செய்திகள்

செய்திகள்

செய்திகள்

கசாப் மேன்முறையீடு

kasab.jpgமும்பை தாக்குதல் வழக்கில் தூக்குத் தண்டனையை எதிர்த்து மேன்முறையீடு செய்வது குறித்து கசாப்புடன் பேசி முடிவு எடுக் கப்படும் என்று அவனது சட் டத்தரணி கே.பி பவார் கூறினார்.

மும்பைத் தாக்குதல் வழக்கில் கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்ததைத் தொடர்ந்து அவனது சட்டத்தரணி கே.பி பவார் நிருபர்களிடம் கூறியதாவது :-நான் தீர்ப்பை விமர்சிக்க மாட்டேன். ஒரு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு திருப்தி அளிக்காத பட்சத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் மேல் நீதிமன்றங்களில் மேன்முறையீடு செய்யலாம். அவ்வளவுதான்.

கசாப்பை சந்திக்க எனக்கு வாய்ப்பு தரப்படும். அப்போது மும்பை மேல் நீதிமன்றில் மேன்முறையீடு செய்வது குறித்து கசாப்பிடம் கேட்பேன். அதன்பின்னர் முடிவு எடுக்கப்படும்.

பிரதி ஊடக அமைச்சர் பதவியிலிருந்து மேவின் சில்வா இராஜினாமா!

mervyn2.jpgபுதிய பாராளுமன்றத்தின் ஊடகத்துறை பிரதியமைச்சராக பதவியேற்ற மேர்வின் சில்வா தான் அந்தப் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்யப்போவதாக சற்றுமுன் அறிவித்துள்ளார்.

இன்று மாலை தனது இராஜினாமாக் கடிதத்தைத் தயார் செய்து விரைவில்  ஜனாதிபதியிடம் கையளிக்கப்போவதாகவும் அவர் கூறினார்.

ஊடகம் மற்றும் தகவல்துறை அமைச்சில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். தனது இந்த முடிவுக்கு எந்த அமைச்சர்களும் காரணம் அல்லவெனக் கூறிய அவர் ஊடகவியலாளர்கள் முன்போலவே எப்போதும் தன்னுடன் தொடபு கொள்ளலாம் என்றும் கூறினார்.

பெருந்தெருக்கள் பிரதியமைச்சராக பாரிய அபிவிருத்திப் பணிகளை நாடு முழுவதிலும் குறிப்பாக வடக்கு, கிழக்கில் செய்து முடிக்கவேண்டிய பெரும் பொறுப்பு தனக்கு உள்ளதாகவூம் பிரதியமைச்சர் சுட்டிக்காட்டினார். 

இலங்கை மீது நிபந்தனைகள் கிடையாது

eu-flag.jpgஜி.எஸ்.பி வர்த்தகச் சலுகைகளைப் பெற்றுக்கொள்வதற்காக இலங்கை மீது எந்தவிதமான நிபந்தனைகளையும் விதிக்கவில்லை என்று கொழும்பிலுள்ள ஐரோப்பிய யூனியன் அலுவலகம் இன்று அறிவித்துள்ளது. இலங்கையின் நீதித்துறைச் செயற்பாடுகளை தான் மதிப்பதாகவும் ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது.

திங்கள் முதல் யாழ் – முல்லைத்தீவு பஸ் சேவை

jaffna.jpgயாழ் – முல்லைத்தீவு பஸ் சேவையை மீண்டும் திங்கள் முதல் ஆரம்பிப்பதற்கு இலங்கை போக்குவரத்துச் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி இருபது வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணத்திற்கும் முல்லைத்தீவுக்குமான புதிய நேரடி பஸ் சேவையை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் வட மாகாண பிராந்திய முகாமையாளர் தலைமையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

முல்லைத்தீவில் 1990 காலப்பகுதியில் இருந்த பஸ் டிப்போ யுத்த சுழ்நிலை காரணமாக சேதமாக்கப்பட்டது. எனினும் தற்போது புதிய பஸ் நிலைய தரிப்பிடம் அமைக்கப்பட்டுள்ளது. இதேவேளை பருத்தித்துறைக்கும் – கொழும்புக்குமான நேரடி பஸ் சேவையில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மாற்றம் செய்யப்படவுள்ளது.

பருத்தித்துறைக்கும் – கொழும்பு பஸ் சேவை அரசாங்க உத்தியோகத்தர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்குமே அதிகமாகப் பயன்படுகின்றது. இச்சேவை பகல் வேளையில் இடம்பெறுவதால் போக்குவரத்து செய்யும் மக்களது எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. எனவே மக்களின் வேண்டுகோளுக்கிணங்கவே சேவையில் மாற்றம் ஏற்படுத்தப்படுகிறது.

பலாலி தெல்லிப்பளை போன்ற பிரதேசங்களுக்கும் யாழ்ப்பாணத்தில் இருந்து நேரடி பஸ் சேவையினை ஆரம்பிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இலங்கைக்கு பங்காளி அந்தஸ்த்து – முக்கிய உடன்படிக்கைகளில் நேற்று இலங்கை கைச்சாத்து

glpeiris.jpgநாட்டின் பாதுகாப்பு, நாணயமாற்று மற்றும் வீடமைப்பு உட்பட பல அம்சங்களை உள்ளடக்கிய முக்கிய உடன்படிக்கையொன்றில் அரசாங்கம் நேற்று கைச்சாத்திட்டதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கீழ் நேற்று மேற்கொள்ளப்பட்ட இவ்வொப்பந்தக் கைச்சாத்தில் சீனா, ரஷ்யா போன்ற நாடுகளும் பங்கேற்றதாக அமைச்சர் தெரிவித்தார். சங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இலங்கை பங்காளி அந்தஸ்தைப் பெற்றுள்ளதையடுத்தே இது சாத்தியமாகியுள்ளதென அமைச்சர் பீரிஸ் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றம் நேற்றுக் காலை 9.30 மணிக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் தலைமையில் கூடியது. வழமையான நடவடிக்கைகளுக்குப் பின்னர் ஏற்றுமதி இறக்குமதி கட்டளைச் சட்ட ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தைச் சபையில் சமர்ப்பித்து உரையாற்றிய போதே அமைச்சர் பீரிஸ் இதனைத் தெரிவித்தார்.

அமைச்சர் தமதுரையில் மேலும் தெரிவிக்கையில் :- சங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் ரஷ்யா பிரதான உறுப்பு நாடாகவுள்ளது. சுகாதார சீர்கேடுகளைத் தடுத்தல், கலாசார சீர்கேடுகளைத் தடுத்தல், அரச ஊழியர் வீடமைப்பு, மீனவர்கள் முன்னேற்றம், மின்சக்தித் துறை தொடர்பான அம்சங்களும் இவ்வுடன்படிக்கையில் அடங்குகின்றன.

அடுத்த வாரத்தில் நமது நாட்டுக்குச் சில பொருளாதார நன்மைகள் கிடைக்கவுள்ளன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெஹ்ரானில் ஜீ-15 மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளதுடன் ஈரான் உட்பட முக்கிய அரச தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

ஷெல் – ரூ. 219, லாஃப், ரூ. 323- சமையல் எரிவாயுக்களின் விலைகள் அதிகரிப்பு

gas-stove.jpgசமையல் எரிவாயுக்களின் விலைகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன. இதன்படி ஷெல் காஸின் விலை 219 ரூபாவாலும், லாஃப் காஸின் விலை 323 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. நேற்று நள்ளிரவு முதல் இவைகள் அதிகரிக்கப்பட்டிருப்பதாக கூட்டுறவு உள்ளூர் வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ நேற்றுத் தெரிவித்தார்.

இதற்கமைய ஷெல் சமையல் எரிவாயு வொன்றின் புதிய விலை 1769 ரூபாவாகவும், லாஃப் சமையல் எரிவாயு வின் புதிய விலை 1744 ரூபாவாகவும் இன்று முதல் விற்பனை செய்யப்படவுள்ளது. சமையல் எரிவாயு விலையதிகரிப்புத் தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று அமைச்சில் நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உலக சந்தையில் சமையல் எரிவாயுவின் விலையில் ஏற்பட்ட அதிகரிப்புக் காரணமாகவே ஷெல் மற்றும் லாஃப் சமையல் எரிவாயுக்களின் விலையில் மாற்றங்களை செய்ய வேண்டி ஏற்பட்டிருப்ப தாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் மாண்புமிக்கோர் குழு விசாரணை நடத்தும்

srilanka-war.jpgயுத்த இறுதிக் கட்டங்களின் போது சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறைகள் மீறப்பட்டதா என்பது தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்படவிருக்கும் ஆணைக்குழு விசாரணை மேற்கொள்ளும். அத்துடன் இத்தகைய நடவடிக்கைகளுக்கு இட்டுச் சென்றிருக்கக்கூடிய சூழ்நிலைகள் தொடர்பாகவும் இந்த மாதிரியான நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான நபர்கள் அல்லது குழுக்களை அடையாளம் கண்டுகொள்வது குறித்தும் இந்த ஆணைக்குழு விசாரணை நடத்தும்.

இந்த ஆணைக்குழுவை ஜனாதிபதி விரைவில் நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிப்பதற்காக இந்த ஆணைக்குழு நியமிக்கப்படவுள்ளது. அத்துடன் பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளால் அண்மைய வருடங்களில் தோற்றுவிக்கப்பட்ட மோதல் நிலைவரம் தொடர்பாக இலங்கைக்கு ஏற்பட்ட குழப்பமான தருணங்கள், நெருக்கடிகள் பற்றியும் இந்த ஆணைக்குழு ஆராயும். இன்றைய சூழ்நிலையானது வாய்ப்பான தருணத்தை வழங்கியிருக்கின்றதென்ற கருத்தை ஜனாதிபதி கொண்டுள்ளார்.

அண்மைய மோதல் கட்டம் மற்றும் நாட்டின் துன்பங்கள் கடந்து சென்றுவிட்ட நிலைமையை வெளிப்படுத்துவதாகத் தற்போதைய தருணம் அமைந்துள்ளது. மற்றும் மக்களின் பொதுவான அபிலாஷைகளைக் கருத்தில் கொண்டும் சமாதானம், சௌஜன்யம், சுபிட்சம் என்பவற்றுக்கான சகாப்தத்தைக் கொண்டிருப்பதற்கான உறுதியளிக்கப்பட்ட அவர்களின் தீர்மானத்தை வெளிப்படுத்துவதாகத் தற்போதைய தருணம் அமைந்துள்ளது என்ற அபிப்பிராயத்தை ஜனாதிபதி கொண்டிருக்கிறார்.

மோதலான சூழ்நிலைகளின் போது சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறைகள் ஏதாவது மீறப்பட்டுள்ளனவா என்பது பற்றி ஆராயப்படும். அண்மைய மோதல் கட்டத்தின் போது கற்றுக்கொண்ட பாடங்களைக் கணிப்பீடு செய்யும் போது இந்த விடயம் ஆராயப்படும். அத்துடன், இத்தகைய நிலைமைகளுக்கு இட்டுச் சென்றிருக்கக்கூடிய சூழ்நிலைகள் மற்றும் இந்த மாதிரியான நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான நபர்கள் அல்லது குழுக்களை அடையாளம் கண்டுகொள்ளுதல் தொடர்பாகவும் மதிப்பீடு செய்யப்படும்.

மேலும் மோதல் சூழ்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களில் தங்கியிருப்போருக்கு இழப்பீடு வழங்கப்படவேண்டிய தன்மை குறித்தம் இந்த ஆணைக்குழு பரிந்துரை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோதலுக்குப் பின்னரான சூழ்நிலையில் நிறுவன ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் மற்றும் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ள நலன்புரி நடவடிக்கைகள் குறித்தும் பரிந்துரைகளை இந்த ஆணைக்குழு மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் செயற்பாட்டுத்திரனுடன் எடுக்கப்படவேண்டிய மீள்கட்டுமானம், புனர்வாழ்வு, நல்லிணக்கம் தொடர்பாகவும் இந்த ஆணைக்குழு சிபார்சுகளை முன்வைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்காலத்தில் இந்த மாதிரியான நிலைமைகள் ஏற்படாமல் தடுப்பதற்கும் தேசிய ஐக்கியத்தை மேம்படுத்தவும் சகல சமூகங்கள் மத்தியிலும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் சட்ட நிர்வாக ரீதியான ஏற்பாடுகள் அவசியமானவையாக அமையும். இவையும் ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ள ஆணையின் ஓரங்கமாக அமையும்.

கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஆணைக்குழுவில் 7 மாண்புமிக்க இலங்கையர்கள் இடம்பெறுவர். இலங்கையிலும் மற்றும் வெளிநாடுகளிலுமுள்ள இலங்கையர்கள் இதில் அங்கம் வகிப்பார்கள். இந்த ஆணைக்குழுவின் விதிமுறைகள், பதவிக்காலம் என்பன தொடர்பாக அடுத்த சில நாட்களில் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்படும் என்று ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

‘குடியேற்றப்பட்ட பகுதிகளில் தபாலகங்கள்’

post-boxes.jpgவன்னிப் பிரதேசத்தில் இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியேறிய அனைத்து இடங்களிலும் தபால் நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளதென வடபிராந்திய பிரதி அஞ்சல்மா அதிபதி வீ. குமரகுரு தெரிவித்தார்.

இதுவரையில், 18 இடங்களில் தபாலகங்கள் திறக்கப்பட்டுள்ளதெனக் குறிப்பிட்ட அவர், கடைசியாக முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளியவளையில் திறக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். தபாலகங்கள் திறக்கப்படுவதினால் மீள்குடியேறியுள்ள அனைத்து மக்களுக்கும் எமது சேவை திருப்திகரமான முறையில் வழங்கப்படுகின்றதெனவும் பிரதி அஞ்சல் மா அதிபதி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இராணுவ சட்டங்களை பயன்படுத்துவதாக ரணில் குற்றச்சாட்டு

parliament2.jpgபாராளு மன்றத்தில் இராணுவச் சட்டங்கள் பயன்படுத்தப்படுவதாகக் குற்றஞ்சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும்”சயனைட்’ கொடுத்து அழித்தது போல் பாராளுமன்றத்துக்கும் “சயனைட்” ஊட்ட வேண்டாமெனவும் வேண்டுகோள் விடுத்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஏற்றுமதி,இறக்குமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;ஒரு விடயம்தொடர்பில் தீர்மானம் எடுக்கும்போது சட்டமா அதிபருடன் மட்டும் கலந்துரையாடாது சம்பந்தப்பட்ட இருதரப்பினருடனும் அது தொடர்பில் பேசப்பட வேண்டும். கருத்துகள் கேட்கப்பட வேண்டும். சட்டமா அதிபர் திணைக்களம் இன்று நீதி அமைச்சின் கீழ் இல்லை. ஜனாதிபதியின் கீழேயே சட்டமா அதிபர் உள்ளார். பாதுகாப்பு அமைச்சும் ஜனாதிபதியின் கீழேயே உள்ளது. வழக்குகளை விசாரிப்பவர்களை நீதிச்சேவை ஆணைக்குழுவே நியமிக்க வேண்டும்.

ஜி.எஸ்.பி.+ பெற வேண்டுமானால் முதலில் ஜெனரல் சரத் பொன்சேகாவின் பிரச்சினைக்குத் தீர்வுகாணப்பட வேண்டும். ஊடகங்கள், ஊடகவியலாளர்களுக்கு “சயனைட்” கொடுத்து அழித்துவிட்டீர்கள். பாராளுமன்றத்துக்கும் “சயனைட்” ஊட்ட முயற்சிக்கின்றீர்கள். தற்போது பாராளுமன்றத்தில் இராணுவச் சட்டங்களே பயன்படுத்தப்படுகின்றன. நகர அபிவிருத்தி தற்போது பொருளாதார அபிவிருத்தியாக மாறிவிட்டது. நகர அபிவிருத்தி ஒரு சகோதரரிடம் பொருளாதார அபிவிருத்தி இன்னொரு சகோதரரிடம். ஏற்றுமதி,இறக்குமதி தொடர்பான 3 புதிய விதிகள் வர்த்தமானி மூலம் கடந்த நவம்பரிலேயே சமர்ப்பிக்கப்பட்டன. அது பழைய பாராளுமன்றம். தற்போது கூடியுள்ளது புதிய பாராளுமன்றம். எனவே, வர்த்தமானி மீண்டும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

சிறப்புரிமை மீறப்பட்டதற்கு எதிராக சட்ட நடவடிக்கை செய்தியாளர் மாநாட்டில் பொன்சேகா

sarath_.jpgபாராளுமன்ற உறுப்பினரான தன்னை இராணுவ நீதிமன்றம் பாராளுமன்றத்துக்கு வரவிடாமல் தடுத்ததன் மூலம் தனது சிறப்புரிமை மீறப்பட்டிருப்பதாகத் தெரிவித்த முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயகத் தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினருமான ஜெனரல் சரத் பொன்சேகா, அதற்கெதிராகச் சட்டநடவடிக்கை எடுக்க தீர்மானித்திருப்பதாக அறிவித்தார்.

சபாநாயகரின் உத்தரவைக்கூட இராணுவ நீதிமன்றம் உதாசீனம் செய்ததன் மூலம் அரசாங்கம் ஜனநாயகத்துக்கும் பாராளுமன்றத்துக்கும் சவால் விடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.பாராளுமன்றக் கட்டிடத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே ஜெனரல் சரத் பொன்சேகா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனநாயகத் தேசியக் கூட்டணியின் பாராளுமன்றக் குழுவின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்த செய்தியாளர் மாநாட்டில் ஜெனரல் பொன்சேகா இதுதொடர்பாக மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;

நேற்று முன்தினம் புதன்கிழமை நான் பாராளுமன்றத்துக்கு வருவதற்குத் தயாரானபோது இராணுவ அதிகாரிகள் பாராளுமன்றத்துக்கு அழைத்துச் செல்ல முடியாதெனவும் அதற்கான அனுமதி தமக்குக் கிடைக்கவில்லையெனவும் தெரிவித்ததோடு, இன்றைய தினம் புதன்கிழமை இராணுவ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டியுள்ளதாகக் கூறி பாராளுமன்றம் செல்வதைத் தடுத்தனர். என்னை பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்கு அனுமதிக்குமாறு சபாநாயகர் இராணுவ நீதிமன்றத்துக்கு அறிவித்திருந்த நிலையிலும் கூட அந்த உத்தரவைப் புறக்கணித்ததன் மூலம் எனது பாராளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்ட விதிகளுக்கு முரணாக இராணுவம் செயற்பட்டுள்ளது. இந்தத் தவறான முன்னுதாரணம் பாராளுமன்றத்தின் கௌரவத்துக்கு எதிர்காலத்தில் பாதகமான நிலைமைகளைத் தோற்றுவிக்கலாம்.

எதிர்க்கட்சிகளின் கட்சித் தலைவர்கள் கூட்டம் புதன்கிழமை மாலை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க தலைமையில் கூடி இந்த விவகாரம் குறித்து ஆராய்ந்துள்ளது. இதனடிப்படையில் இந்த சிறப்புரிமை மீறல் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை சிறப்புரிமை மீறல் குற்றச்சாட்டைச் சமர்ப்பிக்கவிருக்கின்றோம்.

இந்த பாராளுமன்றச் சிறப்புரிமை மீறல் தொடர்பாக புதன்கிழமை எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் சபாநாயகரைச் சந்தித்து தமது கடும் எதிர்ப்பையும் அதிருப்தியையும் தெரிவித்துள்ளனர். இராணுவம் சட்டவிரோதமானதொரு நடைமுறையைக் கையாண்டுள்ளது. சிறப்புரிமை மீறல் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் புதன்கிழமை பாராளுமன்றத்தில் கிளப்பியபோது சபாநாயகர் ஆசனத்திலிருந்தவர் அதனைச் செவிமடுக்கத் தவறியுள்ளார்.

அரசாங்கம் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்றுக்கொண்டிருப்பதாகக் கூறப்பட்டது. சட்ட மா அதிபர் கூட பாராளுமன்றத்துக்கே கட்டுப்படவேண்டும். அவ்வாறான நிலையில் பாராளுமன்றம் சட்ட மா அதிபரின் ஆலோசனையைப் பெறுவது சட்டவிரோதமானதாகும். பாராளுமன்றம் தொடர்பான அரசியலமைப்பு விதிகளுக்கமையவே இந்த சிறப்புரிமை மீறல் தொடர்பான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புத்தரப்பு இந்த முடிவைத் தெரியாமல் மேற்கொள்ளவில்லை. நன்கு தெரிந்த நிலையிலேயே என்னை பழிவாங்கிக் கொண்டிருக்கின்றது. தெரியாதது போல் இப்போது நடந்துகொள்ள முயற்சிக்கின்றது  எனவும் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.