செய்திகள்

செய்திகள்

செய்திகள்

தமிழ்க் கூட்டமைப்பின் மனமாற்றங்களை வரவேற்கிறோம் – ஈ.பி.டி.பி. அறிக்கை

“தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் அண்மைக்கால செயற்பாடுகள் சில அவர்களிடையே மனமாற்றங்களை ஏற்படுத்தியிருப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இந்த மனமாற்றம் என்பது உண்மையானதும், நேர்மையானதுமாக இருப்பின் அவை காலங்கடந்தவையாக இருப்பினும் அதை மனந்திறந்து வரவேற்கின்றோம்” என ஈ. பி. டி. பி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதில் கூறப்பட்டுள்ளதாவது:-

எமது மக்களின் சார்பாக 22 பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றிருப்பது என்பது வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய சாதனையாகும். அதை எந்த வழிமுறையில் அவர்கள் பெற்றிருந்தாலும் தமிழ் பேசும் மக்களை இருண்ட யுகத்தினுள் இருந்து மீட்பதற்காக அதைப் பயன்படுத்தியிருந்தால் நாம் அதனை மனமகிழ்ச்சியோடு ஏற்றிருப்போம். ஆனாலும், அந்த அரசியல் பலத்தை அவர்கள் சரிவரப் பயன்படுத்தியிருக்கவில்லை என்ற மனத்துயரங்களினால் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை நாம் அரசியல் ரீதியாக விமர்சனங்களுக்கு உட்படுத்தியிருந்தோம்.

தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினை தொடர்பான தீர்விற்காக கனிந்து வந்திருந்த ஒவ்வொரு சந்தர்ப்பங்களின் போதும் எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை அணுகி நடைமுறை சாத்தியமான வழிமுறைகள் குறித்தும் எமது மக்களை அவலங்களில் இருந்து மீட்டெடுக்க முடிந்த அரசியல் தந்திரோபாய திட்டங்கள் குறித்தும் பல தடவைகள் பேச்சுவார்த்தைகள் நடத்தியிருந்தார். ஆனாலும், அவர்களில் பலரும் அந்த நியாயமான வழிமுறைகளை ஏற்று வந்திருக்கவில்லை. இன்று அவர்கள் மனந்திருந்தி வந்திருப்பது போல் அன்றே அவ்வாறு வந்திருந்தால் எமது மக்களின் அவலங்களையும், அழிவுகளையும் தவிர்த்திருக்கலாம்.

ஆனாலும் கடந்தகால தவறுகளை ஏற்றுக்கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறு ப்பினர்கள் அண்மைக்காலமாக அரசாங்கத்துடன் சுமுகமாக பேசி வருவதோடு எமது கட்சியாகிய ஈ. பி. டி. பி. வலியுறுத்தி வரும் நடை முறைச்சாத்தியமான வழிமுறையை ஏற்றுக்கொள்வதாகவும் அவர்களில் சிலர் மனந்திறந்து கருத்து தெரிவித்திருந்தமை வரவேற்கத்தக்கது.

அதேவேளை, ஏனைய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் கடந்த கால அனைத்து தவறுகளையும் வெளிப்படையாக ஏற்றுக்கொண்டு வரும் பட்சத்தில் அவர்களோடு தமிழ் பேசும் மக்களின் நலன்களுக்காக மட்டும் பேசுவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம்.

ஐரோப்பிய நாடுகளுக்கு ரணில் பயணம்

ranil.jpgஎதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஐரோப்பிய நாடுகளுக்கான விஜயத்தினை ஆரம்பிக்கவுள்ளார். ஒருவாரகால விஜயமொன்றை மேற்கொண்டு ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் ரணில் விக்கிரமசிங்க பல்வேறு தலைவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இவர் பிரித்தானியாவுக்கும் விஜயம் செய்து அங்குள்ள முக்கியஸ்தர்களையும் சந்தித்துப் பேச ஏற்பாடாகியுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்க்கட்சிதத் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க ஈரோஸ் முடிவு

ஈரோஸ் (ஈழவர் ஜனநாயகக் கட்சி) ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பதென முடிவு செய்துள்ளதாக கட்சியின் தலைவரும், மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினருமான இராஜநாதன் பிரபாகரன் தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த ஈரோஸ் தலைவர் ‘தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை நன்கு அடையாளம் கண்டவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவரினாலேயே தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு கிட்டும்.

சரத் பொன்சேகா ஒரு இராணுவத் தளபதி. அவருக்கு அரசியல் என்பது பூஜ்யம். இத்தகைய ஒருவரினால் ஒரு ஜனநாயக நாட்டை எவ்வாறு ஆட்சி செய்ய முடியும். முப்பது வருட யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து வட கிழக்கு மக்களின் வாழ்வில் நிம்மதியைக் கொடுத்த மஹிந்த ராஜபக்ஷவிற்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றார்.

சந்திரிக்காவின் புதல்வர் பசில் ராஜபக்ஷவிற்கு எதிராக தேர்தலில் களமிறக்கப்படக் கூடிய சாத்தியம்?

vimukthi.jpgஎதிர்வரும் பொதுத் தேர்தல்களின் போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் புதல்வர் விமுக்தி கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கம்பஹா மாவட்ட பிரதான அமைப்பாளராக ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
பசில் ராஜபக்ஷவிற்கு எதிராக விமுக்தி குமாரதுங்க எதிர்வரும் பொதுத் தேர்தல்களின் போது ஐக்கிய தேசிய முன்னணிக் கட்சியின் சார்பில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. விமுக்தி குமாரதுங்க தற்போது இங்கிலாந்தில் மிருக வைத்தியராக கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவில் வெடி விபத்து; 102 பேர் பலி; 135 காயம்

ரஷ்யாவின் பெர்ம் நகரின் கேளிக்கை விடுதி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 102 பேர் உயிரிழந்தனர், 135 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களில் 85 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கேளிக்கை விடுதியின் 8வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்த போது இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

வெடிபொருட்களை பயன்படுத்தும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை முறையாக கடை பிடிக்காததே இந்த விபத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது.

மனைவியின் எலும்புகளோடு உறங்கிவருபவர்: வியட்நாமில் வியப்பு தகவல்

வியட்நாமில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒருவர் இறந்த தனது மனைவியின் எலும்புக்கூட்டோடு படுத்து உறங்கி வருகிறார் என்ற தகவல் அந்நாட்டில் பரவலாக அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது.  ஐம்பது வயதைத் தாண்டிய வான் என்ற இந்நபர், தனது மனைவியின் சடலத்தை சவக்குழியிலிருந்து தோண்டி எடுத்து தனது மனைவியைப் போன்ற ஒரு மெழுகு பொம்மை செய்து, அதனுள் அவரது எலும்புகளை வைத்து, அந்த பொம்மைக்கு ஒப்பனை எல்லாம் செய்து உடன் வைத்திருப்பதை ஒப்புக்கொண்டுள்ளளார்.

மனைவியின் உருவத்தின் அருகே லி வானும் அத்தம்பதியருடைய 12 வயது மகனும் உடலை அனைத்துக்கொண்டு படுத்திருப்பது போன்ற புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. இந்த நபர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கோ, இப்படியான சம்பவங்களைத் தடுப்பதற்கோ தங்களிடம் அதிகாரம் இல்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஐக்கிய தேசியக்கட்சி – ஆதரவாளர்களின் கண்களை கட்டி காட்டுக்குள் தள்ளி விட்டுள்ளனர்.

delan-shaly.jpgபொது வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவளிப்பதற்கு முன்வந்திருப்பதன் மூலம் கட்சியின் ஆதரவாளர்களின் கண்களை கட்டி காட்டுக்குள் தள்ளி விட்டுள்ளனர். கொழும்பு மாநகர சபை முன்னாள் பிரதிமேயர் அசாத் சாலியுடன் நிப்போன் ஹோட்டலில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஐக்கிய தேசியக்கட்சியின் குருணாக்கல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ மேற்கண்டவாறு தெரிவித்தார். .நான் ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர் , கட்சிக்கு ஜனநாயக ரீதியில் தலைவரை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் இல்லையேல் அரசியலிருந்து வீட்டுக்கு செல்வதா? ஓய்வெடுப்பதா? என்பது தொடர்பில் விரைவில் தீர்மானமொன்றுக்கு வருவேன் என்றும் அவர் சொன்னார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது, .கட்சியின் செயற்குழுவிற்குள் ஜனநாயகம் இல்லை. ஜனநாயக ரீதியில் தலைவரை நியமிக்குமாறு கோரினோம் அதற்கும் செவிசாய்க்கவில்லை. ஜனாதிபதி தேர்தலில் கட்சியையும் யானை சின்னத்தையும் மாற்றவேண்டாம் என்று கோரினோம். .தலைவர் பதவியை பாதுகாத்துக்கொள்வதற்காக கட்சியின் பெயர் விற்கப்பட்டு விட்டது. தேர்தலில் ரணில் முன்வந்தால் தோல்வியடைவார் என்று தெரியும். அதனால் தான் எஸ்.பி போட்டியிடுவதற்கு தயராக இருக்கின்றார். மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து போட்டியிடுவதற்கு கட்சிக்குள் பலர் இருக்கின்றனர். கட்சி சின்னத்தில் போட்டியிடுவதற்கு நடவடிக்கை எடுக்காவிடின் அரசியலிருந்து வீட்டுக்கு போவதா? ஓய்வு பெறுவதா? அல்லது அரசாங்கத்துடன் இணைவதா? என்பது தொடர்பில் பின்னர் தீர்மானிக்கப்படும். அரசாங்கத்தில் பதவிகளை ஏற்பதாயின் பலர் செல்வதற்கு முன்னரே நான் பதவியேற்றிருப்பேன் என்றார். .

மாநாட்டில் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் அசாத் சாலி கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது; செயற்குழுவிலிருந்து என்னை நீக்கியதை இட்டு நான் சந்தோஷமடைகின்றேன் அதற்கு நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றேன். பொது வேட்பாளர் சரத் பொன்சேகா 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இது சிங்கள நாடு, பௌத்த சிங்களவர்களுக்கே உரித்துடையது. சிறுபான்மையினர் எதனையும் கேட்கமுடியாது அவர்கள் வெளியிலிருந்து இங்குவந்தவர்கள் என்று கூறியிருந்தார்..

அவரின் கூற்று தொடர்பில் அரசாங்கத்திலிருக்கு அமைச்சர்கள், சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்கள், எதிர்க்கட்சியினர் அல்லது முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்தவர்கள் குரல் கொடுப்பார்கள் என எதிர்பார்த்திருந்தேன் அது நடைபெறவில்லை.. இதனையடுத்தே 12 கட்சிகளை இணைத்துக்கொண்டு நடவடிக்கைகளை மேற்கொண்டோம். அதற்கு நான் தலைமையேற்றேன். கடந்த தேர்தல்களில் யானை சின்னத்திற்கு சிறுபான்மையினர் கண்ணை மூடிக்கொண்டு புள்ளடியிட்டனர் ஆனால் இன்று யானை சின்னமோ, ஐக்கிய தேசியக்கட்சியோ, கட்சியின் தலைவரோ தேர்தலில் இல்லை. .இது வரலாற்றில் பதியப்படவேண்டிய விடயமாகும் என்றார்.

தமிழ் வேட்பாளரை நிறுத்தாவிடின் சுயேச்சையாக களமிறங்குவேன்- சென்னையில் சிவாஜிலிங்கம் எம்.பி. சூளுரை

telo mp jivajilingam
வீரகேசரி நாளேடு 12/5/2009 9:05:44 AM – இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒருவேளை தமிழ் வேட்பாளரை கூட்டமைப்பு தேர்தலில் நிறுத்தாவிட்டால் நானே சுயேற்சையாக களமிறங்கி போட்டியிடுவேன் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்(telo) யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. ஜிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது:

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஜனாதிபதி ராஜபக்ஷவும், முன்னாள் தளபதி பொன்சேகாவும் எதிரெதிராக தேர்தல் களத்தில் நிற்கிறார்கள். இது தவிர தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த சிங்கள தலைவர் ஒருவர் இடதுசாரிகள் முன்னணி சார்பில் போட்டியிடுகிறார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரை ராஜபக்ஷவையோ, பொன்சேகாவையோ நிச்சயமாக ஆதரிக்க முடியாது. இனப்படு கொலை செய்த இவர்களை ஆதரிக்கக் கூடாது என்பதே ஒட்டுமொத்த தமிழர்களின் விருப்பமாகும்.

ராஜபக்ஷவும், பொன்சேகாவும் தொடர்ந்து எங்களுக்கு தூது அனுப்பி வருகிறார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறார்கள். எந்த நிலையிலும் இவர்களை நாங்கள் ஆதரிக்க மாட்டோம்.

எங்கள் கூட்டமைப்பின் சார்பில் ஒரு தமிழ் வேட்பாளரை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்துவோம். தமிழர் வெற்றி பெற முடியாத நிலை இருந்தாலும் இலங்கை தமிழர்களின் உணர்வுகளை உலகம் அறிய செய்வதற்காக இந்த போட்டி அவசியமாகும்.

இதனால் எத்தகைய நெருக்கடி ஏற்பட்டாலும் எங்கள் உயிரே போனாலும் நாங்கள் எந்த சமரசத்துக்கும் உடன்பட மாட்டோம்.தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு நீதி கிடைக்க வேண்டும். இதனை எங்கள் கூட்டமைப்பின் தலைவர்களிடம் வலியுறுத்தியுள்ளேன்.

ஒருவேளை எங்கள் கூட்டமைப்பின் சார்பில் தமிழ் வேட்பாளரை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தாவிட்டால் நானே சுயேட்சையாக தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளேன்.

ஐ.தே.க. சம்மேளனத்தில் அரச ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டனர்

இன்று வெலிசறையில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி நடாத்திய விசேட சம்மேளனத்தின் போது அரச ஊடகங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் சிலர் தாக்கப்பட்டுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிவாரண கிராமங்களில் சுதந்திர நடமாட்டம் – வெளிசெல்வோர் மீது அழுத்தங்கள் எதுவும் பிரயோகிக்கவில்லை

srilanka_displaced.jpgநலன்புரி நிலையங்களிலுள்ளோருக்கு சுதந்திரமாக நடமாடும் அனுமதி வழங்கப்பட்டதையடுத்து இதுவரை 22,443 பேர் வெளியில் சென்றுள்ளதுடன் அவர்களில் 9,762 பேர் மீளத் திரும்பியுள்ளதாக மனித உரிமைகள், அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

இவ்வாறு வெளிச்செல்வோர் 15 நாட்களுக்குள் மீளத்திரும்பிவிட வேண்டும் என்ற நிர்ப்பந்தம் உள்ளதாக வெளியிடப்படும் பிரசாரங்களை முற்றாக மறுத்த அமைச்சர் அக்கூற்று முற்றிலும் தவரானதெனத் தெரிவித்ததுடன் அத்தகைய எந்த நிபந்தனைகளையோ, அழுத்தங்களையோ எந்த அதிகாரிகளும் பிரயோகிக்கவில்லையெனவும் உறுதிபடக் கூறினார். அதேவேளை, நேற்றைய கணிப்பீட்டின்படி இன்னும் 1,12,062 பேரே எஞ்சியுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் சமரசிங்க, நேற்றைய தினமும் 1096 பேர் பூநகரிப் பகுதியில் மீளக்குடியமர்த்தப்பட்டனர் எனவும் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் தொடர்பாக நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு விளக்கமளித்த அமைச்சர், எவர் எத்தகைய பிரசாரங்களை மேற்கொண்டாலும் மீள்குடியேற்ற விடயத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேரடிக் கவனத்தைச் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

சுதந்திரமாக நடமாடும் அனுமதி வழங்கப்பட்டதையடுத்து நலன்புரி முகாம்களிலிருந்து முதலாவது நாள் 9143 பேர் வெளியில் சென்றதுடன் 5020 பேர் மீளத் திரும்பிவிட்டனர். இரண்டாவது நாளில் 6,900 பேர் வெளியில் சென்றதுடன் அதில் 1,992 பேர் மீளத்திரும்பியுள்ளனர். மூன்றாம் நாளான நேற்று முன்தினம் 6399 பேர் வெளியில் சென்றதுடன் 2766 பேர் மீளத்திரும்பிவிட்டனர்.