எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

துரித விசாரணைக்கு அரசாங்கம் பணிப்பு; நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதற்கு சதி

laksman-yaappa.jpg“சண்டே லீடர்” பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்தவிக்கிரமதுங்க சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தை அரசாங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது. தகவல், ஊடகத்துறை அமைச்சர்களான அனுரபிரிய தர்ஷணயாப்பா, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ஆகியோர் இக் கண்டனத்தை நேற்று வெளியிட்டனர். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற போது, இச் சம்பவத்தை அரசாங்கம் வன்மையாகக் கண்டிப்பதாக இரு அமைச்சர்களும் குறிப்பிட்டனர்.

இது தொடர்பாக அமைச்சர்கள் மேலும் குறிப்பிடுகையில், சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியரான லசந்த விக்கிரமதுங்க ஜனாதிபதியுடனும், அரசாங்கத்துடனும் நல்லுறவைப் பேணி வந்தார். அவர், அவரது திருமண வைபவத்திற்கு அழைத்திருந்த முக்கியஸ்தர்களில் ஜனாதிபதியே பிரதானமானவர். அரசாங்கத்திற்கும், அவருக்குமிடையில் தனிப்பட்ட முறையில் எதுவிதமான பிரச்சினையுமே கிடையாது. இப்படுகொலைச் சம்பவத்தை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இச் சம்பவத்தில் தொடர்புள்ளவர்களை தேடிக் கைது செய்து சட்டத்தின் முன் ஆஜர்படுத்துவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. பொலிஸாருக்கு தேவையான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.

புனிதத் தலமான தலதா மாளிகையின் புகைப்படத்தை தேர்தல் சுவரொட்டிக்குப் பயன்படுத்துவது முறையாகுமா?

vote.jpgமத்திய மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவரான தலதா மாளிகையின் முன்னாள் தியவதன நிலமே நிரஞ்சன் விஜயரட்ன (ஐ. தே. க.) அவரது புகைப்படத்துடன் கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் படத்தையும் புனித தந்தசின்னப் பேழையையும் இணைத்து சுவரொட்டிகள் தயாரிக்கப்பட்டிருப்பதை மல்வத்தை பீடாதிபதி திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் கண்டித்தார்.

முன்னாள் பிரதி பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் அனுருத்த ரத்வத்தை அவரது புதல்வரும் மத்திய மாகாண சபைத் தேர்தலில் ஐ. ம. சு. கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் லொகான் ரத்வத்தை ஆகிய இருவரும் (முதலாம் திகதி) மல்வத்தை பீடாதிபதியை அவரது வாசஸ்தலத்திற்குச் சென்று ஆசீர்வாதம் பெறச் சென்ற வேளையிலேயே மகாநாயக்கர் மேற்கண்டவாறு அதிருப்தி தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது :- தலதா மாளிகையையும் புனித தந்த சின்னப் பேழையையும் தமது அரசியல் நடவடிக்கைகளுக்காக தலதா மாளிகையின் நிலமேயாக இருந்தமைக்காக அவற்றைப் பிரயோகிக்க இயலாது. இந்தச் சுவரொட்டிகள் மலசல கூடங்கள் உட்பட பல இடங்களில் ஒட்டப்படுகின்றன. இந்தச் செயலானது பெளத்த சமயத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதாகவே அமையும் எனக் கருதலாம்.

எனவே இந்த நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென அவர் அவ்விருவரிடமும் எடுத்துக்காட்டினார். இதேபோன்று அஸ்கிரிய பீடாதிபதி உடுகம ஸ்ரீ புத்தரக்கித்த தேரரும் ஐ. தே. கட்சி மாகாண சபை வேட்பாளரைக் குறைகூறியிருக்கிறார்.

பதிவு செய்யப்படாத நிதி நிறுவனங்களை முடக்க மத்திய வங்கி எடுத்துள்ள நடவடிக்கை என்ன? – ஜே.வி.பி. சபையில் கேள்வி.

sl-parlimant.jpg“கோல் டன் கீ’ கடனட்டை நிறுவனம் தொடர்பாக ஜே.வி.பி.யின் பாராளுமன்ற குழுத்தலைவரான அநுரகுமார திஸாநாயக்க எழுப்பிய கேள்வியால் புதன்கிழமை சபையில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் விசேட அறிக்கையொன்றை விடுத்து பேசிய அநுரகுமார திஸாநாயக்க பதிவு செய்யப்படாத நிதி நிறுவனங்களின் செயற்பாடுகளை நிறுத்த மத்திய வங்கி எடுத்திருக்கும் நடவடிக்கை என்ன? கோல்டன் கீ கடனட்டை நிறுவனத்தின் வைப்பீட்டாளர்கள் மற்றும் ஊழியர்கள் தொடர்பாக அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கை என்ன? போன்ற கேள்விகளை எழுப்பியிருந்தார். கேட்கப்பட்ட கேள்விகள் தொடர்பாக அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக சுட்டிக் காட்டி பிரதி நிதியமைச்சர் கேள்விக்கு சுருக்கமான பதிலை வழங்கியதுடன், விரிவான பதிலை அறிக்கையாக சபைக்கு ஆற்றுப் படுத்துவதாகவும் கூறினார்.

இதேநேரம், பிரதி நிதியமைச்சரிடம் மீண்டுமொரு விளக்கத்தை கோரிய அநுரகுமார திஸாநாயக்க எம்.பி., “நிதி நிறுவனங்களில் மோசடி ஏற்பட்டு மூடி விட்ட பின்னர், அந்த நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டதொன்றல்லவென மத்திய வங்கி கூறுகிறது. ஏற்கனவே சக்வித்தி மோசடியின் போது மத்திய வங்கி இதையே கூறியது. தற்போது, கோல்டன் கீ கடனட்டை நிறுவனம் மூடப்பட்டதும் இதையே மத்திய வங்கி கூறுகிறது. 2006 ஆம் ஆண்டில் பொது நிறுவனங்கள் பற்றிய பாராளுமன்றக் குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட போதே, பதிவு செய்யப்படாத நிதி நிறுவனங்கள் பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க மத்திய வங்கியின் ஆளுநரான அஜித் நிவாட் கப்ரால் 2 மாதகால அவகாசம் கோறியிருந்தார். ஆனால் இதுவரை அவ்வாறான அறிக்கை எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை’ என்று சுட்டிக்காட்டினார்.

எனவே, கோல்டன் கீ விவகாரத்தில், வைப்பீட்டாளர்களும் அந்த நிறுவனத்தின் ஊழியர்களும் அத்துடன் வங்கியாளர்களும் பாதிக்கப்பட்டிருப்பதால் இந்த விடயம் தொடர்பில் மத்திய வங்கி மற்றும் அரசாங்கத்தால் எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் என்னவென்று அது பற்றிய பதிலை மட்டும் சபைக்கு தெரிவிக்குமாறு பிரதி நிதியமைச்சரிடம் கோரினார். இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய பிரதி நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, தான் ஏற்கனவே பதிலை சபைக்கு சமர்ப்பித்து விட்டதாகக் கூறியதுடன் மத்திய வங்கியால் பதிவு செய்யப்பட்ட நிதி நிறுவனங்களின் பெயர் விபரங்கள் வெளியிடப் பட்டதன் மூலம், ஏனையவை பதிவு செய்யப்படாத நிறுவனங்களாகவே பொருள்படுமென சுட்டிக் காட்டினார். பதிவு செய்யப்படாத நிறுவனங்களின் பெயர் விபரங்களை வெளியிட சென்று, அதில் ஏதாவதொரு பதிவு செய்யப்படாத நிறுவனத்தின் பெயர் உள்வாங்கப்படவில்லையெனில் அந்த நிறுவனம் பதிவு செய்த நிறுவனமாக அர்த்தப்படுத்தப்பட்டு விடுமென்று பிரதி அமைச்சர் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். எனினும் அந்த பதிலில் திருப்திப் படாத அநுரகுமார திஸாநாயக்க, கோல்டன் கீ விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் என்னவென்பதை மட்டும் பதிலாக தருமாறு கோரினார்.

‘காஸா தாக்குதல்’ பதவியேற்கமுன் ஒபாமா இஸ்ரேலுக்கு அளித்துள்ள பரிசு. – சவாஹிரி

israeli-aircraft.jpgஅமெ ரிக்காவின் புதிய ஜனாதிபதி பராக் ஒபாமா இஸ்ரேலின் நண்பரென்றும் காஸா மீதான தாக்குதலை நிறுத்த முயற்சிக்கமாட்டாரெனவும் அல்-கைதாவின் இரண்டாம் மட்டத்தலைவர் அய்மன் அல்ஸவாஹிரி தெரிவித்துள்ளார். இவரின் உரையடங்கிய ஒலிநாடா அல் கைதாவின் இணையத்தளத்தில் வெளியானது. காஸா மீதான தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் அல்-கைதாவால் வெளியிடப்பட்ட முதல் ஒலி நாடா இதுவாகும்.

அல்-கைதாவின் இரண்டாம் மட்டத் தலைவர் அய்மன் ஸவாஹிரி இதில் அமெரிக்கா இஸ்ரேல் மற்றும் எகிப்திய ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் ஆகியோரைக் கடுமையாக விமர்சித்துள்ளார். அந்த ஒலி நாடாவில் தெரிவிக்கப்பட்டதாவது :- பராக் ஒபாமா அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கைகளை மாற்றுவார். முஸ்லிம்களுக்கு சாதகமாக நடந்துகொள்வார் என்ற எதிர்பார்ப்பெல்லாம் போலியானது. ஒபாமா எப்போதும் இஸ்ரேலின் நண்பர். காஸா தாக்குதல் அவர் இஸ்ரேலுக்குக் வழங்கியுள்ள பரிசு.

காஸா மக்களையும், குழந்தைகளையும் இஸ்ரேலின் தாக்குதலிலிருந்து காப்பாற்ற அவர் முன்வரமாட்டார். இஹ்வால் முஸ்லிம்களை அடக்கியாள நினைக்கும் எகிப்திய ஜனாதிபதி முஸ்லிம்களின் ஒட்டு மொத்த துரோகி இஸ்ரேலின் கொலைகளுக்கான விளைவுகளை டெல்அவிவ் விரைவில் எதிர்கொள்ளுமெனவும் அவ்வுரை யிலே ஸவாஹிரி கூறியுள்ளார். அரபு ஆட்சியாளர்களையும் அல்-கைதா சாடியுள்ளது. பலஸ்தீனச் சிறுவர்கள், குழந்தைகள் முதியோர்கள் கொல்லப்படுவதானது உலகெங்குமுள்ள யூதர்களைக் கொலை செய்யப்படவுள்ளதை நியாயப்படுத்தியுள்ளதாக காஸாவை ஆளும் ஹமாஸ் தெரிவித்துள்ளதும் தெரிந்தது.

கிளிநொச்சி வீழ்ச்சி தற்காலிகமானதே. மீண்டும் எங்களிடமே கிளிநொச்சி வந்து சேரும் – பா.நடேசன் நம்பிக்கை

nadesan.jpgஇது தொடர்பாக புலிகள் ஆதரவு தமிழ்நெட் இணையதளத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், கிளிநொச்சியில்தான் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தோல்விகளைத் தழுவியுள்ளது இலங்கை ராணுவம். எனவே மீண்டும் கிளிநொச்சி எங்களிடமே வந்து சேரும். அந்த நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. உலக நாடுகளின் ஆயுத பலத்தோடு இலங்கை ராணுவம் எங்களுடன் மோதி வருகிறது. ஆனால் மக்களின் ஆதரவுடன் மட்டும் நாங்கள் போராடி வருகிறோம். எனவே இந்தப் போரில் எங்களுக்கே இறுதி வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு பலமாக உள்ளது.ஈழத்தமிழர்கள் யாருமற்ற அனாதைகள் அல்ல. அவர்களுக்கு துன்பம் ஏற்படும் போது 7 கோடி தமிழர்கள் தமிழ் நாட்டில் இருந்து குரல் கொடுப்பார்கள்.

கிளிநொச்சியை ராணுவம் பிடித்துள்ளதை விடுதலைப்புலிகளுக்கு ஏற்பட்ட பின்னடைவாக நாங்கள் பார்க்கவில்லை. போரில் இழப்புகளை குறைப்பதற்காக பின் வாங்கி செல்வது என்பது ஒரு தந்திரம். தமிழ் இனத்தை பூண்டோடு அழிக்கவே இலங்கை அரசு நினைக்கிறது.  கிளிநொச்சியில் உள்ள மக்கள் இப்போது வன்னி பகுதியில் பாதுகாப்பான இடத்துக்கு இடம் பெயர்ந்துள்ளனர். இழந்த பகுதிகளை விடுதலைப் புலிகள் மீண்டும் கைப்பற்றுவார்கள்.

இலங்கை அரசுக்கு இந்தியா ராணுவ உதவிக ளை நிறுத்தி எங்கள் மக்களின் விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும். புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும். உலக தமிழினம் ஒன்றுபட்டு எங்கள் விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும். தமிழ் மக்களிடமிருந்து எங்களை அன்னியப்படுத்தி விடலாம் என இலங்கை அரசு நினைக்கிறது. ஆனால் இது வெற்றி பெறாது. ஊடுறுவல் படையின் ஏஜென்டுகள் மற்றும் பொம்மை மனிதர்களின் முயற்சிகள் பலிக்காது.இலங்கை ஆட்சியாளர்களின் அடக்குமுறையிலிருந்து தமிழ் மக்களை மட்டுமல்லாது சிங்கள மக்களையும் கூட நாங்கள் காத்துள்ளோம். சிங்கள மக்களுக்காவும்தான் நாங்கள் குரல் கொடுத்து வருகிறோம் என்றார் அவர்.

இந்திய விமானம் ஊடுருவியதாக வெளியான செய்தி பொய் – பிரதமர்

air.jpgகிளி நொச்சியை படையினர் கைப்பற்றும் போது இந்திய விமானங்கள் இலங்கை வான்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து நோட்டம்விட்டதாக வெளிவந்துள்ள செய்தியை பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்கா மறுத்தார். பாராளுமன்றத்தில் நேற்று ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க பிரதமரிடம் மேற்படி விடயம் தொடர்பான கேள்வியொன்றை கேட்டார்.

இந்திய விமானங்கள் கிளிநொச்சி வான்பரப்புக்குள் பறந்தவாறு நோட்டம்விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவ்வாறு இலங்கை வான்பரப்புக்குள் இந்திய உளவு விமானங்களுக்கு வருவதற்கு அனுமதித்தது யார்? இவ்வாறான செய்தி பற்றி விளக்கமளிக்க முடியுமா என அனுரகுமார திஸாநாயக்க எம். பி. கேள்வி எழுப்பினார்.

பிரதமர் இதற்கு பதிலளிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

பதிலளிப்பதற்காக எழுந்த பிரதமர் ரத்னசிறி விக்கிரம நாயக்க “பொய்யான செய்தி” எனக் கூறிவிட்டு அமர்ந்தார்.

வன்னிக்கான வழித்துணை சேவையில் மீண்டும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்

கடந்த ஐந்து நாட்களின் பின்னர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் புதன்கிழமை அரச கட்டுப்பாடற்ற பகுதிக்கும் கட்டுப்பாட்டுப் பகுதிக்குமிடையில் வழித்துணை சேவையில் ஈடுபட்டது. படையினரும் விடுதலைப் புலிகளும் உறுதி மொழி வழங்கியதையடுத்தே வழித்துணை சேவையில் ஈடுபட்டதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் ரெரசி விஜேயவர்த்தன தெரிவித்தார்.

அத்துடன்,  புதன்கிழமை ஒன்பது அம்புலன்ஸுக்கு வழித்துணை வழங்கியதையடுத்து 47 நோயாளர்கள் சேவையைப் பெற்றதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, இச்சேவை வியாழக்கிழமையும் வழங்கப்படும் பட்சத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான 40 உணவு லொறிகள் செல்லுமென அம்மாவட்ட செயலகங்களின் வவுனியா இணைப்பு கிளை அலுவலகங்கள் தெரிவித்தன. இது இல்லாதிருக்க உலக உணவுத் திட்டத்தின் லொறிகளும் வவுனியாவிலிருந்து வன்னிக்கு செல்லுமெனவும் தெரியவருகின்றது.

கடந்த சனிக்கிழமை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை முடிவுகள் வெளியான போதும் வன்னிக்கான வழித்துணை சேவை வழங்கப்படாததையடுத்து பாடசாலைகளுக்கான பரீட்சை முடிவுகள் தபால் மூலம் எடுத்துச் செல்லப்படவில்லை. இவையும் இன்று எடுத்துச் செல்லப்படலாமெனவும் தெரியவருகின்றது. பரீட்சை முடிவுகளை கடந்த சனிக்கிழமை கொழும்பு மற்றும் ஜெயவர்தனபுர கல்வி வலயப் பாடசாலைகளுக்கு பரீட்சைகள் திணைக்களம் வழங்கிய நிலையில் ஏனைய கல்வி வலயங்களுக்கான பரீட்சை முடிவுகளை தபாலில் அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது

வேட்பு மனுத் தாக்கலின் பின் 8 தேர்தல் வன்முறைகள்

ballot-box.jpgதேர்த லைக் கண்காணிக்கும் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே) வேட்பு மனுத்தாக்கல் திகதி அறிவிக்கப்பட்டது முதல் நேற்று புதன்கிழமை வரை 8 தேர்தல் வன்முறை சம்பவங்களை பதிவு செய்துள்ளது. இது குறித்து அவ்வியக்கத்தின் ஊடகப் பேச்சாளர் கீர்த்தி தென்னக்கோன் கருத்து தெரிவிக்கையில்;

தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் திகதியான டிசம்பர் 11 முதல் அறிவிக்கப் பட்டதையடுத்து  புதன்கிழமை வரை 8 தேர்தல் வன்முறைச் சம்பவங்களை பதிவு செய்துள்ளோம். இறுதி தேர்தல் வன்முறைச் சம்பவமாக புத்தளத்தில் முஸ்லிம் காங்கிரஸ் காரியாலயம் தாக்கப்பட்டு அங்குள்ள சொத்துக்கள் சேதமாக்கப்பட்டதை இறுதியாக நாம் பதிவு செய்துள்ளோம். இத்தாக்குதலுடன் வடமேல் மாகாணத்தில் 3 வன்முறைகள் இடம் பெற்றுள்ள அதேசமயம் மத்திய மாகாணத்தில் 5 சம்பவங்களையும் பதிவு செய்துள்ளோம்.

தற்போதே வேட்பாளருக்கான இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் காலங்களில் தேர்தல் வன்முறை அதிகரிக்கும் சாத்தியமுள்ளதெனத் தெரிவித்தார்.

இலங்கையில் சமஷ்டித் தீர்வு முயற்சிகளை இந்தியா முன்னெடுக்க வேண்டும் – பாட்டாளி மக்கள் கட்சி நிறுவுநர் ராமதாஸ்

இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை மேசையில் விவாதிக்கக் கூடிய தேர்வுகளில் ஒன்றாக சமஷ்டி முறை கட்டமைப்பை உருவாக்குதல் அமையும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுநர் டாக்டர். எஸ். ராமதாஸ் கூறியுள்ளார்.  “இந்து’ பத்திரிகைக்கு  செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டியில் இதனைக் குறிப்பிட்டிருக்கும் ராமதாஸ், சமஷ்டி முறைமை யோசனைக்கு புலிகள் ஆதரவு தெரிவித்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகரான மறைந்த அன்ரன் பாலசிங்கம் இருந்த போது இந்த யோசனைக்கு புலிகள் ஆதரவு தெரிவித்திருந்தனர். இந்த யோசனை பற்றி கலந்துரையாடுவதற்கு முன்னர் யுத்த நிறுத்தம் ஏற்பட வேண்டும். இந்தப் பாதையில் நடவடிக்கைகளை இந்திய அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். இன நெருக்கடிக்கு தீர்வு காணும் முழு நடவடிக்கைகளிலும் விடுதலைப் புலிகள் உள்ளடக்கப்பட வேண்டும். விடுதலைப் புலிகளை அழித்ததன் பின்னர் இணக்கப்பாடு காண்பதென்பது முட்டாள்தனமானதாகும். தேர்வானது தமிழ் தாயக சுயாட்சியை கொண்டதாக இருக்க வேண்டும். இலங்கை அரசும் புலிகளும் பேச்சுவார்த்தையூடாக இதனை எட்ட வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட முயற்சிகளை ராமதாஸ் பாராட்டியுள்ளார். ஆனாலும், துரதிர்ஷ்டவசமாக அவர் ஆட்சி நீடித்திருக்கவில்லை என்றும் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். இலங்கையானது பல்லின, பல்மத, பல்கலாசார நாடென்பதை இலங்கைத் தலைவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சியின் போது இதனை மனதில் கொள்ள வேண்டும் என்றும் ராமதாஸ் கூறியுள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலையின் பின்னர் புலிகள் நம்பிக்கையானவர்களாக இருக்கிறார்களா என்று கேட்கப்பட்ட போது, நோர்வே இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சிகளில் ஈடுபட்டது. புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது இதன் மூலம் இலங்கைத் தமிழரின் பிரதிநிதிகள் புலிகள் என்பதைக் காண முடிகிறது என்றும் ராமதாஸ் சுட்டிக்காட்டினார். இனநெருக்கடி தொடர்பாக இந்திய மத்திய அரசின் மனப்பாங்கு குறித்து ராமதாஸ் கவலை தெரிவித்தார். ராஜீவ்காந்தி பிரதமராக இருந்த போது இப்பிரச்சினை தொடர்பாக அவர் கொண்டிருந்த உணர்வு தற்போதைய ஆட்சியாளரிடம் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

இலங்கைத் தமிழரின் நியாயபூர்வமான உரிமைகள் என்ற ரீதியிலேயே இப்பிரச்சினை தொடர்பாக அக்கறை காட்ட வேண்டும். பயங்கரவாதமென்ற கோணத்தில் பார்க்கக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். இலங்கைப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு என்று இந்திய அரசு காலத்துக்குக் காலம் கூறி வருகின்ற போதும் அதன் கொள்கை மாறவில்லை எனவும் வார்த்தைகள் செயலில் இல்லை என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். இப்பிரச்சினையின் பாரதூரமான நிலைமை குறித்து போதியளவுக்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி ஆகியோருக்கு தெரிவித்திருப்பதாகவும் ஆனால், முழுக் கொள்கையையும் சில அதிகாரிகளே தீர்மானிப்பதாகவும் ராமதாஸ் கூறியுள்ளார்.

தமிழீழம் உருவாக்கப்படுவது இந்தியாவுக்கு கேந்திர உபாய ரீதியான அனுகூலமாக அமையுமென குறிப்பிட்ட அவர், இலங்கை இந்தியாவின் நண்பனாக இல்லையெனவும் பாகிஸ்தான் அல்லது சீனா அல்லது அமெரிக்கா இலங்கைக்கு முன்னுரிமைக்குரியதாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

‘வடக்கு, கிழக்கில் மீட்கப்பட்ட பகுதிகளில் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கு தேசத்தை கட்டியெழுப்பும் நிதி பயன்படுத்தப்படும்’

ranjith-shiyambalapitiya.jpgவிடு தலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட வடக்கு கிழக்கு பிரதேசங்களை மீளக்கட்டியெழுப்பவும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி அம்மக்களுடனான சகோதரத்துவத்தைப் பலப்படுத்துவதற்காகத் தேசத்தை கட்டியெழுப்புவதற்கான வரி உபயோகப்படுத்தப்படுமென நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அதே வேளை, தற்போதுள்ள சகல சவால்களுக்குள்ளும் இவ்வருடத்திற்கான அரச வருமானமாக 850 பில்லியன் ரூபாவைப் பெற்றுக்கொள்வதற்கும் அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று தேசத்தைக் கட்டியெழுப்பு வதற்கான வரி அறவீட்டுச் சட்டமூலத்தைச் சபையில் சமர்ப்பித்து அதன் மீதான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி நூற்றுக்கு ஒரு வீதமாக அறவிடப்படவுள்ளதுடன் ஆறரை இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட புரள்வுக்கே இவ்வரி அறவிடப்படுவதுடன் சிறு உற்பத்தியாளர்களிடமிருந்து இவ்வரி அறவிடப்படமாட்டாது எனவும் அமைச்சர் தெரிவித்தார். மேற்படி வரிச் சட்டமூலம் தொடர்பாக மேலும் விளக்கிய அமைச்சர்:-

இலங்கைக்கான அன்னியச் செலாவணியை அதிகரிக்கும் நோக்கில் சகல ஏற்றுமதிகளுக்கும் இவ்வரி விலக்குச் செய்யப்படவுள்ளது. அத்துடன் சகல அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதிக்கும் இவ்வரி விலக்குச் சலுகை வழங்கப்படவுள்ளது. இலங்கைக்கு அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படும்போது விசேட வர்த்தகப் பொருட்கள் வரி முறைமை நடைமுறையிலுள்ளது.

இந்த வரிமுறைமையின் கீழ் இறக்குமதி செய்யப்படும் சகல அத்தியாவசியப் பொருட்களுக்கும் இவ்வரி விலக்கு உரித்துடையது. இதற்கு மேலதிகமாக இலங்கையின் பொருளாதாரத்திற்கு உடனடித் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பொருட்களுக்கும் இவ்வரிவிலக்கு வழங்கப்படவுள்ளது. இதற்கிணங்க, விவசாயிகளுக்கான உரவகை, எரிபொருள், சமையல் எரிவாயு, சகல மருந்துப் பொருட்கள் ஆகியவற்றிற்கும் இவ்வரி விலக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் அன்னிய செலாவணியைப் பெற்றுத்தரும் சேவைகளுக்கும் இவ்வரி விலக்கு வழங்கப்படும்.  நாட்டிலுள்ள வங்கிகள் நாட்டின் பொருளாதாரத்திற்குச் செய்யும் பங்களிப்பினைக் கருத்திற் கொண்டு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கும் ஆயுள் காப்புறுதித் திட்டங்களுக்கும் இவ்வரிவிலக்கு உரித்துடையதாகிறது. இலங்கையின். தேயிலைத்துறை தற்போது வீழ்ச்சி கண்டுள்ளதைக் கருத்திற்கொண்டு தேயிலை உற்பத்தி நடவடிக்கைகளிலும் இவ்வரி விலக்கு உட்படுகிறது.

பயங்கரவாதத்தினால் சீர்குலைந்து போயுள்ள வடக்கின் ரயில்சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் வகையில் வடக்கிற்கான ரயில் பாதைகள் புனரமைக்கப்பட்டு வருகின்றன. விரைவில் யாழ்.தேவி வடக்கிற்குச் செல்லும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.