செய்திகள்

செய்திகள்

செய்திகள்

“ஏ9′ வீதியூடாக வாகனத் தொடரணி குடா நாட்டில் பொருட்களின் விலை வீழ்ச்சி

a9-food.jpgஏ9 பாதையூடாக தனியார் துறையினரும் பொருட்களை எடுத்துவர அரசாங்கம் ஏற்பாடுகளைச் செய்துள்ளமையால், குடாநாட்டில் பொருட்களின் விலை வெகவாக வீழ்ச்சியடைந்துள்ளன.  கடந்த வியாழக்கிழமை யாழ். மாவட்டத்துக்கு உப உணவுப்பொருட்கள் பழவகைகள் மென்பானங்கள், பிஸ்கட், பட்டர், மாஜரின், மருந்துவகைகள் என்பன பதினெட்டு லொறிகளில் எடுத்துவரப்பட்டமையால், கடந்த மூன்று வருடங்களின் பின்னர் நாற்பதுசதவிகித விலை வீழ்ச்சியேற்பட்டுள்ளது.

ஒன்றரை லீற்றர் மென்பானம் முன்னர் 220 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று முதல் இதனை 160க்கு வாங்கமுடிகின்றது. மருந்துவகைகள், பிஸ்கட், மாஜரின், பட்டர், போடப்பட்டவிலையில் ஐந்துசதவீத அதிகரிப்பில் விற்பனையாகின்றன.

அத்தியாவசிய உணவுப் பொருட்களான சீனி, பருப்பு, அரிசி, டின்மீன், நவதானியம் என்பன கொழும்பு விலைக்கு விற்பனையாகின்றன. கொழும்பிலிருந்து குடாநாட்டுக்கு ஏ9 பாதையூடாக பொருட்களை எடுத்துவர நூற்றுக்கணக்கான வர்த்தகர்கள் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளருக்கு விண்ணப்பம் செய்துள்ளனர்.

கப்பல்களில் பொருட்கள் வராவிட்டால் பதுக்கல் நடவடிக்கையில் ஈடுபட்ட வியாபாரிகளும் அதனைக் கைவிட்டு பதுக்கிய பொருட்களை சந்தைக்கு விடத்தொடங்கியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

எதிர்வரும் சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு ஏ9 பாதையூடாக பொருட்களை எடுத்துவர பல வர்த்தகர்கள் அத்தியாவசிய தேவைகள் ஆணையாளருக்கு விண்ணப்பித்துள்ளனர். சுமார் 100 லொறிகளில் சித்திரை புத்தாண்டுக்கு அத்தியாவசிய பொருட்களை அரசு அனுப்பவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேவேளை கொழும்பில் உள்ள சில தனியார் நிறுவனங்களும் தமது உற்பத்தி பொருட்களை குடாநாட்டுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுத்துவருகின்றன. உடு பிடவைகள், பாதணிகள், வீட்டு உபகரணங்கள் போன்றவையும் குடாநாட்டுக்கு ஏ9 பாதையூடாக எடுத்துவரப்படவுள்ளன.

இன்று ஐரோப்பிய ஆணைக் குழுவின் தூதுவர் ஜனாதிபதி சந்திப்பு

euro_comm_.jpg
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஆணைக் குழுவின் தூதுவர் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம,  ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் வெளிவிகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கொஹன ஆகியோரும் கலந்துகொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

பாகிஸ்தானில் பொலிஸ் பயிற்சிக்கல்லூரி மீது துப்பாக்கிச்சூடு – 11 பேர் உயிரிழப்பு 40 க்கும் மேற்பட்டோர் காயம்

pakistan_attack.jpg பாகிஸ்தானின் கிழக்குப் பகுதியில் லாகூர் நகருக்கு அண்மித்த பிரதேசத்திலுள்ள பொலிஸ் பயிற்சிக் கல்லூரி ஒன்றின் மீது இனம் தெரியாத ஆயுதம் ஏந்திய குழுவினர் மேற்கொண்ட தாக்குதலில் 11 பேர் உயிரிழந்ததுடன் 40 க்கும்  மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

இன்று காலை இடம்பெற்ற இந்தத் தாக்குதலின் போது துப்பாக்கிப் பிரயோகம் சுமார் மூன்று மணி நேரம் நீடித்ததாக பாகிஸ்தான் பாதுகாப்புப் பிரிவினர் தெரிவித்தனர். பயிற்சியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலரை துப்பாக்கி நபர்கள் பணயக் கைதிகளாக எடுத்துச்சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்திய எல்லைப்புரத்துக்கு அருகிலுள்ள இந்த மனாவான் பொலிஸ் பயிற்சி நிலையத்தை நோக்கி நாலா புரத்திலிருந்தும் அந்தக்குழுவினர் முதலில் கைக்குண்டுத்  தாக்குதல் நடத்திய பின்னரே துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். 

புலிகள் வசம் மற்றொரு விமானம் இருப்பதை விமானப்படை நிராகரிப்பு

விடுதலைப் புலிகள் வசம் மேலுமொரு இலகு ரக விமானம் இருப்பதாக வெளியான செய்திகளை விமானப் படையினர் நிராகரித்துள்ளனர்.  விடுதலைப்புலிகள் வசம் மற்றொரு விமானம் இருப்பது தொடர்பாக தங்களுக்கு தகவல் எதுவும் கிடைக்கவில்லையென விமானப் படை பேச்சாளர் விங்கொமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்துள்ளார்.

வன்னியில் புலிகளின் விமானமொன்று குடிசையொன்றில் நிறுத்தப்பட்டிருப்பதாக அங்கிருந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்த மக்கள் தெரிவிப்பதாகக் கூறி சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.  இந்த நிலையிலேயே விடுதலைப்புலிகள் வசம் மற்றொரு இலகு ரக விமானம் இருப்பதான செய்தியை விமானப் படையினர் மறுத்துள்ளனர்.

விமானப் படை பேச்சாளரின் தகவல்படி, கடந்த இரு வருடங்களில் புலிகளின் நான்கு விமானங்கள் படையினரால் அழிக்கப்பட்டுள்ளன. வடக்கில் தற்போது நடைபெறும் படை நடவடிக்கையின் போது புலிகளின் ஏழு விமான ஓடு பாதைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேநேரம், தற்போது புலிகள் வசமிருப்பதாகக் கூறப்படும் விமானமானது, அவசர தேவை ஏற்படும் போது புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் செல்வதற்காக பிரத்தியேகமாக வைக்கப்பட்டிருப்பதாகவும் சில சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் சமூகப் பிரதிநிதிகளுடன் அரசு பேச்சுவார்த்தை

வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் சமூகப் பிரதிநிதிகளோடு காத்திரமானதொரு பேச்சுவார்த்தையை இலங்கை அரசாங்கம் கடந்த சனிக்கிழமை ஆரம்பித்து வைத்ததாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்துக்கட்டும் இராணுவ நடவடிக்கைகளின் காரணமாகவும் புலிகளது பயங்கரவாத நடவடிக்கைளாலும் சிதைவடைந்துள்ள வடமாகாணத்தை மீள் கட்டமைப்பதற்கான பொருளாதாரத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கும் நாட்டிலுள்ள சமூகங்கள் மத்தியில் இன ஒருமைப்பாட்டை கட்டியெழுப்புவதற்கும் வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களது பங்களிப்பைப்  பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே இப்பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இலங்கை அரசாங்கத்துடனான இந்த முதலாவது கலந்துரையாடலில் ஐக்கிய இராச்சியம், கனடா, , அவுஸ்திரேலியா, நோர்வே, ஜேர்மனி, சுவிச்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் பங்குபற்றியுள்ளனர்.

இச்சந்திப்பின்போது வட மாகாணத்தின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் மக்களை அரசியல் ரீதியாக வலுப்படுத்தல் போன்ற அம்சங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. புலிகளது பலம் இலங்கையிலும் இலங்கைக்கு வெளியேயும் வலுவிழந்துபோயுள்ள நிலையில், நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக தமது பங்களிப்பை வழங்குவதற்கான சிறந்ததொரு சந்தர்ப்பமாக இதனை அவர்கள் கருதுகின்றார்கள்.

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற முதலாவது அமர்வுக்கு வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம அவர்கள் தலைமை தாங்கியதோடு விஞ்ஞான தொழிநுட்ப அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன,  அரசியல்யாப்பு விவகார அமைச்சர் டியூ குணசேக்கர ஜனாதிபதியின் சிரோஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் திரு.லலித் வீரதுங்கா,  வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கொஹனவும் கலந்து கொண்டனர். தமிழ் பிரதிநிதிகள் குழுவின் ஒருங்கிணைப்பாளராக அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த கலாநிதி நொயெல் நடேசன் பங்குபற்றினார் என அறிவிக்கப்பட்டுள்ளது

சாலை மோதலில் 26 கடற்புலிகள் பலி! தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம்

gunboat.jpgமுல்லைத்தீவு சாலையில் நேற்று கடற்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் கடற்புலித் தலைவர்களுள் ஒருவரான மாறன் உட்பட 26 புலிகள் கொல்லப்பட்டதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

சாலை கடற்பிரதேசத்தில் நேற்று இரவு புலிகளின் 4 படகுகளை அவதானித்த கடற்படையினர் அவற்றின் மீது தாக்குதல்களை மேற்கொண்டனர். இன்று காலை வரை தொடர்ந்த கடற்படையினரின் தாக்குதல்களால் புலிகளின் 4 படகுகளும் நிர்மூலமாக்கப்பட்டதாக ஊடக நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது. 

தந்தை செல்வாவின் 111 ஆவது பிறந்த தினம் நாளை வட,கிழக்கில் அஞ்சலி நிகழ்வுகள்

thanthai-selva.jpgதந்தை செல்வாவின் 111 ஆவது பிறந்த தினம் நாளை செவ்வாய்க்கிழமை வடக்கு, கிழக்கு பகுதிகளில் அனுஷ்டிக்கப்படுகிறது. வவுனியா மணிக்கூட்டுச் சந்தியிலுள்ள தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி நிகழ்வுகள் அமைதியான முறையில் நடைபெறவுள்ளன.

தந்தை செல்வா நூற்றாண்டு குழுவினர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். ஆலயங்களில் விஷேட பூஜைகளும் நடைபெற தமிழர் விடுதலைக் கூட்டணி வவுனியா மாவட்ட கிளை ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

இதேபோல, யாழ்ப்பாணத்திலும் தந்தை செல்வா உருவச்சிலை அருகில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

அகதிகளை ஏற்றிவந்த கப்பல் துப்பாக்கிச் சூட்டில் சிக்குண்டது

green-ocean.jpgமுல்லைத்தீவு மாவட்டத்தின் புதுமாத்தளன் பகுதிக்கு நோயாளர்களை ஏற்றச் சென்ற செஞ்சிலுவைச் சங்க கப்பல் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததில் செஞ்சிலுவைச் சங்கத்தின் வன்னிக்கான வதிவிட பிரதிநிதி உட்பட பணியாளர் இருவர் மயிரிழையில் உயிர் தப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தச் சம்பவத்தின் பின்னர் அக்கப்பல் மூலம் 512 பேர் புல்மோட்டைக்கு கொண்டுவரப்பட்டனர். இவ்வாறு கொண்டுவரப்பட்ட நோயாளாகளில் மூவர் மரணம் அடைந்துள்ளனர்.

மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டு மைதானம்

mahinda-in-gr.jpg* 156 ஏக்கர் நிலப்பரப்பு * றகர், உதைபந்தாட்ட மைதானத்தில் 3000 பேர் அமரும் வசதி * மெய்வல்லுனர் போட்டிகளை 10,000 பேர் கண்டுகளிக்கலாம் * முதற்கட்டப்பணி ஏப்ரலில் பூர்த்தி

ஹோமாகம, தியகம பகுதியில் 156 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டு மைதான நிர்மாணப் பணிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுக் காலை நேரில் சென்று பார்வையிட்டார்.

சூழலுக்கு ஏற்ற வகையில் மைதானத்தை நிர்மாணிக் குமாறும் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டு மைதானம் சகல வசதிகளுடனும் கூடியதாக அமைக்கப்பட்டு வருவதோடு இங்கு மெய் வல்லுநர் போட்டிகளுக்கான விளையாட்டுத் திடல், ரகர் மைதானம் உதைபந்தாட்ட மைதானம், நீச்சல் தடாகம், குறிபார்த்துச் சுடும் பிரிவு என்பனவும் நிர்மாணிக்கப் பட்டு வருகின்றன.

இது தவிர விளையாட்டு வீர வீராங்கணைகளுக்கான உடற் பயிற்சி நிலையமும் அமைக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் கூறியது. சூழலுக்கு உகந்த வகையில் இயற்கையான சூழலுடன் கூடியதாக இந்த நவீன விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டு வருவதோடு இங்கு தென்னை, இளநீர், மாங்காய், நாக மரம் என்பனவும் நடப்படவுள்ளன. இங்கு பசுமை வலயமொன்றை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரகர் மற்றும் உதைபந்தாட்ட மைதானங்களில் ஒரே நேரத்தில் 3 ஆயிரம் பேர் கண்காணிக்கக் கூடியவாறு பார்வையாளர் அரங்கும் நிர்மாணிக்கப்படும். இத்தோடு மெய்வல்லுநர் போட்டிகளை 10 ஆயிரம் பேர் கண்டு களிக்கக் கூடிய வசதிகளும் செய்யப்படவுள்ளன.

முதலாம் கட்ட நிர்மாணப் பணிகள் ஏப்ரல் மாதமளவில் பூர்த்தி செய்யப்படவுள்ளன. நிர்மாணப் பணிகளை இராணுவத்தின் 7ஆவது பொறியியல் சேவைப்படையணி முன்னெடுத்து வருகின்றது. இலங்கையில் சகல வசதிகளுடனும் கூடிய முதலாவது சர்வதேச விளையாட்டு மைதானம் இதுவாகும்.

ஜனாதிபதியுடன் ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளர் காமினி செனரத், விளையாட்டு அமைச்சின் செயலாளர் எஸ். லியனகம, கடற்படை உப லெப்டினன்ட் யோசித ராஜபக்ஷ ஆகியோரும் விளையாட்டு மைதானத்தை பார்வையிடச் சென்றனர். இதே வேளை பிலியந்தலை மடபாத பகுதியில் நிர்மாணிக்கப்படும் சர்வதேச பெளத்த மத்திய நிலையத்தையும் ஜனாதிபதி நேற்று (29) நேரில் சென்று பார்வையிட்டார்.

இடைத்தங்கல் முகாம்களில் அளவுக்கு அதிகமான மக்கள் தங்கியிருப்பதாக எகோ அமைப்பு தெரிவிப்பு

இலங்கையில் மோதல் இடம்பெறும் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து வரும் பொதுமக்களைத் தங்கவைக்க வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் முகாம்களில் அளவுக்கு அதிகமான மக்கள் தங்கியிருப்பதாக எகோ எனப்படும் ஐரோப்பிய ஆணையகத்தின் மனிதாபிமான உதவி அமைப்பு தெரிவித்துள்ளது.

சமீபத்தில் எகோ குழு வவுனியா முகாம்களுக்குச் சென்று பார்வையிட்டுத் திரும்பியுள்ளது. அந்த மக்களுக்கு எகோ சார்பில் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதுபற்றி புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய எகோ குழுவின் ஆசிய மற்றும் லத்தீன் அமெரிக்கப் பிரிவுத் தலைவர் எஸ்கோ கென்சின்ஸ்கி , “இலங்கையில் மனிதாபிமான நிலைமை கவலைப்படும் வகையில் இருப்பதாகவும், இதில் சர்வதேச நாடுகளின் பங்களிப்பு இன்னும் அதிகமாக இருக்க வேண்டும் “என்றும் தெரிவித்தார்.

சோதனைச் சாவடிகளில் பொதுமக்களைப் பரிசோதனை செய்யும் நடைமுறைகளில் சர்வதேச அமைப்புக்களையும் அனுமதிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளதாக பிபிசி தமிழோசை தெரிவித்துள்ளது.