கவிதைகள்

கவிதைகள்

காற்றைக் கரியாக்காதே: நோர்வே நக்கீரா.

oslo-city-bus-norwayகாற்றைக் கரியாக்காதே- (குறியீட்டு படிமக்கவிதை)

பெருமூச்சு விட்டபடி
பேருந்து ஊருந்தும்.
ஊரெங்கும் உள்ளுந்தும்.
எம்மைச் சுமந்த கூலிக்காக
எம் உயிர்மூச்சை
ஊதியம் கேட்கும்.

உலகம்
உருண்டு கொண்டே இருக்கிறது.

தரிப்பு நிலையமொன்றில்
தலைசுற்றிய
தலையில் சுற்றிய
ஒரு ஈராக்கியத்தாய்
ஆணாதிக்க மதத்தின்
அடிமையாய் ஏறினாள்.
அம்மா என்றழைத்தபடி
பாலர் பாடசாலை ஒன்றே
அவளில் தொங்கிக் கொண்டிருந்தது.

அவள் தன்மொழியிலும்
ஓட்டுணரோ நோர்வேயின் மொழியிலும்
ஏதோ புரிந்தும் புரியாததுமாய்
தலையை
அங்குமிங்கும் ஆட்டிவிட்டு
ஓட்டுணர் ஓடினார்
ஓடாத இடம் தேடி

உலகம்
உருண்டு கொண்டே இருக்கிறது.

அடுத்த தரிப்பில்
இன்னொருத்தி தலையில் கூடாரத்துடன்…
பயணிகள்
மூக்குகளை பொத்திக் கொண்டார்கள்
குசினியையே
கூடாரத்துள் கூட்டி வந்திருக்கிறாள்

கண்மட்டும் தெரியுமாறு
ஒருகாப்பிலிப் பெண்
வெளியில் மூன்று
வண்டிக்குள் ஒன்று
அவள் வண்டிக்குள்ளும் ஒன்று.

உலகம்
பாரம் தாங்காது
உருண்டு கொண்டே இருக்கிறது.

அருகிருக்க வெறுக்கும்
கறுப்பனென்னருகில்
அழகான ஒருத்தி.
நிரம்பிவிட்டது என்மனம்போல் பேருந்தும்
இருக்கை சொர்க்கமானது எனக்கு.

திரும்பிப்பார்க்கிறேன்
இசைகேட்கும் சாட்டில்
காதுகளை அடைத்து
செவிப்புலனைக் காவு கொடுத்திருந்தது
செவிட்டுச்சமூகம்
இவர்களிடமா?
எம்மக்களைக் காப்பாற்று என்று
கேட்டோம்.
கேட்குமிடமறிந்து கேட்காததால்
வந்த வினை
நந்திக்கடலில் முடிந்ததே

உலகம்
சுமையுடன் சுற்றிக்கொண்டே இருக்கிறது.

பட்டையும்
சொட்டையுமாய்
நாறல்பாக்குப் போட்டு
நாறடித்துக் கொண்டிருந்தான்,
பிரம்மமறிய வேண்டிய ஆனால்
பிரபஞ்சமேயறியாத பிராமணி

உலகம்
சுமையுடன் சுற்றிக்கொண்டே இருக்கிறது.

உள்ளேயும் மொட்டை
வெளியேயும் மொட்டையாய்
ஒரு ஆமுத்துறு
ஆத்திரப்படுகிறான்
மதகுருமாருக்கு இடமெங்கே?
மதம்
மதம் பிடித்து நிற்கிறது

உலகம்
சுமையுடன் சுற்றிக்கொண்டே இருக்கிறது.

பூச்சடித்த சப்பறமாய்
ஒரு வெள்ளைக்காரக்கிழவி
ஏறிக்கொள்கிறாள்
உலக வரைபடத்தின்
எல்லைக்கோடுகள் அவள் முகத்தில்.
எழும்பி இடம்கொடுத்தேன்
முறைத்தபடி கேட்டாள்
”வயது போய்விட்டது என்று எண்ணுகிறாயா?
நான் சமாளிப்பேன்”

அந்திமகாலம் வரையப்பட்ட
முந்தியவயது பெண்டிர்க்கு –
தாரமாகத் துடிக்கும் தாரகைக்கு –
என்மரியாதை மானக்கேடுதான்.

அடங்கி அமரமுன்
ஆமுத்துறு பாய்ந்து கொண்டான்
என்னிருக்கையில்

உலகம்
சுமைதாங்காது சுற்றிக்கொண்டே இருக்கிறது

வேதமறியா பாதிரி
பாதி வேதம்கொண்டு
ஊதிஊதி ஓதுகிறான்
பேருந்தில்

உலகம்
சுமைதாங்காது சுற்றிக்கொண்டே இருக்கிறது

காதலர்கள் கைகளை
இறுகப்பற்றியபடி
இருக்கையிலும்
வெளியே நடக்கையிலும்…
கையை விட்டால்
ஓடிவிடுவார்களோ?
சந்தேகத்தில் காதலும் குடும்பமும்.

நெரிசல்
சனநெரிசல்
மனநெரிசல்
காற்றெடுக்கும் கரியமிலவாயு
கண்களை உருட்டியது
யன்னலை திறந்து
பார்வையை எறிந்தேன்
கண்டகாட்சி வெருட்டியது

வானத்தைப் பழுக்கவைக்க
படுத்திருந்து
சுருட்டடித்துக் கொண்டிருந்தன
தொழிற்சாலைகள்
ஓசோன் ஓட்டையூடு
சுருட்டைப் பிடித்துத்தான்
யமன்
பூமிக்கு வருவானோ?

காலச்சக்கரம் காற்றின்றி
வெடித்துச்சிதற
ஞாலச்சக்கரம் பிரளத்தொடங்கியது
உச்சி மலையில் இருந்து
பாதாளத்துள்

உலகம்
சிதறத்தொடங்கியது
காற்றைக் கணக்கெடுக்காததால்
கரியாய் போன காற்றால்
காலனின் கையில்
கலண்டர் முடிந்தது.

வானம் அழுது……….. : நோர்வே நக்கீரா

idp tamils

வானம் அழுது……..

அழுது கொண்டிருக்கிறது வானம்
நிந்திக்கப்பட்ட நிலத்தையும்
வஞ்சிக்கப்பட்ட வன்னிமக்களையும் எண்ணி.

அநியாயங்கள் கண்டும் அழாதுபோன
அகிலத்தின் கண்களில்
கண்ணீர் வற்றியதால்
வேலிக்கம்பியில் கன்னம் உரஞ்சி
கண்ணீர் எடுக்கிறார்கள் எம்குழந்தைகள்.
வெளியிலுள்ள புல்லை மேய
கம்பிவேலிக்குள்ளால் தலை நீட்டும்
ஆடு மாடுகள்போல்
தமிழ் மனித மந்தைகள்.

அழுது கொண்டே இருக்கிறது வானம்.
பெற்றோரைத் தொலைத்த பிள்ளைபோல்
வையத்தில் மனிதத்தைத் தொலைத்த வானம்.

வெள்ளத்தில் குமிழிகள்
அம்மையாக
எம்மக்கள் முகத்தில்.

கந்தகக்காற்றை சுவாசித்தே
வைரம்பாய்ந்து கறுத்துப் போன
கருங்காலிக்கட்டைத் தேகங்களில்
பற்றீரியாக்கள், வைரசுகள்
தம்கொடுக்குகளைச் சாணை பிடிக்கின்றன.

இராணுவத்தின் குண்டுக் கொட்டலுக்கும்
புலிகளின் பச்சைமட்டையடிக்கும்
பழுத்தும் பலியாகாச் சிரஞ்சீவிகளை
புத்தனின் பொக்கைவாய் பதம்பார்க்கிறது.
புத்தம் புத்தெடுத்திருக்கிறது பொய்களாக.
புத்தம் இனி பத்தும் செய்யும்.

பட்டி கட்டி வாழ்ந்த இனமொன்று
மேய்ச்சல் மறுக்கப்பட்டு
சேறு சகதிகளுக்குள்
பட்டிகட்டி விடப்பட்டிருக்கிறது
நோய்கள் நொடிகள்
குட்டிபோட்டு நடமாட.

வானம் பிசிறி அடிப்பதை
பார்த்துப் பார்த்தே
குழந்தைகளில் இருந்து
கிழடுகள் வரை
வயிற்றிலடிபட்டு
வயிற்றாலடிக்கிறார்கள்.
கொலரா என்பார்கள் வைத்தியர்கள்
கொல்லாது என்கிறதே பொல்லாத அரசு.

எலும்புக் கூடுகளிலேயே
காமம் கொள்ளும்
காக்கிச்சட்டைக்காரர்கள்
கம்பிவேலிகளுக்குக் காவல்.
பிணங்கள் மேலேயே
புணரத்துடிக்கிறதா புத்தம்.

சரியான மேய்ப்பனின்றி
மேயப்பட்ட இனம்
கம்பிவேலிகளின் பின்னால்
புதிய மேய்ப்பனைத் தேடுகிறது.

ஆண்டாண்டு காலமாக மனதில்
அடிமைவிலங்கோடு மேய்க்கப்பட்ட இனம்தானே.
மேலைநாட்டவனை அண்ணாந்து பார்த்தாலும்
அவன் மேய்ப்பனாகவும் இல்லை
காப்பனாகவும் இல்லை.

புலிக்குட்டிகள் சிங்கப்பால் குடித்து
அகதிகள் முகாமுக்குள்ளேயே
புலி வேட்டையாடுகிறார்கள்.
கிலிசகெட்ட இனம் என்று
மண்ணில்லாக் காரணத்தால்
சேறுவாரி எறிகிறாள் ஒரு கிழவி.

வானம் மட்டும் வஞ்சகமில்லாது
அழுதுகொண்டிருக்கிறது
தன் ஆசைதீர எம்மக்கள் மனம்போல்.
இனி வஞ்சகங்களுக்கு வரட்சி இல்லை.

பொம்மை! : நோர்வே நக்கீரா

பொம்மை

Valentine’s Day Barbie
அங்கமெல்லாம் தங்கம் பூட்டி
சருகைச்சேலைகள் சரசரக்க
அழகு காட்டி
கோவில்சப்பறம்போல்
பெண்டிர் எங்கு போகினம்?

கண்ட நிண்ட கலர்களில்
கோட்டும் சூட்டும்
மாறிச்சாறிப்போட்டுக் கொண்டு
ஜொகிங் ஷூ(ஒடுகாலணி)வும் மாட்டிக்கொண்டு
ஆண்கள் எங்கு போகினம்?

மகிழுந்து காட்ட
மணவறைக்கோ போகினம்?

கமராக்கள் கண்ணடிக்கும்
சந்தையொன்றில்
பிள்ளையென்று சொல்லி
ஒருபொம்மை கொண்டுவந்தார்
தந்தை சிந்தை போலே
ஆடவேண்டும் என்று
பிள்ளையது பொம்மையாய்
என்றுமாக்கப்பட்டது.

வீடியோ எடுக்கவென்றே
பிறந்தநாள் நடக்குது.
காணத இடமெல்லாம்
கண்டு கழித்துப்போகுது.
வடிவான பெண்கண்டால்
நின்று அங்கு மேயுது.

பெற்றோர்கள் கேக்கு வெட்ட
பிள்ளை போஸ் கொடுக்குது.
பிறந்தநாள் பிள்ளைக்கா? பெற்றோருக்கா?
இது பிள்ளையா? பொம்மையா?

பொன் பொன்னாய் பரிசுகள்
போட்டியாய் வந்தது.
போட்டுப்பார்த்து பெற்றோரே இரசிக்கினம்
வளர்ந்து பிள்ளை விரும்பிக்கேட்டால்
சீதனம் எனச் சொல்லினம்.
பெற்றோரின் விருப்புப்படி
பேருக்கும் புகழுக்குமாய் வாழுமிந்த பிள்ளைகள்
பிள்ளைகளா? பொம்மைகளா?

எம்மண்ணில் எம்மக்கள்
அகதியாய் அலைகிறார்கள்
பேரன் பேத்தியும் பசியுடனே
படுக்கிறார்கள்
இங்கேயோ!!!
ஆனைமுதல் பூனைமுதல்
சாப்பாட்டுக் கோப்பையிலே விழுகுது
மூக்கு முட்ட திண்ட சனம்
ஊர்க்கதைகள் கதைக்கினம்.

வீட்டுக்குள்
கருமுகில் கூட்டுக்குள்
சிகரெட்டு நட்சத்திரங்கள்.
புகையடித்தே பிள்ளைகளை
பழுக்க வைக்கிறார்கள் பெற்றோர்.
பிஞ்சில் பழுத்த பழங்களோ இவைகள்!!

அப்பருக்கு சிகரெட்டு
பிள்ளைக்கு சிகரெட்பெட்டி

தண்ணியடித்துத் தவழுகிறார்
பிள்ளையுடன் தந்தை.
தந்தையடித்த குடித்த தண்ணீரில்
குளிக்கிறது பிள்ளை
பாட்டி பிள்ளைக்கா? பெற்றோருக்கா? ஊருக்கா?

கொடுத்த பிறசென்ட்டுக்கு சமனனாய்
தின்று சிலர் தீர்த்தனர்.
தம் வண்டியைத் தள்ளிக் கொண்டு
கார்வண்டிக்குள் போயினர்.

பத்து வயதிலேயே பிள்ளை
பட்டம் பெறவேண்டுமாம்- அதனால்
ஐந்துநாளும் பிள்ளை பாடசாலை போகுது
வந்து பின்னேரம் பாட்டுப்படிக்கப் போகுது.
சனியெங்கும் தனியாகத் தமிழ்படிக்கப் போகுது
ஞாயிறு தோறும் டான்ஸ் பழகப்போகுது.
பிள்ளையா? பொம்மையா?
தொல்லையதற்கு இல்லையா?

கல்யாணச் சந்தையிலே
பிள்ளை விலைபோகுது.
ரூபாயில் சீதனம்
பவுண் டொலராய் ஆகுது.
போட்டோவில் பார்த்தே
மாப்பிளைத் தேர்வும் நடக்குது
பொன்னும், பொருளும் பணமும் கொடுத்து
பெண்ணையும் சும்மா தள்ளிவிடும்போது.
இதைவிட மலிவாக
பொம்மை எங்கு வாங்கலாம்?

பிறப்பு முதல் இறப்புவரை
தன் விருப்புவிட்டு
பேருக்கும் புகழுக்கும் ஊருக்குமாய் வாழும்
இத்தியாகிகளை
பிள்ளையென்பதா? பொம்மையென்பதா

கவிமலர்கள் – கொச்சைவழக்குக் கவிதை

முள்ளி வாய்க்கால் : விஜி

Nanthi_Kadal_lagoon
புல் வெளியும்
கொஞ்ச மரங்களும்
கொண்ட இடங்களெல்லாம்
முள்ளிவாய்க்காலாய்தான்
கண்முன் விரிகிறது.

கடலின் நினைவு
அச்சம் தருகிறது
அதன் ஓ வென்ற
இரைச்சல்; தாண்டி
மனிதர்களின்
மரண ஓலம் மேலெழுகின்றது!

கடல் அறியுமோ
எங்கள் மனிதர்களின்
கண்ணீரின் உப்பையும்
குருதியின் அடர்த்தியையும்!

எந்தக் குழந்தை
தன் இறுதி மூச்சை
எங்கு நிறுத்தியதோ?
இன்னும் குழந்தைகள்
வழிதவறி அங்கு
அலைந்து திரியுமோ?

நீர்க்கரையில்
பாத்திரங்கள் பண்டங்கள்
சிதறிக் கிடக்கின்றன.
யாருக்காய் அவை காத்திருக்கின்றனவோ?

தனியே தொங்கும்
கைப்பை
சோகமாய் பார்த்திருக்கிறதே
போனவர் எப்போது
திரும்பி வருவாரோ?

புலம்பெயர் தெருக்களில்
இப்போது
சுடு சாம்பல்
காற்றில் மணக்கிறது!
சுற்றிலும்
மரண ஓலம் ஓயாது
துரத்துகிறது!

எந்தக்காலம் இனி
முள்ளிவாய்க்கால்
தன்
கதை பேசும்?

 விஜி

வசந்தம் போதும் எமக்கு! : தானிஸ் அஷ்ரப்

வசந்தம் போதும் எமக்கு

வடக்கு வெழுத்தது
வசந்தம் கிடைத்தது
வழக்கு ஜெயித்தது
கணக்கும் முடிந்தது
நினைக்கும் போதெல்லாம்
நெஞ்சம் வலிக்கிறது…
உனக்கேன் வீண் பாட்டு
உடனே நிப்பாட்டு.

சுணங்கும் வேளையில்
இனங்கள், சனங்கள்
சுகங்கள் இன்றி
சுருளும் மடியும்
உனக்கேன் வீண் பாட்டு?
மனங்களை மாற்று
மறுவாழ்வு காட்டு!

புலர மறுக்கும் பொழுதெல்லாம்
தருமா வசந்தம்?
கதறும் குழந்தைக்கும்
பதறும் அன்னைக்கும்
அறுந்த உறவுக்கும்
பிரிந்த உயிருக்கும்
தெரிந்தால் கூறும்
தெவிட்டாத வசந்தம்?

இனியும் ஒரு யுத்தம்
இம்மண்ணில் வேண்டாம்
கனியும் ஒரு காலம்
காலடிக்கே வந்தது
தயவு செய்து
தரும போதனைகளை
மர்ம சாதனைகளாக்க வேண்டாம்
கர்ம வீரர்கள் மட்டும்
புறப்படட்டும்
காரியம் நடக்கட்டும்.

மானம் வேண்டுவோரின்
ஞாயங்களை
வாழவிடனும்
அப்போ
வானம் எங்கும்
வெள்ளி பொங்கி
கானம் பாடும்
காரிருள் தேயும்
காற்றுத் தழுவும்
வசந்தம் போதும் எமக்கு!

ஆக்கியோன்
தானிஸ் அஷ்ரப்

‘துர்ப்பாக்கிய துப்பாக்கிகள்’. ‘தம்பி வருவான்’ – நோர்வே நக்கீரா

warpoems-pict.gif

துர்ப்பாக்கிய துப்பாக்கிகள்

கண்ணீராலே கருக்கட்டி
கருத்துக்களைச் சப்பித்துப்பி
தலைகீழாய் நின்று துள்ளும்
பத்திரிகைகளில் இரத்தம் சொட்டும்
பேனாக்களை ஏன் சுட்டீர்கள்.

கருத்தில்லாதவன் களத்தில் நின்றால்
கருகிப்போவது கருத்துக்கள் மட்டுமல்ல
உயிர்களுக்கும் உலைவைப்புத்தான்.
ஏட்டறியாதவன் எடுத்த துப்பாக்கியால்
ஏழுலகெங்கும் போர்க்களமாகும்

கருத்தற்றவனே உருக்கெடுப்பான்
கருவின்றிப் பிறந்தவர்களா நீங்கள்?

நீதியின் வாசலைத் திறந்தது குற்றமா?
உண்மையை உலகிற்கு உணர்த்துவது குற்றமா?
ஏழைகள் உடலிலும் வயிறுண்டு என்பது குற்றமா?
ஆழியில் போய் அழிந்து விடும் ஆற்றினை
அள்ளுரைக் கழுவத் திருப்பியது குற்றமா?

பெண்களையும் நாங்கள்; மனிதர்கள் என்றோம்
பாமரமக்களுக்குப் பகுத்தறிவு கொடுத்தோம்
ஆதிக்க வெறியரின் ஆணிவேரை உடைத்தோம்.
மதங்களைக்காட்டி மதங்கொண்டு திரிவோரை
மக்களுக்குக்காட்டினோம்.
அறிவை ஊட்டினோம்.
எது குற்றம்?

சுடுகோல் கொண்டு
நாட்டைச் சுடலையாக்கும்
கொங்கோலர் கொடுமையை சுட்டிக்காட்டினால்
சுடுகோல் ஏன் சுடுகிறது?

பாட்டில் கிடந்த சுடுகோல்களை
தூக்கி நிறுத்திய தூண்கள் நாங்கள்.
எழுத்துக்களாலே எழுந்தவர்கள் நீங்கள்
கைகொடுத்தவன் கைகளை அறுக்கும்
கயமையை நீர் எங்கு கற்றீர்.

எம்பேனாக்கள் முன்னால்
உம் பேய் நாக்கு பொய்யாகும்.
எழுத்துக்களின் எழுச்சியில்
ஏழு உலகும் உயிர்க்கும்.
பேனாவில் நின்றே சேவல்கள் கூவும்
பேனாவின் கூர்மையில் சூரியன் சிவக்கும்
அறியாமை இருள் அன்றே அகலும்.

மண்ணில் வீழ்ந்த எழுத்தாளர் உதிரம்
போனாவூடு புறப்படுமானால்
துப்பாக்கியரே!
பேனாய்போவீர்.
தலைகள் தேடும் பேனாப்போவீர்
நகங்களிடையே நசிங்கிப்போவீர்.

துப்பாக்கிச் சிறைக்குள்ளும்
பேனாக்கள் உயிர்க்கும்.
எம் எழுத்துக்கள் எங்கும் எழுந்து சிரிக்கும்.
மீண்டும் துப்பாக்கிகள் குப்புறக்கிடக்கும்
புதியதொருயுகம் பெருமையுடன் பிறக்கும்.

தம்பி வருவான்

இருண்ட குடிலுக்குள் என்றும்
ஈரமான இரவுகள்
ஈரமான இதயத்தால் ஒழுகும்
கண்ணூடு வெள்ளங்கள்
நேசம் நெஞ்சை நெருட
பாசம் வழியும் கண்களால்

நம்பிக்கை எனும் நூல்திரியில்
நடுங்காது சுடர்விடும் விழிவிளக்குகள்
“தம்பி வருவான்”
விழிச்சுடரை இமைமூடி அணைத்தாலும்
பாசச்சுடர் சுட்ட
இமை அணைய மறுக்கும்.
இரவும் பகலுமாக எரிந்து கொண்டிக்கும்
அகல்விளக்காய் விழிவிளக்குகள்.

தாடைகளுள் பிடிபட்டாலும்
நாக்கு நடக்கிறதே வதந்தி கொண்டு.
தாடைகளில் இல்லாவிடில்.. .. ..
நாடே காடுதான்.

“படிக்க முடியாதாதவன் ஓடிப்போனான்”
“எந்தப் பெட்டையோடையோ.. .. ?
“வங்கிக் கொள்ளையாம்”
“பொலிஸ் தேடுது”
“.. .. .. .. .. .. .. .. .. .. .. ”

கேள்வி கேள்விகளாய் வேள்விகள்..?..?..?
நாக்குகள் வெத்த வெடிகளில்
காதுகள் சிதறின.

நம்பிக்கை மட்டும் கண்வித்திருந்தது
“தம்பி வருவான்”

பேயாடும் நடுநிசியில் நாயோடி வரவேற்கும்
சப்பாத்துச் சத்தங்கள் சருகுக்குள் சத்தம் கேட்கும் வேளை
தாயைத்தேடிக் கன்று “அம்மா.. அம்மா”
தம்பி வந்திட்டான்.. .. தம்பி வந்திட்டான்
அம்மாவின் ஒருசிறங்கை சாதத்துக்காய்
தம்பி வந்தான்

சோற்றுக்குள் சிக்கியது தொண்டை.
விக்கல் தக்கியது தாயின் விம்மலுக்குள்.
தண்ணீர் கொடுத்தாள்; தாய்
கண்ணெனும் உப்புப்பாறையில் எடுத்து.

உரையாடலைக் கேட்க இரவுக்கு நிசப்தம்
காற்றுக்குக் கூடக் காது முளைத்துக் கொள்கிறது.
“ஏன், எங்கே, எதற்கு போனாய்”
“என்ன செய்கிறாய், செய்யப்போகிறாய், என்ன குறை உனக்கு”
கேள்விகள் வளர
காது கேள்வியாகியது?.?. ?

“விடுதலை, போராட்டம், எதிர்காலம், சமூகம், மண், மக்கள்,
அஜாரம், ஆதிக்கம், வெறி, பாசிசம், மார்கிசம், நாகரீகம், உயிர்
ஊழல், தரப்படுத்தல், தமிழ்ஈழம், அரசியல்.. .. ”

தாயின் தமிழ் அகராதியில் இல்லாத சொற்களை
அவள் எங்கே தேடுவாள்
சருகுகள் காற்றில் அகராதிதேட
காலனின் நினைவு அவன் கருத்துள்.

கருநிழலாய் கலைக்கும் காலன் கைவிடுவது இரவில் மட்டும்தானே
நாய்களின் செய்தியால் நகரத்தொடங்கினான்

“இனி எப்படா வருவாய்”
“தமிழ்ஈழத்தோடை”
“அது என்ன தமிழ்ஈழம்.. என்ன சாதி பெட்டை”
“பெட்டையோ”?
“யாரெண்டாலும் நல்லவளா, குடும்பப்பாங்காய் கொண்டுவா”
அவனை இருள் விழுங்கியது.

இருள் அகற்றும் அகல்விளக்குடன்
விடியும் வரை காத்திருக்கும் விதவைத்தாய்
“தம்பி வருவான்”
காத்திருப்பு தொடர்கிறது.

ஓமந்தையின் ஒரு கொட்டிலில் ஒரு வெடிச்சத்தம்.
நிசப்த்தத்துள் ஒரங்க நாடகம் நிறைவேறியது
நாடகம் “ஒர் உயிரின் நிசப்தமானது”.
தமிழ்ஈழம் தரையில்.
ஈழத்தரையில் விதைக்கப்பட்டான்
முளைக்கவில்லை.
எதிரி வென்றுவிட்டான் தோழனாக.

காதில் விழுந்த வெடிச்சத்தம்
தாயின் நெஞ்சைச் சேராது.
நம்பிக்கை.. ..
நம்பிக்கை தானே வாழ்க்கை.
“தம்பி வருவான்”
என்ற நம்பிக்கை இன்றும் அவளுக்கு.

முப்பது வருடங்கள் முடிந்தும்
தமிழ்ஈழத்துடன் “தம்பி வருவான்” என்ற நம்பிக்கையுடன்
மூச்சுவிடுகிறாள் அந்த முதிர்ந்த தாய்.

‘பங்கருக்குள் இருந்து ஒரு மூச்சுக்காற்று’- தம்பா

பங்கருக்குள் இருந்து ஒரு மூச்சுக்காற்று

கனரக பீரங்கிகள்போல் அதிர்ந்து எழுகின்றன
பேச்சுக்கள்.
தலைக்குமேல் ’செல்’ போல் கூவிச் செல்கின்றன
அறிக்கைகள்.
’கிளஸ்தர்’ குண்டுகள் போல் சிதறி விழுகின்றன
உறுதி மொழிகள்.

கூத்தும் கரணமும்
இது ஒரு தேர்தல் காலம்;
இழப்பும் அவலமும்
எமக்கு யுத்தகாலம்.

நேற்றைய பேச்சு
இன்று இல்லை
இன்றைய உயிர்
நாளை இல்லை.

நாங்கள் இழப்பது
நீங்கள் பெறுவதற்கு
இழப்பதோ உயிர்கள்
பெறுவதோ வாக்குகள்.

போதும்!

எதிர்பார்த்து ஏமாந்து போவதிலும்
எதிர்கொண்டு எழுவதே மேல்.

– தம்பா