எழுத்தாளர்கள்

Friday, October 22, 2021

எழுத்தாளர்கள்

தமிழ் கட்சிகளின் அரங்கம் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளது.

தமிழ் கட்சிகளின் அரங்கம் ஜனாதிபதியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்த மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள், சிறைக்கைதிகளின் விடுதலை மற்றும், தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினைகள் குறித்து தமிழ் கட்சிகளின் அரங்கப் பிரதிநிதிகள் ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசவுள்ளதாகவும், இச்நதிப்பின் பொது ஜனாதிபதியிடம் சமாப்பிக்கப்படவிருக்கும் மகஜரைத் தயாரிக்க முவர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாகவும், அந்தக்குழு தயாரிக்கும் மகஜருக்கு இறுதி வடிவம் கொடுப்பதற்கு எதிர்வரும் 14ஆம் திகதி தமிழ் கட்சிகளின் அரங்கம் கூடவுள்ளதாகவும் தமிழ்கட்சிகளின் அரங்கத்தில் பங்கு வகிக்கும் தமிழ்தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் தலைவர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இனப்பிரச்சினைத் தீர்விற்கான திட்டமொன்று டிசெம்பர் இறுதியில் தயாரிக்கப்படும் எனவும், அது தயாரிக்கும் போது தமிழ்தேசியக் கூட்டமைப்புடன் ஒரு இணக்கப்பாடு எட்டப்பட்டுவிடும் என தான் நம்புவதாகவும் சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்துள்ளார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள் நீடிக்கப்பட்டுள்ளன.

படிப்பினைகள் மற்றும், நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள் அடுத்த ஆண்டு மே மாதம் வரையில் நீடிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் முன்பு மேலும் பலர் சாட்சியமளிக்க விரும்புவதால் அதன் காலஎல்லை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை நடைபெற்ற விசாரணைகள் குறித்த இடைக்கால அறிக்கையொன்று ஜனாதிபதிக்கு ஆணைக்குழுவால் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னால் மேலும் பலர் சாட்சியமளிக்க விரும்புவதாக கோரியிருப்பதால் அதன் அமர்வுகளை மேலும் ஆறுமாதங்களுக்கு நீடிக்கும்படி ஆணைக்குழுவின் தலைவர் சீ.ஆர்.டி சில்வா ஜனாதிபதி செயலகத்திடம் கேட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

மெனிக்பாம் அகதிமுகாம் மக்கள் வேறு முகாமிற்கு மாற்றப்படுகின்றனர்.

வவுனியா செட்டிக்குளம் மெனிக்பாம் முகாமில் தங்கியுள்ள இடம்பெயர்ந்த மக்கள் நேற்று சனிக்கிழமை வேறு முகாமிற்கு மாற்றப்பட்டனர். ‘வலயம்-4’ முகாமில் தங்கியிருந்த மக்களில் ஒரு தொகுதியினரே இவ்வாறு இடமாற்றப்பட்டவுள்ளனர். இவ்வாறு தாங்கள் இடமாற்றப்படுவதை அங்கிருந்த மக்கள் விரும்பவில்லை எனவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர் எனவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், நேற்று அம்முகாமிற்குச் சென்ற வவுனியா அரசாங்கஅதிபர், படைத்தளபதி, அதிகாரிகள் ஆகியோர் குறித்த முகாம் மக்களை சந்தித்து கூட்டங்களை நடத்தி உடனடியாக அவர்களை கதிர்காமர் முகாமிற்கு செல்லுமாறு கூறினர். அத்துடமன் பஸ்களில் அவர்களை ஏற்றி கதிர்காமர் முகாமிற்கு கொண்டு சென்றனர்.

வலயம்-4 முகாமிலுள்ள 35 நிலையங்களில் முவாயிரம் மக்கள் தங்கியுள்ளனர். இவர்களில் ஒரு தொகுதியினரே நேற்று இடமாற்றப்பட்டனர். மீதமுள்ள மக்களை இடமாற்றும் நடவடிக்கை இன்றும் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாங்கள் இன்னொரு முகாமிற்கு மாற்றப்படுதை அம்மக்கள் விரும்பவில்லை எனவும் தாங்கள் தங்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர்வதற்கு அழைத்துச் செல்லப்படுவதையே விரும்பாவதாகவும் அம்மக்கள் தெரிவித்துள்ளனர்.

மெனிக்பாம் முகாமிலுள்ள மக்கள் அவர்களைப் பராமரிப்பதற்கு ஏற்ற வகையில் கதிர்காமர் முகாமிற்கு மாற்றப்படவுள்ளதாக வவுனியா அரசாங்க அதிபர் ஏற்கனவே அறிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

நீக்கப்படமுடியாத அதிஉயர் பாதுகாப்பு வலயங்களினால் பாதிக்கப்படும் மக்களுக்கு மாற்றுக் காணிகள் அல்லது நட்டஈடு வழங்கப்படும்.

சாத்தியப்படக்கூடிய பகுதிகளில் அதிஉயர் பாதுகாப்பு வலயங்கள் நீக்கப்பட்டு அப்பகுதிகள் மக்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. ஆனால், சில பகுதிகளில் உயர்பாதுகாப்பு வலயங்களை நீக்க முடியாது என மீள்குடியேற்ற அமைச்சர் மில்றோய் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

ஆதிஉயர் பாதுகாப்பு வலயங்களாக இருந்த இடங்கள் பல பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டு அப்பகுதிகளிலிருந்த படையினர் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். ஆனால், சில இடங்களிலுள்ள பாதுகாப்பு வலயங்களை நீக்க முடியாது. அவ்வாறான பகுதிகளில் வாழ்ந்த மக்களுக்கு மாற்றுக்காணிகள் அல்லது நட்டஈடு வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உதாரணமாக திருகோணமலையில் சம்பூர் பிரதேசம் பாதுகாப்பு வலயமாவுள்ளது. அதனை நீக்குவது தற்போது சாத்தியமற்ற விடயம். ஆகவே அவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்றுக்காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன,; யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறுவதற்கு என வந்து யாழ்.புகையிரத நிலையத்தில் தங்கியுள்ள சிங்கள மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு ஒன்றைக் காண நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இந்த மக்கள் முன்னர் யாழ்ப்பாணத்தில் என்ன அடிப்படையில் வசித்து வந்தனர் என்பது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரைக் கேட்டுள்ளதாகவும், இது தொடர்பாக ஜனாதிபதியுடனும் கலந்துரையாடவுள்ளதாகவும் அமைச்சர் மில்றோய் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

வாகரை பிரதேசசபை உறுப்பினர் விபத்தில் பலி.

வாகரை பிரதேசசபை உறுப்பினரான 26 வயதுடைய நவரட்ணம் ருவேந்திரன் என்பவர் நேற்று சனிக்கிழமை இரவு வாகன விபத்தொன்றில் உயிரிழந்தார். இவர் மோட்டார் சைக்கிளில் புதூர் கதிரவெளி எனுமிடத்தில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த லொறியொன்றுடன் மோதியதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்து நடந்த இடத்திலேயே பிரதேசசபை உறுப்பினரான ருவேந்திரன் கொல்லபட்டார். இவருடன் சென்ற இருவர் படுகாயங்களுக்குள்ளாகி வாகரை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்விபத்து நடைபெற்றதும் ஆத்திரமுற்ற அப்பிரதேசவாசிகள் குறிப்பிட்ட லொறியினை தீவைத்துக் கொளுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை முதல் தேவேந்திரமுனை வரை ஒரு சட்டமே நடைமுறையில் உள்ளது – ஜனாதிபதி

president.jpgசட்டம் சகலருக்கும் சமமானது அரசியல் மற்றும் குறுகிய நோக்கங்களுக்காக சட்டத்தைக் கையிலெடுக்க எவருக்கும் இடமளிக்க முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நீதிமன்றத் தீர்ப்புக்குச் சகலரும் தலைவணங்க வேண்டியது அவசியம். தற்போது நாட்டில் சகலருக்கும் பொதுவான ஒரே சட்டமே உள்ளது. பருத்தித்துறை முதல் தேவேந்திரமுனை வரை அதுவே நடைமுறையிலுள்ளது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தங்கல்லையில் புதிய நீதிமன்றக் கட்டடத் தொகுதியை நேற்று உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றிய ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது, சட்டம் சகலருக்கும் பொதுவானது. நீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்குச் சகலரும் தலைவணங்க வேண்டும். எனது மனித உரிமை மீறப்பட்டுள்ளமை தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு நான் மதிப்பளித்தேன். அதற்குத் தலைவணங்கினேன். அதற்கெதிராக ஆர்ப்பாட்டங்களைச் செய்யவில்லை.

எமது நாடு சுதந்திரமடைந்து கெளரவமான சமாதானம் உருவாகியுள்ளது. சுதந்திரமும் சமாதானமும் கிடைத்துள்ளதால் நாம் திருப்திப்பட முடியாது. நீதியும் நியாயமும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். நீதிமன்றங்கள் வணக்கஸ்தலங்கள் போன்றவை மக்கள் நம்பிக்கைமிக்கதாக அவை அமைய வேண்டும். நீதி நியாயத்திற்கான உந்துசக்தியாக நீதிமன்றங்கள் மக்களுக்கான சேவைகளை நிறைவேற்ற வேண்டும்.

மக்களுக்கு சேவை செய்வதே எம் அனைவரினதும் பொறுப்பாக வேண்டும். நீதிமன்றங்களில் வழக்குகள் அளவுக்கதிகமாக தாமதமாகியுள்ளன. பல வழக்குகள் 25 வருடங்களுக்கு மேல் நீள்கின்றன. இதில் ஜோர்ஜ் ராஜபக்ஷவின் தங்கையின் வழக்கும் 25 வருடங்கள் பழமை வாய்ந்ததாகியது. இத்தகைய நிலை மேலும் நீடிக்க இடமளிக்க முடியாது. இதனால் நாடளாவிய ரீதியில் 74 மேன் முறையீட்டு நீதிமன்றங்களை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கான இணக்கப்பாடும் நீதியரசர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது.

நீதியை நிலைநாட்டுவதற்கு சகலரும் முன்வர வேண்டும். நீதிமன்றங்கள் நீதி நியாயத்தை நிலைநாட்டும் மக்கள் சேவையை முழுமையான அர்ப்பணிப்புடன் நிறைவேற்ற வேண்டும்.

கடந்த காலங்களில் வவுனியாவிற்கு அப்பால் நீதிமன்றங்கள் இருக்கவில்லை. யாழ்ப்பாணத்தில் மட்டுமே எமது நீதிமன்றம் இருந்தது. வவுனியாவிற்கு அப்பாலுள்ள பிரதேசங்களில் நீதிமன்றங்களும் சட்ட நிறுவனங்களும் புலிகளின் அதிகாரத்திற்கு உட்பட்டதாக இயங்கின.

தற்போது பருத்தித்துறை முதல் தேவேந்திரமுனை வரை ஒரே நீதி ஒரே சட்டம் என நடைமுறையிலுள்ளது. அதற்கேதுவாக நாடு உருவாக்கப்பட்டு விட்டது. அரசியல் தேவைகளுக்காக எவரும் சட்டத்தில் கைவைக்க முடியாது. சட்டத்தை எவரும் கையிலெடுக்கவும் இடமளிக்க முடியாது. சகல மக்களுக்கும் சட்டம் பொதுவானது. சுயாதீனத்தில் கைவைப்பதற்கான உரிமை எவருக்கும் கிடையாது. சிலர் வெளிநாடுகளுக்குச் சென்று எமது நீதிமன்ற சுயாதீனம் தொடர்பாக பேசுகின்றனர். நானும் நீதிமன்றத்தில் ஒரு சட்டத்தரணி அதே நேரம் ஒரு வழக்காளியாக இருந்தவன். எனினும் நான் நீதிமன்றத் தீர்ப்பிற்கு தலை வணங்கினேன். மூன்று தடவை சிறையிலிருந்த அனுபவமும் எனக்குண்டு. எனது மனித உரிமை மீறல் தொடர்பாக நான் ஜெனீவாவுக்குச் சென்றேன். எனது ஆவணங்கள் அபகரிக்கப்பட்ட நிலையில் என்னுடன் வந்த பொலிஸ் அதிகாரி எனது நிலைப்பாட்டை அங்கு தெளிவுபடுத்தினார்.

எவ்வாறெனினும் நீதிமன்றமானது எனக்கு எவ்வித மனித உரிமை மீறலும் இடம்பெறவில்லையென தீர்ப்பளித்தது. அதற்கு நான் தலை வணங்கினேன். நான் மட்டுமல்ல நீதிமன்றத் தீர்ப்பிற்குத் தலைவணங்க நாம் அனைவரும் கட்டுப்பட்டுள்ளோம். நீதிமன்றத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்குப் பங்கம் ஏற்பட்டுவிடக் கூடாது. தங்கல்ல தற்போது அபிவிருத்தியில் வளர்ச்சி காணும் ஒரு பிரதேசமாகும் இத்தருணத்தில் இங்கு நீதிமன்றம் அமைவது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். இப்பிரதேசத்தில் மட்டுமன்றி நாட்டின் எப்பிரதேசத்திலும் மக்கள் தேவையை நிறைவேற்ற நாம் எந்நேரத்திலும் தயாராகவுள்ளோம்.

மக்கள் நம்பிக்கைக்குரியதாக நீதிமன்றங்கள் மாற்றப்பட வேண்டும். அவை, மக்களுக்கு பிரச்சினைகளிலிருந்து நிவாரணமளிப்ப தாகவும் தமைய வேண்டும். அதற்கான சகல வேலைத்திட்டங்களையும் நாம் முன்னெடுத்து வருகிறோம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

பாடசாலை விடுமுறைக்கு முன் உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள்

sri-lankan.jpgபாடசாலை 3 ஆம் தவணை விடுமுறைக்கு முன்னர் க.பொ.த. உயர்தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்நாயகம் அநுர எதிரிசிங்க தெரிவித்தார். டிசம்பர் 9 இல் பாடசாலை விடுமுறை ஆரம்பமாகின்றது. அதற்கு முன்னர் உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிட முடியுமென ஆணையாளர் நாயகம் நம்பிக்கை தெரிவித்தார்.கடந்த ஆகஸ்ட் 9 முதல் செப்டெம்பர் 3 வரை உயர்தரப் பரீட்சை இடம்பெற்றது. 268,933 தனிப்பட்ட பரீட்சார்த்திகள் இந்த வருடம் உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பித்திருந்தனர்.  பரீட்சை வினாத்தாள் மதிப்பீடு மூன்று கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டது. 2 ஆவது கட்ட மதிப்பீடு செம்டெம்பர் 24 வரை இடம்பெற்றது.

பிரபாகரனின் தாயாரைப் பிள்ளைகள் பார்க்க வாய்ப்பளிக்குமாறு அரசைக் கோரவில்லை சிவாஜிலிங்கம் தெரிவிப்பு

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளை அவரின் பிள்ளைகள் வந்து பார்ப்பதற்கு வாய்ப்பளிக்குமாறு அரசாங்கத்திடம் தான் கோரிக்கை விடுக்கவில்லை என்று தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

பார்வதி அம்மாளை அவரின் வெளிநாட்டிலுள்ள பிள்ளைகள் வந்து பார்ப்பதற்கு சிவாஜிலிங்கம் அரசாங்கத்திடம் அனுமதி கோரியிருந்ததாகவும் அதனை அரசாங்கம் நிராகரித்துவிட்டதாகவும் இந்திய ஊடகங்கள் பல நேற்று சனிக்கிழமை தெரிவித்திருந்தன. அத்துடன்,  தனது பிள்ளைகளை பார்க்க பார்வதி அம்மாள் விரும்பியிருந்ததாகவும் ஆயினும் அவரும் பிள்ளைகளும் பாதுகாப்பு தொடர்பாக அச்சம் கொண்டிருப்பதாகவும் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டிருந்தன.

இதுதொடர்பாக தான் அரசிடம் எந்தவொரு கோரிக்கையையும் விடுக்கவில்லை யென்று சிவாஜிலிங்கம் கூறியுள்ளார். அத்தகைய கோரிக்கையை அரசுக்கு நான் விடுப்பதாயின் பார்வதி அம்மாளின் பிள்ளைகள் தாங்கள் தாயாரை பார்வையிட வருகை தர விரும்புவதாக முதலில் அறிவித்திருக்கவேண்டும்.ஆனால், அவர்கள் என்னிடம் கோரிக்கை விடுக்கவில்லை. அவர்கள் இலங்கைக்கு வருகைதருவது தொடர்பான பாதுகாப்பு விடயமும் உள்ளது என்று சிவாஜிலிங்கம் அததெரணவுக்கு தெரிவித்துள்ளார்.

அதேசமயம் வல்வெட்டித்துறை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் பார்வதி அம்மாளின் உடல் நலத்தில் முன்னேற்றம் இல்லை என்றும் சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.

சம்பூர், நீர்கொழும்பில் வெடிபொருட்கள்

சம்பூர் மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் களில் பல வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

சம்பூர் கைமுந்தகுளத்திற்கு அருகில் புலிகள் இயக்கத்தின் பங்கர் ஒன்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த அதிசக்தி வாய்ந்த வெடிபொருட்கள் அடங்கிய 7 சிறிய பக்கெட்டுகள், 10 மிதிவெடிகள், ஒரு சயனைட் குப்பி என்பன மீட்கப்பட்டன. நீர்கொழும்பு கொப்பரா சந்தியில் வைத்து மன்னாரில் இருந்து மீன் எடுத்து வந்த லொறியில் இருந்து ஆயிரம் டெடனேட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

கிளிநொச்சியில் பாதிக்கப்பட்ட பகுதியில் புதிதாக பாடசாலை அமைக்கக் கோரிக்கை

கிளிநொச்சி, மலையாளபுரம், பொன்னகர், பாரதிபுரம் கிராமங்களிற்கென தனியான பாடசாலையொன்றை விரைவில் அமைத்துத் தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தப் பகுதிகளிற்கென தற்போது பாரதிபுர வித்தியாலயமே இயங்கி வருகின்றது. எனினும் தற்போது இந்தப்பாடசாலையில் மாணவர்கள் தொகை அதிகரித்துள்ளதனால் பல மாணவர்கள் நகரை அண்டியுள்ள பாடசாலைகளிற்குச் செல்கின்றனர்.முற்றாக போக்குவரத்து வசதிகள் இல்லாத இந்தப் பகுதியிலிருந்து மாணவர்கள் வெளியில் செல்வதனால் பல்வேறு இடர்களையும் எதிர்கொள்கின்றனர்.

குறிப்பாக பெரும்பாலான மாணவர்கள் நடந்தே பாடசாலைகளிற்குச் செல்கின்றனர்.எனவே தற்போதைய சூழலில் இது மிகவும் கஷ்டமாயிருப்பதாக மாணவர்களும் பெற்றோரும் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, இந்தப் பகுதிகளுக்கு அருகிலுள்ள குஞ்சுக்குளம் பகுதியில் மக்கள் இன்மையால் அந்தப் பகுதியில் இயங்கி வந்த பாடசாலையை மலையாளபுரம் பகுதியில் இயக்குவதற்கான நடவடிக்கைகள் சில தரப்புகளால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிய வருகின்றது. அதனையாவது உரிய முறையில் முன்னெடுத்து மாணவர்களின் கல்வி மேம்பாட்டிலும் சுமுகமான கல்விச் செயற்பாட்டிலும் உரியவர்கள் கூடிய கவனமெடுக்க வேண்டுமென மக்கள் கேட்டுள்ளனர்.