிக்கின்றனர். மூளையில் மனநிலையை மாற்றும் செல் (cell) க்கு நிக்கோட்டின் செல்வதால் புகைப்பவர்கள் ஒரு ஆறுதலான நிலையை அடைகிறார்கள் என்ற மாயையைத் தோற்றுவிக்கின்றது. இந்த மாயையினால் புகைப்பவர்களுக்கு அழுத்தங்கள் பிரச்சினைகள் எல்லாம் குறைந்த மாதிரித் தோன்றும். அதனால் மற்றைய நேரங்களை விட புகைக்கும் நேரங்களில் கூடிய விடயங்களில் கவனம் செலுத்தக் கூடிய ஒரு நிலையில் தாங்கள் இருப்பதாக அவர்கள் எண்ணுவார்கள்.

இதனால் புகைப்பவர்கள் மனத்தாலும் உடலாலும் நிக்கோட்டினில் தங்கியிருக்கும் ஒரு வேண்டாத பழக்கத்துக்கு ஆளாகின்றனர். இந்தப் பழக்கத்தால் இரத்தத்தில் சிறிதளவு நிக்கோட்டின் குறைந்தவுடனேயே அவர்களுக்கு புகைக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படுகின்றது. இதன் காரணமாகவே பலர் பணமும் விரயமாகி ஆரோக்கியமும் கெடுகின்றது எனத் தெரிந்தும் புகைத்தலைக் கைவிட முடியாமல் இருக்கின்றனர்.

ஆனாலும் புகைத்தலை நிறுத்துவது அவசியமானது. புகைத்தலை நிறுத்துவதால் இதயத்தில் வரும் நோய்கள் தடுக்கப்படுகின்றன: புற்றுநோய் வருவதற்கான காரணங்கள் குறைக்கப்படுகின்றன. மூச்சு வாங்கல் இருமல் வாய்மணம் போன்றவை இல்லாமல் போகின்றன. பற்கள் பழுப்பு நிறங்கள் நீங்கி வெண்மையாகின்றன. புகைப்பதை நிறுத்தினால் ஒரு காலகட்டத்தில் உடலும் மனநிலையும் வாழ்நாளில் ஒரு நாளும் புகைக்காதவர்களின் உடல் மனநிலைக்கு வருகின்றது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

புகையிலை பாவனையால் பலவிதமான நோய்களுக்கு உள்ளாக நேரிடும். அவற்றில் கண்களில் வெள்ளை படருதல், நியூமோனியா, வயிற்று புற்றுநோய், சதையீ புற்றுநோய்இ சிறுநீரக புற்றுநோய், கழுத்து புற்றுநோய் மூத்திரபையில் கட்டி, நுரையீரல் புற்றுநோய், சுவாசத் தொகுதிப் பாதிப்புக்கள், உணவுக் குழாயில் புற்றுநோய், குரல் வளையின் மேற்பகுதியில் பாதிப்பு, வாய் புற்றுநோய், வாயிலும், தொண்டையிலும், பாதிப்பு, இருமல், சளி பாரிசவாதம், இருதய அழுத்தம், இதய நோய்கள் போன்றன குறிப்பிடத்தக்கவை.

அத்தோடு புகையிலை பாவனை காரணமாக இனவிருத்தி ஆரோக்கியமும் பெரிதும் பாதிக்கப்படும். குறிப்பாக புகையிலை பாவிக்கும் ஆண்கள் மத்தியில் பாலியல் பலவீனத்தை அதிகரிக்க உதவலாம். அதேநேரம் நிறைகுறைந்த குழந்தை பிறப்பும், குறைமாதக் குழந்தை பிறப்பும், கர்ப்பப் பையினுள்ளே சிசு இறந்து பிறப்பதும் புகையிலைப் பாவனையாளர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படும்.

இதேவேளை புகைபிடிப்போர் வெளியிடுகின்ற புகையை புகைபிடிக்காதோர் தொடர்ச்சியாக சுவாசிப்பதால் ஆஸ்துமா, இருதய நோய்கள், காசநோய், காதுகளில் தொற்று, சுவாசத் தொகுதி நோய்கள், திடீர் சிசு மரணம் போன்றவாறான பாதிப்புக்களுக்கும் உள்ளாக நேரிடும். அவுஸ்திரேலிய சிட்னி பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியினால் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு முடிவின்படி, புகைப்பழக்கமுடையவர்கள் முதுமைப் பருவத்தை அடையும்போது சிலருடைய பார்வை முழுமையாகவே இழக்கப்படுகிறது. முற்றும் சிலருடைய பார்வை குறைந்தவிடுகிறது. தற்போது வெளியாகியிருக்கும் புதிய ஆராய்ச்சி ஒன்று புகையை சுவாசிக்க நேரிடும் குழந்தைகளுக்கு குணாதிசயங்களில் எதிர்மறை விளைவுகள் ஏற்படலாம் என எச்சரித்திருக்கிறது. அமெரிக்காவிலுள்ள சின்சினாட்டி குழந்தைகள் நல மருத்துவ மனை நிகழ்த்திய இந்த விரிவான ஆய்வு குழந்தைகள் மற்றும் இளம் வயதினர் புகைசூழ் பகுதிகளில் தங்க நேரிடுவதால் ஏற்படும் சிக்கல்களை முன்னிலைப்படுத்துகிறது.

ஆஸ்த்மா நோய்க்கு ஆளாகியிருக்கும் குழந்தைகளை இந்த புகை மிகப் பெரிய அளவில் பாதிப்புக்குள் உள்ளாக்குகிறது என கவலையுடன் குறிப்பிடுகிறார் இந்த ஆய்வை நிகழ்த்திய மருத்துவர் கிம்பர்லி யோல்டன். நிகோட்டினின் இணை பொருளான கோடினின் குருதியில் கலந்துள்ள அளவை வைத்து இந்த ஆய்வு நிகழ்த்தப்பட்டது.

புகைப்பதை நிறுத்துவதற்கு புகைப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் புகைப்பதை நிறுத்துவதற்கான விருப்பமும் உறுதியும் வேண்டும். இன்றைய விஞ்ஞான உலகில் எந்த சிரமமும் இன்றி ஹிப்னோற்டிக் (Hypnotic)  முறைமூலமும் அக்கு பஞ்சர் (Axupuncture) முறை மூலமும் புகைத்தலை நிறுத்த முடியும் எனக் கூறப்படுகிறது. ஆயினும் சிறிது காலத்தின் பின் இச்சிகிச்சை பெற்றவர் பிரச்சினைகள் அல்லது வேறு காரணங்களால் புகைத்தலை மீண்டும் நாடக் கூடும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஆகவே மனதில் உறுதியுடன் ஒருவர் தானே நினைத்துப் புகைப்பதை நிறுத்துவதே 100 வீதமான வெற்றியைத் தரும். படிப்படியாக ஒருவர் புகைப்பதை நிறுத்துவதாகக் கூறி பின் மீண்டும் பழைய நிலைக்கு வரக் கூடிய சாத்தியங்கள் உண்டு. எனவே இனிப் புகைப்பதில்லை என்ற முடிவை உறுதியாக எடுத்து உடன் நிறுத்துவதே சிறந்த வழி. யேர்மனியில் பிறைபேக் (Freiberg) பல்கலைக் கழகப் பேராசிரியர் டொக்டர் யோர்கன் ட்ரொஸ்கே  (Dr. Jurgen Troschke) தனது ஆராய்ச்சியில் 80 தொடக்கம் 90 விதமானோர் புகைத்தலை உடனடியாகக் கைவிட்டு வெற்றி கண்டிருக்கிறார்கள் என அறிவித்திருக்கிறார்.

புகைத்தலுக்கு எதிராக நீண்டகாலமாக அறிவுறுத்தலும் பிரச்சாரமும் செய்யப்பட்டு வந்தபோதிலும் ஆக்கபூர்வமான பலன் பெரியளவில் ஏற்படவில்லை என்றே கூற வேண்டும்.  உலக சுகாதார நிறுவனத்தின் அறிவறுத்தலுக்கமைய அநேகமான நாடுகள் புகை பிடிப்பவர்களை எச்சரிப்பதற்காக சிகரெட் பெட்டிகளில் அபாய எச்சரிக்கை வாசகங்களை அச்சிட்டு வருகின்றன. சில நாடுகளில் புகைத்தலை தடுப்பதற்காக சிறுவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்ய முடியாது.

பொது இடங்களில் புகைத்தல் முடியாது என்றெல்லாம் சட்டமியற்றப்பட்டுள்ளன. அதேநேரம் பொது இடங்களில் புகைபிடித்தால் தண்டப் பணம் செலுத்த வேண்டும் என்றும் விதிக்கப்பட்டுள்ளது. மறுபுறமாக சில நாடுகள் புகைத்தல் தொடர்பான விளம்பரங்களையும் தடை செய்துள்ளன.

இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் சுகாதாரப் பகுதி புகைப்பாவனையால் வரும் தீங்குகளைப் பிரச்சாரம் செய்யும் அதேவேளை,  சிலநாடுகளில் புகையிலையும்,  மதுபானமும் அரசுக்கு வருமானம் ஈட்டித்தரும் துறைகளாக அமைந்தன. இந்த முரண்போக்கே இந்நிலை நீடிப்பதற்குக் காரணமாக இருந்தது. குறிப்பாக புகைத்தலின் தீங்குகளைப் பற்றி பிரசாரம் செய்யும் சுகாதாரப் பகுதியினர் அல்லது நிறுவனங்கள் புகைத்தல் தொடர்பான உற்பத்திகளை தடைசெய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாதிருப்பது வேதனைக்குரியதே. இவற்றால் புகையிலை உற்பத்திகளை தடுக்க முடியாது. ஏனெனில்,  புகையிலை உற்பத்திகள் மூலமாக அரசாங்கத்துக்கு பெருமளவுக்கு வருமான வரியை ஈட்டுகின்றன.

1988ல் பின்லாந்தும்,  1994ல் பிரான்சும் மதுபான,  புகைத்தல் விளம்பரங்களைக் கட்டுப்படுத்தின. ஐரோப்பிய யூனியன்,  நியூஸிலாந்து போன்றவையும் நாட்டில் மதுபான, சிகரட் பாவனையைக் குறைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளிலும் இந்நிலையை துரிதப்படுத்துகின்றன. எவ்வாறிருந்தபோதிலும் பாவனையாளர் தாமாகவே உணர்ந்து செயல்படுவதே வெற்றிக்கு வழிவகுக்கும் என்பது மாத்திரமே உண்மை.

ஒரு நபர் புகைப்பிடிப்பதினால் அவருக்கு ஏற்படும் கெடுதலைவிட அவர் வெளியிடும் புகையை சுவாசிப்பவர் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்.  புகையை சுவாசிக்க நேரும் மக்களுக்கு இதயம் தொடர்பான நோய்கள் வரும் வாய்ப்பு அதிகரிப்பதாக ‘நாட்டிங்காம்’ பல்கலைக்கழக ஆய்வு ஒன்றில் குறிப்பிடப்பட்டிருந்தது. உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைப்படி நுரையீரல் புற்றுநோய் 16வீதத்தால் அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பு புகைப்பிடிப்பவர்களிடத்திலன்றி பக்கத்தில் இருப்பவர்களிடமே ஏற்பட்டுள்ளது.

இலங்கையை மையமாகக் கொண்டு எத்தகையோர் புகைப்பிடிக்கின்றார்கள் என்று  மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலிருந்து பழக்கவழக்கங்கள் காரணமாக 21 %, மகிழ்ச்சிக்காக 21.1% , புகைப்பழக்கத்திலிருந்து விடுபட முடியாத காரணத்தினால் 22.7% , நண்பர்களுடன் நேரத்தைக் கழிப்பதற்காக  8.2%, தனிமையிலிருந்து விடுபடுவதற்காக 7.5% , ஓய்வு நேரத்தைப் பயன்படுத்தி 3.3%, பரீட்சித்துப் பார்க்க வேண்டும் என்ற நோக்கில் 7.6% , நண்பர்களின் அழுத்தம் காரணமாக 7.6 % , பிரச்சினைகளிலிருந்து விடுபடும் நோக்கில் 3.3%  த்தினரும் புகைப்பிடிப்பதாக தெரிய வருகின்றது. மேலும், இலங்கையில் புகைப்பாவனையாளர்கள் குருநாகல் மாவட்டத்தில் 17.1% ,  கொழும்பு மாவட்டத்தில் 20.4%,  கேகாலை மாவட்டத்தில் 24.5% ,  அநுராதபுர மாவட்டத்தில் 27.9% ,   கம்பஹா மாவட்டத்தில் 29.8%,  காலி மாவட்டத்தில் 44.2%   இருப்பதைக் காணமுடிகின்றது. ஏனைய மாவட்டங்கள் இதற்கு இடைப்பட்ட விகிதத்திலே இருப்பதை அவதானிக்கலாம். மேற்படி தகவல் சிகரட் விற்பனையை மையமாகக் கொண்டு பெறப்பட்டதாகும்.

உலக சுகாதார நிறுவனத்தினால் உலக புகையிலை எதிர்ப்பு நாள் குறித்து ஆண்டுதோறும் ஒவ்வொரு கருப்பொருளினை முன்வைக்கின்றது. அவை வருமாறு:

1990 – Childhood and youth without tobacco: growing up without tobacco
1991 – Public places and transport: better be tobacco free
1992 – Tobacco free workplaces: safer and healthier
1993 –  Health services: our windos to a tobacco free world
1994 –  Media and tobacco: get the message across
1995 –  Tobacco costs more than you think
1996 –  Sport and art without tobacco: play it tobacco free
1997 –  United for a tobacco free world
1998 –  Growing up without tobacco
1999 –  Leave the pack behind
2000 – tobacco kills, don’t be duped
2001 – second-hand smoke kills
2002 – tobacco free sports
2003 – tobacco free film, tobacco free fashion
2004 – tobacco and poverty, a vicious circle 
2005 – health professionals against tobacco
2006 – tobacco: deadly in any form or disguise
2007 – smoke free inside
2008 – tobacco-free youth
2009 – tobacco health warnings

மே 29 – ஐக்கிய நாடுகள் சர்வதேச அமைதி காப்போர் தினம் “International Day of United Nations Peacekeepers” – புன்னியாமீன்

images0000.jpgமுதலாம் உலக மகா யுத்தம் முடிவுற்ற பின்பு உருவாக்கம் பெற்ற சர்வதேச சங்கத்தால் உலக சமாதானத்தைப் பேண முடியாதுபோனதன் காரணமாகவே இரண்டாம் உலக மகா யுத்தம் ஏற்பட்டது. இரண்டாம் உலக மகாயுத்தம் முடிவடைந்த பின்பு யுத்தத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புக்களும், சொத்திழப்புக்களும் கணிப்பிட முடியாதவை. இந்த அடிப்படையில் மற்றுமொரு உலக மகா யுத்தம் ஏற்படாமல் உலக சமாதானத்தை நிலைநிறுத்துவதை அடிப்படையாகக் கொண்டே ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கம் பெற்றது. 

ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கம் பெற்றதையடுத்து யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் என்பவற்றின்போது சமாதானத்தை ஏற்படுத்தவும்,  நிவாரணங்களை ஒருங்கிணைக்கவும்,  அமைதி காப்போர்களையும்,  கண்காணிப்பாளர்களையும் உரிய இடங்களில் பணிக்கமர்த்தும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டது. குறிப்பாக யுத்த நிறுத்தங்களின்போது அல்லது தற்காலிக யுத்த நிறுத்தங்களின்போது அமைதி காக்கும் படைகளின் பணியினை ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கக் காலத்திலிருந்தே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த அடிப்படையில் மே 29ஆம் திகதி சர்வதேச அமைதி காப்போர் தினமாகப் பெயரிடப்பட்டது. 2008.05.29ஆம் திகதி 60ஆவது அமைதி காப்போர் தினம் கொண்டாடப்பட்டது. அதேநேரம்,  2001ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஆண்,  பெண் இரு சாராரையும் கௌரவப்படுத்துவதற்கும்,  சமாதானத்திற்கான இந்நடவடிக்கைகளின்போது உயிர் நீத்தவர்களை ஞாபகமூட்டுவதற்காகவும் மே 29ஆம் திகதியை ஐக்கிய நாடுகளின் சர்வதேச அமைதி காப்போர் தினமாக பிரகடனப்படுத்தியது.

61 ஆண்டுகளுக்கு முன்னர் இத்தினத்திலே ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை முதன் முதலாக மத்திய கிழக்கில் அமைதி காப்போர் நடவடிக்கையை (தற்காலிக போர் நிறுத்த உடன்பாட்டினைக் கண்காணிக்கும் சபையை) உருவாக்கியது. (UNTSO)  1948ஆம் ஆண்டு அரேபிய இஸ்ரேலிய யுத்தத்தின் போது தற்காலிக போர் நிறுத்த உடன்பாட்டின் ஏற்பாடுகளை மீறிய,  இஸ்ரேலிய படைகள் பற்றி விசாரணையை மேற்கொண்டிருந்தபோது பிரான்சைச் சேர்ந்த யுத்தநிறுத்த கண்காணிப்பாளர் “ரென்னே லப்பாரியர்” (Rene Labarriere) என்பவர் முதன் முதலாக விபத்தில் உயிரிழந்தார். ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பு நடவடிக்கையின் போது முதலாவது உயிரிழந்தவராக இவரே கருதப்படுகின்றார். 1948.07.13ஆம் திகதி ஜெரூஸலத்தில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த “ஒலே எச் பேக்கே” சேர்ந்த (Ole H. Bakke) எனும் நோர்வே ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணியாளர் கொல்லப்பட்டார்.

அதேபோல 1948.08.28ஆம் திகதி “காசாப் பகுதியில்’ சேவையாற்றிய லெப்டினன்ட் கர்ணல் ஜோசப் குவேறு (Joseph Queru) மற்றும் கப்டன் பியரே ஜின்னல் (Pierre Jeannel) என்ற பிரான்சிய அமைதி காக்கும் படை வீரர் உயிரிழந்ததோடு மற்றும் ஆறு படை வீரர்கள் காயமுற்றனர். மேலும்,  1948.09.17ஆம் திகதி “கவுண்ட் போர்க் பெர்னடொட்” எனும் அமைதி காக்கும் வீரர்,  யுத்தத் தீவிரவாத இயக்கமான “STERN GANG” (ஸ்டர்ன் கேங்) எனும் கும்பலினால் கொலையுண்டார்.

இதேபோன்று 1958ஆம் ஆண்டு அரேபிய இஸ்ரேலியப் போர் 1973 அரேபிய இஸ்ரேலிய போர், 2008ஆம் ஆண்டு இஸ்ரேலிய லெபனன் போர் போன்றவற்றின் கடமையாற்றிய ஐக்கிய நாடுகளின் அமைதி காப்பாளர்கள் பலரும் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையைச் சேர்ந்த 300க்கும் அதிகமானோரும் கொல்லப்பட்டுள்ளனர். இக்கொலைகளில் அதிகமானோர் இஸ்ரேலியப் படைகளாலே கொல்லப்பட்டனர் என்பதுவும்,  ஐக்கிய நாடுகளின் தற்காலிப் போர் நிறுத்த உடன்பாட்டு ஏற்பாடுகளை மீறி செயற்பட்டவர்களும் இஸ்ரேலியர்கள் என்பதுவும் குறிப்பிடத்தக்க விடயமாகும். இந்த அடிப்படையில் அமைதி காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு கொல்லப்பட்டவர்கள் இத்தினத்தில் விசேடமாக நினைவுகூரப்படுகின்றனர்.

உலக சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக வேண்டி ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கம் பெற்றாலும்கூட, இதன் நடவடிக்கைகள் அமெரிக்க சார்பாக அமைந்துள்ளமையினால் ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் நடவடிக்கைகள் கேள்விக் குறியாகவே மாறி வருகின்றன.

யுத்தத்தை உருவாக்கியோரே சமாதானத்தையும் தோற்றுவிக்க வேண்டும் என்று ஐ.நா. சமாதான நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகம் ஜேன்மேரி கைகென்னோ கூறிய விடயம் இவ்விடத்தில் கவனத்தில் கொள்ளப்படல் வேண்டும். இது விடயமாக அவர் தொடர்ந்தும் தெரிவித்த கருத்துகள் மேலும் எமது சிந்தனையைத் தூண்டக்கூடியவையே. அதாவது,  சம்பந்தப்பட்ட தரப்பினரின் இதயசுத்தியுடனான அரசியல் விருப்பமே முரண்பாட்டுக்கு தீர்வைத் தேடித்தரும். ஐ.நா. சமாதானப் படையினர் அதனைத் தேடித் தருவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். யுத்தத்தை ஏற்படுத்தியவர்களாலேயே சமாதானத்தை உருவாக்க முடியும். உங்களால் அவர்களுக்கு உதவ முடியும். யுத்தத்தில் களைப்படைந்த தருணத்தில் உங்களால் அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த முடியும். அதாவது,  நல்ல நோக்கத்துக்கான நம்பிக்கையைத் தோற்றுவிக்க முடியும். இதுவே ஐ.நா. சமாதானப் படை மேற்கொள்ள வேண்டிய பணியாகும். ஐ.நா.வால் பலவந்தமாக சமாதானத்தை உருவாக்க முடியாது. இங்கு ஜேன்மேரியின் கருத்து யதார்த்தபூர்வமானவை.

அமெரிக்கா தலைமையிலான கூட்டணி, ஈராக் மீது நடத்திய போர் சட்ட விரோதமானது என கனடாவைச் சேர்ந்த 31 சர்வதேச சட்டப் பேராசிரியர்கள் தெரிவித்திருந்தனர். 15 சட்டக் கல்லூரிகளைச் சார்ந்த இந்த பேராசிரியர்கள் அமெரிக்க தாக்குதல், ”சர்வதேச சட்டத்தை அடிப்படையிலேயே மீறுகின்ற செயலாக அமைந்திருக்கிறது. இரண்டாம் உலகப்போர் முடிவிற்கு, பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சர்வதேச சட்ட நடைமுறைகளின் கட்டுக்கோப்பை கடுமையாக பாதிக்கின்ற வகையில் இந்த நடவடிக்கை அமைந்திருக்கின்றது. ஐ.நா. சாசனத்தின் 41 மற்றும் 42வது பிரிவுகள் போர் கடைசி ஆயுதம்தான் என்பதை தெளிவுபடுத்துகின்றன. உடனடி அச்சுறுத்தல் இருந்தால் மட்டுமே சர்வதேச சட்டப்படி திடீர் தாக்குதல் நடத்துவதற்கு பாரம்பரியமாக அனுமதி உண்டு. ஈராக் இத்தகைய அச்சுறுத்தலாக இல்லை எனவும் குறிப்பாக ஐ.நா. ஆயுத ஆய்வாளர்கள் அந்நாட்டில் (ஈராக்கில்) பணியாற்றிக்கொண்டு இருக்கிறார்கள் என சட்ட அறிஞர்கள் இதைப்பற்றி கருத்து தெரிவித்திருந்தனர். இப்படிப்பட்ட நிலையில் யுத்தம் முடிந்த பின்பு அதே பிரதேசத்தில் அமைதிப்படை செயல்படுவதென்பது பல்வேறுபட்ட விமர்சனங்களுக்குட்பட்டதே.

இவ்வாறாக பல்வேறுபட்ட விமர்சனங்கள் மத்தியிலே கடந்த சில தசாப்தங்களாக ஐ.நா.வின் அமைதிப் பணிகள் இடம்பெற்று வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

150 நூல்கள் எழுதியுள்ள எழுத்தாளர் புன்னியாமீன்: அன்புமணி இரா.நாகலிங்கம்

puniyameen-photortf.jpgமத்திய இலங்கையின் தலைநகர் கண்டியைச் சேர்ந்த பீர்மொஹம்மட் புன்னியாமீன் அவர்கள் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக எழுத்துத்துறையில் ஈடுபட்டு வரும் ஒரு எழுத்தாளரும், பன்னூலாசிரியரும், வெளியீட்டாளரும்,  ஊடகவியலாளருமாவார். இவர் ஐக்கிய இராச்சியத்தைத் தளமாகக் கொண்டியங்கும் முன்னணி இணையத்தளமொன்றின் செய்தியாசிரியருமாவார். இலக்கியத்துறையில் பல்வேறு சாதனைகளைப் புரிந்தாலும்கூட, இவரின் தனிப்பட்ட சாதனைகளும்,  இவர் பற்றிய விபரங்களும் வெளியுலகிற்கு அதிகமாகத் தெரிய வரவில்லை. அவற்றை வெளிப்படுத்திக் கொள்ள இவர் அதிகமாக விளைவதுமில்லை. “ஈழத்துத் தமிழ் இலக்கியத்துறைக்கு என்னால் ஆற்றப்பட்டுள்ளது ஒரு சிறு துளி மாத்திரம் தான். நான்  இன்னும் இலக்கியத்துக்குச் செய்ய வேண்டிய எத்தனையோ விடயங்கள் உண்டு” என எச்சந்தர்ப்பத்திலும் அடக்கமாகக் கூறிவரும் இவர், பழகுவதற்கு இனியவர்.   

1960ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் திகதி பீர்மொஹம்மட், சைதா உம்மா தம்பதியினரின் புதல்வராகப் பிறந்த புன்னியாமீன் க/ஜாமியுல் அஸ்ஹர் மத்திய கல்லூரி,  க/ மடவளை மதீனா தேசிய கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார். பேராதனைப் பல்கலைக்கழக கலைமாணிப் பட்டதாரியான இவர்,  ஊடகவியல் துறையில் டிப்ளோமா பட்டத்தினையும் பெற்றுள்ளார்.

தொழில் ரீதியாக 1983ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கா ஆசிரியர் சேவையில் இணைந்த புன்னியாமீன்,  பின்பு கல்லூரி அதிபராகவும், மத்திய மாகாண சபையின் கல்வி, கலாசார அமைச்சின் இணைப்பதிகாரியாகவும்,  மத்திய மாகாண கலாசார அமைச்சின் உதவிப் பணிப்பாளராகவும் சேவையாற்றி 2004ஆம் ஆண்டில் சுயவிருப்பின் பேரில் ஓய்வுபெற்றார். தற்போது வரையறுக்கப்பட்ட “சிந்தனைவட்டம்” தனியார் கம்பனியின் முகாமைத்துவப் பணிப்பாளராகக் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றார். அத்துடன்,  லண்டனிலிருந்து வெளிவரும் ‘லண்டன் குரல்’,  ‘உதயன்’ உள்ளிட்ட பல புலம்பெயர் பத்திரிகைகளின் செய்தியாளராகவும் பணிபுரிந்து கொண்டிருக்கின்றார். அத்துடன், இந்தியாவிலுள்ள முன்னணி இணையத்தளங்களில் ஒன்றான http://thatstamil.oneindia.in/ இல் சர்வதேச நினைவு தினங்கள் பற்றி தொடர்ச்சியாக எழுதி வருகின்றார். இவரின் இந்த ஆக்கங்கள் சர்வதேச ரீதியில் பல இணையத்தளங்களில் மறுபிரசுரம் செய்யப்பட்டு வருகின்றன. எழுத்துத் துறையிலும், ஊடகத்துறையிலும் ஏற்பட்டு வரும் நவீனமாற்றங்களுக்கேற்ப இவர் இலத்திரனியல் ஊடகங்களுடன் நெருக்கமான தொடர்புகளை விரிவுபடுத்திக் கொண்டிருப்பது குறிப்பிட்டுக் கூறக்கூடிய ஓர் அம்சமாகும். 

மாணவப் பராயத்திலிருந்தே வாசிப்புத்துறையில் தீவிர ஆர்வம் காட்டி வந்த இவரின் சுய ஆக்கமான முதல் உருவகக் கதை ‘அரியணை ஏறிய அரசமரம்’ எனும் தலைப்பில் 1978 ஜுலை 02ஆம் திகதி தினகரன் வாரமஞ்சரியில் பிரசுரமானது. அதிலிருந்து இதுவரை 160க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 5000க்கும் மேற்பட்ட சமூக, இலக்கிய, அரசியல்,  திறனாய்வு,  கல்விசார் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இத்தகைய ஆக்கங்கள் இந்தியாவில் கலைமகள், தீபம்,  தாமரை உட்பட பல புலம்பெயர் இலக்கிய சஞ்சிகைகளிலும்,  ஈழத்து தேசிய பத்திரிகைகள், சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன.

இவரின் இலக்கிய சேவையைக் கருத்திற்கொண்டு கிழக்கிலங்கையிலிருந்து வெளிவந்த ‘தடாகம்’ எனும் இலக்கியச் சஞ்சிகை 1999 நவம்பர் – டிசம்பர் இதழில் இவரின் புகைப்படத்தை முகப்பட்டையில் பிரசுரித்து கௌரவித்தது. அதேநேரம், இலங்கையிலிருந்து நான்கு தசாப்த காலங்களுக்கும் மேலாக வெளிவரும் தரமான இலக்கிய சஞ்சிகையான ‘மல்லிகை’ 2005 மார்ச் இதழிலும்,  மற்றொரு தரமான இலக்கிய சஞ்சிகையான ‘ஞானம்’ தனது 102வது (2008 நவம்பர்) இதழிலும் இவரின் புகைப்படத்தை முகப்பட்டையில் பிரசுரித்து கௌரவித்துள்ளன. மேலும்,  கிழக்கிலங்கையிலிருந்து வெளிவரும்  ‘சமாதானம்’ இலக்கிய சஞ்சிகையின் 2007 அக்டோபர் இதழும்,  இந்தியாவிலிருந்து வெளிவரும் ‘ஏழைதாசன்’ (இதழ் எண்:159) 2008 மே இதழும் இவரின் புகைப்படத்தை அட்டைப்படத்தில் தாங்கிவெளிவந்துள்ளன. 

இவரது முதலாவது சிறுகதைத் தொகுதி 1979.11.11ஆந் திகதி “தேவைகள்” எனும் தலைப்பில் வெளிவந்தது. முதல் புத்தகம் வெளிவந்து சரியாக முப்பது ஆண்டுகள் நிறைவுறும்போது 2008.11.11இல் இவரது 150வது புத்தகமான “இவர்கள் நம்மவர்கள் – தொகுதி 04” எனும் புத்தகம் வெளிவந்துள்ளது. இவரது வெளியீட்டுப் பணியகமான சிந்தனைவட்டத்தின் மூலம் இதுவரை 300 தமிழ்மொழி மூலமான நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இலங்கையில் யுத்த சூழ்நிலைகள் காணப்படும் இந்நேரத்தில் ஒரு தனிப்பட்ட எழுத்தாளன் சுயமாக 150 தமிழ்மொழி மூலமான புத்தகங்களை எழுதி வெளியிடுவது என்பது ஒரு சாதனையே. இந்த அடிப்படையில் கலாபூஷணம் புன்னியாமீன் அவர்களுடன் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல் கீழே இடம்பெறுகின்றது.

கேள்வி:- எழுத்துத்துறையில் நீங்கள் எவ்வாறு அறிமுகமானீர்கள் என்பதைப் பற்றி சுருக்கமாகக் கூற முடியுமா?

பதில்:- நான் பாடசாலையில் கற்கும் காலங்களில் (1974/1975) இளங்கதிர், இளங்காற்று, இளந்தென்றல் ஆகிய கையெழுத்துச் சஞ்சிகைகளின் ஆசிரியராக இருந்து செயற்பட்டுள்ளேன். அதனால் ஏற்பட்ட ஆர்வம் தொடர்ந்தும் எழுத வேண்டும் என்ற உணர்வினை என்னுள் ஏற்படுத்தியது. கையெழுத்து சஞ்சிகைகளில் எழுதி வந்த எனது எழுத்துக்கள் 1976ஆம் ஆண்டு தேசிய பத்திரிகையான தினகரனில் பிரசுரமாகின. அதையடுத்து ஏனைய தேசிய பத்திரிகைகள்,  சஞ்சிகைகள், வானொலி என்ற அடிப்படையில் என் எழுத்தை பரவலாக்கிக் கொண்டேன்.

கேள்வி:- தங்கள் முதலாவது சிறுகதைத் தொகுதி வெளிவந்ததைப் பற்றி……..

பதில்:- எனது முதலாவது சிறுகதைத் தொகுதி 1979.11.11ஆம் திகதி வெளிவந்தது. இத்தொகுதியின் தலைப்பு “தேவைகள்”. இத்தொகுதியில் 14 சிறுகதைகள் இடம்பெற்றன. அக்கதைகளுள் அதிகமான கதைகள் தினகரனிலும்,  தினகரன் வாரமஞ்சரியிலும் பிரசுரமானவையாகும். இதனை எனது சொந்தக் கிராமத்துக்கு அண்மையில் கட்டுகஸ்தோட்டை எனும் நகரை மையமாகக் கொண்டு இயங்கிய “இஸ்லாமிய சேமநல சங்கம்” எனும் சமூக சேவையமைப்பு வெளியிட்டது. எனது பத்தொன்பதாவது பிறந்த தினத்தன்று இப்புத்தகம் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.

கேள்வி:- படைப்பிலக்கிய முயற்சிகளில் தங்களின் பங்களிப்புகள் பற்றி குறிப்பிடுங்கள்.

பதில்:- ஆரம்ப காலங்களில் சிறுகதை,  கவிதை,  நாடகங்கள் என படைப்பிலக்கிய முயற்சிகளிலே நான் அதிகளவில் ஈடுபட்டு வந்தேன். இதுவரை 160க்கும் மேற்பட்ட சிறுகதைகளை நான் எழுதியுள்ளேன். இவை இலங்கையில் மாத்திரமல்லாமல் தமிழகத்தில் கூட,  கலைமகள், தாமரை,  தீபம், தீ போன்ற இலக்கிய சஞ்சிகைகளில் பிரசுரமாகியுள்ளன. இதுவரை ஏழு சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. அவை “தேவைகள்”,  “நிழலின் அருமை”,  “கரு”,  “நெருடல்கள்”, “அந்த நிலை”,  “யாரோ எவரோ எம்மை ஆள”,  “இனி இதற்குப் பிறகு”. ஆரம்ப காலங்களில் காதலைப் பற்றியும்,  மாணவப்பராயத்து உணர்வுகள் பற்றியும் எழுதிவந்த நான் பிற்காலத்தில் நான் வாழும் சமூகத்தைப் பற்றியும்,  ஒடுக்கப்பட்ட பாட்டாளி வர்க்கம் பற்றியும், இலங்கையில் இன உறவுகள் பற்றியும் எழுத ஆரம்பித்தேன்.

ஆரம்ப காலத்தில் என் படைப்பிலக்கியங்களில் கற்பனை வாதத்துக்கு முக்கியத்துவம் கொடுத்த போதிலும்கூட,  பிற்காலத்தில் சமூக யதார்த்தத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து சமூகமயமாக்கப்பட்ட எழுத்துகளையே முன்வைத்தேன். இதனால் பல்வேறுபட்ட கெடுபிடிகளுக்கும் ஆளானேன். ஒரு எழுத்தாளன் என்ற வகையில் சமூக யதார்த்தங்களை முன்வைக்கச் சென்று பலவிதமான தாக்குதல்களுக்கு உட்படுத்தப்பட்ட பல அனுபவங்கள் எனக்குண்டு.

கேள்வி:- சிறுகதைத் துறையைப் போல நாவல் துறையில் நீங்கள் அதிக ஈடுபாடு காட்டாமைக்கான காரணம் என்ன?

பதில்:- நியாயமான கேள்வி. 160க்கும் மேற்பட்ட சிறுகதைகளை நான் எழுதியபோதிலும்கூட,  இதுவரை ஒரேயொரு நாவலை மாத்திரமே எழுதி வெளியிட்டுள்ளேன். 1983ஆம் ஆண்டு எழுதப்பட்ட அந்த நாவலின் பெயர் “அடிவானத்து ஒளிர்வுகள்” என்பதாகும். நாவலை எழுதிய பின்பு அதனை பிரசுரத்துக்காக வேண்டி பல பத்திரிகைகளுக்கு அனுப்பி வைத்தேன். ஆனால்,  அந்த நாவல் நிராகரிக்கப்பட்டது. இலங்கையைப் பொறுத்தமட்டில் 1980களில் குறிப்பிட்ட சில எழுத்தாளர்களின் நாவல்களை மாத்திரமே இலங்கையின் தேசிய பத்திரிகைகளில் பிரசுரித்து வந்தனர். நாவல் துறையில் அறிமுக நாவலாகக் காணப்பட்ட என்னுடைய நாவலை வாசித்துக்கூடப் பார்க்காமல் நிராகரிக்கப்பட்டதை யடுத்து உண்மையிலேயே பாரிய மனத் தாங்கலுக்கு உட்பட்டேன். பின்பு 1987ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் “அல்-பாஸி பப்ளிகேஷன்” அந்த நாவலை நூலுருப்படுத்தி வெளியிட்டது. இதற்கு பக்கதுணையாக கல்ஹின்னை தமிழ்மன்ற ஸ்தாபகர் எஸ்.எம். ஹனிபா அவர்கள் இருந்தார்கள்.

“அடிவானத்து ஒளிர்வுகள்” நாவல் மூலமாக இலங்கையில் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பிரச்சினைகளை நான் எடுத்துக் காட்டினேன். இந்த நாவல் எழுதும் காலகட்டத்தில் இலங்கையில் முஸ்லிம்களுக்கென அரசியல் கட்சியொன்றிருக்கவில்லை. மறுபுறமாக இந்த நாவல் எழுதப்பட்ட காலகட்டங்களில் இலங்கையில் வடபகுதியில் தமிழ் மக்கள் தமது விடுதலைப் போராட்டத்தை ஆயுத ரீதியாக ஆரம்பித்த கால கட்டமாகவும் இருந்தது. எனவே,  இந்த நாவலினூடாக இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வொன்றைப்பெற அதிகாரப் பகிர்வு முறை முன்வைக்கப்பட வேண்டுமென்பதையும்,  முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில் முஸ்லிம்களின் உரிமைகளுக்காக வேண்டி தனியொரு அரசியல் கட்சி உருவாக்கப்பட வேண்டுமென்பதையும் வலியுறுத்தி எழுதினேன். நாவல் வெளிவந்த பிறகு இலக்கிய உலகிலும், அரசியல் உலகிலும் என் நாவல் அதிகமாகப் பேசப்பட்டது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களுக்கான ஒரு தனிக்கட்சியாக 1987ஆம் ஆண்டு உருவாக்கம் பெற்றது. அதன் ஸ்தாபகத் தலைவர் மறைந்த எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களும், அப்போதைய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சுந்திரமூர்த்தி அபூபக்கர் அவர்களும் என் நாவலைப் படித்துவிட்டு என் வீட்டுக்கு வந்து பாராட்டினர். இந்நாவலில் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு மாகாண அலகுகள் பொருத்தமானது என்பதை நான் 1983ஆம் ஆண்டில் சுட்டிக் காட்டியிருந்தேன். இந்திய – இலங்கை ஒப்பந்தப்படி இலங்கையின் அரசியலமைப்பின் 13ஆம் திருத்தப் பிரகாரம் இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக மாகாணசபை முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்விரு நிகழ்வுகளையும் வைத்து அரசியல் தளத்தில் கூட என் நாவல் அதிகமாகப் பேசப்பட்டது. இந்நாவலின் இரண்டாவது பதிப்பு சிந்தனைவட்டத்தின் வெளியீடாக வெளிவந்து குறிப்பிட்ட சில மாதங்களுக்குள் விற்பனையாகி முடிந்தமையும் குறிப்பிடத்தக்கது. இந்த நாவல் பிற்காலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சில பேராசிரியர்களால் ஆய்வுசெய்யப்பட்டதுடன், இலங்கைப் பல்கலைக் கழகங்களிலும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டது.

இருப்பினும், எனது தனிப்பட்ட வாழ்வில் தொழில் நிமித்தமாக எனக்கு ஏற்பட்ட நேரநெருக்கடிகளும்,  தனிப்பட்ட சில பிரச்சினைகளும் நாவல் துறையில் ஈடுபடக்கூடிய அவகாசத்தை குறைத்தது. அன்று முஸ்லிம்களுக்குத் தனிக்கட்சியொன்று அவசியம் என்று இலக்கிய வடிவமாக நான் முன்வைத்த கருத்தையிட்டு இன்று மனவேதனைப் படுகின்றேன். இன்று இலங்கையில் முஸ்லிம்களுக்கென 12 அரசியல் கட்சிகள் உள்ளன. இதுவே ஒரு சாபக்கேடாகவும் அமைந்து விட்டது. குறிப்பாக ஒரு அரசியல் தலைமைத்துவமில்லாத நிலைக்கு இலங்கை முஸ்லிம்களை மாற்றிவிட்டது. எனவே,  எதிர்காலத்தில் “அடிவானத்து ஒளிர்வுகள் பாகம் 02” ஐ எழுதும் எண்ணம் உண்டு. அதில் அன்று அரசியல் ரீதியாக என்னால் கூறப்பட்ட எதிர்வுகூறல்களை இன்றைய சூழ்நிலைகளுடன் தொடர்புபடுத்தி அக்கதையைத் தொடுப்பது என் எதிர்பார்க்கையாகும்.

கேள்வி:- இதுவரை 150 நூல்களை எழுதி வெளியிட்டுள்ளீர்கள். இவற்றுள் அதிகமான நூல்கள் பாடநூல்கள் எனப்படுகின்றனவே.

பதில்:- உண்மைதான். நான் எழுதிய நூல்களுள் 72 நூல்கள் போக மீதமானவை பாடவழிகாட்டி நூல்கள் என்பதை நான் ஏற்றுக் கொள்கின்றேன். இதற்கான மூல காரணத்தையும் குறிப்பிட வேண்டும். இலங்கையைப் பொறுத்தமட்டில் இலக்கிய நூல்களை வெளியிட்டு சந்தைப்படுத்துவது மிகவும் கடினமானவொரு காரியம். இந்தியாவில் வெளியிடப்படக்கூடிய நூல்களில் ஒரு தொகுதியை நூலகங்களோ,  அரசோ கொள்வனவு செய்வதைப் போல இலங்கையில் எத்தகைய ஏற்பாடுகளுமில்லை. இதனால் இலங்கையைப் பொறுத்தமட்டில் எழுத்தாளனே வெளியீட்டாளனாக இருக்க வேண்டிய துர்ப்பாக்கியமான  நிலை காணப்படுகின்றது.

ஆரம்ப காலங்களில் இலக்கிய நூல்களை மாத்திரம் வெளியிட்டு நான் பல இலட்சங்கள் நஷ்டமடைந்துள்ளேன். இந்நிலையில் நான் ஒரு கல்லூரி ஆசிரியராகவும் அதேபோல தனியார் கல்லூரிகளில் முன்னணி அரசறிவியல் போதகராகவும் இருந்ததினால் நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழகங்கள்,  பாடசாலைகளுடன் எனக்கு நேரடியான தொடர்புகள் ஏற்பட்டன. இதனைப் பயன்படுத்தியே ஆரம்ப கல்வி, இடைநிலைக் கல்வி, உயர்தரக் கல்வி,  பல்கலைக்கழகக் கல்வி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பாடவழிகாட்டி நூல்களை குறிப்பாக அரசறிவியல், வரலாறு, சமூகக்கல்வி போன்ற பாடங்களில் எழுதி வெளியிட்டேன். பல்கலைக்கழக பீ.ஏ. பட்டப்படிப்பு மாணவர்களுக்காக வேண்டி அரசறிவியல் நூல்களையும் எழுதி வெளியிட்டேன். மேலும், என்னுடைய மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து தரம் 05 புலமைப்பரிசில் பாடத்திட்டத்திற்கமைய பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளேன். என்னால் எழுதப்பட்ட பாடநூல்களுக்கு அதிகக் கேள்வி இருந்தது. இந்நூல்களால் கிடைத்த இலாபத்தை வைத்து இலக்கிய நூல்களுக்கு முதலீடு செய்தேன். எனவே,  பாடநூல்கள் மூலமாக ஒரு வருமானம் கிடைக்காதவிடத்து என்னால் இலக்கிய நூல்களை இவ்வளவு தூரத்திற்கு எழுதி வெளியிட முடியாது போயிருக்கும்.

கேள்வி:- 21ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து இலங்கை எழுத்தாளர்கள்,  ஊடகவியலாளர்கள்,  கலைஞர்களின் விபரங்களைத் தொகுத்து நூலுருப்படுத்துவதிலும் அவற்றை ஆவணப்படுத்துவதிலும் கூடிய கரிசனை செலுத்தி வருகின்றீர்கள். இதைப் பற்றி சற்று கூற முடியுமா?

பதில்:- 19ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதியிலிருந்து இலங்கையில் தமிழ்மொழி வளர்ச்சிக்காக வேண்டியும்,  தமிழ்மொழியினூடாக சமய,  கலாசார,  தேசிய உணர்வுகளை ஏற்படுத்தக்கூடிய வகையிலும் ஆயிரக்கணக்கான எழுத்தாளர்கள்,  ஊடகவியலாளர்கள்,  கலைஞர்கள் தமது பங்களிப்புக்களை நல்கி வந்துள்ளனர். ஆனால்,  இன்றுள்ள தலைமுறையினருக்கும், நாளைய தலைமுறையினருக்கும் அவர்கள் யார்? என்ன செய்தார்கள்? அவர்களின் பணிகள் எத்தகையவை என்ற விபரங்கள் தெரியாமல் இருக்கின்றது. பல்கலைக்கழக மற்றும் உயர்மட்ட ஆய்வுகளில் கூட,  இத்தகைய தகவல்களைப் பெற முடியாதிருப்பது வேதனைக்குரிய ஒரு விடயமாகும். இதற்கான காரணம்  இவர்கள் பற்றிய தரவுகள்,  விபரங்கள், குறிப்புகள் இன்மையே.

இது பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும், அவை பதிவு செய்யப்பட்டு ஆவணப்படுத்தப்பட வேண்டுமெனவும் நீண்ட காலமாக பலரும் கூறிவந்தாலும்கூட,  தொடர்ச்சியாக அம்முயற்சிகளில் யாரும் ஈடுபடவில்லை. முயற்சிகளை மேற்கொண்டவர்களும் குறிப்பிட்ட சிலரின் விபரங்களைத் திரட்டி ஆவணப்படுத்தியதுடன்,  அவற்றைத் தொடரவில்லை. எனவேதான்,  இலங்கையிலிருந்து வெளிவந்த நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் காலஞ்சென்ற எம்.பி.எம். அஸ்ஹர் அவர்களின் பத்திரிகை அனுசரணையுடன் இம்முயற்சியை நான் 2002ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பித்தேன். இன்றுவரை இலங்கையைச் சேர்ந்த 325 எழுத்தாளர்கள்,  ஊடகவியலாளர்கள்,  கலைஞர்களின் விபரங்களைத் திரட்டி 14 தொகுதி நூல்களை வெளியிட முடிந்தது. அத்துடன்,  http://noolaham.org/wiki   இணையத்தளத்திலும் இவற்றை பதிவாக்க முடிந்துள்ளது. மேலும்,  என் சக்திக்கு எட்டியவாறு தேசிய ரீதியிலும்,  சர்வதேச ரீதியிலும் இவர்கள் பற்றிய குறிப்புகளை ஆவணப்படுத்தி வருகின்றேன். இன்னும் இம்முயற்சி தொடர்கின்றது. தற்போது இலங்கையிலிருந்து வெளிவரும் முன்னணி பத்திரிகைகளில் ஒன்றான ‘ஞாயிறு தினக்குர’லில் “இவர்கள் நம்மவர்கள்” எனும் தலைப்பில் மேற்கொண்டு வருகின்றேன்.

கேள்வி:- இம்முயற்சிக்கென இலங்கையிலுள்ள முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்,  இந்து சமய கலாசார திணைக்களம் அல்லது வேறு யாதாவது நிறுவனங்கள் மூலமாக உதவிகள் கிடைக்கின்றனவா?

பதில்:- இல்லை. முழுமையாக இது என்னுடைய தனி முயற்சியே. உண்மையில் இத்தகைய முயற்சிகளை இலங்கையைப் பொறுத்தமட்டில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்,  இந்து சமய கலாசார திணைக்களம் போன்றன மேற்கொண்டிருக்க வேண்டும். இதைப் பற்றி இவ்விடத்தில் நான் விமர்சிக்கத் தயாராக இல்லை. இந்த முயற்சியை மேற்கொள்ளும்போது எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள்,  கலைஞர்களின் விபரங்களைத் திரட்டுவதில் பல செலவினங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதுமட்டுமல்லாமல் விபரங்களைத் திரட்டிய பின் அவற்றை நூலுருப்படுத்துவதிலும் என்னுடைய சொந்த முதலீட்டையே நான் மேற்கொள்கின்றேன். இது போன்ற ஆவணப் பதிவுகளை இலங்கையில் சந்தைப்படுத்தி வருமானத்தைப் பெறுவதென்பது இயலாத காரியம். மேலும்,  இந்த விபரங்களை ஆவணப்படுத்துவதிலும் என் சொந்த பணத்தையே நான் செலவிடுகின்றேன்.

கூட்டுமொத்தமாக இதுவரை 14 தொகுதிகள் வெளிவந்துள்ளன. இந்த 14 தொகுதிகளிலும் பல இலட்சம் ரூபாய்களை நான் இழந்துள்ளேன். இவ்விடத்தில் ஒரு விடயத்தைக் குறிப்பிட வேண்டும். இலங்கையைப் பொறுத்தமட்டில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்,  இந்து சமய கலாசார திணைக்களம் போன்றன இலங்கை எழுத்தாளர்களின் நூல்களில் சுமார் 5000 ரூபாய் பெறுமதியான நூல்களை கொள்வனவு செய்து உதவுகின்றன. என்னுடைய இந்த ஆவணத் திரட்டு நூலை கொள்வனவு செய்து உதவும்படி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்,  இந்து சமய கலாசார திணைக்களம் ஆகியவற்றிற்கு பலமுறை விண்ணப்பம் செய்த போதிலும்கூட,  அவர்களிடமிருந்து ஒரு பதில் கூட கிடைக்காமை இவ்விடத்தில் சுட்டிக்காட்டப்பட வேண்டியதே. (முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இதுவரை வெளிவந்த 14 தொகுதிகளில் மூன்று தொகுதிகளை மாத்திரம் சில ஆண்டுகளுக்கு முன் கொள்வனவு செய்தது.)

இலங்கையில் அரச திணைக்களங்களுடனான இத்தகைய உதவிகளை கோரும்போது அரசியல் செல்வாக்குகள்,  அரசியல்வாதிகளின் செல்வாக்குகள்,  பிரதேசவாத செல்வாக்குகள் முதன்மைப் படுத்தப்படுவதினால் சேவையின் பெறுமானத்தை உணர்ந்து செயல்படாத அவர்களிடம் மண்டியிட நான் விரும்புவதில்லை. எவ்வாறாயினும் என் சக்திக்கெட்டியவாறு நான் மேற்கொண்டு செல்லும் முயற்சி எதிர்கால சந்ததியினருக்கு ஒரு பயன்தரும் முயற்சி என்ற நம்பிக்கையில் தொடர்ந்து கொண்டிருக்கின்றேன். நிச்சயமாக இதன் பெறுமானம் என்றோ ஒரு காலத்தில் உணரப்படும்.

கேள்வி:- இலங்கை எழுத்தாளர்கள்,  ஊடகவியலாளர்கள்,  கலைஞர்களின் விபரத்திரட்டுக்கள் தகவல்களைப் பெறும் முறை பற்றியும்,  வகைப்படுத்தல்கள்  மேற்கொள்ளப்படும் முறை பற்றியும் சற்று கூறுங்கள்.

பதில்:- இலங்கை எழுத்தாளர்கள்,  ஊடகவியலாளர்கள்,  கலைஞர்களின் விபரத்திரட்டுக்கான தகவல்களை நேரடியாகவும்,  ஆதாரபூர்வமாகவும் சம்பந்தப்பட்ட எழுத்தாளர்கள்,  ஊடகவியலாளர்கள், கலைஞர்களிடமிருந்தும் மரணித்தவர்களாயின் அவர்களின் உறவினர்களிடமிருந்தும் பெறுகின்றேன். இதற்காக வேண்டி தொடர்புகளுக்காக இலங்கையில் ஞாயிறுதினக்குரல் ஆசிரியர் திருவாளர் இராஜபாரதி அவர்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கி வருகின்றார். புலம்பெயர் நாடுகளில் நூலகவியலாளர் என். செல்வராஜா,  த. ஜெயபாலன் போன்றோரும்; ஜெர்மனியில் திருவாளர்கள் அருந்தவராசா,  சிவராசா,  ஜீவகன்,  புவனேந்திரன் போன்றோரும் ஒத்துழைப்பு நல்கி வருகின்றனர். புலம்பெயர் ஊடகங்களான உதயன்,  லண்டன் குரல், காலைக்கதிர்,  அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஐ.பி.சி.,  தீபம் தொலைக்காட்சி,  ஜெர்மனியில் மண்,  அவுஸ்திரேலியாவில் உதயம்,  இலங்கையில் ஞானம் போன்றன ஊடக அனுசரணையை வழங்கி வருகின்றன. இதன் மூலமாகவே எழுத்தாளர்கள்,  ஊடகவியலாளர்கள்,  கலைஞர்களுடனான தொடர்பினை நான் ஏற்படுத்திக் கொண்டு விபரங்களைப் பெறுகின்றேன். மேலும்,  சில தேடல்களின் மூலமாக பழைய எழுத்தாளர்கள்,  ஊடகவியலாளர்கள்,  கலைஞர்களின் விபரங்களைப் பெறுகின்றேன்.

இந்த இயந்திர யுகத்தில் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கும் மத்தியில் குறிப்பாக நேரம் போதாமையினால் தேடல் முயற்சிகளினூடாக விபரங்களைத் திரட்டுவதில் பின்னடைவு நிலைதான் காணப்படுகின்றது. விபரத்திரட்டில் எவ்வித வகைப்படுத்தலையும் நான் மேற்கொள்ளவில்லை.

எனக்குக் கிடைக்கும் தகவல்களின் நம்பகத்தன்மைக்கு முன்னுரிமைக் கொடுத்து எழுதுகின்றேன். குறிப்பாக இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர்கள்,  ஊடகவியலாளர்கள்,  கலைஞர்களின் விபரங்களையே நான் திரட்டுகின்றேன். அவர்கள் புலம் பெயர்ந்திருந்தாலும் அவர்கள் இலங்கை மண்ணில் பிறந்தவர்களாகவே இருக்க வேண்டும். இதுவே எனது அடிப்படை.

கேள்வி:- இந்த எழுத்தாளர்கள்,  ஊடகவியலாளர்கள்,  கலைஞர்களின் விபரத்திரட்டின் மூலம் உங்கள் இலக்கு என்ன?

பதில்:- சற்று சிந்திக்க வேண்டிய கேள்வி. 19ஆம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டத்திலிருந்து 21ஆம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டம்வரை இலங்கையில் தமிழ்மொழி மூல வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்த 20 ஆயிரத்துக்கும்  மேற்பட்ட எழுத்தாளர்கள்,  ஊடகவியலாளர்கள்,  கலைஞர்களின் இனங்காண முடிகின்றது. ஆனால்,  இவர்கள் அனைவரினதும் விபரங்களைத் திரட்ட முடியும் என்பது நிச்சயமாக என் வாழ்நாளில் முடியாததே. ஏனெனில்,  ஒரு தனி மனிதனாக நின்று தான் பல்வேறுபட்ட பிரச்சினைகளின் மத்தியில் இதுவரை 350 பேருடைய விபரங்களை ஆதாரபூர்வமாக திரட்டித் தொகுத்து ஆவணப்படுத்தியுள்ளேன்.

தங்கள் கேள்விக்கு என்னுடைய இலக்கைக் குறிப்பிடுவதாயின்,  தேகாரோக்கிய நிலையில் நான் உயிருடன் உள்ள வரை இயலுமான வரை விபரங்களைத் திரட்டுவதே இம்முயற்சியில் என்னுடைய அடுத்த இலக்கு 500 பேர். பின்பு 1000……. ஆசையும்,  ஆர்வமும்,  முயற்சியும் உண்டு. என் தேகாரோக்கியத்தைப் பொறுத்து இந்த இலக்கையடையலாம். அடையாமலும் விடலாம்.

இருப்பினும் ஒரு ஆசை. சுமார் எட்டாண்டுகளாக மிகவும் சிரமப்பட்டு பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புகளை சமாளித்துக் கொண்டு பாரிய பொருளாதாரப் பிரச்சினைகளையும் முகம்கொடுத்து என்னால் மேற்கொள்ளப்பட்டு வரும் இம்முயற்சியை நான் இல்லாத காலங்களில் யாராவது தொடர வேண்டும். அது தனிப்பட்டவராகவும் இருக்கலாம். அல்லது ஒரு அரச அன்றேல் சுயேச்சை நிறுவனமாகவும் இருக்கலாம். இதுவரை என்னால் மேற்கொள்ளப்பட்ட சகல ஆய்வுக்கும் ஆதாரங்கள் உள்ளன. அவை தொடர்ச்சியான ஆய்வுக்கு வழிவகுக்கும்.

கேள்வி:- தங்கள் குறிக்கோள்கள் நிறைவேற வாழ்த்துக்கள். சில எழுத்தாளர்களின் விபரங்களை http://thatstamil.oneindia.in/ இணையத்தளத்திலும் எழுதுவதாக அறிகின்றோம். இதை பற்றி கூற முடியுமா?

பதில்:- எழுத்தாளர்கள்,  ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டினை நான் ஞாயிறு தினக்குரலில் முதன்மையாக செய்து வருகின்றேன். தற்போது ஞாயிறு தினக்குரலில் பிரசுரமாகிவரும் இத்தொடரில் ஒரு குறித்த ஒழுங்கின் அடிப்படையில் செய்து வருகின்றேன். குறிப்பாக எழுத்தாளர்கள்,  ஊடகவியலாளர்கள்,  கலைஞர்களின் பிறப்பிடம், வாழ்விடம்,  பிறந்த திகதி,  பெற்றோர்,  கற்ற பாடசாலைகள்,  தொழில், எழுத்து,  ஊடகம்,  கலைத்துறையில் ஈடுபாடு,  சாதனைகள்,  பெற்ற விருதுகள்,  இத்துறையில் தன்னை ஊக்குவித்தவர்கள் போன்ற விபரங்கள் ஒரு ஒழுங்கமைப்பின் கீழ் இடம்பெறுவதை நீங்கள் அவதானித்திருக்கலாம். மேற்குறிப்பிட்ட ஒழுங்கமைப்பிற்கிணங்க தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் அல்லது விசேட காரணமொன்றின் நிமித்தம் ஒரு துறையை முதன்மைப்படுத்த வேண்டிய நிலையிலுள்ள எழுத்தாளர்கள்,  ஊடகவியலாளர்கள்,  கலைஞர்களின் விபரங்களை http://thatstamil.oneindia.in/ இணையத்தளத்தில் பிரசுரித்து வருகின்றேன். http://thatstamil.oneindia.in/ இணையத்தளம் இலட்சக்கணக்கான வாசகர்களைக் கொண்ட ஒரு இணையத்தளமாகும். சர்வதேச ரீதியில் இந்த இணையத்தளத்துக்கு வாசகர்கள் உள்ளனர். எனவே,  இந்த இணையத்தளத்தில் எமது படைப்பாளிகளை அறிமுகப்படுத்துவதென்பது சர்வதேச ரீதியிலான ஓர் அறிமுகப்படுத்தலாகவே உள்ளது. இருப்பினும் இத்தகையோரின் அறிமுகம் பிரசுரமானாலும் இவர்கள் நம்மவர்கள் நூற்றொடரிலே இக்குறிப்புகளும் பதிவாக்கப்படும். எதிர்காலத்தில் இலங்கை எழுத்தாளர்கள்,  ஊடகவியலாளர்கள்,  கலைஞர்களின் விபரத்திரட்டில் இடம்பெற்றுள்ள அனைவரையும் சர்வதேச மட்டத்திலான அறிமுகத்தில் சேர்க்க விரிவான திட்டமொன்றை வகுத்து வருகின்றேன். இது பற்றிய விரிவான தகவல்களை பின்பு அறிவிப்பேன். இவ்விடத்தில் http://thatstamil.oneindia.in/ இணையத் தளஆசிரியர் திருவாளர் A.K Khan அவர்களுக்கும்,  நண்பர் முனைவர் மு. இளங்கோவன் அவர்களுக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

குறிப்பு:-
இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர்கள்,  ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் தங்கள் பற்றிய குறிப்புகளை வழங்க விரும்பினால் உரிய விபரத்திரட்டுப் படிவங்களைப் பெற பின்வரும் முகவரியுடன் தொடர்பு கொள்ளவும்

P.M. PUNIYAMEEN
14, UDATALAWINNA MADIGE,
UDATALAWINNA
SRI LANKA.
தொலை பேசி   : 0094 -812 -493 892 
தொலை நகல்   : 0094 -812 -493 746
மின் அஞ்சல்    :  pmpuniyameen @ yahoo.com

நன்றி: ஞாயிறு தினக்குரல் (இலங்கை) : 24 மே 2009

ஆமையினத்தை பாதுகாக்கும் உலக தினம் World Turtle Day : மே 23ம் திகதி – புன்னியாமீன்

world-turtle-day.jpg உலக ளாவிய ரீதியில் சர்வதேச தினங்கள் அனுஸ்டிக்கப்படுவதற்கு குறித்த விடயத்தின் முக்கியத்துவமே மூல காரணமாகும். சர்வதேச தினங்களின் கருப்பொருள் மானுடம் சார்ந்ததாக மாத்திரமல்லாமல் சில முக்கியத்துவம் வாய்ந்த ஜீவராசிகள்; தொடர்பாகவும் இந்த விசேட தினங்கள் அனுஸ்டிக்கப்படுகின்றன. இந்த அடிப்படையில் 2000 ம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் மே மாதம் 23ஆம் திகதி ஆமை இனத்தைப் பாதுகாக்கும் உலக தினம் பிரகடனப்படுத்தப்பட்டு ஆமை இனத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை மானுடத்துக்கு விளக்க வகை செய்யப்பட்டுள்ளது.

ஆமை ஊர்வன இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இவை நீரிலும் நிலத்திலும் வாழக்கூடிய உடலமைப்பைக் கொண்டது. இதன் உடல் ஓட்டினால் மூடப்பட்டதாக இருக்கும். உலகில் ஏறத்தாழ 300 வகையான ஆமையினங்கள் உள்ளதாக ஆய்வறிக்கைகள் குறிப்பிடுகின்றன. இவற்றில் சில இனங்கள் அழியும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளன. கடலாமைகள் ஒப்பீட்டளவில் பெரியவை. தோல்முதுகுக் கடலாமை (leatherback sea turtle) என்ற ஆமையினம் 900 கிலோகிராம் நிறை வரை வளர்வதாகக் கூறப்படுகின்றது. 

ஆமையினத்தை பாதுகாக்கும் உலக தினமானது கடலாமைகளின் பாதுகாப்பினை வலியுறுத்தவும் அவை எதிர்நோக்கும் பல்வேறு அழிவுப் பயமுறுத்தல்களிலிருந்தும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது பற்றியும் ஆராய்வதாக உள்ளது.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கடல் ஆமைகள் வாழ்ந்து வருகின்றன. டைனோஸர்களுக்கும் முன்பே பூமியில் தோன்றியவை இவை என்று நம்பப்படுகின்றது. எட்டு வகையான கடல் ஆமைகள் உலகத்தில் காணப்படுகின்றன. இவற்றில் ஐந்து வகை ஆமைகள் இந்திய,  இலங்கை கடல் பகுதிகளில் வாழ்கின்றன. சூழ்நிலைக்கு ஏற்ப அவை தன் உடல் வெப்பத்தை மாற்றி அமைத்துக் கொள்ளும். உடல் வெப்பத்தை சீரமைக்கவும், சுவாசிப்பதற்கும் கடலின் மேல் மட்டத்துக்கு வந்து செல்லும்.

நிலத்தில் வாழும் ஆமை தன்னுடைய தலை, கால்களை ஆபத்து வரும்போது ஓட்டுக்குள் இழுத்துக்கொண்டு தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும். ஆனால், கடல் ஆமைகளால் இப்படிச் செய்ய முடியாது.

கடல் ஆமைகளில் மிகச் சிறியது சிற்றாமை. வளர்ந்த சிற்றாமையின் எடை சுமார் ஐம்பது கிலோ இருக்கும். சுமார் 80 செ.மீ. நீளம் வரை வளரும். பெரிய ஆமைகளின் எடை சராசரியாக 250 – 400 கிலோ கிராம்களாகும். சில இனங்கள் 900 கிலோ வரை வளர்ந்து காணப்படும்.

கடல் ஆமைகள் நிலத்தில் வாழும் பெரிய ஆமைகளில் இருந்து தோன்றியவைதான். இவை டொல்பின்கள் போல சில நிமிடங்களுக்கொருமுறை மூச்சு விட மேலே வரும்.

பெருந்தலை ஆமைகளின் முக்கியமான உணவு நத்தைகள், ஜெலி மீன், சிப்பி போன்றவை. இவை நத்தை போன்ற உறுதியான ஓடுகளையுடைய உயிரினங்களை உட்கொள்ளத் தகுந்தாற் போன்ற வாயமைப்புடன் இருக்கும். கடல் ஆமைகளுக்கு பற்கள் கிடையாது. தாடைகளை வைத்தே மென்று தின்ன முடியும். மிகக் குறைந்த தூரத்துக்கு மட்டுமே பார்க்க முடியும். நுகரும் திறன் இவற்றுக்கு மிகவும் அதிகம்.

கடலிலிருந்து ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பெண் ஆமைகள் முட்டையிட நிலத்துக்கு வரும். இதற்காக சில வேளைகளில் ஆயிரக்கணக்கான மைல்கள்கூட நீந்தி வரும். கடலின் விளிம்பிலிருந்து ஒரு குறிப்பிட்ட தூரத்தில் அது மணலில் பெரிய பள்ளம் தோண்டும். பின்னர் அதில் முட்டையிடும். ஆண் ஆமைகள் ஒரு முறை கடலுக்கு சென்றுவிட்டால் வாழ்க்கை முழுவதும் அங்கேதான். ஒரு ஆமை 50 இலிருந்து 200 முட்டைகள் வரை இட்டாலும் சில மட்டுமே பொரியும். முட்டைகள் கோல்ப் பந்தின் வடிவத்தில் இருக்கும். முட்டையிட்ட பின்னர் குழியை மூடிவிட்டு, கடலுக்குள் இறங்கிச் சென்றுவிடும். கடலாமைகள் அருகிவரும் ஓர் உயிரினமாக அறிவிக்கப்பட்டுள்ளதனால் கடலாமை முட்டைகளை எடுப்பதோ, விற்பனை செய்வதோ குற்றமாகக் கருதப்படுகிறது. முட்டைகளின் மீது படிந்திருக்கும் மணற்படுகை சூரிய வெப்பத்தினால் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையை அடையும். குறித்த காலத்தில் ஆமைக்குஞ்சுகள் முட்டையிலிருந்து வெளியேறி மணலைத் துளைத்துக்கொண்டு அவை வெளிவரும்.

முட்டை பொரிந்த பின் (60-85 நாட்கள்) ஆமைக்குட்டிகள் இரவில் கடலுக்குள் சென்றுவிடும். எல்லா ஆபத்துகளிலிருந்தும் தப்பித்து முழு வாழ்நாளையும் கடல் ஆமையால் வாழ முடிந்தால்  120 ஆண்டுகளுக்கு மேலும் வாழும். டிஸ்கவரி சானலில் ஒரு முறை முட்டையிலிருந்து வெளிவரும் ஆமைக்குட்டிகள் கடலை நோக்கி விரைவதையும் அவைகளை பிடித்து தின்ன கடல் பறவைகள் வானத்திலிருந்து வட்டமிட்டுக் கீழிறங்குவதையும் ஒளிபரப்பினார்கள். கடற்கரை முழுவதும் குட்டியாக ஆமைகள். ஐந்து ஆறு நிமிடத்துக்குள் அவை கடல் நீரில் புகுந்துவிட்டால் உயிர் தப்பும். கடலுக்குள் செல்லும்வரை ஆமைக் குஞ்சுகளின் நிலை கேள்விக் குறியே.

அலுங்கு ஆமை சில காலங்களில் நச்சுத்தன்மை உள்ள கடல் பஞ்சு போன்ற மிருதுவான தாவர வகையை உண்ணும். இதனால் உடலெங்கும் நஞ்சு பரவியிருக்கும். இவற்றை மனிதர்கள் உண்டால் உயிருக்கே ஆபத்து.

மனிதனால் கடலாமைகள் செல்லப்பிராணிகளாக வளர்ப்பதற்கும் பிடிக்கப்படுகின்றன. இவற்றைச் செல்லப்பிராணிகளாக வளர்ப்பதற்காக அதிக கவனமும் அர்ப்பணிப்பும் தேவைப்படுகின்றது. இத்தினத்தின் பிரதான குறிக்கோள் கடலாமைகளுக்கு அன்பு செலுத்துவதாகும். அவற்றின் நல்வாழ்விற்கு எவ்வாறு வகை செய்ய வேண்டும் என்பதை உணர்த்துவதாகும்.

1975முதல் செல்லப்பிராணியாக இவற்றை விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. கடலாமைகள் செல்மொனல்லா எனும் பெக்டீரியாவைக்கொண்டது. இதனால் மக்களின் சுகாதாரத்திற்கு ஆபத்து ஏற்படுத்தும் என்பதாலே இது தடை செய்யப்பட்டது. நோய்களைக் கட்டுபடுத்த மற்றும் தடுக்கும் மத்திய நிலையத்தின் கணிப்பீட்டின்படி வருடா வருடம் 74000பேர் சல்மொனல்லா பக்டீரியாவால் பீடிக்கப்பட்டுவருவதுடன்,  இதில் 6வீதம் ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகின்றது. இந்நோயால் அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் சிறுவர்களும், வயோதிபர்களும் ஆவர்.

கடலாமைகளின் வசிப்பிடங்களைப் பாதுகாத்தல் அவை பாதைகளை குறிக்கிடும் போது அவற்றின் மேலோட்டைப் பிடித்து பாத்திரமாக அகற்றுதல் அவற்றைப் பார்த்து ரசித்தல் அவற்றின் செயல்களை அவதானித்தல் அவற்றைச் செல்லப்பிராணிகளாக வளர்ப்பதற்கு கடலாமைகளை வாங்காதிருத்தல் செல்லப்பிராணிகளாக வளர்க்கும் கடலாமைகளை கொண்டு போய் காட்டுக்குள் போடாமலிருத்தல் போன்றவற்றை நாம் செய்தல் வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

http://thatstamil.oneindia.in/cj/puniyameen/2009/0523-world-turtle-day.html

சர்வதேச ‘உயிர்ப் பல்வகைமை தினம்’ – புன்னியாமீன்

international-day-for-biological-diversity.jpgஇன்று மே 22 சர்வதேச உயிர்ப் பல்வகைமை The International Day for Biological Diversity (or World Biodiversity Day)  தினமாகும்.

உயிரியல் சம்பந்தமான பல்வகைமை பற்றிய சர்வதேச தினம் மே 22ஆம் திகதி அனுஸ்டிக்கப்படுகின்றது.  உயிரியல் என்பது ‘உயிர் வாழ்வன’ பற்றிய அறிவியலாகும். இது உயிரமைப்புகளுடைய இயல்புகள் மற்றும் நடத்தைகள், உயிரினங்களின் தோற்றம், அவை தங்களுக்குள் ஒன்று மற்றொன்றுடனும்,  சூழலுடனும் கொண்டுள்ள தொடர்புகள் என்பன பற்றிக் கருத்தில் கொள்கிறது.

ஐக்கிய நாடுகள் சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இத்தினத்தின் முக்கிய நோக்கம் உயிர்ப் பல்வகைமை பற்றிய விடயங்களை ஆராய்வதும் அவை எதிர்நோக்கக்கூடிய சவால்களையும் கவனத்திற் கொண்டு அவை பற்றிய ஆய்வுகளையும்,  விளக்கங்களையும் முன்வைப்பதாகும்.

‘உயிரியல்’ விரிவுபட்ட அதேநேரம், தனித்தனித் துறைகளாகக் கருதப்படுகின்ற, பல்வேறு கல்விச் செயற்பாடுகளை உள்ளடக்கிய ஒரு துறையாகும். அவையனைத்தும் ஒட்டுமொத்தமாக பரந்த அடிப்படையில்  உயிர்வாழ்வன பற்றி ஆய்வு செய்கின்றன.

இத்தகைய ஆய்வுகள் அணு மற்றும் மூலக்கூறுகள் மட்டத்தில், மூலகூற்று உயிரியல், உயிர்வேதியியல் ஊடாகவும்,  களங்கள் (cell) மட்டத்தில் களங்கள் உயிரியல் ஊடாகவும், கள மட்டத்தில் உடற்கூற்றியல்,  மற்றும் கள அமைப்பியல் ஊடாகவும்,  தனிப்பட்ட உயிரினத்தின் விருத்தி அல்லது ontogeny மட்டத்தில் விருத்தி உயிரியல் ஊடாகவும்,  பெற்றோர், offspring  இடையிலான பரம்பரைத் தொடர்புகள் மட்டத்தில் பரம்பரையியல் ஊடாகவும்,  குழு நடத்தைகள் மட்டத்தில் நடத்தையியல் ethology ஊடாகவும்,  முழு population மட்டத்தில் தொகை மரபியல் population genetics ஊடாகவும்,  பல்வகை உயிரினங்களில் lineages மட்டத்தில் முறைப்பாடியல் ஊடாகவும்,  ஒன்றிலொன்று சார்ந்துள்ள populations மற்றும் அவைகளின் வாழிடங்கள் மட்டத்தில், இயற்கை இயல் மற்றும் பரிணாம உயிரியல் ஊடாகவும், பூமிக்கு அப்பாலுள்ள உயிர்கள் மட்டத்தில், xenobiology ஊடாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே இது ஒரு விரிவான துறையாகும்.

இத் துறையின் முக்கியத்துவத்தை உணர்ந்து 1993ஆம் ஆண்டில் ஐ. நாடுகள் பொதுச் சபையின் இரண்டாம் குழுவினால் இத்தினம் பிரகடனப்படுத்தட்டதிலிருந்து 2000ஆம் ஆண்டுவரை டிசம்பர் 29ஆம் திகதிகளிலேயே அனுஸ்டிக்கப்பட்டு வந்தது. 2000ஆம் ஆண்டு நடை பெற்ற ‘ரயோ ஏர்த”; மகாநாட்டின்போது “டிசம்பர் மாதத்தில்  விடுமுறைகள் அதிகமாக இருப்பதால்” சர்வதேச உயிர்ப் பல்வகைமை The International Day for Biological Diversity (or World Biodiversity Day)  தினத்தை மே 22ல் அனுஸ்டிக்கத் தீர்மானிக்கப்பட்டது.

அண்மைக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட “மிலேனியம் எக்கோ சிஸ்டம்” (M.A) மதிப்பீட்டின்படி இந்நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் உயிர்ப் பல்வகைமை Biological Diversity (or World Biodiversity)  இழப்புக்கு காலநிலை மாற்றமானது நேரடிப் பாதிப்பினை ஏற்படுத்தும் என கூறப்படுகின்றது.

2100 ஆண்டளவில் வெப்பநிலையனாது 1.4 பாகை செல்சியஸிலிருந்து 5.8 பாகை செல்சியஸாக உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இக்கால நிலை மாற்றமானது விநியோக மாற்றங்கள், அழிவு அதிகரிப்பு விகிதங்கள்,  இனப் பெருக்கத்தில் பாதிப்பு  போன்றவற்றுடன்  தாவரங்களின் வளர்ச்சியில் மாற்றங்களையும் ஏற்படுத்தும் என கூறப்படுகின்றது.

இம்மாற்றங்களின் காரணமாக ஒரு மில்லியனுக்கு கூடிய இனங்கள் அழிவுறும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.  தாவர இனங்களின் அழிவையும், காலநிலை மாற்றத்தையும் முறைப்படி எதிர்கொண்டு அவற்றைத் தீர்ப்பதற்குச் செயற்படின் அடுத்து வரும் காலங்களில் இந்நிலையை வெற்றிகரமாக எதிர்நோக்க முடியும்.

இவ்விடத்தில் பூகோலத்தின் வெப்பநிலை அதிகரிப்பு தொடர்பாக சிறிது ஆராய்தல் அவசியம்.

பூகோலத்தின் வெப்பநிலை அதிகரிப்பு தொடர்பாக ரிச்சேர்டு ஹாரிஸ் [Richard Harris National Public Radio (March 26, 2006)] எனும் அறிஞர் “கடந்த பனியுகத்துக்கும் முன்பு உலகெங்கும் கடல் மட்டம் இன்றைக்கு உள்ளதை விட 20 அடி உயரத்தில் இருந்தது. புவியின் வெப்பநிலை மெல்ல மெல்ல அதிகரித்து  129,000 ஆண்டுகளுக்கு முன்னிருந்த அந்தக் கடல் மட்ட நிலைக்கு அடுத்த நூற்றாண்டிலே மீண்டும் கொண்டு வந்துவிடும்.” என்று குறிப்பிட்டிருந்தார்.

அதேபோல “கிரீன்லாந்தின் பனிமலைகள் உருகிச் சரிந்தால் சில சமயம் பூகம்பங்களை உண்டாக்கிவிடும். கடந்த 5 ஆண்டுகளாக பூகம்ப எண்ணிக்கை உலகில் இரட்டிப்படைந்துள்ளது. அவ்விதம் விரைவாக ஆர்க்டிக் பகுதிகள் சேமித்து வைத்துள்ள நீர் வெள்ளம் வெளியேறுவது பூகோளச் சூடேற்றத்தைக் காட்டும் மற்றுமோர் அடையாளம் என்று விஞ்ஞானிகள் எண்ணுகிறார். எதிர்பார்த்ததை விட பனிமலைகள் உருகி வேகமாக நகர்ந்து வருகின்றன.”  – கிரிஸ்டொபர் ஜாய்ஸ் [Christopher Joyce, National Public Radio (March 24, 2006)]

மேலும், “55 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு புவி அதிகமாக வெப்பமடைந்ததால்  மீதேன் வாயு பேரளவில் வெளியேறி பல ஆழ்கடல் உயிரினங்கள் கூட அழிந்தன என்றும், அதே நேரத்தில் தளவியல் விலங்கினங்கள் பெருகி வளர்ச்சி அடைந்தன என்றும் விஞ்ஞான இதழ் ஒன்று கூறுகிறது. அந்த மாதிரி வெப்ப யுகம் சமீபத்திய பாலியோசீன் உச்ச வெப்பம்” (Latest Paleocene Thermal Maximum) என்று குறிக்கப்படுகிறது. அது 10,000 – 20,000 ஆண்டுகளுக்கு இடையே ஒருமுறை ஏற்படுகின்றது.” மேற்படி கருத்துக்களைப் பார்க்குமிடத்து புவி வெப்பமடைவதும், இதனால் உயிரினங்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்களும் எம்மால் தீர்மானிக்கக்கூடியதே.

“உலகத்தின் சனத்தொகைப் பெருக்கம் 2050 ஆம் ஆண்டில் 9.1 பில்லியனாக அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது’. அதனால் எரிசக்தி, நீர்வளம், நிலவளம், உணவுத் தேவைகள் பன்மடங்கு பெருகிப் புவிச் சூடேற்றத்தை மிகையாக்க இடமுண்டு.

சில தசாப்தங்களுக்குள் கிலிமன்ஞாரோ சிகரத்தில் [Mount Kilimanjaro, Tanzania, Africa] பனிச்சரிவுகள் எதுவுமில்லாமல் போகலாம் எனவும்  அமெரிக்காவில் உள்ள மான்டானா தேசியப் பூங்காவின் பனிச்சரிவுகள் தெரியாமல் போகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றன. அதேநேரம், சுவிட்ஸர்லாந்தில் உள்ள ரோன் பனிச்சரிவுகள் ஏறக்குறைய மறைந்து விட்டன,  அண்டார்க்டிகாவின் மேற்குப் பகுதியில் பாதியளவு பனிப்பாறைகள் உருகிப் போயின, அதுபோல் கிரீன்லாந்தில் அரைப் பகுதி பனிமலைகள் உருகிக் கரைந்து விட்டன,  நியூ ஆர்லியன்ஸ் நகரை ஏறக்குறைய கடல்நீரும், நதிநீரும் மூழ்க்கி நாசமாக்கி நகர மக்களை புலப்பெயர்ச்சி செய்து விட்டது,  வன்முறைகளுக்கும் யுத்தங்களுக்கும் மட்டும் தான் மனிதன் பயப்பட வேண்டும் என்று பொருளில்லை கால நிலையும் அதைவிடப் பயங்கரமானதே.

இவ்விடத்தில் புவிச் சூடேற்றம் என்றால் என்ன என்பதையும் சிறிது விளங்கிக் கொள்ள வேண்டும்.

புவி என்று நாம் கூறும்போது மண் தளத்துடன் பூமியைச் சுற்றி ஐந்து அல்லது பத்துமைல் உயரத்தில் வாயுக்கோளக் குடையாக நிலவி பூமியின் தட்ப, வெப்பம் நிலையாகப் பருவ காலங்களில் குறிப்பிட்ட வெப்ப அதிகரிப்பை [Temperature Range] ஏற்படுத்திக் கொள்ளும் வாயு மண்டலத்தையும் சேர்த்துக் கொள்கிறோம். அந்த மெல்லிய வாயு மண்டலத்தில் நச்சு வாயுக்கள் கலந்து நாசமாக்கினாலும், ஓஸோன் துளைகள் ஏற்பட்டுக் கந்தையானாலும்,  பூமியின் ஈர்ப்பாற்றல் மாறி வாயுக்கள் மறைந்து போனாலும் பூமியின் காலநிலை மாறி வெப்ப அதிகரிப்பு இடம் பெற்று விடும். வாயு மண்டலம் மறைந்து போனால் நீர்வளம், நிலவளம், உயிர்வளம் அனைத்துமே பாதிக்கப்படும்

பச்சை வீட்டு  வாயுக்கள் (கார்பனீர்ஒக்சைட், மீதேன் போன்ற வாயுக்கள்) பூமியில்  உஷ்ணத்தை மிகையாக்குகின்றன.  ஓரளவு வெப்ப ஏற்றம் உயிரன வளர்ச்சிக்குத் தேவையே. ஆயினும் நிலக்கரி, இயற்கை வாயு, எண்ணை போன்ற “புதைவு எருக்கள்” [Fossil Fuel] வன மரங்கள் எரிப்புகளால் பச்சை வீட்டு வாயுக்கள் பேரளவில் சேமிப்பாகிப் பூமியின் வெப்பம் வேகமாக உயர்கின்றது.

அண்மையில் வெளியான ஒரு விஞ்ஞான அறிக்கையில் மண்ணிலிருந்தும், 40,000 ஆண்டு காலமாக பனிப்படலங்களிலிருந்தும் சேமிப்பாய் உள்ள மீதேன் புவியின் வெப்ப நிலை அதிகரிப்பினால் அதிகமாக வெளியேரலாம் என எச்சரித்துள்ளது. மீதேன் வாயுக் கசிவுகள் நிலக்கரி எரிசக்திப் புகைகளை விட 100 மடங்கு மிகையானவை என்று அறியப்பட்டுள்ளது. புவிச் சூடேற்ற விளைவுகளை ஒப்பிட்டால் மீதேன் வாயுவின் தீமை கார்பனீர் ஒக்சைட்டை விட 23 மடங்கு அதிகம் எனப்படுகின்றது. உலகில் அதிகமான  விஞ்ஞானிகள் புவிச் சூடேற்றத்தை உண்மையென ஏற்றுக் கொண்டாலும் அம்மாறுதலை ஏற்றுக் கொள்ளாத அறிஞர்களும், நாடுகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் புவிச் சூடேற்றத்தால் மாறிப் போகும் காலநிலைகளும், அதனால் ஏற்படும் திடீர் விளைவுகளும் உண்மையாகவே உலக மக்களைப் பாதித்துக் கொண்டு வருவதை நாம் அடிக்கடிக் கேட்டு வருகிறோம்.

புவியின் வெப்பநிலை அதிகரிப்பதினால் காலநிலைக் கோர விளைவுகளை கண்ணூடாகக் காண்கின்றோம். துருவப் பனிமலைகள் உருகிக் கடல் மட்டம் அதிகரிப்பதைக் காண்கிறோம். கடல் வெள்ளம் சூடேறி சூறாவளிகள், நில அதிர்வுகள்,எரிமலை வெடிப்புகள், போன்றவற்றைக்காண்கின்றோம்.  நீர்வளப் பகுதிகளின் நிலவளங்கள் தேய்ந்து வரட்சியாகிப் பாலையாகிப் போய்விடுமா என்னும் ஐயம் இன்று ஏற்பட்டு விட்டது. உதாரணத்திற்காக அண்மைக்காலங்களாக காலநிலைமாற்றத்தால் ஏற்பட்ட சில கோர விளைவுகளை நோக்குவோம். கடந்த 30 ஆண்டுகளாய் உச்சக் கணிப்பு நிலை 4 & 5 ஹரிக்கேன்களின் [Hurricane Category: 4 & 5] எண்ணிக்கை இரட்டித்துள்ளது, கடந்த 10 ஆண்டுகளில் கிரீன்லாந்து பனிப்பாறைகள் உருகிச் சரியும் நிகழ்ச்சிகள் இரட்டிப்பாக மாறி இருக்கின்றன, குறைந்த பட்சம் 279 தாவர, விலங்கின ஜீவிகள் [Species of Plants & Animals] பூகோளச் சூடேற்றத்தால் பாதிக்கப்பட்டுத் துருவப் பகுதிகளை நோக்கிப் புலப்பெயர்ச்சி ஆகியுள்ளன, 7000 அடி உயரத்தில் உள்ள தென் அமெரிக்காவின் கொலம்பியன் ஆன்டீஸ் மலைகளைப் போன்ற உயர்மட்டத் தளங்களில் கூட மலேரியா நோய் பரவி விட்டது.

மேலும் தொடர்ந்தும் புவியின் வெப்பநிலை அதிகரிப்பதினால் கீழ்க்காணும் அபத்தங்களும் ஏற்பட வாய்ப்புண்டு, அடுத்த 25 ஆண்டுகளில் பூகோளச் சூடேற்றத்தால் விளையும் மக்களின் மரண எண்ணிக்கை இரட்டிப்பாகி ஆண்டுக்கு 300,000 நபராக விரிவடையும், கிரீன்லாந்து, அண்டார்க்டிகாவின் பனிக்குன்றுகள் உருகி பூகோளக் கடல் மட்டம் 20 அடிக்கும் மேலாக உயர்ந்து, கடற்கரை நிலப்பகுதிகள் உலகெங்கும் பேரளவில் பாதகம் அடையலாம், 2050 ஆண்டு வேனிற் காலத்தில் வடதுருவத்தின் ஆர்க்டிக் கடல் பனித்தளம் இல்லாமல் நீர்த்தளமாகி விடலாம், 2050 ஆண்டுக்குள் உலகெங்கும் வாழும் மில்லியன் கணக்கான உயிர் ஜீவிகள் [Species] பரம்பரையின்றி முற்றிலும் மரித்துப் போய்விடலாம், வெப்பக்கனற் புயலடிப்புகள் [Intensive Heat Waves] உக்கிரமுடன் மிக்க அளவில் அடிக்கடித் தாக்கலாம், நீர்ப் பஞ்சம் ஏற்பட்டு, நிலவளம் சீர்குலைந்து வரட்சிகளும், காட்டுத் தீக்களும் அடிக்கடி உண்டாகலாம்.

புவியின் வெப்பநிலை அதிகரிப்பால் எழுகின்ற இந்த பிரச்சனைகளை நாம் ஒன்று கூடித் தீர்க்க முடியும். அவற்றைத் தீர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் நமக்கோர் கடமையாகவும் உள்ளது. நாம் தடுத்திடச் செய்யும் தனிப் பணிகள் சிறிதாயினும்,  மொத்தமாக ஒத்துழைத்து முடிக்கும் சாதனைகள் முடிவில் மிகப் பெரும் ஆக்க வினைகள் ஆகும். அவ்விதம் அனைவரும் ஒருங்கு கூடிப் பூகோளச் சூடேற்றத்தைத் தடுக்க முனையும் தருணம் இப்போது வந்துவிட்டது. புவிச் சூடேற்றத்தை நாங்கள் கட்டுப்படுத்தாவிடின் இன்னும் சில தசாப்தங்களில் பாரிய உயிரின இழப்புகள் ஏற்பட இடமுண்டு. இதனை இத்தினத்தில் நினைவிற் கொள்வோம்.

http://thatstamil.oneindia.in/cj/puniyameen/2009/0522-the-international-day-for-biological-diversit.html

மானிட இனத்தின் மேன்மைக்கும் அபிவிருத்திக்கும் அடிப்படையாக மிளிரும் பண்பாடு: இன்று மே 21 உலக பண்பாட்டுத் தினம் (World Culture Day – May 21) – புன்னியாமீன்

world-culture-day.jpg பண்பாடென்பது மக்கள் குழுவொன்று தமது சமூகத்தின் வரலாற்று வளர்ச்சிப் படிகளினூடாக உருவாக்கிக் கொண்ட பெளதிகப் பொருட்கள், ஆன்மீகக் கருத்துக்கள், மத அனுஸ்டானங்கள், சமூக விழுமியங்கள் என்பவற்றினை ஒன்றிணைத்த ஒரு பல்கூட்டுத் தொகுதி எனலாம். நம்பிக்கைப் பெறுமானம் கலைகள் விஞ்ஞானம் கல்வி உற்பத்தி முறைகளும் உறவுகளும் தொழினுட்ப வளர்ச்சி முறை என்பவற்றை உள்ளடக்கியதாக ஒரு இனத்தின் பண்பாடு இனங்காட்டப்படுகின்றது.

உலக பண்பாட்டு வளர்ச்சிக்கான துறைகளில் ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ நிறுவனம் கூடிய அக்கறைகாட்டி வருகின்றது. உலக நாடுகளின் வளர்ச்சிக்கு பொருளாதாரமும் பண்பாடும் மூலம் என்பர். மானிடவர்க்கத்தின் மேம்பாட்டுக்கான ஆணிவேரான பண்பாடு – கலாசாரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இன்று உலகளாவிய ரீதியில் உலக பண்பாட்டுத்தினம்  சர்வதேச ரீதியாக ஒவ்வோர் ஆண்டும் மே 21ஆம் திகதி அனுஸ்டிக்கப்படுகிறது

யுனெஸ்கோவின் பல்வேறு வகைப்பட்ட கலாசாரம் பற்றிய சர்வதேச பிரகடனம் காரணமாக ஐக்கிய நாடுகள் சபை இத்தினத்தை விடுமுறை தினமாகவும் பிரகடனப்படுத்தியுள்ள அதேநேரத்தில்,  ஐக்கிய நாடுகள் சபையின் 57/249(3) ம் பிரேரணை இத்தினத்தின் முக்கியத்துவத்தை சர்வதேச மட்டத்தில் உணர்த்தியுள்ளது. 2001.09.11ஆம் திகதி அமெரிக்காவில் தீவிரவாத தாக்கத்தின் பின்னர் இத்தினத்தின் முக்கியத்துவம் பலமாக உணரப்பட்டுள்ளது.

ஒரு சமுதாய உறுப்பினன் என்ற முறையில் மனிதன் ஈட்டுகிற மரபு வழியாலும் அனுபவத்தாலும் கற்றுக் கொள்கிற பழக்கவழக்கங்கள், திறன்கள், மக்கள் குழு உருவாக்குகின்ற உலகாயதப் பொருட்கள் அனைத்தையும் தழுவியதுதான் பண்பாடு. இன்று அனைத்துலக சமுதாயம் முன்னேற்றம் எனக் கருதுவது பொருளாதாரக் கூறுகள், சமூகவியல் கூறுகள், பண்பாட்டுக் கூறுகள் அனைத்தும் பிணைந்த முன்னேற்றத்தையே. ஏனெனில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு மக்கட் கூட்டத்துக்கும் அவரவர் தம் பண்பாட்டைப் பொறுத்தே சிறப்பு அமைகிறது.

எனவே, மனிதனின் தனித்துவப் பண்புகள் பேணப்பட வேண்டும். சமுதாய முன்னேற்றத்தில் பண்பாடு உறுதியான இடத்தைப் பெற்றுள்ளது. கலைப் படைப்புகள் மட்டுமன்றி அறிவுத்திறன். உண்ணும் உணவு,  உடை, உறையுள்,  குடும்ப உறவுகள், சமுதாய உறவு போற்றும் நெறிமுறைகள், கல்வி முறை, சிந்தனை, எதிர்கால எதிர்பார்ப்புகள்,  நம்பிக்கைகள்,  புதியவர்களுடன் பழகுதல் போன்ற வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களிலும் பண்பாடு வெளிப்படுகின்றது. ஓர் இனத்தின் உயர்வு அதன் பண்பாட்டுப் பாரம்பரியங்களிலேயே தங்கியுள்ளது. இதனால் இனங்களின் தனித்துவப் பண்புகள் பேணப்பட வேண்டும் என்ற கருத்துகள் வலுப்பெற்றன. பல்லின மக்கள் வாழும் நாட்டில் அவரவர் தம் பண்பாடுகள் பேண இடமளிக்கப்பட வேண்டும்.

நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால் பண்பாடுகளின் தனித்துவம் பாதிக்கப்படுவதாகவும் குறைகூறப்படுகின்றது. அதாவது புதிய உலக தொடர்புகள், தகவல் தொடர்புத் துறையின் வளர்ச்சி, செய்திப் பரிமாற்றம் என்பன உலக பண்பாடுகளை அவற்றின் தனித்துவத்தைக் கடந்து ஒன்றோடொன்று நெருங்க வைத்துள்ளன. மக்களின் சுவை, சிந்தனை, கருத்துக்கள், வாழ்க்கை முறை, போக்கு,  உடை,  உணவு,  இசை, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்பவற்றில் பல்லின – பண்பாடுகளைக் கொண்ட மக்களிடையே பொதுப் பண்பாட்டம்சங்களும், புரிந்துணர்வும் ஏற்பட்டு வருகின்றன. பொதுவாக தொடர்பு சாதனங்களின் வளர்ச்சி பண்பாடுகளின் தனித்துவத்தைச் சிதைப்பாகக் குறை கூறப்பட்டினும் உண்மையில் அப்படி மரபு சிதையாது என்பதற்கு ஜப்பான் உதாரணமாக விளங்குகின்றது. அதேபோல சீனாவில் அண்மைக்கால துரித வளர்ச்சிகளும் எடுத்துக் காட்டுகின்றன.

இனவொதுக்கல் கொள்கைகளை மேற்கு நாட்டவர் ஆதரிக்கின்றனர்;. தென்ஆபிரிக்க மானிடவியல் அறிஞர் கிளக்மேன் கூற்றுப்படி ‘இன ஒதுக்கல் கொள்கையை ஆதரிக்கும் மேற்கு நாட்டவர்கள் தாம் ஆபிரிக்காவின் உள்நாட்டு இனங்களின் பண்பாடுகள் அந்த மக்களுக்குப் பொருத்தமானவை என்றும், அவற்றைப் பேண அம்மக்களுக்கு உரிமை உண்டு’ என்றும் ஆதரித்துள்ளார்கள்.

ஆனால், மரபு பிறழாமல் அம்மக்களுடைய பண்பாடுகள், வாழ்க்கை வசதிகளில் நவீனத்துவம் பின்பற்றப்பட வேண்டும் எனப் பொதுவாகக் கருதப்படுகிறது. பட்டினி வறுமைக் கோடு பிணி எழுத்தறிவின்மை சிசு மரணம் மகளிர் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் அரசியல் அறிவின்மை பொருளாதார சமச்சீர் இன்மை போன்றவற்றை அகற்றி மேன்மையை உருவாக்க நவீனத்துவம் கைக்கொள்ளப்படவேண்டும் எனக் கருதப்படுகிறது.

மொழியானது சகல இனங்களினதும் பண்பாட்டுக் காவியாகும். மக்கள் உணர்வுகள், நம்பிக்கைகள், பண்பாட்டு மரபுகள் என்பன அவர் தம் தாய் மொழியிலேயே பொதிந்துள்ளன. தேசியப்பண்பாட்டின் உயிர் நாடியாக மட்டுமன்றி,  பண்பாட்டை வளர்க்கக்கூடிய சாதனமாகவும் மொழி விளங்குகின்றது. தாய்மொழியானது ஒரு இனத்தின் பண்பாட்டில் முக்கியம் பெறுகின்றது. ஒரு நாட்டில் சிறுபான்மையினராக உள்ள மக்களின் மொழியை ஒதுக்கிவிட அல்லது நசுக்கிட பெரும்பான்மையின மக்கள் நினைப்பது தவறாகும். அது துரோகமும் ஆகும். நம்பிக்கைகள் சிந்தனைகள் உணர்வுகள் மரபுகள் போன்றன இனங்களின் தாய்மொழியிலேயே சங்கமிக்கின்றன. பண்பாட்டை வளர்க்கக் கூடியதாகவும் தேசிய பண்பாட்டின் ஊற்று மூலமாகவும் மொழி அமைகின்றது.  சிறுபான்மை இனங்களின் மொழியும் பண்பாடும் பாதுகாக்கப்படுவதன் மூலமே நாட்டின் பண்பாட்டுப் பெருமை மேலோங்கும். பொதுமொழி அல்லது பெரும்பான்மையின மொழியை பலவந்தமாக திணிக்கக்கூடாது. அது தாமாகவே ஈர்க்கப்பட வேண்டும். பல்வேறு சிறுபான்மை இன, மொழிகள் இருந்தும் ரஸ்ய மக்கள் ரஸ்ய மொழியைப் பொதுமொழியாக ஏற்றனர். ரஸ்ய மொழியின் பண்பாட்டம்சங்கள் மக்களை தாமாகவே ஈர்த்துக் கொண்டது.

பன்மைப் பண்பாடுகளைக் கொண்ட நாடுகளில் இனப் பிரச்சினை, மொழிப்பிரச்சினை என்பன ஏற்பட்டுள்ளன. இதற்குப் பிரதான காரணம் பெரும்பான்மையின மக்களின் மனப்பாங்கு ஆகும். பேரினவாத சிந்தனைகளே இந்நாடுகளில் பல்வேறு பிரச்சினைகளை உருவாக்கியுள்ளன. இலங்கையில் இத்தகைய பிரச்சினைகளுக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அரசு யாப்பில் சிறுபான்மை, இனங்கள், மொழிகளுக்கு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.

இனங்களின் தனித்துவப் பண்பாடுகளை தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி செய்திப் பரிமாற்றங்களின் துரிதம் என்பன தாக்கமடையச் செய்துள்ளன எனச் சிலர் கூறினாலும் உலகத்தினை ஒரு கிராமமாக்கி சர்வதேச ரீதியிலான பண்பாட்டுக்கோலங்கள் சகலரும் அறிந்தொழுக இவை பூரணமாக உதவி வருகின்றன என்பதை மறுதலிப்போர் இல்லை எனலாம். உலகப் பண்பாடுகளுடன் உலக மக்கள் ஒன்றித்திளைத்திட தகவல் தொடர்பு மற்றும் செய்திப் பரிமாற்றங்கள் பேருதவி புரிந்து வருகின்றன. மூன்றாம் உலக நாடுகளில் சமயக் குழுக்கள், இனக்குழுக்கள், மொழிக்குழுக்கள் என்பன பரஸ்பர உறவைப் பேணுவதோடு பற்கூட்டு அம்சங்களான கலை இலக்கியம் பண்பாடு மொழி போன்றவற்றில் ஒரு தொடர்பினை உருவாக்கி அதன் மூலம் தேசிய ஒருங்கிணைப்பும் பொதுப்பண்பாடும் மலர வித்திடலாம்.

http://thatstamil.oneindia.in/cj/puniyameen/2009/0521-world-culture-day.html

உலக ஹபடைடிஸ் (கல்லீரல் நோய்) தினம் World Hepatitis Day – புன்னியாமீன்

hepatitis_a_virus_.jpgஇன்று மே மாதம் 19ஆம் திகதி உலக ஹபடைடிஸ் (கல்லீரல் நோய்) தினமாகும்.

பொதுவாக சர்வதேச தினங்கள் அனுஸ்டிக்கப்படுவது ஒரு குறிப்பிட்ட விடயத்தின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்துவதற்காக வேண்டியேயாகும். குறிப்பாக அத்தினத்தின் முக்கியத்துவத்தினை கருத்தரங்குகள். போட்டி நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல்,  பதாதைகளை வெளியிடுதல்,  கலைநிகழ்ச்சிகளை நடத்துதல் போன்ற பல்வேறுபட்ட கருத்திட்டங்கள் ஊடாக வெளிப்படுத்தப்படும். இந்த அடிப்படையில் இன்றைய தினம் உலக ஹபடைடிஸ் (கல்லீரல் நோய்) பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதை குறிக்கோளாகக் கொண்டுள்ளது.

பொதுவாக ஹபடைடிஸ் நோய் விட்டமின் பி மற்றும் சி குறைபாட்டால் ஏற்படும் ஒரு நோயாகும். இந்நோய் பற்றி மக்களுக்கு அறிவூட்டல் அதிகமாகத் தேவைப்படுகின்றது. இந்நோய் பற்றியும்நோயின் அறிகுறிகள்,  தன்மைகள் பற்றியும்  தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும் மக்களுக்கு உணர்த்துவதும் அதற்கான சிகிச்சை முறைகள் பற்றி அறிவுறுத்துவதும்,  ஊக்குவிப்பதும் இத்தினத்தின் நோக்கங்களாகும் உலகின் ஏறக்குறைய 10 மில்லியன் மக்கள் இந்நோயினால் பீடிக்கப்பட்டுள்ளார்கள். இந்நோய்க்கு முறையான சிகிச்சை மேற்கொள்ளாவிடில் அல்லது கவனக்குறைவோடு இருப்பின் ஈரல் புற்றுநோய்,  ஈரல் செயலிழத்தல் மற்றும் ஆபத்தான நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு. வருடா வருடம் உலகெங்கும் லட்சக்கணக்கான மக்கள் இந்நோயினால் பாதிக்கப்படுகின்றனர்.

உலக ஹபடைடிஸ் (கல்லீரல் நோய்) தினத்தை   உலக ஹபடைடிஸ் நற்பணி கழகம் முன்னின்று ஏற்பாடு செய்கின்றது. இந்த நற்பணி கழகத்தில் 200 நோயாளர் தொகுதிகளும், ஹபடைடிஸ் சி – டிரஸ்ட் ஐரோப்பா ஈரல் நோயாளர் சங்கம் மற்றும் சீன ஹபடைடிஸ்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நிறுவனம் என்பன அங்கம் வகிக்கின்றன. தற்போது உலகிலுள்ள HIV \ AIDS  நோயாளர்களைவிட 10 மடஙகு அதிகமான ஹபடைடிஸ் நோயாளர்கள் இருக்கின்றனர் என கூறப்படுகின்றது.

ஹபடைடிஸ் நோய் ஹபடைடிஸ் ஏ, ஹபடைடிஸ் பி என்று இரண்டு பிரதான வகைகளைக் கொண்டது. இந்நோய்கள் பற்றி சிறிய விளக்கமொன்றினைப் பெற்றுக் கொள்வோம்.

ஹபடைடிஸ் ஏ

ஹபடைடிஸ் ஏ எனப்படும் நோயானது கல்லீரலில் ஹபடைடிஸ் ஏ என்னும் வைரஸ் கிருமியினால் ஏற்படுவதாகும். இந்நோய் அசுத்தமான உணவுகளை உட்கொள்ளல், ஹபடைடிஸ் ஏ நோய் கண்ட நபருடன் நெருங்கிப் பழகுதல் போன்ற காரணங்களினால் பரவுகின்றது. இந்நோய் நீரினாலும் பரப்பப்படலாம். ஹபடைடிஸ் ஏ வைரஸ் நோய் தொற்றிய நபரில்,  நோயின் அறிகுறிகள் தோன்றுவதற்கு 15 முதல் 45 நாட்கள் எடுக்கும். மேலும் பாதிப்புக்குட்பட்ட முதல் வாரகாலத்தில் மலத்தின் வழியாக இவ் வைரஸ் வெளியேற்றப்படுகிறது. இந்த வைரஸ் இரத்தம் மற்றும் பிற உடற்கூறு சுரப்பிகள் வழியாகவும் தொற்றக்கூடியது. இவ்வகை வைரஸ் நோய் குணமான பின் உடலில் தங்கியிருக்காது. மற்ற பொதுவான ஹபடைடிஸ் வைரஸ் நோய் தொற்றுகளாவன, ஹபடைடிஸ் பி மற்றும் சி.எனும் கிருமிகளினால் ஏற்படுகின்றது.

இந்நோயின் அறிகுறிகளக பின்வருவன ஏற்படும். வெளிர்ந்த அல்லது களிமண் நிற மலம் வெளியாதல், கருமை நிறத்தில் சிறுநீர் வெளியாதல்,  உடலில் அரிப்புத் தன்மைஏற்படல், மஞ்சள் காமாலை,  உடல் சோர்வு,  பசியின்மை,  குமட்டலுடன் வாந்தி,  மிதமான காய்ச்சல்.

இந்நோய் தொற்றாமல் இருப்பதற்கான தடுப்பு முறைகள் வருமாறு: ஹபடைடிஸ் நோயாளியின் இரத்தம், மலம் மற்றும் உடல்திரவம் போன்றவற்றை கையாண்ட பின்னர் கைகளை நன்கு கழுவி சுத்தம் செய்வது,  கழிவறையை பயன்படுத்திய பின்னும் கைகளை நன்றாகக் கழுவி சுத்தம் செய்தல்,  உணவு உட்கொள்ளும்போதும் நீராகாரங்கள் பருகும்போதும் அவதானமாக இருத்தல்.

ஹபடைடிஸ் ஏ நோய்க்கான தடுப்பூசிகள் இருக்கின்றன. தடுப்பூசி ஏற்றிக்கொண்டு நான்காவது வாரத்திலிருந்து இம்மருந்தானது இந்நோய் ஏற்படுவதை தடுக்கிறது. நீண்ட நாள் பாதுகாப்பிற்கு, முதல் ஊசிபோட்டு ஆறிலிருந்து பன்னிரண்டு மாதத்திற்குள் பூஸ்டர் டோஸ் என்னும் கூடுதல் ஊசி எடுத்துக் கொள்ள வேண்டும். இது குறித்து மேலதிக ஆலோசனைகளை வைத்தியர்களிடம் பெற்றுக் கொள்ளலாம். 

இந்நிலையில் இந்த தடுப்பூசியை யார் ஏற்றிக் கொள்ள வேண்டும்? என்ற வினாவும் எழுகின்றது. குறிப்பாக ஹ‎படைடிஸ் ஏ நோய் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் பரவியிருந்தால். அப்பிரதேசத்தில் வாழும் ஏனைய மக்கள் மற்றும் நீண்ட நாட்களாய் ஹ‎படைடிஸ் பி அல்லது சி நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களும்  இத்தடுப்பூசியை ஏற்றிக் கொள்ளல் வேண்டும்.

ஹபடைடிஸ் பி

ஹபடைடிஸ் பி வைரஸ் கண்ட பெரும்பாலான நபர்கள் 6 மாத காலத்திற்குள் இந்த வைரஸ் பாதிப்பிலிருந்து விடுவிக்கப்படுவார்கள்.  இந்த குறுகிய கால நோய் தொற்றினை அக்யூட் ஹபடைடிஸ் பி என்பர். ஹபடைடிஸ் தொற்று கண்ட சுமார் 10 சதவீத மக்களில் இவ்வகை நோய் நீண்ட நாட்களுக்கு பாதிப்பை உருவாக்குகின்றது என சில ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்நோய்க்கான அறிகுறிகளை பின்வருமாறு நோக்கலாம். உடல் சோர்வும் உடல்நலம் குன்றுதலும்,  மூட்டுகளில் வலி ஏற்படுதலும் குறைந்த அளவு காய்ச்சல் ஏற்படுவதும். மேலும்,  குமட்டல், வாந்தி, பசியின்மை  வயிற்றுவலி,  மஞ்சள் காமாலை, சிறுநீர் மஞ்சள் நிறத்தில் வெளியாதல் போன்றனவையும் இந்நோய்க்கான அறிகுறிகளாகக் கூறப்படுகின்றது. 

ஆனால் பலருக்கு இந்நோயின் அறிகுறிகள் தோன்றுவதே இல்லை. இந்த அடிப்படையில் அறிகுறிகள் இல்லாத நோயாளிகள், இந்நோயினை பிறருக்குப் பரவச் செய்ய வாய்ப்புகள் அதிகம். இவ்வகை நோய்கண்ட நபரில்,  கல்லீரலானது நிரந்தரமாக சேதம் அடையக்கூடிய சாத்தியங்கள் உண்டு. அவையாவன, சிர்ரோஸிஸ் (கல்லீரலில் ஏற்படும் தழும்புக்காயங்கள்) மற்றும் கல்லீரல் புற்று நோய் என்பனவும் நீண்ட நோயாளிகளுக்கு பின்பு ஏற்பட இடமுண்டு.

ஹபடைடிஸ் பி இரத்தத்தின் மூலமும் மற்றும் உடற்திரவங்கள் மூலமும் பரவுகிறது. கீழ்காணும் முறையிலும் நோய் தொற்ற  இடமுண்டு. வைத்தியசாலைகளில் நோய்கண்ட நபரின் இரத்தத்தை கையாள்வதின் மூலம் மருத்துவர்கள், தாதியர் இந்நோயின் பாதிப்புக்கு உட்பட இடமுண்டு. மேலும்,  நோய் கண்ட நபருடன் பாதுகாப்பு அற்ற முறையில் உடலுறவு கொள்ளல்,  நோய்வாய்ப்பட்ட நபரின் இரத்தத்தினை பிறர்க்கு செலுத்துதல்,  ஒரே ஊசியினை பலர் பகிர்ந்து கொள்ளுதல் போன்வற்றினூடாகவும் இந்நோய் பரவலாம். அதேநேரம்,  நோய் கண்ட தாய்க்கு பிறக்கும் நோய் காவப்படுகின்றது.

இந்நோய்க்கான தடுப்பு முறைகள்: விசேடமாக இரத்த தானம் செய்பவர்கள் இரத்தத்தை பரிசோதித்த பின்பே தானம் செய்தல்  தடுப்பு ஊசியினை முழுமையான நோய் எதிர்ப்பு தன்மையை அடைய ஒரு நபர் ஆறுமாத காலத்திற்குள் மூன்று தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள வேண்டும், குறைந்த நாள்பட்ட அல்லது நாள்பட்ட ஹபடைடிஸ் பி வைரஸ் தாக்கம் கொண்டவரோடு பாலுறவு கொள்வதினை தவிர்க்கலாம்

ஹபடைடிஸ் நோய் ஏற்பட்டவர்களுக்கு முக்கியமான அறிகுறியாக காணப்படுவது மஞ்சள் காமாலையாகும். சில வகையான மருந்துகளை உட்கொண்டாலும் சிறுநீர் மஞ்சளாகப் போகும்.  குறிப்பாக வயிற்றோட்டத்திற்குத் தருகின்ற ·ப்ளுரோ ஸோஸிடோன் மருந்து,  அதிக உஷ்ணத்தாலும் சிறுநீர் மஞ்சளாகப் போகும்.  எனவே,  ஒருவருக்கு சிறுநீர் மஞ்சளாகப் போனால் அவரை பரிசோதனை செய்ய வேண்டும்.  அத்துடன் அவரது சிறுநீரிலும், இரத்தத்திலும் சில அடிப்படை பரிசோதனைகள் செய்யப்படல் வேண்டும்.  இதன் மூலம் ஒருவருக்கு மஞ்சள் காமாலை ஏற்பட்டுள்ளதா?  இல்லையா?  என்பதைக் கண்டறியலாம்.  பரிசோதனையினூடாகவே இந்நோயை உறுதிப்படுத்திக் கொண்ட பின்பு சிகிச்சையினைத் தொடங்க முடியும்.

இந்தியா, இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளுக்கு மக்கள் மஞ்சள் காமாலையைப் பொறுத்த அளவில், இரு பெரும் தவறுகளைச் செய்து விடுகிறார்கள், முதலாவது, மஞ்சள் காமாலை வந்து விட்டதா?  இல்லையா?  என்பதை அறிந்து கொள்ளத் தவறி விடுகிறார்கள். இரண்டாவது, மஞ்சள் காமாலைக்குச் சிகிச்சை செய்யும் முன், அது எந்த வகை மஞ்சள் காமாலை எதனால் அது வந்தது?  என்று பார்க்காமல் நேரடியாகவே, சிகிச்சைக்குப் போய் விடுகிறார்கள்.

உண்மையிலேயே மஞ்சள் காமாலை பாராதூரமான நோயல்ல. நோயையறிந்து வைத்தியம் மேற்கொள்வோமாயின் இது சாதாரண நோய். இதை வேறு வகையில் கூறுவதாயின் ஒரு நோயின் அறிகுறியாகத்தான் இதனைக் கொள்ள வேண்டியுள்ளது. 

கிராமிய வைத்திய முறையில் மாதுளம் பழச்சாறு தயாரித்து அதை ஒரு இரும்புச் சட்டியில் நான்கு மணி நேரம் வைத்திருந்து பிறகு பருகி வரவேண்டும் என்று கூறுவார்கள். பத்து நாட்கள் இதே முறையில் தயாரித்து இரும்புச் சட்டியில் வைத்திருந்து பருகி வந்தால் மாதுளம்பழத்தில் உள்ள இரும்புச்சத்து, பொசுபரஸ், கல்சியம், விட்டமின் ஏ முதலியவற்றால் கல்லீரல் புதுப்பிக்கப்பட்டு பலம் பெறும் என்பார்கள். இல்லையெனில் காலை நேரத்தில் இரண்டு மாதுளம் பழங்கள் சாப்பிடலாம். இவற்றில் உள்ள உயர்தரமான ஆர்கானிக் அமிலம் உடலுக்கும் உள்ளத்துக்கும் உடனடியாக சக்தியை வழங்கிவிடும். எவ்வாறாயினும் நோய் தொற்றியவர்கள் வைத்தியரின் ஆலோசனைப் பெற்று சிகிச்சைப் பெறுவது இந்த நவீன காலத்தில் மிகவும் ஏற்புடையதாகும்.

http://thatstamil.oneindia.in/cj/puniyameen/2009/0519-world-hepatitis-day.html

மே 18ம் திகதி சர்வதேச அருங்காட்சியக தினம் International Museum Day – புன்னியாமீன்

international-museum-day.jpgசர்வதேச அருங்காட்சியக தினம்  International Museum Day ஒவ்வொரு ஆண்டிலும் மே 18ம் திகதி உலகலாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

ஒரு சமூகத்தின், ஒரு தேசத்தின் மரபுரிமைகளைப் பேணி பாதுகாப்பதில் அருங்காட்சியகத்தின் பணி மிக முக்கியமானது.அதன் பரிமாணத்தை அளவிட முடியாது. கால காலங்களாக வரலாற்று மாற்றங்களின் சாட்சியங்களாக விளங்கும் அருங்காட்சியகங்கள் நாளைய சந்ததியின் விலை மதிக்க முடியாத சொத்துக்கள்  நவீன உலகின் மிகப் பெரிய அருங்காட்சியகம் லண்டனிலுள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகமாகும். உலகிலுள்ள ஒவ்வொரு நாடுகளிலும் பொதுவாக தேசிய அருங்காட்சியகங்கள் காணப்படுகின்றன. இந்த அருங்காட்சியகங்கள் பொதுப்படையாக அன்றேல் பல்வேறுபட்ட அலகு ரீதியாக அமைந்திருக்கும். இன்றைய உலகில் பல்வேறு நாடுகளில் தனியார் அருங்காட்சியகங்களும் காணப்படுகின்றன. 

அருங்காட்சியகங்களின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்துவதற்கும் அதே போல இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், சர்வதேச அருங்காட்சியக தினம் 1977ஆம் ஆண்டு முதல் உலகம் பூராகவும் கொண்டாடப்படுகின்றது. ஒவ்வொரு வருடமும் இதற்கான கருப்பொருள் இதன் ஆலோசனைக்குழுவினால் தீர்மானிக்கப்படும். 2009 ம் ஆண்டுக்கான கருப்பொருள் “அருங்காட்சியகங்களும் சுற்றுலாத்துறையும்” என்பதாகும்.1992; ஆண்டு முதல் சர்வதேச அருங்காட்சியக தினம் ஒவ்வொரு ஆண்டுகளிலும் பின்வரும் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு அனுஷ்டிக்கப்பட்டது.  

2009 “Museums and tourism”
2008 “Museums as agents of social change and development”
2007 “Museums and Universal Heritage”
2006 “Museums and young people”
2005 “Museums bridging cultures”
2004 “Museums and Intangible Heritage”
2003 “Museums and Friends”
2002 “Museums and Globalisation”
2001 “Museums: building community”
2000 “Museums for Peace and Harmony in Society”
1999 “Pleasures of discovery”
1998-1997 “The fight against illicit traffic of cultural property”
1996 “Collecting today for tomorrow”
1995 “Response and responsibility”
1994 “Behind the Scenes in Museums”
1993 “Museums and Indigenous Peoples”
1992 “Museums and Environment”

சமூகத்திற்கும்,  அதன் விருத்திக்கும் சேவையாற்றும் ஒரு நிறுவனம் என்ற அடிப்படையில் அருங்காட்சியகங்கள் எதிர்நோக்கும் சவால்கள் பற்றி பொது மக்களைச்சந்தித்து அவர்களின் கவனத்தைச் செலுத்தமாறு இத்துறை சார்ந்தோர் வலியுறுத்தி வருகின்றனர்.

அருங்காட்சியகங்கள் தொடர்பான கொண்டாட்ட நிகழ்வுகள் இது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய போட்டி நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், கலை நிகழ்வுகள் போன்றன  மே மாதம் 18ம் திகதியே நடாத்த வேண்டும் என சிபார்சு செய்யப்பட்டள்ளது. ஒவ்வொரு நாட்டிற்கும் உரிய சம்பிரதாயங்கள் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அவர்களது நிகழ்ச்சிகளை நடத்த முடியும். கலாசாரப்பரிமாற்றம் அவை பற்றிய அன்னியோன்ய புரிந்துணர்வு,  ஒத்துழைப்பு,  மக்களிடையே சமாதானம் போன்றவற்றை அருங்காட்சியகங்களால் ஏற்படுத்த முடியும்.

http://thatstamil.oneindia.in/cj/puniyameen/2009/0518-international-museum-day.html

மே 17 சர்வதேச தொலைத்தொடர்பு தினம் World Information Society Day – புன்னியாமீன்

17may-special.jpgஉலகில் மிக வேகமாக வளர்ந்துவரும் துறைகளில் தொலைதொடர்பு துறையும் ஒன்றாகும். ஆரம்ப காலத்தில் மனிதன் தன் செய்தியை அல்லது தகவல்களைத் தொலைவிலுள்ளோருக்குப் பரிமாறிக் கொள்ள புறாக்களைப் பயன்படுத்தினான் என்று வரலாறு கூறுகின்றது. ஊருக்கு ஊர் முரசு அடித்து அறிவித்தல்கள் கொடுத்த காலங்கள் மாறி இன்று முழு உலகுடனும் நொடிப் பொழுதில் தொடர்பு கொள்ள வைக்கும் மின்னஞ்சல்,  குறுஞ்செய்திப்பரிமாற்றம் வரை தகவல் தொடர்புத்துறை அடைந்த மாற்றங்கள் ஏராளம்.

நவீன தகவல் தொடர்பின் வரலாற்றுப் பின்னணியை நோக்குமிடத்து 1450 -களில் ஜோகன்ஸ் கட்டன்பர்க் என்பவர் அச்சு இயந்திரத்தை கண்டுபிடித்த நிகழ்வு வரை முன்னோக்கிச் செல்லும். அச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்த ஜோகன்ஸ் கட்டன்பர்க் தனது வாழ்நாளில் கண்டுபிடிப்புக்கான பாராட்டைப் பெறாமலேயே இறந்து போனார்.

தொலைத்தொடர்பின் அடுத்த திருப்புமுனை கிரஹாம் பெல்லினால ஆரம்பித்து வைக்கப்படுகிறது.   கிரஹாம் பெல்லின் தொலைபேசிக் கண்டுபிடிப்புடன் தொலைத்தொடர்பு புதிய பரிமாணத்தைப் பெறுகின்றது. தந்தி முறையை மேம்படுத்த கிரஹாம் பெல் எடுத்த முயற்சிகளின் விளைவே தொலைபேசி. தோமஸ் வாட்சன் தொலைபேசியை வடிவமைத்தாலும்,  மின்சாரம் மூலம் ஒலியை எடுத்துச் செல்வது பெல்லின் மூளையில் உதித்த யோசனையாகும். ஒரே சமயத்தில் இரண்டு சமிக்ஞைகள் தந்தி வயர் மூலம் அனுப்ப 1875-ஆம் ஆண்டில்  ஏப்ரல் 6 ஆம் திகதி அரசாங்கம் அனுமதித்தது. கிரஹாம் பெல் இம்முறையை மேம்படுத்தி 1876 மார்ச் 07ஆம் திகதி ஒலியைத் தந்தி வயர் மூலம் பரிமாறச் செய்து காட்டினார்.

இவ்வாறாக ஆரம்பிக்கப்பட்ட நவீன தொலைதொடர்பின் மூலங்கள் கம்பியில்லாத் தந்தி கண்டுபிடிக்கப்பட்டதும், தொழில்நுட்ப ரீதியில் வளர்ச்சியடையத் தொடங்கியது. இத்துறையில் வானொலி,  தொலைக்காட்சி, தொலைபேசி,  கையடக்கத் தொலைபேசி,  டெலக்ஸ்,  பெக்ஸ், மின்னஞ்சல்,  இணையம்,  முகத்துக்கு முகம் பார்த்துக் கதைக்கும் தொலைபேசி இணைப்புகள்,  செய்மதித் தொடர்புகள் என்பன தொலைத் தொடர்புத்துறையில் மனிதன் அடைந்த சாதனைகளின் எச்சங்களாகும். தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி,  தகவல் தொழில்நுட்பத்தையும் (Information Technology) போஷித்து வருகிறது. இவ்வாறாக ஏற்பட்டுவரும் மாற்றங்கள் வரலாற்றுப் போக்கில் ஏற்பட்ட வளர்ச்சியின் பெறுபேறுகளாகும்.

மிலேனியம் ஆண்டாக மிளிரும் இன்றைய காலகட்டத்தில் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஊன்று கோலாக விளங்கும் இலத்திரனியல் துறையில் கொடிகட்டிப் பறப்பவர்கள் ஜப்பானியர் ஆவார் என்பது கண்கூடு. தொலைத் தொடர்பில் அந்நாடு காட்டிவரும் அரும் பெரும் சாதனைகள் மூலம் தொலைபேசியை இலத்திரனியல் மயமாக்கப்பட்டமை சர்வதேசத்திற்கும் கிடைத்த மாபெரும் வெற்றி எனவும் கொள்ளப்படுகின்றது.

1865இல் உருவான சர்வதேச தொலைத்தொடர்பு சங்கம்  International Telecommunication Union (ITU) உலக தொலைத்தொடர்பு தினத்தை அனுஷ்டிக்கிறது. மனித குலத்துக்கு அது ஆற்றிவரும் சேவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றது. ஆண்டு தொரும் கொண்டாடப்படும் சர்வதேச தொலைத்தொடர்பு தினத்தின் முக்கிய எதிர்பார்க்கை தொலைத்தொடர்பு நாட்டின் அபிவிருத்திற்கும் மனிதாபிமான வளர்ச்சிக்கும் உதவுதல் பற்றி எடுத்துக் காட்டுவதாகும்.

மனிதனின் தகவல் தொடர்புகள்,  செய்மதிப் பரிமாற்றம்,  கல்வியூட்டல், கருத்துப் பரிமாற்றம், பொழுதுபோக்கு,  கலை வெளிப்பாடு,  வர்த்தகம்,  முன்னெச்சரிக்கையான பல தேவைகளுக்கு தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் பயன்பட்டு வருகின்றது. சூறாவளிகள்,  எரிமலைகள்,  பூகம்பம்,  வெள்ளம் போன்ற இயற்கை அனர்த்த வேளைகளிலும்,  போர்மூட்டம், பாதுகாப்பு,  தொற்றுநோய் போன்ற சந்தர்பங்களிலும் அறிவுறுத்தல்களை வழங்குவதால் மக்கள் முதற்காப்பு நடவடிக்கைகளை எடுக்க முடிகிறது. நிவாரண நடவடிக்கைகளைக்கூட இன்று நடமாடும் கம்பியில்லாத் தொலைபேசி மூலம் துரிதமாக மேற்கொள்ள முடிகிறது. உலகளவிய ரீதியில் செல்பே‌சி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு இறுதியில்  4 பில்லியனைத் தாண்டியிருந்ததாக  என ஐ.நா சர்வதேச தொலைத்தொடர்பு சங்கம் தெரிவித்திருந்தது

அண்மைக்காலத்தில் கணனி முறைக்கும் தொடர்பில் தொழில்நுட்பத்துக்கும் இடையில் ஓர் இணைவுப்போக்கு செயல்பட்டு வருகின்றது. தகவல்களைச் சேமித்து வைக்கவும்,  மீண்டும் பார்க்கவும் பாரிய அளவிலான வசதிகளைக் கணனிகள் வழங்குகின்றன. இவை இணையம் எனப்படும் இன்டர்நெற் முறையில் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்டர்நெற் தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தினால் ஏற்பட்ட அதி நவீன சாதனையாகும். உலகளாவிய நாடுகள் இந்த வலைப்பின்னல் அமைப்பில் இணைந்துள்ளன. செய்மதி மூலம் வழங்கப்படும் இணைய சேவையில்,  தொடர்பு சேவைகள்,  தகவல் சேவைகள் ஆகிய இருவகைச் சேவைகள் மையப்படுத்தப்பட்டுள்ளன.

மின்னியல் தபால்,  மின்னியல் சஞ்சிகை,  மின்னியல் வெளியீடு, ரெல்நெட்,  தொடர் கலந்துரையாடல்,  உலகின் பரந்த வலை (World Wide Web) போன்ற பல வகையான நிகழ்ச்சித்திட்டங்கள் என்று நாளுக்குநாள் இதன் சேவைப் பரிமாணங்கள் முன்னேறிக் கொண்டே இருக்கின்றன. இவ்விடத்தில் நவீன தகவல் தொடர்பில் இன்றியமையாத இணையத்தைப் பற்றி சுருக்கமாக நோக்க வேண்டியது அவசியமாகும்.

எதிர்பாராமல் பிறந்த இணையம் என்கிற மகத்தான தகவல் புரட்சியின் விளைவுகள் கூட யாரும் எதிர்பாராததாகவே இருக்கிறது. இணையம் ஒரு வல்லரசின் இராணுவத் தேவைக்காகப் பிறந்தது. அது உலக மயமாகும் சந்தையைப் பின்தொடர்ந்து உலகத்தில் பரவியது. அது தகவல் தொழில்நுட்பம் தொலைத்தொடர்பு என்கிற இரு பாரிய தொழில்நுட்பத் தொழில்துறைகளும் கைகோர்த்துக் கொண்டதால் எழுந்தது.

ஆரம்பத்தில்  இணையத்தின் மூல மொழியாக ஆங்கில மொழியே விளங்கியது. இன்று வலையகத்தில் பல மொழிகள் உள் வாங்கப்பட்டுள்ளது. எனவே இன்று மனித இனத்தின் முதல் பன்மொழி ஊடகம் என்று அது அழைக்கப்படுகிறது.

ஆரம்ப காலத்தில் இணையம் பெரும்பாலும் அமெரிக்க மூலதனம்,  அமெரிக்கச் சந்தை, அமெரிக்கக் கலாச்சாரம் செல்லும் வழியில் சென்று கொண்டிருக்கின்றது. சந்தை முதன்மைப்படுத்தும் கலாசாரங்களுக்கு மாற்றாக,  எண்ணற்ற பிற கலாசாரங்களுக்கான பாலமாகவும் இருக்கிறது. அது எதிர்பாராதவர்கள் மத்தியில் புதிய உறவுகளை உருவாக்குகிறது. உலகம் முழுவதிலும் உள்ள ஒரு குறிப்பிட்ட இனத்தவரை அல்லது ஒரு குறிப்பிட்ட விஷயங்களில் ஒற்றுமை உடையவர்களை இணைக்க இணையம் போல ஒரு ஊடகம் இதுவரை வாய்த்ததில்லை எனலாம் .

அதே போல நவீன தொலைத்தொடர்பில் செய்மதிகளும் நேரடிப்பங்களிப்பை வழங்குகின்றன. மேற்குலக நாடுகளில் செய்மதிகளின் மூலம் தகவல் பரிவர்த்தனையை மனிதனால் நேரடியாகவும் பெற்றுக் கொள்ளக்கூடியதாகவுள்ளது. ‘நெவிகேடர்” மேற்கத்திய நாடுகளில் வாகனங்களில் பொறுத்தப்பட்டுள்ள பாதை வழிகாட்டியாகும். நெவிகேடரில் நாங்கள் செல்ல வேண்டிய இடத்தின் முகவரியை நிரப்பினால் செய்மதியின் துணை கொண்டும் நெவிகேடர் குரல் சமிக்ஞையாக எமக்கு வழியைக் காட்டிக் கொண்டே செல்லும்.

இவ்வாறாக தொலைத் தொடர்பு என்பது மனித வாழ்க்கையில் இன்றியமையாவொன்றாக நவீன இலத்திரனியல் யுகத்தில் மாறிவிட்டது. இந்த தொலைத் தொடர்பு தினத்தில் தொலைத் தொடர்பைப் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், தொலைத் தொடர்புக்கும் மக்களின் அபிவிருத்திற்கும் இடையேயுள்ள தொடர்புகளை இனங்காட்டுவதும் முக்கிய நோக்கமாகக் குறிப்பிடப்பட்டாலும்கூட சராசரி மனிதனுக்கு தொலைத் தொடர்பு எத்தகைய முக்கியத்துவமானது என்பதை உணர்த்தலின் ஊடாக இல்லாமலே அவர்களது வாழ்வில் ஒன்றிணைந்துள்ளமையினால் அது இயல்பான ஓர் உணர்வாக மாறிவிடுகின்றது.

அதேநேரம்,  தொலைத் தொடர்பின் அபிவிருத்தியானது நவீன காலத்தில் மனிதனின் அழிவுகளுக்குக்கூட பயன்படுத்தப்பட்டு வருகின்றது. நவீன தொலைதொடர்பில் செய்மதியின் பங்களிப்பு உலகளாவிய நாடுகளை வேவு பார்ப்பதற்கும்,  நாட்டு இரகசியங்களை அறிவதற்கும் குறிப்பிட்ட வல்லரசுகளின் ஆதிக்கத்தை பேணிக் கொள்வதற்கு பயன்படுத்தப்படுவது எதிர்காலத்தில் சில பிரச்சினைகளுக்கு அடிப்படையாக அமையலாம் என சுட்டிக்காட்டப்படுகின்றது. எவ்வாறாயினும் நவீன மிலேனிய யுகத்தில் வாழும் மனிதனுக்கு இன்றியமையாத ஒன்றே தொலைதொடர்பு என்பதை கருத்திற் கொள்வோம்.

http://thatstamil.oneindia.in/cj/puniyameen/2009/0517-world-information-society-day.html

மே 15ம் திகதி – சர்வதேச குடும்ப தினம். (International Day of Families ) – புன்னியாமீன்

hands.jpg1992 ம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச குடும்ப தினத்தைப் பிரகடனப்படுத்தி நடைமுறைப்படுத்திவருகிறது. வருடா வருடம் மே 15ம் திகதி சர்வதேச குடும்ப தினம் கொண்டாடப்படுகிறது. இத்தினம் குடும்பத்தின் முக்கியத்தவத்தினை சிறப்பாக உணர்த்துகின்றது.
 
குடும்பங்களுக்கிடையே,  சமத்துவத்தை வளர்ப்பதுவும்,  வீட்டுப் பொறுப்புக்கள்,  தொழில் வாய்ப்புக்கள் பற்றி குடும்பங்களின் பங்கினை உணர்த்துவதும் இத்தினத்தின் முக்கிய குறிக்கோள்களாகும்.
 
குடும்பங்களின் சுய நம்பிக்கையை வளர்த்து துன்பங்களை சகிப்புடன் எதிர் கொண்டு புத்துணர்ச்சியோடு செயற்படத் தூண்டுவதையும் இது போன்ற மக்களின் இயல்புச் சக்திகளை மேலோங்கச் செய்வதையும் இத்தினக் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் வலியுறுத்துகின்றன.
 
பால் இன பாகுபாடின்றி,  மக்களிடையே சமத்துவத்தை பேணி வளர்ப்பதையும்ää பொருளாதார வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதையும்இத்தினம் வலியுறுத்துகின்றது.
 
இத்தினம் பற்றிய சிறப்புரையில்,  ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியப்பணிப்பாளர், உலக அரசாங்கங்களுக்கு இன விருத்தி, சுகாதாரத்திற்கான தங்களது நிதி ஒதுக்கீடுகளை அதிகரிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சர்வதேச குடும்ப தினத்தின் கருப் பொருட்கள் வருமாறு:

1996 – “Families: First Victims of Poverty and Homelessness”
1997 – “Building Families Based on Partnership”
1998 – “Families: Educators and Providers of Human Rights”
1999 – “Families for all ages”
2000 – “Families: Agents and Beneficiaries of Development”
2001 – “Families and Volunteers: Building Social Cohesion ”
2002 – “Families and Ageing: Opportunities and Challenges” 
2003 – “Preparations for the observance of the Tenth Anniversary of the International Year of the Family in 2004”
2004 – “The Tenth Anniversary of the International Year of the Family: A Framework for Action”
2005 – “HIV/AIDS and Family Well-being”
2006 – “Changing Families: Challenges and Opportunities”
2007 – “Families and Persons with Disabilities” 
2008 – “Fathers and Families: Responsibilities and Challenges”
2009 –  “Mothers and Families: Challenges in a Changing World”