எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

காஸா வட பகுதியில் கடும் சமர்; சில பகுதிகள் இஸ்ரேல் வசம்

gaasaa.jpgகாஸா மீது தரைமார்க்கமான படையெடுப்பை நேற்று இஸ்ரேல் ஆரம்பித்தது. உலக நாடுகளின் அறிவுரைகளை உதாசீனம் செய்த இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினரின் காட்டுப்பாட்டில் உள்ள காஸாவை நோக்கி படைகளை நகர்த்தியது. இதனால் இரு தரப்புக்குமிடையே மூர்க்கமான மோதல்கள் வெடித்தன. ஹமாஸின் தொடர்ச்சியான ரொக்கட் தாக்குதலையும், வீதியோரக் குண்டுத் தாக்குதல்களையும் எதிர்கொள்ள முடியாமல் திணறிய இஸ்ரேல் இராணுவத்துக்கு வான்படைகள் உதவின.

வீதியோரங்களில் நின்ற ஹமாஸ் தற்கொலைப் போராளிகள் மீது விமானங்கள் குண்டு மழை பொழிய யுத்த டாங்கிகள், கவச வாகனங்கள் ஆட்டிலறிகளுடன் இஸ்ரேல் தரைப்படை காஸாவை நோக்கி நகர்ந்தன. காஸாவின் வடக்குப் பகுதி நோக்கி நகர்ந்த இஸ்ரேல் இராணுவத்தை ஜபாலியா டெல்ட் ஹனூன், டெல்ட் லாஹ்யா என்ற இடங்களில் வைத்து ஹமாஸ் அமைப்பினர் தொடர்ச்சியான ரொக்கட் தாக்குதலை நடத்தினர். இரு தரப்பாருக்குமிடையே இவ்விடங்களில் கடும் சமர் மூண்டதால் விண்ணைப் பிளக்கும் வெடியோசைகள் கேட்டதாக தப்பியோடிய பொதுமக்கள் தெரிவித்தனர்.

வான் படைகளின் தொடர்ச்சியான குண்டுத் தாக்குதலின் உதவியுடன் முன்னேறிய இஸ்ரேல் படையினர் காஸாவின் வடக்குப் பகுதியின் ஒரு பகுதியைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். ஹமாஸின் முக்கியஸ்தர்கள் சுரங்கப் பாதைகளுக்குள் மறைந்திருந்து வான் தாக்குதல்களிலிருந்து தப்பியுள்ளதாக ஹமாஸின் வானொலியை இடைமறித்துக் கேட்ட இஸ்ரேல் இராணுவத்தினர் தெரிவித்தனர். மத்திய கிழக்கில் தற்போது மூண்டுள்ள நெருக்கடி பாரிய விளைவுகளை ஏற்படுத்துமென எச்சரித்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி தாக்குதலை உடனடியாக நிறுத்தி அப்பாவிகளின் உயிர்களைக் காக்க உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். ஐ. நா. செயலாளர் பான்கி மூன் காஸா மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதலைக் கண்டித்துள்ளதுடன் அரபு நாடுகள் இது விடயத்தில் பொறுமையுடன் நடந்துகொள்ள வேண்டுமென வேண்டியுள்ளார். அகதிகளாகியுள்ள காஸா மக்களைக் காப்பாற்ற அரபு லீக் நடவடிக்கையெடுப்பது அவசியமென இஸ்லாமிய நாடுகள் தெரிவித்துள்ளன.

விமானப் படைத் தளபதியை தற்கொலை குண்டுதாரி இலக்கு வைத்தாரா?

blast.jpgகடந்த வெள்ளிக்கிழமை விமானப்படை தலைமையகத்தின் முன்பாக இடம்பெற்ற தற்கொலைக்குண்டுத்தாக்குதல் விமானப் படைத்தளபதி ஏயார் சீவ் மார்ஷல் றொசான் குணத் திலகவை இலக்கு வைத்தே நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் , சம்பவ நேரம் விமானப் படைத்தளபதி விமானப்படைத்தலைமையகத்துக்கு வரவில்லை எனவும், அவர் தனது தங்குமிடத்துக்குச் சென்று விட்டார் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கிளிநொச்சியை படையினர் மீட்ட வெற்றி நாள் நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றபோது அதில் விமானப் படைத்தளபதியும் கலந்துகொண்டனர். ஜனாதிபதி செயலகத்தில் நிகழ்வு முடிந்த பின்னர் விமானப்படைத்தளபதி விமானத் தலைமையகத்துக்கு வருவார் என்று எண்ணி தற்கொலைக்குண்டுதாரி இருந்துள்ளார். ஆனால் , விமானப்படைத்தளபதி ஜனாதிபதி செயலகத்தில் நிகழ்வுகள் முடிவுற்றதும் நேரடியாகவே தனது இருப்பிடத்துக்கு சென்றுள்ளார். இதனால் அவர் இத்தாக்குதலில் சிக்காமல் தப்பியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேல்மாகாணத்தில் சுமுகமான பொலிஸ் கணக்கெடுப்பு

colo-reg.jpgவடக்கு, கிழக்கு பகுதிகளிலிருந்து மேல் மாகாணத்தில் 2003ம் ஆண்டிற்கு பின்னர் தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ வதிபர்கள் தொடர்பான கணக்கெப்பு நேற்று இடம்பெற்றது.  மேல் மாகாணத்திற்கு உட்பட்ட சகல பொலிஸ் பிரிவுகளிலும் நேற்றுக் காலை 8.00 மணி தொடக்கம் மாலை 6.00 மணி வரை இடம்பெற்ற இந்த கணக் கெடுப்பில் பெருந்தொகையானோர் பங்குகொண்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் வதிபவர்களே நேற்றைய கணக்கெடுப்புக்கு உட்படுத்தப்பட்டனர்.

அந்தந்த பிரதேசத்திலுள்ள பொலிஸ் நிலையங்களிலும் விசேடமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிலையங்களிலும் மக்கள் ஆர்வத்துடன் வந்து தமது தகவல்களை வழங்கிய துடன் குறித்த பிரதேசங்களின் பாதுகாப்பும் பலப்படுத் தப்பட்டிருந்தன. கணக்கெடுப்பில் கலந்து கொள்ள வந்த மக்கள் எவ்வித தங்கு தடைகளும், தாமதங்களுமின்றி பதிவு செய்ய சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

கருணா – பிள்ளையான் இணைவு

karuna.jpgதமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கட்சியின் அதன் பிரதித்தலைவரான கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கும்,  அதன் முன்னாள’ தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரனுக்குமிடையே கடந்த சில காலமாக நலவிய பனிப்போருக்கு முற்றுப்புள்ளி வைத்து இருவரும் ஒன்று சேர்ந்து இயங்கத் தீர்மானித்துள்ளனர். கருணா அணிக்கும் பிள்ளையான் அணிக்குமிடையே கடந்த சில தினங்களாக நடைபெற்ற பல சுற்றுப்பேச்சு வார்த்தைகளின் பின் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த நன்மையைக் கருத்திற் கொண்டு இரு தரப்பினரும் இணங்கி செயற்படுவதற்கு இணக்கம் கண்டுள்ளனர் என இலங்கையிலிருந்து வெளிவரும் நவமணி பத்திரிகை பிரதான செய்தியில் குறிப்பிட்டிருந்தது.

அச்செய்தியில் மேலும் காணப்படுவதாவது,  தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தலைவர் பதவியை  பாராளுமன்ற உறுப்பினர் கருணாவும், கட்சியின் செயலாளர் பதவியை முதலமைச்சர் பிள்ளையானும் பெறுப்பேற்கவுள்ளதாகத் தெரிகிறது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கட்சியின் தலைவராக இருந்த கருணா பிரித்தானியா சென்று கைது செய்யப்பட்டதையடுத்து பிள்ளையானும் அண்மையில் கொல்லப்பட்ட ரகுவும் கட்சியின் பிரதானிகளானார்கள். கருணா நாடு திரும்பிய பின் கட்சிக்குள் ஏற்பட்ட முரண்பாடு மும்முரமடைந்து கட்சி இரண்டு கூறாக பிரியும் நிலை உருவானது. தமிழ் மக்கள் விடுதலை கூட்டணி என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை அமைப்பதற்கு கருணா அணியினர் தயாராகினர்.

ரீ.வீ.என்.பி. கட்சி பிளவுபடுவது கிழக்கு மாகாண தமிழ் மக்களது எதிர்காலத்திற்கு பாதிப்பாக அமையும் என்பதில் அக்கறை கொண்ட சில சக்திகள் முயற்சி செய்து இரு தரப்பினரையும் சமரசப்படுத்தியுள்ளனர். இரு தரப்பினரதும் இணக்கப்பாடு பற்றி கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தனுடன் நவமணி தொடர்பு கொண்டு கேட்டபோது தமிழ் மக்களின் எதிர்காலத்தைக் கருத்திற் கொண்டு தாம் இணைந்து செயற்படத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் கருணாவுக்கு தலைமைப் பதவியை வழங்க இணங்கியதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக எதிர்வரும் 10ம் திகதி செய்தியாளர் மகாநாடு ஒன்றை நடாத்தி அறிவிக்கவுள்ளதாகவும் முதலமைச்சர் கூறினார்.

ஒட்டுசுட்டான் படையினர் வசம். நிர்வாக, விநியோக நடவடிக்கைகள் துண்டிப்பு.

srilanka_army_.jpg முல்லைத்தீவிலுள்ள முக்கிய பிரதேசங்களில் ஒன்றான ஒட்டுசுட்டான் நேற்று படையினர் வசமானது. முல்லைத்தீவை புலிகளிடமிருந்து முழுமையாக விடுவிக்கும் நோக்குடன் முன்னேறி வரும் இராணுவத்தின் நான்காவது செயலணியினர் இந்தப் பிரதேசத்திற்குள் நுழைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கிறது. ஒட்டுசுட்டானில் பாதுகாப்பு படையினருக்கும், புலிகளுக்கும் இடையில் நேற்று பல மணி நேரம் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த மோதல்களின் போது இருபதுக்கும் மேற்பட்ட புலிகள் கொல்லப்பட்டுள்ளதுடன், புலிகளுக்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாங்குளம் – முல்லைத்தீவு ஏ-34 பிரதான வீதியில் ஒட்டுசுட்டான் சந்தி அமைந்துள்ளது. இங்கிருந்து முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, மாங்குளம் மற்றும் நெடுங்கேணி ஆகிய பிரதேசங்களை நேரடியாக சென்றடைய முடியும். இதனை சாதகமாக பயன்படுத்தி புலிகள் தமது பயங்கரவாத மற்றும் விநியோக நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்துள்ளனர். ஒட்டுசுட்டானுக்குள் பிரவேசித்துள்ள படையினர் புலிகள் தமது நிர்வாக மற்றும் களஞ்சிய வசதிகளை முன்னெடுப்பதற்கு இப்பிரதேசம் கேந்திர முக்கியத்துவம் மிக்கதாக திகழ்ந்துள்ளதென கூறியுள்ளனர்.

இராணுவத்தின் நான்காவது செயலணியினர் தமது முதலாவது நடவடிக்கையில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள முக்கிய பிரதேசங்களில் ஒன்றான நெடுங்கேணியை கைப்பற்றினர். அங்கிருந்து வட பகுதியின் ஊடாக தொடர்ந்தும் நடவடிக்கையை மேற்கொண்டு நேற்று நண்பகல் ஒட்டுசுட்டான் நகருக்குள் பிரவேசித்துள்ளனர். இராணுவத்தின் 14வது சிங்க ரெஜிமண்ட் பிரிவினர் மேஜர் யு. எஸ். என். கே. பெரேராவின் வழிகாட்டலிலும், 642வது படையணியின் கட்டளைத் தளபதி லெப்டினன்ற் கேர்ணல் பி. ரி. ஹத்னாகொடை தலைமையிலான படையினரும் கடுமையான மோதல்களுக்கு மத்தியில் ஒட்டுசுட்டானுக்குள் பிரவேசித்துள்ளனர்.

இந்த மோதல்களின் போது படையினர் புலிகள் பயன்படுத்தி வந்த புதுகுடியிருப்புக்குச் செல்லும் வீதியையும் இராணுவத்தின் நான்காவது செயலணியினர் துண்டித்துள்ளனர். இதேவேளை புளியங்குளம் – ஒட்டுசுட்டான் வீதியையும் இராணுவத்தின் இரண்டாவது செயலணியினர் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒட்டுசுட்டானை கைப்பற்றும் படை நடவடிக்கைகளுக்கு உதவியாக விமானப் படையின் விமானங்களும் நேற்று முன்தினம் கடுமையான தாக்குதல்களை நடத்தியது.

தற்பொழுது ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் படையினர் பாரிய தேடுதல்களை மேற்கொண்டுள்ளதாகவும் களமுனை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை ஆனையிறவையும், முல்லைத்தீவையும் நோக்கி படையினர் தொடர்ந்தும் முன்னேறி வருகின்றதாகவும் இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரபாகரன் உயிருடன் பிடிக்கப்பட்டால் அவரை இந்தியாவிடம் இலங்கை ஒப்படைக்க வேண்டும் – காங்கிரஸ் கட்சி

congras.jpgவிடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் பிடிக்கப்பட்டால் அவரை இந்தியாவிடம் இலங்கை ஒப்படைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.இதுகுறித்து காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் வீரப்ப மொய்லி டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், காங்கிரஸ் கட்சி இலங்கை அரசுக்கு முழு ஆதரவு அளிக்கிறது. இந்திய அரசின் கருத்து விடுதலைப் புலிகள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதான்.

பிரபாகரனை இலங்கை ராணுவம் உயிருடன் பிடிக்க வேண்டும். அவரை ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணைக்காக இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும். அப்போதுதான் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம். விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கமாகும். தடை செய்யப்பட்ட அமைப்பாகும். அதேசமயம், இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் பாரபட்சமாக நடத்தப்படக் கூடாது. தமிழர் பகுதிகளில் மனித உரிமை செயல்கள் நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தீவிரவாதப் பிரச்சினை வேறு, மனிதாபிமானப் பிரச்சினை வேறு. இரண்டையும் ஒன்றாகப் பார்க்கக் கூடாது என்றார் அவர்.

முல்லை. நோக்கி முன்னேறும் படையினருக்கு உதவியாக புலிகள் இலக்குகள் மீது விமானப்படை தாக்குதல்

mi24-1912.jpgமுல்லைத்தீவை நோக்கி முன்னேறிவரும் இராணுவத்தினருக்கு உதவியாக விமானப் படையினர் நேற்று ஐந்து தடவைகள் கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளனர். விமானப் படைக்குச் சொந்தமான எம்.ஐ. 24 ரக மற்றும் ஜெட் விமானங்களை பயன்படுத்தி நடத்தப்பட்ட தாக்குதல்கள் வெற்றியளித்துள்ளதாக விமானப்படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார்.

முல்லைத்தீவு ஓட்டுசுட்டானுக்கு வட – கிழக்காக 6 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள புலிகளின் ஒன்று கூடும் தளங்களை இலக்கு வைத்து நேற்றுக் காலை 6.30 மணியளவில் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். ஆணையிறவுக்கு வடக்கே 2 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள மற்றுமொரு இலக்குகள் மீது நேற்றுப் பிற்பகல் 1.20 மணியளவில் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். ஆணையிறவை நோக்கி முன்னேறிவரும் இராணுவத்தின் முதலாவது செயலணியினருக்கு உதவியாக இந்த விமானத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சி நகருக்கு வடகிழக்கே 4 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள புலிகளின் ஒன்று கூடும் தளம் மீது நேற்று பிற்பகல் 2. 45 மணியளவில் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதேவேளை, ஆணையிறவு மற்றும் பரந்தனுக்கு கிழக்கு பகுதியிலுள்ள புலிகளின் இரு இலக்குகள் மீது நேற்று மாலை 5.00 மணி 6.30 மணியளவில் கடுமையான தாக்குதல்களையும் நடத்தியுள்ளனர். விமானப்படையினரின் இந்த தாக்குதல்கள் வெற்றியளித்துள்ளதாக விமான ஒட்டிகளும், களமுனை படைவீரர்களும் உறுதி செய்துள்ளதாக விமானப் படை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

பயங்கரவாதிகளுக்கு பங்களாதேஷ் தஞ்சமளிக்காது இந்தியாவுடனான உறவை வலுப்படுத்துவதற்கு முன்னுரிமை – ஷேய்க் ஹசீனா

haseena.jpg பயங்கரவாதிகளுக்கு பங்களாதேஷ் தஞ்சம் அளிக்காதெனத் தெரிவித்துள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமரும் அவாமி லீக் கூட்டணியின் தலைவியுமான ஷேய்க் ஹசீனா, இந்தியாவுடனான உறவை வலுப்படுத்துவதிலும் ஆர்வம் காட்டியுள்ளார். இவரது தலைமையிலான கூட்டணி நடந்து முடிந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் 262 இடங்களில் வென்றுள்ளது. இந்நிலையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த ஹசீனா மேலும் கூறியதாவது; “அண்டை நாடுகளுக்கு எதிராக பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் நோக்கில் பங்களாதேஷ?க்குள் தீவிரவாதிகள் புகுவதை அனுமதிக்கமாட்டோம். அண்டை நாடுகளுடனான உறவு குறிப்பாக, இந்தியாவுடனான உறவை தொடர்வதே புதிய அரசின் செயல்திட்டமாக இருக்கும்.

நாங்கள் ஆட்சிக்கு வரும் போதெல்லாம் பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் மெத்தனம் காட்டியதில்லை. இனி ஆட்சி அமைக்கும்போதும் இந்த நிலை தொடரும். அண்டை நாடுகளுடன் நல்லுறவு நீடிக்கும். இந்த பிராந்தியத்தில் பயங்கரவாதத்தை ஒடுக்க தெற்காசிய அதிரடிப் படையை அமைக்கலாம். பயங்கரவாதத்தை ஒடுக்குவதும் இந்த பிராந்தியத்தில் மேம்பாட்டுப் பணிகளை செயல்படுத்துவதும் முக்கியமானது. பயங்கரவாத விடயத்தில் இந்த பிராந்திய நாடுகள் ஒன்றையொன்று குற்றஞ்சாட்டி பேசுவது வழக்கமாக இருக்கிறது. தெற்காசிய அதிரடிப்படை உருவாக்கப்பட்டால் இந்த நிலை இருக்காது’ எனத் தெரிவித்துள்ளார். இதேவேளை, நடந்துமுடிந்த தேர்தல் மோசடி நிறைந்த தேர்தல் என்று குற்றஞ்சாட்டியுள்ளார். பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி தலைவரும் முன்னாள் பிரதமருமான காலிதா ஷியா. 300 ஆசனங்களைக் கொண்டது பங்களாதேஷ் பாராளுமன்றம். இதற்கான தேர்தல் டிசம்பர் 29 ஆம் திகதி நடைபெற்றது. இதில் முன்னாள் பிரதமர் காலிதா ஷியாவின் பங்களாதேஷ் தேசியவாத கட்சி கூட்டணி வெறும் 32 இடங்களையே வென்றது. இந்த கூட்டணியில் 4 கட்சிகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

புலிகளின் தலைவர் பிரபாகரன் ஆயுதங்களைக் களைந்து சரணடைய வேண்டும். -கருணா எம்.பி.

karuna.jpg
எஞ்சியுள்ள விடுதலைப் புலிகளின் உயிரையும் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உயிரையும் காப்பாற்றிக் கொள்வதற்கான இறுதிச் சந்தர்ப்பம் இதுவாகும். புலிகள் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு படையினரிடம் சரணடைவதன் ஊடாக இவ்விறுதிச் சந்தர்ப்பத்தை பிரபாகரன் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கிளிநொச்சி படையினரின் பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளமை தொடர்பாக ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையையடுத்து கருத்துத் தெரிவிக்கையிலேயே கருணா எம்.பி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த காலங்களில் நடைபெற்ற மோதல்களில் அப்பாவி இளைஞர்கள், யுவதிகளின் உயிர்கள் பலியாகின. இன்னமும் பலியாகத் தேவையில்லை. ஆயுதங்களை கீழே வைத்து அரசியல் நீரோட்டத்துக்குள் வருவதன் ஊடாக சுபீட்சமான ஒரு எதிர்காலத்தை அடையலாம். அப்பாவி இளைஞர்களின், யுவதிகளின் உயிர்கள் பலியாவதை தடுக்கலாம். எனவே, புலிகளின் தலைவர் பிரபாகரன் ஆயுதங்களைக் களைந்து சரணடைய வேண்டும் என்றும் கருணா எம்.பி. கேட்டுக் கொண்டுள்ளார். அத்துடன் கிளிநொச்சியை கைப்பற்றிய படையினருக்கும் ஜனாதிபதிக்கும் முப்படைத் தளபதிகளுக்கும் பாதுகாப்பு செயலாளருக்கும் வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்துக் கொண்டார்.

வன்னி மண் முழுமையாக இன்னும் சில நாட்களில் படையினரால் மீட்கப்பட்டு அங்கு அகதிகளாக்கப்பட்டு அடக்கு முறைக்குள் அடங்கிக் கிடக்கும் எமது உறவுகள் பிரபா கும்பலின் பிடியிலிருந்து மீட்கப்படும் போதுதான் அனைத்துலக நாடுகளில் வாழும் உறவுகள் நிம்மதி அடைவார்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. சிதைந்து கிடக்கும் எமது தமிழ்ப் பிரதேசங்களை மீளக் கட்டியெழுப்பி ஒளி பொருந்திய ஓர் அபிவிருத் திப் பாதையில் மக்களையும் தேசத்தையும் வழிப்படுத்தி எம்மக்கள் நிம்மதியான சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க ஜனநாயக வழியே ஒரே தீர்வு என்பதை பிரபாகரன் உணரும் காலம் வெகுதொலைவில் இல்லை.

கிளிநொச்சி நகரை மீட்டெடுத்த படையினருக்கும் இராணுவத் தளபதிக்கும் பாராட்டு தெரிவிக்கின்றோம் – ஜே.வி.பி. அறிவிப்பு

jvp.jpgபுலிகளை தோற்கடித்து கிளிநொச்சி நகரை மீட்டெடுத்த படையினருக்கும் இராணுவத் தளபதிக்கும் எமது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என்று ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.)யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். பொரளையிலுள்ள சோலிய மண்டபத்தில் அக்கட்சி  சனிக்கிழமை காலை நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதில் ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர்களான விஜித ஹேரத் மற்றும் வசந்த சமரசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.

கிளிநொச்சி வெற்றியானது புலிகள் சந்தித்த பாரிய தோல்வியாகும். இந்த வெற்றியானது இந்த நாட்டிலுள்ள தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்குக் கிடைத்த வெற்றியாகும். இதனை ஈட்டித் தந்த படையினருக்கும் இராணுவத் தளபதிக்கும் ஜே.வி.பி. நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவிக்கின்றது. மக்கள் தமது பொருளாதார சுமையை கூட பொருட்படுத்தாது புலிகள் தோற்கடிக்கப்பட வேண்டுமென தமது ஒத்துழைப்பை நல்கியுள்ளனர். புலிகளை வெல்ல முடியாது என்பது பொய் என ஜே.வி.பி.யே கூறியதுடன் எமது படையினரால் வெற்றிபெற முடியுமென்று தெரிவித்தோம்.

படையினரின் நடவடிக்கைக்கு ஜே.வி.பி. முழு ஒத்துழைப்பை வழங்கி சக்தியளித்தது. ஐ.தே.கட்சி, பொ.ஐ. முன்னணி ஆகிய கட்சிகள் இயலாதவிடயமென்று தெரிவித்தன. ஜே.வி.பி. மட்டுமே யுத்தம் மூலம் தோல்வியடையச் செய்ய முடியும் என்று கூறியது. ஐ.தே.கட்சி யுத்த நிறுத்த உடன்படிக்கை செய்து புலிகளுக்கு ஆட்சி செய்யும் அதிகாரத்தை வழங்கியது. இதனை எதிர்த்து இல்லாமல் செய்வதற்கு உடன்படிக்கையை இரத்துச் செய்யுமாறு நீதிமன்றம் வரை நாம் சென்றோம். அதேபோல வடக்கு, கிழக்கு இணைப்புக்கு எதிராக நீதிமன்றம் சென்று அதனை பிரித்தோம் என்பதை அரசுக்கும் மக்களுக்கும் ஞாபகப்படுத்துகின்றோம். யுத்தம் மூலம் புலிகளுக்கு எதிராக வெற்றி பெற்று வருகின்ற நிலையில் பேச்சுக்கு செல்வதை நாம் எதிர்க்கின்றோம். குறிப்பாக தமிழ் மக்கள் புலிகளின் இரும்புச் சப்பாத்தின் கீழ் துன்பங்களை அனுபவித்தனர். இந்த வெற்றி உண்மையில் தமிழர்களுக்குக் கிடைத்த வெற்றியாகும். எனவே, அவர்களுக்கான ஜனநாயக உரிமைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.