“யாழ் தேவி’ ரயில் சேவையை மீண்டும் வடக்கு நோக்கி ஆரம்பிக்க வவுனியாவிலிருந்து காங்கேசன்துறை வரையான 159 கிலோமீற்றர் தூர ரயில் தண்டவாளங்களுக்கும் சிலிப்பர் கட்டைகளுக்கு மட்டும் 700 கோடி ரூபா தேவைப்படுவதாக போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற “யாழ்தேவி’ ரயில் சேவையை மீண்டும் வடக்கிற்கு ஆரம்பிப்பதற்கான ரயில் பாதை புனரமைப்புக்கான வேலைத்திட்டத்தின் ஆரம்ப வைபவத்தில் பேசும் போதே அமைச்சர் அழகப்பெரும இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் பேசுகையில்; “வவுனியாவிலிருந்து காங்கேசன்துறை வரையான 159 கிலோமீற்றர் ரயில் பாதைக்கு இடையே 85 பெரிய பாலங்களும், 58 சிறிய பாலங்களும் 28 ரயில் நிலையங்களும் நிறுவ வேண்டியுள்ளது. இவையனைத்தையும் நிர்மாணித்து யாழ்தேவியை உடனடியாக வடக்கிற்கு கொண்டு செல்வதென்பது இலகுவான விடயமல்ல.
எனினும், ஜனாதிபதி அரசுத் தலைவரென்ற வகையில் எமது வார்த்தைகளிலிருந்து “முடியாது’ என்ற சொல்லை அகற்றியுள்ளார். எனவே, ரயில் சேவை பணியாளர்களின் அர்ப்பணிப்பு, திடசங்கற்பம், நேர்மைத் தன்மை மூலம் இந்த பாரிய சவாலை விருப்பத்துடன் முகம் கொடுக்க முடியுமென நாம் நம்புகிறோம்.
இதேநேரம், நிலப்பரப்பை வெற்றி கொண்டது நின்று விடாது. எமது படையினர் யாழ்தேவிக்காக பாதை அமைப்பதிலும் விஷேடமான பொறுப்பை நிறைவேற்ற எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். நாம் எவ்வளவு திடசங்கற்பம் கொண்டாலும் இந்த பாரிய நடவடிக்கைக்காக செலவாகும் நிதியானது உலகிலேயே மிக மோசமான பயங்கரவாதிகளுடன் 3 தசாப்தங்களாக போராடிய எம்மைப் போன்ற நாட்டுக்கு இலகுவானதல்ல.
உதாரணமாக, 159 கிலோமீற்றர் தூரமான தண்டவாளங்களுக்கு மட்டும் 450 கோடி ரூபா தேவைப்படுகிறது. அந்த தூரத்திற்கான சிலிப்பர் கட்டைகளுக்கு மட்டும் 250 கோடி ரூபா தேவைப்படுகிறது ‘ என்றார்.