எழுத்தாளர்கள்

Friday, October 22, 2021

எழுத்தாளர்கள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பார்வை நூலுக்கான முன்னுரை : த ஜெயபாலன்

Front_Cover_UoJ_A_View‘இலங்கையின் தமிழ் கல்விச் சமூகம்: யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பார்வை’ என்ற தலைப்பில் வெளிவந்துள்ள யாழ் பல்கலைக்கழகம் பற்றி நான் (த ஜெயபாலன்) எழுதிய முன்னுரை இங்கு பதிவிடப்படுகிறது. தேசம்நெற் இல் யாழப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பாக நான் எழுதிய நான்கு கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் இலங்கையில் வெளிவந்துள்ளது. இந்நூலுக்கான அணிந்துரையாக தேசம்நெற் வாசகர்களின் கருத்துக்கள் சில நூலின் இறுதியில் பதிவிடப்பட்டு உள்ளது.

இந்த நூலின் மின்னியல் வடிவம்: UoJ_A_View_By_Jeyabalan_T

._._._._._.

தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கான மே 18, 2009 வரையான தமிழீழ விடுதலைப் போராட்டம், அம்மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு மாறாக உரிமைகள் பறிக்கப்படுகின்ற நிலையையே ஏற்படுத்தியது. மேலும் முப்பது ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்ட போராட்டமானது பல பத்து ஆண்டுகளுக்குத் தமிழ் மக்களைப் பின்நோக்கித் தள்ளியுள்ளது.

பாடசாலைகளும் பல்கலைக்கழகங்களும் சீராக இயங்கினால் மாணவர்கள் இளைஞர்கள் போராட வர மாட்டார்கள் என்பதனை தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் ஒரு கொள்கையாகவே ஏற்றுக்கொண்டனர். இவற்றின் விளைவாகவும் தொடர்ச்சியான யுத்தம் காரணமாகவும் தமிழ்ப் பிரதேசங்களின் கல்விநிலை வீழ்ச்சியடைந்தமை எதிர்வுகூறப்பட்ட ஒன்றே.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இருந்த முரண்நகை என்னவென்றால், தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், அந்த சமூகம் தன்னைத் தற்காத்துக் கொள்வதற்கு வாய்பாக அமையக் கூடிய கல்வியைத் தொடர்ச்சியாக நிராகரித்தது. அடிப்படை அறிவும் அடிப்படைச் சிந்தனைத் தெளிவுமற்ற  மாணவர்கள், இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவதற்கு அணி சேர்க்கப்பட்டனர்.

கல்விக் கட்டமைப்புகள் ஆயுதம் தாங்கியவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. கல்விச் சமூகத்தின் உள்ளுணர்வு சிதைக்கப்பட்டு ஆயுதங்களின் கீழ் கல்வி தனது அவசியத்தினை இழந்தது. ஆனால் இன்றோ தமிழ் மக்கள் தங்களைத் தற்காத்துக் கொளவதற்கென இருந்த கல்வி வளத்தையும் சிதைத்துவிட்டு ஆயுதங்கள் மௌனமாகிவிட்டன.  இவை மௌனமாக்கப்பட வேண்டியவையே. ஆனால் இந்த ஆயுதங்களால் ஆளப்பட்ட தமிழ் மக்களும் மௌனமாக்கப்பட்டு விட்டனர்.

இலங்கையிலும் சரி, பிரித்தானியாவிலும் சரி, உலகின் எப்பாகத்திலானாலும் சரி ஒரு பெரும்பான்மைச் சமூகத்தினுள் வாழ்கின்ற சிறுபான்மைச் சமூகம் தன்னை தற்காத்துக்கொள்ளவும் தனது உரிமைகளை உறுதிப்படுத்திக் கொள்ளவும் மிகக் கடுமையாகப் போராட வேண்டியுள்ளது. இப்போராட்டமானது பலவகைப்பட்டதானாலும் ஒரு சமூகம் கல்வியில் உயர்நிலையை அடைகின்ற போது அச்சமூகம் தன்னைத் தற்காத்துக் கொள்கின்ற பலத்தினைப் பெறுகின்றது. பொருளாதார வளர்ச்சியின் அடிப்படை அம்சமாக தற்போது கல்வி அமைந்துள்ளது. கல்வியும் பொருளாதாரமும் ஒன்றுடன் ஒன்று நெருக்கமான உறவைக் கொண்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் அதன் இராணுவ பலத்தைக் கட்டி அமைக்க செலவிடப்பட்ட வளங்களை தமிழ்ச் சமூகத்தின் கல்வி வளர்ச்சியை நோக்கித் திருப்பியிருந்தால் இலங்கை வாழ் தமிழ் சமூகத்தின் நிலை இவ்வளவு கீழ் நிலைக்குச் சென்றிருக்க மாட்டாது. இலங்கைத் தமிழ் சமூகம் இன்று அறிவியல் வறுமையாலும் உள்ளுணர்வின் வரட்சியாலும் மிகவும் பாதிக்கப்படுகின்றது.

இதனை மாற்றி அமைப்பதற்கு தமிழ்ச்சமூகம் தன்னை மீண்டும் தற்காத்துக் கொள்ளும் நிலையை எய்துவதற்கும் தனது உரிமைகளை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும் அச்சமூகம் தனது கல்விநிலையை உயர்த்திக்கொள்ள வேண்டும். அது பொருளாதார மீட்சியையும் உறுதிப்படுத்தும்.

Front_Cover_UoJ_A_Viewதமிழ் மக்கள் தங்கள் கல்விநிலையை உயர்த்திக்கொள்ளக் கல்விக் கட்டமைப்புகள் சீரமைக்கப்பட வேண்டும். கல்விக் கட்டமைப்புகள் சீரமைக்கப்படுவது என்பது கல்லும் சீமெந்துக் கலவையும் கொண்ட கட்டடங்களையல்ல. அகநிலை கட்டமைப்புகள் மறு சீரமைக்கப்பட வேண்டும்.

இதனை தமிழ் சமூகத்தின் உயர்ந்த கல்வி ஸ்தாபனமாக விளங்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரம்பிப்பதே பொருத்தமானதாக அமையும். தமிழீழ விடுதலைப் போராட்டம் சீரழித்த கல்விக் கட்டமைப்புகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் முக்கியமானது. இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அதன் எல்லா அம்சங்களிலுமே கீழ்நிலையிலேயே உள்ளது. அதற்கு புறக் காரணிகளிலும் பார்க்க அகக்காரணிகளே பெரும்பாலும் காரணமாக உள்ளதனை இந்நூலில் உள்ள கட்டுரைகளில் காணலாம்.

பிரித்தானியா போன்ற நாடுகளில் ஒரு மாணவன் அல்லது மாணவி பல்கலைக்கழகம் செல்வது என்பது பெரும்பாலும் அம்மாணவனுடையதோ அல்லது மாணவியினுடையதோ தெரிவாகவுள்ளது. ஒவ்வொரு மாணவனுக்கும் அதற்கான வாய்ப்பு பெரும்பாலும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இலங்கையில் அவ்வாறு இல்லை.  பல்கலைக்கழகம் செல்வது என்பது மாணவ,  மாணவியரின் கனவு.  மிகக் கடுமையான போட்டியினூடாக மிகக் குறைந்த விகிதமான மாணவ, மாணவிகளே பல்கலைக்கழகம் செல்கின்றனர்.  அதற்கு இம்மாணவ,  மாணவிகளும் அவர்களின் பெற்றோர்களும் மேற்கொள்ளும் அர்ப்பணிப்பு மிக உயர்ந்ததாக உள்ளது.

இவ்வாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் சென்றோர் எதிர்கொண்ட பிரச்சினைகளே இந்நூலை உருவாக்கக் காரணமானது. இலங்கைத் தமிழ்ச் சமூகமானது அதன் வரலாற்றில் மிக இக்கட்டான காலகட்டம் ஒன்றில் சிக்கியுள்ளது. இந்நிலையில் இச்சமூகத்தின் உயர்ந்த கல்வி ஸ்தாபனமான யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமானது  தற்போதைய அதன் கீழான நிலையில் இருந்து மீட்டெடுக்கப்பட வேண்டியது மிக அவசியமானது.

அதற்கான ஒரு வாய்ப்பாக யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தின் உபவேந்தருக்கான தெரிவு  நவம்பர் 2010ல் இடம்பெற இருக்கின்றது.  புதிய உப வேந்தரைத் தெரிவு செய்யும் தகைமையுடைய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கவுன்சில் அங்கத்தவர்கள் இத்தெரிவை மிகவும் பொறுப்புடன் மேற்கொள்ளவேண்டும். யாழ் பல்கலைக்கழகத்தின் இலக்கையும் தொலைநோக்குப் பார்வையையும் முன்னெடுத்துச் செல்லும் கல்வியியல் ஆளுமையும் முகாமைத்துவத் திறமையும் உடையவரை அவரது தகைமையின் அடிப்படையில் மட்டும் தெரிவு செய்ய வேண்டும் என்று தமிழ்க் கல்விச் சமூகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

த ஜெயபாலன்
ஆசிரியர், தேசம்நெற்.
நவம்பர் 09, 2010.

அண்மைக் காலமாக தேசம்நெற் இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பாக வெளியிடப்பட்ட பதிவுகள்:

சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல பெரிய பள்ளிக்கூடமே! : த ஜெயபாலன்

‘‘எல்லாம் அல்லது பூச்சியம் என்ற கொள்கை எம்மைக் கைவிட்டது! ஆராய்ச்சியாளராகிய நாம் உண்மைக்கு மட்டுமே அடிபணிய கடமைப்பட்டு உள்ளோம்.’’ பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் உடனான நேர்காணல்

பல்கலைக்கழகங்கள் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. யாழ் பல்கலைக் கழகத்திடமும் சமூக மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது: நிஸ்தார் எஸ் ஆர் மொகமட்

இன்று Aug 29 -வடக்கு – கிழக்கு – மலையக தமிழ் பேசும் மக்களின் கல்வியின் எதிர்காலம் – பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் உடன் சந்திப்பும் கலந்துரையாடலும்

மாற்றத்திற்கான நம்பிக்கையுடன் பேராசிரியர் ஹூல் யாழ் செல்கின்றார்! : த ஜெயபாலன்

‘Tamillain-Barre’ Syndrome’ மும் தமிழ் சமூகத்திற்கான புதிய அரசியல் கலாச்சாரத்தின் அவசியமும் : த ஜெயபாலன்

யாழ் பல்கலைக்கழகம் – முப்பத்தாறு வருடங்கள் – முழுமையான சீரழிவு : நட்சத்திரன் செவ்விந்தியன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் யை ஆதரிப்போம்! : ரி கொன்ஸ்ரன்ரைன்

தவித்துக் கொண்டிருக்கும் நமது சமூகத்திற்காய் உழைப்போம்: யாழ் பல்கலை. மாணவர் ஒன்றியம்

பேராசிரியர் கைலாசபதி: ஒரு பெரு விருட்சமும் சில சிறு செடிகளும் : கரவை ஜெயம்

‘யாழ் பல்கலைக்கழக மாணவிகள் தற்கொலை முயற்சி!’ யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் – அரச அதிபர் சுயாதீன விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும். : த ஜெயபாலன்

யாழ் பல்கலையின் உபவேந்தர் தெரிவுக்கு பேராசிரியர் ஹூலுக்கு ஆதரவாக மேற்கொண்ட கையொப்ப ஆவணம் அமைச்சர் தேவானந்தாவிடம் கையளிக்கப்பட்டது : த ஜெயபாலன்

”யாழ் பல்கலைக்கழகம் தொடர்பான தேசம்நெற் கட்டுரைகளுக்கும் எனக்கும் தொடர்பில்லை.” பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல்

ஈபிடிபி தோழர்களே! நல்லதொரு இதயவீணை செய்து அதை நலங்கெடப் புழுதியில் எறிந்திட வேண்டாம். : ரி சோதிலிங்கம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பார்வை நூலுக்கான முன்னுரை : த ஜெயபாலன்

கிழக்கு பல்கலைக்கழகத்தில் 14 மாணவர்கள் இடைநிறுத்தம்

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் 14 பேர் ஒரு வருடத்துக்கு இடைநிறுத்தப் பட்டுள்ளனர். கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வதிவிட மற்றும் ஒழுக்காற்றுச் சபை இந்நட வடிக்கை எடுத்திருப்பதாக கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதில் துணைவேந்தர் பேராசிரியர் கலாநிதி பிரேமகுமார் தெரிவித்தார்.

மாணவியொருவரை பகிடிவதை செய்தமை, குழு மோதல்களில் ஈடுபட்டமை போன்றவைக்காகவே 14 மாணவர்களும் இடைநிறுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எதிரான விசாரணைகளை பல்கலைக்கழகத் தின் வதிவிட மற்றும் ஒழுக்காற்று சபை நடத்தி யிருந்ததுடன், குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டமையால் 14 பேரும் ஒரு வருடத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

பேராயர் மல்கம் ரஞ்சித் இன்று கர்தினால் ஆகிறார் – வத்திக்கானில் விசேட வைபவம்

1111.jpgபேராயர் பேரருட்திரு மல்கம் ரஞ்சித் ஆண்டகை இலங்கையின் இரண்டாவது கர்தினாலாக இன்று திருநிலைப்படுத்தப்படவுள்ளார். வத்திக்கான புனித பேதுருவான வர் பேராலயத்தில் நடைபெறும் விசேட வைபவத்தின் போது பரிசுத்த பாப்பரசர் 16வது ஆசிர்வாதப்பர் மல்கம் ரஞ்சித் ஆண்டகையை கர்தினாலாக திருநிலைப்படுத்துவார். அந்த நிகழ்வு இன்று காலை 10.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

கடந்த மாதம் கத்தோலிக்கத் திருச் சபையின் புதிய கர்தினாகளின் பெயர்களை பரிசுத்த பாப்பரசர் உத்தியோகபூர்வமாக அறிவித்தார். அதற்கிணங்க இன்றைய திருநிலைப்படுத்தல் நிகழ்வில் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையுடன் 24 பேர் கர்தினாலாகளாக பதவியேற்கின்றனர்.

புதிய கருதினால் பேரருட்திரு மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் முதலாவது திருப்பலி வத்திக்கான பேராலயத்தில் எதிர்வரும் 23ம் திகதி நடைபெறுவதுடன், 27ம் திகதி அவர் மீண்டும் நாடு திரும்புகிறார். கட்டுநாயக்கா விமான நிலையத்தில் அவருக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டு தேவத்தை பெஸிலிக்காவரை அவர் ஊர்வலமாக அழைத்து வருவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதனையடுத்து நன்றித் திருப்பலியொன்றையும் அவர் நிறைவேற்றவுள்ளார்

‘வடக்கு, கிழக்கில் இடம்பெறும் ஒவ்வொரு அபிவிருத்தியும் பயங்கரவாதத்திற்கான வழிகளை மூடும் – ஜனாதிபதி

MR_Sworn_in_2nd_termவடக்கு, கிழக்கில் முன்னொருபோது மில்லாதவாறு செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அங்கு இடம்பெறும் ஒவ்வொரு அபிவிருத்தியும் பயங்கரவாதத்திற்கான வழிகளை மூடும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.மேலும் வடக்கு மக்கள் மாகாண சபைக்கும் உள்ளூராட்சி சபைகளுக்கும் தமது பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க சந்தர்ப்பம் வழங்குவதோடு அதனூடாக அதிகாரங்களை மக்கள் கைகளிலேயே ஒப்படைப்பதே தமது எதிர்பார்ப்பாகுமெனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவியேற்பு நிகழ்வு நேற்று காலி முகத்திடலிலுள்ள ஜனாதிபதி செயலகக் கட்டிட முன்றலில் நடைபெற்றது. பிரதமர் டி.எம். ஜயரட்ன, சிரேஷ்ட அமைச் சர்கள், மதத் தலைவர்கள், ராஜதந்திரிகள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் நாட்டு மக்களுக்கு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். அவர் தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது; ஐந்து வருடங்களுக்கு முன்னர் நீங்கள் என்னிடம் ஒப்படைத்த நாட்டை விட சிறந்த நாடொன்றிலேயே தற்போது நீங்கள் வாழ்கின்aர்கள் என்பது உண்மை.

வழங்கப்பட்ட பொறுப்பினை நிறை வேற்றி முன்பிருந்ததை விட சிறப்பான நாட்டைக் கட்டியெழுப்பிய பின் மக்கள் முன் உரையாற்றும் தலைவன் நான் என்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். கடந்த 2005 நவம்பர் 19ம் திகதி நான் பதவியேற்று நாட்டைப் பொறுப்பேற்றபோது இந்த நாடு இரண்டாகப் பிளவுபட்டிருந்தது. இரவு பகல் எனப் பாராமல் பெரும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் பொறுப்புடனும் அர்ப்பணிப்புடனும் நான் செயற்பட்டமை சகலரும் அறிந்ததே.அதனைத் தொடர்ந்து கடந்த வருடம் மே 19ம் திகதி பயங்கரவாதத்தை வென்று உலகின் பாராட்டைப் பெற்றுக்கொண்டதுடன் நாட்டை ஒன்றிணைத்தோம்.

இன்று நவம்பர் 19ம் திகதி எமது தாய் நாட்டை உலகின் முன்னிலையில் இலங் கையை உன்னத நாடாக உயர்த்துவதற்கான எதிர்பார்ப்புடனேயே பொறுப்பேற்கிறேன். 2005ம் ஆண்டு மஹிந்த சிந்தனை கொள் கைத் திட்டத்தை முன்வைத்து அதன் மூலம் நாட்டை மீட்டு ஐக்கியப்படுத்தினோம். இன்று முதல் மஹிந்த சிந்தனையின் எதிர் காலத் திட்டம் ஆரம்பமாவதுடன் அதன் மூலம் உலகின் உன்னத நாடாக இலங்கையைக் கட்டியெழுப்புவதே எமது இலக்கு. 2005 ல் இருந்தது போன்று பன்மடங்கு பலம் தன்னம்பிக்கையுடனேயே இம்முறை நாம் நாட்டைப் பொறுப்பேற்றுள்ளோம்.

நம்மில் பெரும்பாலானோர் தெற்கில் இரண்டு கிளர்ச்சியையும் வடக்கில் 30 வருட பிரிவினைவாதத்தையும் கண்டுணர்ந் தவர்கள். பிரிவினைவாதத்தைப் போன்றே கிளர்ச்சியின் மூலமும் நமது தாய்நாடு உலகப் படத்தில் அடிமட்டத்திற்கு வீழ்ச்சி யுற்றமையை நாம் கண்டுள்ளோம். இதனால் இன்னும் 20 அல்லது 30 வருடங்களில் நாடு மீண்டும் இரத்த ஆற்றில் மிதப்பதைத் தடுக்கவும் உலகின் முன்னி லையில் நாம் தனித்துவமாக எழுந்து நிற்கவும் வழிவகை செய்வதே எமது முதன்மையான நடவடிக்கையாகவேண்டும்.

அதற்காக எமது தாய் நாட்டில் இனங் களுக்கிடையிலான சமத்துவம் சமாதானம் நிலைப்பதற்கு வழி செய்வது அவசியம். அதனால்தான் நாட்டின் மக்கள் தொகையில் நூற்றுக்கு 80 வீதம் வாழும் கிராமப் பிரதேசங்களை முன்னேற்றுவதற்கு மஹிந்த சிந்தனை மூலம் தீர்மானித்தோம்.இதனால் கொழும்பிற்கு வெளியே நகரங்கள் கிராமங்களில் கவிழ்ந்திருந்த இருள் நீங்கி ஒளியேற்பட்டுள்ளது. ஐந்து துறைமுகங்கள் ஏற்படுத்தப்பட்டதும் இத்தகைய பகுதிகள் உயர் பொருளாதார வலயங்களாக மாற்றம்பெறுவது உறுதி.

பாரிய அபிவிருத்தியை முன்னெடுக்கும் போது இன்னும் பல நகரங்கள் கட்டி யெழுப்பப்படும். இதன் மூலம் வர்த்தகம் வேலை வாய்ப்புத்துறைகளில் பாரிய முன்னேற்றம் ஏற்படும். பயங்கரவாதத் திடமிருந்து மீட்கப்பட்ட நாடு 2012 இறுதிக்குள் இருளிலிருந்து மீட்கப்பட்ட நாடாக ஒளிபெறும். அது மட்டுமன்றி எமது மின்சாரத் திட்டங்களின் மூலம் நாட்டின் சகல குடும்பங்களும் ஒளிபெறுவதும் உறுதி எம்முன் உள்ள எதிர்காலமானது நாட்டிற்காக நாம் அனைவரும் உழைக்க வேண்டிய காலமாகும். பயனுள்ளதாகவும் வருமான மீட்டுவதாகவும் நாட்டை உயர்த்துவதே எமது எதிர்பார்ப்பு.

எமக்கு எமது இளைய தலைமுறை யினரின் மீது அதீத நம்பிக்கையுள்ளது. எமது இளைஞர்கள் முப்படைகளிலும் இணைந்து உலகம் பாராட்டும் வெற்றியை ஈட்டித் தந்தமையை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.எமது எதிர்கால சந்ததியினர் முன்மொழி யிலும் கற்றுத் தேர்ந்து தொழில்நுட்ப ரீதியில் 75 வீதமாக முன்னேற்றமடைவதையே நாம் எதிர்பார்ப்பாகக் கொண்டுள்ளோம். நாம் இந்த நாட்டை அறிவின் கேந்திரமாக் கும்போதுஅவர்கள் அத்தகைய நிலையை எட்ட முடியும் என்பதே எமது நம்பிக்கை.

எமது நாட்டின் பிரச்சினைகளை இனங்காணவும் அதனைத் தீர்க்கவும் போதிய தெளிவு எம்மிடமுண்டு. இலங்கை வளர்ச்சியடைந்து வரும் நாடுகளின் ஒரு மாதிரி அல்ல. எந்தவொரு கருத்தை தெரிவிப்பதற்கும் தீர்மானங்களை எடுப்பதற்கும் உரித்துடையவர்கள். எமது நாட்டுக்குச் சாதகமான தீர்வையே நாம் தேடுவோம். பயங்கரவாதிகளினது எதிர்பார்ப்பும் மக்களுடைய எதிர்பார்ப்பும் ஒன்றல்ல என்பதை நாம் அறிவோம். வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத செயற் திட்டங்களை நாம் வடக்கு கிழக்கில் மேற்கொண்டுள்ளோம்.

வடக்கு, கிழக்கில் இடம்பெறும் சகல அபிவிருத்திகளும் பயங்கரவாதத்திற்கான வழிகளை இல்லாதொழிப்பது உறுதி. வறுமையை ஒழிப்பதும் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதும் அரசியல் தீர்வின் பாரிய பகுதியாகும் என்பதே எனது நம்பிக்கை.வடக்கு மக்கள் ஜனாதிபதித் தேர்தலில் சுதந்திரமாக வாக்களித்துள்ளார்கள். பொதுத் தேர்தலில் தமது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்துள்ளனர். எதிர்காலத்தின் உள்ளூராட்சி சபைகளுக்குப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்படும். இதன் மூலம் மக்கள் கைகளிலேயே அதிகாரங்களை வழங்க நாம் எதிர்பார்க்கின்றோம்.

எமது வெளிநாட்டுக் கொள்கையானது பிளவுபடாத கொள்கையாகும். கடந்த யுகத்தில் தேசிய பாதுகாப்புக்காக நாம் பல நாடுகளுடன் இணக்கப்பாட்டுடன் செயற்பட்டோம். தற்போது உருவாகியுள்ள அபிவிருத்தி யுகத்தில் அதற்காக 1திlழி ஒத்துழைப்பு வழங்கும் நாடுகளுடன் நட்புக்கரம் நீட்டுவோம். சமாதானமின்றி அபிவிருத்தியில்லை. அபிவிருத்தியின்றி சமாதானமில்லை. அதனால் தேசிய பாதுகாப்புக்காக நட்புறவு கொண்ட நாடுகளுடன் உறவுகளை பலப்படுத்திக்கொண்டு புதிய தொடர்புகளை ஏற்படுத்தவும் நாம் நடவடிக்கை எடுப்போம்.

கஷ்டமான விடயங்கள் என கைவிடுவது எமது கலாசாரமல்ல. நாட்டை மீட்பது மட்டுமன்றி தற்காலத்தில் இந்த சமூகம் மீள முடியாது என சிலர் நினைக்கின்ற பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்கு நாம் பின்னிற்கப்போவதில்லை. கடந்த பொதுத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தலிலும் தொகுதி வாரியாக வேறு எந்த நாடும் எட்ட முடியாத வெற்றியை நாம் பெற்றுள்ளோம். பாதாள உலகமற்ற சட்டவிரோத செயல்களற்ற, கப்பம், ஆயுதப் பரிமாற்றமற்ற நாட்டை கட்டியெழுப்புவதே எமது எதிர்பார்ப்பு.

எதிர்கால வெற்றிகளின் முக்கிய பங்காளிகளாக இந்நாட்டுப் பிரஜைகள் அனைவரும் திகழவேண்டும் என்பதே எமது அவா. அதற்காக இன, மத, குல, அரசியல், கட்சி பேதமின்றி எம்முடன் இணையுமாறு நான் அழைப்பு விடுக்கின்றேன். இந்நாட்டை உயர்ந்த இடத்திற்கு நான் கொண்டு வந்துள்ளேன். நீங்கள் என்னை உயர்த்துவதற்கு வேறு இடமில்லை. எனது தாய்நாடு அன்றி உயர்ந்தது என்று எனக்கு எதுவுமில்லை.

நான் ஓய்வு பெற்ற நாளில் மெதமுலன வீட்டிலேயே இருப்பேன். அந்நாட்களில் இந்த நாட்டின் பிரஜையொருவர் என்னை வந்து பார்த்து ‘நீங்கள் நாட்டுக்கு செய்ய வேண்டிய கடமையை நிறைவேற்றியுள்ர்கள்’ என பெருமையுடன் கூறினால் அதுவே எனக்கு பெரும் திருப்தி எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்

முன்னாள் ஜரிவி ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டு விசாரணைகளின் பின் விடுவிக்கப்பட்டார்!

Sundar_Journalistஇவ்வாரம் இலங்கை சென்றிருந்த ஊடகவியலாளர் கார்திகேயன் திருலோகசுந்தர் (சுந்தர்) கொழும்பில் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டு உள்ளார். விமான நிலையத்தில் இலங்கைப் புலனாய்ப்பிரிவினரால் கைது செய்யப்பட்ட இவர் நேற்று மாலை (நவம்பர் 18 2010) விசாரணைகளின் பின் விடுவிக்கப்பட்டு உள்ளார்.

சுந்தர் ஈரிபிசி வானொலியில் பணியாற்றி வந்தவர். அதன்பின் தீபம் தொலைக்காட்சியில் சிறிதுகாலம் பணியாற்றியவர். மார்ச் 19 2008ல் சுந்தரை வேலை நீக்கும் கடிதத்தை தீபம் தொலைக்காட்சி வழங்கியது. இதற்கு முன்னர் தீபம் தொலைக்காட்சிக்கும் சுந்தருக்கும் இடையே குற்றச்சாட்டுகளும் முரண்பாடுகளும் வாக்குவாதமும் ஏற்பட்டு இருந்தமை லண்டன் குரல் இதழ் 23 (மார்ச் – ஏப்ரல் 2008) ல் வெளிவந்திருந்தது.

அதன்பின்னர் சுந்தர் ரிரிஎன் – ஜரிவி தொலைக்காட்சியில் பணியாற்றி இருந்தார். தற்போது ஜிரிவி இன் முக்கிய நிகழச்சித் தயாரிப்பாளராகவும் நிகழ்ச்சி வழங்குனராகவும் உள்ள தினேஸ்குமாரும் தீபம் தொலைக்காட்சியில் இருந்தே ரிரிஎன் – ஜிரிவி தொலைக்காட்சிக்கு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிரிவி இலும் சுந்தர் நீண்டகாலம் நிலைக்கவில்லை. ஜிரிவி இல் சம்பளம் வழங்கப்படாத காரணத்தினால் சிலர் அத்தொலைக்காட்சியில் இருந்து விலகிய போது சுந்தரும் அதன் காரணமாக வெளியேறினார். அதன் பின்னர் தற்போது வடக்கின் வசந்தத்தில் யாழ்ப்பாணத்தில் ஹொட்டல் கட்டிவருகின்ற ஆணிவேர் படத் தயாரிப்பாளர் திலகராஜாவின் உணவகம் ஒன்றில் முகாமையாளராகக் கடமையாற்றினார்.

இலங்கைக்கு தனது தாயை பார்க்க சென்ற பொழுதே விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டார். ஜிரிவி இல் பணியாற்றியது தொடர்பாகவே இவர் கைது செய்யப்பட்டதாகத் தெரியவருகிறது. இருப்பினும் இவர் நீண்ட காலத்திற்கு முன்னரேயே ஜிரிவி யை விட்டு வெளியேறியதும் மற்றும் அரசுசார்பானவர்கள் மத்தியில் இருந்து வந்த வேண்டுகோள்களை அடுத்தும் இவர் விடுவிக்கப்பட்டு உள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது பதவியேற்பு வைபவம் இன்று கோலாகலமாக நடைபெறுகின்றது.

MR_Sworn_in_2nd_termஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இரண்டாவது பதவிக் காலத்தை இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கின்ற நிலையில் கொழும்பில் இந்நிகழ்வையொட்டிய வைபவங்கள் மிகவும் கோலாகலமாக நடைபெறுகின்றன. கொழும்பு காலிமுகத்திடலுக்கு முன்பாகவுள்ள ஜனாதிபதி செயலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மேடையில் மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது பதவியேற்பு வைபவம் நடைபெறுகின்றது. இந்நிகழ்வில் சுமார் 150 வெளிநாட்டு பிரதிநிதிகளும் பங்கு கொள்கின்றனர். மாலைதீவு ஜனாதிபதி, பூட்டான் பிரதமர் ஆகியோரும் இதில் உள்ளடங்குகின்றனர்

MR_Sworn_in_2nd_termஇன்று காலை 10 மணிக்கு தனது இரண்டாவது பதவிக்காலத்தை ஜனாதிபதி சத்தியப்பிரமாணம் செய்து ஆரம்பிக்கின்றார். இப்பதவியேற்பு வைபவத்தையொட்டி காலிமுகத்திடலில் முப்படையினரின் அணிவகுப்பு மற்றும், மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெறுகின்றன.

இந்நிகழ்வுகளுக்காக கொழும்பு வரும் வாகனங்களுக்கு போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று காலை 6 மணி தொடக்கம் மாலை 3 மணி வரை கொழும்பு கோட்டை, காலிமுகத்திடல் ஆகியவற்றிற்கான பாதைகள் மூடப்பட்டிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் இந்த இரண்டாவது பதவியேற்பு வைபவம் பெருந்தொகை அரச நிதியை செலவு செய்து நடத்தப்படுவதாக பிரதான எதிர்கட்சியான ஐக்கியதேசியக்கட்சி விமர்சித்துள்ளது.

ஜனாதிபதியின் இரண்டாவது பதவியேற்பிற்கு வாழ்த்து தெரிவித்துள்ள தமிழ்தேசியக் கூட்டணியின் தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதி இந்த இரண்டாவது பதவிக்காலத்தில் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டும் என வலியுத்தியுள்ளார்.

ஜனாதிபதியின் இரண்டாவது பதவியேற்பு வைபவத்தில் அவர் ஆற்றுகின்ற உரை நாளை சனிக்கிழமை காலை 9.15 மணிக்கு யாழ்.குடாநாட்டின் சகல பகுதிகளிலும் ஒலிபரப்பப்படவுள்ளதா அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வீடமைப்புத் திட்டத்தின் முதற்கட்டமாக 1000 வீடுகள் அமைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

India_Flagபோரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய அரசாங்கத்தினால் அமைக்கப்படவுள்ள 50 ஆயிரம் வீட்டுத்திட்டத்தின் முதற்கட்டமாக ஆயிரம் வீடுகள் அமைக்கப்படவுள்ளன. இந்த ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கான ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்திய வீடமைப்பு மற்றும், வறுமை ஒழிப்பு அமைச்சின் நிர்வாக்தின் கீழ் இயங்கும் இந்துஸ்தான் பிறீபப் என்ற நிறுவனமும் இலங்கை அரசாங்கமும் இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா எதிர்வரும் 25ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் மரணம்.

Motorbike_Accidentயாழ். உரும்பிராய் சந்தியில் நேற்று இடம்பெற்ற விபத்தொன்றில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரே இவ்வாறு உயிரிழந்தார். இவர் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிள் மினிபஸ் ஒன்றுடன் மோதியதால் இவ்விபத்து ஏற்பட்டது.

சபாபதிப்பிள்ளை வீதி, சுன்னாகம் என்ற முகவரியைச் சேர்ந்த சுப்பிரமணியம் ஜெயச்சந்திரன் (வயது 30) என்ற இளைஞரே உயிரிழந்தவராவார். இவரோடு மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து பயணித்த எஸ்.கோபு (வயது30) என்ற இளைஞர் படுகாயமுற்று யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் 100 பேர் 21ஆம் திகதி விடுவிக்கப்படவுள்ளனர்.

விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 100 பேர் எதிர்வரும் 21ஆம் திகதி விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலநறுவையிலுள்ள சேனபுர என்ற தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்தவர்களே இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளனர் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும், புனர்வாழ்வு பிரதி அமைச்சர் விஜிதமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது பதவியேற்பு நிகழ்வை முன்னிட்டு இவர்கள் விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெடிபொருட்கள் அகற்றும் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் இளைஞர் படுகாயம்.

Landmine_Hello_Trust_Employeeயாழ்ப் பாணத்தில் வெடிபொருட்கள் அகற்றும் பணியிலீடுபட்டுக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நேற்று தவறுதலாக இடம்பெற்ற வெடிவிபத்தில் படுகாயமடைந்தார். நேற்று வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றது. யாழ்.பொன்னாலை பாண்டவெட்டை என்ற இடத்தில் மிதிவெடியகற்றும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது இவ்விபத்து ஏற்பட்டது.

கண்ணிவெடியகற்றும் நிறுவனமான ‘ஹலோ ட்றஸட்’ நிறுவனத்தில் பணியாற்றும் குருநகரைச் சேர்ந்த நிசாந்தன் எட்மன் பீரிஸ் என்ற 22 வயது இளைஞரே படுகாயமடைந்தவராவார். இவர் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

கண்ணிவெடியகற்றும் நிறுவனமான ‘ஹலோ டறஸ்ட்’ இல் போரினாலும் வறுமை நிலையினாலும் பாதிக்கப்பட்ட இளைஞர் யுவதிகளே அதிகளவில் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.