எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

1200 வீடுகள் முழுமையாக பூர்த்தி: மார்ச்சில் ஜனாதிபதியால் கையளிப்பு

sarath-amunugama.jpgஅரசாங்க ஊழியர்களுக்கு ஐயாயிரம் வீடுகள் அமைக்கும் திட்டமொன்றை பொதுநிர்வாக அமைச்சு ஆரம்பித்துள்ளது. இதில் சுமார் 1200 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதோடு முதலில் ஹபராதுவையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 576 வீடுகளும் மார்ச் மாதம் ஜனாதிபதியினால் அரச ஊழியர்களுக்கு கையளிக்கப் படவுள்ளதாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் சரத் அமுனுகம கூறினார்.

அரசாங்க ஊழியர்களுக்கான வீடமைப்புத் திட்டங்கள் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சில் நடைபெற்றது. அமைச்சர் இங்கு மேலும் கூறியதாவது,

மஹிந்த சிந்தனையில் குறிப்பிடப்பட்டவாறு அரசாங்க ஊழியர்களுக்கு வீடுகள் அமைக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை முதலீட்டுச் சபையுடன் இணைந்து இந்தத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஹபராதுவ பகுதியில் 576 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. மூன்று தரத்திலான வீடுகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. இந்த வீடுகள் ஜனாதிபதியினால் அரச ஊழியர்களுக்கு கையளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது தவிர காலி வெகுனுகொடையில் 640 வீடுகள் அமைக்கப்பட்டு வருவதோடு பூர்த்தியடையும் நிலையில் உள்ளன.

கண்டி, குண்டசாலை பகுதியில் சுமார் 900 வீடுகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான காணி சுவீகரிக்கப்பட்டுள்ளதோடு சில தினங்களில் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்க உள்ளோம்.

ராகம பகுதியில் சுமார் 800 முதல் 900 வரையான வீடுகளைக் கொண்ட வீடமைப்புத் திட்டமொன்றை ஆரம்பிக்க உள்ளோம். இதற்கான காணியை சுவீகரிக்க கடந்த வாரம் அமைச்சரவை அனுமதி வழங்கியது. அரசாங்கமும் மலேசிய ‘வின்கொண்ட்’ கம்பனியும் இணைந்து இந்த வீடமைப்புத் திட்டத்தை நிர்மாணிக்க உள்ளன.

5000 வீடுகளையும் நிர்மாணிக்க 50 மில்லியன் டொலர் செலவிடப்படவுள்ளது.

வரலாற்றில் ஒரு போதும் அரசாங்க ஊழியர்களுக்கென இந்தளவு அதிகமான வீடுகள் நிர்மாணிக்கப்பட்டது கிடையாது. வீடமைப்பு அமைச்சிற்குப் போட்டியாக அதிக மான வீடுகள் நிர்மாணிக்க முடிந்தது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்.

இதேவேளை, கொழும்பு கெப்பிட்டிபொல மாவத்தையில் 16 மாடிகளைக் கொண்ட வீடமைப்புத் திட்டமொன்றை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது. அத்தோடு 80 மாடிகளைக் கொண்ட வீடமைப்பு த்திட்டமொன்று பத்தரமுல்லையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா கம்பனியொன்று நகர அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

அரசாங்க ஊழியர்களுக்கான வீடுகளை வங்கிக் கடன் அடிப்படையிலா வேறு வகையிலா வழங்குவது என்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம். ஹபராதுவையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகள் எந்த நிமிடமும் கையளிக்கக்கூடிய நிலையில் உள்ளன.

தனியார் பஸ்களில் சீருடை, ரிக்கட் கட்டாயம்; உச்ச நீதிமன்று தீர்ப்பு

justice.jpgமேல் மாகாண தனியார் பஸ்களில் பயணச் சீட்டு வழங்குதல் மற்றும் சீருடை அணிதல் கட்டாயப்படுத்தப் பட்டுள்ளது. எதிர்வரும் 15 ஆம் திகதிக்குள் இதனை முழுமையாக நடைமுறைப்படுத்தத் தவறுவோரின் வீதி அனுமதிப் பத்திரத்தை இரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் நேற்று போக்குவரத்து அதிகார சபைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

உச்ச நீதிமன்றம் நேற்று விடுத்துள்ள இவ்வுத்தரவினை முழுமையாக ஏற்றுக் கொள்ளவதுடன் இதற்குப் பூரண ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாகத் தனியார் பஸ் போக்குவரத்து உரிமையாளர் சங்கம் தெரிவித்தது.

இத் தீர்மானம் தொடர்பில் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தினகரனுக்குத் தெரிவிக்கையில்,

உச்ச நீதிமன்றத் தீர்ப்பானது காலத்தின் தேவை கருதி மேற்கொள்ளப்பட்ட ஒன்றாகும். இது முழுமையாக நடை முறைப்படுத்தப்படுமானால் தனியார் பஸ் உரிமையாளர்க ளுக்கே பெரும் நன்மைகள் கிட்டும். பஸ்களில் பயணச் சீட்டு வழங்குதல் மற்றும் சீருடை தொடர்பில் கண்காணிப்புகளை மேற்கொள்வதற்கு இ. போ. ச. டிக்கட் பரிசோதகர்களின் உதவியைப் பெற்றுக் கொள்வதென தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் இ. போ. ச. விற்கு வேண்டுகோளொன்றை விடுக்கவும் சங்கம் தீர்மானித்துள்ளதுடன் நீதிமன்ற உத்தரவை விரைவாக நடைமுறைப்படுத்த உதவியாக சகல பஸ் நடத்துநர்கள், சாரதிகளுக்குச் சீருடைகளை இலவசமாகப் பெற்றுக் கொடுக்கவும் சங்கம் தீர்மானித்துள்ளது.

பிரயாணச் சீட்டுக்களை முறையாக வழங்கும் வகையில் பஸ் உரிமையாளர்களே அதற்கான டிக்கட் மெஷின்களைக் கொள்வனவு செய்ய வேண்டுமென சங்கம் அவர்களைக் கோருவதாகவும் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன மேலும் தெரிவித்தார்.

எம்.ரி.வி’ மீதான தாக்குதல் குறித்து தான் கூறியதை பாதுகாப்புச் செயலர் ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும்

wijitha_herath_jvp.jpgஎம்.ரி.வி., எம்.பி.சி. நிறுவனத்தினர் தங்களது நிறுவனத்துக்கு தாங்களே தீ வைத்துக் கொண்டதாக தெரிவித்திருக்கும் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, பொறுப்புள்ள அதிகாரி என்ற வகையில் அது தொடர்பான தகவல்களை உரிய ஆதாரங்களுடன் நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டுமென, நுகேகொடையில் திங்கட்கிழமை மாலை நடைபெற்ற ஊடக அடக்கமுறைக்கு எதிரான கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஜே.வி.பி.யின் பாராளுமன்றக் குழுத் தலைவரான அநுர குமார திஸாநாயக்கவும் இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவரான சனத் பாலசூரியவும் இந்தக் கூட்டத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

“ஊடக அடக்குமுறைக்கு எதிராக அணிதிரள்வோம்’ எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் முதலில் பேசிய சனத் பாலசூரிய; இன்று நிலவி வருவது ஊடகங்களுக்கோ, ஊடகவியலாளர்களுக்கோவான பிரச்சினையல்ல ஜனநாயகத்துக்கான பிரச்சினையே இன்று நிலவிக்கொண்டிருக்கிறது. ஒருவர் எதையும் பேசி விட்டு வீடு செல்ல முடியாத நிலைமை உருவாகியிருக்கிறது. கருத்துச் சுதந்திரமும் மக்கள் தகவல்களை தெரிந்து கொள்வதற்கான உரிமையும் மறுக்கப்படுகின்றன.

கடந்த காலங்களில் பல ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். எனினும் இந்தச் சம்பவங்கள் தெடர்பாக இதுவரை விசாரணைகள் நடத்தப்பட்டு இவற்றுக்குப் பொறுப்பான எவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை. இதன் மூலம் எவரும் ஊடகங்களையோ அல்லது ஊடகவியலாளர்களையோ தாக்கிவிட்டு துணிவாக இருக்க முடியுமென்ற நிலைமை உருவாக்கப்பட்டிருக்கிறது. இது ஆபாயகரமானது. ஊடகவியலாளர்கள் என்ற வகையில் நாம் நாட்டின் ஆட்சியை பிடிக்க முயற்சிக்கவில்லை. ஆனால் ஊடக சுதந்திர த்துக்காக போராடும் அதேநேரம், ஜனநாயகம் மற்றும் மக்கள் உரிமைகளுக்காகவும் போராட நாம் முன்நிற்கிறோம்.

சிரச நிறுவனம் மீதான தாக்குதல் நடத்துவதன் மூலமோ, லசந்தவை படுகொலை செய்வதன் மூலமோ எம்மை தடுத்து நிறுத்தி விடமுடியாது. அண்மையில் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றின் போது, லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை பற்றியும் “சிரச’ ஊடக நிறுவனம் மீதான தாக்குதல் பற்றியும் சில கருத்துகளை வெளியிட்டிருந்தார். பாதுகாப்பு செயலாளர் என்பவர் பொறுப்பு வாய்ந்த அதிகாரி. பொறுப்பிலிருந்து கொண்டு அவர் பொய் கூற மாட்டார். எனவே, அவர் போதிய விசாரணைகளின் பின்னரான அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே இந்தக் கருத்தை வெளியிட்டிருக்க வேண்டும். அவர் கூறியதைப் பார்த்தால் விசாரணைகள் முடிந்து விட்டதாகவே தெரிகிறது. எனவே, அவர் மக்கள் முன்நிலையில் ஆதாரபூர்வமான தகவல்களை வெளியிட வேண்டும். குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தும் வரை, அரசாங்கம் தன் மீதான குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்பிக்க முடியாது என்று கூறினார்.

இதேநேரம், ஜே.வி.பி.யின் அநுர குமார திஸாநாயக்க எம்.பி.இங்கு பேசுகையில்; “கோதாபய ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் என்ற பொறுப்புமிக்க பதவியில் இருக்கிறார். யுத்த நடவடிக்கைகளிலும் அவரது பங்களிப்பு இருக்கிறது. அதற்காக அவர் மீது மதிப்பும் இருக்கிறது. எனினும் ஒரு துறையில் சிறப்பாகச் செயற்பட்டதற்காக, மற்றொரு துறையை முடக்க இடமளிக்க முடியாது. சிரச ஊடக நிறுவனத்தின் மீது தீ வைக்கப்பட்டமையானது நிறுவனத்தினரே செய்து கொண்டதாக கோதாபய ராஜபக்ஷ கூறியிருக்கிறார். அவர் பொறுப்புள்ள அதிகாரி. அவர் ஜனாதிபதியின் தம்பியாக இருந்தாலும் அவருக்கு அப்படிக் கூற முடியாது. அதிகாரி ஒருவர் என்ற வகையில் அவர் கூறியது உண்மையாக இருக்க வேண்டும். அப்படியாயின் அந்த தகவல்களை தகுந்த ஆதாரங்களுடன் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்’ என்றார்.

கிளிநொச்சி , ஆனையிறவை வெற்றிகொண்ட எமக்கு எஸ்.பி. திஸாநாயக்க சவாலுக்குரியவரல்ல – கெஹெலிய

kkhaliya.jpgகிளி நொச்சி , ஆனையிறவு போன்ற இடங்களை வெற்றி கொண்ட இந்த அரசிற்கு  எஸ்.பி ஒரு சவால் அல்ல என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். அண்மையில் அம்பிட்டியாவில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கூட்டத்தில் ஆதரவாளர்கள் மத்தியிலே உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது;

எஸ்.பி. திஸாநாயக்காவை தோற்கடிக்க நாம் கடுமையாக உழைக்க வேண்டிய அவசியம் இல்லை. அதை அவர்கள் கட்சியே செய்து விடும். மத்திய வடமேல் மாகாணங்கள் மட்டுமல்ல இதன் பிறகு நடைபெறும் சகல தேர்தல்களிலும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெற்றி பெறும் . மகிந்த சிந்தனையின் படி நாட்டு மக்களுக்குப் பாரிய நன்மைகள் கிடைத்துள்ளன. எனவே மக்கள் எம்மை ஆதரிப்பர். கிளிநொச்சி , ஆனையிறவு இடங்களை வெற்றி கொண்ட எமக்குப் பொரமடுல்ல எஸ்.பி. சவாலுக்குரியவரல்ல.

ரணில் விக்கிரம சிங்க பாராளுமன்றத்திற்கோ, அமைச்சரவைக்கோ அல்லது நாட்டு மக்களுக்கோ, தெரிவிக்காது பிரபாகரனின் காலடியில் வீழ்ந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் என்ற அடிப்படையில் பயங்கரவாதிகளிடம் எமது நாட்டின் ஒரு பகுதியை தாரை வார்த்தார். இன்று ஐ.தே கட்சியிலிருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கத்துவம் பெறுகின்றவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

வடமராட்சி கிழக்கு,வன்னியிலிருந்து இதுவரை 1,796 பேர் தென்மராட்சிக்கு வருகை

displace.jpgவடமராட்சி கிழக்கு மற்றும் வன்னியில் படையினரால் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களிலிருந்து தென்மராட்சிக்குள் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை 1,796 பேர் வந்துள்ளதாக யாழ். செயலக புனர்வாழ்வுத்திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்களில்167 குடும்பங்களைச் சேர்ந்த 440 பேர் கோப்பாய் ஆசிரிய பயிற்சிக்கல்லூரி இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பழைய பூங்கா வீதியிலுள்ள திருநகர் இடைத்தங்கல் முகாமில் 24 குடும்பங்களைச் சேர்ந்த 61 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 416 குடும்பங்களைச் சேர்ந்த 1,296 பேர் மிருசுவில் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையிலும் அருகாமையிலுள்ள தேவாலயக் கட்டிடங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் மூன்று நாட்களுக்கு சமைத்தஉணவு வழங்கப்பட்டு வருவதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கே. கணேஷ் தெரிவித்தார். அரசசார்பற்ற தொண்டர் நிறுவனங்கள், பாய்கள்,அரிக்கன் லாம்புகள்,உடுதுணிகள், பாவனைப் பொருட்களை வழங்கி வருகின்றன. அகதிகள் வருகை அதிகரித்து வருவதால் இடைத்தங்கல் முகாம்களை அமைப்பது, நிவாரணப் பணிகளை மேற்கொள்வது குறித்து அரசசார்பற்ற நிறுவனங்களுடன் யாழ். செயலகத்தில் நேற்று அவசர சந்திப்பொன்றையும் அரசஅதிபர் நடத்தியுள்ளார்.

வன்னியில் இருந்து இடம்பெயரும் மக்கள் தனித்தனி வீடுகளில் குடியமர்த்தப்படுவார்கள் – அமைச்சர் ரிசாட் பதியுதீன்

risard.jpgவன்னியில் தொடரும் யுத்தத்தினால் இடம்பெயர்ந்து வருகின்ற மக்களுக்கு ஐந்து நலன்புரி நிலையங்களை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கும் மீள் குடியேற்ற அநர்த்த நிவாரண அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு , இடம்பெயர்ந்து அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வருகின்ற மக்களின் விடயத்தில் அதிக கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இடம்பெயர்ந்து வருபவர்களில் வவுனியா வடக்குப் பிரதேச மக்களுக்கு ஓமந்தையிலும், மன்னார் பிரதேச மக்களுக்கு கட்டைஅடம்பனிலும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் மக்களுக்கு செட்டிக்குளம் மெனிக்பாம் பண்ணையிலுமாக ஐந்து நலன்புரி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

இடம்பெயர்ந்து வருகின்றவர்களுக்கு தனித்தனியாக வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டு அவற்றில் அவர்கள் குடியமர்த்தப்படுவார்கள். சகல அமைச்சுகளும் இணைந்து இந்த வேலைத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளன. மீள்குடியேற்ற அநர்த்த நிவாரண அமைச்சு இந்த வேலைத்திட்டத்தை மேற்பார்வை செய்யும். கொழும்பில் நடைபெற்ற உயர் மட்ட மநாட்டில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன எனவும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

இதேவேளை, வன்னியில் இருந்து ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 3,900 பேர் வவுனியாவுக்கு வந்துள்ளனர் எனவும் இவர்களுக்கு வேண்டிய சகல வசதிகளும் செய்து கொடுக்கப்படும் எனவும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பீ. எம். எஸ். சாள்ஸ் தெரிவித்தார். நாளுக்குநாள் வன்னியிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்து வருவதால் உரிய வசதிகளைச் செய்யுமாறு ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

புலிகளின் 3 இலக்குகள் மீது விமானத் தாக்குதல்

mi24-1301.jpgமுல்லைத்தீவு மாவட்டத்தில் இனங்காணப்பட்ட புலிகளின் வெவ்வேறு மூன்று இலக்குகள் மீது இலங்கை விமானப் படையினர் நேற்று கடும் தாக்குதல்களை நடத்தியிருப்பதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.  விமானப்படைக்குச் சொந்தமான ஜெட் மற்றும் எம். ஐ. 24 ரக விமானங்களே கடும் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இத்தாக்குதல்கள் நேற்றுக் காலை 9 மணி தொடக்கம் 11.30 மணிக்குட்பட்ட காலப் பகுதியில் இடம்பெற்றன.

முல்லைத்தீவுக்குத் தெற்கே நேற்றுக் காலை 9 மணிக்கு முதலாவது தாக்குதல் நடத்தப்பட்டது முன்னேறிவரும் இராணுவத்தின் 59ஆம் படைப்பிரிவுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் அதற்கு எதிர்த்திசையில் தாக்குதல் நடத்தியதாக ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.

இதனையடுத்து நேற்றுக் காலை 11.30 மணியளவில் முல்லைத்தீவுக்கு தெற்கே புலிகளின் முக்கியஸ்தர்கள் கூடும் இன்னுமொரு இடத்தில் விமானத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பிரமண்டான்குளத்திற்கு வட மேற்கே இரண்டு கிலோமீற்றர் தொலைவில் மணல்மேடு அமைப்பதில் ஈடுபட்டிருந்த புலிகள் மீதும் விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இவ்விமானத் தாக்குதல்கள் அனைத்தும் வெற்றியளித்திருப்பதனை விமான ஓட்டிகள் உறுதி செய்திருப்பதாகவும் மத்திய நிலையம் கூறியது.

சிரச ஊடக தாக்குதல் சந்தேக நபர்கள் நீதிமன்றில் ஆஜர்

sirasa-02.jpgசிரச ஊடக வலையமைப்பின் கட்டிடத் தொகுதி தாக்குதல் தொடர்பாக, சந்தேகத்தின் பேரில் கைதான ஐவர் நேற்று திங்கட்கிழமை நுகேகொட நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டனர். விசாரணையின் முடிவில் ஐந்து பேரையும் சரீரப் பிணையில் செல்வதற்கு நுகேகொட நீதிவான் வஸந்த ஜினதாஸ அனுமதித்தார். நடத்தப்பட்டுவரும் விசாரணையை கருத்தில் கொள்ளும் போது சம்பவம் தொடர்பான கவனத்தை பொலிஸார் வேறு திசைக்கு மாற்ற முயல்வதாக நீதிவான் குறிப்பிட்டார்.

கணிசமான அளவுக்கு வெளிநாடுகள் கவனத்தை ஈர்த்துள்ள இச்சம்பவம் ஏன் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஊடாக விசாரணை நடத்தப்படவில்லை என பொலிஸாரிடம் நீதிவான் வினவியதாக சந்தேக நபர்களின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நிஸங்க நாணயக்கார தெரிவித்தார்.

38 புலிகளின் உடல்கள் வவுனியாவில் அடக்கம்

வவுனியா ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் 38 உடல்களும் இன்று செவ்வாய்க்கிழமை வவுனியாவில் அடக்கம் செய்யப்படவுள்ளது. வன்னியில் இடம்பெற்ற போரில் உயிரிழந்த பின்னர் படையினரால் கைப்பற்றப்பட்ட இந்த உடல்கள் வவுனியா ஆஸ்பத்திரியில் ஒப்படைக்கப்பட்டன.

இந்த உடல்களைப் பொறுப்பேற்குமாறு சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்திடம் பொலிஸார் தெரிவித்தபோதிலும், புதுக்குடியிருப்பிலிருந்து தகுந்த பதில் வராததால் உடல்களை பொறுப்பேற்பதில் தாமதம் ஏற்படுவதாக சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் கூறியது. மிகவும் பழுதடைந்துள்ள இவை துர்நாற்றம் வீசுவதினால் மாவட்ட நீதிமன்றின் அனுமதியுடன் வவுனியாவிலேயே அடக்கம் செய்ய பொலிஸாரும் வைத்தியசாலை நிர்வாகத்தினரும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

பாக்கிஸ்தானுக்கு இந்தியா கிரிக்கட் அணி செல்லவில்லை. ஆனால், இலங்கை அணி பாகிஸ்தானிலும், இந்தியா அணி இலங்கையிலும் விளையாடுகின்றன. – ஏகாந்தி

pakistan-c-teem.jpgசர்வதேச கிறிக்கட் கட்டுப்பாட்டுசபையின் (ICC) நேர அட்டவணைப்படி இந்தக்காலகட்டங்களில் இந்திய கிறிக்கட் அணியினர் பாக்கிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள வேண்டும். ஆனால், மும்பாய் தாக்குதலையடுத்து இச்சுற்றுப் பயணம் தடையானது.

இந்நிலையில் 3 ஒரு நாள் போட்டிகளிலும் 2 டெஸ்ட் போட்டிகளிலும் பாக்கிஸ்தானுடன் விளையாட இலங்கை அணி விருப்பம் தெரிவித்தது. அதேநேரம், இலங்கைக்கான 5 ஒரு நாள் போட்டிகளிலும் 20க்கு 20 போட்டியொன்றிலும் கலந்துகொள்ள இந்தியா அணி இம்மாத இறுதியில் இலங்கை வரவுள்ளது.

மஹெல ஜயவர்தன தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் போட்டியில் விளையாடுவதற்காக தற்போது பாகிஸ்தான் சென்றுள்ளது.

இலங்கை வீரர்களுக்கு வரலாறு காணாத வகையில் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு பிரச்சினை காரணமாகவே சமீபகாலமாக பாகிஸ்தானில் விளையாட எந்த அணியும் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்தாண்டில் பாக்கிஸ்தானில் பாதுகாப்பு நிலைமையைக் காரணம் காட்டி அவுஸ்திரேலியா அணி முதலில் பயணத்தை ரத்து செய்தது. அதன் பிறகு கடந்த செப்டம்பர் மாதம் பாக்கிஸ்தானில் நடைபெற இருந்த சம்பியன் கிண்ணப் போட்டி தள்ளி வைக்கப்பட்டது. 

பாக்கிஸ்தானுக்கு இந்தியா அணி செல்வதற்கான சகல ஏற்பாடுகளும் நடைபெற்றிருந்த நேரத்திலே மும்பாய் தாக்குதல் இடம்பெற்றது. மும்பாய் தாக்குதலையடுத்து இரு நாடுகளுக்குமிடையே ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக இந்திய அணி பாகிஸ்தான் பயணத்தை ரத்து செய்தது.

இந்நிலையில் தற்போது இலங்கை அணி அங்கு சென்று உள்ளது.

பாகிஸ்தான் – இலங்கை அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டி கராச்சியில் இன்று (20) செவ்வாய்க்கிழமை நடக்கிறது. 2 வது போட்டி நாளை (21) (புதன்கிழமை)யும் 3 வது மற்றும் கடைசி போட்டி 24 ஆம் திகதியும் (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. இந்த 3 ஒரு நாள் போட்டிகளும் பகல் – இரவாக ஆட்டங்களாக நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

3 ஒரு நாள் போட்டிகளும் முடிவடைந்த பின்பு இலங்கை அணி தாயகம் திரும்பவுள்ளது.

இதைத் தொடர்ந்து இந்திய அணியுடன் இலங்கையில் 5 ஒரு நாள் போட்டிகளில் இலங்கை அணி ஆடவுள்ளது. அத்துடன்,  20க்கு 20 போட்டியொன்றும் இந்திய அணிக்கெதிராக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்திய அணியுடனான போட்டிகள் இம்மாதம் 28ஆந் திகதி தொடக்கம் பெப்ரவரி மாதம் 10ஆந் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்திய அணி இலங்கைக்கு விஜயம் செய்வது தொடர்பாக தமிழ் நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகள் பலத்த எதிர்ப்பினைக் காட்டி வருகின்றது. இலங்கையில் நடைபெறும் யுத்த நிலைமை காரணமாக இந்திய அணி இலங்கைக்குச் செல்லக் கூடாது என ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.

இறுதியாக கடந்த 19ம் திகதி இலங்கைக்கு இந்திய கிரிக்கெட் அணியை அணியை அனுப்பக்கூடாது என்று பாமகவின் வழக்கறிஞர்கள் சமூக நீதி பேரவை சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டமொன்றினை நடத்தினர். பா.ம.க.வின் அங்கமான வழக்கறிஞர்கள் சமூகநீதி பேரவை சார்பில் இந்த  ஆர்ப்பாட்டம் சென்னை ஐகோர்ட்டு முன்பு  நடத்தப்பட்டது. சமூகநீதி பேரவை தலைவர் கே.பாலு வக்கீல்கள் சங்க தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் வக்கீல் எம்.பழனிமுத்து உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட வக்கீல்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இலங்கைக்கு,  இந்திய கிரிக்கெட் அணியை அனுப்பக்கூடாது என்றும்,   இலங்கையில் நடைபெறும் போரை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்றும்,  தமிழர்களை கொன்று குவிக்கும் இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டு ஒரு கேடா என்றும்,   இந்திய கிரிக்கெட் வாரியம் பணம் கொழிக்க தமிழன் செத்து மடியும் இலங்கைதான் கிடைத்ததா? என்றும்,  அப்பாவி தமிழன் செத்து மடிகிறான், அங்கே கிரிக்கெட் விளையாட்டு ஒரு கேடா’ என்றும் பல கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

ஆனால், இந்த ஆர்ப்பாட்டங்கள் எதையும் இந்திய கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை.  இந் நிலையில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்தியக் கிரிக்கெட் அணியில் இடம்பெறும் வீரர்களின் பெயர் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

முதல் ஒருநாள் போட்டி 28 ஆம் திகதி தம்புள்ளையில் நடக்கிறது. இதற்கான இந்திய அணித் தேர்வு ஞாயிற்றுக்கிழமை மும்பையில் நடந்தது. தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் தலைமையிலான குழுவினர் வீரர்களை தேர்வு செய்தனர். அணி விபரம் வருமாறு; வீரேந்திர ஷேவாக், கௌதம் கம்பீர், சச்சின் டெண்டுல்கர், தோனி (கப்டன்)இ யுவராஜ் சிங், ரோஹித் சர்மா, யூசப்பதான்,  சகீர்கான்,  இஷாந்த் சர்மா,  ஓஜா, முனாப் பட்டேல்,  இர்பான் பதான்,  சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா,  பிரவீன் குமார். காயம் காரணமாக ஹர்பஜன் சிங் இடம்பெறவில்லை.

25 ஆம் திகதி இலங்கை வரவுள்ள இந்திய கிரிக்கெட் அணி இலங்கை அணியுடன் 5 ஒரு நாள் போட்டிகள்,  ஒரு 20 ஓவர் போட்டி என மொத்தம் 6 போட்டிகளில் விளையாடவுள்ளது.

இந்தியாவுடனான ஒரு நாள் தொடர் முடிந்த பிறகு இலங்கை அணி மீண்டும் பாகிஸ்தான் செல்லவுள்ளது. மீண்டும் பாக்கிஸ்தான் செல்லும் இலங்கை அணி பாக்கிஸ்தான் அணிக்கெதிராக  2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.

இந்த கிரிக்கட் போட்டிகளில் இலங்கை பாக்கிஸ்தானில் சுற்றுலா மேற்கொள்வது குறித்து ஆரம்பத்தில் இந்திய தமிழ்நாட்டில் சில அரசியல் கட்சிகள் பலத்த கண்டனம் தெரிவித்தமை ஞாபகமிருக்கலாம்.

இலங்கையில் தமிழ் மக்களுக்கெதிராக யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்தியாவால் மறுக்கப்பட்ட ஒரு போட்டி தொடரில் இலங்கை அணி கலந்துகொள்வதினூடாக இலங்கை அரசாங்கத்துக்கும்,  பாக்கிஸ்தான் அரசாங்கத்துக்கும் இடையில் யுத்த உறவுகள் இருப்பதாக கூறியே இந்த கண்டனங்கள் ஆரம்பத்தில் முன்வைக்கப்பட்டன. இந்த கண்டனங்கள் எதையும் இந்தியாவின் மத்திய அரசோ,  இந்திய கிரிக்கட் வாரியமோ கண்டுகொள்ளவில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் இந்திய கிரிக்கட் அணி இம்மாத இறுதியில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.