சஜீர் அகமட் பி

சஜீர் அகமட் பி

லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பான விசாரணையில் முன்னேற்றம் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

ranjith-gunasekara.jpgஊடக வியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை, எம்.ரி.வி, சிரச தொலைக்காட்சி நிறுவனத் தீ வைப்புச் சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளில் முன்னேற்றமடைந்திருப்பதாகத் தெரிவித்திருக்கும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர, பாதுகாப்பு காரணங்களுக்காக உடனடியாக ஊடகங்களுக்கு எந்தத் தகவலையும் வெளியிட முடியாதிருப்பதாக குறிப்பிட்டார்.  தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரஞ்சித் குணசேகர மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.

அவர் இது தொடர்பில் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது; சிரச நிறுவனத்தின் மீதான தீ வைப்புச் சம்பவம் தொடர்பிலும் சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாகவும் பொலிஸ் விசாரணைகளில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. கண்ணால் கண்ட சாட்சியங்களைப் பெற்றுக்கொள்வதில் தொடர்ந்தும் பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கின்றோம். ஆனால், தடயங்களுடாக கிடைத்துவரும் சாட்சியங்கள் பல விடயங்களை உறுதிசெய்துகொள்ள முடிந்துள்ளது.

விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்றுவருவதால் தகவல்கள் எதனையும் வெளியிட முடியவில்லை. விசாரணைக்கு முட்டுக்கட்டை ஏற்படக்கூடிய விதத்தில் ஊடகங்கள் தவறான தகவல்களை வெளியிடுவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம் என தெரிவித்தார். இதனிடையே ஊடகவியலாளர்கள் லசந்த சுடப்பட்டாரா, குத்திக்கொல்லப்பட்டாரா? என்று கேள்வி எழுப்பியபோது, பதிலளித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், அதுகுறித்து விசாரணைக் குழுக்கள் எந்தவொரு முடிவுக்கும் வரமுடியாத நிலை காணப்படுவதாகவும் விசாரணைகள் முடிவடையும்போதுதான் சம்பவம் எவ்வாறு இடம்பெற்றது என்பதை உறுதிசெய்ய முடியும் எனக் குறிப்பிட்டார்.

ரூ. 8 கோடி பெறுமதியான சட்ட விரோத சிகரட்டுகள்!- சுங்கப் பிரிவினரிடம் அகப்பட்டன

800-mili.jpgதிருட்டுத் தனமாக இலங்கைக்குள் இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்டுள்ள எட்டு கோடி ரூபா பெறுமதியான 88 இலட்சம் சிகரெட்டுகள் அழிக்கப்படும் என சுங்க அத்தியட்சகர் ஏ. டி. வளவகே தெரிவித்தார்.

40 அடி நீளமான கொள்கலனில் போலி ஆவணங்களுடன் வந்த இச் சிகரெட்டுகளை வரவழைத்தவர் யார் எனத் தெரியவில்லை எனவும் இவர் மேலும் தெரிவித்தார். இக் கொள்கலனில் சீனாவில் தயாரிக்கப்பட்ட கோல்ட்லீஃப், பென்சன் அண்ட் ஹெட்ஜஸ், ஜெர்மனிய தயாரிப்பான கோல்ட் சீல் ஆகிய சிகரெட் பக்கட்டுகள் காணப்பட்டன. இது தொடர்பாக கருத்து வெளியிட்ட சிலோன் டுபாக்கோ நிறுவன அதிகாரி ஒருவர், சமீபத்தில் 206 மில்லியன் ரூபா பெறுமதியான சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டதாகவும் துபாய்க்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கிருந்து கொழும்புக்கு அனுப்பிவைக்கப் படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

ஒரு ரூபா 20 சதம் பெறுமதியான ஒவ்வொரு சிகரெட்டும் 16 ரூபா அல்லது அதற்கு மேற்பட்ட விலைக்கு சில்லறையாக விற்பனை செய்யப்படுகிறது என்றும் இவர் மேலும் தெரிவித்தார்.

சாதனை:ஒபாமாவின் தேர்தல் பிரச்சார புத்தகம்

obama-2001.jpg
அமெரிக்காவின் புதிய அதிபராக பதவி ஏற்ற பராக் ஒபாமா ஜனநாயக கட்சி வேட்பாளர் தேர்வின்போது பேசிய ஆங்கில பேச்சுக்கள் புத்தகமாக தொகுக்கப்பட்டு ஜப்பானில் விற்கப்படுகிறது. புத்தக கடைகளில் இந்த புத்தகம்தான் அதிகமாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. 95 பக்கங்கள் கொண்ட அதன் விலை 550 ரூபாய். கடந்த 2 மாதத்தில் மட்டும் 4 லட்சம் பிரதிகள் விற்பனையாகி உள்ளன. இந்த புத்தகத்துக்கு ஜப்பானிய மொழி பெயர்ப்பும் விற்பனைக்கு இருக்கிறது.

ஜப்பானில் பிரபலமான எழுத்தாளர்கள் எழுதிய நாவல்கள்கூட ஆண்டுக்கு 10 லட்சம் பிரதிகள்தான் விற்பனை ஆகும். ஆனால், அவற்றை மிஞ்சும் வகையில் ஒபாமா புத்தக விற்பனை சக்கை போடு போடுகிறது. இதற்கு முன் அதிபராக இருந்த புஷ் பேச்சு அடங்கிய புத்தகம்கூட இந்த அளவு விற்பனை ஆகவில்லை. ஜப்பான் அரசியல்வாதிகள்கூட ஒபாமா புத்தகத்தை வாங்கி படிக்கிறார்கள்.

மக்கள் இடம்பெயர்வதற்கான பாதுகாப்பு வலயங்கள்

wanni.jpgமுல் லைத்தீவில் புலிகளால் பலவந்தமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் இடம்பெயர்வதற்கான பாதுகாப்பு வலயங்களை இராணுவம் பிரகடனப்படுத்தியுள்ளது.

புதுக்குடியிருப்பு, இரணைப்பாளை, ஆனந்தபுரம், வலைஞர்மடம், அம்பலவன்பொக்கனை, மாத்தளன், முள்ளிவாய்க்கால், வள்ளிபுனம், தேவிபுரம், மூங்கிலாறு, உடையார் கட்டு, சுகந்திரபுரம், கைவேலி, ரெட்பானா கிராமம் ஆகிய இடங்களில் தற்போது ஏராளமான மக்கள் இடம்பெயர்ந்து தங்கியுள்ளனர். குறித்த மக்கள் மனிதக் கேடயங்களாக பயன்படுத்தும் நோக்கில் புலிகளால் பலவந்தமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பிரதேசங்களை சேர்ந்தவர்கள். இந்த நிலையில் இவர்களை தேவிபுரம், உடையார்கட்டு, சுகந்திரபுரம், சுகந்திரபுரம் கொலனி, சுகந்திரபுரம் மத்தி, கைவேலி வடக்கு, இருட்டு மடு போன்ற இடங்களுக்கு செல்லுமாறும் இந்த இடங்கள் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் படைத்தரப்பு அறிவித்துள்ளது.

குறித்த பிரதேசங்கள் யுத்த சூனியப் பிரதேசமாகவும் இராணுவத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அப்பிரதேசங்களை நோக்கி மக்கள் இடம்பெயர்வதன் மூலம் யுத்தத்தின் தாக்கங்களிலிருந்து விடுபட்டுக்கொள்ள முடியுமாக இருக்கும். ஆயினும் புலிகள் தங்களால் மனிதக் கேடயங்களாக குறித்த மக்களை பயன்படுத்தி வரும் நிலையில் அவர்கள் இடம்பெயர அனுமதிப்பார்களா என்பதே கேள்விக்குறியாகும். முல்லைத்தீவு பிரதேசத்தில் விசேட பாதுகாப்பு வலயங்கள் பிரகடனப்படுத்தப்பட்டு இடம்பெயர்ந்த மக்களை குறித்த வலயங்களுக்கு செல்லுமாறு படைத்தரப்பு அறிவித்துள்ளது

படகுகள் மீது தாக்குதல்

_bort.jpg முல்லைத்தீவு கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கடற்புலிகளின் தற்கொலைப் படகு உள்ளிட்ட நான்கு படகுகளை இலங்கை கடற்படையினர் தாக்கி அழித்திருப்பதாக கடற்படை பேச்சாளர் கமாண்டர் டி. கே.பி. தஸநாயக்க கூறினார்.

இச்சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றது. தாக்குதலையடுத்து இரண்டு கடற்புலிகளின் சடலங்களை கடற்படையினர் மீட்டிருப்பதாகவும் கமாண்டர் தெரிவித்தார். முல்லைத்தீவு கடற்கரையோரமாக கடற்புலிகளின் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை அவதானித்த இலங்கை கடற்படையினர் அப்படகுகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எட்டு படகுகளில் நான்கு படகுகள் முற்றாக எரிந்துள்ளன. இதில் ஒன்று தற்கொலைப் படகென கடற்படை பேச்சாளர் கூறினார். ஏனைய நான்கு படகுகளும் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளன. கடற் படையினருக்கும் கடற்புலிகளுக்குமிடையே சில நிமிடங்கள் இடம் பெற்ற மோதல்களால் கடற்படையின் படகொன்று சிறு சேதங்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

அதே நேரம் முல்லைத்தீவு கடற்பரப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்கரும்புலிகளால் சிறிலங்கா கடற்படையின் சுப்பர் டோறா தாக்கி மூழ்கடிக்கப்பட்டதில் 15 கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளது:
 
இது தொடர்பாக விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்துள்ளதாவது: முல்லைத்தீவு கடற்பரப்பில் தாக்குதல் மற்றும் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா கடற்படையின் டோறாக்கள் மற்றும் சுப்பர் டோறாக்கள் அணி மீது நேற்று திங்கட்கிழமை இரவு 11:28 நிமிடத்துக்கு கடற்கரும்புலிகள் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் கடற்கரும்புலிகளால் சிறிலங்கா கடற்படையின் உயர்வலு சுப்பர் டோறா பீரங்கிப் படகு தாக்கி மூழ்கடிக்கப்பட்டுள்ளது. இதில் 15 கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகள் தரப்பில் கடற்கரும்புலி லெப்.கேணல் நிதி மற்றும் கடற்கரும்புலி கப்டன் வினோதன் ஆகிய இரு கடற்கரும்புலிகள் வீரச்சாவடைந்துள்ளனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘கட்டுப்பாடற்ற பகுதிகளில் உணவு தட்டுப்பாடு இல்லை’

mahinda-samarasinga.jpg‘கட்டுப்பாடற்ற பகுதிகளில் உணவு மற்றும் மருந்துத் தட்டுப்பாடு எதுவும் கிடையாது. அப்பகுதிக்குத் தேவையான உணவுப் பொருட்கள் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருவதாக மனித உரிமைகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறினார். வன்னி மனிதாபிமான நடவடிக்கை குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று அமைச்சில் நடைபெற்றது.

அமைச்சர் மேலும் கூறியதாவது:- மோதல்கள் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள போதும் மோதல் நடைபெறும். பகுதிகளுக்கு உணவு வழங்கும் நடவடிக்கை தடையின்றி முன்னெடுக்கப்படுகிறது. கடந்த 16ஆம் திகதி 58 லொறிகளில் 820 மெட்ரிக் தொன் உணவுப் பொருட்கள் அனுப்பப்பட்டன. மேலும் ஒரு தொகுதி உணவுப் பொருட்களை அடுத்த வாரம் அங்கு அனுப்பவுள்ளோம்.

வன்னியில் உணவுத் தட்டுப்பாடு கிடையாது. அங்குள்ள தேவைகளுக்கு ஏற்ப உணவு அனுப்பப்படுகிறது.
 
 

6 கோடி தெற்காசியருக்கு இதய நோய் பரம்பரை வியாதி

surgery.jpgமரபணு உருப்பெருக்கம் என்ற ஒரேயொரு காரணத்தால் 6 கோடி தெற்காசியர்கள் (உலக சனத்தொகையில் 1 சதவீதம்) இதயநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக  ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட விஞ்ஞான ஆய்வறிக்கையொன்று தெரிவிக்கிறது. பரம்பரைப் பாதிப்பு இந்திய உபகண்டத்தில் 150 கோடி பேருக்கு ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள், மருத்துவர்களை உள்ளடக்கிய குழுவொன்று “நேற்சர் ஜெனற்றிக்ஸ் அக்கடமிக் ஜேர்னல்’ சஞ்சிகையில் எழுதியுள்ளனர்.

தெற்காசியர்களில் 4 சதவீதமானோரை பரம்பரை ரீதியான இதயநோய் தாக்குவதாக பிரிட்டன், இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். “இப்போது இந்தப் பாதிப்பு அடையாளம் காணப்பட்டுள்ளது. கருவுற்றிருக்கும் போது ஆரம்ப கட்டத்திலேயே இப்போது இதனைக் கண்டுபிடிக்க முடியும்’ என்று அவர்கள் விடுத்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். மரபணு ரீதியான சோதனையின் மூலம் இந்தப் பாதிப்புக்களை இளம் பராயத்திலேயே தற்போது இனங் கண்டுகொள்ள முடியும். காலப்போக்கில் இதற்கான மருந்தையும் கண்டுபிடிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருடாந்தம் உலகில் 1 கோடி 75 இலட்சம் பேர் இதயநோயால் மரணிக்கின்றனர். இதேவேளை, உலகில் இதய நோயால் பீடிக்கப்படுவோரில் 60 சதவீதமானோர் இந்தியர்கள் என்று அண்மையில் வெளியிடப்பட்ட மற்றொரு ஆய்வு குறிப்பிட்டுள்ளது. 26 நாடுகளைச் சேர்ந்த 2,085 பேரிடம் சோதனை நடத்தப்பட்டது. ஆனால், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, இந்தோனேசியா, மலேசியாவிலுள்ள தெற்காசிய வம்சாவளியினருக்கே இந்த பரம்பரை அலகால் இதயநோயின் தாக்கம் உள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எம்.ரி.வி’ மீதான தாக்குதல் குறித்து தான் கூறியதை பாதுகாப்புச் செயலர் ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும்

wijitha_herath_jvp.jpgஎம்.ரி.வி., எம்.பி.சி. நிறுவனத்தினர் தங்களது நிறுவனத்துக்கு தாங்களே தீ வைத்துக் கொண்டதாக தெரிவித்திருக்கும் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, பொறுப்புள்ள அதிகாரி என்ற வகையில் அது தொடர்பான தகவல்களை உரிய ஆதாரங்களுடன் நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டுமென, நுகேகொடையில் திங்கட்கிழமை மாலை நடைபெற்ற ஊடக அடக்கமுறைக்கு எதிரான கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஜே.வி.பி.யின் பாராளுமன்றக் குழுத் தலைவரான அநுர குமார திஸாநாயக்கவும் இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவரான சனத் பாலசூரியவும் இந்தக் கூட்டத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

“ஊடக அடக்குமுறைக்கு எதிராக அணிதிரள்வோம்’ எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் முதலில் பேசிய சனத் பாலசூரிய; இன்று நிலவி வருவது ஊடகங்களுக்கோ, ஊடகவியலாளர்களுக்கோவான பிரச்சினையல்ல ஜனநாயகத்துக்கான பிரச்சினையே இன்று நிலவிக்கொண்டிருக்கிறது. ஒருவர் எதையும் பேசி விட்டு வீடு செல்ல முடியாத நிலைமை உருவாகியிருக்கிறது. கருத்துச் சுதந்திரமும் மக்கள் தகவல்களை தெரிந்து கொள்வதற்கான உரிமையும் மறுக்கப்படுகின்றன.

கடந்த காலங்களில் பல ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். எனினும் இந்தச் சம்பவங்கள் தெடர்பாக இதுவரை விசாரணைகள் நடத்தப்பட்டு இவற்றுக்குப் பொறுப்பான எவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை. இதன் மூலம் எவரும் ஊடகங்களையோ அல்லது ஊடகவியலாளர்களையோ தாக்கிவிட்டு துணிவாக இருக்க முடியுமென்ற நிலைமை உருவாக்கப்பட்டிருக்கிறது. இது ஆபாயகரமானது. ஊடகவியலாளர்கள் என்ற வகையில் நாம் நாட்டின் ஆட்சியை பிடிக்க முயற்சிக்கவில்லை. ஆனால் ஊடக சுதந்திர த்துக்காக போராடும் அதேநேரம், ஜனநாயகம் மற்றும் மக்கள் உரிமைகளுக்காகவும் போராட நாம் முன்நிற்கிறோம்.

சிரச நிறுவனம் மீதான தாக்குதல் நடத்துவதன் மூலமோ, லசந்தவை படுகொலை செய்வதன் மூலமோ எம்மை தடுத்து நிறுத்தி விடமுடியாது. அண்மையில் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றின் போது, லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை பற்றியும் “சிரச’ ஊடக நிறுவனம் மீதான தாக்குதல் பற்றியும் சில கருத்துகளை வெளியிட்டிருந்தார். பாதுகாப்பு செயலாளர் என்பவர் பொறுப்பு வாய்ந்த அதிகாரி. பொறுப்பிலிருந்து கொண்டு அவர் பொய் கூற மாட்டார். எனவே, அவர் போதிய விசாரணைகளின் பின்னரான அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே இந்தக் கருத்தை வெளியிட்டிருக்க வேண்டும். அவர் கூறியதைப் பார்த்தால் விசாரணைகள் முடிந்து விட்டதாகவே தெரிகிறது. எனவே, அவர் மக்கள் முன்நிலையில் ஆதாரபூர்வமான தகவல்களை வெளியிட வேண்டும். குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தும் வரை, அரசாங்கம் தன் மீதான குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்பிக்க முடியாது என்று கூறினார்.

இதேநேரம், ஜே.வி.பி.யின் அநுர குமார திஸாநாயக்க எம்.பி.இங்கு பேசுகையில்; “கோதாபய ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் என்ற பொறுப்புமிக்க பதவியில் இருக்கிறார். யுத்த நடவடிக்கைகளிலும் அவரது பங்களிப்பு இருக்கிறது. அதற்காக அவர் மீது மதிப்பும் இருக்கிறது. எனினும் ஒரு துறையில் சிறப்பாகச் செயற்பட்டதற்காக, மற்றொரு துறையை முடக்க இடமளிக்க முடியாது. சிரச ஊடக நிறுவனத்தின் மீது தீ வைக்கப்பட்டமையானது நிறுவனத்தினரே செய்து கொண்டதாக கோதாபய ராஜபக்ஷ கூறியிருக்கிறார். அவர் பொறுப்புள்ள அதிகாரி. அவர் ஜனாதிபதியின் தம்பியாக இருந்தாலும் அவருக்கு அப்படிக் கூற முடியாது. அதிகாரி ஒருவர் என்ற வகையில் அவர் கூறியது உண்மையாக இருக்க வேண்டும். அப்படியாயின் அந்த தகவல்களை தகுந்த ஆதாரங்களுடன் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்’ என்றார்.

வடமராட்சி கிழக்கு,வன்னியிலிருந்து இதுவரை 1,796 பேர் தென்மராட்சிக்கு வருகை

displace.jpgவடமராட்சி கிழக்கு மற்றும் வன்னியில் படையினரால் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களிலிருந்து தென்மராட்சிக்குள் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை 1,796 பேர் வந்துள்ளதாக யாழ். செயலக புனர்வாழ்வுத்திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்களில்167 குடும்பங்களைச் சேர்ந்த 440 பேர் கோப்பாய் ஆசிரிய பயிற்சிக்கல்லூரி இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பழைய பூங்கா வீதியிலுள்ள திருநகர் இடைத்தங்கல் முகாமில் 24 குடும்பங்களைச் சேர்ந்த 61 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 416 குடும்பங்களைச் சேர்ந்த 1,296 பேர் மிருசுவில் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையிலும் அருகாமையிலுள்ள தேவாலயக் கட்டிடங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் மூன்று நாட்களுக்கு சமைத்தஉணவு வழங்கப்பட்டு வருவதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கே. கணேஷ் தெரிவித்தார். அரசசார்பற்ற தொண்டர் நிறுவனங்கள், பாய்கள்,அரிக்கன் லாம்புகள்,உடுதுணிகள், பாவனைப் பொருட்களை வழங்கி வருகின்றன. அகதிகள் வருகை அதிகரித்து வருவதால் இடைத்தங்கல் முகாம்களை அமைப்பது, நிவாரணப் பணிகளை மேற்கொள்வது குறித்து அரசசார்பற்ற நிறுவனங்களுடன் யாழ். செயலகத்தில் நேற்று அவசர சந்திப்பொன்றையும் அரசஅதிபர் நடத்தியுள்ளார்.

மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்கும் 13 ஆவது அரசியல் திருத்தத்தை வரவேற்கிறேன் – சிவ்சங்கர் மேனன்

18-01menon.jpg
இலங்கையின் மாகாண சபைகளுக்கு அதிகாரத்தை வழங்கும் 13 ஆவது அரசியல் திருத்தம் அமுல்படுத்தப்படுவதை வரவேற்பதாக இந்திய வெளிவிவகாரச் செயலாளர் எச்.ஈ.சிவ்சங்கர் மேனன் தெரிவித்ததாக இலங்கைக்கான இந்தியத் தூதுவராலயம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வெளிவிவகார செயலாளர் சிவ்சங்கர் மேனன் கடந்த 16ஆம், 17ஆம் திகதிகளில் இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற் கொண்டிருந்தார். இது தொடர்பில் இலங்கைக்கான இந்திய தூதுவராலயம் வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; இந்திய வெளிவிவகாரச் செயலாளர் இவ் விஜயத்தின் போது, இலங்கையின் வெளிவிவகாரச் செயலாளர் கலாநிதி பாலித ஹோஹண, பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ ஆகியோரைச் சந்தித்தார். அத்துடன் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடினார். மேலும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உட்பட தமிழ், முஸ்லிம் சமூகங்களின் பிரபல தலைவர்களையும் சந்தித்துள்ளார். இதன் போதான கலந்துரையாடல்கள் இரு தரப்பு உறவுகள், இலங்கையின் தற்போதைய சூழ்நிலை மற்றும் பிராந்திய அபிவிருத்தி என்பவற்றை உள்ளடக்கியதாக இருந்தது.

இக்கலந்துரையாடல்களில் துரிதமான இராணுவ வெற்றியின் மூலமாக இலங்கை இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் தனது விருப்பத்தை ஜனாதிபதி தெரிவித்தார். இதன் போது சிவ்சங்கர் மேனன் வடக்கு உட்பட முழுநாட்டிற்கும் சமாதான முறையில் பேச்சுவார்த்தையினூடாக தீர்வு காணும்படி வலியுறுத்தினார். அத்துடன் தமிழர் உட்பட அனைத்து சமுதாயத்திற்கும் அமைதியான வாழ்வை அளிக்கும் ஐக்கிய இலங்கைக்கு தேவையான அரசியல் புரிந்துணர்வு பற்றியும் அறிவுறுத்தினார். மேலும், இச் சந்திப்பின் போது இலங்கையின் வடக்குப் பிரதேச மனிதாபிமான நடவடிக்கை தொடர்பில் இந்தியாவின் அக்கறை உள்ளதை தெரிவித்ததுடன் இடம்பெயர்ந்த பொதுமக்களின் பாதுகாப்பு பற்றி உத்தரவாதமளிக்கும் படியும் வேண்டினார்.

அத்துடன் அம்மக்களைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தியதுடன் அவ்வாறு செய்யாவிடின் மக்களிடையே பகைமை உணர்வு ஏற்படும் என்பதையும் தெரிவித்தார். மேலும், தற்காலிக தங்குமிடம், மருந்துப் பொருட்கள் அடங்கலாக நிவாரணம், பொருட்களையும் இந்தியா வழங்க எண்ணியுள்ளது என்பதையும் தெரிவித்தார். இதன் ஒரு கட்டமாக மருந்துப் பொருட்களை ஜனாதிபதியின் செயலாளர் பசில் ராஜபக்ஷவிடம் ஒப்படைத்தார். ஏற்கனவே இந்தியாவிலிருந்து 1680 தொன் நிவராணப் பொருட்கள் ஐ.சி.ஆர்.சி.யினூடாக வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.