செய்திகள்

செய்திகள்

செய்திகள்

பழைய பாடத்திட்ட பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பழைய பாடத்திட்டத்திற்கான 2008 ஆம் ஆண்டின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இப்பரீட்சைப் பெறுபேறுகளை www. doenet.lk என்ற இணையத்தள முகவரியூடாக பார்வையிட முடியுமென பரீட்சைத் திணைக்கள ஆணையாளர் அநுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், கொழும்பு மற்றும் ஸ்ரீஜெயவர்த்தனபுர கல்வி வலயப் பாடசாலைகள், பரீட்சைத் திணைக்களங்களில் பெறுபேறுகளை நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாமெனவும் பரீட்சை திணைக்கள ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

ஏனைய பாடசாலைகளின் பெறுபேறுகள் தபாலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

குடாநாட்டில் தங்கியுள்ள அகதிகள் மாற்று உடைகளின்றி பெரும் அவதி

_mullai_1.jpgயாழ். மாவட்ட நலன்புரிநிலையங்களில் தங்கியுள்ள வன்னி அகதிகள் மாற்று உடையில்லாமல் அவதியுறுவதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்களுக்கு மாற்று உடைகளை கொண்டுவரும் உடைகளின் பார்சல்களை சிலர் வீசி எறிவதாகவும் அகதிகள் கவலை தெரிவிக்கின்றனர்.குறிப்பாக உடைகளை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் அலுவலர்களுக்கு ஒரு சாரம் அல்லது சேட்டும்,பெண்களுக்கு கவுன் ஒன்றை வழங்குவதால், ஒன்றுமேயில்லாமல் உடுத்த உடையுடன் வந்த அகதிகள் பெரும் இன்னல்களை எதிர் கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது.
யாழ். மாவட்ட இந்து அமைப்புக்கள்,வணிகர் கழகங்கள்,பொது அமைப்புக் கள் இந்த அகதிகளுக்கு உணவுப்பொருட்களையே சேகரித்து யாழ். மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளித்து வருகின்றனர். இம் மக்கள் உணவுப்பொருட்கள் வேண்டாம்,மனமுகந்து மாற்று உடையாக ஆடைகளை தாராளமாக தந்து உதவுங்கள் என வேண்டுகின்றனர்.

அரச மருந்து விற்பனை நிலையமொன்றை யாழ்நகரில் திறப்பதற்கு நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில் அரச மருந்து விற்பனை நிலையமொன்றை (ஒசுசல) அமைப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
யாழ்.போதனா வைத்தியாசாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஏ.தேவநேசன், யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் ஆகியோர் மருந்தகத்தின் தேவை குறித்து யாழ்.அரச அதிபருக்கு தெரியப்படுத்தியதையடுத்தே இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிக்கின்றன.

யாழ்.போதனா வைத்தியசாலை உட்பட அரச வைத்தியசாலைகளில் மருந்துத் தட்டுப்பாடு ஏற்படும் போது அங்கு செல்கின்ற நோயாளர்கள் தனியார் மருந்தகங்களில் மருந்துகளைப் பெற்றுக் கொள்ளுமாறு பணிக்கப்படுகின்றனர். தனியார் மருந்தகங்களில் சாதாரண மருந்துகள் உட்பட அனைத்து மருந்துகளும் கூடிய விலையில் விற்பனை செய்யப்படுவதால் நோயாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

ஆனால் அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் கிளையாகிய அரச மருந்தகமொன்றை யாழ்ப்பாணத்தில் அமைக்கும் பட்சத்தில் நோயாளர்கள் தங்களுக்குத் தேவையான மருந்துகளை மிகவும் குறைந்த விலையில் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும். இதனாலேயே மேற்படி மருந்தகத்தை அமைப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

யாழ்ப்பாண நகரமத்தியில் இதற்கான கட்டிடமொன்று தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகவும் மிக விரைவில் இந்த மருந்தகம் ஆரம்பிக்கப்படுமென்றும் தெரிவிக்கப்படுகின்றது.

130 மி.மீ. ரக பீரங்கி உபகரணங்கள், கனரக ஆயுதங்கள் பெருமளவு மீட்பு

udaya_nanayakkara_brigediars.jpg முள்ளியவளை, விசுவமடு பிரதேசங்களிலிருந்து 130 மி. மீ. ரக பீரங்கி உபகரணங்கள், கனரக ஆயுதங்கள் உட்பட பெருந்தொகையான ஆயுதங்களைப் படையினர் மீட்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

முழுமையாக கிரீஸ் பூசப்பட்டு பொலித்தீன்களால் சுற்றப்பட்ட நிலையிலேயே புலிகளால் புதைத்து வைக்கப்பட்டிருந்த கனரக ஆயுதங்களை படையினர் மீட்டெடுத்துள்ளனர்.

முள்ளியவளை, விசுவமடு பிரதேசங்களில் பாரிய தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பாது காப்புப் படையினர் நிலத்தின் கீழ் ஏதோ புதைத்து வைக்கப்பட்டுள்ளதை அவதானித்துள்ளனர்.

130 மி. மீ. ரக பீரங்கி வைக்க பயன்படுத்தும் உபகரணம், தொலைத் தொடர்பு கருவிகள் – 02, கனரக ஆயுதங்களுக்கு பயன்படுத்தப்படும் மிக நீள மான குழல்கள் இரண்டு, கைக்குண்டுகள் – 27, ஆர். பி. ஜி. குண்டுகள் – 07 மற்றும் உபகரணங்களை படையினர் மீட்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

புல்மோட்டை வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்ட 514 பேரில் இரு குழந்தைகள் பலி

முல்லைத்தீவிலிருந்து கிறீன் ஓஷன் கப்பல் மூலம் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை புல்மோட்டைக்கு கூட்டிவரப்பட்ட 514 பேரில் இருவர் உயிரிழந்தனர். ஒருவர் கப்பலில் வந்துகொண்டிருந்த போது மரணமானார். மற்றவர் புல்மோட்டை கள வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைக்குட்படுத்தப்பட்ட போது உயிரிழந்தார். உயிரிழந்தவர்களின் பெயர்கள் வருமாறு;

1. குகதாஸன் ஒபிசன், (வயது 03), குருநகர், யாழ்ப்பாணம்.

2. தினேஷ்யாழினி, (வயது 03), புதுமாத்தளன் இவர்களையும் சேர்த்து நேற்று புதன்கிழமை காலை 9.00 மணிவரை முல்லைத்தீவில் இருந்து கப்பல் மூலம் புல்மோட்டைக்கு மார்ச் 16 தொடக்கம் ஏப்ரல் 14 வரை கூட்டி வரப்பட்ட 5,456 பேர்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது என்று மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் கள நிலவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதத்தில் 16, 20, 22, 26, 28, 30 ஆகிய திகதிகளிலும் ஏப்ரல் மாதத்தில் 4, 9, 13, 14 ஆகிய திகதிகளிலும் 11 தடவைகள் கப்பல் மூலம் முல்லைத்தீவில் இருந்து காயமடைந்தவர்கள் புல்மோட்டைக்குக் கொண்டுவரப்பட்டனர். அவர்களில் 27 சதவீதத்தினருக்கே புல்மோட்டை கள ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. 1,806 பேர் வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்த முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பதவியா ஆஸ்பத்திரிக்கு 2,918 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர். புல்மோட்டை கள வைத்தியசாலையில் 48 ஆண்கள், 48 பெண்கள், 13 சிறுவர்கள், 16 சிறுமிகள் சிகிச்சைக்காக தங்க வைக்கப்பட்டுள்ளனர். பதவியா ஆஸ்பத்திரியில் 314 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 115 பேர் காயமடைந்தவர்களும் நோயாளர்களும் ஆவர்.

மக்கள் சக்தி முழுவதும் அன்பு சகோதரி பக்கம்தான்: ராமதாஸ்

jayalalitha.jpgஅதிமுக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழகம் மற்றும் புதுவையில் போட்டியிடும் 40 வேட்பாளர்களையும் ஜெயலலிதா அறிமுகப்படுத்தினார். இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக பொதுக்குழுவின் முடிவிற்கேற்ப என்னுடைய அருமைச் சகோதரி அவர்களை, அவருடைய இல்லத்திலே சந்தித்து, எங்களின் பொதுக்குழுவினுடைய முடிவிற்கு ஏற்ப இந்த கூட்டணில் இடம் பெற வேண்டும் என்று நாங்கள் பேசினோம்.

வெளியிலே வந்து ஊடக நண்பர்களை நாங்கள் சந்தித்தோம். அப்போது அவர்கள் (ஜெயலலிதா) பேட்டியளித்தார்கள். என்னிடம் அந்த மைக்கை கொடுத்து, நீங்கள் ஏதாவது சொல்லுங்கள் என்று சொன்னார்கள். நான் அப்போது சொன்னேன். 40 தொகுதிகளிலும் இந்த கூட்டணி வெற்றி பெறும் என்று சொன்னேன். இன்றைக்கும் சொல்லுகிறேன் மே 16ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் போது, 40 தொகுதிகளிலும் இந்த கூட்டணி வெற்றி பெறுகிறது.

அதற்கு காரணம் மக்கள் சக்தி முழுவதும் அன்பு சகோதரி பக்கம்தான் என்பதால்தான் நான் சொல்லுகின்றேன். அந்த வகையிலே தமிழகம் முழுவதும் சென்று வருகின்ற இந்த கூட்டணி தலைவர்கள், மக்களுடைய நாடி துடிப்பை பார்த்து சொல்லுகின்றோம். இன்று எங்கு பார்த்தாலும், எங்கு சென்றாலும், மக்கள் சக்தி அன்பு சகோதரி பக்கமே என்பதை உணர முடிகிறது. திமுகவுக்கு எதிரான அலை இப்போது வீச தொடங்கியுள்ளது என்றார்.

திருமலை – கண்டி வீதி; 4 சோதனை சாவடிகள் அகற்றப்பட்டன

திருகோண மலையிலிருந்து கண்டி வீதியில் அமைந்திருந்த நான்கு சோதனைச் சாவடிகள் அகற்றப்பட்டிருக்கின்றன. அநுராதபுரச் சந்தி, 04ம் கட்டைச் சந்தி, தம்பலகாமம், அளுத்ஓயா ஆகிய நான்கு சோதனைச் சாவடிகளுமே அகற்றப்பட்டிருக்கின்றன.

இந்த சோதனைச் சாவடி நீக்கப்பட்ட பின்னர், மக்கள் பயணத்தை இலகுவாக மேற்கொண்டு வருவதை காணமுடிகின்றன.

ஈழப்பிரச்சனையில் இந்தியாவின் நிலை குறித்து நாளை இந்தியா அறிவிக்கும்?

tna_.jpgஇலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே நடைபெற்று வரும் சண்டையால் எழுந்துள்ள நிலை குறித்து விவாதிப்பதற்காக இலங்கையைச் சேர்ந்த தமிழ் எம்பிக்களுக்கு மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர் மேனன் அழைப்பு விடுத்திருந்தார்.  இந்த அழைப்பை ஏற்று இலங்கை தமிழ் எம்பிக்கள் சேனாதிராஜா, பிரேமசந்திரன், அடைகலநாதன், இரா.சம்பந்தன் ஆகியோர் நேற்று (15.04.09) விமானம் மூலம் புதுடெல்லிக்கு புறப்பட்டு சென்றார்கள். இன்று (16.04.09) அவர்கள் வெளியுறவுத்துறை செயலாளரை சந்தித்துப் பேசினார்கள்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை தமிழ் எம்.பி.க்கள், ஈழப்பிரச்சனையில் இந்தியாவின் நிலை குறித்து நாளை இந்தியா அறிவிக்கும் என நம்புவதாக தெரிவித்தார்கள்.

போர் இடைநிறுத்த காலப்பகுதியில் பொதுமக்கள் மீதான பிடியை புலிகள் மேலும் இறுக்கமாக்கியுள்ளனர் – ஐ.நா. சபையில் ஜோன் ஹோம்ஸ் விளக்கம்

sirjohnholmes.jpgபுது வருடத்தை முன்னிட்டு அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட போர் இடைநிறுத்த காலப்பகுதியில் பொதுமக்கள் வெளியேறுவது முன்னரை விட மிகவும் குறைவடைந்துள்ளது. புலிகள் பொதுமக்கள் மீதான தடையை மேலும் இறுக்கமாக்கியுள்ளதையே இது காட்டுகின்றது. இது மிகவும் கவலைக்குரியதாகும் என மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐ.நா. செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸ்; இலங்கை நிலவரங்கள் குறித்து ஐ.நா சபையில் விளக்கிக்கூறியுள்ளார்.

பொதுமக்கள் இந்தவிதத்தில் பிணை வைக்கப்படவோ அல்லது மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப்படவோ கூடாது. எனவே புலிகள் தமது இந்த மனப்பாங்கை மாற்றி பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற அனுமதிக்க வேண்டும் என மிகவும் வன்மையாகக் கேட்டுக்கொள்கின்றோம் எனவும் அவர் அங்கு தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் வெளியேற விருப்பமாகவுள்ளனர் என்பது எந்தஅடிப்படையில் கூறப்படுகின்றது? என ஊடகங்கள் கேட்ட கேள்வியொன்றுக்கு பதில் அளித்த திரு ஹோம்ஸ், ஐ நா முகவர் நிறுவனங்கள், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்,  எமது பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் புலிகளது பிடியிலிருந்து தப்பிவருகின்றபோது அவர்கள் தங்களது விருப்பத்தி;ற்கு மாறாகத் தடுத்துவைக்கப்படுவதாகத் தெரிவிக்கின்றனர்.

அவ்வாறு தப்பித்துவர முயற்சிப்போர்மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்படுவதாகவும் மிக கடுமையான அழுத்தங்களுக்கு உட்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும் அவர்கள் பலவந்தமாக படையில் சேர்க்கப்பட்டு போரிடுமாறு கட்டாயப்படுத்தப்படுகின்றனர். அல்லது கடுமையான வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அரசியல் காரணங்களுக்கெல்லாமம் அப்பால் மிகப் பெரும்பாலனவர்கள் தமது பாதுகாப்புக்கருதி வெளியேறி வரவே விரும்புகின்றனர் எனவும் தெரிவித்தார்.

ஐ. நா  யுத்தநிறுத்தமொன்றை கோருகின்றதா? என கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதில் அளித்த அவர் யுத்தநிறுத்தத்தைப் பொறுத்தவரை பணயமாக வைக்கப்பட்டுள்ள அப்பாவிப் பொதுமக்களின் நிலைமைகளுக்கு முறையானதும் அமைதியானதுமான ஒரு முடிவைக் கண்டதன்பின்னர் ஒரு மனிதாபிமான யுத்தநிறுத்தத்தைக் கோரி அதனையே ஒரு நிரந்தர நடைமுறையாக மாற்ற முடியும் என்பதே எமது எதிர்பார்ப்பு

அத்தகையதொரு போர்நிறுத்தம் தற்போதைய சூழ்நிலையில் இல்லை. தற்போதைய சூழ்நிலையில   நாம் யதார்த்தமானதொன்றையே செய்ய முயறசிக்கிறோம் என்றும் அவர் கூறினார்.

பிரபாகரன் பயன்படுத்திய வீட்டில் ஜனாதிபதி மஹிந்த

mahinda000.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று கிளிநொச்சிக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டார். 30 வருடங்களுக்குப் பின்னர் நாட்டின் தலைவர் ஒருவர் கிளிநொச்சிக்கு விஜயம் செய்தமை இதுவே முதல் தடவையாகும். இன்று காலை 6.00 மணிக்கு முதலில் கிளிநொச்சி வைத்தியசாலைக்குச் சென்ற ஜனாதிபதி அங்கு சிகிச்சை பெற்று வரும் படை வீரர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

படையினரின் சேமநலன்கள் பற்றிக் கேட்டறிந்துகொண்ட ஜனாதிபதி அவர்களுக்கு தனது புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்தார். படை வீரர்களுடன் ஒன்றாக அமர்ந்து புத்தாண்டு விருந்து நிகழ்ச்சியிலும் ஜனாதிபதி கலந்துகொண்டார்.

பின்னர் கிளிநொச்சியிலுள்ள சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுடன் கலந்துரையாடிய ஜனாதிபதி, கிளிநொச்சியின் தற்போதைய நிலைமைகள் மற்றும் படை வீரர்களின் முன்னேற்ற விபரங்கள் என்பன தொடர்பாகவும் அறிந்துகொண்டார். எல்.ரீ.ரீ.ஈ. பயங்கரவாதிகளிடமிருந்து படையினரால் அண்மையில் கைப்பற்றப்பட்ட விமான எதிர்ப்பு ஏவுகனைகள் மற்றும் யுத்த தாங்கிகள் உட்பட ஏனைய ஆயுதங்களையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.

கிளிநொச்சியில் புலிகளின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்திய வீடு,  அலுவலகம் மற்றும் புலிகளின் சமாதான செயலகம் ஆகியவற்றையும் ஜனாதிபதி நேரில் சென்று பார்வையிட்டார். வெளிநாட்டுப் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கு புலிகள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கட்டிடங்கள் மற்றும் மாநாட்டு மண்டபங்கள் என்பவற்றுக்கும் ஜனாதிபதி விஜயம் செய்தார்.

பின்னர் படை வீரர்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி,  பாதுகாப்புப் படையினரின் அர்ப்பணிப்பு மற்றும் திடசங்கற்பம் மிக்க சேவைக்காக அவர்களுக்கு தேசத்தின் கௌரவம் உரித்தாகட்டும் எனப் பாராட்டுத் தெரிவித்தார். பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாத வகையில் புலிகளிடம் சிக்கியுள்ளவர்களை பாதுகாப்பாக மீட்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி இங்கு கோரிக்கை விடுத்தார்.

ஜனாதிபதியின் இவ்விஜயத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் இராணுவத்தின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.