செய்திகள்

செய்திகள்

செய்திகள்

புதிய எம்.பி.க்கள் சத்தியப்பிரமாணம் செய்ய முடியாதென சபாநாயகர் அறிவிப்பு

ஐக்கிய தேசியக் கட்சி புதிதாக நியமித்துள்ள இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம் செய்துகொள்வது தொடர்பில் ஆளுந்தரப்பு எதிர்தரப்பு உறுப்பினர்களுக்கிடையே சுவாரஸ்யமான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. சுமார் ஒரு மணித்தியாலமாக வாதங்கள் நீடித்த போதிலும் புதியவர்களை சத்தியப் பிரமாணம் செய்வதற்குக் கடைசிவரை இடமளிக்க முடியாது என்று சபாநாயகர் தெரிவித்துவிட்டார்.

கடந்த பெப்ரவரி மாதம் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்குப் பின்னர், அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்காகவென நேற்றைய தினமும் பாராளுமன்றம் இரண்டாவது தடவையாகக் கூட்டப்பட்டது. சபாநாயகர் டபிள்யூ. ஜே. எம். லொக்குபண்டார தலைமையில் காலை 9.30ற்கு ஆறாவது பாராளுமன்றத்தில் இறுதி அமர்வு கூடியது.  அப்போது, முதலில் தமது புதிய உறுப்பினர்களுக்குச் சத்தியப்பிரமாணம் செய்ய இடமளிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சியின் பிரதம கொறடா ஜோசப் மைக்கல் பெரேரா சபாநாயகரைக் கேட்டுக் கொண்டார். அதன்போது அதற்கு இடமளிக்க முடியாது என்றும் பாராளுமன்றம் கலைக்கப்பட்ட போது உறுப்பினர்களாக இருந்தவர்கள் மாத்திரமே விசேட அமர்வில் பங்கேற்க முடியுமென்றும் ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

“கலைக்கப்பட்ட பாராளுமன்றம் அதி முக்கியமான ஒரு விசேட அம்சத்துக்காகப் கூட்டப்பட்டிருக்கிறது. அதாவது அவரசகாலச் சட்டத்தைத் தவிர்ந்த வேறு எந்த விடயமும் இடம்பெற முடியாது. எனவே, புதியவர்கள் சத்தியப்பிரமாணம் செய்ய முடியாது. அரசியல் அமைப்பில் இது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது” என்று விவாதத்தை முடுக்கிவிட்டார் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ். அப்படியானால், 225 உறுப்பினர்கள் கொண்ட பாராளுமன்றத்தில் இரண்டு உறுப்பினர்கள் குறைவாக உள்ளனர். எனவே, பாராளுமன்றச் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாது” என்று வாதிட்டார் ஜோசப் மைக்கல் பெரேரா. விவாதத்தில் இணைந்துகொண்ட சபை முதல்வரான அமைச்சர் நிமல் சிறிபால டி. சில்வா, “இது தொடர்பில் சட்ட மா அதிபரிடமும் ஆலோசனை பெற்றிருக்கிறோம்.

புதியவர்கள் சத்தியப்பிரமாணம் செய்ய முடியாது. இன்று பாராளுமன்றம் கூடவிருக்கும் நிலையில் நேற்றிரவு ஒருவர் இறந்துவிட்டால், அந்த உறுப்பினருக்குப் பதிலாகப் புதியவரை நியமிக்க அவகாசம் இருக்கிறதா?” என்று ஜோசப் மைக்கல் பெரேராவிடம் கேள்வி எழுப்பினார்.

நான் இறந்தவர்களைப் பற்றிப் பேசவில்லை. உயிருடன் இருப்பவர்களைப் பற்றித்தான் கூறுகிறேன்” என்று பதில் கொடுத்தார் பெரேரா. இவ்வேளையில் கருத்துத் தெரிவித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், “அவர்கள் இருவரும் ஏற்கனவே வர்த்தமானிப் பத்திரிகை மூலம் எம்.பி.க்களாக அறிவிக்கப்பட்டு விட்டார்கள். இனி அவர்கள் சம்பிரதாயமாக சத்தியப் பிரமாணம் செய்து கொள்ள இடமளிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஒரு முக்கியமான வாக்கெடுப்பில் பங்கெற்பதற்கு அவர்களுக்கு உள்ள உரிமை மறுக்கப்படுவதாகும்” என்றார். ஆனால் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பேராசிரியர் பீரிஸ் மீண்டும் தெரிவித்ததுடன், அவ்வாறான ஒரு நிலை இந்த விசேட அமர்வில் ஏற்பட வாய்ப்பில்லை என்று தெளிவுபடுத்தினார்.

இதன் போது குறுக்கிட்ட எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, “இந்த விடயத்தைத் தீர்மானிப்பதற்காக கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டுமாறு சபாநாயகருக்குக் கடிதம் எழுதியிருந்தேன், அவர் எனக்குப் பதில் எழுதாமல், என் செயலாளருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்” என்றார். என்றாலும், அதனை நிராகரித்த சபாநாயகர், கடந்த அமர்வில் இணங்கிக்கொண்டதற்கு அமையவே இன்றைய பணிகள் நடைபெறுகின்றன என்று விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

அமைச்சர்கள் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் இந்திக பண்டாரநாயக்க ஆகியோரின் வெற்றிடத்துக்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள டி.எம்.பண்டாரநயாக்க, அநுர கொபல்லாவ ஆகியோரே சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டுமென எதிர்க்கட்சி கேட்டுக் கொண்டிருந்தது.

வாக்குச்சீட்டில் புள்ளடியிட இம்முறை விசேட பேனா பயன்படுத்தப்படும்

நாளை நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் வாக்காளர்கள் வாக்குச் சீட்டில் புள்ளடியிடுவதற்கு விசேட பேனாவை பயன்படுத்த தேர்தல்கள் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது. இதுவரை காலமும் நடைபெற்ற தேர்தல்களில் பென்சில் மூலமே வாக்காளர்கள் தமது வாக்கை (புள்ளடியிடுதல்) செலுத்திவந்தனர்.

பென்சில் மூலம் புள்ளடியிடுவதால், அந்த வாக்குச்சீட்டில் அதனை அழித்தும் வேறு மோசடிகளும் இடம்பெறுவதாக அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் தேர்தல்கள் திணைக்களத்துக்கு முறையிட்டிருந்தன.அதனால் பேனா மூலம் புள்ளடியிடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தன.

இதனையடுத்து பேனா மூலம் வாக்குச்சாவடியில் புள்ளடியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பென்சில் மூலம் வாக்குச்சீட்டில் புள்ளடியிட்டால் அது நிராகரிக்கப்படும் எனவும் தேர்தல்கள் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இம்முறை தேர்தலில் வாக்களிப்பவருக்கு விரலில் இடப்படும் மையின் நிறமும் வேறுபட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கல்லறையிலிருந்து பயங்கரவாதம் மீண்டும் உயிர்த்தெழ இடமளியோம் – பிரதமர்

pm.jpgநாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாதவாறு அவசரகாலச் சட்டத்தில் எந்தெந்த சரத்துக்களை நீக்குவது என்பது பற்றி அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது என பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இலங்கையின் ஆறாவது பாராளுமன்றத்தின் இறுதி தினத்தில் அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான பிரேர¨ணை சமர்ப்பிக்கும் இறுதி சந்தர்ப்பம் இதுவாகும்.

அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்காக கோரும் இறுதிச் சந்தர்ப்பமாக இருப்பதை காண்பதே எமது எதிர்பார்ப்புமாகும். கடந்த காலங்களில் இந்த எதிர்பார்ப்பு எமக்கு இருந்து வந்தது. எனினும், நாட்டில் ஏற்பட்ட நிலைமை காரணமாக அவசரகாலச் சட்டத்தை நீடிக்க வேண்டியிருந்தது. இதனாலேயே தொடர்ந்தும் இந்த கோரிக்கையை முன்வைக்க நேர்ந்தது எனவும் பிரதமர் தெரிவித்தார். அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்காக நேற்று பாராளுமன்றம் மீண்டும் கூட்டப்பட்டது. பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க பிரேரணையை சமர்ப்பித்துப் பேசினார்.

சபாநாயகர் வி. ஜே. மு. லொக்குபண்டார தலைமையில் கூடிய போது பிரதமர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது :- கடந்த காலங்களில் இந்தச் சபையில் அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கான பிரேரணை முன்வைக்கப்பட்ட போதெல்லாம் சபையில் ஆதரவு கிடைத்தது. இதனூடாக கிடைத்த சட்ட அதிகாரத்தினூடாக நாட்டுக்கு பாரிய வெற்றியை பெற்றுக் கொள்ள முடிந்தது. இதனால் நாடும் மக்களும் நன்மையடைந்துள்ளார்கள். எனினும் சிலர் குற்றம் சாட்டுவது போன்று நாம் அவசரகாலச் சட்டத்தை துஷ்பிரயோகம் செய்ததில்லை. எமக்கு அவ்வாறானதொரு தேவை இருக்கவில்லை. பிறந்த நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மையை பெற்றுக் கொடுப்பது எவ்வாறு என்பது பற்றித்தான் சிந்தித்தோம்.

பயங்கரவாதத்தை தோற்கடித்ததும் அதனூடாக நாட்டுக்கு கீர்த்தி கிடைத்ததும் இதனால்தான். சிலர் அதனை இன்று மறந்துவிட்டனர். அதனால்தான் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை சுமத்துகிறார்கள். வெள்ளைமுள்ளிவாய்க்கால் பகுதியில் இன்னமும் ஆயுதங்கள் கைப்பற்றப்படுகின் றன. வெடிகுண்டுகள் கைப்பற்றப்படுகிள்றன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இவ்வாறான ஆயுதங்கள் சிலரது கைகளில் கிடைக்க வழிவகைகள் செய்யப்படக்கூடாது. இந்தப் பகுதிகளிலுள்ள மக்களின் மனதிலுள்ள அச்சத்தை போக்கவேண்டும். இதனை செய்து முடிப்பதற்காகவே அவசரகாலச் சட்டத்தை நீடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறோம். பயங்கரவாதத்தை ஒழிப்பது மட்டுமின்றி அதற்கு ஆதரவு வழங்குபவர்கள் தொடர்பாகவும் கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும்.

புலிகளுக்கு துணை போகின்ற சிலர் புலிகளின் தலைவர் மீண்டும் வரப் போகிறார் என தெரிவித்துள்ளனர். இவர்கள் இதனை எவ்வாறு செய்ய முயல்கிறார்களோ தெரியவில்லை. எனினும் பயங்கரவாதத்தை கல்லறையிலிருந்து மீண்டும் உயிர்த்தெழுவதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. அதேபோன்று பொதுமக்களை பயங்கரவாதத்தின் பால் தள்ளிவிடுவதற்கும் நாம் தயாரில்லை. நாம் இவ்வாறு செயற்பட்டாலும் பயங்கரவாதத்தை போஷிக்கின்ற சக்திகள், துணை போகின்ற சக்திகள் எமது நாட்டில் இல்லாமலில்லை.

அண்மையில் அமெரிக்காவிலும் இதுபற்றி எச்சரிக்கையும் விடுத்திருந்தார்கள். மும்பாய் தாக்குதலுக்கு உரிமைகோரும் அமைப்பொன்று தெற்காசிய வலயத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது என்றும் தெரிவித்திருந்தது. வங்காளதேசம், நேபாளம், மாலைதீவு, இலங்கை போன்ற நாடுகளுக்கு இந்த பயங்கரவாதத்தின் நிழல்கள் பரவி வருகின்றமையும் தெரிய வந்துள்ளது. அத்துடன் புலிகளின் நிழல்களும் தமிழ் நாட்டுக்குள் உலவி வருவதாக இந்திய பாதுகாப்பு துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே இவற்றை மிக எளிதானதாக எடுத்துக்கொள்ள முடியாது. பயங்கரவாதம் முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும் என்பது மட்டுமல்ல ‘பயங்கரவாதம்’ என்ற சொல் அகராதியிலிருந்தே நீக்கப்பட வேண்டும். வடக்கு கிழக்கு மக்கள் இன்று தமது உரிமைகளை அனுபவித்து வருகிறார்கள். அந்தப் பகுதிகளில் பாரிய அபிவிருத்திகள் நடைபெறுகின்றன.

அவசரகாலச்சட்டம் 53 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதகாலத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை 53 மேலதிக வாக்குகளால் நேற்று பாராளுமன்றத்தில் நிறைவேறியது. பிரேரணைக்கு ஆதரவாக 58 வாக்குகளும், எதிராக 5 வாக்குகளும் கிடைத்தன. சபையிலிருந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்கள் மூவரும், ஜே.வி.பி. எம்.பிக்கள் இருவரும் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தனர்.

ஐ.தே.க. உறுப்பினர்கள் எவரும் சபையில் இருக்கவில்லை.

ஆறாவது பாராளுமன்றத்தின் இறுதி அவசரகாலச்சட்டம் மீதான பிரேரணையை பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க சமர்ப்பித்துப் பேசினார்.

மதுபானக்கடைகள் பூட்டு

பொதுத் தேர்தலை முன்னிட்டு நாளையும், நாளை மறுதினமும் மதுபான கடைகளை மூடுவதற்கு கலால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இதேவேளை, சித்திரை புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 13 ஆம், 14 ஆம் திகதிகளிலும் மதுபான கடைகள் மூடப்படவுள்ளதாக திணைக்களம் தெரிவிக்கிறது.

9 ஆம் திகதி அரச, வங்கி விடுமுறை

எதிர்வரும் 9 ஆம் திகதி அரச மற்றும் விசேட வங்கி விடுமுறை தினமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.

பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் டி.திஸாநாயக்க இதற்கான அறிவித்தலை விடுத்துள்ளார்.

எனவே, அரச கூட்டுத்தாபனங்களின், நியதிச் சபைகளின் தலைவர்கள், மற்றும் தொழில் தருநர்கள் அனைவரையும், தங்களது அனைத்து ஊழியர்களுக்கும் 2010ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 9ஆம் திகதி வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்குமாறு தொழிலமைச்சர் அதாவுத செனவிரட்ன கேட்டுள்ளார்.

பொன்சேகா மீதான விசாரணை அடுத்த மாதம் 5 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

இராணுவச் சட்டங்களை மீறி நடந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சரத்பொன்சேகா தொடர்பான  விசாரணைகள் அடுத்த மாதம் 5 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

லெப்டினன் ஜெனரல் ஜெகத் ஜயசு10ரியவின் பரிந்துரையின் பேரில் அமைக்கப்பட்ட மூவர் அடங்கிய 2ஆவது நீதிமன்ற விசாரணைக் குழுவின் இன்றைய கூட்டத்தின் போதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேவேளை, சரத் பொன்சேகா மீது விசாரணை  மேற்கொள்ளும் முதலாவது நீதிமன்ற குழுக்கூட்டமும் இன்று நடை பெற்றமை குறிப்பிடத்தக்கது

பொன்சேகா மூலம் வாக்குப்பெற்று ஹதுன்நெத்தியை சபைக்கு அனுப்ப திட்டம்- ஏமாறவேண்டாம் என்கிறார் விமல் வீரவன்ச

சரத் பொன்சேகாவை காட்டி வாக்குகளைப் பெற்று பின்னர் சுனில் ஹந்துன்நெத்தியை பாராளுமன்றத்துக்கு அனுப்பும் திட்டத்தை மக்கள் விடுதலை முன்னணி தீட்டியுள்ளது.

எனினும் இந்த திட்டத்துக்குள் சிக்கி ஏமாற வேண்டாம் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச கொழும்பு மாவட்ட வாக்காளர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது- அரசியலமைப்பின் 89 (இ) மற்றும் 91 (1) (அ) ஆகிய ஷரத்துக்கள் மூலம் ஒருவர் பாராளுமன்றத்துக்கு செல்வதற்கான தகுதி பற்றி விளக்கப்பட்டுள்ளது. சரத் பொன்சேகாவுக்கு எதிராக இராணுவ நீதிமன்றத்தில் இரு வழக்குகள் விசாரணையில் உள்ளன.

தற்போதைய நிலையில் அவர் அந்த வழக்குகளில் குற்றவாளியாக காணப்படும் சாத்தியமே அதிகமாக உள்ளது. சரத் பொன்சேகா இவ்வாறு குற்றவாளியாக தண்டனைக்குள்ளாகுமிடத்து ம. வி. மு. வேட்பாளர் சுனில் ஹந்துன்நெத்தியை சரத் பொன்சேகாவுக்கு பதிலாக பாராளுமன்றத்துக்கு அனுப்புவதே ம. வி. மு. திட்டமாகும். பொன்சேகாவை கூடிய வாக்குகளைப் பெற்று அவருக்கு பதில் ஹதுன்நெத்தியை பாராளுமன்றம் அனுப்பும் ம. வி. மு. சதியில் எவரும் ஏமாந்துவிடக் கூடாது என்று தனது அறிக்கையில் விமல் வீரவன்ச கூறியுள்ளார்.

“தமிழ்க்கூட்டமைப்புடன் இணைந்து அரசமைப்பதில் பிரச்சினை இல்லை” – விஜித ஹேரத்

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை இணைத்து அரசாங்கத்தை அமைப்பதில் எந்தவிதமான பிரச்சினையும் இல்லையென ஜனநாயகத் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜே.வி.பி.யின் சிரேஷ்ட உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

யுத்தம் முடிவடைந்து 11 மாதங்கள் கடந்த நிலையில், இனவாதத்தைத் தோற்கடிக்க மூவின மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் இணைந்து ஆட்சியமைப்பதில் தவறு என்ன இருக்கிறது என்று கேள்வி எழுப்பிய விஜிதஹேரத் தேசிய ஐக்கியத்துக்கு இது மிகவும் முக்கியமான விடயம் என்றும் சுட்டிக்காட்டினார்.

கொழும்பு ராஜகீய மாவத்தையிலுள்ள ஜெனரல்சரத்பொன்சேகாவின் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே விஜித ஹேரத் இதனைத் தெரிவித்தார்.ஜெனரல் பொன்சேகா தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த விஜித ஹேரத் கே.பி.,கருணா ஆகியோரின் தேவைகளை நிறைவேற்றவே அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக குற்றம் சாட்டினார்.புலிகள் அழிக்கப்பட்ட நிலையில் எஞ்சியிருக்கும் புலிகளின் தேவைகளை நிறைவேற்றவே அரசு முயற்சிப்பதாக அவர் சாடினார்.

அதேவேளை, ஏப்ரல் 22 இல் பாராளுமன்றம் கூடும் போது ஜெனரல் சரத்பொன்சேகா சமுகமளிப்பாரெனவும் அங்கு தனது கன்னியுரையை ஆற்றுவாரெனவும் விஜிதஹேரத் குறிப்பிட்டார்.

ஆளும் கட்சி ஆதரவாளர் சுட்டுக்கொலை

குருநாகல் பரந்தர பகுதியில் இனந்தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஐ.ம.சு.முன்னணி ஆதரவாளரொருவர் உயிரிழந்துள்ளதாக குருநாகல் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது; ஞாயிற்றுக்கிழமை இரவு தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்னர் பிக்கப் வாகனமொன்றில் இவர் வீடுநோக்கி பயணிக்கும் போதே பிக்கப்பின் பின்னாலிருந்து இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இறந்தவரின் பிரேத பரிசோதனைகள் குருணாகல் பொது வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.இறந்தவர் ரிதிகம றம்பொடகமவைச் சேர்ந்தவரெனத் தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலில் படுகாயம் இதேவேளை, குருணாகல் மகாவ பிரதேசசபைத் தலைவர் இனந்தெரியாதோர் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயமடைந்து குருணாகல் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக குருணாகல் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை தலல்ல பகுதியிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இதன் போது மகாவ பிரதேசசபைத் தலைவர் எஸ்.எம்.வீ.கே. சேனநாயக்க படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குருணாகல் பொலிஸார் தெரிவித்தனர்.