செய்திகள்

Sunday, January 23, 2022

செய்திகள்

செய்திகள்

ஐ.தே.க.வுக்கு எதிரான பிரசாரங்களை அரச ஊடகங்கள் நிறுத்தவேண்டும்- கருஜயசூரியா

karu_jayasuriya.jpgஅரச அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக மேற்கொள்ளும் பிரசாரத்தை நிறுத்த வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் உபதலைவரும் எம்.பி.யுமான கருஜயசூரியா வலியுறுத்தியுள்ளார். கம்பளை நகரில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்யின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு வலியுறுத்திய இவர் மேலும் கூறியதாவது;

ஐக்கிய தேசியக்கட்சி நாட்டை துண்டாட ஒரு போதும் துணைபோகாது. இலங்கையின் 61 ஆவது சுதந்திர தினத்தை சுதந்திரமாகக் கொண்டாடும் வாய்ப்பு ஏற்பட்டது. இதற்குப் பின்னணியில் இராணுவத்தினரும் பொலிஸாரும் பெரும் தியாகங்களைப் புரிந்துள்ளனர். தேர்தல் ஜனநாயகத்தின் பிரதான அடையாளம். மக்கள் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் வாக்களிப்பர். மக்களில் 51 சதவீதமானோர் ஆளும் கட்சிக்கு வாக்களிக்கும் போது அம்மக்களை மட்டுமன்றி, எஞ்சிய 49 சதவீத மக்களின் நலனிலும் அரசு அக்கறை செலுத்தவேண்டும்.

நாட்டில் இனிமேல் தேர்தல்கள் அவசியமில்லை. தலைவர்கள் தேவையில்லை என்று சில அரசியல்வாதிகள் அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்தனர். ஜனநாயக நாட்டில் எவரும் கருத்துகளைத் தெரிவிக்க முடியும். எனினும் மேற்படி கருத்து வேதனையளிக்கின்றது. நாடு 99 சதவீதம் பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. எஞ்சிய பகுதியும் மீட்கப்படவேண்டும். நாடு யுத்தத்தில் பல உயிரிழப்புகளைக் கண்டுள்ளது. ஐக்கியதேசியக்கட்சிக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பிரசாரத்திற்கு பதிலளிக்கும் வாய்ப்புகளை அரசு ஊடகங்கள் வழங்க வேண்டும். தேர்தல் நியாயமான முறையில் நடத்தப்படவும் அரசதுறைக்கு தகுதியானவர்கள் நியமனம் பெறவும் அரசியலமைப்பு சட்டத்தின் 17 ஆம் பிரிவு அமுல் செய்யப்படவேண்டும்.

புலிகள் கிழக்கிற்கு ஊடுருவுவதாக புலனாய்வுத் தகவல் பாரிய தேடுதலுக்கு படையினர், பொலிஸார் திட்டம்

ranjith-gunasekara.jpgகிழக்கு மாகாணத்தில் பாரிய தேடுதல்களை மேற்கொள்ள படையினரும் பொலிஸாரும் திட்டமிட்டுள்ளதாக பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வன்னியில் நடைபெற்றுவரும் பாரிய படை நடவடிக்கைகளிலிருந்து தப்பி விடுதலைப்புலிகள் கிழக்கு மாகாணத்திற்குள் ஊடுருவி வருவதாக புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளதையடுத்தே கிழக்கில் பாரிய தேடுதல்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

வன்னியிலிருந்து கிழக்கு மாகாணத்திற்குள் ஊடுருவியுள்ள புலிகள் கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் மறைந்திருப்பதாகவும் இதுவரை 60 இற்கும் மேற்பட்டோர் கிழக்கிற்குள் ஊடுருவியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு ஊடுருவியவர்களைக் கண்டுபிடிக்கவே மிக விரைவில் கிழக்கில் பாரிய தேடுதல்களை படையினரும் பொலிஸாரும் மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறினார்.

இதேவேளை, கிழக்கில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிர மடைந்துள்ளன. கிழக்கின் எல்லைப் புறப் பகுதிகளில் படையினரின் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் படைத்தரப்பு தெரிவிக்கின்றது. வீதிச் சோதனைகள், சுற்றிவளைப்புகள், தேடுதல்கள் அதிகரிக்கப்பட்டுமுள்ளது.

சிறுபான்மையினருக்கு எதிராக அநியாயங்களை கட்டவிழ்த்துள்ள அரசை நீடிக்க விடமாட்டோம் – ரவூப் ஹக்கீம்

rauf_hakeem.jpgசிறு பான்மை மக்களுக்கெதிராக அநியாயங்களைக் கட்டவிழ்த்து விட்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அரசை நீடிக்க விட மாட்டோம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் சூளுரைத்தார்.

மத்திய மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு நியு எல்பிடியவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; சிறுபான்மை சமூகங்கள் நிம்மதியாக வாழும் ஆட்சியொன்றை ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்தே ஏற்படுத்த முடியும். தமிழ், முஸ்லிம் மக்களுக்கு அநியாயம் புரியும் ஆட்சியைத் தொடர விடமாட்டோம். நாட்டின் பொருளாதாரம் பெரும் பின்னடைவு கண்டுள்ளது. நாட்டில் இரு வாரங்களுக்கான இறக்குமதியை மேற்கொள்வதற்கான வெளிநாட்டுச் சொத்துகள் மட்டுமேயுள்ளன.

நாடு 61 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் சந்தர்ப்பத்தில் சிறுபான்மை சமூகங்கள் அச்சம், பீதியுடன் வாழ்கின்றனர். நாட்டில் தேசப்பற்று என்பது அரசியல்வாதிகளின் மலிவான விற்பனைப் பொருளாகியுள்ளது. இதனை மூலதனமாக வைத்து அரசியல் புரியும் நிலை தோன்றியுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவம் அச்சமின்றி சிறுபான்மை மக்களுக்காகப் பேசுகின்றது. இதற்குக் காரணம் இத் தலைமைத்துவம் ஓர் இயக்கத்தின் தலைமைத்துவமாக இருப்பதாகும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதித்துவம் மாகாண சபைத் தேர்தலில் உறுதிப்படுத்தப்பட வேண்டும். எந்தக் கட்சியும் முஸ்லிம் காங்கிரஸை பலவீனப்படுத்த இடமளிக்க மாட்டோம

ஐ.சி.ஆர்.சி.யின் குற்றச்சாட்டுகள் நிராகரிப்பு பொறுப்புணர்வுடன் செயற்படுமாறும் அரசு அறிவுறுத்து

red-cr.jpgவன்னியில் மோதல்கள் நடைபெறும் பகுதியிலுள்ள பொதுமக்கள் மற்றும் நோயாளர்களது வசதிகள் தொடர்பாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ஐ.சி.ஆர்.சி.) இலங்கை அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாக சுகாதார பராமரிப்பு மற்றும் போஷணை அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சுகாதார அமைச்சினால், இலங்கைக்கான சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் போல் காஸ்ற்றெல்லாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சின் செயலாளர் டாக்டர் எச்.எ.பி.கஹந்தா லியனகேயினால் அனுப்பப்பட்டுள்ள அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

வன்னியில் விடுதலைப் புலிகளுக்கும் படையினருக்கும் இடையில் நடைபெறும் மோதல்களினால் இன்னல்களுக்குள்ளான மக்களினதும் நோயாளர்களதும் மருத்துவ மற்றும் ஏனைய அடிப்படைத் தேவைகள் தொடர்பாக ஐ.சி.ஆர்.சி.இலங்கை அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. மோதல்களினால் பொதுமக்களும் நோயாளர்களும் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் ஏனைய வசதிகள் அரசினால் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஆனால், மருத்துவம், சுகாதாரம், பாதுகாப்பு, நலன்புரி ஆகிய வசதிகளுடன் ஏனைய அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டுள்ள அரச பாதுகாப்புப் பகுதிக்குள் மக்களும் நோயாளர்களும் வருவதற்கு விடுதலைப்புலிகள் தடைவிதித்துவருகின்றனர்.

இந்நிலையில் இது தொடர்பாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் சரியான அறிக்கை ஒன்றினை வெளியிடவேண்டும். வன்னிப் பகுதியிலிருந்து மோதல்களால் பாதிக்கப்பட்டு வவுனியாவரும் மக்களுக்கும் நோயாளர்களுக்குமுரிய சகல வசதிகளும் மருத்துவர் குழாமும் எதுவித கட்டுப்பாடுமின்றி வழங்கப்பட்டுள்ளது. அரசினால் வழங்கப்பட்டுள்ள இச்சேவைகள், வசதிகள் அனைத்தையும் பெற்றுக் கொள்ளும் வகையில் மக்களையும் நோயாளர்களையும் மருத்துவ உத்தியோகத்தர்களையும் வவுனியாவுக்கு கொண்டுவருவதற்கு ஐ.சி.ஆர்.சி.அரசுக்கு உதவவேண்டும். மக்களையும் நோயாளர்களையும் ஏனைய மருத்துவ அதிகாரிகளையும் அரசினால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயத்துக்கோ அல்லது வவுனியாவுக்கோ செல்லுமாறு அரசு அறிவித்திருந்ததுடன் அதற்கு உதவுமாறும் ஐ.சி.ஆர்.சி.யிடம் கேட்கப்பட்டிருந்தது. ஆனால், பாதுகாப்பு பிரதேசமென அரசினால் அறிவிக்கப்பட்ட பகுதிகளுக்கு அப்பால் வெகுதொலைவிலுள்ள பகுதியென புதுமாத்தளன் பகுதிக்குச் செல்வதற்கு ஐ.சி.ஆர்.சி. தாமாகவே தீர்மானித்துச் செல்ல வேண்டும்.

பாதுகாப்பு, மருத்துவம், நலன்புரி போன்ற தேவைகளை எதிர்பார்த்து நாளாந்தம் ஆயிரக்கணக்கான மக்கள் கிளிநொச்சிக்கோ அல்லது வவுனியாவுக்கோ வருகை தந்தவண்ணம் உள்ளனர். புதுக்குடியிருப்பிலிருந்து மக்களும் நோயாளர்களும் மருத்துவ அதிகாரிகளும் பாதுகாப்பான இடத்திற்கு செல்வதற்கு அரசினால் ஒழுங்கு செய்யப்பட்ட பாதுகாப்பான வழிமுறைகள் தொடர்பாகவும் ஐ.சி.ஆர்.சி.தனியாகவே செயற்பட்டுள்ளது. இவ்விடயத்தில் முழுப் பொறுப்புடனும் ஐ.சி.ஆர்.சி.யே செயற்பட்டிருக்க வேண்டும்.

இது தொடர்பாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அரசுடன் முரண்பாடுகளை தோற்றுவிக்காமல் இணக்கப்பாடொன்றினை ஏற்படுத்திக்கொள்வதன் மூலம் மோதல்கள் நடைபெறும் பகுதியில் உள்ளவர்களை பாதுகாப்பான பகுதிக்கு அழைத்து வரச் செயற்பட்டால் வரவேற்கத்தக்க விடயமாகுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவுடன் ஆக்கபூர்வமானதொரு உறவை தொடர விரும்புவதாக ஹிலாரி தெரிவிப்பு

world-news.jpgரஷ்யா வுடன் ஆக்கபூர்வமானதொரு உறவைத் தொடர விரும்புவதாக அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளிங்டன் தெரிவித்துள்ளார். ஈரானின் அணு நிகழ்ச்சித் திட்டம் போன்ற விவகாரங்களில் மொஸ்கோவின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக ஹிலாரி குறிப்பிட்டுள்ளார். ஆனால், ஈரானின் முதலாவது அணுசக்தி ஆலையை 2009 இற்குள் அமைக்கும் நடவடிக்கைகளைத் தான் ஆரம்பிக்கப் போவதாக ரஷ்யா அறிவித்துள்ளமை குறித்து ஹிலாரி எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

இதே வெளியுறவு அமைச்சராக ஹிலாரியின் முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் ஆசியாவுக்கானதாக இருக்குமெனத் தெரிவித்துள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களம் ஜப்பான், இந்தோனேசியா, தென்கொரியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு அவர் விஜயம் மேற்கொள்வாரெனத் தெரிவித்துள்ளது. மத்திய ஐரோப்பாவில் ஏவுகணைப் பாதுகாப்புக் கவசத்தை அமைக்கும் அமெரிக்காவின் திட்டம் மற்றும் ஜோர்ஜியா மீதான ரஷ்யாவின் படை நடவடிக்கை போன்ற விவகாரங்கள் தொடர்பில் அண்மைய வருடங்களாக அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்குமிடையிலான உறவு விரிசலடைந்திருந்தது.

பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் குச்னருடனான சந்திப்பைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ஹலாரி; ஈரானின் அணுவாயுத விவகாரம் தொடர்பில் எமது பரஸ்பர அக்கறையின் அடிப்படையில் சர்வதேச சமூகத்துடன் ஒரு சிறந்த இராஜதந்திர அணுகுமுறையை நாம் கடைப்பிடிக்கிறோம். இதனால் ரஷ்யாவுடன் ஆக்கபூர்வமான உறவினைத் தொடர விரும்புவதன் மூலம் இவ் விடயத்தில் ரஷ்யாவையும் ஒரு கூட்டாளியாக இணைக்க விரும்புகிறோம் எனத் தெரிவித்துள்ளார். இதேவேளை எதிர்வரும் 15 ஆம் திகதியளவில் ஆசியாவுக்கான தனது முதலாவது சுற்றுப்பயணத்தை ஹிலாரிஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடமேல், மத்திய மாகாணங்களில் 79 வன்முறைச் சம்பவங்கள் பதிவு

election_.jpgவடமேல் மற்றும் மத்திய மாகாண சபைத்தேர்தலுடன் தொடர்புடைய வன்முறைச் சம்பவங்கள் 79 இடம் பெற்றுள்ளதாக நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது.  இதில் மத்திய மாகாணத்திலேயே அதிகளவாக 52 சம்பவங்கள் பதியப்பட்டுள்ளதுடன், வடமேல் மாகாணத்தில் 27 சம்பவங்கள் இடம் பெற்றுள்ளதாக அவ் இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்; இரு மாகாணங்களின் கீழ் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் 49 பாரிய தாக்குதல் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. வடமேல் மாகாணத்தில் 17 சம்பவங்களும் மத்திய மாகாணத்தில் 32 சம்பவங்களும் இந்தப் பாரிய தாக்குதல் சம்பவத்தில் அடங்குகின்றன. மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் முறையே 11 சம்பவங்களும் கண்டியில் 10 ம் குருநாகல் மற்றும் புத்தளம் மாவட்டத்தில் 8 ம் 9 ம் இடம் பெற்றுள்ளன.

அச்சுறுத்தல் தொடர்பில் 9 முறைப்பாடுகள் எமக்கு கிடைக்கப் பெற்றுள்ளன. இதில் அதிகளவான சம்பவங்களாக கண்டி மாவட்டத்தில் நான்கு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. நுவரெலியா மற்றும் குருநாகல் மாவட்டத்தில் இதற்கு அடுத்த படியாக முறையே இரு சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. இதேவேளை, அரச வளங்கள் துஷ்பிரயோகம் தொடர்பில் 9 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதேபோல் தேர்தல் சட்ட விதிகளை மீறிய சம்பவங்கள் 12 ஐயும் பதிவு செய்துள்ளோம். ஒட்டு மொத்தத்தில் பார்த்தால் கண்டி மாவட்டத்திலே அதிகூடிய சம்பவமாக 23 சம்பவங்கள் இடம் பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதி மிகவும் தெளிவாக உள்ளார் – டக்ளஸ் தேவானந்தா

விடுதலைப்புலிகளின் பிரச்சினை வேறு, தமிழ் மக்களின் பிரச்சினை வேறு என்பதை நான் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்துள்ளேன். ஏற்கனவே எமது நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் இருந்த அரசியல் தலைமைகள் இவ்விரு பிரச்சினைகளையும் வெவ்வேறாக்கிப் பார்ப்பதற்கு தவறிவிட்டன என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ புலிகளின் பிரச்சினையை வேறாகவும் தமிழ் மக்களது பிரச்சினையை வேறாகவும் பார்த்து வருவதால் தமிழ் மக்கள் தொடர்பில் அவர் மிகவும் தெளிவாக உள்ளார். எனவே எமது மக்களது எதிர்காலம் குறித்து எவ்வித தயக்கமும் இருக்கத் தேவையில்லை என்று சமூக சேவைகள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சரும் வடமாகாணத்திற்கான விசேட செயலணியின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டிருக்கும் மக்களை ஞாயிற்றுக்கிழமை சென்று சந்தித்தபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்ததாக அமைச்சின் செய்திக் குறிப்பு தெரிவிக்கின்றது.

தொடர்ந்து அங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா; இந்த மக்கள் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் தங்க வைக்கப்பட்டிருப்பது தற்காலிக ஏற்பாடாகும். விரைவில் இந்நிலைமையில் மாற்றங்கள் ஏற்படும். இம்மக்களின் அபிவிருத்தி மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்காக ஜனாதிபதி நாலாயிரம் மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளார். எனவே தற்காலிகமாக இங்கு தங்கியுள்ள மக்களின் நலன்களுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கூடிய விரைவில் இம்மக்களை அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மேலும் இம்மக்களுக்குகென கூட்டுறவு சங்கக்கடை ஒன்றை திறப்பதற்கும் உறவினர்கள் அவர்களை சந்திப்பதற்கும் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்போருக்கு கற்கைகளுக்கான வசதிகளை செய்து கொடுப்பதற்கும் அரச பணிபுரிபவர்கள் தங்களது பணிகளை மேற்கொள்வதற்கும் மக்களுக்கான தொலைபேசி வசதிகளை செய்து கொடுப்பதற்கும் விளையாட்டு மைதான வசதிகளை விஸ்தரித்துக் கொடுப்பதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இடம்பெயர்ந்த நிலையில் யாழ். மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள குடும்ப உறுப்பினர்களை ஒன்று சேர்த்து ஒரே இடத்தில் தங்கவைப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததுடன் சொந்த இடங்களில் குடியமர்த்தப்படும் வரை நம்பிக்கையுடனும் மனமகிழ்ச்சியுடனும் இருக்கும்படியும் இம்மக்களைக் கேட்டுக்கொண்டார

ஓர் இனத்தை அழித்துவிட்டு இன்னொரு இனம் நிம்மதியாக வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை – அமைச்சர் ஜயரட்ன தெரிவிப்பு

election_.jpgஅரசாங்கம் பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து நாட்டை மீட்க யுத்தத்தை முன்னெடுக்கின்றதே தவிர, தமிழ் மக்களை அழிப்பதற்கல்ல என்று பெருந்தோட்ட கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டி.எம்.ஜயரட்ன குறிப்பிட்டார். கம்பளை, தெல்பிடியில் நடைபெற்ற மாகாண சபைத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

ஓர் இனத்தை அழித்து விட்டு மற்றுமோர் இனம் நிம்மதியுடன் வாழ்ந்ததாக சரித்திரத்தில் கிடையாது. அரசு தமிழ் மக்களுக்கு எதிராக யுத்தம் புரியவில்லை. நாட்டைப் பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து காப்பாற்றவே யுத்தம் செய்கின்றது. மாகாண சபைத் தேர்தலில் சிறுபான்மை மக்கள் வழங்கும் ஆதரவு அரசின் சக்தியை உள்நாட்டில் மட்டுமன்றி சர்வதேசத்திலும் பலப்படுத்தும். எனவே சிறுபான்மை மக்கள் அரசை பலப்படுத்த முன்வர வேண்டும்.  இலங்கை சகல இன மக்களும் வாழும் நாடாகும். எனவே சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற பேதம் இன்றி இந்நாடு சகல இனங்களுக்கும் சொந்தமானதாகும்.

அழகாக பேசவும், மக்களை தூண்டிவிடவும் ஜே.வி.பி.யினரால் மாத்திரமே முடியும்- சமல் ராஜபக்ஷ

எமது நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்து அறுபது வருடங்கள் கடந்துவிட்டபோதிலும் பயங்கரவாதிகளுடன் யுத்தம் செய்தல் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடல் மற்றும் “நாட்டைக்காட்டிக்கொடுக்கும் கைங்கரியங்களில் ஈடுபடுதல் போன்ற காரணங்களுக்காக முப்பது வருடங்கள் கழிந்துவிட்டன’என்று நீர்ப்பாசனம், துறைமுகம் மற்றும் விமான தேவைகள் அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார். நாவுலவேமெடில்ல குளத்தின் நீர்ப்பாசன திட்ட அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்ததாவது;

பயங்கரவாதிகள் மாவில் ஆற்று நீரை மூடிக் கொண்டிருந்ததுபோல இந்த வேமெடில்ல குளத்து நீரை விவசாயிகளுக்குத் திறந்து விடாமல் மூடிக்கொண்டிருக்க அனுமதிக்க முடியாது. இக்குளத்தின் நிர்மாணப் பணிகள் 2001 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது முதல் தமது நிலங்கள், வீடு வாசல்களை இழந்த வேவெல தம்புள்ள மற்றும் நாவுல பிரதேச செயலகப்பிரிவுகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கு மாற்று நிலங்களும், இழப்பீடுகளும் வழங்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள 225 குடும்பங்களுக்கும் 582 காணித்துண்டுகள் விரைவில் வழங்குவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளன.மதிப்பீட்டுத் திணைக்களப்பிரிவில் ஏறுபட்டுள்ள கால தாமதத்தினால் உரிய நேரத்தில் காணிகளையோ இழப்பீட்டுத் தொகைகளையோ வழங்க முடியாமல் போயுள்ளது.

எவருக்கும் எவ்வித குற்றங் குறைகளை செய்வதற்கோ, தீங்குகள் செய்வதற்கோ மகிந்த ராஜபக்ஷ ஒருபோதும் ஆயத்தமில்லை. அதனால்தான் அவர் பதவிக்கு வந்ததும் தன்மீதுதாக்குதல்களை மேற்கொண்ட தமது கடமைகளுக்கு செய்தவர்களையும் அனைத்துக் குழுக்களையும் இடையூறு ஒன்றிணைத்து புதிய ஸ்ரீலங்காவை கட்டயெழுப்புவதற்கு ரணில் விக்கிரமசிங்கஹ உள்ளிட்ட அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.கட்டியெழுப்பும் பணியில் இணைத்துக் கொள்வதில் ஜனாதிபதி வெற்றி பெற்றுள்ளார். ஏனைய கட்சிகள் இன்று பிளவுபட்டு சிதைந்துபோயுள்ளன. வேமெடில்ல நீர்த்தேக்கத்திற்கு இன்று முதல் “ரீ.பீ,தென்னக்கோன் குளம்’ எனப் பெயரிடப்படுகிறது.

காலஞ்சென்ற ரீ.பீ.தென்னக்கோன் தம்புள்ள தொகுதி மக்களுக்கு செய்த தேவையை நினைவு கூரும் முகமாக இப்பெயரில் இக்குளம் இன்று முதல் அழைக்கப்படும். இக்குளத்து நீரின் மூலம் 6650 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் என்பதில் நாம் பெருமை அடைகிறோம். பயங்கரவாதிகளிடமிருந்து எமது நாட்டை இன்னும் சில தினங்களில் மீட்டுக்கொள்வோம். கிழக்கை நாம் விடுவித்த கையோடு ஒலுவில் பிரதேசத்தில் துறைமுகமொன்றை அமைக்கும் பணிகளை ஆரம்பித்தோம். கொழும்புத் துறைமுகத்தை விரிவுபடுத்துவது தொடர்பாக வருடக்கணக்கில் பேச்சுவார்த்தைகளை அப்போது அதிகாரத்திலிருந்தவர்கள் நடத்தினார்கள். வருடாந்தம் திட்டங்களை வகுத்தனர். செயல்வடிவம் பெறவில்லை. ஆனால், ஜனாதிபதியின் ஆலோசனையின்பேரில் கொழும்புத் துறைமுகத்தை விரிவு படுத்தும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யுத்தம் செய்வதுடன் அபிவிருத்திப் பணிகளையும் அரசாங்கம் முன்னெடுத்துச்செல்கிறது என்பதை நீங்கள் இதன்மூலம் அறிந்துகொள்ளலாம். பிரபாகரனால் நிர்மாணிக்கப்பட்ட விமான ஓடுபாதைகளில் எமது விமானங்கள் தரித்து நிற்கும் நாள் வெகு தொலைவிலில்லை’ என்று கூறினார்

மூவின மக்களும் சுதந்திரமாக வாழவேண்டுமானால் ஐக்கிய தேசியக் கட்சியே ஆட்சிக்கு வரவேண்டும் – ரணில் விக்கிரமசிங்க

இந் நாட்டில் இன,மத,பேதமில்லாமல் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாகவும் சுதந்திரமாகவும் வாழவேண்டுமானால், ஐக்கிய தேசியக் கட்சியே ஆட்சிக்கு வரவேண்டும். இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஞாயிற்றுக்கிழமை நுவரெலியா நகரில் நடைபெற்ற ஐ.தே.கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்; நாட்டு மக்களையும் நாட்டையும் பாதுகாப்பது ஜனாதிபதியின் கடமையாகும். மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக உள்ள இந்த மூன்று வருடகாலத்தில் அவர் மக்களுக்கு என்ன செய்துள்ளார்? 48 ஆயிரம் பேருக்கு ஒருவேளை உணவு வழங்குவதாக கூறுகிறார். தற்பொழுது யுத்தம் நிறைவு பெற்றுவருவதால் மூன்று வேளையும் அவர் உணவை வழங்கவேண்டும். நாடு அபிவிருத்தியடைந்துள்ளதென்று மேடைகளில் கூறி வருகிறார்கள். ஆனால், இந்நாட்டில் மக்கள் நிம்மதியாக வாழ முடியாத சூழ்நிலை மாத்திரம்தான் அபிவிருத்தியடைந்திருக்கின்றது.

இந்த அரசாங்கம் யுத்தத்தைக் காரணம் காட்டி தங்களது இயலாமையை மறைத்து வருகின்றது. யுத்தத்தில் வெற்றி பெற்றுவிட்டதாகவும் யுத்தம் நிறைவடைந்து விட்டதாகவும் கூறிவருகின்றனர். அப்படியானால் மக்களுக்கு உரிய நிவாரணத்தை அரசாங்கம் வழங்க வேண்டும். யுத்தம் முடிந்துவிட்டது என்று கூறிய அரசாங்கம் இப்போது மக்களிடம் சிக்கிக் கொண்டிருக்கின்றது.

இந்த நாட்டில் நாளுக்கு நாள் மக்களின் வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்துச் செல்கின்றன. இதைப்பற்றிப் பேசினால், யுத்தம் நிறைவு பெறும்வரை பொறுத்திருக்கும்படி கூறுகின்றனர். அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகரிக்கும்படி கேட்டால் யுத்தம் முடியும்வரை வயிற்றை இறுக்கி கட்டிவைத்திருக்கும்படி கூறுகின்றனர். ஆனால் அமைச்சர்களுக்கு மாத்திரம் ஒரு இலட்சம் ரூபாவால் சம்பளத்தை அதிகரித்துள்ளனர். வீட்டு வாடகை என்று கூறி ஒரு மாதத்திற்கு ஒரு இலட்சம் ரூபா பெற்றுக் கொள்கின்றார்கள். எல்லா அமைச்சர்களும் தங்களது சொந்த வீட்டில் அல்லது அரசாங்க வீடுகளில் தங்கியிருக்கின்றார்கள்.

இன்று இந்நாட்டில் பல ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன. சுற்றுலாத்துறையும் மரக்கறி உற்பத்தியும் பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்பொழுது யுத்தத்தை நிறைவு செய்வதற்காக மத்திய மாகாணசபையை தரும்படி கேட்கின்றார்கள். தேயிலை விலையில் வீழ்ச்சி ஏற்பட்டு பெருந்தோட்ட, சிறுதோட்ட தேயிலை உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு மானியம் வழங்க நிதி இல்லையென்று கூறியவர்கள், ஜனாதிபதியின் சகோதரரான கோதாபய ராஜபக்ஷவின் விமான சேவைக்கு கோடிக் கணக்கான ரூபாவை வழங்கியுள்ளார்கள்.

இந்நாட்டில் பிரதான தொழிலான தேயிலை உற்பத்திக்கு உதவி செய்ய முடியாதென கூறியுள்ளார்கள். இந்தியாவும் இந்தோனேசியாவும் தேயிலை தொழிலுக்கு உதவிசெய்துள்ளன. கடந்த வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் அமைச்சர் சந்திரசேகரன் என்னைச் சந்தித்து கூட்டு ஒப்பந்தத்தை மறு பரிசீலனை செய்து வரவு செலவுத் திட்டத்தில் தோட்ட தொழிலாளர்களுக்குச் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் இல்லாவிட்டால் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்த்து வாக்களிக்கப்போவதாக கூறினார்.

ஆனால். இரண்டு நாட்களுக்கு பின் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தார் இச் செயல் தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றும் செயலாகும். தோட்டத் தொழிலாளர்களின் பிரதான உணவான கோதுமை மாவின் விலை உயர்வை எதிர்த்து நாங்கள் பாராளுமன்றத்தில் பேசிய பொழுது ஆறுமுகம் தொண்டமானும், சந்திரசேகரனும் வாய் திறக்காமல் இருந்தார்கள். இன்று வடமாகாணத்தைப் பிடிப்பதற்காக மத்திய மாகாணத்தில் அரசாங்கத்திற்கு வாக்களிக்குமாறு கூறுகின்றார்கள். அத்தோடு பெருந்தோட்ட இளைஞர்களை கைது செய்வதற்கும் அரசாங்கத்திற்கு வாக்களிக்கும்படி கூறுவார்கள்.

இன்று வெளிமாவட்டங்களுக்கு தொழிலுக்காகச் சென்ற பல மலையக இளைஞர்களை வெள்ளை வானில் கடத்தியுள்ளார்கள். அவர்கள் எல்லோரும் விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்தவர்கள் அல்ல. மலையக இளைஞர்கள் கொழும்பிலோ அல்லது வேறு மாவட்டங்களிலோ தொழில் செய்ய முடியாத நிலையில் அவர்கள் வேலை இல்லாமல் தோட்டப் பகுதியிலே முடங்கிக் கிடக்கின்றார்கள். இந்த இளைஞர்கள் தனி நாடு கேட்கவில்லை. இந்த நாட்டை பிரிக்க விடமாட்டோம். எல்லோரும் ஒற்றுமையாக வாழ்வோம் என்றே கூறிவருகின்றார்கள்.

கோதாய ராஜபக்ஷ இந்நாட்டில் வாழும் தமிழ் மக்களுக்கு இந்நாட்டில் உரிமை இல்லை என்று கூறுகின்ற பொழுது ஆறுமுகம் தொண்டமானும், சந்திரசேகரனும் ஏன் வாய்திறந்து பேசாமல் இருக்கிறார்கள். இவர்களுக்கு தமிழ் மக்களைப் பற்றி பேசுவதற்கு உரிமை இல்லாததால் மௌனிகளாக இருக்கின்றார்கள். இந்நாட்டில் வாழும் அனைத்து மக்களும் ஒற்றுமையாக வாழவேண்டும் என்ற நோக்கிலேயே ஐ.தே.க.செயல்பட்டு வருகின்றது. எனவே, எதிர்வரும் தேர்தல்களில் ஐ.தே.கட்சியை மக்கள் வெற்றிபெறச் செய்யவேண்டும்’ எனத் தெரிவித்தார்.

இக் கூட்டத்தில் ஐ.தே.க.பிரதித் தலைவர் கருஜயசூரிய, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் உட்பட உறுப்பினர்களும் உரையாற்றினார்கள்.