எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

வாகன அனுமதிப்பத்திரம் வழங்கும் பணிகள் ஆரம்பம்

cars.jpgயாழ்.  மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலகங்களிலும் 2009 ஆம் ஆண்டுக்கான வாகன அனுமதிப்பத்திரம் வழங்கும் பணிகள் நடைபெறுவதாக யாழ்.மாவட்ட போக்குவரத்து திணைக்கள உதவி ஆணையாளர் எம். பத்மநாதன் அறிவித்துள்ளார். வாகன உரிமையாளர்கள் தமது வாகனங்களை பதிவு செய்த பிரதேச செயலகங்களுக்குச் சென்று கடந்தாண்டு வாகன அனுமதிப்பத்திரம் ,வாகன காப்புறுதிஅனுமதிப்பத்திரம் ஆகியவற்றைக் காண்பித்து புதிய ஆண்டுக்கான வாகன அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்ளுமாறு அவர் வேண்டியுள்ளார்.

வாகன வரி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான கால எல்லை மார்ச் 31 ஆம் திகதி வரையறை செய்யப்பட்டிருந்தாலும் முன்கூட்டியே சிரமமின்றி வாகனவரி அனுமதிப்பத்திரத்தைப் பெறுமாறு வாகன உரிமையாளரை அவர் கேட்டுள்ளார்.

‘சண்டே லீடர்’ பத்திரிகை ஆசிரியர் லசந்தவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்

lasa-body.jpgபடுகொலை செய்யப்பட்டுள்ள ‘சண்டே லீடர்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரம துங்கவின் பூதவுடல் இன்று நண்பகல் பொரள்ளை கனத்தை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவிருக்கிறது.

இதேவேளை லசந்த விக்கிரமதுங்கவின் கொலைக்கு காரணமானவர்களை தேடிக் கண்டு பிடிக்கும் முயற்சியில் பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கமைய நான்கு விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப் பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

பல்வேறு கோணங்களிலும் தீவிர விசாரணைகளை முடுக்கி விட்டிருக்கும் இவ் விசேட பொலிஸ் குழுவினருக்கு ‘சண்டே லீடர்’ பிரதம ஆசிரியரின் கொலையுடன் தொடர்புபட்டவர்கள் உள்ளிட்ட பல இரகசியங்கள் தெரியவந்திருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார். கொலையுடன் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கண்டுபிடித்து சட்டத்தின் முன்நிறுத்தும் வகையில் இப்பொலிஸ் குழுவினர் மும்முரமாக செயற்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை கிரிமண்டல மாவத்தையிலுள்ள அன்னாரது இல்லத்திலிருந்து பூதவுடல் நாளை நண்பகல் 12 மணிக்கு நாரஹேன்பிட்டி சந்திக்கு எடுத்து வரப்படும். அங்கிருந்து பூதவுடல் பெருந்திரளான மக்கள் ஊர்வலத்துடன் பொரள்ளை கனத்தை மயானத்துக்கு கொண்டு வரப்படவுள்ளது கலைஞர்கள், அரசியல்வாதிகள், வெளிநாட்டு இராஜதந்திரிகள், ஊடகவியலாளர்கள், பொதுமக்களென பலர் லசந்தவின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ரீ.எம்.வீ.பி – புலிகள் மோதல், மூவர் பலி – திஹிலிவட்டையில் சம்பவம்

ak47.jpgஏறாவூர்,  திஹிலிவட்டை பிரதேசத்தில் ரி. எம். வி. பி.க்கும் புலிகள் இயக்கத்துக்குமிடையில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற மோதல்களில் மூவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். சந்திவெளி வாவிக்கு அப்பால் அமைந்துள்ள ரி. எம். வி. பி. அலுவலகத்தின் மீது புலிகள் இயக்க உறுப்பினர்கள் நடத்திய தாக்குதலையடுத்து இரு தரப்பினருக்கும் இடையில் மோதல்கள் இடம் பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

இந்த மோதல்களில் ரி. எம். வி. பி. உறுப்பினர் ஒருவரும், புலிகள் இயக்க உறுப்பினர்கள் இருவரும் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் இருசிவிலியன்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சடலங்களுடன் துப்பாக்கிகளையும் பொலிஸார் மீட்டெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

ரீ. எம். வி. பி. தரப்பில் சந்திவெளியைச் சேர்ந்த 34 வயதுடைய எஸ். சீலன் என்பவரே கொல்லப்பட்டுள்ளதாக அடையாளங் காணப்பட்டுள்ளது. ஏறாவூர் பொலிஸார் மற்றும் மட்டக்களப்பு குற்றப் புலனாய்வுப் பொலிஸாரும் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

பளை, சோரன்பற்று பிரதேசங்களிலிருந்து 53 பேர் யாழ்ப்பாணத்திற்கு இடம்பெயர்வு

civillians_.jpgவன்னிப் பகுதியில் இடம்பெற்றுவரும் போர் நடவடிக்கை காரணமாக பளை, சோரன்பற்று மற்றும் வடமராட்சி கிழக்குப் பகுதியில் இருந்து 53 பேர் இடம்பெயர்ந்து நேற்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வந்துள்ளனர். யாழ்.வருகைதந்துள்ளவர்கள் அனைவரும் கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் அமைந்துள்ள புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

பளை பகுதியில் இருந்து வந்தவர்கள் மிகவும் நோய்வாய்ப்பட்ட நிலையில் காணப்பட்டதால் அவர்களை மருத்துவ பரிசோதனைக்கு யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வடமராட்சி கிழக்கு பகுதியிலிருந்து கடல் வழியாக வள்ளங்களில் வந்த 33 பேரை கடற்படையினர் கைதுசெய்து பருத்தித்துறைப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். பொலிஸார் பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தியிருந்தனர். இவர்களைத் தங்க வைப்பதற்குரிய நடவடிக்கையை மாவட்ட செயலகம் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பளை மற்றும் வடமராட்சி கிழக்கு பகுதியில் இருந்து வந்தவர்களில் நான்கு கைக்குழந்தைகள் உள்ளடங்குவதாகவும் இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்வர்கள் அடங்குவதாகவும் தெரியவருகின்றது.

கிழக்கில் உல்லாச ஹோட்டல் நிர்மாணத்திற்கு 100 மில். ரூபா

hotel.jpgமட்டக்களப்பில் 100 மில்லியன் ரூபா செலவில் உல்லாச பயணிகள் ஹோட்டலை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தில் முதலீட்டுச் சபை கைச்சாத்திட்டுள்ளது. லியேரா பீச் ஹோட்டல் கம்பனிக்கும் முதலீட்டுச் சபைக்கும் இடையே இவ் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்துக்கு இணங்க அனைத்து வசதிகளுடன் கூடிய 30 அறைகள் கொண்ட மூன்று நட்சத்திர ஹோட்டல் மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்படவுள்ளது.

ஆயுர்வேதக் குளியல் உட்பட, ஜிம்னாசியம் மற்றும் ரெனிஸ் மைதானம் உள்ளடங்கலாக இந்த உல்லாச ஹோட்டல் நிர்மாணிக்கப்படவுள்ளதாக தொழில் அபிவிருத்தி முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். முதலீட்டுச் சபை கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையின் அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்குவதுடன், மீன்பிடி, விவசாயம் என்பவற்றை ஊக்குவிக்கவும் ஒத்துழைப்பை வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார். விசேடமாக சுற்றுலா கைத்தொழிலை கிழக்கில் முன்னெடுப்பதற்கான அங்கீகாரத்தை அமைச்சு ஏற்கனவே வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். உல்லாச ஹோட்டல் நிர்மாண வேலைகள் இந்த மாதத்தில் ஆரம்பித்து இவ்வருடம் முடிவடைவதற்குள் நிறைவடையவுள்ளதாகவும்

முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிக்கும் நிகழ்வு இன்று

secretary_.jpg2009ம் ஆண்டில் பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிக்கும் நிகழ்வுகள் இன்று திங்கட்கிழமை தேசிய ரீதியாக மேற்கொள் ளப்படவுள்ள தாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலைகளுக்கு புதிதாக வருகைதரும் பிள்ளை களை வரவேற்பது தொடர்பான வைபவங்கள் நாட்டின் அனைத்து ஆரம்பப் பிரிவு பாடசாலைகளிலும் இடம் பெறவுள்ளதாக அமைச்சின் செயலாளர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

சமயத் தலைவர்கள் மற்றும் பெற்றோர்களின் பங்குபற்றுதலுடன் இந்த நிகழ்வுகள் ஒழுங்கு செய்ய ப்படுவதுடன், ஆரம்பக் கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பெற்றோர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வுகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.

விரட்டப்பட்ட முஸ்லிம்கள் மீள் குடியேற வழிவகுத்துள்ளது – அமைச்சர் அதாவுல்லா

a-9-road.jpgஏ-9  பாதை திறப்பானது யாழ்ப்பாணத்திலிருந்து புலிகளினால் விரப்பட்ட முஸ்லிம்கள் தமது சொந்த இடங்களில் சென்று குடியேற வழிவகுக்குமென நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ஏ. எல். எம். அதாவுல்லா தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் அதாவுல்லா; “உண்மையே எப்போதும் வெற்றி பெறும்” என்பதைப் புலிகளின் தோல்வி நிரூபணமாக்கியுள்ளது எனவும் தெரிவித்தார். அமைச்சர் நமதுரையில் மேலும் தெரிவித்ததாவது:-ஆணையிறவு மீட்பும் “ஏ-9” பாதை திறப்பும் வடக்கு மக்களின் வாழ்வில் ஒளியேற்றியுள்ளது. உள்ளூர் உற்பத்தி வளர்ச்சி,

பொருளாதார முன்னேற்றம் என பல வகைகளிலும் அம் மக்களுக்கு நன்மை கிட்டும். மீதமுள்ள சிறு நிலப்பகுதியும் விரைவில் மீட்கப்பட்டு விடும். முழு நாட்டிலும் சுபீட்சம் ஏற்படும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்டுள்ள காத்திரமான முடிவுகளுக்கு அவருக்கு நன்றி கூற வேண்டும்.

யாழ்ப்பாணத்திலிருந்து புலிகளினால் விரட்டப்பட்ட முஸ்லிம்கள் பெரும் அல்லல்களை சந்திக்க நேர்ந்து ள்ளது. “ஏ-9” பாதை திறப்பானது முஸ்லிம் மக்களும் தமது சொந்த இடங்களில் சென்று குடியேற வழிவகுக்கும். கிழக்கில் மூவின மக்களும் தற்போது மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர். இந் நிலை வடக்கிலும் வரவேண்டும்.  அதற்கு “ஏ- 9” வீதி திறப்பு சிறந்த ஆரம்பமாகுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

கட்சிகளுக்கு முன்னுரிமை வேண்டாம் சமூக மேம்பாட்டை கவனத்தில் எடுங்கள்

Estate Workersமலை யக மக்கள் அரசியல் கட்சிகளுக்கு முன்னுரிமை அளிக்காது சமூக மேம்பாட்டைக் கருத்திற்கொண்டு எதிர்வரும் மத்தியமாகாண சபைத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

மத்திய மாகாணசபைத் தேர்தலில் ஐ.ம.சு.மு.சார்பில் மாத்தளை மாவட்டத்தில் போட்டியிடும் இ.தொ.கா. வேட்பாளரான எஸ்.சிவஞானத்துக்கு ஆதரவு திரட்டும் பொருட்டு நேற்று சனிக்கிழமை மாத்தளை மாநகர மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;  சிறுபான்மை சமூகத்தினரான எமக்கு இந்நாட்டில் தனித்து ஆட்சி செய்யமுடியாது. ஆகையால், அவ்வப்போது பதவிக்கு வரும் அரசுகளுடன் இணைந்து செயல்பட்டே எமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள வேண்டியுள்ளது.

அமரர் தொண்டமான் இதனடிப்படையிலேயே செயற்பட்டு மலையகத்திற்கு பல்வேறான அபிவிருத்தி வேலைகளை முன்னெடுத்துள்ளார். அதனடிப்படையிலேயே நாமும் செயற்பட்டு வருகின்றோம். நாம் எமது அரசியல் பலத்தின் மூலம் மாத்திரமே அரசுக்கு அழுத்தம் கொடுத்து எமது தேவைகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் கிடைத்த அரசியல் பலத்தைக் கொண்டே தற்போது பல்வேறு அபிவிருத்தி வேலைகளை முன்னெடுத்துவருகிறோம்.

இதேபோல ஏனைய மாவட்டங்களிலும் அரசியல் பலத்தைப் பெறவேண்டும். பலமான அரசியல் சக்தியொன்றை உருவாக்குவோமானால் சிறுபான்மையினர் எதிர்நோக்கும் பிரச்சினைகளை இலகுவாக தீர்த்துக் கொள்ளமுடியும். ஒரு சில தோட்டங்கள் அரசியல் வாதிகளுக்கும் அவர்களது நண்பர்களுக்கும் கையளிப்பதற்கு திட்டமிட்டு காடாக்கப்பட்டு வருகிறது. மாதாந்தம் 25 நாட்கள் வேலை வழங்கவேண்டும். அல்லது அதற்கான வேதனம் வழங்கவேண்டும் என்று சட்டம் இருந்தும் அது அமுல்படுத்தப்படவில்லை.

எனவே தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளிலிருந்து விடுபடவேண்டுமானால் மேலும் அரசியல் பலம் பெறவேண்டும். ஆகவே எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் மத்தியமாகாணத்தில் போட்டியிடும் இ.தொ.கா. வேட்பாளரை வெற்றி பெறச் செய்து எமக்கு அரசியல் பலத்தை வழங்குவதற்கு மலையக மக்கள் முன்வரவேண்டும்.
 

கிழக்கில் கல்வி அபிவிருத்தியை முன்னெடுக்க வேண்டிய பாரிய வேலைத்திட்டமொன்று அவசியமாகும்

school-2.jpgமாகாண கல்வியமைச்சர் விமலவீர திஸாநாயக்க  “நாட்டில் ஏற்பட்ட அமைதியற்ற சூழ்நிலையினால் கிழக்கு மாகாணத்தின் கல்வித்துறை மிகவும் பின்னடைவான நிலையிலுள்ளது. தற்போது கிழக்கில் அமைதியான சூழ்நிலை ஏற்பட்டு மாகாண சபையும் செயற்படத்தொடங்கியுள்ளது. இந்த நிலையில் கல்வியை அபிவிருத்தி செய்வதற்கு சகலரும் ஒன்றிணைந்து செயல்படுவதற்கு முன்வரவேண்டும்  இவ்வாறு அம்பாறை மாவட்டத்தில் மிகவும் பின் தங்கிய பகுதியிலுள்ள மகாஓயா கரஸ்கல பாடசாலை வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஆசிரியர் விடுதிக் கட்டிடத்தை கடந்த திங்கட் கிழமை மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க திறந்துவைத்துப் பேசுகையில் குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து பேசுகையில் ” கிழக்கு மாகாணத்தில் இயற்கை வளங்கள் அதிகம் இருந்தபோதிலும் கல்வி வளம் சிறப்பாக இல்லாமையினால் பின் தங்கிய நிலையில் இருக்கிறது. இதனை அபிவிருத்தி செய்வதற்கு மாகாணசபையின் இந்த வருட வரவு செலவுத்திட்டத்தில் கூடுதலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. கரஸ்கல பகுதி போன்ற பின் தங்கிய பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் தங்கியிருப்பதற்கான விடுதிகள் அமைக்கப்படவிருக்கிறது. விடுதி வசதிகள் இருந்தால்தான் கஷ்டமான பகுதிகளிலுள்ள பாடசாலைகளில் சேவையாற்றுவதற்கு ஆசிரியர்களும் முன்வருவார்கள்.’

கிழக்கு மாகாணம் 8063 சதுர கிலோ மீற்றர் பரப்புள்ள மூன்று மாவட்டங்களைக் கொண்ட பிரதேசம். இந்தப் பிரதேசத்தில் பின் தங்கிய கிராமங்கள்தான் அதிகமாக உள்ளது. இங்குதான் கல்வியை அபிவிருத்தி செய்யவேண்டும். கிழக்கில் 985 பாடசாலைகளும் 27 தேசிய பாடசாலைகளும் செயற்பட்டுவருகிறது. இவற்றில் 382,088 மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். இவர்களில் சிங்கள மொழிமூலம் கல்வி கற்கும் மாணவர்கள் 76,669. தமிழ்மொழி மூலம் கல்வி கற்பவர்கள் 305,415 மாணவர்கள். ஆனால், முக்கிய பாடங்களான ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம், தொழில்நுட்ப பாடங்கள் கற்பிப்பதற்கு போதுமான ஆசிரியர்கள் இல்லாதுள்ளது. இவற்றை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டியிருக்கிறது.

அமைதியற்ற சூழ்நிலையினால் மூடப்பட்ட பாடசாலைகளில் 33 பாடசாலைகள் இன்னும் இயங்காது இருக்கிறது. வறுமையின் காரணமாக அதிகமான சிறார்கள் ஆரம்பக் கல்வியைக்கூட கற்றுக்கொள்ள முடியாது இருக்கிறார்கள். இவர்களை கண்டுபிடித்து கல்வியை கற்பிக்கவேண்டும். கிழக்கு மாகாணத்தில் 107 அநாதை சிறுவர் இல்லங்கள் செயல்படுகிறது. இவர்களின் கல்வியும், எதிர்காலம் பற்றியும் நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும். கிழக்கில் 30 வயதுக்கு குறைந்த 33 ஆயிரம் இளம் விதவைகள் உள்ளனர். இவர்களின் 68 ஆயிரம் சிறுவர்கள் வறுமை காரணமாக கல்வியை கற்க முடியாதவர்களாக இருக்கிறார்கள். இவ்வாறான நிலையில் கிழக்கில் கல்வி அபிவிருத்தியை முன்னெடுக்க வேண்டிய பாரிய வேலைத்திட்டமொன்றையும் உருவாக்கவேண்டியிருக்கிறது என்றார்.’

இந்த கருணை நிறைந்த பௌத்த தேசத்தில்……….. : லங்காடிசன்ட்

freethepress._._._._._. 

‘ஜனநாயகமும் கருணையும் நிறைந்த இந்த தேசத்தில் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமில்லை. அதனை கற்றுக் கொள்ள முயற்சிப்பவர்கள் சாவிலேயே கற்றுக் கொள்ள வேண்டும் என்றாகிவிட்டது. அதனால் வாழ விரும்பும் நாங்கள் மாற்றுக் குரல், ஒரு சனநாயக உரிமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டு அனுபவிக்கப்படும் ஒரு நவீன நாட்டில் மற்றவர்களின் பாடுகளுடன் இணைந்து நிற்கும் ஒரு நாட்டில் மீண்டும் வருவோம்’

லங்காடிசன்ற்

._._._._._.

இது கருணை நிறைந்த ‘புத்தரின் தேசம்’ என சிங்கள பௌத்தர்கள் நம்புவதுடன் ஜனநாயக சோசலிச குடியரசு என அரசியலமைப்பில் பெயரிடப்பட்டுள்ள தேசமாகும். அதனால்

‘அறிவின் ஒளியில் புதிய வலுவுடன்
வெறுப்பும் வேறுபாடுகளும் இல்லாதொழிந்து
அன்பின் வலுவடைந்த தேசமாக
எல்லோரும் ஒருவராக அணிவகுத்துச்செல்ல
எம்மை முழுமையான சுதந்திரம் நோக்கி வழிநடத்து தாயே!’
எனத் தமது தேசிய கீதத்தையும் பெருமையுடன்
இசைக்கிறார்கள்.
 
எனினும் கருணையும் ஜனநாயகமும் நிறைந்த இந்த பௌத்த தேசத்தில் ஊடகங்கள் மாற்று கருத்துக்களை கொண்டிருக்க அனுமதியில்லை. ஆட்சியாளர்களின் சட்டங்களை விமர்சிக்க ஊடகங்களுக்கு உரிமையில்லை. மக்களுக்காக பேசும் உரிமையும் ஊடகங்களுக்கு இல்லை.

ஊடகங்களுக்கு கருத்துக்களை தெரிவிக்கும் உரிமை இருப்பதாக சிலர் நினைத்தனர். தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமை இருப்பதாகவும் சிலர் நினைத்தனர். நூதனமான ஒழுக்கம் நிறைந்த சமூகத்தில் உள்ள மக்களுக்கு, இந்த உரிமையை ஒரு அடிப்படை உரிமையாக அனுபவிக்க உரிமை உள்ளது என நினைத்தனர்.

ஜனநாயகமும், கருணையும் நிறைந்த இந்த தேசத்தில் இவ்வாறான உரிமை இல்லை என தேசத்தை ஆளும் தேசப்பற்றுள்ள தரப்பினர் பகிரங்கமாவே தெரிவித்துள்ளனர்.

வடக்கில் இருந்த தமிழ் ஊடகங்களே முதலில் இந்த முகத்தில் அறையும் உண்மையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இது முதலில் மிகவும் பகிரங்கமாகவும் கொடூரமாகவும் கற்பிக்கப்பட்டது.

அப்போது வடக்கில் இருந்து வந்த மாறுபட்ட குரல்களை வேறு இடங்களில் ஒலிக்கச் செய்ய கொழும்பு ஊடகங்கள் விரும்பியிருக்கவில்லை. வடக்கில் எழுந்த அந்த உரிமையின் குரலைக் கேட்பதற்கும் தெற்கில் உள்ள ஊடகங்கள் தயாராக இருக்கவில்லை.

சிலர் அவர்கள் பாடம் படிக்கட்டும் என்றே விட்டுவிட்டனர். எங்களுடன் இல்லாத அவர்கள் படித்த பாடம் எங்களுக்கு தேவையில்லையெனவும் கருதியிருந்தனர். அவர்கள் படித்த பாடங்களை எங்களுக்குச் சொல்ல அவர்கள் உரிமையற்றிருந்தார்கள். அவர்கள் அதைச் சொல்லியிருப்பின் இன்னும் சில காலம் வாழும் உரிமையை இழந்திருப்பார்கள். தற்போது தென் பகுதி ஊடகங்கள் அதனை அனுபவிக்க நேர்ந்துள்ளது.

எனினும் அந்தப் பாடத்தைக் கற்றுக் கொடுக்க, அதனை கற்றறிந்தவர் பலர் இன்று எம்மிடத்தில் இல்லை. சிலர் மேலும் சில காலம் உயிர் வாழும் உரிமைக்காக, கற்றுக் கொடுக்கும் அந்த உரிமையை ரத்துச் செய்து கொண்டுள்ளனர். மேலும் சிலரின் உரிமைகள் அவர்களின் ஊடக நிறுவவனங்களுடன் தீப் பற்றி எரிந்து போனது. இந்தப் பாடத்தைக் கற்றுக் கொள்ளவே சிரச ஊடக நிறுவனம் எரியூட்டப்பட்டது.

இந்த நிலையில் எவருக்கும் அடிபணியாத ஊடக செயற்பாடுகளுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவுக்கு இது வெற்றி கொள்ள வேண்டிய சவாலாக இருந்தது. இதனை எதிர் கொள்ளும் போது, அவர் வார்த்தைகளை மறைத்து வைக்கவில்லை. இந்த சவாலை எதிர்கொள்ள அவர் தனக்கே உரித்தான பாணியை கைக்கொண்டிருந்தார். இதற்காக அவர் பாராட்டப்பட்டார். கௌரவிக்கப்பட்டார். அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டார். இதனால் சவாலை வெற்றி கொள்ள முடியாது அவர் தனிமையானார்.

இது அடிக்கடி படித்துக் கற்றுக்கொள்ளும் பாடம் இல்லை. ஜனநாயகமும் கருணையும் நிறைந்த இந்த தேசத்தில் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமில்லை. அதனை கற்றுக் கொள்ள முயற்சிப்பவர்கள் சாவிலேயே கற்றுக் கொள்ள வேண்டும் என்றாகிவிட்டது. அதனால் வாழ விரும்பும் நாங்கள் மாற்றுக் குரல், ஒரு சனநாயக உரிமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டு அனுபவிக்கப்படும் ஒரு நவீன நாட்டில் மற்றவர்களின் பாடுகளுடன் இணைந்து நிற்கும் ஒரு நாட்டில் மீண்டும் வருவோம். அதுவரையில்….

லங்காடிசன்ட் ஆசிரியர்.