எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

கடல் எல்லை தொடர்பாக சார்க் மாநாட்டில் எந்தவொரு தீர்மானமும் எட்டப்படவில்லை – பாராளுமன்றத்தில் அமைச்சர் தினேஷ்

denees.jpgஇந்திய, சர்வதேச ஒப்பந்தங்களுக்கு அமைவாக இலங்கைக்கு சொந்தமான கடல் எல்லையில் மாற்றங்கள் ஏற்படும். எனினும், சார்க் மாநாட்டில் வடக்கு கடல் எல்லை தொடர்பாக எந்தவொரு தீர்மானமும் எட்டப்படவில்லையென அரச தரப்பு பிரதம கொரடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாவின் போது ஜே.வி.பி. எம்.பி. பேமசிறி மானகே கடற்றொழில் நீரக வளங்கள் அமைச்சரிடம் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது.

இலங்கையின் வடக்கு கடல் வலயத்தில் கடற்கரையிலிருந்து 200 கடல் மைல் தூரம் எமது நாட்டிற்கு சொந்தமானதாகும். இதில் பருத்தித்துறையிலிருந்து கிழக்காக 16 கடல் மைலும் காங்கேசன்துறையிலிருந்து கிழக்காக 15 கடல் மைலும் திருகோணமலையிலிருந்து கிழக்காக 122 கடல் மைலும் முல்லைத்தீவிலிருந்து கிழக்காக 28 கடல் மைலும் உள்ளடங்குகின்றது.

இலங்கையின் கடல் எல்லைக்குள் மீன் பிடித்த இந்திய மீனவர்களின் 66 படகுகள் தொடர்பிலான வழக்கு யாழ். நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. எல்லை தாண்டியதாலேயே இவை கைப்பற்றப்பட்டன.  இதன்போது குறுக்கிட்ட ஜே.வி.பி. எம்.பி. பேமசிறி மானகே, இலங்கையின் கடல் எல்லையின் தூரம் நீங்கள் கூறியதை விடவும் அதிகமாக இருந்ததென்பதை ஏற்றுக்கொள்வீர்களா என்று அமைச்சரிடம் கேட்டார். இதற்கு பதிலளித்த அமைச்சர், இந்திய, சர்வதேச ஒப்பந்தங்களுக்கு அமைவாக கடல் எல்லைகளில் மாற்றங்கள் ஏற்படும் எனினும்,வடக்கு கடல் எல்லை தொடர்பில் சார்க் மாநாட்டில் எந்தவொரு தீர்மானமும் எட்டப்படவில்லை என்று தெரிவித்தார

ஐ.சி.ஆர்.சி.யின் ஒத்துழைப்புடன் பாதுகாப்பு வலயத்திற்கு வன்னி மக்களை அனுப்புவதற்கு நடவடிக்கை

red_cross.jpgவன்னிப் பிரதேசத்தில் உள்ள மக்களை அரசு புதிதாக அறிவித்துள்ள பாதுகாப்பு வலயத்தினுள் அனுப்பி வைப்பதற்குரிய ஒத்துழைப்பை பெற்று கொள்வது தொடர்பாக சர்வதேச செஞ்சிலுவைக் குழுவின் வவுனியா பிரதிநிதியுடன் வன்னிப்பிராந்திய இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய பேச்சுகள் நடத்தியுள்ளார். கடந்த புதன் கிழமை வவுனியா இராணுவத் தலைமையகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. சர்வதேச செஞ்சிலுவைக் குழுவின் வவுனியா அலுவலகத் தலைமையதிகாரி வலரி பெட்டிட்டியருக்கும் வன்னி இராணுவத் தளபதிக்கும் இடையிலான இந்தச் சந்திந்திப்பின்போது, அரசாங்கம் அறிவித்துள்ள பாதுகாப்பு பிரதேசத்தில் இருந்து விடுதலைப் புலிகள் படையினர் மீது தாக்குதல்களை நடத்துவதை நிறுத்துவது, விடுதலைப் புலிகள் பொதுமக்களைக் கேடயமாகப் பயன்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பின் போது முல்லைதீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும் விபரங்களை உள்ளடக்கிய அறிக்கையொன்றைத் தருமாறு வன்னிப்பிராந்திய இராணுவத் தளபதி சர்வதேச செஞ்சிலுவைக்குழு அதிகாரியிடம் கேட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதேவேளை, வன்னிப் பிரதேசத்திற்கான உணவு மற்றும் அத்தியாவசிய உணவு விநியோகம் தொடர்பான தற்போதைய நிலைமைகள் குறித்து உலக உணவுத்திட்ட அதிகாரியுடனும், வன்னிப் பகுதியில் உள்ள மக்களின் மனிதாபிமான தேவைகள் குறித்து வவுனியாவில் உள்ள ஐ.நா. வின் அகதிகளுக்கான தூதரக அதிகாரியுடன் பேச்சுகள் நடத்தியதுடன் போர்ப்பிரதேசத்தில் உள்ள மக்களை பாதுகாப்பாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு அழைத்து வருவது குறித்தும், வன்னிப்பிராந்திய இராணுவத்தளபதி பேச்சுகள் நடத்தியுள்ளார்.

இனப்படுகொலைக்கு சர்வதேச சமூகம் ஆதரவா? கஜேந்திரன் எம்.பி. கேள்வி

வன்னியில் இடம்பெற்று வரும் இனப்படுகொலையை சர்வதேச சமூகம் கண்டிக்காதிருப்பது, படுகொலைகளுக்கு ஆதரவழிப்பதாகவே இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி. செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார். திட்டமிட்டு நடத்திய ஷெல் தாக்குதலில் முல்லைத்தீவு வைத்தியசாலை பலத்த சேதமடைந்துள்ளது. முல்லைத்தீவில் இயங்கிவந்த பொது வைத்தியசாலை இராணுவ நடவடிக்கைகள் காரணமாக இடம் பெயர்ந்து புதுக்குடியிருப்பு உதவி அரசாங்க அதிபர் பிரிவிலுள்ள மக்கள் செறிந்து வாழும் பகுதியான வள்ளிபுனத்தில் உள்ள பாடசாலையில் இயங்கிவந்தது. வைத்தியசாலை இடம் பெயர்ந்து இயங்கும் இடத்தின் அமைவிடம் பற்றிய விபரம் அனைத்தும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினூடாக இலங்கை அரசுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் கடந்த வியாழக்கிழமை நண்பகல் 12.20 மணியளவில்  இராணுவத்தினர் முல்லைத்தீவு வைத்தியசாலையை இலக்கு வைத்து மேற்கொண்ட ஷெல் தாக்குதல்கள் காரணமாக அந்த வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை கூடத்தினுள்ளும் அதி தீவிரசிகிச்சைக் கூடத்தினுள்ளும் மற்றும் வைத்தியசாலை விடுதி என்பவற்றினுள்ளும் ஷெல்கள் வீழ்ந்து வெடித்துள்ளன. இதன் காரணமாக வைத்தியசாலைவளாகத்தினுள் ஐந்து பேர் கொல்லப்பட்டதுடன் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். தாக்குதல் அச்சம் காரணமாக வைத்தியர்கள், ஊழியர்கள், நோயாளர்கள் அனைவரும் சிதறி ஓடி பதுங்கு குழிகளுக்குள் பாதுகாப்புத் தேட வேண்டிய அவல நிலைக்குள் தள்ளப்பட்டனர். தாக்குதல் காரணமாக வைத்தியசாலை பணிகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்திய கலாநிதி வரதராஜா தெரிவித்துள்ளார். மூன்று நாட்களில் மட்டும் நூறுவரையான பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன். 400 பேர்வரை படுகாயமடைந்துள்ளனர்.

தமிழ் மக்களை முற்றாக அழிக்கும் வகையிலேயே வைத்தியசாலையை இலக்கு வைத்து இவ்வாறான தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இவற்றை சர்வதேச சமூகம் கண்டிக்காது மௌனமாக இருப்பது படுகொலைகளுக்கு ஆதரவளிப்பதாகவே அமைகின்றது. சில தினங்களுக்கு முன் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கையும் இலங்கை அரசு மேற்கொள்ளும் இன அழிப்பு போருக்கு ஊக்கம் வழங்குவதாகவே அமைந்துள்ளது. இலங்கை அரசு மேற்கொண்டு வரும் மேற்படி தாக்குதல்களை மிகவும் வன்மையாகக் கண்டிப்பதுடன் தமிழின அழிப்பைத் தடுத்து நிறுத்த சர்வதேச சமூகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

வெள்ளிக்கிழமை வரை 16 தேர்தல் வன்முறைகள் – அரச வளங்கள் பயன்படுத்தப்படுவதாக விசனம்

ballot-box.jpgதேர்தல் தொடர்பாக இதுவரை 16 வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே) தெரிவித்துள்ளதுடன் மத்தியமாகாணத்தில் கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் தமிழ் பாடசாலைகளின் அதிபர், ஆசிரியர்கள் சகலரையும் கருத்தரங்கென்ற பெயரில் அழைத்து தேர்தல் பிரசாரம் நடத்தியமை தேர்தல் சட்டவிதிகளுக்கு முரணானதாகும் என்றும் சாடியுள்ளது. இது தொடர்பாக அவ் இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் கீர்த்தி தென்னக்கோன் கருத்து தெரிவிக்கையில்;

வடமேல் மற்றும் மத்திய மாகாணசபை கலைக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் செய்யும் திகதி டிசம்பர் 11 இல் அறிவிக்கப்பட்டது முதல் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை வரை 16 தேர்தலுடன் தொடர்புடைய வன்முறைச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் பெருமளவானவை நுவரெலியா மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

நுவரெலியா மாவட்டத்தில் அரசுடன் இணைந்து போட்டியிடும் மலையகமக்கள் முன்னணியும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்கும் போது சிறு சிறு மோதல்கள் இடம்பெற்றுள்ளன. தேர்தல் நெருங்கிவரும் போது தேர்தல் சூடுபிடிக்கும் போது வன்முறைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதேவேளை, அட்டனில் ஜனநாயக மக்கள் முன்னணி மீதும் கண்டியில் ஐ.தே.கட்சி மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது இவ்வாறிருக்க வடமேல் மாகாணத்தில் புத்தளம் மாவட்டத்திலேயே வன்முறைகள் அதிகமாக இடம்பெற்றுள்ளன.

இதற்கு காரணம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் அரசுடன் உள்ள முஸ்லிம் கட்சிகளுக்கிடையில் மோதல்கள் இடம்பெறுவதாகும். இது இவ்வாறிருக்க அரச சொத்துகள் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது. கண்டிமற்றும் நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் பாடசாலைகளை மூடி சகல அதிபர், ஆசிரியர்களை கருத்தரங்கு என்ற பெயரில் அழைத்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது சட்ட விதிகளுக்கு முரணானதாகும் தேர்தலை நீதியாகவும் சுதந்திரமாகவும் நடத்த சகல தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டுமென கோரியுள்ளார்.

ஒபாமாவுக்கு பாகிஸ்தான் எச்சரிக்கை அமெரிக்க உறவு குறித்து மறுபரிசீலனை செய்வோம்

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா பாகிஸ்தானிடம் சாதகமான அணுகுமுறையை கடைப்பிடிக்காவிட்டால், அமெரிக்க உறவு குறித்து மறுபரிசீலனை செய்வோம் என்று அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் உசேன் ஹக்கானி எச்சரித்து இருக்கிறார்.
அமெரிக்காவின் நிதி உதவி வேண்டுமானால், தீவிரவாதத்துக்கு எதிரான போரில் பாகிஸ்தான் முழு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் என்றும் ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்றும் இந்த ஒத்துழைப்பின் அடிப்படையில் தான் நிதி உதவி அளிக்கப்படும் என்றும் ஜனாதிபதியாக பதவி ஏற்ற ஒபாமா தன் வெளிநாட்டுக் கொள்கையில் அறிவித்தார். இது வெளியானதும் பாகிஸ்தான், ஒபாமா மீது பாயத்தொடங்கி உள்ளது.

ஒபாமா தேர்தல் பிரசாரத்தின்போதே அல்கொய்தாவின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்படும். பாகிஸ்தான் அரசு அல்கொய்தா இலக்குகளைத் தாக்கி அழிக்காவிட்டால் பாகிஸ்தானில் உள்ள அல்கொய்தா இலக்குகளை அமெரிக்கா தாக்கி அழிக்கும் என்றும் எச்சரித்து இருந்தார். இதனால் புஷ் மாதிரி ஒபாமா இருக்க மாட்டார் என்பது பாகிஸ்தானுக்கு புரிந்துபோனது. இதனால் தான் அவர் பதவி ஏற்றபோது போட்ட கையெழுத்தின் மை கூட காய்வதற்கு முன்பு அவர் மீது தன் கோபத்தை காட்ட பாகிஸ்தான் தொடங்கி உள்ளது.

அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் உசேன் ஹக்கானி பாகிஸ்தானில் உள்ள ஜியோ டி.வி.க்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது: பாகிஸ்தான் தொடர்பான விஷயங்களில் ஒபாமா பொறுமையை கடைப்பிடிப்பார் என்று பாகிஸ்தான் நம்புகிறது.  பாகிஸ்தானுடன் சாதகமான அணுகுமுறையை அவர் கடைப்பிடிக்காவிட்டால், அமெரிக்காவுடனான உறவு குறித்து நாங்கள் மறுபரிசீலனை செய்போம். புஷ் பாகிஸ் தானுக்கு சாதகமாக இருந்தார். இந்த பிராந்தியத்தில் உள்ள மற்ற பிரச்சினைகள் குறித்தும் அவர் கவனம் செலுத்த வேண்டும் என்றார். நிரூபிக்கவேண்டிய அவசியம் இல்லை பாகிஸ்தான் முப்படைத் தளபதிகளின் தலைவர் ஜெனரல் தாரிக் மஜீத் கூறுகையில், இதுபோன்ற எதற்கும் உதவாத போக்குகளை ஒபாமா கைவிடவேண்டும். தீவிரவாதத்தை ஒடுக்குவதில் பாகிஸ்தான் தன் நேர்மையை அமெரிக்காவிடம் நிரூபிக்க வேண்டிய தேவை இல்லை என்றும் குறிப்பிட்டார்.

சீனாவில் விஷம் கலந்த பால் உற்பத்தி 2 அதிகாரிகளுக்கு மரண தண்டனை

சீன பால் நிறுவனத் தலைவர் உட்பட 2 பேருக்கு தூக்குத் தண்டனையும் பெண் அதிகாரி உட்பட மூன்று பேருக்கு ஆயுள் தண்டனையும் ஏனையவர்களுக்கு 2 ஆண்டு முதல் 15 ஆண்டுகள் வரை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது பீஜிங் நீதிமன்றம். அதன் விபரம் வருமாறு:- சீனாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பல்வேறு நிறுவனங்களில் தயாரான குழந்தை கள் பால் பவுடரில் நச்சுத்தன்மை இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. விஷத் தன்மை உள்ள பால் மற்றும் பால் பொருட்களை சாப்பிட்ட குழந்தைகள் 6 பேர் பலியானார்கள்.

2 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளின் கிட்னி, ஈரல் பழுதடைந்தது. சில குழந்தைகளுக்கு கை, கால் முடங்கியது. சீனாவில் இருந்து ஏற்றுமதியாகும் பால் பொருள்களுக்கு உலக நாடுகள் தடை விதித்தன.

இந்த விவகாரம் தொடர்பாக பால் நிறுவன அதிகாரிகள், விற்பனை அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் உட்பட 21 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மீது பீஜிங் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதி மன்றம் பால் நிறுவனத் தலைவர் உட்பட 2 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்துள்ளது. பெண் அதிகாரி உட்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மீதி உள்ளவர்களுக்கு 2 ஆண்டு முதல் 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை கடற் பகுதியில் 22 இந்திய மீனவர்கள் படகுகள் சகிதம் கைது

handcuff.jpgபருத் தித்துறை கடற் பகுதியில் இந்திய மீனவர்கள் 22 பேர் படகுகள் சகிதம் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர நேற்று முன்தினம் தெரிவித்தார். இவர்கள் (22) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறி னார்.

ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினரே இவர்களை கைது செய் துள்ளனர். இவர்கள் மேலதிக விசாரணைக் காக பருத்தித்துறை பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இலங்கை கடல் எல்லைக்குள் அத்து மீறி பிரவேசித்ததன் காரணமாகவே இவர்கள் கைதாகியுள்ளனர். இவர்களின் கைது குறித்து இந்திய தூதரகத்துக்கு அறிவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு பிரதமர்கள் இருக்க அரசமைப்புச் சட்டத்தில் இடமில்லை : காங்கிரஸ்

pm-india.jpgபிரதமர் மன்மோகன் சிங் இருதய அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அவர் வகித்துவரும் பதவிக்கு வேறு ஒருவர் அமர்த்தப்படுவாரா என்ற கேள்விக்கு எந்த அவசியமும் இல்லை என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இருதய அறுவை சிகிச்சை இன்று வெற்றிகரமாக நடந்தேறியுள்ள நிலையில், டெல்லியில் இன்று நடந்த செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சித் தலைவர் வீரப்ப மொய்லி, கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிரதமர் தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதால், அவர் பொறுப்புகளைக் கவனிக்க பிரணாப் முகர்ஜி செயல் பிரதமராக நியமிக்கப்படுவாரா என்ற கேள்விக்கு பதிலளித்த மொய்லி ,இரண்டு பிரதமர்கள் இருக்க அரசமைப்புச் சட்டத்தில் இடமில்லை என்றார்.

பிரதமர் நாட்டில் இல்லாதபோது அவருடைய பொறுப்புகளை மூத்த அமைச்சர் கவனிப்பதுதான் மரபாக உள்ளது.பிரதமர் முழு உடல் நலம் பெற்று இரண்டு வாரத்தில் பணிக்குத் திரும்புவார் என்று மொய்லி மேலும் தெரிவித்தார். 

புலிகள் ஏற்படத்திய மினி சுனாமி! கல்மடு குளக்கட்டு குண்டு வைத்து தகர்ப்பு! இழப்புகள் வெளிவரவில்லை!!!

vanni-kalmadu.jpgதற்போதைய யுத்தத்தின் முன்னரங்க நிலையாக இருந்த விஸ்வமடு பகுதியில் உள்ள கல்மடு குளக்கட்டு இன்று (ஜனவரி 24) காலை குண்டு வைத்து தகர்க்ப்பட்டு உள்ளது. இந்த தாக்குதலால் குளக்கட்டு உடைக்கப்பட்டு விஸ்வமடு, தர்மபுரம், இராமநாதபுரம் பகுதிகள் வெள்ளத்தில் முழ்கியுள்ளதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்து உள்ளது. ஏ35 பரந்தன் – முல்லைத்தீவு வீதியில் கல்மடு நெத்தலியாறு பகுதிகளில் நேற்று முதல் (ஜனவரி 23) விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் பாரிய மோதல் நடைபெற்று வந்தது. அதன் ஒரு கட்டமாக இராணுவ முன்னேற்றத்தை தடுக்கும் வகையில் விடுதலைப் புலிகள் கல்மடுக் குளக்கட்டை குண்டு வைத்து தகர்த்து உள்ளனர்.

பாரிய குண்டு வெடிப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட கட்டுடைத்து பாய்ந்த வெள்ளத்தால் பாரிய உயிரிழப்புகள் ஏற்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இப்பகுதிகளில் உள்ள மக்கள் பெரும்பாலும் ஏற்கனவே இடம்பெயர்ந்து விட்டதாகவும் இராணுவத்தினருக்கெ இந்த உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த மினி சுனாமியில் இடம்பெயராத தமிழ் மக்களும் அகப்பட்டுக் கொண்டதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கிறது.

யுத்தத்தில் பின்னடையும் விடுதலைப் புலிகள் மேற்கொண்டுள்ள மனிதாபிமானமற்ற செயல் இதுவென்றும் அவர்கள் உயிர்களுக்கு குறைந்தபட்ச மரியாதையையும் வழங்கவில்லை என்றும் இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்து உள்ளது.

விடுதலைப் புலிகள் இத்தாக்குதல் பற்றி உத்தியோகபூர்வமான அறிவிப்பு எதனையும் வெளியிடவில்லை.

தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகள் வேறு, புலித் தலைமையின் பிரச்சினை வேறு – டக்ளஸ் தேவானந்தா

epdp.jpgபுலித் தலைமையைக் காரணம் காட்டித் தமிழ்பேசும் மக்களின் அரசியல் உரிமை தொடர்பில் அக்கறை செலுத்தாமல் இருந்து விட வேண்டாம் எனச் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும், வட மாகாணத்திற்கான விஷேட செயலணியின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா, இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சிவசங்கர் மேனனிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.  அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய வெளிவிவகாரச் செயலாளருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உரையாடிய போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினை தொடர்பாக இந்தியா பல்வேறு பங்களிப்புகளை வழங்கி வந்துள்ளதாகவும், நெருக்கமான நட்புறவு கொண்ட நாடாகவே தமிழ் பேசும் மக்கள் இந்தியாவை எண்ணியிருந்த போதிலும், தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகளாகத் தம்மைக் காட்டிக் கொண்டவர்கள் இந்தியாவின் உறவுகளையும், வாய்ப்புகளையும் சரிவரப் பயன்படுத்தவில்லை என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெளிவுற எடுத்துக் கூறினார். இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சிவ்சங்கர் மேனனை நேரில் சந்தித்துக் கலந்துரையாட இலங்கைக்கான இந்தியத் தூதரகம் விடுத்திருந்த வேண்டுகோளைத் தன்னால் நிறைவேற்ற இயலாமற் போனமை தொடர்பாகத் தமது கவலையைத் தெரிவித்துக் கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்.குடா நாட்டு மக்களின் ஏகோபித்த வேண்டுகோளின் பேரில் தான் தொடர்ந்தும் யாழ்ப்பாணத்தில் தங்கியிருப்பதாகவும், மக்களுக்குரிய தேவைகள் மிக அதிகமாக இருப்பதால் அங்கிருந்து உடனடியாகக் கொழும்பு வர இயலாமல் இருப்பதை உணர்த்திய அவர்,  தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகள் வேறு, புலித் தலைமையின் பிரச்சினை வேறு என்பதைத் தான் ஆரம்பம் முதலே வலியுறுத்தி வந்துள்ளதாகவும், இந்தக் கருத்து தற்போது தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் நன்கு உணரப்பட்டுள்ளதாகவும், இதனைக் கருத்திற் கொண்டு புலித் தலைமை பலமிழந்து வரும் இத்தருணத்தில் தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமை தொடர்பாக இந்தியா அக்கறை செலுத்தாது இருந்து விடக் கூடாது எனத் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையிலான 13வது அரசியலமைப்புச் சீர்திருத்தச் சட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடைமுறைப்படுத்த ஆரம்பித்துள்ளார் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளதுடன், இதற்கு இந்திய அரசாங்கம் தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்கி அரசியல் உரிமைப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளை வலுப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இதேவேளை, தமிழ் பேசும் மக்களின் நாளாந்தப் பிரச்சினைகளுக்கும், அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் இந்தியா உதவ முன்வர வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்திய வெளிவிவகாரச் செயலாளரிடம் கேட்டுக் கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.