செய்திகள்

Sunday, January 23, 2022

செய்திகள்

செய்திகள்

வன்னி மக்களின் பாதுகாப்பை வலியுறுத்தி யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் பிரார்த்தனை

university-srilanka.jpgவன்னி மக்களது பாதுகாப்பிற்கான வலியுறுத்தல் பிரார்த்தனை நிகழ்வு 9 ஆம் திகதியிலிருந்து யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்று வருகிறது. போர் நெருக்கடிகளால் எல்லா வகையிலும் பாதிப்படைந்துள்ள எமது மாணவர்களது உளநிலைக்கான அமைதிக்கும் எமது மக்களின் பாதுகாப்பான வாழ்வுக்கான வலியுறுத்தலாகவும் “மௌனப் பிரார்த்தனையும் உபவாசமும்’ என்ற இந்த நிகழ்வை யாழ்.பல்கலைக்கழக சமூகம் நடத்தி வருகிறது.

ஈழத்தில் என்றுமில்லாதவாறு மக்களது சாவுகளும் துன்பங்களும் அதிகரித்துள்ளன. உணவு, உடை, தஞ்சமடைவதற்கான இடம் என்பவற்றுக்காக அப்பாவி வன்னி மக்கள் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்ளுகிறார்கள். தாங்க முடியாத அனுபவிக்க முடியாத இந்த துன்பங்களிலிருந்து எமது மக்களை காப்பாற்றும்படி அனைவரையும் அவசரமாக வேண்டிநிற்கிறோம்.

வகைதொகையற்ற அழிவுகளையும் கசப்புகளையும் தருகின்ற போரை நிறுத்துவதன் மூலம் எமது மக்களை அழிவிலிருந்து காப்பாற்ற மனிதநேய அடிப்படையில் முன்வரும்படி அனைவரையும் வேண்டுகிறோம். இன்றைய மிகவும் துன்பகரமான சூழ்நிலையில் அமைதியான வழியில் தீர்வு காண்பதற்கும் மக்களை அழிவிலிருந்து காப்பதற்கும் பின்வரும் கோரிக்கைகளை யாழ்.பல்கலைக்கழகம் வலியுறுத்துகிறது. மக்களின் உயிர்ப்பலியை உடனடியாக தடுப்பதுடன், இடம்பெயரச் செய்தல் போன்ற நெருக்கடிகளை தவிர்க்க வேண்டும். இடம்பெயர்ந்து அரச கட்டுப்பாட்டு பிரதேசங்களிலுள்ள முகாம்களில் தங்கியிருக்கும் வன்னி மக்களை மனிதாபிமான முறையில் நடத்த வேண்டும். போர் நடவடிக்கையில் இருந்து விடுபட்டு சமாதானத்திற்குச் சென்று அமைதியை உருவாக்க வேண்டும். தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை, மரபுவழித்தாயகம், தமிழ்த்தேசியம் என்பவற்றுக்குள்ளான தீர்வை வழங்கவேண்டும். ஈழத்தில் சமாதானத்தை ஏற்படுத்த சர்வதேச சமூகம் உடனடியாக வலியுறுத்த வேண்டும்.

எமது மக்களது சாவுகளும் அவர்கள் அனுபவிக்கின்ற துன்பங்களையும் தவிர்த்து, அமைதியை ஏற்படுத்தும்படி மிகவும் அவசரமான வலியுறுத்தலாகவும் எமது மாணவர்களின் ஆத்ம அமைதிக்காகவும் இந்த பிரார்த்தனையும் உபவாசமும் நாள்தோறும் நடைபெறுகின்றது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

தேர்தலை முன்னிட்டு இரு மாகாணங்களில் மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்படும்

election_ballot_.jpgமத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தலின் நிமித்தம் இரு மாகாணங்களையும் சேர்ந்த அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் இரு தினங்களுக்கு மூடப்படுமென அரசாங்க தகவல் திணைக்களம் வியாழக்கிழமை அறிவித்திருக்கிறது.

மாகாண சபைத் தேர்தலின் பொருட்டு  சனிக்கிழமை 14 ஆம் திகதியும், 15 ஆம் திகதியும் மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களைச் சேர்ந்த அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படுமென கலால் திணைக்கள ஆணையாளர் டி.ஜி.எம்.வி. அப்புஆராச்சி அறிவித்திருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களத்தினால் விடுக்கப்பட்டிருக்கும் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இலங்கைக்கு செய்து வரும் உதவிகளை இந்தியா நிறுத்த வேண்டும்: ராமதாஸ்

போரை நிறுத்தாவிட்டால், இலங்கையில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிபுணர்களை உடனடியாக திரும்ப அழைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.

இலங்கை இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டும் என்றும், அதற்கு முதலில் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் இந்திய நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவரின் உரையின் வாயிலாக இந்திய பேரரசு அறிவித்திருக்கிறது. இலங்கையில், தமிழினப்படுகொலைக்கு காரணமான போர் நிறுத்தப்பட வேண்டும் என்றும், அதற்கு இந்திய பேரரசு நடவடிக்கை வேண்டும் என்றும் தமிழகத்தில் அனைத்து தரப்பினரும் கொந்தளித்துக் குரல் எழுப்பி வருகிறார்கள். அதற்கு இப்போது ஓரளவு பலன் கிடைத்திருக்கிறது.

போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு விடுதலைபுலிகளும், இலங்கை அரசும் பேச்சுவார்த்தையின் மூலம் அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியல் தீர்வை காண வேண்டும் என்று இந்தியா அறிவித்திருப்பதும் ஆறுதல் அளிப்பதாக உள்ளது. இந்த ஆறுதலான நிலைப்பாடு இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு நிலைப்பாடாக மாற வேண்டும். போர் நிறுத்தப்பட வேண்டும் என்ற அறிவுறுத்தலுக்கு இலங்கை அரசு உடனடியாக செவி சாய்க்காவிட்டால், அடுத்த கட்டமாக இலங்கையில் உள்ள அனைத்து தொழில்நுட்ப உதவியாளர்களையும் இந்தியா உடனடியாக திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும்.

போரை ஊக்கப்படுத்தும் வகையில் எந்த உதவிகளையும் அளிக்க மாட்டோம் என்று எச்சரிப்பதுடன், இதுவரையில் அத்தகைய உதவிகளை அளித்து வந்திருந்தால் அவற்றையும் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். அத்துடன் போரினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு உதவும் வகையில் உணவு மற்றும் மருந்து பொருட்களை பன்னாட்டு சேவை நிறுவனங்கள் மூலம் வழங்கவும் இந்தியா முன்வரவேண்டும். இத்தகைய ஆதரவு நடவடிக்கைகளின் மூலம் இலங்கை அரசை பணிய வைக்க முடியும். எனவே, அடுத்த கட்டமாக இத்தகைய நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

முல்லைத்தீவிலிருந்து காயமடைந்த 400 பேர் கப்பல் மூலம் திருகோணமலைக்கு வருகை

ship-10022009.jpgமுல்லைத் தீவு, புதுமாத்தளன் பகுதியிலிருந்து நேற்று வியாழக்கிழமையும் காயமடைந்தோர், நோயாளிகளென 400 பேர் திருகோணமலைக்கு கப்பல் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளனர். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் (ஐ.சி.ஆர்.சி.) வாடகைக்கு அமர்த்தப்பட்ட “கிரீன் ஓசியன்’ கப்பல் மூலமே இவர்கள் அரச கட்டுப்பாடற்ற பிரதேசமான புதுமாத்தளன் பகுதிக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமையும் இதே கப்பல் மூலம் காயமடைந்தவர்கள் மற்றும் நோயாளிகள் 240 பேரும், அவர்களுக்கு உதவியாக வந்த 116 பேரும் ஐ.சி.ஆர்.சி.யின் உதவியுடன் புதுமாத்தளன் பகுதியிலிருந்து, திருகோணமலைக்கு கொண்டு வரப்பட்டிருந்தனர். இதில் நோயாளிகளும், காயமடைந்தவர்களும் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதேநேரம், நேற்று மாலை கப்பல் மூலம் திருகோணமலைக்கு கொண்டு வரப்பட்டவர்களில் நோயாளிகள் மற்றும் காயமடைந்தோர் எத்தனை பேர் என்பது தொடர்பாக சரியான தகவல்கள் கிடைக்கவில்லை என ஐ.சி.ஆர்.சி.யின் கொழும்பு அலுவலக பேச்சாளர் சரசி விஜேரட்ன தெரிவித்தார். புதுமாத்தளன் பகுதியிலிருந்து நேற்றுக் கொண்டு வரப்பட்ட நோயாளிகளும், காயமடைந்தவர்களும் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். அதுமட்டுமல்லாது, ஐ.சி.ஆர்.சி.யினால் 160 மெத்தைகளும், மருத்துவ விநியோக உதவிகளும் வழங்கப்பட்டிருப்பதாகவும் சரசி விஜேரட்ன தெரிவித்தார்.

அத்துடன், புதுமாத்தளன் பகுதியில் இன்னும் நோயாளிகளும், காயமடைந்தவர்களும் இருப்பதாகவும், அவர்களையும் கப்பல் மூலம் எடுத்து வரும் ஐ.சி.ஆர்.சி.யின் பணிகள் தொடருமென்றும் சரசி விஜேரட்ன மேலும் கூறினார். இதேநேரம், திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் நேற்று முன்தினம் மட்டும் 120 பேருக்கு சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன. அத்துடன், மேலதிக சிகிச்சைக்காக 6 பேர் நேற்று கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் கூறியுள்ளன

எந்தவித சர்வதேச அழுத்தங்களாலும் புலிகள்மீதான போரை நிறுத்த முடியாது : -மைத்திரிபால சிறிசேன

maithiripala.jpg“எந்த வகையான உள்நாட்டு மற்றும் சர்வதேச அழுத்தங்களை எதிர்கொண்டாலும் விடுதலைப்புலிகள் மீதான இராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்படவே மாட்டாது” என அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். முல்லைத்தீவு பிரதேசத்திலிருந்து விடுதலைப்புலிகள் முற்றுமுழுதாக தோற்கடிக்கப்பட்டு அப்பகுதி முற்று முழுதாக அரசின் கீழ் கொண்டு வரப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்றுக் காலை வடமத்திய மற்றும் மத்திய மாகாணசபை தேர்தல் தொடர்பிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இறுதி செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்

முல்லைத்தீவிலிருந்து வைத்தியர்கள் வெளியேற்றம்

doctors.jpgமுல்லைத் தீவு மாவட்டத்திலிருந்து வைத்தியர்கள் வெளியேறியிருப்பதாக சுகாதார சேவைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. முல்லைத்தீவில் தற்பொழுது காணப்படும் அசாதாரண சூழ்நிலை காரணமாக அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு வைத்தியர்களுக்கும், திணைக்கள அதிகாரிகளுக்கும் சுகாதார சேவைகள் திணைக்களம் அறிவித்தல் விடுத்திருந்தது. இதற்கமைய புதுக்குடியிருப்பு வைத்தியசாலையிலிருந்தும், முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்தும் வைத்தியர்கள் பலர் ஏற்கனவே வவுனியாவுக்கு வந்துவிட்டதாக சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்தியர் அஜித் மொன்டிஸ் கூறினார்.

“மோதல்கள் தொடர்ந்துகொண்டிருப்பதால் அங்கிருந்து வெளியேறுவதே சிறந்த வழி” என அவர் தெரிவித்தார். இதேவேளை, வன்னியிலிருந்து மேலும் 400 சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் திருகோணமலைக்கு அழைத்துச் சென்றுள்ளது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தால் இவர்கள் கப்பல் மூலம் திருகோணமலைக்கு அனுப்பப்பட்டனர்.

புதுமத்தாளன் பகுதியிலிருந்து காலை புறப்பட்ட கப்பல் நேற்றுமாலை திருகோணமலையைச் சென்றடைந்ததுடன், நோயளர்கள் திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

கடந்த செவ்வாய்க்கிழமையும் முல்லைத்தீவிலிருந்து 240 நோயளர்கள் திருகோணமலைக்கு அழைத்துவரப்பட்டிருந்தனர். நேற்றுமுன்தினம் திருகோணமலை வைத்தியசாலையில் 120 பேருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருமலையில் ஈபிடிபியினர் மக்களுக்காக இரத்த தானம்

blood.jpgமுல்லைத் தீவு பகுதியிலிருந்து செஞ்சிலுவைச் சங்கத்தினரின் உதவியுடன் கப்பல்கள் மூலம் அழைத்துவரப்பட்டு திருமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள காயமடைந்த மற்றும் நோயாளர்களுக்கு தேவைப்படும் குருதித் தேவையை நிவர்த்தி செய்யும் நோக்கோடு திருமலை மாவட்ட ஈபிடிபியினர் இன்று இரத்ததானம் வழங்கியுள்ளனர்.

இதேவேளை நேற்றைய தினம் இரத்ததானம் செய்ய விரும்பும் பொதுமக்களை இரத்த தானம் செய்யுமாறு  பொதுவான வேண்டுகோள் ஒன்றையும் விடுத்திருந்தனர். நேற்றைய தினம் ரெலோ அமைப்பினரும் திருமலை வைத்தியசாலையில் இரத்ததானம் செய்திருந்தனர். திருமலை வைத்தியசாலையில் 778 பேர் வன்னியிலிருந்து அழைத்துவரப்பட்டு சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

373 சிவிலியன்கள் பாதுகாப்புப்புத் தேடி வந்துள்ளனர்.

vanni.jpgவிடுவிக் கப்பட்ட பகுதியையான விஸ்வமடு, குரவிக்குளம் பகுதியை நோக்கி பாதுகாப்புத் தேடி மேலும் 373 சிவிலின்கள் கடந்த 48மணித்தியாலத்துக்குள் வந்துள்ளனர்.

கடந்த புதன்கிழமை ( பெப்:11) 254 சிவிலியன்கள் விஸ்வமடு வடக்கிலிருந்து வந்துள்ளனர்.அவர்களை 58வது டிவிசன் படையினர் வரவேற்றனர். 9 ஆண்கள்,9பெண்கள், 15 சிறுவர்கள் அடங்கலாக 33பேர் குரவிக்களப்பகுதிக்கு வந்தனர்.அவர்களை 57வது டிவிசன் படையினர் வரவேற்றனர்.மேலும் குப்பியக்குளம் பகுதியை நோக்கி வந்த 33பேர் வந்தனர் அவர்களை இரண்டாவது செயலணி படையினர் வரவேற்றனர்.

சிறுவர்கள் மற்றும் வயோதிபர்கள் அடங்கலாக 53பேர் 58வது டிவிசன் படையினரிடம் நேற்று (பெப்:12) வந்து தஞ்சம் புகுந்துள்ளதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்ட களனி பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் செல்ல அனுமதி

kelani_.jpgகளனி பல்கலைக்கழகத்தில் இரு மாணவர் குழுக்களுக்கிடையே அண்மையில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட 14 பேரையும் பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை அனுமதி வழங்கியுள்ளது. ஒவ்வொருவரையும் தலா 5 இலட்சம் ரூபா ரொக்கப் பிணையில் செல்ல கொழும்பு மேலதிக நீதிவான் மஞ்சுள திலகரட்ண அனுமதி வழங்கியுள்ளார்.

இவர்களுக்கு எதிராக, சட்டவிரோதமாக ஒன்று கூடியமை, பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கியமை, பல்கலைக்கழக உடைமைகளுக்கு சேதம் விளைவித்தமை போன்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பொலிஸார் அறிக்கையொன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.

பல்கலைக்கழக நிர்வாக நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் இந்த மோதல் இடம் பெற்றதாகவும் பொலிஸார் சமர்ப்பித்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. கைதானவர்களில் 9 பேர் பல்கலைக்கழக மாணவர்கள் என்பதுடன், எந்தவொரு நிபந்தனையின் பேரிலேயாவது, அவர்களுக்கு பிணை வழங்குமாறு அவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர்

வடபகுதி ரயில் சேவை ஓமந்தை வரை நீடிக்கப்படும்

sri-lanka-railway.jpgவட பகுதிக்கான ரயில் சேவை வவுனியா ஓமந்தை வரை நீடிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது வவுனியா வரை நடைபெறும் யாழ்தேவி ரயில் சேவையை ஓமந்தை வரை விஸ்தரிப்பது குறித்து ஆராயப்பட்டுள்ளது.

அநுராதபுரத்திலிருந்து வந்த ரயில்வே பொறியியலாளர் குழு ஓமந்தை வரை சென்று ரயில் பாதை தொடர்பான நிலைமைகளை அவதானித்துள்ளனர். புதிதாக பாதை நிர்மாணிக்க மதிப்பீடுகளையும் மேற்கொண்டதாக வவுனியா ரயில் நிலைய அதிகாரியொருவர் தெரிவித்தார்.

வடக்கின் பெரும் பகுதி படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளதால் ரயில் சேவையை விஸ்தரிப்பது தொடர்பாக உயர்மட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் ரயில்வே திணைக்களத்திற்கு பெரும் வருமானத்தை ஈட்டித்தந்த சேவை இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது