செய்திகள்

செய்திகள்

செய்திகள்

மேலும் ஒரு இந்திய வைத்தியக்குழு இலங்கை வர ஏற்பாடு

pullmottaiindiadoctors1.jpgதிருகோணமலை புல்மேட்டைப் பிரதேசத்தில் செயற்படும் நடமாடும் இந்திய ஆஸ்பத்திரிக்கு மேலும் ஒரு வைத்தியக் குழுவை அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார். இலங்கையின் வடக்கில் இடம்பெயர்ந்துள்ள பொது மக்களுக்குத் தேவையான சகல மருந்துப் பொருட்களும் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக நான் முன்வைத்த காலை பின்வைக்க மாட்டேன் – ஜனாதிபதி தெரிவிப்பு

mahinda-rajapaksha.jpgஎவ்வாறான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டாலும், பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக நான் முன்வைத்த காலை ஒருபோதும் பின்வைக்க மாட்டேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் களுத்துறை மாவட்ட அமைப்பாளர்களை அலரிமாளிகையில் திங்கட்கிழமை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு, அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்:

பயங்கரவாதத்தை ஒழித்து, நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத் திட்டங்களை சீர்குலைப்பதற்கு பல்வேறு சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

எவ்வாறான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டாலும் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக முன்வைத்த காலை எக்காரணத்திற்காகவும் பின்வைக்க மாட்டேன்.

அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு உலகமே எதிர்ப்புத் தெரிவித்தாலும், நாட்டு மக்கள் எனக்கு பின்னால் நிற்கின்றனர். மக்களின் ஆணையின் பிரகாரம் அபிவிருத்திகளும் முன்னெடுக்கப்படும் என்றார்.

‘தவறான செய்திகளை பரப்பாதீர்கள்’ -பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

யால சரணாலய பகுதியிலும் அதனை அண்டிய பகுதிகளி லும் கடுமையான பாதுகாப்பு ஒழுங்குகள் மேற்கொள்ளப்ப ட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

யால பாதுகாப்பற்ற பகுதியாக உள்ளதாக சில ஊடகங்களில் வெளியான செய்தியை முழுமையாக நிராகரித்த அவர் அப்பகுதி கிராமங்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இதே வேளை, கடந்த சில தினங்களில் புலி உறுப்பினர்கள் யால சரணாலய பகுதிகளில் தாக்குதல் நடத்தியதை அடுத்து அப்பகுதியின் பாதுகாப்பு முழுமையாக பலப் படுத்தப்பட்டுள்ளதாகவும் புலிகள் தாக்குதல் நடத்துவர் என அஞ்சத் தேவையில்லை எனவும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

வடக்கில் மனிதாபிமான நடவடிக்கைகளை வெற்றி கரமாக முன்னெடுத்துவரும் அரசாங்கம் நாட்டின் பாது காப்பு தொடர்பில் அதிக கரிசனை காட்டி வருவதாகவும் யால பகுதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பல திட்ட ங்களை முன்னெடுத்துள்ளதாகவும் ஊடக நிலையம் கூறியது.

யால பகுதியில் பாதுகாப்பற்ற சூழல் காணப்படுவதாக தவறான செய்திகளை வெளியிட்டு மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் எனவும் ஊடக மத்திய நிலையம் கோரியுள்ளது. யால சரணாலயத்தை அண்மித்த பகுதிகளில் இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து தொடர்ந்து தேடுதல் நடத்தி வருவதாகவும் அறிவிக்கப்படுகிறது.

இந்தோனேஷிய வெளிவிவகார அமைச்சர் – ஜனாதிபதி மஹிந்தவுடன் சந்தித்துப் பேச்சு

mahi-hasan.jpg உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்தோனேசிய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹசன் விராஜுடா நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரிமாளிகையில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இச்சந்திப்பின் போது இருநாடுகளுக்குமிடையிலான விசா தவிர்ப்பு முக்கிய ஒப்பந்தமொன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது.

நேற்றுக் காலை நடைபெற்ற மேற்படி சந்திப்பில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கொஹன்னே மற்றும் இந்தோனேசியத் தூதுவர் டிஜார்ஹ¥கன் ஆகியோர் கலந்து கொண்டதுடன் மேற்படி ஒப்பந்தத்தில் இலங்கையின் சார்பில் வெளி விவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவும் இந் தோனேஷிய அரசின் சார்பில் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹசன் விராஜுடாவும் கைச்சாத்தி ட்டுள்ளனர்.

முக்கியத்துவம் வாய்ந்த இவ் உத்தியோகபூர்வ சந்திப் பின் போது இருநாடுகளும் முகங்கொடுக்கும் பொது பிரச்சினைகள் பல கலந்துரையாடலுக்கு உட்படுத்தப் பட்டுள்ளது. அத்துடன் உலக பொருளாதார நெருக்கடி நிலையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய நடவ டிக்கைகள் இலங்கையில் தற்போதைய அபிவிருத்திச் செயற்திட்டங்கள் பற்றியும் விரிவாகக் கலந்துரையாடப் பட்டுள்ளன.

இக்கலந்துரையாடலின் போது இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்தும் விசேட வேலைத் திட்டங்கள் பற்றியும் இந்தோனேசிய அமைச்சருக்கு ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.

மதவாச்சி சோதனைச்சாவடி ஊடாகப் பிரயாணம் செய்வதில் மக்கள் சிரமம்

வவுனியா, மன்னார் மாவட்டங்களில் இருந்து நாட்டின் தென்பகுதிகளுக்குச் செல்லும் அரச உயரதிகாரிகள், தமது வாகனங்களில் மதவாச்சி சோதனைச்சாவடி ஊடாக பிரயாணம் செய்ய முடியாதுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மதவாச்சி சோதனைச்சாவடி ஊடாக பொது போக்குவரத்து வாகனங்கள் எதுவும் பிரயாணம் செய்ய முடியாது என்ற பாதுகாப்பு நடைமுறை அமுலில் இருந்து வருவது தெரிந்ததே. எனினும் அரச கடமையின் நிமித்தம் நாட்டின் தென்பகுதிகளுக்குச் செல்கின்ற திணைக்களத் தலைவர்கள் முக்கிய அதிகாரிகள் தமது வாகனங்களில் இந்த சோதனைச்சாவடி ஊடாகச் சென்று வருவதற்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி இப்போது மறுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் முக்கிய அலுவல்களுக்காக வாகனங்களில் செல்ல வேண்டிய அரச அதிகாரிகள், ஊழியர்கள் தமது பிரயாணத்தை மேற்கொள்வதில் சிக்கல்களை எதிர்நோக்கியிருப்பதாகக் கூறப்படுகின்றது.பாதுகாப்பு காரணங்களுக்காகவே இந்தப் புதிய நடைமுறை அமுல்படுத்தப்படுவதாகப் பாதுகாப்பு தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

1694 பொதுமக்கள் வருகை

_mullai_1.jpgபுலிகளின் பிடியிலிருந்து தப்பிவந்த மேலும் 1694 பொது மக்கள் பாதுகாப்புப் படையினரிடம் தஞ்சமடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நிலைகொண்டுள்ள இராணுவத்தின் 58வது படைப்பிரிவினரிடம் 1694 சிவிலியன்களும் தஞ்சமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கமைய புலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்து பாதுகாப்புப் படையினரிடம் தஞ்சமடைந்தவர்களின் எண்ணிக்கை 61,467 ஆக அதிகரித்துள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

ஒரு இலட்சம் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க ஏற்பாடு

இவ் வருடத்தில் மேலும் ஒரு இலட்சம் வீடுகளுக்கு மின்சார இணைப்பு வழங்க உள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு நேற்று தெரிவித்தது. மின்சார இணைப்புப் பெறுவதற்கு விண்ணப்பித்து 2 வாரத்தினுள் மின்சார இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மின்சக்தி எரிசக்தி அமைச்சர் டபிள்யூ. டீ. ஜே. செனவிரத்ன மின்சார சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்தது.

2 வாரத்தினுள் மின்சார இணைப்பு வழங்கும் திட்டத்தின் மூலம் மக்கள் எதுவித இடைஞ்சலும் இன்றி மின்சார வசதி பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது. சகல மக்களுக்கும் மின்சார வசதி அளிக்க அமைச்சு தீர்மானித்துள்ளதோடு மின்சார இணைப்பு பெறுவதில் உள்ள தனிப்பட்ட மற்றும் வேறு காரணங்களுக்கு பிரதேச செயலகங்களினூடாக துரித தீர்வு காணவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அமைச்சு மேற்கொண்ட துரித நடவடிக்கை காரணமாக கடந்த வருடம் 80 ஆயிரம் வீடுகளுக்கு மின்சார இணைப்பு வழங்கப்பட்டது. இவற்றில் பிரச்சினைகள் உள்ள சுமார் 2600 விண்ணப்பங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதோடு அது தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது. இதன்படி மின் இணைப்பு வழங்குவதில் வீடுகளுக்கு அருகில் உள்ள பாதைகள் தொடர்பான பிரச்சினைகள் பிரதேச செயலகங்களின் அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளன.

சகல மக்களுக்கும் மின்சார வசதி அளிக்கும் வகையில் கிராமிய மின்சாரத் திட்டங்கள் பெருமளவு ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு ஈரான், சீடா மற்றும் ஆசிய அபிவிருத்தி கிராமிய மின்சார திட்டம் என்பவற்றினூடாகவும் மேலும் பல திட்டங்கள் முன்னெடுத்து வருவதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு கூறியது. இவற்றினூடாக இந்த வருடத்தினுள் ஒரு இலட்சம் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட உள்ளது.

மின்சார நெருக்கடி ஏற்படுவதை தடுக்கும் வகையில் பல பாரிய மின்சாரத் திட்டங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருவதோடு அவை 2012 ஆம் ஆண்டுக்கு முன் நிறைவு செய்யப்பட உள்ளன. இதனூடாக மக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க முடியும் என மின்சக்தி அமைச்சு கூறியது.

இத்திட்டம் பூர்த்தியடையும் நிலையில் உள்ளது. சுண்ணாகம் 30 மெகா வோர்ட் மின்சாரத் திட்டம் ஆரம்பிக்கப்படுவதனூடாக யாழ். குடா மக்களுக்கு தடையின்றி மின்சாரம் விநியோகிக்கப்பட உள்ளது.

‘மோதல் பகுதிகளில் இருந்து பொதுமக்களை வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகளை இந்தியா வரவேற்கும்’- சிவ்சங்கர் மேனன்

menon.jpgஇலங்கையில் வடபகுதியில் மோதல் நடக்கும் இடங்களில் தாக்குதல்களை இடைநிறுத்தி அங்கு அகப்பட்டுள்ள பொதுமக்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆராய்வதாக இலங்கை அரசாங்கம் கூறியிருப்பதை இந்தியா வரவேற்பதாக இந்திய வெளியுறவுச் செயலர் சிவ்சங்கர் மேனன் டெல்லியில் தெரிவித்திருக்கிறார்.

மோதல் பகுதிகளில் அகப்பட்டுள்ள மக்களை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றும் நோக்கில், ஒரு தாக்குதல் நிறுத்தம் உட்பட பல வழிவகைகள் குறித்து ஆராய தாம் தயாராக இருப்பதாக இலங்கை அரசாங்கம் கூறியிருப்பதாக அண்மையில் வரும் செய்திகளை இந்தியா வரவேற்கின்றது என்றார் சிவ்சங்கர் மேனன்.

இந்திய பிரதமரின் முதன்மைச் செயலர் ரி.கே.ஏ. நாயர் அவர்கள் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயம் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த சிவ்சங்கர் மேனன் அவர்கள், அவருடைய விஜயம் மிகவும் சிறப்பாக அமைந்தது என்று கூறினார்.

நம்பகத்தன்மையுடனான ஒரு அதிகாரப் பரவலாக்கலை உள்ளடக்கிய ஒரு அரசியல் திட்டத்தை இலங்கை அரசாங்கம் உடனடியாக கொண்டுவரவேண்டும் என்பது குறித்து முக்கியமாக அந்த விஜயத்தின் போது இலங்கை அரசாங்கத்தரப்பினருடன் நாயர் அவர்கள் கலந்துரையாடியதாக அவர் தெரிவித்தார்.

அதேவேளை, போரில் அகப்பட்டுள்ள மக்களுக்கான மனித நேயப் பணிகள் மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகள் ஆகியவை குறித்தும் அவர் இலங்கை அரசாங்க அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுடன் விவாதித்ததாகவும் சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.

சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான உணர்வை சிங்கள மக்கள் மத்தியில் அரசு தூண்டி விடுவதாக விசனம் -ஹக்கீம்

hakkeem.jpgகிழக்கில் ஒரு குழு ஜனநாயக நீரோட்டத்துக்கு வந்ததாக வெளி உலகுக்குக்காட்டிய வண்ணம் அரசு ஆதரவோடு தொடர்ந்தும் ஆயுதங்களை வைத்துக் கொண்டு இயங்கி வருவதாக தெரிவித்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இதன் காரணமாக கிழக்கு மாகாண முஸ்லிம்களும், அங்குழுவுக்கு எதிரான தமிழ் மக்களும் பெரும் அச்சம் பீதி கொண்ட நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

யுத்த வெற்றிப்பேரிகை முலக்கத்தின் மூலம் அரசாங்கம் சிங்கள மக்கள் மத்தியில் சிறுபான்மைச் சமூகங்களுக்கு எதிரான உணர்வுகளைத்தூண்டி விட்டுக் கொண்டிருப்பதாகவும் ரவூப் ஹக்கீம் கடும் விசனம் வெளியிட்டார்.

தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இஸ்லாமும் பன்மைத்துவமும் எனும் கருப்பொருளிலான தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா தலைமையில் நடைபெற்ற இந்த தேசிய மாநாட்டில் நாட்டின் சகல மாவட்டங்களையும் சேர்ந்த சுமார் 300 பேராளர்கள் கலந்து கொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறியதாவது;  எமது நாடு இன்று பல்வேறு பட்ட சவால்களை எதிர் கொண்டிருக்கும் நிலையில் இத்தகையதொரு மாநாடு இடம் பெறுவதானது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவே நாம் கருத வேண்டியுள்ளது. சர்வதேசத்தின் கவனம் இன்று தென்னாசியாவில் வாழும் சிறுபான்மை முஸ்லிம்கள் பக்கம் திருப்பப்பட்டிருப்பதை காணலாம். அமெரிக்க ஜனாதிபதி பாராக் ஒபாமாவின் அண்மைய அறிக்கையையும், அமெரிக்க இராணுவத்தின் அறிக்கையும் தென்னாசிய சிறுபான்மை முஸ்லிம்களை பயங்கரவாதிகளாகவும், ஆயுதப் போராட்டக் குழக்களாகவும் பார்க்கின்ற ஒரு போக்கையே காண முடிகிறது. மேற்குலக போக்கு உலகில் முஸ்லிம்கள் தான் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்பதாகவே உள்ளது. இது இஸ்லாமிய உலகம் இன்று எதிர் கொண்டிருக்கும் பெரும் சவாலாகவே காணப்படுகின்றது.

இது இவ்விதமிருக்க இலங்கையிலும் காலத்துக்குக்காலம் முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மைச் சமூகங்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்ட வண்ணமே உள்ளனர். முஸ்லிம்கள் பெரும்பான்மை கலாசாரத்தின் பக்கம் புகுந்து விடாமலும் மேலாதிக்க தேசியவாதத்துக்கு அடிபணியாமல் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நாட்டில் வாழ்ந்து வருகின்றனர். இலங்கை முஸ்லிம்கள் ஒருபோதுமே ஆயதப் போராட்டத்துக்கு முயற்சிக்கவுமில்லை. அதற்குத்துணைபோகவுமில்லை. தெற்கில் முஸ்லிம்களும், சிங்களவரும் சமாதானமாகவும், சகிப்புத்தன்மையுடனும், புரிந்துனர்வுடனும் வாழ்ந்து வந்துள்ளனர்.. இதேபோன்று வடக்கிலும், கிழக்கிலும் முஸ்லிம்களும், தமிழரும் ஒன்றாக ஒரு தாய்பெற்ற பிள்ளைகள் போன்று சமர சமாகவும், புரிந்துணர்வுடனும் வாழ்ந்து வந்தனர்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் பேரினவாதச் சக்திகள் பெரும்பான்மை சிங்கள சமூகத்தவர் மனங்களில் நச்சுவிதையை விதைக்கும் வேலையை தொடங்கினர். இதன் மூலம் படிப்படியாக தமிழ் மக்களுக்கு எதிரான போக்கு வளர்க்கப்பட்டது. இதன் தாக்கத்தை வடக்கு கிழக்கு தமிழ்மக்கள் உணரத்தலைப்பட்டனர். தேசிய அரசியலிலிருந்து தமிழர் ஓரங்கட்டப்படுவதை உணரத் தொடங்கியதும் அந்தச் சமூகத்தின் இளைஞர்கள் தங்களது உரிமைக்காக ஆயுதமேந்த முன்வந்தனர்.

இதேபோன்று இன்று வடக்கு, கிழக்கு இணைப்பு நீக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போதைய சூழ்நிலையில் கிழக்கில் வாழும் முஸ்லிம்கள் அங்கு வாழும் தமிழ் மக்களால் ஓங்கட்டப்படுமோ என்ற அச்சமும் இன்று உருவாகியுள்ளது.

இன்று அரசு பிரலாபித்துவரும் யுத்த வெற்றிப் பேரிகை முழக்கத்தின் மூலம் சிங்கள மக்களுக்கு என்ன செய்தியை சொல்லவிளைகின்றது. பேரினவாதத்துக்குத் துணை போயுள்ள அரசாங்கம் சிங்கள மக்களின் உணர்வுகளை சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக தூண்டிவிட்டுள்ளது. இதன் விளைவுகள் எதிர்காலத்தில் மிகப் பாரதூரமானவையாகவே அமையலாம். இதுதான் தமிழ், முஸ்லிம், மக்கள் அச்சமும், பீதியும் கொள்ளக் காரணமாகும்.

இத்தகையதொரு நெருக்கடி மிக்க காலகட்டத்தில் இஸ்லாம் பற்றியும் பன்மைத்துவம் பற்றியும் பேசமுற்பட்டிருப்பது மிகப் பொருத்தமுடையதாகவே நாம் காண்கின்றோம். பன்மைத்துவத்தின் அடிப்படையே சகிப்புத்தன்மை, புரிந்துணர்வு என்பவையாகும். இதனை மேற்குலகம் தெரிந்து வைத்திருந்தாலும் கூட முஸ்லிம் உலகை தன் காலடிக்குக் கொண்டுவர வேண்டுமென்பதற்காக தென்னாசியாவில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக பயங்கரவாத முத்திரை குத்தி செயற்பட முனைகின்றது. பாகிஸ்தானைப் பயங்கரவாதத்தின் மோட்சம் எனக்காட்ட மேற்குலகம் முனைகிறது எனவும் ரவூப்ஹக்கீம் தெரிவித்தார்.

புதுமாத்தளனில் இருந்து மேலும் நோயாளர்கள் கப்பலில் புல்மோட்டை வந்தனர்

green-ocean.jpgகிறீன் ஓசன் கப்பல் மூலம் அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவின் அனுசரணையுடன் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுமாத்தளன் பகுதியிலிருந்து மற்றும் ஒரு தொகுதியினர் திங்கட்கிழமை, 30 மார்ச் 2009 புல்மோட்டைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
 
544 பேர் இவ்வாறு கப்பல் மூலம் கொண்டு வரப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்த மற்றும் அவர்களின் உறவினர்கள் இந்தக் குழாமில் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

திங்கட்கிழமை பிற்பகல் புதுமாத்தளனிலிருந்து புறப்பட்ட இந்தக் கப்பல்  புல்மோட்டையை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.