எழுத்தாளர்கள்

Friday, June 25, 2021

எழுத்தாளர்கள்

அம்பாந்தோட்டையில் இந்திய துணைத் தூதரகம்

hambantota.jpgஅம்பாந் தோட்டை புது வீதியில் நேற்று இந்திய துணைத் தூதரக அலுவலகம் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணாவினால் திறந்து வைக்கப்பட்டது.

இது வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்படவிருந்தது. சீரற்றகால நிலை காரணமாக இந்த திறப்பு விழா ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வில், இந்திய வெளியுறவு அமைச்சர் ஸ்ரீ எஸ். எம். கிருஷ்ணாவுடன் இலங்கை வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ்,  இந்திய இலங்கைத் தூதுவர் அசோக் கே. காந்தா, இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இலங்கை – பாகிஸ்தான் தலைவர்கள் இருதரப்பு பேச்சு – நான்கு முக்கிய உடன்படிக்கைகள் கைச்சாத்து

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், பாகிஸ்தான் ஜனாதிபதி ஆஸிப் அலி சர்தாரிக்குமிடையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இரு தரப்பு பேச்சுவார்த்தை இடம்பெற்றதுடன் இரு நாடுகளுக்குமிடையிலான நான்கு முக்கிய உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்பட்டன.

ஒரு மணித்தியாலம் வரை நீடித்த மேற்படி பேச்சுவார்த்தையையடுத்து இரு நாடுகளினதும் பிரதிநிதிகள் கலந்து கொண்ட பேச்சுவார்த்தையொன்றும் இடம்பெற்றது. இரு நாடுகளுக்கிடையில் வர்த்தக நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பில் இரு நாட்டுத் தலைவர்களும் கவனம் செலுத்தியதுடன் இலங்கையின் தேயிலை மற்றும் மாணிக்கக் கற்களை பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்வதற்குள்ள வாய்ப்புகள் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டன.

இலங்கையின் மாணிக்கக்கல் தொழில் துறையில் உபயோகப்படுத்தப்படும் தொழில் நுட்ப நுணுக்கங்களை பாகிஸ்தானுக்குப் பெற்றுக் கொடுக்குமாறு பாகிஸ்தான் ஜனாதிபதி கேட்டுக் கொண்டதையடுத்து இலங்கை ஜனாதிபதி அதனைக் கவனத்திற் கொண்டார்.

இலங்கையின் மருத்துவத்துறை ஈட்டியுள்ள வளர்ச்சி தொடர்பில் பாகிஸ்தான் ஜனாதிபதி தமது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.பாகிஸ்தான் தாதியருக்கு பயிற்சிகளை வழங்கக் கூடிய தாதியர்களை இலங்கையிலிருந்து தமது நாட்டுக்கு பெற்றுக் கொடுப்பது தொடர்பிலும் அவர் இலங்கை ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.

அத்துடன் இலங்கையிலிருந்து ஆங்கிலம் மற்றும் கணித ஆசிரியர்களின் ஒத்துழைப்பினை பாகிஸ்தானின் கல்வித் துறைக்கு பெற்றுக்கொள்வது சம்பந்தமாக பாகிஸ்தான் ஜனாதிபதி முன்வைத்த வேண்டுகோள் தொடர்பிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கவனம் செலுத்தினார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமது இரண்டாவது பதவி ஏற்போடு பாகிஸ்தான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் அமைந்துள்ளதால் இரு நாடுகளுக்குமிடையி லான நல்லுறவுகள் மேலும் வலுப்பட இது சிறந்த வாய்ப்பாகும் எனவும் குறிப்பிட்டார்.

அத்துடன் அமைதிச் சூழல் நிறைந்த இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்காக பாகிஸ்தான் முதலீட்டாளர்களை அனுப்புமாறு கேட்டுக்கொண்ட ஜனாதிபதி; அதற்கான வசதிகளை செய்து கொடுப்பதாகவும் தெரிவித்தார்.

பாகிஸ்தான் ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்; இலங்கையில் எதிர்கால தலைமுறையினரை போதைப் பொருளிலிருந்து பாதுகாக்க இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு விசேட பாராட்டுக்களைத் தெரிவித்த பாகிஸ்தான் ஜனாதிபதி; பிராந்திய ரீதியில் போதை உபயோகத்தை ஒழிப்பதற்கு பிராந்திய நாடுகள் இணைந்து செயற்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் குறிப்பிட்டார். இரண்டு நாடுகளுக்குமிடையில் வங்கி நடவடிக்கைகளை மேம்படுத்துவது தொடர்பிலும் இரு நாட்டுத் தலைவர்களும் கலந்துரையாடினர்.

4 மணித்தியால பொருட்கள் சேவை தபால்

postal.jpgநான்கு மணித்தியால பொருட்கள் போக்குவரத்து சேவையொன்றை நாடளாவிய ரீதியில் அறிமுகப்படுத்த தபால் திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது. இதன் பரீட்சார்த்த நடவடிக்கைகள் தற்பொழுது குருநாகல், அநுராதபுரம், கண்டி, காலி ஆகிய இடங்களில் மிக விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதுடன், இதன் முதற்கட்ட நடவடிக்கைகள் தற்போது கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இச்சேவை மூலம் தபால் திணைக்களத்தினூடாக பரிமாற்றம் செய்யப்படும் பொருட்கள் நான்கு மணித்தியாலங்களுக்குள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொழும்பிலிருந்து நீர்கொழும்பு, பாணந்துறை, கம்பஹா, மல்வானை, பியகம மற்றும் நிட்டம்புவ போன்ற பிரதேசங்களில் இத்திட்டம் தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டம் வெற்றியளித்தால் எதிர்காலத்தில் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களுக்கும் இச்சேவை விஸ்தரிக்கப்படும். மிகவும் குறைந்த சாதாரண கட்டணத்தில் இச்சேவையை பொதுமக்கள் அனுபவிக்க முடியுமென தபால் திணைக்கள உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இளைஞர் பாராளுமன்றத்திற்கு 329 உறுப்பினர்கள் தெரிவு

இளைஞர் பா¡ளுமன்றத்தின் முதலாவது தேர்தலில் 329 உறுப்பினர்கள் நேற்று முன்தினம் 27ஆம் திகதி தெரிவாகியுள்ளனர். 332 மாவட்ட செயலாளர் பிரிவுகளை கேந்திரமயப்படுத்தி 1395 பேர் போட்டியிட்ட போதே மேற்படி 329 பேரும் தெரிவு செய்யப்பட்டனர்.

ஹொரவத்பத்தான, எஹலியகொடை ஆகிய மாவட்ட செயலக பிரிவுகளின் பெறுபேறுகள் ரத்துச் செய்யப்பட்டதாகவும் புதுக்குடியிருப்பு பிரிவில் தேர்தல் நடத்தப்படவில்லை என்றும் இளைஞர் விவகார மற்றும் தொழில் முயற்சிகள் அமைச்சின் செயலாளரும் பிரதான தெரிவத்தாட்சி அதிகாரியுமான சூளோ ஹேவாபதிரன கூறினார். இளைஞர் விவகார அமைச்சில் நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டி லேயே அவர் இவ்வாறு கூறினார்.

அத்துடன் ரத்துச் செய்யப்பட்ட இரு தேர்தல் பிரிவுகளில் மீண்டும் எதிர்வரும் 4ஆம் திகதி தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர் மேலும் கூறினார். அதேவேளை ஆதிவாசிகளின் பிரதிநிதி ஒருவர் உட்பட மொத்தம் 335 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாகவும் புதிய பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடர் எதிர்வரும் ஜனவரி 12ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் மஹரகம இளைஞர் சேவைகள் மன்றத்தில் நடைபெறும் என்றும் செயலாளர் மேலும் கூறினார்.

பாக். ஜனாதிபதி இன்று பாராளுமன்றம் வருகை

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசீப் அலி சர்தாரி பாராளுமன்ற சபாநாயகர் மற்றும் பாகிஸ்தான் பாராளுமன்ற நட்புறவு சங்கப் பிரதிநிதிகளை இன்று சந்திக்கவுள்ளார்.

இச்சந்திப்பு முற்பகல் 11 மணிக்கு பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெறவுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் நேற்று மின்சாரத்தடை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் நேற்று பிற்பகல் 2.50 மணி முதல் மின்சாரத்தடை ஏற்பட்டது. கொத்மலை – பியகமைக்கிடையிலான தேசிய மின்னிணைப்புப் பரிமாற்றத் தொகுதியில் நேற்றைய தினம் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே இதற்குக் காரணமென மின்வலு எரிசக்தி அமைச்சு தெரிவித்தது.

இது தொடர்பில் அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவிக்கையில்,

கொத்மலை – பியகம தேசிய மின்னிணைப்புப் பரிமாற்றத் தொகுதியில் நேற்று 2.50 மணியளவில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மின் துண்டிப்பு ஏற்பட்டது. இது தொடர்பில் மின்சார சபைக்குப் பல முறைப்பாடுகள் வந்தன.

மேற்படி மின்துண்டிப்பினால் கொத்மலை – பியகம மின்னிணைப்பு பரிமாற்றத் தொகுதியூடாக மின்சாரத்தைப் பெற்றுக்கொள்ளும் மின் பாவனையாளர்கள் அசெளகரியங்களுக்குள்ளாகினர். இத்தொழில்நுட்பக் கோளாறைப் பரிசோதித்து திருத்தும் நோக்கில் கொழும்பிலிருந்து விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டதுடன் அக்குழு உடனடியாகவே தமது செயற்பாடுகளை ஆரம்பித்தன.

இதனையடுத்து எவ்வளவு விரைவாக மின்சாரத்தை வழங்க முடியுமோ அந்தளவு விரைவாக மின்சாரத்தை வழங்குவதற்கான சகல நடவடிக்கைகளையும் மின்வலு எரிசக்தி அமைச்சு மேற்கொண்டதாகவும் அவ்வதிகாரி மேலும் தெரிவித்தார்.

கடும் மழை காரணமாக நாடு முழுவதும் பொதுமக்கள் பாதிப்பு.

கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் அடைமழை காரணமாக இலங்கையில் நாடு முழுவதுமாக 55ஆயிரத்து 520 பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல் வெளியிட்டுள்ளது. மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் 250 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை வெள்ளத்தினால் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ள மக்களை தங்க வைப்பதற்காக நாடு முழுவதும் 22 நலன்புரி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள போதும், பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரையும் தங்க வைத்து பராமரிப்பதற்கு சிரமமான நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

புத்தளம் மாவட்டத்தில் அதிகளவு மக்கள் வீடுகளை இழந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளனர். தெற்கிலும் மலையகப் பகுதிகளிலும் வெள்ளம், மற்றும் மண்சரிவு அபாயம் தோன்றியுள்ளன. மாத்தளை மாவட்டத்தில் மண்சரிவு அபாயம் காரணமாக 20 குடும்பங்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு நகர்த்தப்பட்டுள்ளன. நுவரெலியா மாவட்டத்தில் மழையால் வீதிகள் சேதமடைந்துள்ளன. அங்கு அதிகளவு புகைமூட்டம் காணப்படுவதால் போக்குவரத்து மேற்கொள்ள முடியாத நிலையும் காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருகோணமலை மாவட்டத்தில் தாழ்நிலங்களில் மழைவெள்ளம் தேங்கி நிற்பதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்லமுடியவில்லை. வடக்கில் வன்னி மற்றும், யாழ்.குடாநாட்டில் கடும் மழை பெய்து வருகின்றது பல பகுதிகளில் வெள்ளம் தேங்கி நிற்கின்றது. வன்னியில் தறப்பாள் கூடாரங்களில் தங்கியுள்ள மீள்குடியேற்றப்பட்ட மக்கள் இம்மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இக்காலநிலை டிசெம்பர் மாதம் இறுதிவரை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

காணாமற்போனவர்களை இறந்தவர்களாக பதிவு செய்வதற்கு பாராளுமன்ற அங்கீகாரம் கிடைத்துள்ளது.

காணாமற் போனவர்களை இறந்தவர்களாக பதிவு செய்வதற்கான நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும், இதனடிப்படையில் பிரதேசசெயலகங்கள் ஊடாக பதிவுகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் யாழ்.மேலதிக பதிவாளர் நாயகம் என். சதாசிவம் ஐயர் தெரிவித்துள்ளார்.

கடந்த போர்க்கால சம்பவங்களின் போது காணாமல்போனவர்களை இறந்தவர்களாக பதிவு செய்வதற்கு நடாளுமன்ற அங்கீகாரம் வழங்கியுள்ளது. அது சட்டநடைமுறைக்கு உட்படுத்தப்பட்டதும் அது தொடர்பான சுற்றுநிருபத்தை அரசு வெளியிடும். அதனைத் தொடர்ந்து விரைவில் காணாமல்போனவர்களை இறந்தவர்களாக பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பமாகும். காணாமல் போனவர்களின் உறவினர்கள் பதிவுகளை மேற்கொள்வதற்கு முன்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து கொள்வது பொருத்தமானது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

யாழ், முல்லை மாவட்டங்களில் அபிவிருத்தி திட்டங்களுக்கு ஐம்பது கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது

santira_sri.jpgயாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்டங்களின் அபிருத்தித் திட்டங்களுக்கென ஐம்பது கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார். இம்மாவட்டங்களில் தற்போதும் அபிவிருத்தித் திட்டங்கள் நடைபெற்று வருவதாகவும், மேலும் பல அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இம்மாவட்டங்களில் உள்ளூராட்சி நிர்வாகத்தை கட்டியெழுப்பும் நோக்கிலேயே இந்த அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், இவ்விரு மாவட்டங்களிலும் 115 உள்ளூர் வீதிகள் 39 கோடி 30 இலட்சம் ரூபா செலவில் திருத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர் முல்லை மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு, பாண்டியன்குளம், துணுக்காய் மற்றும், கரைதுரைப்பற்று ஆகிய பிரதேச சபைக் கட்டடங்களும் இந்நிதி மூலம் புனரமைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

புதிய நீதி அமைச்சராக ரவூப் ஹக்கீம் இன்று கடமைகளைப் பொறுப்பெற்றார்.

புதிய நீதி அமைச்சராக முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் பதவியேற்றுள்ளார். இன்று திங்கள்கிழமை காலை அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டு ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை விரைவில் விடுதலை செய்வது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி சட்டமா அதிபர் மொஹான் பீரிசுக்கு தெரிவித்துள்ளதாகவும், இக்கைதிகளின் விடுதலை குறித்து பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுடன் பேச்சு நடத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தள்ளார்.

இன்று முதல் நீதிஅமைச்சு சட்டத்தரணிகள் சங்கத்துடன் இணைந்து பணியாற்றும் எனவும் அவர் கூறினார். நீதி அமைச்சராக ரவூப் ஹக்கீம் கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வில் முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.