எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

க. பொ.த. உயர்தரப் பரீட்சை அனுமதி ஆங்கிலப் பாட சித்தி கட்டாயமில்லை

secretary_.jpg
பாடசாலைகளில் கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு அனுமதி பெறுவதற்காக சாதாரணதர பரீட்சையில் ஆங்கில பாடத்தில் சித்தியடைய வேண்டியது கட்டாயமில்லையென்று கல்வியமைச்சின் செயலாளர் நிமால் பண்டார தெரிவித்தார். 2008ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரணதர பாடவிதானங்களுக்கு ஏற்ப உயர்தர பரீட்சைக்காக ஆறு பாடங்களை மாணவர்கள் கட்டாயம் கற்க வேண்டிய அதேவேளை மேலும் மூன்று பாடங்களில் தோற்ற வேண்டும்.

இதற்கமைய புதிய பாடத்திட்டத்தின் படி கடந்த வருடம் சாதாரணதரப் பரீட்சைக்கு முதற்தடவையாக தோற்றிய மாணவர்களுக்கு கட்டாயமாக ஆறு பாடங்களுக்கும் மூன்று மேலதிக பாடங்களுக்கும் தோற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த கட்டாய பாடங்களில் மொழி, கணிதம் உட்பட 6 பாடங்களில் சித்தி பெற வேண்டும். அதேவேளை இப்பாடங்களில் மூன்று பாடங்களில் சிறப்புச் சித்தி பெற்றிருப்பது க.பொ.த. உயர்தரத்துக்கான பரீட்சைக்கான தகைமையாகக் கருதப்படும்.

இந்நிலையில், மேலதிக பாடங்களில் பெற்றுக் கொள்ளப்படும் சிறப்புச் சித்தி உயர்தர பரீட்சைக்கான தகுதியாகக் கருதப்படமாட்டாதென்று கல்வியமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

வன்னிக்கான வழித்துணை சேவையை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் இடைநிறுத்தியது

aid-loryes1712.jpgசர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கும் கட்டுப்பாடற்ற பகுதிக்கும் இடையில் மேற்கொண்டு வந்த வழித்துணைச் சேவையை வெள்ளிக்கிழமை முதல் நிறுத்தியுள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளர் ரசரி விஜயவர்தன தெரிவித்ததுடன் படையினரும் விடுதலைப்புலிகளும் உத்தரவாதம் வழங்கும் பட்சத்தில் தமது சேவையை தொடரமுடியுமென்றும் தெரிவித்தார். அரச கட்டுப்பாட்டு பகுதிக்கும் கட்டுப்பாடற்ற பகுதிக்குமிடையில் உணவு லொறி தொடர் அணி மற்றும் மக்களுக்கு வழித்துணை மேற்கொண்டு வந்த நிலையில் இடம்பெற்ற சம்பவமொன்றையடுத்து நாம் எமது சேவையை வெள்ளிக்கிழமை முதல் நிறுத்தியுள்ளோம்.

படையினரும் விடுதலைப்புலிகளும் உத்தரவாதம் வழங்கும் பட்சத்தில் சேவையை தொடர்வதற்கு நாம் தயாராகவுள்ளோம் . இரு தரப்புடனும் தொடர்புகளை நாம் வைத்துள்ள நிலையில் இது வரை எந்தவொரு அறிவித்தலும் கிடைக்கவில்லையென்றும் தெரிவித்தார். இதேவேளை வழித்துணை சேவையை செஞ்சிலுவைச் சங்கம் நிறுத்தியதனால் நேற்று முன்தினம் கிளிநொச்சி மற்றும் முல்லைச்தீவு மாவட்டங்களுக்கு செல்லவிருந்த 40 உணவு லொறிகள் செல்லவில்லை

வருட நடுப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் அகதிகளென எவரும் இருக்கக்கூடாது – முதலமைச்சர்

“மட்டக்களப்பில் நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த மக்கள் அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்படவேண்டும். தற்போது பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள கிராமங்களைச் சேர்ந்த இடம்பெயர்ந்த மக்கள் அவர்களின் விருப்பத்தின் பேரில் அவர்களால் தெரிவு செய்யப்படும் இடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக எடுக்கவேண்டும். இவ்வருட நடுப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் அகதிகள் என எவருமே இல்லை என்ற நிலையினை உருவாக்குவதே எனது நோக்கம்’. இவ்வாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், புதிய ஆண்டிற்கான மீள்குடியேற்றம் தொடர்பான முதலாவது கூட்டத்தில் பேசும்போது தெரிவித்தார். நேற்று வெள்ளிக்கிழமை காலை முதலமைச்சரின் செயலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, மீள்குடியேற்றத்திற்குப் பொறுப்பான இணைப்பதிகாரி அ.செல்வேந்திரன் தலைமை வகித்தார்.

“”பாதுகாப்பு வலயத்திற்குள் வரும் கிராமங்களைச் சேர்ந்த இடம்பெயர்ந்த குடும்பங்கள் தங்களுக்கு விருப்பமான மாற்று இடங்களை அவர்களே தெரிவு செய்வதற்கான நடவடிக்கைகளை அதற்குப் பொறுப்பான அதிகாரிகள் அடுத்த மாத நடுப்பகுதிக்குள் ஆரம்பிக்க வேண்டும். அதற்காக அவ்வதிகாரிகள் அம்மக்களை சந்தித்து ஆவன செய்யவேண்டும். பாதுகாப்பு வலயத்தினுள் வாழ்ந்தபோது அம்மக்கள் நிறைந்த வளங்களோடு வாழ்ந்தவர்கள் ஆவர். ஆகவே, அம்மக்களின் தேவைகளை உணர்ந்து அவர்களின் ஜீவனோபாயத்தை முன்னெடுத்துச் செல்லக்கூடிய முறையில் அவர்கள் விரும்புகின்ற இடங்களில் அவர்களைக் குடியமர்த்த வேண்டும். அவர்கள் முன்னர் வாழ்ந்து வந்த இடங்களுக்கு உரிய பெறுமதியான நட்டஈட்டை அவர்களுக்குப் பெற்றுக்கொடுக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும் முதலமைச்சர் சந்திரகாந்தன் கூறினார். கிழக்கு மாகாண அரசு உருவாகியதன் பிற்பாடு மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். அதனை மனதில் இருத்தி அம்மக்களின் தேவைகளை அறிந்து கிழக்கு மாகாண அரசில் பணியாற்றும் அத்தனை அதிகாரிகளும் செயலாற்ற வேண்டும். கிழக்கு மாகாணத்தில் அகதிகள் என்று யாரும் இருக்கமுடியாத நிலையை குறிக்கப்பட்ட கால எல்லைக்குள் செய்துமுடிக்க வேண்டிய பொறுப்பு மாகாண நிர்வாகத்துக்கு உண்டு என்றும் முதலமைச்சர் கூறினார்.

“விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை சிங்கள அரசியல்வாதிகளிடம் காணவில்லை’- பிரிட்டனின் காடியன்

kili-02.jpgசிங்கள வரை பெரும்பான்மையாகக் கொண்ட நாட்டில் தன்னாட்சிக்காக போராடும் புலிகள் இயக்கத்திற்கு கிளிநொச்சியை இழந்திருப்பது பாரிய பின்னடைவாகும். ஆனால், நேற்று அந்த நகரத்தைக் கைப்பற்றுவதில் இராணுவம் அடைந்திருக்கும் வெற்றியானது விடுதலைப் புலிகளின் மறைவை வெளிப்படுத்துவதாக அமையப்போவதில்லை. புலிகளின் அரசியல் தலைமையகமான கிளிநொச்சி கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான பிரதான பாதையில் அமைந்துள்ளது. இதன் மீது வான்வழித் தாக்குதல்களை எப்போதுமே கொழும்பு நடத்திக்கொண்டிருந்தது. ஒருவருடத்திற்கு முன்னர் சு.ப.தமிழ்ச்செல்வனின் அலுவலகத்திற்கு குண்டு வீசப்பட்டது. வெளிநாட்டு இராஜதந்திரிகளுடனும் அரசாங்கத்துடனும் அடிக்கடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தவரான தமிழ்ச்செல்வனின் அலுவலகம் குண்டு வீச்சுக்கு இலக்காகி இருந்தது.

தரை மார்க்கமாக இராணுவத்தின் முன்னேற்றமானது அங்கிருந்த புலிகளை ஒட்டுமொத்தமாக வாபஸ்பெறவைத்தது. ஆனால் இயக்கத்தின் இராணுவ தலைமையகமும் அதன் தளங்களும் அந்தப்பகுதிக்குக் கிழக்கே முல்லைத்தீவில் மறைவான இடத்தில் உள்ளன. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் எங்கே இருக்கிறார் என்பது ஒருபோதும் தெளிவாக அறியப்படாதது. கிளிநொச்சியை கைப்பற்றியதானது அச்சமூட்டக்கூடிய வகையில் மனித உயிர்களுக்கு விலை செலுத்திய விடயமாகும். காஸாவுடன் ஒப்பிடக்கூடியவை. தணிக்கைகள், அந்தப் பகுதிகளுக்குப் பத்திரிகையாளர்கள் செல்ல அனுமதிக்கப்படாமை என்பனவும் நடைமுறை விடயங்களாகும். பல நாட்களாக விமானத் தாக்குதல்கள், ஆட்லறித் தாக்குதல்கள் இடம்பெற்றன. பொதுமக்களும் புலிகளும் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் காடுகளுக்குள் இடம்பெயர்ந்தனர். இரு தரப்பிலும் 100 க்கணக்கான படையினர் கொல்லப்பட்டனர். பலமாதங்கள் எடுத்த இந்நடவடிக்கை நேற்று தனது இலக்கை எட்டியுள்ளது.

காஸாவைப்போன்றே இதுவும் சமச்சீர் அற்ற போர் முறைமையாகும். கொழும்புக்கு துரிதமாக தற்கொலை குண்டுதாரியை அனுப்பியதன் மூலம் அரசாங்கத்தின் வெற்றிப் பிரகாசத்தை புலிகள் எடுத்துக் கொண்டுவிட்டனர். இச்சம்பவத்தில் விமானப்படை தலைமையகத்தைச் சேர்ந்த இரு படையினர் கொல்லப்பட்டனர். இது எப்போதுமே புலிகளால் மேற்கொள்ளப்படும் தந்திரோபாயமாகும். கிளிநொச்சியை இழந்த பின்னர் அதிகளவில் இதனை அவர்கள் மேற்கொள்ளும் தன்மை காணப்படுகின்றது. அதேவேளை, ஆனையிறவைக் கைப்பற்றும் எதிர்பார்ப்புடன் அரசாங்கம் உள்ளது. யாழ்ப்பாண வீதிக்கான புலிகளின் கடைசி அரணாக ஆனையிறவு உள்ளது. அது வீழ்ச்சி கண்டால் இலங்கையின் இரண்டாவது பெரிய நகரமான யாழ்ப்பாணத்துக்கான விநியோகத்தை மீள சுலபமாக்கிவிடும். தற்போது கடல் மற்றும் வான் மார்க்கமாகவே யாழ்ப்பாணத்துக்கான விநியோகம் இடம்பெறுகிறது.

இதனைக் கைப்பற்றுவது விடுதலைப் புலிகளை மிகக் கடுமையாக பாதிக்கும் என்பது நிச்சயம். ஆனால், தமிழ் சொந்த சமூகங்களின் மத்தியில் அவர்களின் செல்வாக்கு இருக்கும் வரை கெரில்லா இயக்கங்கள் தலைமறைவாகி மீண்டும் வெளிக்கிளம்பும் ஆற்றலைக் கொண்டுள்ளன. விடுதலைப் புலிகளை அரசாங்கம் பயங்கரவாதிகள் என அழைக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தால் பயங்கரவாத அமைப்பின் பட்டியலில் புலிகள் உள்ளடக்கப்பட்டுள்ளனர். அதேசமயம், பலருக்காக அவர்கள் குரல் கொடுக்கின்றனர் என்பதை ஐரோப்பிய ஒன்றியம் ஏற்றுக்கொண்டுள்ளது. பல்லின பல்கலாசார மக்கள் வாழ்கின்ற இலங்கையில் தமிழ் மக்கள் மிக மோசமான முறையில் பாரபட்சத்துக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இந்நிலையில் உடனடியாக புலிகளுக்கு நிதி உதவி வழங்குவதை புலம் பெயர்ந்த தமிழர்கள் முடிவுக்குக் கொண்டுவரும் சாத்தியமில்லை.

நியாயமான அரசியல் தீர்வே இலங்கைக்கு தேவைப்படுகிறது. இராணுவத் தீர்வு இருக்க முடியாது. நேற்று இராணுவம் ஈட்டிய வெற்றியானது கொழும்பில் வெற்றிக்களிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு, நிதி, தேசத்தைக் கட்டியெழுப்புதல் ஆகிய அமைப்புப் பொறுப்புகளை ஏற்கனவே தன்வசம் வைத்திருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தற்போது ஊடகத்துறை அமைச்சையும் தன்வசமாக்கியுள்ளார். நாட்டின் செய்தியாளர்கள் மீது இறுக்கமான கட்டுப்பாட்டை அவர் வைத்திருக்கும் சாத்தியம் தென்படுகிறது. இனிவரப் போகும் பல மாதங்களில் விட்டுக்கொடுப்புகளை மேற்கொள்ளவதற்கான மனப்பான்மை சிங்கள அரசியல் வாதிகளிடம் இல்லை. பயங்கரமான புதுவருடத்தையே இலங்கை எதிர்கொள்கின்றது. இவ்வாறு பிரிட்டனின் காடியன் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து ஜனவரி 6 இல் சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

ind-pan.jpgகிளிநொச்சி நகரத்தை அரச படை கைப்பற்றியுள்ளது கவலையளிக்கிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் நாடுப் பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் நாடு பிரிவு செயலாளர் தா.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை; இலங்கையில் பல ஆண்டுகளாக தீர்க்க முடியாமல் நீடித்து வரும் இனச்சிக்கல் இனப் போராக மாற்றமடைந்து கிளிநொச்சி நகரத்தை இராணுவம் கைப்பற்றி விட்டதாக வந்துள்ள செய்தியை கவலை தரத்தக்க செய்தியாகவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயற்குழு கருதுகிறது.

சில நாடுகளின் இராணுவ உதவிகளுடன் போராடி இலங்கை இராணுவம் பயங்கரவாதிகளாகக் கூறப்படும் விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்கப் போவதாகக் கூறிய போதிலும் அரசு நடத்திய கண்மூடித்தனமான வான், தரைப்படைத் தாக்குதல்களால் நிராயுத பாணிகளான தமிழ் மொழி பேசும் மக்கள் கொல்லப்பட்டார்கள். பல இலட்சம் பேர் அகதிகளாக்கப்பட்டார்கள். இலங்கை அரசின் மனிதாபிமானமற்ற மூர்க்கத்தனத்தையே இது காட்டுகிறது. 2009 ஆம் ஆண்டு புத்தாண்டு விழாப் பிரார்த்தனையிலும் விழாவிலும் ஈடுபட்டிருந்த மக்கள் மீதும் குண்டு வீசப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியதாகும். போர் கொடூரத்தையும் இலங்கைத் தமிழ் மக்கள் அநியாயமாகக் கொல்லப்படுவதைக் கண்டும் கேட்டும் கலங்கிப் போன இந்தியத் தமிழர்கள் அரசுடன் பேசி போர் நிறுத்தம் கண்டு தமிழ் மக்களின் உயிரைக் காப்பாற்ற எழுச்சி கொண்டு குரல் கொடுத்தனர்.

முதல்வர் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் மூலமும் சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலமும் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் டில்லியில் பிரதமரைச் சந்தித்து முறையிட்ட பின்னரும் தமிழ் மக்களின் உணர்வையும் வேதனையையும் புரிந்து கொண்டு அதற்கேற்ப மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்பது வேதனையைத் தருகிறது. முதல்வர் தலைமையில் பிரதமரைச் சந்தித்த அனைத்துக் கட்சிக் குழு மிகக் குறைந்தபட்ச கோரிக்கையாக வெளியுறவுத்துறை அமைச்சரை இலங்கைக்கு அனுப்பிடக் கேட்டும் இன்று வரை நிறைவேற்றப்படவில்லை.

இலங்கையில் நடக்கும் தமிழ் இனப் பேரழிவுக்குத் தீர்வு காண வேண்டும் என்பதில் இந்திய அரசுக்கு எவ்விதக் கவலையுமில்லை. தமிழ் மக்களின் மதிப்புக் குரலை அலட்சியப்படுத்தி விட்டது. இருப்பினும் கிளிநொச்சியைப் பிடித்ததால் இராணுவ வெற்றி எனக்கூறும் அரசை இன்றுடன், இத்துடன், போரை நிறுத்துமாறு இந்திய அரசு பகிரங்கமாக வற்புறுத்த வேண்டும். இலங்கை அரச உடனடியாகப் போர் நிறுத்தத்தை அறிவித்து இலங்கை வாழ் தமிழ் மக்களின் மனித ஜனநாயக அரசியல் உரிமைகளை வழங்கி நடைமுறைப்படுத்தக் கூடிய திட்டத்தை அறிவிக்க வேண்டுகின்றோம். தமிழக மக்களின் உணர்வுகளையும் வேதனையையும் உணர்ந்து நடவடிக்கை எடுக்கத் தவறிய மத்திய அரசைக் கண்டித்து ஜனவரி 6 ஆம் திகதி சென்னையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தும். இதர இயக்கங்கள் மத்திய அரசைக் கண்டித்து நடத்தும் இயக்கங்களுக்கு ஆதரவு தருவது என்றும் மாநில செயற்குழு முடிவு செய்கிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

யாழ். அரச அதிபரின் சேவைக்காலம் நீடிப்பு

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக பதவி வகிக்கும் கே. கணேஷின் பதவிக்காலத்தை பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு மேலும் ஆறு மாதகாலத்துக்கு நீடித்துள்ளது. அவரது பதவிக் காலம் ஜூன் முப்பதாம் திகதிவரை நீடிக்கப்பட்டிருப்பதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

அறுபத்தேழு வயதான கே. கணேஷ், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்ட பின்னர் இரு தடவைகள் அவரது பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பணியாற்றும் அரசாங்க அதிபர்களில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரே வயதில் கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மோட்டார் போக்குவரத்து ஆணையாளரின் வாகனப்பதிவுக்கான புதிய அறிவித்தல்

cars.jpg2009 ஆம் ஆண்டிற்கான மோட்டார் வாகனப் பதிவிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தொடர்பாக புதிய அறிவிப்பை மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பிற்கிணங்க, குறித்த வாகனத்தின் தெளிவான இரு வர்ணப் புகைப்படங்களை வாகன உரிமையாளர் சமர்பிக்கவேண்டும். ஒரு புகைப்படம் வாகனத்தின் முன் பகுதியும், மற்றையது வாகனத்தின் இடது அல்லது வலது புறத்தையும் தெளிவாகக் காட்டும் வகையில், தபால் அட்டை அளவினைக் கொண்ட படமாக இருக்கவேண்டும்.

அத்துடன், புகைப்படத்தின் மறுபக்கத்தில் வாகனத்தின் அடிச்சட்ட இலக்கத்தை தெளிவாகக் குறிப்பிட்டு, வாகன உரிமையாளரின் அடையாள அட்டை இலக்கத்துடன் அந்தப் புகைப்படம் உரிமையாளரால் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும், மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார

மன்னார் மடுக்கரையிலுள்ள லீட்ஸ் நிறுவனத்தை வெளியேறுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை

மன்னார் நானாட்டான் மடுக்கரையிலுள்ள லீட்ஸ் எனப்படும் சர்வதேச தொண்டு நிறுவனத்தை அங்கிருந்து வெளியேறுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நானாட்டான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட மடுக்கரை கிராமத்தில் சுமார் 4 வருடங்களாக லீட்ஸ் எனும் நிறுவனம் இயங்கி வருகின்றது. இந்த நிலையில் தமது கிராமத்தை அடித்தளமாகக் கொண்டு இயங்கும் இந்த நிறுவனத்தினால் எவ்விதப் பயனும் தமக்கோ அல்லது கிராமத்திற்கோ இல்லை என்று மடுக்கரை மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், கடந்த பல வருடங்களாக மடுக்கரை மக்களின் குடிநிலக்காணிகளிலிருந்தும் அக்கிராமவாசிகளின் பயிர் செய்கைக்குரிய காணியிலிருந்தும் மணல் அகழ்ந்து அதனை கூட்டெருவாகத் தயாரித்து அதனை மன்னார் நகரப்பகுதியில் லீட்ஸ் நிறுவனம் விற்பனை செய்வதாகக் குற்றம் சாட்டியுள்ள மடுக்கரை மக்கள், இவ்விதம் லீட்ஸ் நிறுவனம் தமது கிராமத்தின் வளத்தை சுரண்டுவதோடு, தமது விவசாய நடவடிக்கைகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கின்றனர். இதேவேளை, மடுக்கரையில் இருந்து மனனாருக்கு லீட்ஸ் நிறுவனத்தினால் ஐந்து உழவு இயந்திரங்களில் ஏற்றிச் செல்லப்பட்ட கூட்டெருவினை அங்கிருந்து கொண்டு செல்லாது தடுத்து நிறுத்திய மடுக்கரை மக்கள் மீது முருங்கன் பொலிஸார் கடுமையாகத் தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

அத்துடன், இது தொடர்பாக நானாட்டான் பிரதேச செயலாளரிடம் மகஜரொன்றையும் கையளித்துள்ளளனர். இதேவேளை, மடுக்கரை விடயம் தொடர்பாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், மன்னார் அரசாங்க அதிபர் ஏ.நிக்கிலாஸ்பிள்ளை ஆகியோர்களின் கவனத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

படை வீரர்களை நேரில் சந்தித்து இராணுவத் தளபதி நன்றி தெரிவிப்பு

kilinochchi-victory.jpgகிளிநொச்சி வெற்றிக்கு பங்களிப்பு வழங்கிய இராணுவ வீரர்களுக்கு பாராட்டுத் தெரிவிப்பதற்கு இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேக வன்னிக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார் வன்னி பாதுகாப்பு தலைமையகத்திற்கு நேற்று சனிக்கிழமை சென்ற அவர் வன்னி இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அனைத்துப் படைப்பிரிவுகளினதும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன் போது கிளிநொச்சி வெற்றிக்கு பங்களிப்பு வழங்கிய இராணுவ வீரர்களுக்கு இராணுவத்தளபதி பாராட்டு தெரிவித்துள்ளார்.எதிர்கால இராணுவ நடவடிக்கை குறித்தும் ஆராயப்பட்டதாகவும் இராணுவத் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது

புலிகள் மீதான தடை குறித்து அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம்

0301-ltte.jpgவிடுதலைப் புலிகளை தடை செய்வது குறித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பரிசீலித்து வருவதாகவும் இந்த விடயம் தொடர்பாக அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படுமெனவும் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவைக் கைப்பற்றிய பின்னர் புலிகள் அமைப்பை தடை செய்யவதென ஜனாதிபதி முன்னர் முடிவு செய்திருந்ததாகவும் இப்போது கிளிநொச்சி நகர் கைப்பற்றப்பட்டதையடுத்து அதற்கு முன்பாக புலிகளை தடை செய்யும் சாத்தியம் இருப்பதாகவும் சிரேஷ்ட அமைச்சர் ஒருவரை மேற்கோள் காட்டி “லங்கா டிசன்ற்’ நேற்று சனிக்கிழமை செய்தி வெளியிட்டிருந்தது.

விடுதலைப் புலிகளை தடை செய்தால் அந்த அமைப்புடன் ஏதாவது தொடர்புகளை வைத்திருக்கும் அரசியல்வாதிகள் சர்வதேச அமைப்புகளையும் தடை செய்வதற்கு ஏதுவான சட்ட மூலமும் நிறைவேற்றப்படுமென அந்த அமைச்சர் கூறியுள்ளார். 1979 இல் பாராளுமன்றத்தில் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு புலிகள் அமைப்பு மீது முதலாவது தடை விதிக்கப்பட்டது. பின்னர் 1994 இல் சமாதானப் பேச்சு வார்த்தை மேற்கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தடையை நீக்கியிருந்தார். பின்னர் 1998 மார்ச் 21 இல் மீண்டும் அவசர கால ஒழுங்கு வீதிகளின் கீழ் புலிகள் மீது தடை விதிக்கப்பட்டது. பின்னர் 2001 டிசம்பரில் பதவிக்கு வந்த ஐ.தே.க. அரசாங்கம் 2002 பெப்ரவரி 22 இல் யுத்த நிறுத்த உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு முன்பாக புலிகள் மீதான தடையை நீக்கியது