விஸ்வா

விஸ்வா

”குடாநாட்டில் குற்றச்செயல்கள் தொடருமானால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்” யாழ். படைத்தளபதி

Mahinda_Hathrusinge_Major_Genயாழ். குடாநாட்டில் தொடர்ந்து குற்றச்செயல்கள் இடம்பெற்று வரும் நிலையில் தேவைப்பட்டால் மேலும் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என யாழ்.படைத்தளபதி  மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மக்கள் பீதியும் அச்சமுமின்ற வாழ வசதியாக பாதுகாப்பு விடயத்தில் சில கடும் நடவடிக்கைகளை முன்னெடுக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்.மேல் நீதிமன்றத்தில் நேற்று முற்பகல் நடைபெற்ற சட்டத்தரணிகளுடனான சந்திப்பிலேயே அவர் இவற்றைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்:

”குடாநாட்டில் தொடர்ந்து நடைபெறும் குற்றச்செயல்களை முடிவிற்கு கொண்டுவர அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. இச்சம்பவங்களுக்கு காரணமான பலரை கைது செய்துள்ளோம். பொலிசார்  தொடர்ந்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு  வருகின்றனர். இக்குற்றச்செயல்களுக்கு பின்னணியில் இருப்பவர்களைக் கண்டு பிடித்து, சட்டம், ஒழுங்கைப் பேணி, மக்களின் அச்சத்தை நீக்க அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. குடாநாட்டில் சாவகச்சேரி மாணவனின் படுகொலையுடன் ஆரம்பித்து பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.  இதனால் மக்கள் மிகுந்த அச்சத்திற்குள்ளாகி வருகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

”வன்செயல்களை முடிவிற்கு கொண்டுவருவது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுடன் கலந்தரையாடியுள்ளேன். சட்டம் ஒழங்கை நிலைநாட்டி. மக்களின் அச்சநிலையைப் போக்கி, அவர்களுக்கான இயல்பு வாழ்வினை ஏற்படுத்த ஏற்பாடு செய்யுமாறு அவர் எமக்கு அறிவுறுத்தியுள்ளார். அவரது வழிகாட்டலில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். தற்போது எடுத்துள்ள நடவடிக்கைகள் போதாமல் விட்டால் மேலும் பல நடவடிக்கைளை எடுக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. நீதிபதிகளுக்கோ, சட்டத்தரணிகளுக்கோ, வேறு எவருக்குமோ அச்சுறுத்தல் விடுக்கப்பட்டால் அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பை நாம் வழங்குவோம்” என்றும் படைத்தளபதி குறிப்பிட்டார்.

”சட்டத்தரணிகள் தங்கள் பகிஸ்கரிப்பு நடவடிக்கையை நிறுத்தி சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும். இச்செய்தியை உங்களிடம் கூறுமாறு பாதுகாப்புச் செயலாளர் என்னைப் பணித்துள்ளார்” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.  நேற்று நடைபெற்ற இச்சந்திப்பில்; யாழ். மேல்நீதிமன்ற நீதிபதி இ.த.விக்னராஜாவும் கலந்து கொண்டார்.

வன்னி யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களை நினைவுகூரும் வகையில் மே 18 அன்று வவுனியாவில் ஆர்ப்பாட்டம் – எம் கெ சிவாஜிலிங்கம்

Sivajilingam_M_Kதமிழ்த் தேசிய விடுதலை முன்னணியும், புதிய இடதுசாரி முன்னணியும் இணைந்து எதிர்வரும் 18ம் திகதி வவுனியா நகரில் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் மே மாதம் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது, முள்ளியவாய்க்கால் பகுதியில் கொல்லப்பட்ட மக்களை நினைவு கூரும் முகமாகவும், சிறைகளிலுள்ள 12 ஆயிரம் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரியும், யுத்தத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்குமாறு வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெறவுள்ளதாகவும் திரு. சிவாஜிலிங்கம் குறிப்பிட்டார்.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது, இடம்பெற்ற படுகொலைகளை விசாரணை செய்ய ஆணைக்குழு ஒன்றை அமைக்கக் கோரியும், காணாமல் போனவர்கள் அரசின் பாதுகாப்பில் இருந்தால் அவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும், அகதிகளாக்கப்பட்டுள்ள மக்களின் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தக் கோரியும் இவ்வார்ப்பாட்டப் பேரணி நடைபெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வடமராட்சியில் பெண்ணைக் கடத்தியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்!

வடமராட்சியில் கடத்தப்பட்டு, நேற்று முன்தினம் (11 May 2010) வல்லைவெளியில் பற்றையொன்றில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட லங்காதேவி (வயது 37) என்ற பெண்ணைக் கடத்தியவர்களான உடுப்பிட்டியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டு பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர். இவர்களை விசாரணை செய்த பருத்தித்துறை நீதவான் எதிர்வரும் 26 வரை இவர்களைத் தடுத்து வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட குறித்த பெண்ணின் மகளை திருமணம் செய்து தருமாறு வற்புறுத்தியே இக்கடத்தல் மற்றும், இப்பெண் மீதான கத்திக்குத்து என்பன நடைபெற்றுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரிய வருகின்றது. வன்னியில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து கணவர் மற்றும் மகன் ஆகியோர் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய பிள்ளைகளுடன் கரவெட்டியில் சம்பந்தர் கடைப்பகுதியில் இப்பெண் வசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அராலியில் சிறிலங்கா இராணுவச்சிப்பாய் மரணம்!

Check_Pointஇன்று 13ம் திகதி யாழ்ப்பாணம் அராலியில் இருவர் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியாகியுள்ளதாக இன்று பகல் யாழ்ப்பாணத்தில் பரபரப்பாக வதந்திகள் பரவின. இது தொடர்பாக விசாரித்தபோது ஒரு இராணுவ சிப்பாய் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி மரணமடைந்ததாக தகவல்கள் வந்தன. இதனையடுத்து இராணுவச்சிப்பாயை நோக்கி யார் இந்த துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டார்கள் என்கிற கேள்விகள் மக்கள் மனங்களில் எழுந்தன. இச்சம்பவம் மக்கள் மத்தியில் ஓரு அச்சத்தை ஏற்படுத்தின.

பின்னர் வந்த தகவல்களின் படி குறிப்பிட்ட இராணுவச்சிப்பாய் ஒரு யுவதியைக் காதலித்து வந்ததாகவும் பின்னர் அப்பெண் மனம் மாறி அவரின் காதலை மறுத்ததாகவும், இதனால் விரக்கியுற்ற அச்சிப்பாய் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிய வருகின்றது.

”விடுதலைப் புலிகளுக்கெதிரான இரண்டாவது யுத்தம் ஆரம்பமாகியுள்ளது!” மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இரண்டாம் கட்ட யுத்தம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவத்தரப்பு தெரிவித்துள்ளது. விடுதiலைப் புலிகளின் ஆதரவு அமைப்புக்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சர்வதேச ரீதியான பிரசாரங்கள் மற்றும், ஏனைய நடவடிக்கைகள் யாவும் கட்டுப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் நாடு கடந்த தமிழீழ இராஜ்ஜியம் ஒன்றை அமைப்பதில் முனைப்புக் காட்டி வருகின்றனர். விடுதலைப் புலிகளுக்ககு  எதிரான யுத்தம் முடிவடைந்துள்ள போதிலும், புலிகளின் சர்வதேச செயற்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதற்கெதிராக சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் புலிகளுக் கெதிரான யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டுள்ள போதிலும், அவர்களின் சர்வதேச நடவடிக்கைகளுக்கு எதிரான யுத்தம் தொடர்கின்றது எனவும் அவர் குறிப்பட்டள்ளார். 

இதே வேளை, விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும், அவர் மேலும் கூறியுள்ளார். கொழும்பிற்குள் ஊடுருவிய அநேகமான விடுதலைப்புலி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பலாலி ஆரோக்கிய அன்னை ஆலயத்திற்கு மக்கள் செல்ல 20 வருடங்களின் பின்னர் படையினரால் அனுமதிக்கப்பட்டுள்ளது!

பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் திருவிழா நடத்த அப்பகுதி மக்களுக்கு சிறிலங்கா பாதுகாப்புப் படையினர் அனுமதி வழங்கியுள்ளனர். சுமார் 20 வருடங்களின் பின் எதிர்வரும் 15ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு திருவிழாத் திருப்பலி நடைபெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது. இருபது வருடங்களின்  பின்னர் இந்த ஆலயத்திற்குச் செல்ல மக்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது. மக்கள் கடற்கரை வீதியால் தொண்டைமானாறு ஊடாக பயணிப்பதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. இத்திருவிழா உற்சவத்தில் பங்கு கொள்ள விரும்புகின்றவர்கள் அன்றைய தினம் காலை 6.30 மணிக்கு தொண்டைமானாறு சந்தியில் ஒன்று கூடுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் தொடரும் குற்றச்செயல்கள்!

வடமராட்சி மாணவி ஒருவர் இனந்தெரியாத சிலரால் வானில் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்டுள்ளார். வல்லைவெளிப் பற்றையொன்றிற்குள் மயங்கிய நிலையில் பெண்ணொருவர் மீட்கப்பட்டுள்ளார்.

வடமராட்சி மகளிர் கல்லூரி ஒன்றில் உயர்தர வகுப்பில் பயிலும் மாணவியொருவர் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில், அடி காயங்களுடன் நேற்று செவ்வாய் கிழமை மாலை 5 மணியளவில் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  பருத்தித்துறை ஆத்தியடியைச் சேர்ந்த மாணவியான சண்முகராஜா அனுசியா (வயது 18) என்ற மாணவிக்கே இந்நிலை ஏற்பட்டது. வான் ஒன்றில் வந்தவர்கள் இவரை பலவந்தமாக அதில் ஏற்றிச்சென்று, கடுமையாக தாக்கிய பின் பருத்தித்துறை சாரையடிப் பகுதியில்  தள்ளி விழுத்திவிட்டுச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் நால்வர் தொடர்பு பட்டிருப்பதாகவும், அவர்கள் அம்மாணவியின் வாயினுள் திராவகம் ஒன்றை பருக்கியதாகவும், மாணவி கூக்குரலிடவே அவரைத்  தள்ளி விழுத்தி விட்டுச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது இது கடத்தல் சம்பவமா அல்லது தனிப்பட்ட பிரச்சினையா என்பது தெரியவரவில்லை.

இது இவ்வாறிருக்க, வல்லை வெளியில் பற்றை ஒன்றிற்குள் காயங்களுடன் மயங்கிய நிலையில் பெண்ணொருவர் மீட்கப்பட்டுள்ளார். அவ்வழியால் சென்றவர்களின் தகவலையடுத்து அச்சுவேலி பிரதேச வைத்தியசாலை அம்புலன்ஸ் மூலம் இப்பெண் மீட்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று முற்பகல் 10 மணியளவில் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த  குறித்த பெண் வழங்கிய தகவலில், தான் வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து, நலன்புரி முகாமில் தங்கியிருந்து விட்டு பின் கரவெட்டிப் பகுதியில் வசித்து வந்ததாகவும்,  கடந்த திங்கள் கிழமை காலை வீதியில் தன்னை வழிமறித்த நான்குபேர் வான் ஒன்றில் கடத்திச் சென்றதாகவும், செவ்வாய்கிழமை கண்விழித்து பார்த்த போது பற்றையொன்றில் கிடப்பதை உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார். இவரின் கழுத்து, பிடரிப் பகுதிகளில் சிறிய கத்தியொன்னிறனால் கீறப்பட்ட காயங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில்  இப்பெண்மணி வழங்கிய முறைப்பாட்டில் அவரின் பெயர் வி.லங்காதேவி வயது 37 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்களின் இயலாமையும் பலவீனமும் ஆணாதிக்கத்தின் பிரிவுகளால் பயன்படுத்தப்படுகின்றது! : விஸ்வா

Feminism_Faces _._._._._
அண்மைய சில வாரங்களாக தேசம்நெற் இல் செய்திகளையும் செய்திக் கட்டுரைகளையும் எழுதி வரும் விஸ்வா இலங்கையில் வடமாகாணத்தைச் சேர்ந்தவர். அங்கேயே வாழ்பவர். ஊடகவியலாளர். தேசம்நெற்றில் அவருடைய செய்திகளும் செய்திக் கட்டுரைகளும் தொடர்ச்சியாக வெளிவரும். ‘விஸ்வா’ அவருடைய புனைப்பெயர். அவர் தேசம்நெற் ஆசிரியர் குழுவுடன் தொடர்பில் உள்ளவர்.
._._._._._

வவுனியா இடப்பெயர்வு முகாம்களில் ஒன்பது மாதங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இளம்பெண்கள் பெரும் துன்பங்களை அனுபவித்து வருவதாக ஐ.நாவின் ஊடக அமைப்பான இன்னசிற்றி பிறஸ் தெரிவித்துள்ளது. இம்  முகாம்களில் உள்ளவர்களை சென்று பார்வையிடுவதற்கு செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகளுக்கு இன்னமும் அனுமதி மறுக்கப்பட்டே வருகின்றது. வுன்னி யுத்தம் முடிவடைந்து ஓராண்டு ஆகின்ற நிலையிலும் இவர்களுடைய எதிர்காலம் நம்பிக்கையானதாக இல்லை. 

இந்நிலையில் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இளம் பெண்களில் சிலர் குழந்தைகளைப் பிரசவித்திருப்பதாகவும்  தகவல்கள் வெளியாகியுள்ளன.  ஒன்பது மாதங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இளம்பெண்கள் குழந்தைகளைப் பிரசவித்திருப்பது  பொதுமக்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இது இவ்வாறிருக்க, பூனகரி இரணைமாதா நகரில் மீள்குடியேற்றபட்ட குடும்பங்களில உள்ள சுமார் எட்டு திருமணமாகாத  இளம்பெண்கள் காப்பிணிகளாகவுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முள்ளிவாய்க்காலில் இருந்து படையினரிடம் சரணடைந்த பெண்களில் கர்ப்பிணித் தாய்மாரும் அடங்கி இருந்தனர். இப்பெண்களில் திருமணமாகாத இளம்பெண்களும் உள்ளடங்கி இருந்ததாக புனர்வாழ்வ முகாம்களில் பணியாற்றிய மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர். இத் தகவல் ஊடகங்களில் வெளிவரவில்லை.

ஆனால் தற்போது, பூனகரி இரணை மாதா நகரில்  மிள்குடியேற்றப்பட்டவர்களில் 9 வரையான யுவதிகள் திருமணமாகாமல் காப்பிணியாகி உள்ளனர். இவர்களை படையதிகாரிகள் விசாரித்த போது, 7பேர் இதற்கு காரணமாக இராணுவச் சிப்பாய்களை அடையாளம் காட்டியுள்ளதாக அப்பகுதியில் இருந்து கிடைக்கும் தகவல் ஒன்று தெரிவிக்கின்றது. மற்றைய இருவருக்கு யாரை அடையாளம் காட்டுவதென்பது முடியாமல் போய்விட்டதாகவும் அச்செய்தி மேலும் தெரிவிக்கின்றது. இராணுவத்தினருடனான இப்பெண்களின் உறவு அப்பெண்களின்  விருப்பத்துடன் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரியவருகின்றது. ஆயினும் முகாம்களுக்குள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுடைய இயலாமை பலவீனங்களை இராணுவம் தங்களுடைய திருப்திக்கு பயன்படுத்திக் கொள்கின்றது என்ற நியாயமான குற்றச்சாட்டு தமிழ் சமூகத்திடம் உள்ளது.

பெண்களுடைய இயலாமையையும் பலவீனத்தையும் தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்கின்ற போக்கு இராணுவத்தில் மட்டுமல்ல அதற்கு வெளியேயும் சமூகத்திலும் காணப்படுகின்றது. தமிழ்ப் பெண்கள் மீதான ஆணாதிக்க ஒடுக்குமுறைக்கு இராணுவத்தாலும் தங்கள் சொந்த சமூகத்தாலும் உள்ளாக்கப்படுகின்றனர். வெளிநாட்டு முகவர்களின் பிடியில் பெயர் தெரியாத நாடுகளில் தமிழ் பெண்கள் இயலாமை பலவீனம் காரணமாக முகவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப செயற்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு இருந்தனர்.

கடந்த முப்பது ஆண்டுகால யுத்தம் தமிழ் பெண்களின் சமூக வாழ்நிலையை மிகவும் பாதித்து உள்ளது. தொடர்ச்சியான இடப்பெயர்வும் முகாம் வாழ்வும் அவர்களது கல்வியை வாழ்வாதாரங்களை இழக்கச் செய்துள்ளது. இவற்றுடன் யுத்தம் காரணமாக அல்லது யுத்தத்திற்காக விரும்பியும் விரும்பாமலும் சென்ற அல்லது கொண்டு செல்லப்பட்ட ஆணுறவுகள் இழக்கப்பட்டு அவர்கள் வாழ்வாதாரம் இன்றி பரிதவிக்க விடப்பட்டுள்ளனர். இவர்களுடைய இந்த இயலாமையும் பலவீனமும் அங்குள்ள வேறுபட்ட ஆணாதிக்க பிரிவுகளாலும் பயன்படுத்துகின்ற நிலை அங்குள்ளது.

ஆனால் சமூகம் இந்நிலையின் ஆழ அகலத்தை உணர்ந்துகொள்ளாமல் ‘கலாச்சாரச் சீரழிவு’க்கு இப்பெண்களையே குற்றம்சாட்டுகின்ற தன்மை இன்னமும் மாறவில்லை.

தற்போது மீள்குடியேற்றப்படும் மக்களுக்கான குடிசைளை  அமைப்பதற்கு ஒரு குடும்பத்திற்கு நான்கு இராணுவத்தினர் உதவியாக அனுப்பப்படுகின்றனர். இது இராணுவத்தினருக்கும் அக்குடும்பங்களுக்கும் இடையே  நட்புறவையும் நெருக்கத்தையும் ஏற்படுத்துகின்றது. ஆண்களுடன் ‘மச்சான்  ஐஞ்சு மணிக்கு தண்ணி அடிப்பம்’ என்று கூடி உறவாடும் நிலை சில இடங்களில் ஏற்பட்டு வருகின்றது. இதே போன்று இளம் வயதினரான இராணுவ இளைஞர்களுக்கும் அக்குடும்பங்களிலுள்ள பெண்களுக்கும் நட்பு ஏற்படுகின்றது. இந்நட்பு வேறுபட்ட வகைகளில் வெளிப்படுத்தப் படுவதற்கான சூழல் ஒன்று உருவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான தொடர்புகள் சமூகத்தின் ஒரு பிரிவினரால் ஒரு கலாசார சீரழிவிற்கு இட்டுச்செல்வதாகப் பார்க்கப்படுகின்றது. மீள்குடியேற்றம் செய்யப்படுகின்ற பகுதிகளில் விரைவில் சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்படாத வரை இராணுவ முகாம்கள் மக்கள் குடியிருப்புகளில் இருந்து அகற்றப்படாத வரை  இந்நிலைமைகள் தொடரும் வாய்ப்புகளே அதிகம் உள்ளது.

கிளிநொச்சி முல்லைத்தீவு வணிகர்கள் தங்களுக்கான நட்டஈடு படிவத்தை தாமதமின்றி பூர்த்தி செய்து ஒப்படைக்குமாறு அறிவிப்பட்டுள்ளது!

கிளிநொச்சி, முல்லைத்தீவு வணிகர்கள் தங்களுக்கான நட்ட ஈட்டினைப் பெற்றுக்கொள்வதற்கான படிவங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை இந்த நட்டஈட்டுப் படிவத்தை பூர்த்தி செய்யாத வணிகர்கள் அதற்கான படிவங்களைப் பெற்று எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஒப்படைக்குமாறு கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட வணிக, கைத்தொழில், வேளான் ஒன்றியம் அறிவித்துள்ளது. கிளிநொச்சி மாவட்ட வணிகர்கள் கிளிநொச்சி கனகபுரத்திலுள்ள இலக்கம் 13, 2ஆம் பண்ணை எனும் முகவரிலும், முல்லை மாவட்ட வணிகர்கள் முதலாம் யுனிற், யோகபுரம், மல்லாவி எனும் முகவரியிலும் உள்ள அலுவலகங்களில் இப்படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்குமாறு இவ்வொன்றியம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதே வேளை, இறுதிக்கட்டப் போர் நடைபெற்ற பகுதிகளிலிருந்து மீட்கபட்டு, கிளிநொச்சியில் வைக்கப்பட்டுள்ள ஐயாயிரம் மோட்டார் சைக்கில்களில் நூறு மோட்டார் சைக்கிள்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும், ஏனையோர் தங்கள் மோட்டார் சைக்கில்களை அடையாளம் காட்டுவதற்கா கால அவகாசம் எதிர்வரும் 15ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருப்பதாகவும், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ரூபவதி கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். இறுதிக்கட்ட யுத்தம் நடைபெற்ற புதுக்குடியிருப்பு,  மாத்தளன், அம்பலவன் பொக்கணை, வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகளில் பொதுமக்களால் கைவிடப்பட்ட ஐயாயிரம் மோட்டர் சைக்கிள்களும், ஏழாயிரம் சைக்கில்களும் முதற்கட்டமாக மீட்கப்பட்டு உரியவர்களிடம் கையளிக்கப்பட்டு வருவதாக வடமாகாண ஆளுநர் ஜி,ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

வவுனியா முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளவர்களில் 17 ஆயிரம் பேர் எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளனர்

வவுனியா நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளவர்களில் 17 ஆயிரம் பேர் எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் மீளக்குடியமர்த்தப்பட உள்ளதாக வவுனியா அரசாங்க அதிபர் திருமதி எஸ். சுhர்ள்ஸ் தெரிவித்தள்ளார்.இதே வேளை வவுனியா மாவட்டத்திலுள்ள அதிஉயர் பாதுகாப்பு வலயமாகக் கருதப்பட்ட சில பகதிகளிலிருந்து இராணுவம் தமது முகாம்களை அகற்றும் பணியினை ஆரம்பித்துள்ளதாகவும் இதில் முதற் கட்டமாக பேயாடி கூழான்குளம் முகாம் அமைந்த பகுதியில் 60 குடும்பங்கள் மிளக்குடியமர்த்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் மீள்குடியேற்றம்!

முல்லைத்தீவு மாவட்டத்திற்குட்பட்ட 31 கிராமசேவகர் பிரிவுகளில் எதிர்வரும் 10ஆம், 12ஆம் திகதிகளில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என முல்லை மாவட்டத்தின் அரசாஙக அதிபர்  திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.  கரைதுறைப்பற்று பிரதேசச் செயலர் பிரிவிலுள்ள 18 கிராமசேவகர் பிரிவகளில் முதற்கட்டமாக மிள்குடியேற்றம் நடைபெறவள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வவனியாவில் முகாம்களிலிருந்து வெளியேறி நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் வசித்துவரும் மக்கள் எதிர்வரும் 10ஆம், 12ஆம் திகதிகளில் காலை 7 மணிக்கு வவுனியா நகரசபை மைதானத்திற்கு வருகை தருமாறு முல்லை மாவட்ட அரசாங்க அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.