செய்திகள்

Wednesday, June 23, 2021

செய்திகள்

செய்திகள்

முல்லைத்தீவு வான்பரப்பில் மர்ம விமானம்

air.jpgமுல்லைத்தீவு வான்பரப்பில் நேற்று முன்நாள் செவ்வாய்கிழமை இரவு 8:30 மணியளவில் அடையாளம் தெரியாத விமானமொன்று உட்பிரவேசித்து சென்றதனால் குழப்பங்கள் தோன்றியுள்ளன. பாக்கு நீரிணைக்கு மேலாக வந்த இந்த விமானம் மீண்டும் அதே பாதையினால் திரும்பி சென்றுள்ளதாகக் கூறப்படுகின்றது. இது தொடர்பான செய்திகள் இன்றைய இலங்கை சிங்கள, ஆங்கில நாளேடுகளில் பிரதான இடத்தைப் பெற்றுள்ளன.

இந்த மர்ம விமானம் மிகவும் உயரமாக பறந்ததாகவும், கடற்படையினர் விமானத்தை நோக்கி தாக்குதல்களை மேற்கொண்ட போதும் அது வெற்றியளிக்கவில்லை எனவும் வான்படை பேச்சாளர் விங் கொமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு வான்பரப்பில் பிரவேசித்த இவ்விமானம் பிரபாகரனை அழைத்துச் செல்வதற்காக வந்திருக்கலாம் என ஆரம்பத்தில் சந்தேகங்கள் எழுந்தன. எனினும், விமானம் மீண்டும் திரும்பி செல்வதற்கு முன்னர் முல்லைத்தீவு பகுதியில் தரையிறங்கியதா என்பது தொடர்பில் எதுவும் தெரியாதபோதும், அதிக உயரத்தில் பறந்த விமானம் தரையிறங்குவது சாத்தியமற்றது என வான்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதேநேரம், இந்த விமானம் இந்தியாவின் உளவுப் படைக்குச் சொந்தமான விமானமாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகின்றது. ஏற்கனவே கிளிநொச்சி கைப்பற்றப்பட்ட நேரத்தில்கூட  இந்திய உளவு அமைப்பான றோ வின் விமானமொன்று வன்னிப் பகுதியை கண்காணித்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த விமானம் மிகவும் பிரகாசமான வெளிச்சங்களை கொண்டிருந்ததை கடற்படையினரும் வான்படையினரும் அவதானித்ததாகவும் அது திரும்பிச் செல்லும்போது வெளிச்சங்களின்றி சென்றதாகவும் மேலும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

2006 ஜனவரி முதலாந் திகதி முதல் ஒன்பது ஊடகவியலாளர்கள் கொலை: 27 பேர் தாக்குதல் – அமைச்சர் தினேஷ் குணவர்தன

denees.jpg
ஊடகவியலாளர்கள் ஒன்பது பேர் கடந்த 2006 ஜனவரி முதலாந் திகதி முதல் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் பிரதம கொறடா அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அந்தத் திகதி முதல் இற்றைவரை 27 ஊடகவியலாளர்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதோடு, ஐவர் கடத்தப்பட்டுள்ளதாகவும் கூறிய அமைச்சர், இதில் நால்வர் மீட்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

ஐ. தே. க. உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய வாய்மூல விடைக்கான கேள்வியொன்றுக்குப் பதில் அளித்த அமைச்சர் குணவர்தன ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்ட, தாக்குதலுக்கு உள்ளான சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகக் கூறினார்.

சம்பவங்கள் இடம்பெற்ற பொலிஸ் நிலையங்கள் மற்றும் குற்றப் புலனாய்வுப் பணியகம் என்பவற்றில் விசாரணைகள் இடம் பெற்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கை வந்துள்ள யசூசி அகாசி வடக்கு, கிழக்குக்கு நேரடி விஜயம்

yasusi.jpg
இலங்கைக்கான விசேட சமாதானத் தூதுவர் யசூசி அகாசி நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்றிரவு இலங்கை வந்துள்ளார். இவர் இலங்கையில் தங்கியுள்ள காலங்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் ரோஹித பொகொல்லாகம உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரையும் சந்திக்கவுள்ளார்.

இதன்போது இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமை, வடக்கு, கிழக்கு மீட்கப்பட்ட பகுதிகளின் அபிவிருத்திச் செயற்பாடுகள் மற்றும் சமாதான முன் னெடுப்புகள் சம்பந்தமாக சம்பந்தப்பட்ட தலைவர்களுடன் கலந்துரையாடவுள்ளார். இலங்கைக்கான விசேட சமாதானத் தூதுவராக நியமிக்கப்பட்டபின் 16 வது தடவையாக இம்முறை இலங்கைக்கு விஜயம் செய்துள்ள யசூசி அகாசி கிழக்கில் மீட்கப்பட்ட பகுதிகளின் அபிவிருத்தி, வடக்கில் வவுனியா உள்ளிட்ட பிரதேசங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகள் சம்பந்தமாக ஆராயும் வகையில் அப்பகுதிகளுக்கு நேரடி விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளதாக ஜப்பானியத் தூதர உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.

சாதனை:ஒபாமாவின் தேர்தல் பிரச்சார புத்தகம்

obama-2001.jpg
அமெரிக்காவின் புதிய அதிபராக பதவி ஏற்ற பராக் ஒபாமா ஜனநாயக கட்சி வேட்பாளர் தேர்வின்போது பேசிய ஆங்கில பேச்சுக்கள் புத்தகமாக தொகுக்கப்பட்டு ஜப்பானில் விற்கப்படுகிறது. புத்தக கடைகளில் இந்த புத்தகம்தான் அதிகமாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. 95 பக்கங்கள் கொண்ட அதன் விலை 550 ரூபாய். கடந்த 2 மாதத்தில் மட்டும் 4 லட்சம் பிரதிகள் விற்பனையாகி உள்ளன. இந்த புத்தகத்துக்கு ஜப்பானிய மொழி பெயர்ப்பும் விற்பனைக்கு இருக்கிறது.

ஜப்பானில் பிரபலமான எழுத்தாளர்கள் எழுதிய நாவல்கள்கூட ஆண்டுக்கு 10 லட்சம் பிரதிகள்தான் விற்பனை ஆகும். ஆனால், அவற்றை மிஞ்சும் வகையில் ஒபாமா புத்தக விற்பனை சக்கை போடு போடுகிறது. இதற்கு முன் அதிபராக இருந்த புஷ் பேச்சு அடங்கிய புத்தகம்கூட இந்த அளவு விற்பனை ஆகவில்லை. ஜப்பான் அரசியல்வாதிகள்கூட ஒபாமா புத்தகத்தை வாங்கி படிக்கிறார்கள்.

43 வெளிநாட்டு இராஜதந்திரிகள் கிழக்கு முதலமைச்சருடன் சந்திப்பு

cm.jpg43 வெளிநாட்டு இராஜதந்திரிகள் செவ்வாய்க்கிழமை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை கிழக்கு மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அமெரிக்கா, அயர்லாந்து, சைப்பிரஸ், ருமேனியா, துருக்கி, அவுஸ்திரேலியா, ஜப்பான், ஜேர்மன், நியூசிலாந்து, ரஷ்யா, ஹங்கேரி, பாகிஸ்தான், நெதர்லாந்து, ஐஸ்லான்ட், பிரேஸில், சிலி, கிறீஸ், ஆஸ்திரியா இஸ்ரேல் ஆகிய நாடுகளின் இராஜதந்திரிகள் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர். இராஜதந்திரிகள் கிழக்கு மாகாண நிலைவரம் பற்றி முதலமைச்சரிடம் விசாரித்து அறிந்து கொண்டனர்.

முதலமைச்சர் பதிலளிக்கையில், போரினாலும் இயற்கை அனர்த்தங்களினாலும் வெகுவாகப் பாதிக்கப்பட்ட மாகாணமாக இலங்கையிலேயே கிழக்கு மாகாணம் காணப்படுகின்றது. மூவின மக்களும் ஒற்றுமையாக வாழ்வதற்கான ஒரு சூழலை உருவாக்குவதற்காகவே எமது மாகாண அரசு உழைத்துக் கொண்டிருக்கிறது. அதில் கணிசமான அளவு வெற்றி கண்டு வருகின்றது. எமது மக்களுக்கான அனைத்து அபிவிருத்திகள் பற்றி மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன் என்று குறிப்பிட்டார். கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி குறித்து ஆர்வம் காட்டுவது குறித்து இராஜதந்திரிகளுக்கு முதலமைச்சர் நன்றி கூறினார். கலந்துரையாடலில் முதலமைச்சருடன் கிழக்கு மாகாணசபையின் பிரதம செயலாளர் வி. பி. பாலசிங்கம், முதலமைச்சரின் செயலாளர் எஸ். மாமாங்கராஜா ஆகியோர் பங்குபற்றினர்.

இலங்கை பிரச்சனை – அரசியல்தான் காரணம்: தலாய்லாமா

thalailama_.jpgஇலங்கை பிரச்சனைக்கு மதம், இனம் காரணம் அல்ல என்றும் அரசியல்தான் காரணம் என்றும் புத்தமத தலைவர் தலாய் லாமா கூறியுள்ளார். சென்னை பல்கலைக்கழகத்திற்கு வந்த புத்தமத தலைவர் தலாய் லாமா, செய்தியாளர்களிடம் பேசுகையில்,

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுகிறார்களே, புத்தமதம் வன்முறைக்கு எதிரான மதம் என்பதால் தமிழர்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்துவீர்களா என்று கேட்டீர்கள். எந்த இனமும் வன்முறையால் அழிக்கப்படக்கூடாது.

இலங்கைக்கு நான் பல வருடங்களுக்கு முன்பு செல்ல முயன்றேன். ஆனால் அங்கு செல்ல அனுமதி கிடைக்கவில்லை. இலங்கை பிரச்சனை குறித்து அடுத்தகட்டமாக நோபல் பரிசு பெற்றவர்களை அழைத்து பேச உள்ளேன்.  இலங்கை, பர்மா ஆகிய நாடுகளில் புத்தமதத்தை சார்ந்தவர்கள் அதிகம் பேர் வசிக்கிறார்கள். ஆனால் அங்கு வன்முறை நடக்கிறது. இந்த நாடுகளில் மத ரீதியிலோ, இன ரீதியிலோ வன்முறை நடக்கவில்லை.

இலங்கை பிரச்சனைக்கு அரசியல் பின்னணிதான் காரணம். இலங்கையில் தமிழர்கள், சிங்களர்கள், பவுத்தர்கள் வசிக்கிறார்கள். இதை உணர்ந்து இலங்கை அரசு செயல்படவேண்டும் என்றார்.

பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கை பாகிஸ்தான் பேச்சு

sl_pak_flag.jpgஇலங்கையும் பாகிஸ்தானும் பாதுகாப்பு விடயங்களில் நெருங்கிய ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டியதன் தேவையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளன. இந்த விடயம் தொடர்பாக ராவல் பிண்டியில் பாகிஸ்தானின் பாதுகாப்புச் செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் சையத் ஆதர் அலிக்கும் இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் திங்கட்கிழமை இடம்பெற்ற சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.

இராணுவங்களுக்கிடையிலான ஒத்துழைப்பை சகல மட்டங்களிலும் அபிவிருத்தி செய்வதன் தேவை குறித்து இச் சந்திப்பில் வலியுறுத்தப்பட்டிருப்பதாக ஏ.பி.பி.செய்திகள் தெரிவித்தன. இரு தரப்பிலும் தற்போது இருந்து வரும் பரந்துபட்ட ஒத்துழைப்பை இரு நாடுகளினதும் பரஸ்பர நலன்களுக்காக மேலும் வலியுறுத்த வேண்டுமென பாகிஸ்தானின் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

சகல துறைகளுக்குமான ஆதரவை பாகிஸ்தான் இலங்கைக்கு தொடர்ந்து வழங்கும் என்றும் சையத் ஆதர் அலி கோதபய ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளார். இராணுவப் பயிற்சி, புலனாய்வு தகவல் பரிமாற்றம், பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துதல் என்பவை தொடர்பாக ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதென சந்திப்பின்போது இணக்கம் காணப்பட்டுள்ளது. இரு நாடுகளினதும் ஆயுதப் படைகளிடையே நெருங்கிய தொடர்பாடலின் தேவையை இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், இலங்கை படைகளுக்கு பாகிஸ்தான் அரசாங்கம் தொடர்ந்து ஆதரவளித்து வருவதையிட்டு அவர் நன்றி தெரிவித்திருக்கிறார். அத்துடன் கோதாபய ராஜபக்ஷ பாகிஸ்தானின் பாதுகாப்பு உற்பத்தி பிரிவின் செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் சாகித் ரிர்மிசேயையும் சந்தித்து பரஸ்பர நலன்கள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.

பாகிஸ்தானின் பாதுகாப்புத் துறையின் தகைமை குறித்து பாகிஸ்தானின் பாதுகாப்பு உற்பத்தித்துறை செயலாளர் கோதாபய ராஜபக்ஷவிடம் எடுத்துரைத்திருப்பதாகவும் ஏ.பி.பி.செய்திகள் தெரிவித்தன.

விஸ்வமடு விமானத் தாக்குதல்

mi24-1301.jpgகிளிநொச்சி மாவட்டம் பிரமண்டான் குளம், விஸ்வமடு பகுதிகளில் நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட கடும் விமானத்தாக்குதல்கள் வெற்றியளித்திருப்பதாக விமானப் படை பேச்சாளர் விங்கமாண்டர் ஜனக நாணக்கார தெரிவித்தார். விமானப் படைக்குச் சொந்தமான எம். ஐ.24 ஜெட் விமானங்களே இனங்காணப்பட்ட புலிகளின் இலக்குகள் மீது கடும் தாக்குதல்களை நடத்தியுள்ளன.

தாக்குதல்களால் புலிகளின் இடைத்தங்கல் முகாமொன்றும் புலிகளின் முக்கியஸ்தர்கள் சந்திக்கும் ஸ்தலமொன்றும் அழிக்கப்பட்டிருப்பதாக விங் கமாண்டர் தெரிவித்தார். பிரமண்டான்குளத்தில் இனங்காணப்பட்ட புலிகளின் முக்கியஸ்தர்கள் கூடும் ஸ்தலமொன்றை இலக்கு வைத்து நேற்று மாலை 4.45 மணியளவில் ஜெட் விமானங்கள் தாக்குதல் நடத்தின. விஸ்வமடுவிலிருந்து ஒரு கிலோமீற்றர் தென்கிழக்காக அமைந்துள்ள புலிகளின் இடைத்தங்கல் முகாமை இலக்கு வைத்து பி.ப. 2.05 மணிக்கு எம்.ஐ. 24 விமானம் கடும் தாக்குதலை நடத்தியது.

அப்பகுதி நோக்கி முன்னேறி வரும் முன்றாம் படையினருக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் விமானப்படை பேச்சாளர் கூறினார்.

யாழ் கண்டி வீதியில் 10 சொகுசு பஸ்களை சேவையில் ஈடுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன

intercity-bus.jpg
யாழ்ப்பாணத்திற்கும் கண்டிக்கும் இடையிலான ஏ-9 வீதியில் சொகுசு பஸ் சேவையை ஆரம்பிக்கப்போவதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. போக்குவரத்து அமைச்சின் பேச்சாளர் ஒருவர், இது தொடர்பாக கூறுகையில் பாதுகாப்பு தரப்பு ஏ-9 வீதியின் போக்குவரத்துக்கு உத்தரவாதம் வழங்கியதன் பின்னர் இந்த சேவையை ஆரம்பிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
 
இதன் முதல் கட்டமாக 10 பஸ் வண்டிகள் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படவுள்ளன. இதன் பின்னர் தனியார் பஸ் வண்டிகளுக்கும் இந்த வீதிப்போக்குவரத்தில் ஈடுபட வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மங்களவுக்கும் மனோ கணேசனுக்கும் தொடர்ச்சியாகக் கொலை அச்சுறுத்தல் – எதிர்க்கட்சிக் கொரடா சபையில் தகவல்

joshepmichel.jpg
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மங்கள சமரவீர மற்றும் மனோகணேசன் ஆகியோருக்குத் தொடர்ச்சியாகக் கொலை அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன என்று எதிர்க்கட்சியின் பிரதம கொரடா ஜோஸப் மைக்கல் பெரேரா நாடாளுமன்றில் கூறினார்.  இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு:-

அரசியல் யாப்பின் 17ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிக்காததால் நாட்டில் அநியாயங்கள் அதிகரித்துள்ளன. இவற்றைக் கட்டுப்படுத்த முடியாதுள்ளது. தற்போது நீர்கொழும்பு பகுதியில் வெள்ளைவான்களில் சிலர் வந்து மக்களின் விவரங்களைத் திரட்டுகின்றனர். இது தொடர்பாக மக்கள் பொலிஸாருக்குத் தகவல் கொடுத்தனர். பொலிஸார் வந்து அந்த வெள்ளை வான்காரர்களைச் சோதித்தனர். அவர்கள் இராணுவத்தினர் என்பது தெரியவந்தது. வெள்ளைவான்களில் வந்தவர்களால்தான்  நீர்கொழும்பில் பூசாரி ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இப்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மங்கள சமரவீர மற்றும் மனோகணேசன் ஆகியோருக்குத் தொடர்ச்சியாகக் கொலை மிரட்டல் விடுக்கப்படுகின்றது. ‘த சண்டே லீடர்’ பத்திரிகையின் ஆசிரியர் லஸந்த விக்கிரமதுங்க கூட பாதுகாப்பான இடத்தில் வைத்துத்தான் சுட்டுக்கொல்லப்பட்டார்.

17 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி பொலிஸ் ஆணைக்குழு உட்பட அனைத்து ஆணைக்குழுக்களையும் அமைத்தால் நாட்டில் ஜனநாயகத்தைப் பாதுகாக்க முடியும். அப்படி இல்லாவிட்டால் நாட்டில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் மற்றும் மோசடிகள் போன்றவற்றைக் கட்டுப்படுத்துவது இயலாத காரியம் – என்றார்.