செய்திகள்

செய்திகள்

செய்திகள்

பொதுத்தேர்தல் அறிவிப்பு வெளியானதும் வேட்பாளர் தெரிவில் கட்சிகள் மும்முரம்

srilanka_parliament_02.jpgஏப்ரல் மாதம் எட்டாந்திகதி நடைபெறவுள்ள புதிய பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான இறுதிக்கட்ட பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. பாராளுமன்றம் நேற்று முன்தினம் (09) நள்ளிரவிலிருந்து தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதும் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் செயற்பாடுகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன.

இம்மாதம் 19ம் திகதி முதல் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய முடியும் என வர்த்தமானி அறிவித்தலில் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக வேட்பாளர் பட்டியல்களைப் பூர்த்தி செய்ய அரசியல் கட்சிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மாகாண மட்டத்தில் வேட்பாளர்களுக்கான நேர்முக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இன்னும் இரண்டொரு தினங்களில் மாவட்ட மட்டத்தில் வேட்பாளர் பட்டியலை பூர்த்தி செய்யவுள்ளதாக முன்னணியின் பொதுச் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் தெரிவித்தார்.

முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சி களுக்கு மாவட்ட மட்டத்தில் வேட்பாளர் களைப் பகிர்வது குறித்து, கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகக் கூறிய அமைச்சர் பிரேம் ஜயந்த், எவ்வாறெனினும் எதிர்வரும் 20ம் திகதிக்குள் வேட்பாளர்கள் நியமனப்பத்திரங்களில் கைச்சாத்திடவுள்ளதாகக் குறிப்பிட்டார். பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான கூட்டணி இன்னும் தீர்க்கமான முடிவு எதனையும் மேற்கொள்ளவில்லையென அக்கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்துக்கு சவால் விடுக்கும் அளவில் இந்தத் தேர்தலில் வேட்பாளர்களைக் களமிறக்கத் தீர்மானித்துள்ளதாகவும், இது தொடர்பில் சகல கூட்டணிக் கட்சிகளுடனும் பேசி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடி இவ்வாரம் முடிவொன்று எட்டப்படுமென்றும் திஸ்ஸ அத்தநாயக்க கூறியுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) சகல மாவட்டங்களிலும் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக அதன் பிரசாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இன்னும் இரண்டொரு தினங்களில் இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை. கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளிடையே கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கருத்து முரண்பாடு எழுந்திருந்தது. இந்நிலையில் கூட்டமைப்பால் போட்டியிடுவது பற்றிய தீர்மானம் எதனையும் கூட்டமைப்பு இன்னும் மேற்கொள்ளவில்லை.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆளுந்தரப்புடன் இணைந்து போட்டியிடுவதென ஏற்கனவே தீர்மானித்துவிட்டது. அந்தக் கட்சியின் சார்பில் 9 பேர் தேர்தலில் களமிறங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகள் தனித்துப் போட்டியிடுமெனத் தகவல்கள் வெளியாகியுள்ளபோதிலும், இறுதி முடிவுகள் எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

ஆளுந்தரப்பில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளும் இன்னும் ஆலோசனை நடத்தி வருகின்றன. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தேர்தலில் போட்டியிடுவது பற்றித் தீர்மானிக்க முடியாமல் அதன் உயர்மட்ட கலந்துரையாடலை நிறுத் தியுள்ளது. ஜனாதிபதியுடன் மீண்டும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்பே இறுதி முடிவெடுக்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதின்மூன்றாவது பாராளுமன் த்தின் ஆயுட்காலம் எதிர்வரும் ஏப்ரல் 22ம் திகதியுடன் நிறைவ டைவதால், நேற்று முன்தினம் (09) நள்ளிரவிலிருந்து பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அரசியலமைப்பின் 70 (1) சரத்தின் 11 ம் பிரிவின் கீழ் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதி காரத்தைப் பயன்படுத்தி பாராளுமன்றத்தை கலைத்துள்ளார்.

இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைவாக எதிர்வரும் ஏப்ரல் எட்டாந்திகதி தேர்தல் நடைபெறுமென தேர்தல்கள் மேலதிக ஆணையாளர் டபிள்யூ. பீ. சுமணசிறி தெரிவித்தார். வர்த்தமானி அறிவித்தலில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளவாறு வேட்பாளர் நியமனப் பத்திரங்கள் எதிர்வரும் 19ம் திகதி முதல் 26ம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும்.

கடந்த 2004ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 105 ஆசனங்களைப் பெற்று வெற்றியீட்டியது. ஐக்கிய தேசியக் கட்சி 82 ஆசனங்களையும், தமிழ்த் தேசியயகூட்டமைப்பு 22 ஆசனங்களையும் பெற்றிருந்தன. ஜாதிக ஹெல உறுமய 9 ஆசனங்களைப் பெற்ற அந்தத் தேர்தலில் 75% மக்கள் வாக்களித்திருந்தனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஜே.வி.பியுடன் இணைந்து 42 இலட்சத்து 23 ஆயிரத்து 970 வாக்கு களைப் பெற்று (45.60 சதவீத வாக் குகள்), ஐக்கிய தேசிய கட்சி 35 இலட்சத்து 04 ஆயிரத்து 200 வாக்குகளையும் (37.83% சதவீதம்) தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 6,33,654 வாக்குகளையும், ஜாதிக ஹெல உறுமய 5,54,076 வாக்குகளையும் பெற்றிருந்தன.

அடுத்த பாராளுமன்றத்துக்கான தேர்தல் ஏப்ரல் எட்டாந்திகதி நடைபெறுவதுடன் ஏப்ரல் 22ம் திகதி முதலாவது அமர்வு நடைபெறும். புதிதாக அமையவிருப்பது 14 வது பாராளுமன்றம். என்றாலும் 1978ம் ஆண்டின் அரசியலமைப்பின்படி ஏழாவது பாராளுமன்றம் என்பது குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்றத்திற்குத் தேர்தல் வாக்கெடுப்பின் மூலம் 196 உறுப்பினர்களும் போனஸ் மூலம் 29 உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.

தேர்தல் முடிவை ஆட்சேபித்து திங்கள் எதிரணி மனுத்தாக்கல்

ஜனாதிபதித் தேர்தல் முடிவை ஆட்சேபித்து அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து எதிர்வரும் திங்கட்கிழமை ஆட்சேபனை மனுவைத் தாக்கல் செய்யவிருக்கின்றன. இந்த மனு நேற்றுத்தாக்கல் செய்யப்படவிருந்த போதிலும் எதிரணிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிட்ட ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டதன் காரணமாக உருவான நிலைமைகளால் மேற்படி ஆட்சேபமனு தாக்கலை பிற்போட வேண்டிய நிலை ஏற்பட்டதாக ஐக்கிய தேசியக்கட்சி, ஐக்கிய தேசிய முன்னணி ஆகியவற்றின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

வாக்களிப்பு தினத்துக்கு முந்திய தேர்தல் பிரசார காலத்தில் இடம்பெற்ற வன்முறைகள், தாக்குதல்கள் தொடர்பில் தேர்தல் ஆணையாளரால் உரிய நடவடிக்கை எடுக்கப்படாமை, வாக்களிப்பின் பின்னர் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையங்களில் இடம் பெற்ற முறைகேடுகள், இறுதி முடிவுகள் தொடர்பிலான முறைகேடுகள் என பல்வேறு விடயங்கள் ஆதார பூர்வமாக இந்த மனுவில் உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

இதேவேளை தேர்தல் காலப்பகுதியில் சட்ட விவகாரங்களை முறைகேடாகப் பயன்படுத்தும் முயற்சிகளிலீடுபட்ட மூன்று சட்டத்தரணிகளை அப்பதவிகளிலிருந்து நீக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி மற்றொரு ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட லால்பெரேரா நேற்று புதன்கிழமை மற்றொரு மனுவை உயர் நீதிமன்றில் தாக்கல் செய்திருக்கிறார். ஜனாதிபதி சட்டத்தரணி ராஸிக் சரூக், சட்டத்தரணி சரத் கோங்கஹகே, சட்டத்தரணி காலிங்க நந்தக இந்த திஸ்ஸ ஆகியோருக்கு எதிராகவே இந்த மனு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தேசத்திற்கு மகுடம் கண்காட்சி நிறைவு; சுமார் 20 இலட்சம் பேர் கண்டுகளிப்பு

deyatakirula_logo.jpgகண்டி பள்ளேகலயில் கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற தேசத்துக்கு மகுடம் கண்காட்சியை நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து வந்த கிட்டத்தட்ட 20 இலட்சம் பேர் பார்வையிட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

மஹிந்த சிந்தனை கொள்கையின் கீழ் அரசாங்கம் மேற்கொண்ட அபிவிருத்தி தொடர்பாக மக்களுக்குத் தெளிவுபடுத்தும் வாய்ப்பை இந்தக் கண்காட்சி வழங்கியிருந்ததாக அவர் மேலும் கூறினார். அடுத்த ‘தேசத்துக்கு மகுடம்’ கண் காட்சியை பதுளை மாவட்டத்தில் நடத் துவதென அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் பள்ளேகலயில் நடைபெற்ற கண்காட்சியை வெற்றிகரமாக நடத்தவதற்கு உதவிய அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அமைச்சர் நன்றி கூறினார்.

ஈ.பி.டி.பி., ரி.எம்.வி.பி.யுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் எவ்வாறு போட்டியிடுவது என்பது குறித்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுடனும் ஈ. பி. டி. பி.யுடனும் நேற்று (10) முதல் பேச்சுவார்த்தை ஆரம்பித்துள்ளதாக ஐ. ம. சு. முன்னணி செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

ஐ. ம. சு. முன்னணியில் உள்ள சகல கட்சிகளும் இம்முறை வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று (10) மகாவலி நிலையத்தில் நடைபெற்றது.

வட பகுதியில் எவ்வாறு போட்டியிடுவது என்பது குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுட னும், கிழக்கில் போட்டியிடுவது தொடர்பாக கிழக்கு முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனுடனும் பேசவுள்ளோம்.

குடாநாட்டில் உணவுப் பண்டங்களுக்கு விலை நிர்ணயம்

Jaffna_Roadயாழ்ப் பாண மாவட்டத்திலுள்ள உணவுக் கடைகளில் செவ்வாய்க்கிழமை நிர்ணயிக்கப்பட்ட விலைகளில் உணவுப் பண்டங்கள் விற்பனை செய்யப்படுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.நிர்ணயிக்கப்பட்ட விலைகளிலேயே உணவுப் பண்டங்களை விற்பனை செய்ய வேண்டும் எனவும் உணவுப் பண்டங்களின் விலைகளின் பட்டியல் சகல உணவகங்களிலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படவேண்டும் எனவும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கே.கணேஷ் அறிவித்துள்ளார். இந்த நடைமுறையைப் பின்பற்றாத உணவகங்களுக்கு எதிராகப் பாவனையாளர் அதிகார சபையின் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் உணவகங்களில் சமையல் செய்யும் இடம், உணவு தயாரிப்போர், பரிமாறுபவர்கள், பரிமாறும் இடம் வாடிக்கையாளர்களைக் கவரக் கூடியவாறு சுத்தமாகவும் அழகாகவும் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் அரசாங்க அதிபர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் குடும்ப அங்கத்தவர்கள் ஒன்றாக வந்து உணவருந்தக் கூடியவாறு உணவகங்களில் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும்.சகல உணவகங்களிலும் விலைகளை குறைத்து உணவுப் பண்டங்களை விற்பனை செய்ய முன்வந்தமைக்கு பாராட்டும் தெரிவித்துள்ள அரசாங்க அதிபர், தேவையேற்படும் போது இந்த வியாபார செயற்பாடுகள் குறித்து தொலைபேசியூடாகவோ, கடிதம் மூலமாகவோ மாவட்ட செயலகத்துடன் தொடர்புகொள்ள முடியும் எனவும் கூறியுள்ளார்.

உணவுப் பண்டங்களின் தீர்மானிக்கப்பட்ட விற்பனை விலை விபரம் வருமாறு;

சைவ மதிய உணவு (போதுமானளவு) 60 ரூபா,
சைவ மதிய உணவு (அளவானது) 50 ரூபா,
அசைவ மதிய உணவு (போதுமானளவு) 90 ரூபா,
வடை (பெரியது) 20 ரூபா,
வடை (நடுத்தரமானது) 15 ரூபா,
வடை (அளவானது) 10 ரூபா,
றோல்ஸ் (பெரியது) 15 ரூபா,
பற்றீஸ் 10 ரூபா, றொட்டி 10 ரூபா,
தேநீர் 10 ரூபா,
பால் தேநீர் (பால்மா, பசுப்பால்) 20 ரூபா,
இடியப்பம் 4 ரூபா,
பிட்டு (அளவானது) 10 ரூபா,
தோசை 10 ரூபா, அப்பம் (சோடி) 15 ரூபா,
இட்டலி (அளவின் பிரகாரம்) 6 தொடக்கம் 10 ரூபா.

யாழ்.மாவட்டத்தில் உணவுப் பண்டங்களின் விலை அதிகரிப்பு குறித்து யாழ்.செயலகத்தில் கடந்த 5 ஆம் திகதி அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் மேலதிக அரச அதிபர், யாழ்ப்பாணம், நல்லூர் பிரதேச செயலாளர்கள் பாவனையாளர்கள் அதிகார சபை அதிகாரிகள், வணிக கழகப் பிரதிநிதிகள், சமாதானத்துக்கும் நல்லெண்ணத்துக்குமான மக்கள் குழு செயலாளர், பாவனையாளர் ஒருங்கிணைப்புக் குழு பிரதிநிதிகள், உணவகங்களின் உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.

தற்போது அரிசி, மா, சீனி, பால்மா, மரக்கறிகள் என்பனவற்றின் விலைகள் கணிசமான அளவு குறைந்துள்ளதால் உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படாமை குறித்து இங்கு சுட்டிக்காட்டப்பட்டதுடன், இதனால் பாவனையாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாண நகரைப் பொறுத்தமட்டில் உயர்கல்வி மாணவர்கள், தனியார் கல்வி மாணவர்கள் அரச ஊழியர்கள் பல தேவைகளுக்குத் தூர இடங்களில் இருந்து வருபவர்கள், தென்பகுதிகளில் இருந்து வருவோர் இந்த உணவகங்களையே நாடுகின்றனர். எனவே இவர்களின் நன்மை கருதி உணவுப் பண்டங்களின் விலைகள் குறைக்கப்படவேண்டும் என இங்கு கருத்தும் தெரிவிக்கப்பட்டது.

இங்கு உணவகங்களின் பிரதிநிதிகள் கருத்துத் தெரிவிக்கையில் உணவுப் பண்டங்கள், தேனீர் என்பனவற்றைக் கூடுதலான தரத்திலேயே பாவனையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.இதனால் தான் கூடிய அரிசி, தேயிலை என்பன பாவிக்கப்படுகிறது. மேலும் தற்போது அரிசி, மா, மரக்கறி என்பனவற்றின் விலைகள் குறைவடைந்தாலும் சீனி, மீன், விறகு போன்றவற்றின் விலைகள் குறைவடையவில்லை எனவும் தெரிவித்திருந்தனர்.இவர்கள் அனைவரதும் கருத்துகளை ஆராய்ந்த பின்னரே உணவுப் பண்டங்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

பொன்சேகா மீது தாக்குதல் நடத்தவோ இடையூறு ஏற்படுத்தவோ இல்லை – இராணுவப் பொலிஸார்

sarath.jpgசரத் பொன்சேகாவை கைது செய்யச்சென்ற இராணுவப் பொலிஸார் அவரை தாக்கவோ அல்லது அவருக்கு இடையூறு ஏற்படுத்தவோ இல்லையென்று இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

சரத் பொன்சேகா மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அவர் மோசமாக நடத்தப்பட்டதாகவும் சில ஊடகங்களில் வெளியாகியிருந்த செய்திகளை இராணுவப் பொலிஸ் பிரிவு முற்றாக மறுப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக இராணுவப் பொலிஸ் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

சரத் பொன்சேகாவை கைது செய்யச் சென்ற அதிகாரிகள் அது பற்றி அவருக்கு எடுத்துக் கூறினர். ஆனால், அவர் தொடர்ந்து அவர்களுடன் ஒத்துழைக்கப் பிடிவாதமாக மறுத்ததால் அவருடைய மறுப்பையும் ஏனைய கருத்துக்களையும் பொருட்படுத்தாது அவரை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதேவேளை கடற்படைத் தலைமைய கத்தில் சிரேஷ்ட அதிகாரிகளுக்கான வதிவிடம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொன்சேகாவை நேற்று முன்தினம் அவரது மனைவி அனோமா பொன்சேகாவும், அவரால் பிரேரிக்கப்பட்ட சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷ ஆகியோர் சென்று பார்வையிட்டனர்.

நேற்று முன்தினம் மாலை 6.30 மணியளவில் பார்வையிடச் சென்ற அவர்கள் சுமார் 3 மணித்தியாலங்கள் சந்திப்பு நடத்தினர். பொன்சேகா கேட்டுக் கொண்டதற்கமைய மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்ப ட்டுள்ளது. இவ்வாறு தடுத்துவைக்கப்படும் ஒருவருக்கு இராணுவத்தால் வழங்கப்படும் உணவை மாத்திரமே சாப்பிட முடியும் என்று தெரிவித்த இராணுவப் பேச்சாளர், சரத் பொன்சேகாவின் சுகாதார நலன்கள் மற்றும் முன்னாள் உயர் அதிகாரி என்ற விடயங்களை கருத்திற்கொண்டு அவர் விரும்பும் உணவை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

தற்போது இராணுவப் பாதுகாப்பிலுள்ள சரத் பொன்சேகாவுக்கு எதிராக இராணுவச் சட்டத்தின் பிரிவு 57 (1) கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேஜர் ஜெனரல் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பில் பெரும்போக நெல் அறுவடை விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்போக அறுவடை இடம்பெற்று வருகையில் நாளுக்கு நாள் நெல்லின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அரசு உத்தரவாத விலையினை வெளியிட்டு நெல்லினைக் கொள்வனவு செய்ய வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்போகச் செய்கை சிறிதுகாலம் மழை இல்லாது பாதிக்கப்பட்டதுடன், பின்னர் அதிக மழை பெய்ததாலும் பாதிக்கப்பட்டது. இறுதி நேரத்தில் கபில நிறத்தத்தி, இலைச்சுருட்டி புழு போன்ற பூச்சித் தாக்கத்தினால் பாரிய பாதிப்பு ஏற்பட்ட நிலையில் கூடுதலாகச் செலவு செய்து கிருமி நாசினிகளைப் பயன்படுத்தினர்.

இரண்டாயிரத்து முந்நூறு ரூபாவிற்குக் கொள்வனவு செய்யப்பட்ட நீட்டு வெள்ளை இன நெல் தற்போது ஆயிரத்து அறுநூறு ரூபாவிற்குக் கொள்வனவு செய்யப்பட்டு வருகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் நெல்லின் விலையை வியாபாரிகளே தீர்மானிக்கும் நிலை இன்று உள்ளதால் வியாபாரிகள் தங்களது தேவைக்கேற்ப நாளுக்கு நாள் குறைத்துகொண்டு செல்கின்றனர்.  இதனைத் தடுத்து நிறுத்தி விவசாயிகளைப் பாதுகாக்க அரசு தலையிட்டு உத்தரவாத விலையினை வெளியிட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மீள்குடியேற்றப்பட்ட பகுதி பாடசாலைகளுக்கென தளபாடங்கள் சீருடைகள் அனுப்பி வைப்பு

வடக்கில் மக்கள் மீளக்குடியமர்த்தப்படும் பகுதிகளிலுள்ள பாடசாலைகளுக்கென 34 லட்சம் ரூபா பெறுமதியான தளபாடங்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவிக்கிறது.

மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் சுமார் 50,000 மாணவர்களுக்குத் தேவையான 14 மில்லியன் ரூபா பெறுமதியான சீருடைத் துணிகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

1000 வாங்குகளும் 1000 கதிரைகளும் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் 1000 வாங்குகளும் 1000 கதிரைகளும் எதிர்வரும் 15 ஆம் திகதி அனுப்பி வைக் கப்படவுள்ளன. கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மக்கள் மீளக்குடியமர்த் தப்பட்டுவரும் இவ்வேளையில் பாடசாலைகளும் உடனடியாக இயங்க வைக்க நடவடிக்கை எடுக்க ப்பட்டுள்ளது.

பாடசாலை உடனடியாக இயங்க வைக்க தளபாடப் பற்றாக்குறை பெரும் குறையாக இருப்பதை வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி கல்வி அமைச்சிடம் சுட்டிக்காட்டியிருந்தார். மேற்படி பாடசாலைகளுக்குரிய தளபாடங்களை உடனடியாக அனு ப்பி வைக்க நடவடிக்கை எடுக்கு மாறும் அவர் கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்தவை கேட்டிருந் தார். இதற்கமைய தளபாடங்கள் சீருடைத் துணிகள் போன்றவற்றை கல்வி அமைச்சு அனுப்பிவைத் துள்ளது.

சரத் பொன்சேகா கைது விவகாரம்; சர்வதேச நாடுகள் தலையிட முடியாது

rohitha.jpgசரத் போன்சேகாவின் கைது விவகாரம் தொடர்பாக சர்வதேச நாடுகள் தலையிட முடியாதென வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார். உள்நாட்டு சட்ட விதிமுறைகளுக்கு அமையவே இக்கைது இடம்பெற்றிருப்பதனால் சர்வதேச சக்திகள் இது குறித்து அழுத்தம் கொடுக்க முடியாதெனவும் அமைச்சர் போகொல்லாகம சுட்டிக் காட்டினார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் ரஷ்யாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ள அமைச்சர் அமைச்சில் நடத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். எமது நாட்டைப் பொறுத்தவரை அனைவரும் சமமானவர்கள்.

ஒருவர் பிழை செய்தால் நாட்டின் சட்ட விதிமுறைகளுக்கமைய அவரை விசாரிப்பதற்கு முறையுண்டு. அந்தவகையில் சரத் பொன்சேகாவை கைது செய்திருப்பதற்கான காரணத்தை இராணுவத்தினர் தெளிவாக கூறியுள்ளனர். தான் கைது செய்யப்பட்டிருப்பதற்கான காரணத்தை சரத் பொன்சேகாவே நன்கு புரிந்து வைத்துள்ளார். இதுவரை எந்தவொரு நாட்டிடமிருந்தும் பொன்சேகாவின் கைது குறித்து ஒரு தொலைபேசி அழைப்பு கூட வரவில்லை.

சரத் பொன்சேகா என்பதற்காக இல்லை; நாட்டில் எவரும் சட்ட விதி முறைகளை மீறி நடந்தாலும் அவருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவது வழமையானதாகும். அதன்படியே, இக்கைது இடம்பெற்றிருப்பதாக அமைச்சர் போகொல்லாகம சுட்டிக்காட்டினார்.

எண்ணெய் எரிவாயு அகழ்வுக்கு ரஷ்யா ஒத்துழைப்பு

இலங்கையின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்குவதாக ரஷ்ய ஜனாதிபதி திமித்ரி மெத்வதேவ் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் உறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதியின் ரஷ்ய விஜயம் இலங்கைக்கு பல சாதகமான பிரதிபலன்களைப் பெற்றுத்தந்துள்ளதுடன் இரு நாடுகளுக்கிடையிலான நல்லுறவையும் பலப்படுத்தியுள்ளது. ரஷ்ய ஜனாதிபதி திமித்ரி மெத்வதேவின் விசேட அழைப்பினை ஏற்று மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு ரஷ்யா சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று நாடு திரும்பினார்.

ஜனாதிபதித் தேர்தல் வெற்றியின் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்ட முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயம் இதுவாகும். பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதையடுத்து வேகமாக கட்டியெழுப்பப்பட்டு வரும் இலங்கையின் எதிர்கால அபிவிருத்திக்கு 300 மில்லியன் டொலர் நிதியை இவ்விஜயத்தின் போது ரஷ்யா கடனுதவியாக வழங்க இணங்கியுள்ளது.

அத்துடன் இலங்கையில் எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வாராய்ச்சிக்கு ரஷ்யா ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ள மையும் இவ்விஜயத்தின் பாரிய வெற்றியாகும். இவ்வகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கு வதற்கு உலகின் பிரசித்திபெற்ற ரஷ்ய எரிவாயு நிறுவனமான ரஷ்ய கேஸ் ப்ரோம் நிறுவனம் முன்வந்துள்ளது.

இரண்டு நாடுகளுக்குமிடையில் ஊடகத்துறை சார் நவீன தொழில்நுட்பங்க ளைப் பரிமாறிக்கொள்வது தொடர்பில் விசேட ஒப்பந்தமொன்றை மேற்கொள்ள முடிந்துள்ளமையும் ஜனாதிபதியின் இவ் விஜயத்தின் போது பெற்றுக்கொள்ளப்பட்ட பிரதிபலனாகும்.

இலங்கையின் நற்பெயரை சர்வதேச மெங்கும் தெரிவிக்கும் மற்றுமொரு நிகழ்வும் இவ்விஜயத்தின்போது இடம்பெற்றுள்ளது. ரஷ்ய நட்புறவுப் பல்கலைக்கழகம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கலாநிதிப் பட்டம் வழங்கி கெளரவித்தமையே அந்நிகழ்வாகும்.

உலக சமாதானத்திற்காக மேற்கொண்ட சேவைகள், பயங்கரவாதத்தை ஒழித்து கல்வி, கலாசாரம் உட்பட பல்வேறு துறைகளின் மேம்பாட்டிற்காக முன்னெடுத்த பாரிய சேவைகளுக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ரஷ்ய பல்கலைக்கழகம் மேற்படி கெளரவ பட்டத்தை வழங்கியுள்ளது. இப்பட்டத்தைச் சுவீகரித்துக்கொண்ட உலகின் ஆறாவது அரச தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்பது குறிப்பிடத்தக்கது. இது இலங்கை வாழ் மக்கள் அனைவருக்கும் கிடைத்த கெளரவமாகும்.

அதேவேளை, உலகிற்கு சமாதானத்தைப் பெற்றுக்கொடுத்த ரஷ்ய அரச பரம்பரையை நினைவுகூரும் வகையில் அதன் ஞாபகார்த்தமாக தங்கத்தினாலான மாணிக்கக் கற்கள் பதிக்கப்பட்ட கிரீடமொன்றை ரஷ்ய நட்புறவுப் பல்கலைக்கழகம் வழங்கியமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

ரஷ்ய – இலங்கை நாடுகளுக்கிடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்தும் நிகழ்வாக இருநாட்டுத் தலைவர்களினதும் சந்திப்பைக் குறிப்பிட முடியும். இச்சந்திப்பின் போது இலங்கை ஜனாதிபதிக்குத் தம் மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்த ரஷ்ய ஜனாதிபதி; இலங்கையின் எதிர்கால நடவடிக்கைகளுக்குப் பூரண ஒத்துழைப்பினை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ரஷ்யாவுடனான நல்லுறவை மேலும் பலப்படுத்துவதே தமது எதிர்பார்ப்பாகுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விஜயத்தின் போது ரஷ்யாவின் வரலாற்று முக்கியத்துவமிக்க பல இடங்களை ஜனாதிபதி தலைமையிலான தூதுக் குழுவினர் பார்வையிட்டதுடன் ரஷ்யாவின் தேசபிதா லெனினின் சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்தியமையும் குறிப்பிடத்தக்கதாகும்.