ஐ.தே.க., சு.க. மக்கள் பிரிவு திருமணம் ஜே.வி.பி., விக்கிரமபாகு கள்ளத் தொடர்பு – விமல் வீரவன்ச கிண்டல்
ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு திருமணம் செய்துள்ள நிலையில் ஐ.தே.க.வுடன் ஜே.வி.பி.யும் விக்கிரமபாகு கருணாரட்ணவும் கள்ளத் தொடர்பு வைத்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் எம்.பி.யுமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மாகாணசபைத் தேர்தல் தொடர்பான ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;
“எமது இராணுவத்தினர் மிக விரைவில் முல்லைத்தீவையும் கைப்பற்றி புலிகளை முற்றாகத் தோற்கடித்துவிடுவர். இவ்வாறான நிலையில்தான் ரணில் விக்கிரமசிங்க ஜனநாயகத்தை நிலைநாட்டுமாறு கோருகின்றார். ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு திருமணம் செய்துள்ள நிலையில் ஜே.வி.பி. மற்றும் விக்கிரமபாகு கருணாரட்ண ஆகியோர் கள்ளத் தொடர்பு வைத்துள்ளனர். புலிகளை தோற்கடித்து புதிய இலங்கையை உருவாக்கும் அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் சதி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாமென ஐ.தே.க. மற்றும் ஜே.வி.பி.யிடம் கோருகின்றோம்’.