சஜீர் அகமட் பி

சஜீர் அகமட் பி

அழுத்தங்களுக்கு முகம் கொடுக்கும் ஆற்றல் இலங்கைக்கு உண்டு – ரஷ்ய வெளிவிவகார அமைச்சர்

261009serje.jpgசர்வதேச அழுத்தங்களுக்கோ அல்லது குற்றச்சாட்டுகளுக்கோ முகம் கொடுக்கும் ஆற்றல் இலங்கைக்கு உள்ளது என்று ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி வி லெவ்ரோ நேற்றுத் தெரிவித்தார்.

இலங்கையின் நீதித்துறை மிகவும் ஒழுங்கான முறையில் செயல்பட்டு வருகின்றது என்றும் இதனை பயன்படுத்தி எந்தவொரு பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்க முடியும் என்று தெரிவித்த அவர், இலங்கையின் தேசிய ஒருமைப்பாட்டை பாதுகாக்கும் விடயத்தில் ரஷ்யா இலங்கைக்கு எப்போதும் ஆதரவு வழங்கி வந்துள்ளது என்றும் தெரிவித்தார். குறுகிய கால விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான அந்நாட்டின் உயர்மட்டக் குழுவினர் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற இந்த சந்திப்பின் பின்னர் கூட்டாக நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ரஷ்ய அமைச்சர் மேலும் உரையாற்றுகையில், பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டில் சுமுகமான நிலையை ஏற்படுத்தும் வகையிலேயே ரஷ்யா இலங்கைக்கு பூரண ஒத்துழைப்புக்களை வழங்கி வந்தது. தேசிய ரீதியான ஒருமைப்பாடு, நல்லிணக்கம் போன்ற நடைமுறை சாத்தியமான முடிவுகளை ரஷ்யா இந்த ஒத்துழைப்புக்களின் மூலம் எதிர்பார்க்கின்றது.

இலங்கைக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்புக்களை வழங்க ரஷ்யா தயாராக உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர உறவுகள் மிகவும் வலுவடைந்து காணப்படுகின்றது. பொருளாதாரம், முதலீடு, வர்த்தகம், சுற்றுலாத்துறை மேம்பாடு, சட்டவிரோத ஆட்கடத்தல், போதைப்பொருள் கடத்தல் என்பன தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டன.

கண்ணிவெடிகளை அகற்றும் விடயத்தில் ரஷ்யா ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றது.  இந்த ஒத்துழைப்புக்களை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதுடன் மிதிவெடிகளை அகற்றும் விடயத்தில் அனுபவம் வாய்ந்த குழுவொன்றையும் அனுப்பவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் 52 வருடங்களாக ராஜதந்திர உறவுகள் காணப்படுகின்ற போதிலும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்தது இதுவே முதற் தடவையாகும்.

ம. உ. ஆணைக்குழுவுக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்கு அரசு மறுப்பு

ஐக்கிய அமெரிக்காவின் இராஜாங்க திணைக்களம் காங்கிரஸ¤க்கு சமர்ப்பித்திருக்கும் அறிக்கை தொடர்பாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் அறிக்கை சமர்பிக்க வேண்டுமென அதன் பேச்சாளர் வெளியிட்டுள்ள கருத்தை இலங்கை அரசாங்கம் வன்மையாக மறுப்பதாக மனித உரிமைகளுக்கான அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.

மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்திற்கு மனித உரிமைகள் தவிர்ந்த ஏனைய விடயங்களில் தலையிடுவதற்கு எவ்வித உரிமையும் இல்லையென அதன் உயர்ஸ்தானிகர் நவநீதம் பிள்ளைக்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன் எனவும் அமைச்சர் கூறினார். ஐ.நா.வின் மனித உரிமைகள் அமைப்பில் 192 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இவர்கள் அனைத்து நாடுகளுக்கும் சேவை செய்வதை விடுத்து எப்போதும் ஒரு பிராந்தியத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வருவது தவறு. ஏனைய அங்கத்துவ நாடுகளின் ஒத்துழைப்புடன் இதற்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்கவுள்ளோமெனவும் அமைச்சர் சமரசிங்க நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார். இதேவேளை வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்கியிருந்த 2 இலட்சத்து 88 ஆயிரம் பேருள் தற்போது ஒரு இலட்சத்து 96 ஆயிரத்து 88 பேரே தங்கியிருப்பதாகவும் ஏனையோர் மீளக் குடியமர்த்தப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

யாழ். நிவாரணக் கிராமங்களில் 6, 896 பேரும் மன்னார் நிவாரணக் கிராமங்களில் 1,590 பேரும் திருகோணமலை நிவாரணக் கிராமங்களில் 6,405 பேரும், ஆறு வைத்தியசாலைகளில் 1,626 பேரும் தங்கியிருப்பதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். கண்ணிவெடியகற்றும் பணிகளை துரிதப்படுத்துவதற்காக புதிதாக ஆயிரம் இராணுவ வீரர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் நிதியுதவியுடன் கண்ணிவெடியகற்றும் 14 இயந்திரங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. இன்னும் இரு வாரத்தினுள் மேலும் 10 இயந்திரங்கள் கொண்டு வரப்படவுள்ளன. இவற்றுள் 05 ஐ. நா நன்கொடையாக வழங்குவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

யசீகரனும், அவரது மனைவியும் பயங்கரவாத தடுப்பு சட்டத்திலிருந்து விடுதலை

271009jasikaran.jpgஇலங் கையில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த சஞ்சிகை வெளியீட்டாளரும் அச்சக உரிமையாளருமான யசீகரனும் அவரது மனைவியும் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.

இவர்களுக்கு எதிராக தொடரப்பட்டிருந்த பயங்கரவாத தடுப்புசட்டத்தின் கீழான வழக்குகள் இரண்டையும் இலங்கை சட்டமா அதிபர் விலக்கிக்கொண்டதை அடுத்து இவர்கள் கொழும்பு மேல் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.

இனவாத உணர்வுகளை தூண்டும் வகையிலான சஞ்சிகை யொன்றை அச்சிட்டு வெளியிட்டமை, அதற்காக சதிசெய்தமை, சஞ்சிகைக்காக வெளிநாடுகளிலிருந்து நிதியுதவி பெற்றமை போன்ற குற்றச்சாட்டுகள் யசீகரன் மீதும் அவருக்கு உடந்தையாய் இருந்ததாக யசீகரன் மனைவி மீதும் குற்றம்சாட்டப்பட்டிருந்ததது.

இதே சஞ்சிகையை பிரசுரித்தமை குறித்து மூத்த பத்திரிகையாளர் ஜே.எஸ்.திஸ்ஸநாயகத்துக்கு 20 வருட கடுழிய சிறைத்தண்டணையை கடந்த ஆகஸ்ட் 31 ஆம் திகதி கொழும்பு மேல்நீதிமன்றம் விதித்திருந்தது.

அமெ. இராஜாங்க திணைக்களம் சமர்ப்பித்த அறிக்கை தொடர்பாக ஆராய சுயாதீன குழு

ஐக்கிய அமெரிக்க இராஜாங்க திணைக்களம், அதன் காங்கிரஸ¤க்கு சமர்ப்பித்திருக்கும் அறிக்கை தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஜனாதிபதி விரைவில் அறிவிக்கவுள்ளார். இராஜாங்க திணைக்களத்தின் அறிக்கை தொடர்பாக ஆராயவென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் ஒரு வார காலப் பகுதிக்குள் சுயாதீனக் குழுவொன்றை நியமிக்கவிருப்பதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்றுத் தெரிவித்தார். காங்கிரஸ¤க்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் அறிக்கையில், இலங்கையில் மனிதாபிமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட இவ்வருடத்தின் ஜனவரி முதல் ஜூன் வரையான காலப் பகுதிக்குள் இடம் பெற்ற சம்பவங்களில் எந்தவொரு இடத்திலும் போர் விதிகளை மீறியமைக்கான ஆதாரபூர்வமான சாட்சிகள் இல்லையெனவும் அவை சட்ட ரீதியாக நிரூபிக்கப்பட வில்லையெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு இந்த அறிக்கை சாதகமாக அமைந்த போதிலும் இதனை பகடைக்காயாக உபயோகித்து சில அரசியல் கட்சிகளும் பல்வேறு அமைப்புக்களும் அரசியல் இலாபம் தேட முனைத்துள்ளன.

இவ்வாறான அமைப்புக்களுக்கும் கட்சிகளுக்கும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் வகையிலேயே ஜனாதிபதியினால் மேற்படி அறிக்கை தொடர்பாக ஆராயவென சுயாதீனக் குழு நியமிக்கப்படவுள்ளது. இக்குழு பக்கச் சார்பற்ற முறையில் அதனை ஆராய்ந்து ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பிக்கும்.

குழு முன்வைக்கும் அறிக்கையின் பிரகாரம் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு ஜனாதிபதியி னால் விரைவில் அறிவிக்கப்படும்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இம் மாநாட்டில் அமைச்சருடன் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க, ஜெனீவாவின் முன்னாள் உயர்ஸ்தானிகரும் புதுடில்லியின் புதிய உயர்ஸ்தானிகராக பதவியேற்க விருப்பவருமான பிரசாத் காரியவசம் உள்ளிட்ட ஐவர் கலந்து கொண்டனர்.

ஐக்கிய இலங்கைக்காக முதலில் உயிர்த்தியாகம் செய்தது தமிழ் பொலிஸ் அதிகாரிகளே! களுத்துறையில் ஜனாதிபதி தெரிவிப்பு

290909mahinda.jpgநாட்டைப் பாதுகாத்து,  ஐக்கிய இலங்கையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கையில் முதலில் உயிர்த்தியாகம் செய்தது தமிழ் பொலிஸ் அதிகாரிகளே என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

சிவில் நிர்வாகத்தைச் சீர்குழைக்க பயங்கரவாதிகள் முனைந்த போது அதற்கெதிராகப் போராடிய தமிழ் பொலிஸ் அதிகாரியான திருநாவுக்கரசு போன்றவர்கள் பொலிஸ் வரலாற்றில் மறக்க முடியாதவர்கள். அவர்கள் நாட்டின் ஐக்கியத்துக்காக உயிர்த் தியாகம் செய்தவர்கள் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற பயிற்சியை முடித்துக் கொண்டு சேவைக்குத் திரும்பும் 370 புதிய பொலிஸ் அதிகாரிகளைக் கௌரவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரை நிகழ்த்திய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில்.

பயங்கரவாதத்திற்கும் பாதாள உலகத்திற்கும் அரசாங்கங்கள் அடிபணிந்த யுகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இன்று நாட்டில் சட்டம், ஒழுங்கை எம்மால் நிலைநாட்ட முடிந்துள்ளது.

வடக்கு,  கிழக்கில் பொலிஸார் பயங்கரவாதிகளுக்கு அடிபணிந்து செயற்பட்டதுடன், தெற்கில் பொலிஸார் பாதாள உலகக் குழுக்களுக்கு அடிபணிந்து செயற்பட்ட காலம் ஒன்றிருந்தது. எமது அரசாங்கம் அந்நிலையை மாற்றியுள்ளது.

பொலிஸ் சேவை இன்று சிறப்பானதாக உள்ளது. இன்றைக்கு நான்கு வருடங்களுக்கு முன்பிருந்தது போலன்றி அத்துறை பாரிய முன்னேற்றமடைந்துள்ளது. பொலிஸ் நிலையத்தின் செயற்பாடுகளிலும் மக்கள் சேவையிலும் பொலிஸார் திருப்தியுறாத பிரச்சினைகள் நிறைந்த காலங்கள் இருந்துள்ளன. சகல பிரச்சினைகளும் தற்போது தீர்க்கப்பட்டு,  பதவி உயர்வு உட்பட சகல சலுகைகளும் பொலிஸாருக்கு உரிமை யாகியுள்ளன.

30 வருடங்களுக்கு முன் பொலிஸ் துறை சிறப்பாக இயங்கியது. வடக்கு, கிழக்கிலும், தெற்கிலும் சகல இன, மத பொலிஸாரும் இணைந்து சேவை செய்தனர். இந்த ஐக்கியத்தைப் பிளவுபடுத்தும் வகையில் பயங்கரவாதிகள் முதலில் பொலிஸாரின் அதிகாரத்தைப் பலவீனப்படுத்துவதில் ஈடுபட்டனர்.

புலிகள் முதலில் யாழ்ப்பாணத்தைத் தாக்கினர். அதனையடுத்து யாழ்ப்பாணத்தில் பல பகுதிகளிலுமுள்ள 16 பொலிஸ் நிலையங்களைத் தாக்கினர். இதனைத் தொடர்ந்து மூன்று தசாப்தங்கள் பொலிஸார் அதிகாரம் அடக்கப்பட்டவர்களாகவே இயங்கினர்.
மீண்டும் இப்போது நாட்டின் சகல பகுதிகளிலும் பொலிஸார் அதிகாரத்துடனும் சுயாதீனமாக செயற்பட வாய்ப்பு கிடைத்துள்ளது.

தற்போது யாழ்ப்பாணத்தில் தமிழ் இளைஞர்கள் பொலிஸ் சேவைக்காக இணைக்கப்பட்டு வருகின்றனர். எதிர்காலத்தில் அவர்கள் ஐக்கிய இலங்கையைப் பாதுகாக்கும் பொலிஸாராகத் திகழ்வர்.

பொலிஸாருக்கும் பொதுமக்களுக்குமிடையிலான தொடர்புகள் குறித்த சிந்தனைகளில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய யுகம் தற்போது உருவாகியுள்ளது. ஏகாதிபத்திய ஆட்சிக் காலத்தில் வரி வசுலிக்கும் பணியிலேயே பொலிஸார் ஈடுபட்டு வந்தனர்.

பின்னர் மக்களுக்காக பொலிஸ் என்ற நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தை ஒழிப்பதில் பொலிஸாரின் பங்களிப்பு மிக முக்கியமானது. நாடளாவிய பயங்கரவாத வலையமைப்பை எமது பொலிஸாரால் ஒழிக்க முடிந்தது. அதனால்தான் கொழும்பு உட்பட முக்கிய நகரங்களை எம்மால் பாதுகாக்க முடிந்தது.

இதற்கு பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. தவறுக்கு தண்டனை அழிப்பதைவிட தவறுக்கான வாய்ப்புகளை இல்லாமற் செய்வதே பொலிஸாரின் பணியாக வேண்டும். தாய் நாட்டை நேசிப்போராக பொலிஸார் திகழ வேண்டும். மக்கள் பாதுகாப்பு மட்டுமன்றி நாட்டின் முக்கிய தலைவர்கள், பிரபுக்களின் பாதுகாப்பும் பொலிஸாரின் கைகளிலேயே உள்ளது.

சில பொலிஸ் அதிகாரிகளினால் பொலிஸ் துறைக்கே களங்கம் ஏற்பட்டுள்ளது. தாய்நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டப் புதிய பொலிஸார் பாடுபட வேண்டும்.

இதுவரை நாட்டை ஆண்ட அரசாங்கங்கள் நாட்டின் நல்லொழுக்கத்தைக் கணக்கிலெடுக்கவில்லை. அதனால் பயங்கரவாதம்,  பாதாள உலகம் என மக்கள் பெரும் துன்பங்களையே அனுபவிக்க நேர்ந்தது.

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இராணுவத்தினர் அர்ப்பணிப்புடன் உழைத்தது போல் நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க பொலிஸார் அர்ப்பணிப்புடன் உழைக்க வேண்டியுள்ளது. அப்போதுதான் மக்கள் கௌரவம் எனும் வெற்றியை பொலிஸார் பெற முடியும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

அமைச்சர்களான மஹிந்த சமரசிங்க,  ரோஹித அபேகுணவர்தன,  நிர்மல கொத்தலாவல, நந்தன குணதிலக்க உட்பட அமைச்சர்கள், முக்கியஸ்தர்கள் பொலிஸ் மாஅதிபர் மற்றும் பொலிஸ்துறை உயரதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மடு பாசாலைகளில் மீண்டும் கல்வி நடவடிக்கைகள்!

இரு வருட காலமாக மூடப்பட்டிருந்த  மன்னார் மடு கல்வி வலயத்திலுள்ள 11 பாசாலைகளில் இன்று முதல் மீண்டும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மடு கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரதேசத்தில் கடந்த 22ஆம் திகதி மக்கள் மீள்குடியேற்றப்பட்பதையடுத்தே மேற்படி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. மீள்குடியேற்றப்பட்ட மக்களிடையே உள்ள மாணவர்கள் மற்றும்  ஆசிரியர்கள் ஆகியோர் அடையாளங் காணப்பட்டு முதற்கட்டமாக 59 ஆசிரியர்களின் பங்களிப்புடன் 11 பாசாலைகளிலும்; கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகிறது. மோதல் காரணமாக மடு கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகள் 2007 ஆம் ஆண்டு முதல் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வசிம் அக்ரமின் மனைவி காலமானார்.

இதயம் மற்றும் சிறுநீரக கோளாறு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வசிம் அக்ரமின் மனைவி ஹ_மா அக்ரம் (42), சிகிச்சை பலனின்றி நேற்று காலை 9.30 மணியளவில் காலமானார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரமின் மனைவி ஹ_மா அக்ரம். கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். ஹ_மா அக்ரமிற்கு சிங்கப்பூர் சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த 20 ம் தேதி ஏர்-ஆம்புலன்ஸ் மூலம் ஹ_மா அக்ரம், வாசிம் அக்ரம் மற்றும் குடும்பத்தினர் சிங்கப்பூர் புறப்பட்டனர்.

இவர்கள் வந்த விமானம் சென்னை வான்வெளியில் பறந்து கொண்டிருந்த போது, ஹ_மா அக்ரமிற்கு உடல்நிலை மோசமடைந்தது. உடனே அவருக்கு சிகிச்சை அளிக்காவிட்டால் ஆபத்து என்ற நிலையில், விமானத்தின் பைலட், சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு, சிகிச்சைக்காக அவசரமாக தரையிறக்க அனுமதி கேட்டார்.

அனுமதி கிடைக்கவே, வாசிம் அக்ரம் மற்றும் ஹ_மா அக்ரமிற்கு தற்காலிக, “விசா’ வழங்கப்பட்டு, அவர்கள் பயணம் செய்த விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. அவர்,  சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு, “வென்டிலேட்டர்’ கருவி பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

அவர் அபாய கட்டத்தை தாண்ட 72 மணி நேர கெடு விதிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த ஐந்து நாட்களாக அவரது உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாத நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி சுயநினைவு திரும்பாமலேயே உயிரிழந்தார்;. 

ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் இன்று இலங்கை வருகை

261009serje.jpgரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி வி லெவ்ரோ இன்று (26) திங்கட்கிழமை இலங்கை வருகிறார். குறுகிய கால விஜயம் மேற்கொண்டு இலங்கை வரும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். மேலும் இரு நாடுகளுக்குமிடையிலான உறவை வலுப்படுத்தும் வகையில் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவுடன் இரு தரப்பு சந்திப்பை நடத்துவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

இலங்கை, ரஷ்யா ஆகிய நாடுகளிடையே சட்டவிரோத ஆட்கடத்தல் போதைவஸ்து துஷ்பிரயோகம் ஆகியவற்றை தடுக்கும் பொருட்டு அமைச்சர்களான போகொல்லாகம, லெவ்ரோ ஆகியோரிடையே ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.

இதேவேளை இயற்கை அனர்த்தத்திலிருந்து பாதுகாத்தல், அவ்வாறான சூழ்நிலையின்போது அதனை ஆற்றுப்படுத்தல் என்பன தொடர்பாக இரு நாடுகளுக்கு மிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுமெனவும் அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

பெற்றோலிய ஊழியர்களின் வேலைநிறுத்தம் முடிவு

எரிபொருள் விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்துவதற்கு அரசாங்கம் நேற்று தீர்மானித்தது. எரிபொருள் விநியோகத்தை சீரமைப் பதற்காகவே அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது. இதேவேளை, சம்பள உயர்வு வழங்குமாறு கோரி பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்க ஒன்றியம் முன்னெடுத்த சட்டப்படி வேலைப் போராட்டம் நேற்றுடன் கைவிடப்பட்டுள்ளது. பெற்றோலிய ஊழியர்கள் இன்று முதல் வழமைபோல கடமைக்குத் திரும்புவர் என மேற்படி தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

இதேவேளை ஓரிரு பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற் சங்கங்கள் வேலை பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளபோதும் நாடு பூராவும் தடையின்றி எரிபொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாக பெற்றோல் மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் ஏ. எச். எம். பெளசி நேற்று தெரிவித்தார்.

பெற்றோலிய தொழிற்சங்கங்கள் அடங்கலாக சகல துறைகளையும் சார்ந்த தொழிற் சங்கங்களையும் ஜனாதிபதி இன்று சந்திக்க உள்ளதாகவும் இதன்போது பெற்றோலிய தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் குறித்தும் ஆராயப்பட உள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ஏனைய அரச ஊழியர்களை விட பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் அதிக சம்பளம் பெறுகின்றனர்.

அவர்களுக்கு 3 வருடங்களுக்கு ஒரு தடவை சம்பள உயர்வு வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்த அமைச்சர் யுத்தம் முடிவடைந்து ஒரு சில மாதங்களே முடிவடைந்துள்ள நிலையில் இவ்வாறு சம்பள உயர்வு கோரி போராட்டம் நடத்துவது அநீதி எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை நாடுபூராவும் உள்ள 32 பிராந்திய எண்ணெய்க் களஞ்சி யங்களினூடாகவும் தடையின்றி எரிபொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் கடந்த சனியன்று மாத்திம் 10 இலட்சம் லீட்டர் எரிபொருட்கள் விநியோகிக்கப்பட்டதாகவும் பெற்றோலிய கூட்டுத்தாபனம் கூறியது.

இலங்கை முஸ்லிம்களின் கல்வி பிரச்சினை – கல்வியமைச்சால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இன்று சமர்ப்பிப்பு

இலங்கை முஸ்லிம்களின் கல்விப் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இன்று கல்வி அமைச்சரிடம் கையளிக்கப்படவுள்ளது.

இது தொடர்பான வைபவம் கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தலைமையில் அமைச்சில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய கலாநிதி ஏ. ஜி. ஹ¤சைன் இஸ்மாயில், எஸ். எச். எம். ஜமீல், தேசபந்து ஜெஸீமா இஸ்மாயில் ஆகிய கல்வியியலாளர்களைக் கொண்ட குழுவை கல்வி அமைச்சு நியமித்திருந்தது.

இதன் செயலாளராக கலாநிதி ஹஜர் ஜான் மன்சூர் நியமிக்கப்பட்டிருந்தார். 2007ம் ஆண்டு இக்குழு அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது