சஜீர் அகமட் பி

சஜீர் அகமட் பி

நிவாரண கிராமங்களிலிருந்த 23,388 பேர் யாழ்ப்பாண குடாநாட்டில் மீள் குடியேற்றம். 3000 பேர் இன்றும் யாழ். வருவர் – அரச அதிபர் கணேஷ்

வவுனியா நிவாரணக் கிராமங்களிலிருந்து 23 ஆயிரத்து 388 பேர் (23,388) யாழ்ப்பாணக் குடாநாட்டில் மீள் குடியேற்றப்பட்டுள்ளதாக யாழ். அரசாங்க அதிபர் கணேஷ் தெரிவித்தார். 7,414 குடும்பங்களைச் சேர்ந்த 23,388 பேர் நேற்று வரை நிவாரணக் கிராமங்களிலிருந்து வந்துள்ளதாகத் தெரிவித்த அவர், மேலும் 20 ஆயிரம் பேர் யாழ்ப்பாணம் வர இருக்கிறார்களென்றும் கூறினார்.

நிவாரணக் கிராமங்களிலிருந்து யாழ்ப்பாணக் குடாநாட்டைச் சேர்ந்த 44,000 பேரை அனுப்புவதாக ஏற்கனவே அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கமைய 50 வீதமானவர்கள் இதுவரை அனுப்பப்பட்டுள்ளனர். மீதமுள்ளோர் தினமும் கட்டம் கட்டமாக பஸ்களில் அனுப்பப்பட்டு வருகின்றனர். இதற்கமைய இன்றும் 3000 பேர் யாழ். வந்து சேர்வார்களென அரசாங்க அதிபர் மேலும் கூறினார்.

நிவாரணக் கிராமங்களிலிருந்து விசேட பஸ்கள் மூலம் யாழ்ப்பாணம் வரும் இந்த மக்களுக்கு உடனடியாக ஐயாயிரம் ரூபா வழங்கப்படுகிறது. 20 ஆயிரம் ரூபா அவர்களது கணக்கில் வங்கிகளில் வைப்பிலிடப்படுகிறது. இதைவிடவும் யு. என். எச். சீ. ஆர். வழங்கும் நிவாரணப்பொதிகள், மற்றும் அத்தியாவசியப் பொருட்களும் வழங்கப்பட்டு சொந்த இடங்களும் அனுப்பப்பட்டு வருகிறார்கள்.

நிவாரணக் கிராமங்களில் இருந்துவரும் மக்களை பொறுப்பேற்று சொந்த இடங்களில் மீள்குடியேற்றும் நடவடிக்கையில் எவ்வித சிரமங்களும் ஏற்படவில்லையெனத் தெரிவித்த அவர், அரசாங்க உயர்மட்டத்தில் ஒத்துழைப்புக் கிடைக்கிறதெனச் சுட்டிக்காட்டினார்.

உடனடியாக சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்படாதோர் உறவினர், நண்பர்கள் வீடுகளில் தங்கவைக்கப்படுகிறார்கள். இவர்கள் ஆறு வார காலத்தினுள் சொந்த இடங்களில் குடியமர்த்தப்படுவர். இதற்கான சகல ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதென அரச அதிபர் கணேஷ் தெரிவித்தார்

இராணுவ அதிகாரிகள் அரசியலில் ஈடுபடுவதற்கு முற்றாகத் தடை – பெயரை பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம்

இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளின் பெயர்களைப் பயன்படுத்தி அரசியல் நடத்த முனைவோருக்கும் அவர்களின் பெயர்களைப் பயன்படுத்தி ஊடகங்களில் செய்திகளை வெளியிடுவோருக்கும் எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென அரசாங்கம் அறிவித்துள்ளது.

அரசியலில் ஈடுபடும் நோக்கமுள்ள சில தனி நபர்கள் அச்சு ஊடகங்களிலும், இணையத் தளங்களிலும் அடிப்படையற்ற செய்திகளில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளின் பெயர்களைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்தி வருகின்றமை அவதானிக்க ப்பட்டுள்ளதாக வும், அவ்வாறானவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படு மென இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“இராணுவ அதிகாரிகள் அரசியலில் ஈடுபடுவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

அதேநேரம் அரசியல் இலாபத்திற்காக இராணுவ அதிகாரிகளின் பெயர்களைப் பயன்படுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாகும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பெற்றோலிய கூ. தா. ஊழியர் பிரச்சினை: ஜனாதிபதி 26ம் திகதி ஊழியர்களுடன் பேசுவார் – சபையில் பெளஸி தகவல்

0000fawzi_minister.jpgஇலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலையிட்டுத் தீர்வொன்றைப் பெற்றுத் தருவாரென்று பெற்றோலிய வளத்துறை அமைச்சர் ஏ. எச். எம். பெளஸி நேற்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஜனாதிபதி வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியதும் எதிர்வரும் 26ஆம் திகதி திங்கட்கிழமை குறித்த ஊழியர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று அறிவித்த அமைச்சர் பெளஸி, அதுவரை சட்டப்படி வேலைசெய்யும் போராட்டத்தைக் கைவிடுமாறு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்களைக் கேட்டுக்கொள்வதாகவும் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது ஜே. வி. பி. உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க எழுப்பிய கேள்வி யொன்றுக்கு அமைச்சர் பெளஸி பதில் அளித்தார்.

தற்போது சட்டப்படி வேலை செய்யும் ஊழியர்களுடன் தாம் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை விளக்கியுள்ளதாகக் கூறிய அவர், ஊழியர்களின் தொழிற்சங்க அலுவலகம் தாக்குதலுக்கு இலக்கானதாகத் தெரிவிக்கப்பட்டதாகவும் அது குறித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் மேலும் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்த மக்களுக்காக கப்பலில் வந்த பொருட்கள் அமைச்சர் அமீர் அலியால் பொறுப்பேற்பு

இடம் பெயர்ந்தவர்களுக்கு விநியோகிக்க கப்பலில் வந்த பொருட்களை அரசாங்கத்தின் சார்பில் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அரிசி, மா, நூடில்ஸ், டின் உணவு, டின் மீன், தேயிலை, சீனி, பால் மா, குழந்தை உணவு, பழச்சாறு மற்றும் உலர் உணவுப் பொதிகள் இந்த பொருட்களில் அடங் கியிருக்கின்றன.

இந்த பொருட்களின் மாதிரிகள் பரிசோதனைகளுக்காக அனுப் பப்பட்டு தரச்சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. ஒரு கோடியே பதின்மூன்று இலட்சத்து நூற்றி இருபத்தி ஐந்தாயிரம் ரூபா பெறுமதியான இப்பொருட்களைச் செஞ்சிலுவைச் சங்க செயலணித் தலைவர் திஸ்ஸ அபேவிக்ரம ஒப்படைத்தார்.

இந்த பொருட்களை எடுத்துச் செல்வதற்காக தொண்டர் குழு ஒன்று தயாராக இருப்பதாக திஸ்ஸ அபேவிக்ரம தெரிவித்தார். இந்த பொருட்கள் வவுனியா அரச அதிபரூடாக விநியோகிக்கப்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் அமீர் அலி தெரிவித்தார்.

2010: இடைக்கால கணக்கறிக்கை நவ.3 இல் சமர்ப்பிப்பு; 5இல் வாக்கெடுப்பு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம்

26parliament.jpg2010ம் ஆண்டுக்கான இடைக்கால கணக்கறிக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 3ம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் திகதி சமர்ப்பிக்கப்படும் இந்த இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதம் நவம்பர் மாதம் 5ம் திகதி வரையும் பாராளுமன்றத்தில் நடைபெறவிருக்கின்றது. இந்த இடைக்கால கணக்கறிக்கை மீது நவம்பர் மாதம் 5ம் திகதி பின்னேரம் வாக்கெடுப்பு நடத்துவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்களின் வாழ்வாதார தொழிலை மேம்படுத்த உலகவங்கி 8.6 பில்லியன் ரூபா நிதி உதவி!

23wb_jayasundara.pngநாட்டில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்களின் வாழ்வாதார தொழிலை ஊக்குவிக்கும் நோக்கில் 8.6 பில்லியன் இலங்கை ரூபாவினை வழங்க உலக வங்கி முன்வந்துள்ளது என நிதி,  திட்டமிடல் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கான ஒப்பந்தம் நேற்று நிதி, திட்டமிடல் அமைச்சில் வைத்து கைச்சாத்திடப்பட்டது. அரசாங்கத் தரப்பில் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.பி. ஜயசுந்தரவும் உலக வங்கியின் வதிவிடப் பணிப்பாளர் நாக்கோ இஷியும் இதில் கையொப்பமிட்டனர்.

செயற்படுத்தப்பட்டு வரும் சமுதாய அபிவிருத்தி மற்றும் வாழ்க்கைத் தொழிலை முன்னேற்றும் செயற்திட்டத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கைகளுக்காக இந்நிதி பயன்படுத்தப்படும்

இச் செயற்திட்டத்தின் மூலம் ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த 800 பின்தங்கிய கிராமங்களிலுள்ள ஒரு மில்லியன் மக்கள் நன்மையடையவுள்ளனர்.  உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் பதுள்ளை,  மொனராகலை,  அம்பாந் தோட்டை,  கேகாலை,  நுவரெலியா,  இரத்தினபுரி மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களை இலக்கு வைத்து இச்செயற்திட்டம் அமுல்படுத்தப் படும்.

இதன் பிரதான நோக்கம் கிராம அபிவிருத்தி, கிராமங்களுக்கிடையிலான தொடர்பை அபிவிருத்தி செய்தல்,  வாழ்க்கைத் தொழிலை முன்னேற்றல் என்ப னவாகும். தேச நிர்மாண மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் கண்காணிப்பின் கீழ் கெமிதிரிய மன்றம், சமுர்த்தி அதிகார சபை அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலாளர்களுடன் இணைந்து இத்திட்டத்தை செயற்படுத்தவுள்ளது.

வியட்நாம் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் செய்ய இணக்கம்

231009mahi-nuban.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பை ஏற்றுக் கொண்ட வியட்நாம் ஜனாதிபதி நுயன் மின் ட்ரயட்,  இலங்கைக்கு விஜயம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார்.

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வியட்நாம் சென்றிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அந்நாட்டு ஜனாதிபதியை இலங்கை நேரப்படி நேற்று மாலை சந்தித்து இருதரப்பு பேச்சு நடத்தினார். இதன்போதே இந்த அழைப்பு முன் வைக்கப்பட்டது.

இச்சந்திப்பின்போது இரு அரசாங்கங்களுக்குமிடையில் முக்கிய பல ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. குற்றச்செயல்களை தடுத்தல், இரு நாடுகளினதும் பிராந்தியங்களினதும் பாதுகாப்பை பலப்படுதல் தொடர்பான ஒப்பந்தங்களில் இருநாடுகளும் கைச்சாத்திட்டன.

இரு தரப்பு சந்திப்பின்போது ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ, தென் கிழக்காசிய நாடுகளில் வியட்நாம் பொருளாதாரத்துறையில் பெரும் வளர்ச்சியடைந்து வருவதாக அந் நாட்டு ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டினார். இரு நாடுகளினதும் இருதரப்பு வர்த்தகத்தை வலுப்படுத்தும் வகையில் விசாயம் மற்றும் மீன்பிடித்துறை குறித்தும் இச்சந்திப்பின்போது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும் யுத்தம் முடிவடைந்ததுடன் நாட்டில் வர்த்தகம் மற்றும் முதலீடுகளுக்கான சந்தர்ப்பம் அதிகரித்திருப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். பயங்கரவாதத்தை தோற்கடித்தமை க்காக இலங்கை ஜனாதிபதியை வியட்நாம் ஜனாதிபதி பாராட்டியதுடன் இலங்கையில் முதலீடு செய்வது தொடர்பாகவும் கூடிய கவனம் செலுத்தியுள்ளார்.

புலிகளின் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் இரண்டு மீட்பு

புலிகள் தமது பயங்கரவாத செயற்பாடுகளுக்காக பயன்படுத்திய விமான எதிர்ப்பு ஏவுகணைகளான இரண்டு சேம் மிசைல்களை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று கைப்பற்றியிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இராணுவத்தின் 8வது செயலணியின் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைவே புதுக்குடியிருப்பு இரணைப்பாளை எனும் இடத்திலிருந்து நேற்று இரண்டு விமான எதிர்ப்பு ஏவுகணைகளும் மீட்கப்பட்டுள்ளன.

புலிகள் தம்மிடமிருந்த அதிசக்தி வாய்ந்த ஏவுகணைகளைக் கொண்டு கடந்த காலங்களில் விமாப் படையினரின் விமானங்களை இலக்கு வைத்து பல்வேறு பயங்கரவாதச் செயற்பாடுகளை நடத்தியமையையும் பிரிகேடியர் நாணயக்கார சுட்டிக்காட்டினார்.

இதேவேளை அப்பகுதியிலிருந்து எம்.பி.எம்.ஜி உள்ளடக்கப்பட்ட ஒரு பீப்பாயும் 240 லீற்றர் மண்ணெண்ணெய் கொண்ட 10 பீப்பாய்களும், பல்வேறு வகையான மோட்டார் குண்டுகளும் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இராணுவத்தின் 8வது செயலணியின் படைத் தளபதியான ரவிப்பிரிய லியனகே தலைமையிலான புலனாய்வுப் பிரிவினரே நேற்று இவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.

கிழக்கு மற்றும் வட மத்திய மாகாண வீதிகள் புனரமைப்பு!

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் வட மத்திய மாகாணம் மற்றும் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களின் சீர்குலைந்த 370 கி.மீ. தூரமான வீதிகளை புனரமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார்.

அதனடிப்படையில் இத்திட்டத்துக்கு கடனுதவி வழங்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் உடன்படிக்கை கைச்சாத்திடப் படவுள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள 4 வருட காலம் கொண்ட இத்திட்டத்துக்கு 78 மில்லியன் அமெரிக்க டொலர் செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கி 70 மில்லியன் டொலரையும் இலங்கை அரசாங்கம் 8 மில்லியன் டொலரையம் வழங்கவுள்ளது.

ஜனாதிபதி வியட்நாமுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம்!

290909mahinda.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று காலை வியட்நாம் சென்றுள்ளார். வியட்நாம் ஜனாதிபதி நுவென் மின் ட்ரியொட்டின் விசேட அழைப்பை ஏற்றே ஜனாதிபதி அங்கு சென்றார். ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகமவும் முக்கியஸ்தர்களின் குழுவென்றும் அங்கு சென்றுள்ளது.

வியட்நாமின் நொய்பாய் சர்வதேச விமான நிலையத்தில் வியட்நாமின் முக்கிய அமைச்சர்கள் ஜனாதிபதிக்கு வரவேற்பு அளிக்கவுள்ளனர். இன்று மாலை இரு நாட்டு ஜனாதிபதிகளுக்கும் இடையில் உத்தியோகபூர்வ பேச்சு வார்த்தைகள் இடம்பெறவுள்ளன. அத்துடன் சமூக, பொருளாதார, வர்த்தக,  மற்றும் விவசாய விடயங்கள் தொடர்பான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன.

இன்று இரவு வியட்நாம் ஜனாதிபதியின் மாளிகையில் ஜனாதிபதி தலைமையிலான குழுவினருக்கு விருந்துபசாரமும் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.