செய்திகள்

செய்திகள்

செய்திகள்

நிவாரணக் கிராமங்களில் இன்னும் ஒரு இலட்சத்து 40 ஆயிரம் பேரே இருக்கின்றனர் – ஜனாதிபதி

0511mainpic.jpgநிவாரணக் கிராமங்களில் இன்னும் ஒரு இலட்சத்து 40 ஆயிரம் பேரே இருக்கின்றனர். இவர்களின் உயிர்களுக்கு நானே பொறுப்பு என்பதால் அப்பிரதேசங்களிலுள்ள கண்ணிவெடிகளை அகற்றிய பின்னரே குறிப்பிட்ட பிரதேசங்களில் மீள்குடியேற்ற முடியும் ஜனஹமுவ என்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜனாதிபதி ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

“இந்நாட்டை மக்கள் என்னிடம் கையளித்தபோது, நாடு இரண்டாகப் பிளவுபட்டிருந்தது. இதனை ஐக்கியப்படுத்துவது மக்களினது எதிர்பார்ப்பாகும். அந்த எதிர்பார்ப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது. புலிப் பயங்கரவாதிகளின் இராணுவக் கட்டமைப்புக்கள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன. எதிர்காலப் பரம்பரைக்கேற்ற வகையில் நாட்டை உருவாக்கியுள்ளோம். எமது நடவடிக்கைகள் தேர்தலை நோக்காகக் கொண்டதல்ல. மாறாக, நாட்டின் அபிவிருத்தியைக் குறியாகக் கொண்டது. கிழக்கின் உதயம் தோன்றியுள்ள அதேவேளை, வடக்கின் வசந்தம் தொடர்பிலான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எமது நாட்டின் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சி கண்டிருப்பதாக பல கதைகள் கூறப்பட்டன. முழு உலகிலுமே பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்ட போதிலும், எமது நாட்டின் சிறந்த முகாமைத்துவம் காரணமாக உலக சவால்களுக்குள் அகப்பட்டுக் கொள்ளாது செயற்பட முடிந்தது.

நான் பிரான்ஸில் இருந்தோ அல்லது இங்கிலாந்தில் இருந்தோ வரவில்லை. ஆகவே, எனக்கு இங்குள்ள நிலைமைகளை நன்கறிய முடியும். யுத்தத்தை வெற்றி கொள்ள முடியாது என்ற நிலையை மாற்றியமைத்து, அதனை நாம் முடிவுக்குக் கொண்டு வந்தோம். யுத்த காலத்தின் போது நாம் கிளிநொச்சியை நெருங்கிய சந்தர்ப்பத்தில், தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் இதுபோன்ற அழுத்தங்கள், நெருக்குதல்கள் எமக்கு வந்தன. இதனை எல்லோரும் நினைவில் கொள்ள வேண்டும். ஊழியர்கள் மட்டுமல்லாது, அனைவருமே தமது தாய்நாடு தொடர்பில் பொறுப்புடன் செயற்பட வேண்டியது அவசியமாகும்.

மே மாதம் 19ஆம் திகதி தான் யுத்தம் முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் சுமார் 3 லட்சம் வரையிலான மக்கள் எமது பிரதேசத்திற்கு வருகை தந்தனர். யுத்த காலத்தில் பெருமளவிலான மக்கள் இங்கு வருகை தரக் கூடும் என அறிந்திருந்தமையால், சுமார் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பேருக்கான தங்குமிட வசதிகளை ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால், ஒரேயடியாக 3 லட்சம் மக்கள் வருகை தந்தமையால் அவர்களுக்கான தேவைகளையும் நிறைவேற்ற வேண்டியதாயிற்று. அதனையும் நாம் செய்தோம்.

அரசாங்கத்தை நம்பி வந்த மக்களை அவர்களது பிரதேசங்களில் மீள்குடியேற்ற வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். அதனை இப்போது நாம் மேற்கொண்டு வருகிறோம். இற்றை வரையில் சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேரை மீளக்குடியமர்த்தியுள்ளோம். மீட்கப்பட்ட பிரதேசங்களில் கண்ணிவெடிகள் நிறைந்து காணப்படுகின்றன. எனவே, கண்ணிவெடிகளுக்குள் மக்களை தள்ளிவிட முடியாது. மீண்டும் ஒரு பயங்கரவாத நிலைமை உருவாவதற்கு இடமளிக்கவும் முடியாது. அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தி, தங்குமிட வசதிகள், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. உள்நாட்டின் அழுத்தம் காரணமாகவோ அல்லது சர்வதேச நெருக்குதல் காரணமாகவோ நாம் இதனை மேற்கொள்ளவில்லை” என்றார்.

துணுக்காய் பாடசாலைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம் – 2366 விவசாயிகளுக்கு இவ்வாரம் காணியும், உபகரணமும் வழங்க ஏற்பாடு

imalda.jpgமுல்லைத் தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச பாடசாலைகள் இன்று (09) முதல் மீண்டும் இயங்க உள்ளதாக முல்லைத்தீவு அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார். முதலில் யோகபுரம் மகா வித்தியாலயம் ஆயிரம் மாணவர்களுடனும் 16 ஆசிரியர்களுடனும் இன்று ஆரம்பமாகின்றது. துணுக்காயிலிருந்து இடம்பெயர்ந்த மக்களின் 50 வீதமானவர்கள் அங்கு மீள குடியேற்றப்பட்டுள்ளதாகவும் அரச அதிபர் தெரிவித்தார்.

அவர்களுக்கு 6 மாதங்களுக்குத் தேவையான உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட உள்ளதோடு, முதலில் இரு வாரங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இது தவிர சமையல் உபகரணங்கள், தற்காலிக வீடுகள் அமைக்கத் தேவையான பொருட்கள், விவசாயம் செய்யத் தேவையான உபகரணங்கள் என்பனவும் வழங்கப்படவுள்ளன.

பாடசாலைகளை ஆரம்பிக்கவும் மாணவர்களுக்குத் தேவையான பாடப் புத்தகங்கள், சீருடைகள் என்பன வழங்கவும் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பாடசாலைகளுக்கு மேலதிக ஆசிரியர்களை பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை துணுக்காயில் 2366 விவசாயிகள் உள்ளதாகவும் அவர்களுக்கு இரண்டு ஏக்கர் விவசாயக் காணியும் ஒரு ஏக்கர் மேட்டு நிலமும் வழங்கப்படவு ள்ளதோடு இந்த வாரம் முதல் விவசாயம் செய்யத் தேவையான உபகரணங்கள், பசளை, விதை நெல் என்பனவும் வழங்கப்பட உள்ளன.

பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள், லக்சதோச என்பனவும் இங்கு ஆரம்பிக்கப்பட உள்ளதோடு, சகல அரச நிறுவனங்களையும் மீண்டும் ஆரம்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச அதிபர் கூறினார்.

அரசுக்கு எதிரான சூழ்ச்சிகளை முறியடிக்கும் மறியல் போராட்டம் – கொழும்பில் நாளை நடாத்த ஏற்பாடு

அரசாங்கத்திற்கு எதிரான சதி, சூழ்ச்சிகளை முறியடிப்பதற்காக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலான மறியல் போராட்டம் நாளை 10ம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு கொழும்பு. புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக நடைபெறவுள்ளது.

சிரேஷ்ட தொழிற் சங்கத் தலைவரும், மேல் மாகாண ஆளுனருமான எஸ். அலவி, மெளலானா தலைமையில் நடைபெறவுள்ள இம்மறியல் போராட்டத்தில் அரசாங்க கூட்டுத்தாபனங்கள் திணைக்களங்கள், நியதிச் சபைகள், உள்ளிட்ட அரச, தனியார் நிறுவனங்களின் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திர தொழிலாளர் சங்கம், கூட்டுத் தொழிற்சங்க கமிட்டி உட்பட ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தொழிற்சங்கங்கள் இணைந்து இம்மறியல் போராட்டத்தை ஒழுங்கு செய்துள்ளன. இம்மறியல் போராட்டம் தொடர்பாக மேல் மாகாண ஆளுனர் அலவி மெளலானா குறிப்பிடுகையில், சுமார் முப்பது வருடகாலம் நாட்டுக்குப் பெரும் தலையிடியாக இருந்த பயங்கரவாதத்தை குறுகிய காலத்தில் ஒழித்துக்கட்டி நாட்டில் அமைதியையும், சமாதானத்தையும் ஏற்படுத்தியது எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே. இருந்தும் அற்ப அரசியல் பெறும் நோக்கில் சிலர் ஜனாதிபதிக்கும், அரசாங்கத்திற்கும் எதிரான சூழ்ச்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இச்சூழ்ச்சிகள் முறியடிக்கப்பட வேண்டும். இதன் முதற்கட்டமாகவே நாளை இந்த மறியல் போராட்டம் நடாத்தப்படுகின்றது.

ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்தும் நோக்கிலான இம்மறியல் போராட்டம் மாகாண மட்டத்திலும் நடாத்தப்படும் என்றார்.

இலங்கை தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்க முஸ்லிம் காங்கிரஸ் முயற்சி

slmcraufhakeem.jpgஇலங்கை யிலுள்ள தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஈடுப்பட்டுள்ளது என்று அதன் தலைவர் ரவூஃப் ஹக்கீம் BBC தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.

இந்தப் பேச்சுவார்த்தைகள் பல கட்டங்களில் நடைபெற்றதாகவும், இன்னும் ஒரு சுற்றுப் பேச்சுவார்த்தைக்கு பிறகு, சிறுபான்மை சமூகங்களின் சார்பில் குறைந்தபட்ச கொள்கை திட்டம் ஒன்றினை முன்வைத்து, அதற்கான அரசியல் நடவடிக்கைகளில் ஒன்று சேர்ந்து செயற்படுவது சம்பந்தமான ஒரு முடிவை எட்டலாம் என்கிற நம்பிக்கை தங்களுக்கு இருப்பதாகவும் அவர் மேலும் கூறுகிறார்.

தங்களால் வகுக்கப்படவுள்ள குறைந்தபட்ச செயற்திட்டத்தில் இடம்பெயர்ந்த மக்களின் அவசர மீள்குடியேற்றம், நாட்டின் பல பகுதிகளில் இருக்கும் தமிழ் பேசும் மக்களின் காணிகள் அபகரிப்பு சம்பந்தமான விடயங்கள் போன்றவை இடம்பெறும் என்றும் ரவூஃப் ஹக்கீம் கூறுகிறார்.

இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் சிறுபான்மை கட்சிகளுக்கு இடையே ஒருங்கிணைந்த செயற்பாட்டை உருவாக்குவதற்கான முயற்சியையும் உள்ளடக்கியும் அந்த குறைந்தபட்ச கொள்கை திட்டம் உருவாகும் எனவும் அவர் கூறுகிறார்.

இலங்கையில் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சியின் கூட்டணி சார்பில் யார் பொது வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்பது குறித்து இன்னமும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் ரவூஃப் ஹக்கீம் கருத்து வெளியிட்டார்.

ஏ(எச்1என்1): இலங்கையில் முதல் மரணம்:

இலங்கையில் முதல் தடவையாக ஏ(எச்1என்1) இன்புளுவன்சா நோய்த்தாக்கத்திற்கு கண்டியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் பலியாகியுள்ளார். வைத்தியத் தம்பதியினரின் மகனான மேற்படி பாடசாலை மாணவன் கடந்த புதன்கிழமை இரவு கண்டி போதனா வைத்தியாலையில் உயிரிழந்துள்ளார்.

பொதுமக்கள் இதுகுறித்து கவலையடையத் தேவையில்லையெனவும் உயிரிழந்தவர் ஏற்கனவே முள்ளந்தண்டு மற்றும் நுரையீரல் பிரச்சினையினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவரை ஏ(எச்1என்1) இன்புளுவன்சா வைரஸ் தாக்கியிருக்கின்றது என வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குருநாகல் மாவட்டத்தில் ஏ(எச்1என்1) இன்புளுவன்சா வைரசினால் பாடசாலை மாணவர்கள் இருவர் பாதிக்கப்பட்டமை ஊர்ஜிதம் செய்யப்பட்டதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை முதல் மூடப்பட்ட அம்மாவட்டத்தின் நகரப் பாடசாலைகள் அனைத்தும் இன்று மீள திறக்கப்படுவதாக கல்வியமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார். வைரஸ் தாக்கத்துக்கு உள்ளான மாணவர்கள் இருவரும் குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் இன்று இலங்கை வருகை – ஜனாதிபதி, போகொல்லாகமவுடன் சந்திப்பு

அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஸ்ரீபன் ஸ்மீத் மற்றும் பிரதமரின் விசேட தூதுவர் ஜோன் மெகார்த்தி ஆகியோர் இன்று இலங்கைக்கு வருகைதரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் அடங்களான குழு இன்று ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம ஆகியோரை சந்திக்க உள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது. சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் குறித்து இந்த சந்திப்பின் போது முக்கியமாக ஆராயப்படவுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. ஒரு நாள் விஜயத்தை மேற்கொண்டே இக்குழு இலங்கை வருகின்றது.

கியூபா நாட்டு பிரதி வெளிவிவகார அமைச்சர் இன்று இலங்கை வருகை – மியன்மார் ஜனாதிபதி 12 இல் விஜயம்

கியூபா பிரதி வெளிவிவகார அமைச்சர் மார்கொஸ் ரொட்ரிகஸ் கொஸ்டா இன்று (9ம் திகதி) இலங்கை வருகிறார்.

இலங்கைக்கும் கியூபாவுக்குமிடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 60 வருட பூர்த்தியை சிறப்பிக்கும் முகமாகவே அந்நாட்டின் பிரதி வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகிறார்.

இதேவேளை இலங்கை – கியூபா 60 வருட இராஜதந்திர உறவுகளை முன்னிட்டு வெளிவிவகார அமைச்சில் இன்று முத்திரையொன்றும் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.

இதேவேளை நாளை மறுதினம் புதன்கிழமை தென்னாபிரிக்காவின் வெளிவிவகார அமைச்சரும் வியாழக்கிழமை மியன்மார் ஜனாதிபதியும் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

மீள் குடியேற்றம் – வன்னியில் முதல் பாடசாலை இன்று ஆரம்பம்

north-governor.jpgநிவாரணக் கிராமங்களிலிருந்து மீள் குடியேற்றப்படும் மாணவர்களுக்கான முதல் பாடசாலை இன்று துணுக்காய் கல்வி வலயத்தில் வடமாகாண ஆளுனரினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

துணுக்காய் கல்வி வலயத்தில் ஆளுனரினால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்ட பாடசாலை யோகபுரம் ம.வி ஆகும்.  இன்றைய தினம் சுமார் 100 மாணவர்கள் பாடசாலைக்குச் சமுகமளித்திருந்ததாக தேசம் நெற்றுக்கு தகவல் கிடைத்துள்ளது. 

ஏ-9 வீதியூடாக இதுவரை 61,754 பேர் பயணம்: யாழ்.அரச அதிபர்

gaganesh.jpgகடந்த ஜூலை மாதம் 22 ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் 30ஆம் திகதி வரையிலான காலப் பகுதியில் இவர்கள் ஏ-9 வீதியூடாக 1658 பஸ்களில் பிறமாவட்டங்களுக்கு சென்றுள்ளனர். கண்டி- யாழ் ஏ-9 வீதி மீண்டும் மக்கள் பாவனைக்கு திறக்கப்பட்ட பின்னர் 61 ஆயிரத்து 754 பேர் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு பயணம் செய்துள்ளதாக யாழ் மாவட்ட அரச அதிபர் கே. கணேஷ் தெரிவித்துள்ளார்

அவுஸ்திரேலிய உயர்மட்ட குழு இலங்கை வருகை

14indonesia.jpgஅவுஸ்தி ரேலியாவுக்குள் சட்ட விரோதமாக நுழையும் இலங்கையர் விவகாரம் தொடர்பாக ஆராய்வதற்கென அவுஸ்திரேலிய உயர்மட்டக்குழுவொன்று இலங்கை வந்துள்ளது.

இந்தக் குழு, அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதோடு இலங்கைக் குடிவரவு- குடியகல்வுத் திணைக்களத்தின் பிரதான கட்டுப்பாட்டாளரையும் சந்தித்துப் பேசவுள்ளது.

குடிவரவு- குடியகல்வு திணைக்களத்தின் பிரதான கட்டுப்பாட்டாளர் பீ. பி. அபேகோன் இதனைத் தெரிவித்தார்.சட்டவிரோதமான முறையில் இலங்கையர் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைவதாக அந்நாடு பெரும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. பயிற்றப்பட்ட தகுதிவாய்ந்த தொழில்சார் இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவில் தொழில் வாய்ப்பைப்பெற்றுச் சென்றுள்ளனர்.

சட்டவிரோதமாகச் செல்லும்போது பயிற்றப்படாத, அவுஸ்திரேலியாவுக்குள் எதிர்பார்க்கப்படுகின்ற நபர்கள் இல்லாதிருப்பதும் குறையாகக் காணப்படுவதாகவும் இதனை எவ்வாறு தடுக்கலாம் என்பதுபற்றி ஆராய்வதற்கும், அவுஸ்திரேலியாவிலிருந்து விசேட குழுவினர் இலங்கை வந்துள்ளனர்.

அண்மையில் அவுஸ்திரேலியா சென்றிருந்த குடிவரவு- குடியகல்வுத் திணைக்களத்தின் பிரதான கட்டுப் பாட்டாளர் பீ. பி. அபேகோன் அவுஸ்திரேலிய குடிவரவு- குடியகல்வு முக்கியஸ்தர்களையும் சந்தித்து உரையாடியுள்ளார்.